சித்திரைப் புத்தாண்டு

சென்ற தமிழ்ப் புத்தாண்டு வீடடங்கலில். கொன்றையின் எழிலைக்கொண்டு அந்நாளை கடந்தேன். இந்த தமிழ்ப்புத்தாண்டு நண்பர்கள் புடைசூழ மதுரையில்.  இவ்வாறு திட்டமிடவில்லை. இயல்பாக இது அமைந்தது.

நித்யசைதன்ய யதியின் இரு நூல்களையும் நாராயணகுருவின் அறிவு என்னும் சிறுநூலையும் வெளியிடுவதற்கு ஓர் அரங்கம் கூட்டப்படவேண்டும் என்று ’கருப்பட்டி கடலைமிட்டாய்’ ஸ்டாலின் சொல்லிக்கொண்டிருந்தார். சென்னை, கோவை என பல ஊர்கள் திட்டமிடப்பட்டு கடைசியில் மதுரை. மதுரை குக்கூ – தன்னறம் நண்பர்களின் மையம். அவர்களுக்கும் ஒரு கூடுகை தேவைப்பட்டது

13 ஆம் தேதி நானும் புகைப்பட நிபுணர் , கவிஞர் ஆனந்த் குமாரும், எழுத்தாளர் நண்பர் சுசீல்குமாரும் என் காரில் மதுரைக்குச் சென்றோம். கிளம்பும்போது ஒருமணி. தோவாளையில் மதிய உணவு. கோடைகாலமானாலும் குமரியில் இப்போது மழை நிறைந்திருக்கிறது. மதுரை வரைக்கும்கூட முகில்களின் நிரை இருந்தது வானில்.

மாலை ஐந்தரை மணிக்கு நார்த் கேட் ஓட்டலுக்குச் சென்றுவிட்டோம். அடிக்கடி தங்கும் விடுதி அது. நன்றாகவே பழகி விட்டது. வழக்கமான விடுதிகளைப் போலன்றி நிறைய இடவசதி கொண்டது. பெரிய அறைகள்.

ஈரோடு நண்பர்கள் காலையிலேயே கிளம்பி திண்டுக்கல் செல்லும் வழியில் கள்ளி மந்தயத்திற்கு அருகில் உள்ள கீரனூரில் இருக்கும் கொண்டறங்கி மலையின்மேல் ஏறி அங்கிருக்கும் சுனை மல்லீஸ்வரர் கோயிலைப் பார்த்தபின்னர் வந்தனர். மாலையில் நார்த் கேட் ஓட்டலில் ‘ஜமா’ கூடிவிட்டது. வழக்கம்போல பெரும்பாலும் சிரிப்பும் கொஞ்சம் இலக்கியமும் தத்துவமுமாக உரையாடிக்கொண்டோம்.

இரவு பதினொரு மணிவரை நண்பர்கள் வந்துகொண்டே இருந்தனர். பலரும் குக்கூ நண்பர்கள் என்பதனால் செயலாற்றுதல், இலட்சியவாதத்தின் சமகாலப்பொருத்தம் ஆகியவை சார்ந்தே பெரும்பாலான பேச்சுக்கள் இருந்தன. மதுரை நண்பர் இளங்கோவன் முத்தையா வந்திருந்தார்.

மறுநாள் காலை ஆறுமணிக்கு சேர்ந்து நடந்து டீ குடிக்கப்போனோம். எல்லா வெளியூர் நிகழ்ச்சிகளிலும் இந்த காலையில் டீ குடிக்கச் செல்லும் நடை ஓர் இனிய அனுபவமாக நீடிக்கிறது. காலையில் மேலும் நண்பர்கள் வந்தனர். ஒன்பதரை மணிவரை விடுதியில் பேசிக்கொண்டிருந்துவிட்டு காந்திமியூசியம் அரங்கிற்குச் சென்றேன்

காந்தி மியூசியம் அரங்கில் இதற்குமுன் வே.அலெக்ஸ் ஒருங்கிணைத்த ஒரு நிகழ்ச்சிக்காக சென்றிருக்கிறேன். அது வேறு அரங்கு. இந்த அரங்கம் அழகானது. செம்மண்நிறமான கற்களை அடுக்கி கட்டப்பட்டது. கற்களால் தளம் அமைக்கப்பட்டது.  ‘நேர்த்தியான பண்படாத்தன்மை’ என ஓர் அழகியல் உண்டு. கைத்திறன் வெளிப்படையாகத் தெரிவது இந்தப் பாணி. தொன்மையை நினைவுறுத்துவதனால் மேலும் அழகு கொண்டது

நீண்ட இடைவேளைக்குப் பின் யூமா வாசுகியைப் பார்த்தேன். முன்பு சந்தித்ததை விட உற்சாகமாக இருப்பதைக் கண்டேன். சென்னையில் அவர் எப்போதுமே ஒரு வழிதவறிய பதற்றத்துடன் இருக்கிறார். இப்போது ஊரில் இருப்பதனால் அந்த மலர்ச்சி வந்திருக்கலாம்.

அங்கே நித்யா எழுதிய 3 நூல்கள் வெளியிடப்பட்டன. சுவரெங்கும் நித்யாவின் சட்டமிடப்பட்ட படங்கள். இருநூறுக்கும் மேற்பட்ட இளைஞர்கள். பெரும்பாலானவர்கள் மக்கள் நடுவே பல்வேறு வகையில் செயல்படுபவர்கள். அவர்கள் அனைவருமே குக்கூ சிவராஜ் அவர்களிடமிருந்து தூண்டுதல் பெற்றவர்கள்.  வாசிப்பு அவர்களுக்கு அறிவாணவ நிறைவோ பொழுதுபோக்கோ அல்ல. செயலுக்கான வழிகாட்டி. செயலின் ஒரு பகுதி. அத்தகையவர்கள் நடுவேதான் நித்யா சென்றடையவேண்டும். வாழ்நாளெல்லாம் அவர் செயலாற்றியது அதற்காகவே.

நித்யா சமாதியாகி இருபத்திரண்டு ஆண்டுகள் ஆகின்றன. அங்கே இருந்தவர்களில் அவரை நேரில் சந்தித்தவர்கள் நானும் யூமா வாசுகியும் மட்டுமே. மற்றவர்களுக்கு அவர் அவருடைய தரிசனங்களாக மட்டுமே அறிமுகம். அவருடைய சொற்கள் அத்தனை காலம் கழித்து தமிழில் ஆழமாக வேரூன்றியிருக்கின்றன. அதற்கு ஒரு சிறுபங்களிப்பை நான் ஆற்றியிருக்கிறேன்.

அதை திட்டமிட்டுச் செய்யவில்லை. தொடர்ந்து சென் சொற்களில் அவர் திகழ்வதனால் அது நிகழுமாறாயிற்று. அக்கணம் அங்கே கூடியிருந்தவர்கள் அளித்த நிறைவென்பது ஒருவகை வாழ்நாள் முழுமையுணர்வுதான்.

முற்றிலும் இளைஞர்கள் சூழ்ந்த அந்த அவையில் நின்றபடி நித்யாவைப் பற்றி எண்ணிக்கொண்டபோது இன்றைய காலகட்டத்துக்காக அவரை எப்படி தொகுத்துக் கொள்வது என்னும் எண்ணம் வந்தது. அவர் முற்றிலும் நவீன மனிதர். நவீன உளவியல் அவருடைய களம். ஐரோப்பிய தத்துவம், ஐரோப்பிய இலக்கியம், ஐரோப்பிய இசை ஆகியவற்றில் தேர்ச்சி கொண்டவர்.

ஆனால் இந்தியாவின் தொன்மையான மெய்யியலை, கலையை, இலக்கியத்தை அறிந்தவர். அவற்றில் வேரூன்றியவர். அவர் இயற்றிக்கொண்டிருந்தது ஓர் உரையாடலை. கிழக்கும் மேற்கும் ஆக்கபூர்வமாகச் சந்திக்கும் ஒரு புள்ளியை கண்டடைவதே இந்நூற்றாண்டின் சிந்தனையின் சவால் என அவர் எண்ணினார். அவருடைய ஆசிரியர்  நடராஜ குரு அதற்காக உருவாக்கிய அமைப்புதான் ஈஸ்ட்வெஸ்ட் யூனிவர்ஸ் என்னும் அமைப்பு.  நித்யா அதை முன்னெடுத்தார்.

ஆனால் விமர்சனம் நித்யாவின் வழி அல்ல. மறுப்பேகூட தேவையில்லை என்பது அவர் எண்ணம். உச்சங்கள், கனிவுகள் மட்டுமே கருத்தில்கொள்ளப்பட்டு நிகழ்த்தப்படும் ஒரு இணைவுத்தொகுப்பு- சமன்வயம்- தான் அவருடைய வழி.

நித்யா இந்தியாவின் அடித்தளச் சாதி ஒன்றிலிருந்து எழுந்தவர். துறவி என அந்த அடையாளங்களை கடந்தவர். இந்தியாவின் சமூக உச்சநிலைகளில் திகழ்ந்த அத்தனை மெய்ஞானங்களையும் நோக்கி எழுந்தது அவருடைய அறிவியக்கம்.

நித்யா நாராயணகுருவையும் காந்தியையும் கண்டவர்.  செயலூக்கம் கொண்ட இலட்சியவாதம் ஒன்றை முன்வைத்தவர். ஆனால் எப்போதும் நடைமுறைநோக்கு கொண்டிருந்தார். வெறும் கனவுப்பயணங்களை அவர் எப்போதுமே நிராகரித்துவந்தார். அவற்றை எப்போதுமே உளப்பகுப்பாளனின் மொழியிலேயே அணுகினார்.

அவருடைய சொற்களில் சொல்வதென்றால் இலட்சியவாதம் வாழ்வின் ஓர் உச்சநிலை அல்ல. அந்நிலையில் அது வெற்றுக்கனவுதான். இலட்சியவாதம் வாழ்வின் அன்றாடமாக இருந்தால் மட்டுமே அதனால் பயனுள்ளது. நாளும் செயல்படுத்தப்படாத இலட்சியவாதம் ஒரு பாவனை மட்டுமே

யூமா வாசுகி நானும் அவரும் நித்யா குருகுலத்திற்குச் சென்ற முதல்நாளைப் பற்றிச் சொன்னார். யூமா ஊட்டியின் குளிர் உண்மையில் என்ன என்று உணர்ந்து கண்ணீர் மல்கிய நாள் அது. அன்று அவர் முதலில் கையில் எடுத்த நித்யாவின் நூல் குழந்தைகளுக்காக அவர் எழுதியது. இருபத்தொரு ஆண்டுகளுக்குப் பின் அதை அவர் மொழியாக்கம் செய்திருக்கிறார்.

நான் நித்யாவின் சொற்களில் இருந்து தொடங்கி ஒர் உரையாற்றினேன். நம் சமூக வாழ்க்கையின் ஒவ்வொரு தளத்திலும் பெரும் பங்களிப்பை வழங்கியிருக்கும், வழங்கிக்கொண்டிருக்கும் மனிதர்கள் நிறைந்த அவை என்னை மேலும் எளியவனாகவே உணரச்செய்தது. என் சொற்கள் என்றுமுள ஆசிரியரின் சொற்கள், நான் ஊடகம் மட்டுமே என்று உணர்ந்தேன்.

இந்த அரங்கு வழக்கமான இலக்கியக்கூட்டங்கள் போல அல்ல. இங்கிருப்பவர்களின் வாசிப்பு மிகத்தீவிரமானது. அவர்கள் நூல்களை எடுத்துக்கொள்ளும் விதமும் வேறொருவகையானது. சமீபகாலங்களில் இத்தனை நூல்களில் நான் கையெழுத்திட்டு அளித்ததில்லை.

ஏராளமானவர்களில் தன்னறம் மிகுந்த செல்வாக்கைச் செலுத்தியிருக்கிறது. தன்னறம் என்னும் நூலைவிடவும் அச்சொல் வல்லமை மிக்கது என்று நினைக்கிறேன். சரியாக அமைந்துவிடும் ஒரு சொல் எல்லா அர்த்தங்களையும் தன்னுள்கொண்டு தான் வளர ஆரம்பித்துவிடுகிறது. அதை மந்திரம்போலச் சொல்லிச் சொல்லியே நாம் அனைத்தையும் பெற்றுவிடமுடியும்

இவ்விழாவிற்கு வந்திருந்த இளம் ஆளுமைகள் பலருக்கு அவர்களின் பங்களிப்பைச் சொல்லிக்காட்டி நித்யாவின் படங்களையும் சிவகுருநாதனின் நூற்பு அமைப்பின் கைத்தறி ஆடைகளையும் பரிசாக அளித்துக்கொண்டே இருந்தார்கள்.  ஒவ்வொருவரும் ஒரு வகையான சாதனையாளர், ஓர் ஆளுமை. என்றும் களப்பணியாளர்கள்மேல் வழிபாட்டுணர்வுகொண்ட எனக்கு ஒரு பெருந்திகைப்பையே அவர்கள் அளித்தனர்

சிவராஜ் அவர்கள் அனைவரையும் அடையாளம் கண்டுகொண்டு, அடையாளப்படுத்தி முன்னிலைப்படுத்தினார். அவருடைய இயல்பே பிறரை முன்னிலைப் படுத்துவதுதான். சிவராஜின் ஆளுமையில் இருந்து தூண்டுதல் கொண்டவர்கள் பலர். அங்கிருப்போருக்கு அந்த அங்கீகாரம் பெரிய விஷயம் அல்ல. ஆனால் அவர்கள் தங்களை ஒரு திரள் என, ஓர் அமைப்பு என உணர அது உதவுகிறது

சிவகுரு புத்தாண்டுக்கான கைநூற்பு ஆடைகளைக் கொண்டுவந்து தந்தார். சென்ற சில ஆண்டுகளாகவே அவருடைய ஆடைகளைத்தான் புத்தாண்டில் அணிந்துகொண்டிருக்கிறேன். சட்டென்று என்னை மிகமிக கௌரவமானவனாக, தூயவனாக உணரவைக்கின்றன அந்த ஆடைகள்.

 

தன்னறம் நூல்வெளி

fb: nurpuhandlooms
முந்தைய கட்டுரைசித்திரை- பதிவுகள்
அடுத்த கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 5