அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 7

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் போன்ற ஒரு படைப்பை ‘ஆராய’ முடியாது. அவரவர் அனுபவங்களைக்கொண்டு அதை உணரத்தான் முடியும். இளமை நமக்கு நிறைய வாய்ப்புகளை அளிக்கிறது ஜெ. நிறைய வாய்ப்புக்கள். நூற்றுக்கணக்கான வாய்ப்புக்கள். ஆனால் நாம் ஒன்றை மட்டும்தான் தேர்வுசெய்ய முடியும். இது மிகப்பெரிய அநீதி. ஆனால் ஒன்றும் செய்யமுடியாது.

எதை நாம் தேர்வுசெய்தாலும் சரிநாம் தேர்வுசெய்யாத எல்லாவற்றையும் நாம் இழந்துவிடுவோம். அற்புதமான மனைவியை அடைந்த ராமராவுக்கு இழந்த ஸ்ரீபாலாதான் பெரிதாக தெரிகிறர். நம் வாழ்க்கையும் அப்படித்தான்.

இளமையில் நாம் ஒரு முடிவை எடுப்பதற்குப் பல காரணங்கள். பயம், தாழ்வுணர்ச்சி ஆகியவற்றால் ஒரு முடிவை எடுப்போம். அதேபோல திமிர், மேட்டிமை உணர்ச்சி ஆகியவற்றாலும் இன்னொரு முடிவை எடுப்போம். எதுவானாலும் நாம் எடுக்கும் முடிவு நம் வாழ்க்கையை தீர்மானித்துவிடுகிறது. ஒன்றுமே செய்யமுடியாது.

வாழ்க்கையின் இனெவிட்டபிளிட்டியைச் சொல்லியதனால்தான் இந்நாவல் ஆழமான பாதிப்பை உருவாக்குகிறது. இப்படிச் செய்திருக்கலாமே, அப்படிச் செய்திருக்கலாமே என்றெல்லாம் பேசலாம். ஆனால் வேறு என்ன செய்திருக்க முடியும் என்ற கேள்வியை ஆழமாக நாமே கேட்டுக்கொண்டால் நாம் வாழ்க்கையின் பாதையை உணரமுடியும்

அருண்குமார்.

மேகமாலை

அன்புள்ள ஜெ,

ஒரு அண்டை மொழியின்மேல் தீராத காதல் இருந்தால் ஒழிய இப்படியெல்லாம் பாடல்களை ரசிக்க முடியாது. இது வெறும் ஆர்வம் அல்ல. இந்த மண்ணின் மேல், மக்கள் மேல் ஏதோ ஒரு ஈர்ப்பு உங்களுக்கு. வரும் நாட்களில் இதற்க்காகவேனும் இந்த தெலுங்கு மண் உங்களை பெருமையுடன் நினைத்துக்கொள்ள வேண்டும். உங்களின் பயண குறிப்புகள், கோதையின் நாட்கள்… இவைகளிலெல்லாம் எத்தனை அணுக்கமாக இந்த மண்ணை பற்றி எழுதி இருக்கிறீர்கள்!

அவை அனைத்திற்கும் உச்சம்தான் ‘அந்த முகில் இந்த முகில்’.  தெலுங்கில் இப்படி ஒரு பின்னணியுடன் இவ்வளவு ஆழமான நாவல் யாரும் எழுதியதில்லை. எழுத்தாளர் சலம் அவர்களுக்கு ஒரு தொடர்ச்சி இருந்திருந்தால், அந்த சரடை பின்தொடர்ந்து சென்றவர்களுக்கு உலக இந்திய இலக்கிய பரிச்சயமும், மரபின்மேல் பற்றும் தேர்ச்சியும் இருந்திருந்தால் இந்த மாதிரி ஒரு புனைவு வரும் வாய்ப்பு கிடைத்திருக்கும். என்ன செய்ய, இங்கு உள்ளவர்களுக்கு எல்லா ‘மாஸ்டர்ஸ்’ உடனும் உறவு அறுந்து விட்டது.

சலம்

உங்களின் நாவலில் உள்ள புறத்தை, மிக நுணுக்கமான வர்ணனைகளை, அவற்றுக்கும் கதை மாந்தர்களின் உள் உணர்ச்சிகளுக்கும் இருக்கின்ற உறவை நீக்கிவிட்டு  இந்த நாவலை மொழியாக்கம் செயது கொடுத்தால் ‘இது சலம் கதைதானே’ என்றுதான் எந்த தெலுங்கு வாசகனும் கேட்பான்.  இந்த புனைவைப்பற்றி நிறைய எழுதவேண்டும் சார்.

மேகமாலா பதிவில் மாலா என்றால் கருமை என்று இருக்குமோ என்று ஊகித்து இருந்தீர்கள். தெலுங்கில் அந்த அர்த்தம் இல்லை என்று சொல்லலாம். மாலா… சரம், ஆரம் என்ற அர்த்தத்தில் தான் இங்கும் இருக்கிறது. ஆனால், சம்ஸ்க்ருதத்தில் ‘விஷ்ணு’வின் பெயர்களில் மாலா(ஹ)-வும் ஒன்று.  கறுப்பர் என்பதால் அப்படி குறிப்பிட்டு இருக்கலாம். இந்த மேக மாலா என்ற சொல் கூட சமஸ்க்ரிதத்தில் இருந்து வந்ததாகவும் இருக்கலாம். இதற்க்காக குறிப்புகளை தேடியபோது… தெலுங்கு நிகண்டுக்களில் சமஸ்க்ரித உதாரணத்தைத்தான் காட்டுகிறார்கள்.  தெலுங்கின் மறபு இலக்கியத்தின் உள்ளதாக எந்த நிகண்டுக்களிலும் இல்லை.

காளிதாசரின் ‘மேக சந்தேஸம்’ பாதிப்பில் சினிமா பாடலாசிரியர்கள் இதை உருவாக்கி எழுதி இருக்கலாம். இந்த பாடலே… அப்படி மேகத்தை நண்பனாக(கதாநாயகியின் பாடலில் தோழியாக) நினைத்து சற்று கேலியுடன் பாடுவது தான். மழை பொழிவதற்க்காக இடியும் மின்னலுமாக வரும் முகில்ச்சரத்தை பார்த்து ‘இங்கு தூங்கும் என் பச்சைக்கிளி பயந்து விடுவாள், அவளின் கனவு கலைந்து விடும்… ஆதலால் மெதுவாக, ஓசையில்லாமல் வாயேன்'(மெல்லகா, சல்லகா) என்று கேட்பது அழகான குழந்தைத்தனம்.

நாயகனின் பாடலில் கருமையான மேகம் என்று குறிப்பிட்டு சொல்வதற்காகவே ‘விநீலா’ என்ற சொல்லை அதிகமாக சேர்த்து இருக்கிறார் பாடலாசிரியர். அதற்காகவே பாடலின் மெட்டை சற்று அழகாக வளைத்து இருக்கிறார் இசை அமைப்பாளர் ராஜேஸ்வர ராவ். (இவரில் இருக்கும் மேற்கத்திய பாதிப்பு உங்களின் ‘மோட்டூரி ராமாராவ்’ சொல்வது வரையில் எனக்கு தோன்றவே இல்லை. ‘பியானோ மெட்டுக்கள் மாதிரி’… என்னவொரு சலிப்பு! )

நாயகி பாடும் போது வரும் அந்த ‘ஊருக்கோவே'(சும்மா இரேண்டீ!) என்ற சொல் மிக அழகானது. பி.லீலா-வின் அருமையான உச்சரிப்பு. இதில் இருக்கும் ‘வே’-வை சற்று இழுத்தாலோ குறைத்தாலோ பாடகிக்கு தெலுங்கு தெரியாது என்று காட்டி கொடுத்து விடும். லீலா அவர்கள் கேரளத்தை சேர்ந்தவர் என்றாலும் அதை மிக கச்சிதமாக உச்சரித்து இருக்கிறார்கள். பழைய தெலுங்கு பாடல்களின் மட்டும் அவர்கள் குரலை கேட்டு இருந்ததாலோ என்னவோ எனக்கு லீலா சரித்திர மாந்தராகவே மனதில் நிலைத்து விட்டார்… ஒரு கண்டசாலா, ஏ எம் ராஜா  மாதிரி.

2004ல் நினைக்கிறேன்… பிரபல பாடகி ஜிக்கி அவர்கள் மறைந்தபோது பத்திரிக்கையாளனாக செய்தி சேகரிக்க சென்று இருந்தேன். யாரோ ‘லீலம்மா வந்தாங்க’ என்று சொன்னார்கள்.  ‘என்ன? அவங்க… இருக்காங்களா!’ என்று ஆச்சர்யப்பட்டேன்.  ‘ஏன் ..’ என்று கேட்டார்கள். ‘இல்ல சென்னையிலதான் இருக்காங்களான்னு…’ என்று சமாளித்தேன். பத்திரிக்கையாளனாக நம் அறியாமையை காட்டிக்கொள்ள கூடாதென்பது சீனியர்கள் கற்றுத்தந்த பாலப்பாடம் ஆயிற்றே!

அன்புடன்,

ராஜு

ஹைதராபாத்

***

அன்புள்ள ஜெ,

அந்த முகில் இந்த முகில் கதையப்பற்றி நண்பர்கள் கூட்டத்தில் பேசிக்கொண்டிருந்தோம். அப்போது இரண்டுபேர் ஆவேசமாக ராமராவ் ஒரு கோழை, கோழையின் கதையை பாராட்டிச் சொல்கிறார், வாழ்க்கையை எதிர்கொள்ளத் தெரியவில்லை என்றெல்லாம் சொன்னார்கள். நான் எப்படி இருக்கவேண்டும் என்று எழுத்தாளர்கள் எழுதுவதில்லை. எப்படி இருக்கிறது என்றுதான் எழுதுவார்கள் என்று சொன்னேன். அதிலும் 1950களில் உள்ள உலகம் அப்படிப்பட்டது. அன்றைக்குச் சினிமாக்காரர்களை எப்படிப்பார்த்தார்கள் என்று நாவல் சொல்கிறது என்று சொன்னேன்.

அவர்கள் ஏற்றுக்கொள்ளவில்லை. ஒரு நண்பர், கொஞ்சம் வயதானவர், சொன்னார். சரி. உங்களுக்கு தெரிந்தவர்களில் பாலியல் தொழிலாளியை திருமணம் செய்திருக்கும் ஒருவர் பெயரைச் சொல்லுங்கள் என்று. வாயடைந்துபோய்விட்டார்கள். நம் வாழ்க்கையில் இப்படி இருக்கிறது. ஆனால் நாம் இன்னொரு கனவுலகத்தில்தான் வாழ்கிறோம்.

டி.சிவக்குமார்

***

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் கதையில் பல கனவுகள் உள்ளன. கறுப்புவெள்ளை சினிமா என்ற கனவு. நிலவொளி என்ற கனவு. காதலின் கனவு. ஆனால் அற்புதமான கனவு என்பது ஹம்பியில் இருந்து அவர்கள் ராஜமந்திரி செல்லும் அந்தப் பயணம்தான். பலர் எழுதிய கடிதங்களிலும் அந்தக் கனவைப்பற்றி இல்லை. அவர்கள் ஒரு முழு வாழ்க்கையையே வாழ்ந்து முடித்துவிடுகிறார்கள். முதலில் காதலின் கிளர்ச்சியும் பரபரப்பும், பிறகு பொறுப்புணர்வும் புரிதலும், பிறகு சரியாக இணைந்துபோவது, கொஞ்சம் சலிப்பு. இப்படியே ஒரு முழு வாழ்க்கையும் கனவுபோல சில நாட்களில் கடந்துசெல்கிறது.

எனக்கு இப்படி ஒரு வாழ்க்கை உண்டு. ஒரு பெண்ணுடன் இரண்டுநாட்கள் பயணம் செய்தேன். கைகளை பிணைத்துக்கொண்டோம். அதற்குமேல் உறவில்லை. ஆனால் அது மானசீகமான ஒரு முழுமையான குடும்ப வாழ்க்கையாக அமைந்தது. உண்மையில் அந்த வாழ்க்கை ஒரு முழுமையான குடும்ப வாழ்க்கைதான் என்பதை இந்நாவலை வாசித்தபோதுதான் என்னாலேயே உணரமுடிந்தது. நான் அழவில்லை. அழமுடியாத வயது. ஆனால் ஒருநாள் முழுக்க பிரமைபிடித்தவன் மாதிரியே இருந்தேன்.

வாழ்க்கையைப்போல அற்புதமான ஒன்று இல்லை. ஆகவேதான் இத்தனை துயரம். ஏனென்றால் எல்லாமே இங்கே நம் கையிலிருந்து நழுவிவிடுகின்றன இல்லையா?

எஸ்

முந்தைய கட்டுரைகலாசியாக ஆவது- கடிதங்கள்
அடுத்த கட்டுரைகொற்றவை, மானுட அழிவின் கதை