அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 6

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் கதையில் மோட்டூரி ராமராவுக்கும் மெல்லி இரானி சீனியருக்குமான ஒப்புமைதான் ஆச்சரியமானது. இடிந்து சரிந்த ஒரு கடந்தகாலம். மொட்டைவெயில் எரிக்கும் மதியம். அவர் அதில் ஃபில்டர் போட்டு ஒரு கடந்தகாலத்துக் கனவையும் நிலவொளியையும் உருவாக்க முயன்றுகொண்டே இருக்கிறார். மோட்டூரி ராமராவும் அதைத்தான் செய்கிறார்

ஆனால் அத்தனைபேரும் அதையேதான் செய்கிறோம். ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குப்பின் நினைவுகளால் ஓர் உலகத்தை உருவாக்கிக்கொள்ள முயல்கிறோம். மத்தியான்னத்தில் நிலவைக்கொண்டுவரும் முயற்சிதான் அது

எஸ்.ஆர்.என்.கிருஷ்ணன்

***

அன்புள்ள ஆசானுக்கு,

தளத்தில் புதிய பதிவுகள் இங்கே (அமெரிக்காவின் மேற்கு கரையோரத்தில்)  சரியாக காலை 11:30 மணிக்கு தென்படத்துவங்குகிறது, முதல் பார்வையில் ஒன்றிரண்டு இடுகைகள் மட்டும் தான் இருக்கிறது, அரை நிமிடம் கழிந்து உலவியில் பக்கத்தை புதுப்பித்தால் அன்றைய நாளுக்கான அனைத்து இடுகைகளும் கண்முன் வந்து விழும்.

இதெல்லாம் ‘முகில்’ வாசிக்கத் துவங்கியபின் நிகழ்ந்த அவதானிப்புகள்,  பொதுவாக இப்படி புதிய இடுகைகளுக்காக காத்து நிற்கும் வழக்கம் என்னிடம் இல்லை, ஏனென்றால் காலை பதினொன்றை என்பது இங்கே அலுவல்  சம்பந்தமான சந்திப்புகள் மும்முரமாக நிகழும்  தருணம். ஆனால் ‘முகில்’ உள்ளே இழுத்துக்கொண்டது. சரியாக அந்த நேரத்தில் தளத்தைப் பார்க்க முடியவில்லை என்றால் ஒரு நிலைகொள்ளாமை, பரபரப்பு. கை விரல்கள் நடுங்குகிறதா என்று ஒரு சின்ன சந்தேகம், ஹெராயின் முதல் முகநூல் வரை போதை அடிமையரை பார்த்திருக்கிறேன், கடைசியில் நானும் விழுந்து விட்டேனா?  :)

“அந்த நுரைக்கு என்ன மதிப்பு? … கற்பனாவாதம் வாழ்க்கையை அறிய, வாழ்க்கையை பயனுறச்செய்ய எவ்வகையிலும் உதவாதுதான்”

இருக்கட்டுமே ஆசானே, பயனற்றதாகவே இருந்துவிட்டுப் போகட்டும், அப்படி நுரைத்துக் கொப்பளிக்காத ஒரு வாழ்க்கையை வாழ்ந்துதான் என்ன கிடைக்கப்போகிறது? வாழ்க்கைக்கு அப்படி ஏதேனும் பயன் இருந்தேதான் ஆகவேண்டுமா?  இப்படியெல்லாம்  என்னுள்ளிருக்கும் ‘முகில்’ வாசகன் இன்னும் கிறக்கம் நீங்காத கண்களுடன் உங்களை எதிர்க் கேள்வி கேட்க்கிறான்,  அவனை என்ன செய்ய?

நிலவு பொழிந்து வழிந்த அந்த இரவில் கதைமாந்தர்கள்  பேசிப்பேசி அணுகி அதன் முடிவில் பாடியும் கரைந்தபடி சைக்கிளில் போனபோது நிலவொளியில் நனைந்தபடி அவர்கள் அறியாமல் அவர்களைத் தொடர்ந்த கந்தர்வர்களுடன் அவனும் இருந்தான். கதைசொல்லி நிலவொளியை முகத்தில் வாங்கி அனைத்தில் இருந்தும் விடுதலை அடைந்த உணர்வை அடைந்தபோது அவனும் அதே உணர்வை அடைந்தான்.

அனால் உண்மையில் நிலவொளி நம்மை விடுதலை செய்த கையோடு வேறு ஒரு மாயப் பித்தில் சிக்கவும் வைத்து விடுகிறது போல, அதனால்தான் எதையும் தர்க்கம் வழியே அணுகும் மேற்கத்திய கலாச்சாரம் மனப்பிறழ்வை நிலவின் பெயரால்(Luna, Lunar, Lunacy, Lunatic) குறிக்கிறது என நினைக்கிறேன்.

ராமராவுக்கும் அதுவே நிகழ்கிறது, ஸ்ரீபாலாவை வண்டிஏற்றி விட வந்தவன் அவளுடன் கிளம்பி விடுகிறான் (நான் எல்லா அவசர அலுவலக வேலைகளையும் தள்ளி வைத்துவிட்டு இப்படிக்  கடிதம் எழுதிக் கொண்டிருக்கிறேன்), பித்தேறிய ராமராவ்  மேகங்களை பார்க்கிறான் பித்து முழுமையடைகிறது, “அந்த மேகத்தை பார்த்தாயா?” என்று ஆரம்பிக்கிறான், அப்படிக் கேட்பவன் முற்றிலும் வேறு ஒருவன், என்னளவில் இதுவே இந்த கதையின் உச்சம், மேகத்தைக் குறிக்க தெலுங்கு மொழியில் மிகப் பொருத்தமான ஒரு ‘தமிழ்’ வார்த்தையைத் தான் தேர்ந்தெடுத்திருக்கிறார்கள் என்று நினைக்கிறேன்.

தர்க்கரீதியாக பார்த்தால் அந்தத் தருணத்திலிருந்து தான் கதைசொல்லி மலைச்சரிவில் பற்றிக்கொள்ள எதுவும் சிக்காமல் உருண்டு விழும் ஒரு பாறையைப் போல சரிந்து சரிந்து கீழிறங்குகிறான், ஆனால் தர்க்கத்தை கொஞ்சம் தள்ளிவைத்துவிட்டு பார்த்தால் இரக்கமே அற்ற லவுகீக விதிகளுக்கு உட்பட்டு மட்டுமே வாழவேண்டிய இந்த வாழ்க்கையில் இருந்து விடுபட்டது மேலே மேலே பறக்கிறான், இரண்டுமே உண்மைதான், அதுவும் ஒரே சமயத்தில். புறவயமாக பார்த்தால் அவன் செய்தது வெறும் இரண்டு நாள் பயணம், ஹம்பியிலிருந்து ராஜமந்திரிக்கு. ஆனால் அகவயமாக திரும்ப இயலாத தொலைவிற்கு சென்று விடுகிறான், அவன் மொத்த வாழ்வும் மாற்றி அமைக்கப்பட்டு விடுகிறது.

இப்படியெல்லாம்  வாழ்க்கையின் களியாட்டத்தை  கொண்டாட்டத்தை அதன் அடர் வண்ணங்களுடன் அப்படியே சொற்களில் அள்ளி எடுத்து வைத்து ஒரு படைப்பை எழுதி முடித்த அடுத்த நாளே “கற்பனாவாதம்” என்றெல்லாம் சொல்லி இந்தப் படைப்பை ஒரு சட்டகத்துக்குள் அடைக்கும் ஆசிரியர் குறிப்பு,  நீங்கள் எழுதிக் குவிக்கும் வேகம் திகைக்க வைக்கிறது என்றால் எழுதி முடித்தவற்றில் இருந்து விலகிச் செல்லும் வேகம்  அதைவிட பெருந்திகைப்பை ஏற்படுத்துகிறது.

கதையின் முடிவில் கூட அப்படி ஒரு விலக்கத்தை வாசிக்கிறேன். இந்த கதை உருவாக்கிய உணர்வு வெளியில் மிதந்து கொண்டிருக்கும் வாசகரிடம் கருணையே இல்லாத யதார்த்தத்தை சுட்டிக்காட்டுகிறது முடிவு, மலை உச்சியிலோ அல்லது உயரமான கட்டிடத்திலோ இருந்து விழுவது பறப்பதை போல சுகமாகத்தான் இருக்கும், நிலத்தில் உடல் வந்து அறையும் இறுதிக்கணம் வரை என்று சொல்கிறது, பிரபஞ்சத்தை இயக்கும்  இயற்பியல் விதிகள் கருணையற்றவை என்று சொல்கிறது முடிவு.

ஒரு வேளை சேர்ந்து வாழ அவளை அழைத்திருந்தால் கூட அவள் ஒத்துக்கொண்டு இருப்பாளா? என்னதான் அவலமான வாழ்க்கை என்றாலும் அவளுக்கும் வாழ்க்கை பற்றி ஒரு கனவுகள் இருந்திருக்கும்,  அவள் உடல் மீது மட்டும்தான் மற்றவர்கள் ஆதிக்கம் செலுத்துகிறார்கள், ஆன்மா சுதந்திரமாக இருக்கிறது, யாருக்கும் பதில் சொல்ல  கடமைப்பட்டவள் அல்ல அவள், இந்த பித்தை ஏற்றுக்கொள்வது என்பது அவள் அகத்தின் மேல் அவன் ஆக்கிரமிப்பை அனுமதிப்பது போல தானே? அவள் அகம் அனுபவிக்கும் கட்டற்ற விடுதலையை இந்த இரண்டு நாள் பித்துக்கு ஈடாக கொடுப்பாளா?

அப்படியானால் இந்தமாதிரி பித்து மனநிலை என்பது தர்க்கவாதிகள் சொல்வது போல ஒரு மாதிரி மனப்பிறழ்வு மட்டும்தானா?  தவிர்க்கப்பட, கட்டுப்படுத்தப்பட, குணப்படுத்தப்பட வேண்டியது மட்டும்தானா? இந்த வாழ்க்கையில் அதற்கு பொருள் ஏதும் இல்லையா? இயற்கை பயனற்ற எதையும் படைப்பதில்லையே.

சிறிய விஷயங்களால் தூண்டப்பட்டு மனிதனில் எழும் இந்த பித்தை திசைமாற்றி அவன் அடையக்கூடிய அந்த மாபெரும் உச்சத்தை நோக்கிய ஒன்றாக சீரமைத்து அதற்கு தான் ‘பக்தி’ என்று பெயர் கொடுத்து சென்றிருக்கிறார்கள் நம் முன்னோர் என நினைக்கிறேன். It is the ultimate hacking of life itself. தன் கண்ணை அகழ்ந்து எடுத்து சிவம் என உருவேற்றம் செய்யப்பட்ட கல்லின்மேல் வைத்த கண்ணப்ப நாயனாரை செலுத்தியது எது?

சிறைப்பட்ட சுண்ணாம்புக் காளவாயை ‘தென்றல் வீசும் பொய்கை’ யாக நாவுக்கரசரை உணர வைத்தது ஒரு உன்னதமான பித்தகாகத்தான் இருக்க முடியும். இதையெல்லாம் மிகைப்படுத்தப்பட்ட கட்டுக்கதைகள் என்றுதான் என் தர்க்க மனம் அணுகும், ஆனால் இந்த இணைய யுகத்தில் எல்லாவற்றுக்கும் சான்றுகள் உண்டு, தான் உலகிற்கு சொல்ல விழையும் செய்திக்கு வலுசேர்க்க உயிர்க்கொடை செய்த இந்த வியட்நாமிய பிக்கு உடல்பற்றி எரியும்போது அசையாமல் தன் ஆசனத்தில் நிலைக்கிறார் (https://www.youtube.com/watch?v=VCEWSSVjrTwhttps://en.wikipedia.org/wiki/Th%C3%ADch_Qu%E1%BA%A3ng_%C4%90%E1%BB%A9c), இதை தர்க்க மனம் எப்படி எதிர்கொள்ளும்? அப்படியே சத்தமின்றி கடந்து செல்லும், ஆவணப்படுத்தும், ஆவணப்படுத்திய புகைப்படகாரருக்கு புலிட்ஸர் பரிசு வழங்கும், மறுபடியும் அதை பித்து என்று பிடிவாதமாக வகைப்படுத்தும், அப்படியானால் குணப்படுத்தப்பட வேண்டியவை எவை?  நம் தர்க்க முறைமைகள் தானா?

நிற்க,  எங்கோ போய்விட்டேன், மறுபடியும் முகிலுக்கு வருகிறேன், இந்த  நாவலில் எப்படியோ தெலுங்கின் அழகும் அந்த மொழி புழங்கும் மண்ணின் வாழ்க்கையும் அனுபவ பட்டுவிடுகிறது, உரையாடல்கள் கூட தெலுங்கிலிருந்து மொழிபெயர்த்தது போல ஒரு உணர்வு, அவற்றை எனக்கு தெரிந்த அரைகுறை தெலுங்கை வைத்துக்கொண்டு தெலுங்கிலேயே மனதில் நிகழ்த்திக் கொண்டேன்,   “கண்ணீரைப் பின்தொடர்தல்”  முன்னுரையில் தெலுங்கில்  இலக்கிய வாசகன் புரட்டிப் பார்க்கும் தகுதி பெற்ற நாவல்கள் ஒன்றுகூட தட்டுப்படவில்லை என்று குறிப்பிட்டிருந்தீர்கள், ஆனால் இந்த நாவலில் வரும் மேற்கோள்கள், பாடல்கள் அதன்மூலம் உங்களால் அள்ளப்பட்ட அந்த மொழியின் அழகு எல்லாம் நீங்கள் சொன்னதற்கு மறுதரப்பாக உங்களாலேயே வைக்கப்படுகிறது.

இந்த நாவலில் வரும் திரைப்பாடல்கள் பற்றி, அவை எப்படி காதலின், அது உருவாக்கும் பித்தின் தவிர்க்க முடியாத பாகமாக, சில சமயம் அந்த பித்தையே உருவாக்குவதாக இருக்கிறது என்றெல்லாம் பக்கம் பக்கமாக எழுதலாம். ஆனால் நீங்கள் இந்த கடிதத்தை பிரசுரிக்க வாய்ப்புண்டு, இந்த தளத்தை மிக சிறந்த இசை கலைஞர்கள்  வாசிக்கிறார்கள் என்று தெரியும். அவர்கள் என் திரையிசை ‘ரசனையை’ புஷ்பா தங்கத்துரையின் மாத நாவல்களை இலக்கியமாக ரசிக்கும் ஒரு வாசகனை பார்ப்பதை போல மேட்டிமை நிறைந்த சின்ன சிரிப்புடன் பார்ப்பார்கள் என்பதால் தவிர்த்துவிடுகிறேன்.  ‘பரிசுக்கு போ’ வில் சாரங்கன் இதைப்பற்றி  சொல்வது வேறு நினைவுக்கு வருகிறது

“.. நமது புராதன சங்கீதம் உயர்வானதும், மேற்கத்திய சங்கீதம் உயர்வானதும் நவீனமானதும் ஆகும். நமது தற்கால வாழ்க்கையின் தேவையை பூர்த்தி செய்து கொண்டிருப்பதாக நீங்கள் சொல்லும்  சினிமா சங்கீதம்  ஓர் ‘இசை சோரமே’  தவிர வேறல்ல….” (பக் 294, 12ஆம் பதிப்பு, மீனாட்சி புத்தக நிலையம்).

இது எழுதப்பட்டு 55 ஆண்டுகள் கடந்துவிட்டன, அரை நூற்றாண்டுக்கும் மேல். மகா கணம் பொருந்திய இசை மேதைகள் ஒரு மறுபரிசீலனைக்கு காலம் வந்துவிட்டது என்று கருணை காட்டுவார்களா?

இல்லாவிட்டாலும் பரவாயில்லை என்னை மாதிரி ஆட்கள் எல்லாம் இப்படித்தான் ஸ்வாமிகளா, எனக்கு இசை என்றாலே திரையிசை தான். தாலாட்டு, Therapy Session எல்லாமே அதுதான். ‘சேற்றில் உழலும் பன்றியின் ரசனை’ என்றெல்லாம் என் இசை ‘ரசனையை’ பற்றி சொன்னாலும் இதே பதிலைத்தான் சொல்வேன்.  ‘ஆமாம் சேறு தான், ஆனால் என் தோலில் ஓட்டுகிறது, சொர்க்கம் போல இருக்கிறது, அப்படியே உழன்ற படி இந்த சிறு வாழ்க்கையை கடந்துவிடுகிறேனே’.

தோலில் ஓட்டுகிற, வாழ்வின்  கொண்டாட்டங்களில் கலந்திருக்கும், தனிமையில் துணையிருக்கும், பித்தேறிய மனதை மேலும் மேலும் பித்தேற வைக்கும் திரைப்பாடல்கள் அதே வண்ணம் இந்த நாவலில் பிரதிநிதித்துவ படுத்தப்பட்டுள்ளது. திரைஇசையும் பித்தும் உந்திச் செலுத்த கதைசொல்லி மேற்கொள்ளும்  அலைதல் மிகுந்த அகப்பயணத்தின் ஒரு கட்டத்தில் இரு பாடல்கள் ஒன்றாக மாறி கலந்துவிடுவது இந்த நாவலின் கவித்துவ உச்சம்.

இந்த நாவல் கடந்து சென்று விட்ட ஒரு காலகட்டத்தின் காதலை சொல்கிறது, மொத்த  வாழ்க்கையையும் பலியாக கோரும் காதல். இன்று நாம் வாழும் நிகழ்காலத்தில் Tinder செயலியில் பக்கங்களை புரட்டுவது போல முகங்களை மேய்ந்து கட்டைவிரலை மட்டும் அசைத்து சொடுக்கி விருப்பை பதிவு செய்யலாம் என்று தெரிகிறது, அது பரஸ்பரமாக விருப்பமாக இருக்கும் பட்சத்தில் செயலி உரையாடலை அனுமதிக்கும்.

இந்த இரு உலகங்களுக்கும் வாழ்க்கைக்கும் உள்ள தூரம் திகைக்க வைக்கிறது, அல்லது தூரத்தை நாம்தான் கற்பனை செய்து கொள்கிறோமா? கதை சொல்லி ஸ்ரீபாலாவை நடனப் பெண்களின் நடுவே அவர்களில் ஒருவளாகத் தான் முதல் முதலில் பார்க்கிறான், நீண்ட மருட்சி நிறைந்த கண்கள், நீளமுகம், நெற்றியில் விழும் முடிச்சுருள் இதெல்லாம் தான் அவனை ஈர்க்கிறது, அதுதான் இன்று Tinder வழியாகவும் நடக்கிறதா? தெரியவில்லை. எந்த சிறு விஷயமும்  காலத்தின் முன் வைக்கப்படும் போது கலையாகிறது என நீங்கள் சொன்னது நினைவுக்கு வருகிறது, வருங்காலத்தில் Tinder காதல் கதைகளும் வரலாம், காத்திருப்போம்.

நீங்கள் தருமபுரியில் வாழ்ந்த காலத்தில் அருண்மொழி அக்காவுக்கு தினம் ஒரு கடிதம் எழுதுவீர்கள் என்று படித்திருக்கிறேன், எவ்வளவு தான் கற்பனை திறன் கொண்ட படைப்பாளி ஆனாலும் அந்த நிலவொளி படாமல் இப்படி ஒரு படைப்பை எழுத முடியாது என நினைக்கிறேன். இரவில் கடிதம் எழுத துவங்கினேன், கிட்டத்தட்ட விடிகாலை ஆகிவிட்டது. வாழ்க்கையில் கடைசியாக இப்படி விடிய விடிய விழித்திருந்து எழுதியது என் மேல் நிலவொளி பட்ட அந்த கொந்தளிப்பான இனிமையான நாட்களில் தான், அந்த நாட்களை அந்த நிலவொளியில் என்னைப்போல பல வாசகர்களை மீண்டும் வாழச் செய்த உங்களுக்கு நீங்கள் உருவாக்கிய கலைக்கும் என் வணக்கங்கள் ஆசானே.

அன்புடன்

ஷங்கர் பிரதாப்

***

இன்று காலை இந்த ஆ மப்பூ ஈ மப்பூ பாடலையும் அவர்கள் சைக்கிளில் செல்லும் பேரழகையும் காட்சிப்படுத்தியுள்ளது நெஞ்சையள்ளி ஏதோதோ நினைவுகளை கொண்டுவந்து குவிக்கிறது.

அதிலும், நுண்கலைகளோடுகூடிய புத்திகூர்மையும் சரளமும் ஒருங்கே அமைந்து விட்ட இளம்பெண்ணோடு அளாவளவும் பேச்சின்பம் அபாரமானது.

1984ல் சிவில் சர்வீஸ் பரிட்சைக்கு படிக்க ரெகுலராக கன்னிமாரா லைப்ரேரிக்கு போகும் வழக்கமுண்டு. ரோமீளா தாப்பரின் அசோகா புத்தகத்தை எடுத்துக்கொண்டு படிக்க உட்கார்ந்த போது அருகில் வந்தமர்ந்த பெண் புத்தக தலைப்பை பார்த்து நானும் இப்புத்தகத்தைத்தான் தேடிவந்தேன் என்றாள். ரெபரன்ஸ்க்காக எடுத்துள்ளேன், பார்த்துவிட்டு கொடுத்து விடுகிறேன் அதுவரை வேறு எதாவது படித்துக்கொண்டிருங்களேன் என்றேன்.சரி,என்று வேறு புத்தகத்தை தூக்கி வந்து அருகமர்ந்து படிக்கத்தொடங்கினாள்.

அவசர அவசரமாக குறிப்பெடுத்துவிட்டு கொடுக்கும்போது பதினோரு மணியாகியிருந்தது.சிறிய எழுத்துக்களை பார்த்து தலைவலிக்கிறது,காபி குடிக்கனும் போலிருக்கு, நீங்களும் வருகிறீர்களா? என கேட்டேன். சரி என்றதால் இருவரும் வெளியே கேப்டீரியாவுக்கு போய் கண்ராவியான காபியை குடித்தோம். அதல்ல மேட்டர். அப்போது பேசும்போது ஹிஸ்டரி மேஜர் எடுத்ததில் ஆரம்பித்து மொஹல் கல்சர்,மினியேச்சர் ஓவியங்கள்,யூனானிவைத்யமுறை,சூஃபி தத்துவம்,உருது கவ்வாலி என பேச்சு சங்கிலி பின்னலாய் தொடர காரணமானது அந்த பெண்ணின் விசாலமான நாலெட்ஜ்.

மதிய சாப்பாடு சாப்பிட்டு விட்டு திரும்ப வந்து பேசினோம் பேசினோம் சாயங்காலம் வரை.அந்த பெண் டெல்லி சர்வகலாசாலையில் படிக்கிறாளாம்.அதன் பின் பார்க்கவில்லை. ஆனால் அந்த நாள் என்றும் மறக்காது.

விருமாண்டி யில் அன்னமும் சண்டியரும் கொடைக்கானலுக்கு போகும் காட்ரோட்டில் சைக்கிளில் போகும்’ ஒன்னை விட ஒலகத்தில் ஒசந்தது ஒன்னுமில்லா’இந்த கதையின் இன்றைய பார்ட்டை படிக்கும்போது ஞாபகத்துக்கு வந்து படுத்துகிறது.இரவில் முழுநிலவின்போது டூ வீலரில் போகும்போது பார்க்கும் அழகே தனி…

காதலில் பெரும்பாலும் பெண்கள், ஒப்புநோக்கும்போது சமநிலை தவறுவதில்லை. மோட்டூரி ராமாராவ் இப்போது அழைத்திருந்தாலும் அவள் வந்திருக்கப்போவதில்லை. தன் வாழ்வு சார்ந்து அவள் தெளிவாயிருக்கிறாள்.

மோட்டூரிராமாராவ்தான் சற்று நிலைதடுமாற்றத்தில் இருந்திருக்கிறார் அப்போது. அவரும் அவளை அழைக்கவில்லை என்பதை கவனிக்க வேண்டும்.அன்று பஸ் ஸ்டாண்டில் அழைப்பேன் என எதிர்பார்த்தாயா? எனத்தான் கேள்வியாக கேட்டு தன்னை ஆற்றுப்படுத்திக்கொள்கிறார்.

வாழ்வில் முடிவெடுக்க வேண்டிய தருணங்கள்தான் எத்தனை கொடியது?

To be or not to be?

என மருண்டு மயங்கி பொசுங்கவேண்டியுள்ளது.

Bridges of Madison County யில் இதேபோல பிரான்செஸ்கா அன்பான குடும்பமா? இரு நாள் சூறாவளி உறவில் அறிமுகமான போட்டோகிராபரா என கணவனோடு காரில் அமர்ந்தவாறே கார் கதவை திறக்க ஹேண்டிலை அழுத்தும் அழுத்து…நானெல்லாம் செத்தே போனேன்.

நிகர் வாழ்க்கையை வாழ வைக்கும் எழுத்துக்கு சொந்தமான அத்தனை கைகளுக்கும் அன்பு முத்தங்கள்.

விஜயராகவன்

முந்தைய கட்டுரைகாண்டீபம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன், மதுரை  
அடுத்த கட்டுரைபூக்கும் கருவேலம். ஒரு பார்வை – பொன். குமார்