அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 5

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் நான் நீண்ட காலத்திற்குப் பிறகு மிகுந்த மனநெகிழ்ச்சியுடன் வாசித்த நாவல். ’ஒரு மகத்தான காதல்கதை என்பது முற்றிலும் புதிய சூழலில் எழுதப்பட்ட வழக்கமான கதை’ என்று சொல் சொல் உண்டு. காதல்கதையில் கதை எப்போதுமே ஒன்றுதான். ஆணும்பெண்ணும் சந்தித்துக்கொண்டு ஒருவரை ஒருவர் அறிந்துகொள்ளும் ஆச்சரியமான தற்செயல். அவர்கள் பிரிவதில் இருக்கும் inevitability. அவை இரண்டுமே விதிதான். ஆகவே நல்ல காதல்கதை என்பது எப்போதும் விதியின் கதைதான்.

அத்துடன் காதல்கதைக்கு ஓர் அளவும் வேண்டும் என நினைக்கிறேன். நல்ல காதல்கதைகள் எல்லாமே சுருக்கமானவை. காதலே ஒரு சின்ன காலகட்டத்துக்கு உரிய உணர்ச்சிகரமான அலைதான். அந்த அலையின் தீவிரத்தை நீர்த்துப்போகாமல் சொல்ல உணர்ச்சிகரனான நடை வேண்டும். ஆங்கிலத்தில் அந்த வகையான உணர்ச்சிகரமான நடை டி.எச்.லாரன்ஸ், நபக்கோவ் போன்ற சிலருக்குத்தான் அமைந்தது.

இந்த அடர்த்தியான சிறிய கதைக்குள் மனித மனதின் உணர்ச்சிக்கொந்தளிப்புகளும் தன்னைத்தானே வதைத்துக்கொள்வதிலுள்ள சூட்சுமங்களும் நிறைந்திருக்கின்றன. அனைத்தைக்காட்டிலும் முக்கியமானது இது விதியின் கதை

எஸ்.ஸ்ரீனிவாஸ்

***

அன்புள்ள ஜெ,

அந்த முகில் இந்த முகில் நாவலின் வழியாக நான் பார்த்தது ஒரு பெரிய rewinding. உயர்ந்த அர்த்தங்கள், ஞான சிந்தனைகள் வழியாகவே செல்லும் வெண்முரசு போன்ற ஒன்றை எழுதிவிட்டு இந்த எளிமையான இளமைக்கொண்டாட்டத்தில் திளைக்கிறீர்கள். ஆனால் இந்நாவல் இளைஞனால் சொல்லப்படுவது அல்ல. கதைசொல்லிக்கு வயதாகிவிட்டது. என்னைப்போன்ற வயோதிகர்கள் என்று அவரே சொல்கிறார். இது Remembrance Of Things Past வகையான கதைதான்.

நினைவுகூரும்போதுதான் காதல் அத்தனை வலிமிக்கதாக ஆகிறது. நிகழ்ச்சிகளில் ஓர் ஒழுங்கும் குறியீட்டு அர்த்தமும் வருவது அவற்றை நீண்டகாலம் கழித்து நினைவுகூரும்போதுதான். உதாரணமாக இந்தக்கதையின் பிரதானமான Allegori என்பது இடிந்து மறைந்த ஹம்பியில் இருந்து ஒரு சாஸ்வதமான கனவை உருவாக்கிக்கொள்ளும் முயற்சிதான். அந்த இணைப்பு ராமராவின் மனசிலே சாத்தியமாவது அவர் அதை கிட்டத்தட்ட அரைநூற்றாண்டுக்குப்பிறகு நினைத்துப்பார்ப்பதனால்தான். காலம் எல்லாவற்றையும் அழுத்திச்சுருக்கி ஓர் அர்த்தத்தையும் அளித்துவிடுகிறது.

ஆர்.ராகவன்

***

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

இந்தக்கதை என்னை மிகவும் தொந்தரவு செய்கிறது. இதன் மீதான சிந்தனைகளில் இருந்து மீள முடியவில்லை. இதுவரை நான் வாசித்த புனைவு களிலேயே என்னை மிகவும் பாதித்துள்ளது கொண்டிருக்கின்ற ஒரு உணர்வுநிலை உச்சங்களின் கதையாகவே இதைக் காண்கிறேன். இதை வெறும் ஒரு புனைவு என அத்தனை எளிதில் ஒதுக்கிவிட்டு இதிலிருந்து வெளியே வர முடியவில்லை. வெளியே வந்துவிட முடியும் என்ற நினைப்பிலேயே இதைப் பற்றி எழுதிக் கொண்டிருக்கின்றேன்.

ஒரே ஒரு காதல், அந்த ஒரே ஒரு பெண்ணுடனான வாழ்நாள் முழுமைக்குமான முற்றாக நிறைவுபெற்ற உறவு என்பது கோடியில் ஒரு ஆணுக்கு கிடைக்கின்ற வரம். இயற்கையின் படைப்பின் படி இது ஆணின் இயல்பை மீறிய ஒன்று. அந்த ஆண் ஆசீர்வதிக்கப்பட்டவன்.அவ்வளவுதான் அதற்கு மேல் அந்த தெய்வீக காதலை குறித்து வேறு என்ன சொல்ல முடியும். ஆனால் இந்த ராமாராவ் ஸ்ரீபாலா காதலில் நீங்கள் எத்தனை சொல்லிச்சொல்லி சென்றாலும் சொல்லாமல் சொல்லிப் போனவை அளவுகடந்து கிடக்கிறது. அவைகளை எல்லாம் எண்ணி எண்ணி மனம் அடங்க மறுக்கிறது. வாசித்து முடிந்த பின்னும் அளவிலா சிந்தனைகளையும், விரிந்த புரிதல்களையும், உள்ளக் கொதிப்பையும், அதனூடாக அறிதலின் உவகையையும், அடுத்தவர் துயரையும் தன் துயர் அனுபவமாக முடிவிலி வரை அளித்து உடன் அழைத்து செல்வது தானே ஒரு நல்ல படைப்பின் இலக்கணம். இந்தப் படைப்பு அனைத்து இலக்கணங்களையும் கொண்டுள்ளதோடு அதையும் மீறிய வேறு இன்னதென்று வரையறுத்துவிட முடியாத வேறு எதை எதையோயும் கொண்டிருக்கிறது. அதனாலேயே இதை விட்டு வெளியே வருவது இத்தனை கடினமாக இருக்கிறது.

ஒரு ஆண் ஒரு பெண்ணை விரும்பி அவளும் அவனை விரும்பி அவளை அவனுக்கு அளிக்க தயாராக இருந்தபோதும், ஏதோ ஒரு காரணத்தினால் அப்படி ஒரு உடலுறவு அவர்களுக்கிடையே நிகழவில்லை எனில், அந்தப் பெண்ணின் மீதான அந்த ஆணின் காதல் அமரத்துவம் பெற்று விடுகிறது. அவன் வாழ்நாளில் அந்தப் பெண்ணின் மீதான காதலிலிருந்து பித்திலிருந்து சாகும்வரை அவனுக்கு விடுதலையே இல்லை.

ஒரு ஆண் ஒரு பெண்ணோடு கூடி விட்ட உடனேயே அவளுடனான அவனது உறவில் ஏதோ ஒரு மிகப் பெரிய இழப்பு ஏற்பட்டு விடுகிறது. அவன் மிக விரும்பி ஆனால் கூடாமல் விட்டுவிட்ட அத்தனை பெண்களும் அவனுக்கு முடிவிலி வரையிலான எண்ணிறந்த காதல் உறவுகளுக்கான வாசல்களையும் வாய்ப்புகளையும் கற்பனையிலும் கனவிலும் திறந்து வைத்திருப்பதே இதற்கான உளவியல் காரணம்.

அறியப்படாத உண்மைகளும் திறக்கப்படாத ரகசியங்களும் மனிதனை தூங்க விடுவதே இல்லை. யுகம் யுகம் என, ஜென்ம ஜென்மாந்திரங்களாய், தலைமுறை தலைமுறையாய், அறியப்படாத அவைகளுக்கான தேடுதல் முடிவதே இல்லை. ஒருவகையில் பார்த்தால் காமத்தின் தேடுதலே கடவுளின் தேடுதலுக்கான அச்சாரம்.

இயற்கையின் படைப்பே விசித்திரமானது தான். சரி ஆண் பெண் இரண்டில் ஒன்றுக்காவது கொஞ்சமாவது வாழ்க்கை அனுபவ அறிவு இருந்தால் தானே வாழ்க்கைச் சக்கரம் உருண்டு உலகம் பிழைத்துக் கிடக்கும். இயற்கை கருணையோடு பிழைத்துப் போங்கள் என்று காதல் வயப்பட்ட ஆண் பெண் இருவரில் யாரோ ஒருவருக்கு இந்த அறிவை அளிக்கிறது போலும்.

“அழுவேன்… இதற்காக இல்லை. வேறு பலவற்றுக்காக அழவேண்டியிருக்கும். அப்படி துக்கமாக இருக்கும்போது இதை நினைத்து அழுவேன். இதற்காக அழுதால் ஒரு நிம்மதி வரும்” அவள் புன்னகை செய்து “எதையாவது நினைத்து அழவேண்டுமே. இதை நினைத்து அழுதால் அழுது முடித்தபின் நிம்மதியாக இருக்கும்… மகிழ்ச்சியாகக்கூட இருக்கும்.”

பெண்களின் மிகப் பெரிய பலமே இப்படி அழுது வெளியே வந்துவிடுவது தான். இயற்கை அளித்து இருக்கின்ற தன்னைத் தக்கவைத்துக் கொள்ளும் தன்னைச் சார்ந்தவர்களை பாதுகாத்துக் கொள்ளும் உணர்வே பெண்களுக்கான வரம். அவர்கள் முன் அறியும் நுண்ணுணர்வு திறன் எப்போதும் அவர்களுக்கு துணை வருகிறது.

குறைந்தபட்சம் பெண்களால் வாழ்க்கையை அதன் குரூரங்களை விதிர்க்க வைக்கும் நிதர்சனங்களை ஏற்றுக் கடக்க முடிகிறது. காரிருளிலும் ஒரு சிறு ஒளியை காணுகின்ற கண்கள் பெண்கள் அனைவருக்குமான வரம்தான்.

காதலால், உறவின் பிரிவுகளால், ஏமாற்றங்களால், ஊழின் வலிய கரங்களால், தற்செயல்களால் உடைந்து சிதிலமாகி போன எத்தனையோ ஜீவன்களை மீட்டு வெளியே எடுக்கின்ற ஆலோசனையை, இலவச சேவையை அளித்துக் கொண்டிருப்பவன் என்கின்ற வகையில் பல உண்மைகளை நான் அறிவேன். காதலால் உடைந்துபோன, ஒட்டுமொத்த வாழ்க்கையையே இழந்து போன அவர்களுக்காக இரங்குவதையும் பரிதாபப் படுவதையும் தவிர வேறு என்ன செய்ய முடியும் நம்மால்.

ஆண்கள் பாதிக்கப்படுகின்ற அளவிற்கு பெண்கள் காதலினால் பாதிக்கப்படுவதில்லை என்கின்ற ஒரு குற்றச்சாட்டு எப்பொழுதும் ஆண்களின் மனதில்ஓடிக் கொண்டே இருப்பதை நான் நன்கு அறிவேன். பல ஆண்கள் காதலில் தோற்று திருமணமே செய்துகொள்ளாமல் அவள் மீதான காதலில் உருகி காத்திருக்கின்ற போது, பெண்கள் வேறு திருமணம் செய்துகொண்டு வாழ்வில் தம்மை பொருத்திக்கொண்டு காதலை மறந்து விடுகிறார்கள் என்று பொதுவாக ஆண்கள் நினைக்கிறார்கள்.

நம் சமூக அமைப்பு பெண்களை குடும்ப பந்தத்தில், குழந்தைகளைப் பெற்று வளர்ப்பதில் தளையிட்டு வைத்திருக்கிறது. ஆணைப் போன்ற அளவு சுதந்திரம் தனித்து வாழ்தலில் அவர்களுக்கு

அந்த அளவிற்கு இல்லை என்பதே இதன் உண்மை. இதன் காரணமாகவே பெண்கள் விரைவில் மீண்டுவிடுகிறார்கள் அல்லது மீண்டே ஆகவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள்.

ஒன்றை மிக நிச்சயமாக நான் எனது  அனுபவத்தில் இருந்து சொல்வேன் பெண்களின் மன ஆழத்தில் எங்கோ ஒரு இடத்தில் அந்தக் காதலன் அவனும் ஒரு குழந்தையாக தனக்கான ஒரு இடத்தை எப்பொழுதும் பிடித்து வைத்துக் கொண்டேதான் இருக்கிறான்.

பெண்கள் காதலை காதலனை மறப்பதோ அல்லது அகத்தில் இருந்து முற்றாக நீக்கி விடுவதோ இல்லை. நானறிந்தவரை அவர்கள் தங்கள் உள்ளத்தை மேலும் மேலும் என விரித்து எல்லாவற்றையும் அவற்றிற்கான ஏதோ ஒரு இடத்தில் பொருத்தி வைத்து விடுகிறார்கள்.

காதலனை கைக்குழந்தையாக்கி தன்னை தாயாக உயர்த்திக் கொள்வது அவர்களின் இயல்பிலேயே ஊறி ஊறி கனிந்திருக்கிறது. அதனால்தான் மெய்யியலில் சொல்வார்கள் பெண்களின் இந்த தாய்மை இயல்பினாலேயே மெய்மை தேடல் பாதையை நோக்கி எளிதில் வர முடிவதில்லை அப்படி மீறி வந்து விட்டார்கள் என்றால் அவர்கள் மெய்மையை அடைகின்ற வேகத்தை ஆண்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாது என்று.

கர்ணனை திரௌபதி மறந்துவிட்டார் என்று நம்மால் கூறி விட முடியுமா என்ன???? அல்லது அந்த மூன்று பெண்களில் எவராலாவது பூரிசிரவஸை தான் மறக்க முடிந்ததா! இவ்வளவு ஏன் அம்பைக்கு பீஷ்மரின் மீதான காதல் எள் அளவாவது என்றாவது குறைந்ததா?

இந்தக் கதையைப் பொறுத்தவரை ஸ்ரீ பாலாவின் பெருங்கருணை ராமா ராவுக்கான கொடை. இந்தக் கொடையை ஸ்ரீ பாலா ஒருமுறை அல்ல இருமுறை அளித்திருக்கிறார். முதற் பிரிவின் பொழுதும் 27 ஆண்டுகளுக்குப் பிறகான இரண்டாம் பிரிவின் பொழுதும். அதுவும் தன்னைத்தானே அந்த விபச்சார நரகச் சிறையில் அடைத்துக் கொண்டு. ஸ்ரீ பாலா நினைத்திருந்தால் ராவுடன் தன் வாழ்க்கையை நிச்சயமாக அமைத்துக் கொண்டு இருக்க முடியும். அவசரப்பட்டு எச்சிலை தலையில் கட்டிக்கொண்டு விட்டோம் என்று அவன் என்றைக்குமே நினைக்கக்கூடாது என்று அவன் நல்லபடி வாழ வேண்டும் என்பதற்காக அவனையே விட்டுக்கொடுத்த, அவன் வாழ்வில் வாராது வந்த வரமாதா அல்லவா அவள். பெற்றுக் கொள்பவர்களுக்கு தான் பெற்றுக் கொள்கிறோம்

என்ற உணர்வே வராமல் அளிக்க தெரிந்தவர்கள் எத்தனை பெரியவர்கள். ராமாராவிற்கு அவனுக்குத் தெரியாமலேயே ஒரு மிகப்பெரிய வாழ்க்கை வரத்தை அளித்து வானளவு உயர்ந்து நிற்கிறாள் ஸ்ரீ பாலா.

மோட்டூரி ராமாராவியினால் மட்டுமல்ல எந்த ஆணினாலும் பெண்களை முற்றிலுமாக ஒரு பொழுதும் புரிந்து கொள்ளவே முடியாது. அத்தனைக் காதல் அவள் மீது இருந்த போதும் அவன் கடைசி வரை அவளைப் புரிந்து கொள்ளவே இல்லை. ஆண்களுக்கு ஒரு பொழுதும் இது புரியப்போவதில்லை என்கின்ற இந்த உண்மையை முற்றிலுமாக ஏற்றுக்கொண்டு விடுவதே இங்கே நாம் செய்யக்கூடியது.

இன்னொன்றையும் நினைத்துப் பார்த்தேன்.

இப்பொழுது இந்த 2021இல் ராமாராவிற்கு வயது 91. காதல் கொண்டதும் இழந்ததும் 20 வயதில். அவளை மீண்டும் கண்டும் இழந்தது 47 வயதில். ஸ்ரீ பாலாவை இரண்டாவது முறையாக சந்தித்து வந்துவிட்டு 44 ஆண்டுகள் கடந்துவிட்டது. இன்னமும் கூட அவளை மறக்க முடியாமல் தான் திணறிக் கொண்டிருக்கிறான். மீளமீள கனவுகளில் அவளோடு வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்தத் திரைப்படத்தை பார்த்து பார்த்து கருப்பு வெள்ளை காட்சிகளில் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். இது என்ன வாழ்க்கை ஜெயமோகன் சார், இதற்கு அவளை மணந்து கொண்டு அவன் அவமானப்பட்டு கஷ்டப்பட்டு கொஞ்ச நாள் அவளோடு வாழ்ந்து செத்து இருந்திருந்தால் கூட அந்த வாழ்க்கை மிக நன்றாகவும் மனம் நிறைந்ததாகவும் இருந்திருக்கும் அல்லவா.

உரிய விலை கொடுக்காமல் உன்னதமான எதையும் நம்மால் அடையவே முடியாது என்பது இந்த மனிதர்களுக்கு ஏனோ தெரியவே மாட்டேன் என்கிறது. அதைவிடவும் கொடுமை, எது உன்னதமானது என்பதை அறியாமல் இருப்பது அல்லவா. அருளப்பட்டு இருப்பவைகளின் உன்னதங்களை அறியாமல் இழந்து விட்டு இழந்து விட்டு நினைந்து நினைந்து ஏங்கி ஏங்கி அழுகிறோம். இதுதானே இங்கு மீண்டும் மீண்டும் பலர் வாழ்க்கையில் அரங்கேறிக் கொண்டிருக்கிறது.

தன்னை முற்றாக அளிப்பது அல்லவா காதல். அப்படி அளிக்க முடியாத போது அங்கு எங்கே வாழ்கிறது காதல். அந்தோ பரிதாபம் அவனும் தன்னை முற்றாக தான் அளித்தான் ஆனால் அளித்த விதம் தான் தவறு.

“பறக்காதபோது பறவையல்ல” எத்தனை பெரிய தத்துவம். சிறகே முளைக்காமல் போய் பறக்கவில்லை என்றால் ஏற்றுக் கொள்ளலாம். சிறகு அறுந்து போயோ அல்லது உடைந்து போயோ பறக்கவில்லை என்றாலும் ஏற்றுக்கொள்ளலாம். ஆனால் வலிமையான சிறகு இருந்தும் விரிந்த வானில் உயர உயர பறக்க இயலும் என்றான போதும் பறக்காத இவர்களை எந்தக் கணக்கில் வைப்பது. அப்படி ஒரு தன்னிருக்கம். அறியாமை நிறைந்த ஆணவ மயக்கம். சமூகக் கட்டமைப்பின் அதன் வரட்டு கௌரவங்களின் மீதான பயம். மற்றவர்கள் தன்னைப்பற்றி என்ன நினைப்பார்களோ என்ற அசட்டு அச்சம்.பித்துப்பிடித்து அலைந்து வாழ்வை  வீனடிப்பார்களே தவிர தங்கள் சிறைகளை உடைத்து வெளியே வர மாட்டார்கள். பறக்க முடிந்தும் பறக்காத பறவைகள்.

எத்தனை பெரிய அனுபவ ஆப்த வாக்கியம் இது. “செய்யவேண்டியதை செய்யாவிட்டால் அது ஒரு பள்ளமாகிவிடுகிறது. அது இறந்தகாலத்தில் இருக்கிறது, நிகழ்காலத்தை வைத்து அதை நிரப்பவே முடியாது”  இந்த உண்மை மட்டும் புரிந்து விட்டால் எவர்தான் தம் வாழ்வின் உன்னத கணங்களை அசட்டையாக இழக்கத் துணிவர். இது புரியாமல் எத்தனையோ ஆயிரக்கணக்கானபேர்கள் நிகழ்காலத்தை கொண்டு இறந்தகால அடியிலிப் பள்ளங்களை அடைக்க விடாது முயன்று கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் விழித்துக்கொண்டால் இனியாவது செய்ய வேண்டியவைகளை காலாகாலத்தில் செய்து முடித்து அடைக்கவே முடியாத பள்ளங்களை மேலும்மேலுமென தோண்டாமலாவது இருக்கலாம்.

மிகச் சிறந்த கதைகள் ஒருவரை தூங்க விடாது என கேள்விப்பட்டிருக்கிறேன். இப்பொழுது தான் அதை அனுபவித்து தவித்துக் கொண்டிருக்கிறேன். ஒரு கருப்பு வெள்ளை சினிமா என்னும் திரையைக் கொண்டு நிழல்களாலும் முகில்களாலும் ஆன மிகப்பெரிய கனவுக் காதல் வாழ்க்கை சித்திரத்தை இலக்கிய வானில் கட்டி எழுப்பியிருக்கிறீர்கள். வாசிப்பில் எழும் உச்ச உணர்ச்சிகள் என்னும் முழு நிலவு ஒளி அலைகளால், அந்த காதல் சித்திரம் இருண்டும் ஒளிர்ந்தும் முடிவிலா மாயங்களை, மகிழ்வு என்றும் துயர் என்றும் மாறிமாறி சித்தத்தில் எழுப்பிக் கொண்டே இருக்கிறது.

இப்படி மனிதர்களின் மனங்களை மயக்கிக் கட்டிப்போடும், உணர்வுகளை உச்சத்தில் தள்ளிக் கொல்லும் உங்களை என்ன செய்தால் தகும் என்று தெரியவில்லை. ஒரே நேரத்தில் ஒரு இலக்கியவாதியை திட்டித் தீர்க்கவும் உவந்து புகழ்ந்து போற்றவும் தோன்றுகின்ற என் நினைப்பை இந்தப் பித்து நிலையை எந்தக் கணக்கில் வைப்பேன் நான்?

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

முந்தைய கட்டுரைசித்திரைப் புத்தாண்டு
அடுத்த கட்டுரைபனிமனிதன், கடிதம்