அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 4

Pair Clouds Mood Sky Flying Birds Blue Swallows

அன்புள்ள ஜெ

நீங்கள் சொன்னதுபோலவே அந்த முகில் இந்த முகில் என்னுடைய ரசனையுலகு சார்ந்த கதை அல்ல. இந்த வகையான ரொமாண்டிக் கதைகளை ஒரு வகை தப்பித்தலாகவே பார்ப்பவன் நான். ஆனால் அந்த முகில் இந்த முகில் வெறும் ஒரு கற்பனாவாதக் கதை அல்ல. யதார்த்தமாகச் சொன்னால் ஒருவன் ஒரு பெண்ணைப் பார்த்துக் காதல்கொள்கிறான். பிரியநேர்கிறது. நினைத்துக்கொண்டே இருக்கிறான். அந்த நினைவிலிருந்து மீள முடியவில்லை. அவ்வளவுதான் கதை. ரொமாண்டிக்காகச் சொன்னால் அவனுடைய பரவசம் அவஸ்தை இரண்டும்தான் கதை.

ஆனால் இதை இலக்கியமாக ஆக்குவது இரண்டு விஷயங்கள். கதையில் உள்ள சிக்கலான செறிவான படிமங்களும் கலாச்சாரக் குறிப்புகளும். அந்தக்காலச் சினிமா பற்றிய ஏராளமான கலாச்சாரக் குறிப்புகள். ஆனால் அவையெல்லாம் செய்திகளாக இல்லாமல் படிமங்களாக உள்ளன. உதாரணமாக பட்டப்பகல்தான் நிலவொளியாக ஆகியிருக்கிறது. அந்த ஃபில்டர். அதுதான் காதல். அந்தப் படிமம் போல கறுப்புவெள்ளையில் தொடங்கி குறியீடுகள் குவிந்துகிடக்கின்றன. மேகம் என்று அவளைச் சொல்லும்போது அவள் தலைமுடி சொல்லப்படுகிறது. ஆனால் நேரடியாக உவமை சொல்லப்படவே இல்லை.

அத்துடன் கதைமுழுக்க பரவி கூர்ந்து வரிவரியாக வாசிக்கவைக்கும் மனசு பற்றிய அப்செர்வேஷன்கள். மனம் எப்படி தனக்குத்தானே வேஷம் போடுகிறது, எப்படி தன்னையும் துன்புறச்செய்து பிறரையும் துன்புறுத்தி அந்த வலியைச் சுவைத்து மகிழ்கிறது என்பதுபோன்ற பலநூறு இடங்கள். கதையை மட்டும் வேகமாக வாசித்துச் செல்பவர்கள் அதை இழந்துவிடுவார்கள். அவர்கள் இந்நாவலுக்கான வாசகர்களே கிடையாது.

ஒவ்வொரு இடத்திலும் கொஞ்சம் நெருங்கியதும் அவன் ஏன் தேள் மாதிரி விஷக்கொடுக்கால் கொட்டுகிறான்? அந்த மனநிலை எப்படி அவனில் உருவாகிறது? அவன் அவளை இழந்தபின் அந்த கொடுக்கால் தன்னைத்தானே கொட்டிக்கொண்டு கிறுக்கன் ஆகிவிடுகிறான்

ஆர்.பாஸ்கர்.

***

அன்புள்ள ஆசிரியருக்கு,

முகில் குறுநாவல் ஒரு கனவு. 40’களில் சென்று வாழ்ந்து வந்து விட்ட உணர்வு. முழுக் கதையையும் கறுப்பு-வெள்ளையிலேயே பார்க்க முடிந்தது. அந்த அனுபவத்தில் எழுதிய இரு கவிதை.

கனவுகளில் பூத்த பூக்களின் வாசம்.
கறுப்பு வெள்ளைப் பூக்கள் மட்டுமே
பூத்து நிறைந்த கனவொன்றில் மழையிரவில்
வண்ணங்களை வடிகட்டிய இமைகளுக்குப் பின்னால்
மௌனப் படம் போல் காட்சிகள்
மின்னல்களும் மேகங்களும் கொட்டி முழக்கின
வெண்மழை நிலாப் பொழிவில் மண் நனைந்தது
அல்லி பூத்த குளத்தின் மேல் ஆயிரம் நீர்ச் சிலந்திகள்
துண்டு நிலாக்கள் படிந்த ஈரம்
மெல்லிய பனிப்புகை சாம்பல் படலம்
கூதல் காற்றில் அடர்ந்த குளிர்
நடுங்கும் இதழ்களில் வழியும் பூமணம்
முள் நுனிகளில் சொட்டும் துளிகள்
ஓடை ஒதுங்கும் வேர்களின் மேலே
இலைகள் விரித்த நிழல்வெளிப் பந்தல்
இலைகள் தாங்கும் கிளைகளின் ஊடே
முகில் வழிப் பெருகும் மழை நதி வெள்ளம்
இரவின் அமைதிக்குள் இருளும் ஒளியும்
கனவின் உலகுக்குள் குளிரும் பனியும்
மூடிய கண்களுக்குள் விழித்திருக்கும் உள்ளம்
உடலுக்கு வெளியே ஆழ்ந்த உறக்கம்.

நன்றிகள்,
இரா.வசந்த குமார்

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

படித்து முடித்தவுடன் என்ன செய்வதென்றே தெரியவில்லை.இரண்டு மூன்று பேர்களை அழைத்து பேச வேண்டுமென்று தோன்றியது.எடை கனக்கும்  மனமாய் ஆகிப்போனது…இந்தக் குறுநாவல் குறித்து பல்வேறு நண்பர்கள் எழுதக்கூடும்.விரித்து விளக்கமாக பல்வேறு தன்மைகள் பற்றி .ஆனால் எனக்கு சொல்ல ஒன்றே ஒன்றுதான் உள்ளது…

உண்மையாலுமே அவர்கள் இருவரும் இப்படித்தான் பேசியிருப்பார்கள் என்று மனம் நூறு சதவீதம் நம்புகிறது.அவ்வளவு சுடர்ந்த உணர்வுப் பூர்வமான உரையாடல்கள். ஆ மப்பு பாடலை நான் இணையத்தில் தேடிக் கிடைக்காமல் இருந்த அடுத்த நாளில் அதன் இணைப்பை வழங்கியிருந்தீர்கள்

இந்த நேரத்தில் உங்கள் கைகளை இறுக பற்றிக் கொள்ள தோன்றுகிறது …
நாளை மதுரை நிகழ்வில் உங்களை சந்திப்பேன்.இந்த பரவச நினைவுகளை தந்ததற்கு …. நன்றியும் பிரியமும்

குமார் ஷண்முகம்
கோவை

***

அன்புள்ள ஜெ

அந்த முகில் இந்த முகில் கதை முழுக்க வரும் ஆழமான வரிகள் தன்னுடைய மனதை தானே கூர்ந்து கவனிக்கும் ஒருவர் கண்டடைவது. உங்கள் கதைகளை கதைநாயகனின் கதாபாத்திரம் அப்படிப்பட்டது, அவனுக்கு கலையிலக்கிய ஆர்வம் உண்டு என்றவகையில் அமைப்பதனால் அந்த விஷயம் ஆழமாக இருந்தாலும் இயல்பாகத் தெரிகிறது.

இரண்டு இடங்கள் உடனடியாகச் சொல்லத் தோன்றுகிறது. முகத்தில் வெயில் விழுவதைப் பற்றிய இடம். முகத்தில் ஒளிவிழுந்தால் உடனே ஏன் மனம் மலர்கிறது? நான் அதை வாசித்ததுமே அட ஆமா இல்ல என்று நினைத்துக்கொண்டேன்

செய்யவேண்டியதை செய்யாவிட்டால் அது ஒரு பள்ளமாகிவிடுகிறது. அது இறந்தகாலத்தில் இருக்கிறது, நிகழ்காலத்தை வைத்து அதை நிரப்பவே முடியாது—இந்த வரி இந்நாவலின் மகுடம்.

இந்தவரிகள் வழியாகத்தான் இந்நாவல் நினைவில் நிற்கப்போகிறது

எம். ஜெயக்குமார்

முந்தைய கட்டுரைஅறிவியலுக்கு அப்பாலுள்ள அறிதல்கள் தேவையா?.
அடுத்த கட்டுரைஅசோகமித்திரன் – கடிதங்கள்