மட்காக் குப்பை – கடிதங்கள்

மட்காக்குப்பை

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

நலம். மட்காக்குப்பை பதிவில், வாசகர் ஒருவரின் கேள்விக்கு நீங்கள் எழுதிய எதிர்வினையைப் பார்த்தேன். எனக்கு என்னவோ பொதுவாகவே, சுயமாக எதுவும் தேடிக்கொள்ளாமலேயே கேள்வி கேட்பார்கள் என்று நினைக்கிறேன். நான் சிறு வயதாக இருக்கும்பொழுது, சில சின்ன கேள்விகளுக்கு, என் தந்தை பதில் சொல்லாமல் எதிர் கேள்வி கேட்பார். உதாரணத்திற்கு இன்றைக்கு என்ன தேதி என்று கேட்டால், நேற்று என்ன தேதி என்று கேட்பார்.  நேற்றைய தேதியை சொல்லிவிடுவேன். அவர், அதன் மூலம் எனக்குச் சுட்டிக்காட்டிய வழி, கொஞ்சம் நீயே யோசி என்பதுதான்.

அமெரிக்காவில், என்னை மேலாளராக்க சொல்லாமல் பயிற்சியளிக்கும் மேலாளர்களும் அதே முறைதான் கையாண்டார்கள். ஏதாவது ஒரு பிரச்சனை என்று நான் போய் நின்றால், அவர்கள் காலில் நின்று, அதற்கான பதிலை நீயே யோசி என்று திருப்பி அனுப்பிவிடுவார்கள், அதற்குப் பிறகு கேள்வியையும் பதிலையும் எடுத்துச் சென்று பொதுவான ஒரு முடிவு ஒன்றை தேர்ந்தெடுக்கவே மேலாளரிடம் செல்வேன்.  இதை நான் பயிற்சியாக எடுத்துக்கொண்ட அதே சமயம், சிலர், இவர் மேலாளர் என்பதால்தானே , பிரச்சனையை எடுத்துக்கொண்டு செல்கிறோம். நமக்கு பதில் தெரிந்தால், எதற்கு இவரிடம் செல்கிறோம் என்று கேட்பார்கள். அவர்கள் இன்றும் மேலாளர்களைக் குறை சொல்லிக்கொண்டு அங்கேயே உள்ளார்கள்.

மொண்ணையாக கேள்வி கேட்பவர்களுக்கு,  நீங்கள் ஒரு பொறுப்பான ஆசிரியராக பதில் சொல்கிறீர்கள். என் தந்தையைப் போல, என் மேலாளர்களைப் போல எதிர்க்கேள்வி கேட்டு தரவுகள் எதிர்பார்த்தால், அது மேலும் வளர்ந்து சம்பந்தமில்லாத கேள்விகள் வரும் என நினைக்கிறேன். சமூக ஊடகங்களில் விஷமெனப் பரவும் பொய்த்தகவல்களுக்கு மத்தியில், சரியான விஷயங்கள் பதிவாகட்டும் என்பதால் உங்களால் முடிந்ததை பொறுமையுடன் பதில் சொல்கிறீர்கள் என தொடர் வாசகனான எனக்குப் புரிகிறது.

மடையர்களுடன் விவாதிக்கும்படி தொடர்ந்து இழுக்கப்படுகிறேன். மடத்தனமோ மட்குவதுமில்லை. எழுந்து எழுந்து வந்துகொண்டே இருக்கிறது. 

நீங்கள் இப்படி வருத்தப்பட்டிருப்பதால், நண்பனாக பார்த்துக்கொண்டு சும்மா இருக்கமுடியவில்லை என்று வைத்துக்கொள்ளுங்கள். அல்லது, தரவுகள் இல்லாமல் கேள்வி கேட்கும் வாசகர்களுக்கு இந்தத் தளத்தின் மேன்மையை சீராட்டும் பாராட்டும் வாசகனின் பதிவாக இது இருந்துவிட்டுப் போகட்டும். உங்களைத் தொடர்ந்து வாசிக்கும் எந்த ஒரு வாசகனும், அடிப்படைத் தகவல்களை அவனே தேடுவான். ‘தேடு’ என்று தளத்தில் உள்ள option-ல் சரியான குறிச்சொல்லைப் பயன்படுத்தி, நீங்கள் இதற்கு முன்னால், அவன் கேட்கவிருக்கும் கேள்விக்கு என்ன சொல்லியிருக்கிறீர்கள் என்று பார்ப்பான்.

உங்களால் ஒரு பெரும் அறிவியக்கம் உருவாகியிருக்கிறது என்று இந்த உலகம் அறியும் நாட்கள் வெகுதூரம் இல்லை. கடந்த ஒரு வருடமாக, நான் குறைந்தது இருநூறு தனிப்பட்ட நபர்களுடன் , சக வாசகன் என்ற முறையில் பேசியிருக்கிறேன். ஒவ்வொருவரும் அவர்கள் துறையில் பழம் தின்று கொட்டை போட்டவர்கள். உங்களைப் பற்றி பேச்சு வந்தால், உங்களிடம் கற்றுக்கொள்ள நிறைய இருக்கிறது என்றே நினைக்கிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு முன், நண்பர்களுடனான உரையாடலில் , கிராதத்தில் குபேரன் மாளிகைக்குச் சென்று ஒவ்வொரு வாயிலையும் கடக்கும் அர்ஜுனன் கூழாங்கல்லை வைரத்திற்கு இணையாக வைத்து விளையாடும் விளையாட்டுக்கள் பற்றிப் பேச்சு வந்தது.  அந்த அத்தியாயம் முழுவதும் க்ரைப்டோ கரன்சியின் அடிப்படை. சில வருடங்களுக்கு முன்னர், ஒரு கட்டுரையில், தனி நபருக்கு சட்டை தைத்துக்கொடுக்கும் தையல்காரன் இல்லாமல் போகும் ஒரு நாள் வந்துவிடும் என்று எழுதியிருப்பீர்கள். அதில் கணினிமயமாக்குதல் எப்படி தையல்காரனை இல்லாமல் ஆக்கும் என்று நீங்கள் விவரித்திருப்பது இன்று நாங்கள் எல்லாம் பேசிக்கொள்ளும் Data Science / Machine Learning அடிப்படை.

ஒரே நேரத்தில் உங்களால் 1700-லும் வசிக்கமுடியும். 2091-லும் வசிக்கமுடியும். அதை அறிந்து வைத்திருக்கும் வாசகர்கள் அதிகம் உள்ளவர்கள் நீங்கள் என்பதால் , அவ்வப்பொழுது மடத்தனமான கேள்விகளுக்குப் பதில் சொல்லும் நிலைமை ஏற்படுவது கண்ணேறு படாமல் இருப்பதற்கு என்று வைத்துக் கொள்கிறேன்.

அன்புடன்,

ஆஸ்டின் சௌந்தர்

அன்புள்ள சௌந்தர்,

கூடுமானவரை இவர்களைப் புறக்கணிக்கிறேன். ஆனால் அவற்றை வாசித்துவிட்டு ஓர் இளம் வாசகர் கேள்வி கேட்கும்போதுதான் இவர்கள் உருவாக்கும் அழிவு என்ன என்று தெரிகிறது

ஜெ

அன்புள்ள ஜெ,

மட்காக்குப்பை பார்த்தேன். நானே எழுதவேண்டுமென நினைத்தேன். சமீபத்தில் ஒரு இடதுசாரி வழக்கறிஞர் [ முருகவேள்] உங்கள் அறமென்ப கதையை வைத்து சில பிழைகளைச் சுட்டிக்காட்டியிருந்தார். அதற்கு ஒரு பிராக்டீஸிங் வக்கீல் வந்து ஆணித்தரமான மறுப்புகளைச் சொல்லிவிட்டார். ஆனால் அந்த வக்கீல் சொன்னதை அறியாதவர் போல அவர் நீங்கள் அவரை மறுத்தீர்கள் என்று சொல்லி அதே குற்றச்சாட்டுக்களை திரும்ப ஆனந்தவிகடனில் ஒரு பேட்டியில் சொல்கிறார். அவரைப்போன்ற ஒரு வக்கீலுக்கு ஒரு பிராக்டீஸிங் வக்கீலின் மறுப்பின் அர்த்தம் என்ன என்று தெரிந்திருக்கும். அவர்கள் இந்தமாதிரி கேஸில்லாமல் அரசியல்பேசும் வக்கீல்களை பொருட்டாகவே நினைக்க மாட்டார்கள். ஆனாலும் அதை திரும்பச் சொல்கிறார்.

இதையே நான் பார்க்கிறேன். நீங்கள் ஆணித்தரமான மறுப்பைச் சொன்னாலும் மறுக்கவில்லை, ஓடிவிட்டார், தவிர்க்கிறார் என்று திரும்பத்திரும்ப எல்லா இடங்களிலும் போய் சொல்லிக்கொண்டிருப்பார்கள். பெரியார் விஷயத்திலும் இதையே செய்கிறார்கள். மறுக்கப்படும்போது சரி, தெரியாமல் சொல்லிவிட்டேன் என்று ஏற்றுக்கொள்ளாமலிருந்தாலும் பரவாயில்லை. அதே குற்றச்சாட்டை மீண்டும் சொல்கிறார்கள். சொல்லிக்கொண்டே இருக்கிறார்கள். இந்தச் சூழலில்தான் நீங்கள் எழுதவேண்டியிருக்கிறது

ஆர்.சந்தானம்

அன்புள்ள சந்தானம்

அதை தெரியாமல் அவர் சொல்லவில்லை. அது ஓர் உத்தி. அந்த ஒரு கேள்வியும் பதிலும் இல்லாவிட்டால் அவருடைய பேட்டியை எவர் பொருட்படுத்தி படிக்கப்போகிறார்கள்? அது அவருக்கு தெரியாதா என்ன? இது ஒட்டுண்ணிகணின் வாழ்வுத்தந்திரம், அவ்வளவே.

ஜெ

முந்தைய கட்டுரை‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை
அடுத்த கட்டுரைஅந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 2