அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 2

கடந்த சில ஆண்டுகளில் உங்கள் படைப்புகள் நிறைய வாசித்துள்ளேன். ஆனால் தினமும் இரவு பனிரெண்டு வரை காத்திருந்து படித்தது “அந்த முகில், இந்த முகில்” தான். காத்திருக்க வைத்ததும் இது மட்டும் தான்.

நிலவொளியில் வானத்தை பார்த்து கொண்டிருப்பது அரிய அனுபவம். சிறுவயதில் எங்கள் கிராமத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும் இரவுகளில், வானம் பார்த்தே படுத்திருப்பேன். முக்கால்வாசி பெளர்ணமி இரவுகளை வானத்தை பார்த்தே கழிதிருக்கிறேன். கனவுகள் கண்டிருக்கிறேன். அந்த நாட்களுக்கு சென்று வந்த பிரமை.

நீங்கள் இன்னும் நிறைய படைக்க வேண்டும்.

இதன் தாக்கத்தில் மல்லீஸ்வரி படத்தை வேறு பார்க்க ஆரம்பித்து, இன்னும் முடிக்கவில்லை. ஓரிரு தினங்களில் அதை முடிக்க வேண்டும்.

நன்றி,

ராஜசேகரன்

***

அன்புள்ள ஜெ

மொத்தம் மூன்று காதல்கதைகள். ஸ்ரீராஜவிஜயேஸ்வரிக்கும் நல்லமராஜுவுக்குமான ஒரு காதல். பானுமதிக்கும் என்.டி.ஆருக்குமான ஒரு காதல். மோட்டூரி ராமராவுக்கும் ஸ்ரீபாலாவுக்குமான ஒரு காதல். மூன்று நிலைகளில் அவை இருக்கின்றன. முதற்காதல் ஒரு கனவு. மனிதன் கண்டுகொண்டே இருக்கும் ஒரு கனவு. இரண்டாவது காதல் அந்த கனவின் ஒரு சாயம் கொஞ்சம் கலந்தது. மூன்றாவது காதல் கனவே இல்லாத யதார்த்தம். சினிமாவில் நடந்தால்கூட ராமராவ்- ஸ்ரீபாலா காதல் அதன் அடித்தளமான அப்பட்டமான யதார்த்தத்தில் நடைபெறுகிறது.

நடைமுறையில் காதல் என்பது இவ்வளவுதான். இத்தனை யதார்த்தமானதுதான். பலவகையான பயங்கள், பலவகையான தயக்கங்கள், சாதி மதம் சமூக அந்தஸ்து எல்லாம் உண்டு. எல்லையை கடக்க பெரும்பாலும் முடிவதே இல்லை.அந்த அனுபவம்தான் 99 சதவீதம் பேருக்கும் இருக்கும். ஆனால் அந்தக் கனவு இருந்துகொண்டும் இருக்கும். அதை நோக்கி ஏங்கிக்கொண்டும் இருப்போம். அந்த கண்ணீர்துளிக்க வைக்கும் ஏக்கம் பதிவாகியிருக்கும் அபூர்வமான படைப்பு இது. என் அனுபவங்களுடன் நெருக்கமானது.

அந்தக் கடைசிக்காட்சியில் அவர்கள் உணர்ச்சிக்கொந்தளிப்புகள் ஒருபக்கம் நடைமுறை உணர்வு இன்னொரு பக்கம் என்று நின்று பேசிக்கொண்டிருப்பதில் உள்ள மிகையில்லாத யதார்த்தம்தான் இந்நாவலை கலைப்படைப்பாக ஆக்குகிறது

எம். மகேந்திரன்

***

அன்புள்ள ஜெ,

தமிழில் அசோகமித்திரன்தான்  ஐம்பது அறுபதுகளின் சினிமா பற்றி எழுதியிருக்கிறார். விஜயா வாஹினியில் பி.என்.ரெட்டி- நாகி ரெட்டி சகோதரர்களுடன் வேலைபார்த்த அனுபவம் பற்றி சாண்டில்யன் எழுதியிருக்கிறார். அவர் கதையிலாகாவில் வேலைபார்த்தார். ஆனால் அவற்றில் எவற்றிலும் சினிமாவின் தொழில்நுட்பம் பற்றி ஒன்றுமில்லை. ஏனென்றால் அன்றெல்லாம் நிர்வாகம், கதை இலகா வேறு. தொழில்நுட்பம் வேறு. அங்கே தலையிடவே அனுமதிக்க மாட்டார்கள்.

நீங்கள் உங்கள் சினிமா அனுபவத்திலிருந்து பல்வேறு விஷயங்களை தொட்டு எழுதியிருக்கிறீர்கள். அவை வெறும் செய்திகளாக இல்லாமல் நாவலின் உணர்ச்சித்தளத்துடன் கலந்து வேறுவேறு அர்த்தங்களை எடுத்துக்கொண்டே இருக்கின்றன. இந்நாவலுக்கு கருப்புவெள்ளை என்றுகூட பெயர் வைத்திருக்கலாம். கருப்புவெள்ளையின் கனவுலகம், அதற்கும் நிலவுக்குமான உறவு என பல உள்ளிணைப்புக்கள். கருப்பு வெள்ளை சினிமாவே முகில்களாலான ஓர் உலகம் என்பது ஒரு அபாரமான கற்பனை.

எத்தனை குறிப்புகள் வழியாக கதை நீண்டு செல்கிறது. காமிரா தெய்வமாக அமர்ந்திருக்கும் அந்த செட். மறைந்துபோன ஒரு நகரின் இடிபாடுகளில் இருந்து ஒரு சமகாலக் கனவை உருவாக்குகிறார்கள். அதைத்தான் ராவுகாரு கடைசிவரை பார்த்துக்கொண்டிருக்கிறார்

என்.ஆர்.சுவாமிநாதன்

***

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

நாம் காண்கின்ற காட்சி ஒன்று, நம் மனதில் பதிவாகின்றது ஒன்று, அதை நாம் நினைத்துப் பார்க்கும்பொழுது எழுந்து வருவது ஒன்று,பல ஆயிரம் முறை நினைத்துப் பார்த்து நினைத்துப் பார்த்து கடைசியாக முழுமை பெற்று நிற்கின்ற நினைவு என்பது ஒன்று.

நாம் விரும்புகின்ற ஒருவரோடு இருந்த கணங்களை விட, நம் நினைவில் உருவாக்கி வைத்திருக்கும் அவரோடு இருந்த கணங்கள் பல ஆயிரம் மடங்கு மிகப் பெரியது.

எனது கல்லூரி பருவத்தில் மிகவும் அழகான ஒரு பெண்ணை நண்பர்கள் எல்லோருமே விரும்பினோம், அவளை குறித்து இரவு பகலாக நண்பர்கள் கதைத்து கிடந்தோம்.படிப்பு முடிந்து அவரவர் வாழ்வில் அவரவர் மூழ்கிய பொழுது அந்தப் பெண் குறித்த தொடர்பே இல்லாமல் போனது. 25 ஆவது ஆண்டு அலுமினி மீட்டிங் நடந்த பொழுது அதில் நான் கலந்து கொள்ளவில்லை. அந்த நிகழ்வின் புகைப்படம் மற்றும் வீடியோவை நண்பர்கள் அனுப்பியிருந்தார்கள். 25 ஆண்டுகளாக எனது நினைவில் அவ்வப்போது வந்து போன அந்த அழகியின் உருவத்திற்கும் அவர்கள் அனுப்பியிருந்த நிகழ்கால போட்டோ விற்கும் துளிகூட தொடர்பே இல்லை. உருவம் பெருத்து வாழ்வின் சுமைகளை தாங்கி அவள் அழகே அற்றுப் போய் இருந்தாள் . அந்த போட்டோவை ஏனடா பார்த்தோம் என்று ஆகிவிட்டது.அவளின் அந்த இனிமையான நினைவுகளை அது ஒரேயடியாகக் குலைத்து போட்டுவிட்டது. நினைவில் வாழ்பவர்கள் காலத்தைக் கடந்து நின்று விடுகிறார்கள்.

இந்தக்கதை ஆழத்தில் ஒரு துயரத்தையே உருவாக்குகிறது. நாம் உண்மையில் செய்ய விரும்புவது ஒன்று செய்து தொலைப்பது வேறு ஒன்று. தொலைந்தவைகள் திரும்பி வருவதே இல்லை. நாம் விரும்பிய வண்ணம் வாழ்வதற்கான எல்லாம் சுதந்திரங்களையும் இயற்கை பல நேரங்களில் நிச்சயமாக அளிக்கிறது.ஆனால் நாம்தான் அவற்றை பல நுட்பமான காரணங்களால் பயன்படுத்திக் கொள்ள தவறி விடுகிறோம். இது கதையே ஆனாலும் கூட இழப்பின் வலி என்பது துயர் தருவதே.

மனம் கொஞ்சம் கணக்கத்தான் செய்கிறது. நிகர் வாழ்க்கை அனுபவம் தருதல் என்பது இலக்கியத்தின் வெற்றியாக இருக்கலாம் ஆனால் சில நேரங்களில் இலக்கியம் ஏற்படுத்தும் துயர் நிஜ வாழ்வில் வலியையும் தருகிறது தானே? இது தேவையா என்கின்ற கேள்வியும் எனக்கு எழுகிறது சில நேரங்களில்… உள்ளதைச் சொன்னேன் கோபித்துக் கொள்ளாதீர்கள்.

இழந்துபோன கணங்களை எங்கு போய் பெறுவது. எத்தனை எத்தனை அற்பக் காரணங்களால் எத்தனை எத்தனை உன்னத வாழ்வின் பேறுகளை இழந்திருப்போம்?

ஆனந்த் சுவாமி இது வெறும் கற்பனை கதை தான் கவலைப்பட ஒன்றுமில்லை என்று எனக்கு நானே சொல்லி வெளியே வந்து விட்டேன். அது வேறு விஷயம். அதையும் தவிர இங்கே வாழ்க்கையில் கவலைப்பட ஒன்றுமே இல்லை என்ற எனது ஆன்மீக புரிதலும் என்னை காத்து நின்றது. ஆனால் அதே நேரத்தில் இந்த கதை கொஞ்சம் வலிக்கவைத்தது என்பதும் மறுக்க முடியாத உண்மையே…….

ஸ்ரீ பாலாவின் கோணத்திலிருந்து இன்னொரு 12 அத்தியாயங்கள் வந்தால் எவ்வளவு நன்றாக இருக்கும் என்றும் ஒருபுறம் நினைத்துக் கொண்டேன். பாவம் அந்தப் பேதை என்னென்ன துயரங்களை எதிர்கொண்டாளோ….அவளுக்கும் தன்னுடைய தரப்பு என்று ஒன்று இருக்கும் தானே…காதலின் துயரங்கள் இருவருக்கும் பொது தானே….

இதுபோன்ற துயர் தரும் கதைகளை படிக்கவே கூடாது என முடிவு செய்கிறேன். இவைகள் என்னுடைய ஆழ்ந்த அமைதியை, நிறைநிலையை சற்று நேரத்திற்கேனும் குலைக்கின்றன. உண்மையைச் சொல்லப்போனால் துயர் அளிக்கின்ற எந்த புனைவையும் இப்பொழுதெல்லாம் என்னால் படிக்கவே முடிவதில்லை. உங்கள் எழுத்திற்கு அதன் நடைக்கு வசப்பட்டு மீண்டும் மீண்டும் படித்துக்கொண்டே இருக்கிறேன்… இந்த வேடிக்கை எனக்கு இன்னும் பிடிபட்ட பாடில்லை…. எனது மன ஓட்டத்தை எழுதிச் செல்கிறேன் தவறாக எடுத்துக் கொள்ள மாட்டீர்கள் என்ற நம்பிக்கையுடன்….

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

முந்தைய கட்டுரைமட்காக் குப்பை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைகல்பனா ஜெயகாந்த் கவிதைகள்- கடலூர் சீனு