‘இந்திர நீலம்’ வாசிப்பு -முனைவர் ப. சரவணன், மதுரை

‘வெண்முரசு’ நாவல் தொடரில் ஏழாவது நாவல் ‘இந்திர நீலம்’. ‘இந்திர நீலம்’ என்பது, பரம்பொருளின் நிறம். ‘சியமந்தக மணி’ என்பது, இந்திர நீல நிறத்தை உடைய ஓர் ஒளிர்கல். இந்த நாவல் ‘சியமந்தக மணி’ என்ற ஒன்றைச் சுற்றியே எழுதப்பெற்றுள்ளது. என்னைப் பொறுத்தவரை ‘சியமந்தக மணி’ என்பது, ஊழின் விழிதான்.

எல்லாவற்றையும் தன்னிடம் ஈர்த்துப் புதைத்துக்கொள்ளும் ‘கருந்துளை’ (BLACK HOLE) போலவே ‘சியமந்தக மணி’ எல்லோரின் மனத்தையும் தன்னகத்தே ஈர்த்து, அவர்களை நெறிபிழைக்கச் செய்கிறது. நம்மை மும்மலங்களில் (ஆணவம், கன்மம், மாயை) ஆழ்த்தும் விழைவுகளின் பெருவாசலே ‘சியமந்தக மணி’.

ஒட்டுமொத்த உலக வாழ்வே ஊழின் ஆடல்தான் என்று புரிந்துகொண்டால், அந்த ஆட்டத்தின் முதல் அசைவு மும்மலங்களுள் ஒன்றிலிருந்தே தொடங்குகிறது என்பதை உணர முடியும்.  ‘ஊழின் பெருங்கரத்தில் அகப்படாமல் இருக்க நாம் எதைப் பற்றியிருக்க வேண்டும்?’ என்ற வினாவுக்குரிய விடையாகவே இந்த ‘இந்திர நீலம்’ நாவல் அமைக்கப்பட்டுள்ளது.

யுகந்தோறும் ‘பரம்பொருள்’ அவதாரபுருஷராக வடிவம்கொண்டு பூமியில் தோன்றுகிறது. அவ்வாறு தோன்றிய பரம்பொருளின் ஒரு வடிவம்தான், அவதாரபுருஷர்தான் இளைய யாதவர். அவர் ‘ஊழ்’ என்ற பெருங்கருத்தாக்கத்தைக் கொண்டு உலக உயிர்களை ஆட்டிப்படைக்கிறார். ஒவ்வொரு கணமும் ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொன்றுக்கும் அவர் ஊழை முன்வைத்து பெருந்தேர்வு ஒன்றை நடத்துகிறார். அதில் வெற்றி பெறுபவர்களைத் தன்னருகிலும் தோல்வியடைபவர்களைத் தன் கண்பார்வைபடும் தொலைவிலும் நிறுத்திக்கொள்கிறார்.

இந்த நாவலில் இளைய யாதவர் எட்டு மனைவியரைத் திருமணம்புரிந்தமை பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. ‘இளைய யாதவர் ஏன் எட்டுப் பெண்களை மணந்தார்?’ என்ற வினாவுக்கு ஒரு பொதுவிடையாகத் துவாரகையின் விரிவாக்கத்துக்காகவே என்று கூறும் எழுத்தாளர், அந்த வினாவுக்குச் சிறப்பு விடையாகத் ‘திருமகள் எங்கிருந்து புறப்பட்டாளோ அங்கேயே திரும்பி வரவேண்டும்’ அதற்காகத்தான் இளைய யாதவர் திருமகளின் எட்டு வடிவங்களையும் திருமணம் செய்துகொள்கிறார் என்கிறார். இந்த விடைகளை எழுத்தாளர் இந்த நாவலில் எந்த இடத்திலும் நேரடியாகத் தெரிவிக்கவில்லை. ஆனால், சிறந்த வாசகர்களால் இந்த விடைகளை இந்த நாவலின் வரிகளிலிருந்தே உய்த்தறிய இயலும்.

திருமாலின் நெஞ்சிலிருந்து எட்டு முறை புறப்படும் திருமகள் மீண்டும் எட்டு விதங்களில் திருமாலிடமே வந்து சேர்கிறார். திருமாலின் சுதர்ஷனச்சக்கரம் அவரின் விருப்பப்படி சென்று, வினைமுடித்து, மீண்டும் அவரிடமே திரும்பி வருவது போலவே, திருமகளும் திருமாலின் திட்டங்களுக்குத் தலைவணங்கி, அவரின் வினையை நிறைவுசெய்ய அவருக்குத்  துணை நிற்பதற்காகவே புறப்படுகிறார். வினைமுடித்ததும் மீண்டும் அவரிடமே  திரும்பி வருகிறார்.

இளைய யாதவரின் வாழ்க்கையில், ‘எட்டு’ என்ற எண் பல வகையில் பொருள்கொள்கிறது என்பதையும் நம்மால் மறுக்க முடியாதுதான். இளைய யாதவரின் எட்டு மணநிகழ்வுகளையும் எட்டுவிதமான கோணத்தில் காட்டி, அந்த எட்டு மனைவியரும் எவ்வாறு ‘அஷ்டலக்ஷ்மி’யராகத் திகழ்கின்றனர் என்பதையும் குறிப்புணர்த்தியுள்ளார் எழுத்தாளர்.

‘வெண்முரசு’ நாவல் தொடரில் நான்காவது நாவலான ‘நீலம்’ நாவலில்தான் ராதா-கிருஷ்ணனின் முடிவற்ற ஆன்மிகப்பித்துநிலையைக் காண முடியும். இந்த ‘இந்திர நீலம்’ நாவலில் அஷ்டலக்ஷ்மி-கிருஷ்ணனின் ஊடல், கூடல் சார்ந்த முடிவற்ற ஆன்மிகப்பித்துநிலையைக் காண முடிகிறது. அஷ்டலக்ஷ்மியருக்கு இருக்கும் கிருஷ்ணப் பித்தினையும் இளைய யாதவரின் அதிவீரத்தையும் ஒருங்கே காணும் பெருமுற்றமாக இந்த நாவல் அமைக்கப்பட்டுள்ளது. அவர்களின் ஒவ்வொரு மணக்களமும் ஒரு போர்க்களமாகவே அமைந்துவிடுவதும் அதை மிக எளிதாக இளைய யாதவர் எதிர்கொள்வதும் ஊழின் ஆடலன்றி வேறு என்ன?

இந்த நாவலில் அஷ்டலக்ஷ்மியரின் வாழ்வைச் சொல்வதற்காக எழுத்தாளர் கையாளும் சொல்வளமும் காட்சியமைப்பும் நம்பகமான கற்பனை விரிவுகளும் நம்மைத் திக்குமுக்காடச் செய்கின்றன. அதனாலேயே நான் எழுத்தாளர் உயர்திரு. ஜெயமோகன் அவர்களை ‘இருபத்தோராம் நூற்றாண்டின் இணையற்ற பாணர் அல்லது சூதர்’ என்பேன்.

இந்த நாவலின் தொடக்கத்தில் திரௌபதியின் மனத்துக்குள் கருக்கொண்ட ‘இந்திரப்பிரஸ்தம்’ நிஜத்தில் உருக்கொள்ளும் விதத்தினைக் காட்டியுள்ளார் எழுத்தாளர். பெண்ணால் உருவாக்கப்படும் பெருநகரம் எவ்வகையில் எல்லாம் பெண்களைக் காக்கும் என்பதற்கு ஒரு சான்றாகவே இந்த நாவலின் மூன்றாம் அத்யாயம் அமைக்கப்பட்டுள்ளது.

‘சுஃப்ரை’ என்ற கலைப்பெண்ணைத் திரௌபதியின் தம்பி திருஷ்டத்யுமன் அவமானப்படுத்தி, கொலைபுரியும் நிலைக்குச் சென்றுவிடுகிறான். ஆனால், திரௌபதியோ ‘சுஃப்ரை’யை அவனிடமிருந்து மீட்டு, பாதுகாப்புக்கொடுத்து, அவளைத் தன்னுடைய அணுக்கச் சேடியாக்கிக்கொள்கிறார். திரௌபதி உருவாக்கும் ‘இந்திரப்பிரஸ்தம்’ நிச்சயமாகப் பெண்களின் நகரமாகத்தான் உருமாறப்போகிறது என்பதை எழுத்தாளர் இங்கேயே ‘சுஃப்ரை’யை முன்னிறுத்திக் காட்டிவிடுகிறார். இளைய யாதவர் உருவாக்கியுள்ள துவாரகை முழுக்க முழுக்கப் பெண்களின் நகரமாகவே இருக்கிறது. அங்குப் பெண்களுக்குக் கிடைக்கும் அதிஉரிமைகள் நம்மைத் திகைக்கச்செய்கின்றன.

இளைய யாதவரின் அகத்தையும் புறத்தையும் சுற்றிப் பெண்கள் இருப்பதுபோலவே துவாரகைக்குள்ளும் வெளியிலும் பெண்களே நிறைந்திருக்கிறார்கள். அவர்களுக்குக் கட்டற்ற சுதந்திரம் அளிக்கப்பட்டுள்ளது. அதனாலேயே இளைய யாதவரும் துவாரகையும் பெண்களின் கனவுகளில் நீங்கா இடம்பெற்றுவிடுகின்றனர். இனி உருவாகும் ‘இந்திரப்பிரஸ்தம்’ அகத்திலும் புறத்திலும் உறுதியாகத் துவாரகையைப் போலவேதான் இருக்கும் என்பதில் ஐயமில்லை. ‘துவாரகை’ ஓர் ஆணால் உருவாக்கப்பட்ட பெண்ணிய நகரம். ‘இந்திரப்பிரஸ்தம்’ ஒரு பெண்ணால் உருவாக்கப்படும் மற்றொரு பெண்ணிய நகரம்.

போரில் படுகாயமுற்று படுத்தபடுக்கையாக இருக்கும் திருஷ்டத்யுமன் தன்னுடைய உள்ளத்தளவிலும் உடலளவிலும் வலிமைகுன்றிவிடுகிறான். அதனாலேயே அவன் பிறரின் வலிமையைக் கண்டு சினக்கிறான். அவனின் விற்திறன் மழுங்கிவிடுகிறது. அதன் பின்விளைவாகவே அவன் சுஃப்ரையை வெறுக்கிறான்.

திருஷ்டத்யுமன் இளைய யாதவர் தனக்கு அளிக்கும் பெருவாய்ப்புகளின் வழியாகத் தான் இழந்த அக மற்றும் புற வலிமையை மெல்ல மெல்ல மீளப் பெறுகிறான். தனக்குக் கிடைக்கும் ஒவ்வொரு அதிதருணத்தையும் அவன் சிறந்த முறையில் தனதாக்கிக்கொள்கிறான். தன்னைத்தானே இணையற்ற வீரனாக மீட்டுக்கொள்ளவும் அதைப் புற உலகத்துக்கு நிறுவவும் அவனால் இயல்கிறது. ஆனால், அவன் மனம் சுஃப்ரையைவிட்டு ஒரு கணமும் விலகவில்லை. இறுதியில் அவன் அவளையே தன்னுடைய பட்டத்தரசியாக அமர்த்திக்கொள்ள வேண்டும் என்று உறுதிகொள்கிறான்.

இந்த நாவலின் தொடக்கம் முதல் இறுதிவரை திருஷ்டத்யுமனின் மனவோட்டம் முதன்மை இடம் பெறுகிறது. ஒருவகையில், ‘அவன் அடைய உள்ள ‘சியமந்தக மணி’ சுஃப்ரைதானோ?’ என்றும் எனக்கு எண்ணத்தோன்றுகிறது. அவன் அவளையே தன் மனத்துள் ஒரு சியமந்தக மணியாக அணிந்துகொண்டிருக்கிறான் போலும். அவள் அவனுள் இருந்து சியமந்தக மணியாகவே அவனை நோக்கிக்கொண்டிருக்கிறாளோ? ஒவ்வொருவரின் மனத்திலும் யாரோ ஒருவரின் வடிவில் ஒரு ‘சியமந்தக மணி’ இருக்கத்தான் செய்கிறது.

திருஷ்டத்யுமன் கலைப்பெண்ணான சுஃப்ரையிடம் கண்டது ஊழின் பெருமாயைக்கு அஞ்சி, அதற்கு அடிபணிந்துவிடாத பெருந்தவநிலையைத்தான். இத்தகைய பெருந்தவநிலையை உடையவர்தான் இளைய யாதவரின் எட்டு மனைவியர்களுள் ஒருவரான காளிந்தி. அவரே இளைய யாதவரின் மனத்துக்கு மிகவும் நெருக்கமானவர் என்பதை இளைய யாதவரின் திருவாயாலேயே அறியமுடிகிறது. ஊழின் மாயையை உணர்ந்து, அதைவிட்டு விலகி, அதை வெற்றி கொள்பவர்களுக்கே இறையருள் கிடைக்கிறது. இந்தப் பேருண்மையை நிறுவும் வகையில் இந்த நாவல் அமைந்துள்ளது. அதனாலேயே இந்த நாவலை முழுக்க முழுக்க ‘மெய்யியல் நாவல்’ என்றும் கூறலாம்.

சமண மதத்தைச் சார்ந்த பெருங்காப்பியங்களுள் ஒன்றான திருத்தக்கதேவர் இயற்றிய சீவக சிந்தாமணி என்ற காப்பியத்தில் சீவகன் என்ற காப்பிய நாயகன் எட்டுப் பெண்களை மணம்புரிவான். இறுதியில் சமண மதக் கருத்தினை ஏற்று, எல்லாவற்றையும் எல்லோரையும் துறந்து, தவவாழ்வை மேற்கொண்டு, பெருநிலையை அடைவான். திருத்தக்கதேவர் சீவகனை வீர, தீரம் உடைய, ஆய கலைகள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த, தன்னிகரற்ற தலைவனாகக் காட்டியிருப்பார்.

என் மனம் சீவகனோடு இளைய யாதவரை ஒப்பிட விழைகிறது. ‘இந்திர நீலம்’ நாவலில் இளைய யாதவர் பெருநிலையில் இருப்பவர்தான். ஆனாலும் அவர் எட்டு லக்ஷ்மியரை மணந்து பெருவாழ்வு வாழ்கிறார். காரணம், எட்டு லக்ஷ்மியரும் தனித்தனியாக இளைய யாதவரை வேண்டி, ஒருவகையில் தவவாழ்வில், யோகப்பெருநிலையில் இருந்தவர்களே! அவர்களுக்கு அருளும் வகையில்தான் இளைய யாதவர் தக்க தருணத்தில், அவர்களை அணுகி, அவர்களைத் திருமணம் செய்துகொள்கிறார். இளைய யாதவரும் சீவகனைப் போலவே வீர, தீரம் உடைய, ஆய கலைகள் அனைத்தையும் கற்றுத்தேர்ந்த, தனிப்பெருந்தலைவனே!. சீவகன் இறுதியில் ஆன்மிக வழியில் செல்கிறான். இளைய யாதவரோ எல்லோரையுமே ஆன்மிக வழியில் செலுத்துகிறார்.

‘வெண்முகில் நகரம்’ நாவல் முழுக்க பூரிசிரவஸ் அலைந்து திரிவதுபோலவே இந்த நாவலில் திருஷ்டத்யுமன் அலைந்து திரிகிறான். தூதனாக வந்து, சிறு போரில் பங்கேற்று, இளைய யாதவருக்கு அணுக்கராக மாறி, அந்த நிலையையே தொடர்ந்து தக்கவைத்துக்கொள்கிறான். தனக்கொரு தீராப் பகையையும் தேடிக்கொள்கிறான். பூரிசிரவஸின் மனமோ கடலின் விளிம்புபோல அலைபாய்ந்துகொண்டே இருக்கும். ஆனால், திருஷ்டத்யுமனின் மனம் நடுக்கடல் போன்றது. அலையற்ற பெருநிலை. அதனால்தான் அவனால் ‘சியமந்தக மணி’யிலிருந்து தன்னை முழுவதுமாக விலக்கிக்கொள்ள முடிகிறது அல்லது அதிலிருந்து தப்பித்துக்கொள்ள பிறரிடம் (சாத்யகி) அதைக் கையளிக்கவும் முடிகிறது.

‘சுபத்ரை’யின் ஆளுமை பற்றிய சித்தரிப்பு, ஒரு கோட்டோவியம் போலவே மெல்ல மெல்ல விரிந்து நம்மை மெய்மறக்கச்செய்கிறது. ‘கதாயுதத்தை ஏந்தும் பெண்’ என்ற படிமமே நம்மை மெய்ச்சிலிர்க்கச் செய்துவிடுகிறது. மொத்த நாவலில் இரண்டொரு அத்யாயங்களில் மட்டுமே இடம்பெறும் சுபத்ரையை நம் மனம், ‘பெண்ணாகி வந்த இளைய யாதவராகவே’ நினைவில் கொண்டுவிடுகிறது. சுபத்ரையின் நிமிர்வையும் துணிவையும் நுண்ணறிவையும் கண்டு, துரியோதனனே அவளை வாழ்த்துவதால், நம் மனத்தில் துரியோதனனும் ஒளிரத் தொடங்குகிறான்.

சாத்யகி, திருஷ்டத்யுமன் ஆகியோருக்கு இடையிலான ‘நட்பு’ என்பது, இளைய யாதவருக்கும் அர்சுணனுக்கும் இடையில் இருக்கும் நட்புக்குச் சமமானது. இளைய யாதவரும் அர்சுணனும் பெருந்தெய்வ நிலையில் இருக்கிறார்கள் என்று வைத்துக்கொண்டால், சாத்யகியும் திருஷ்டத்யுமனும் சிறுதெய்வ நிலையில் இருப்பதாகவே கொள்ளவேண்டும்! எப்போதும் எளிய மானுடருக்கு அணுக்கமானவை சிறுதெய்வங்களே!

இந்த நாவலில் ‘சியமந்தக மணி’ பெரியதொரு குறியீடாகவே எழுத்தாளரால் கையாளப்பட்டுள்ளது. ‘சியமந்தக மணி’ என்பது, மானுடர்களின் மனத்துள் நுழைந்து, அவர்களிடம் உளவியல் அடிப்படையில் உரையாடி ,அவர்களைத் தன் வசப்படுத்தும் நீல நிற ஒளிர்கல். உள்ளத்தில் பேருறுதியை அசைக்கவல்ல சிறுகல். மானுட மனங்களோடு உளவியல் அடிப்படையில் போர்த்தொடுக்கும் மாயக்கல்.

‘சியமந்தக மணியைப் பற்றிய நினைவு’ என்பதே இறைவன் மானுடர்களுக்கு வைக்கும் ஒரு தேர்வுதான். அந்தத் தேர்வினை இளைய யாதவர் தன்னுடைய மனைவியரான அஷ்டலக்ஷ்மியர் முதல் எளிய படைவீரன் வரை அனைவருக்குமே வைக்கிறார். அதில் தேர்ச்சி பெறுபவர்கள் இருவர்தான். அவர்கள் ஊழின் மாயைக்கு மயங்காதவர்கள். ஒருவர் காளிந்தி. மற்றவர் திருஷ்டத்யுமன். இவர்களோடு சுஃப்ரையையும் சேர்த்துக்கொள்ள வேண்டும். காளிந்தியும் சுஃப்ரையும் யோகப்பெருநிலையில் இருப்பவர்கள். பெண்கள் அனைவரும் காளிந்தியையும் ஆண்கள் அனைவரும் திருஷ்டத்யுமனையும் தங்களின் வாழ்வில் முன்மாதிரியாகக் கருதினால் இந்தப் பிறவிப்பெருங்கடலை எளிதில் கடந்து, கரையேறிவிடலாம்.

 

முனைவர் . சரவணன், மதுரை

– – –

முந்தைய கட்டுரைசில நேரங்களில்…
அடுத்த கட்டுரைமட்காக் குப்பை – கடிதங்கள்