மட்காக்குப்பை

அன்புள்ள ஜெ.

ஒரு சின்ன சந்தேகம். மதுரைப் பேரரசை உருவாக்கிய விஸ்வநாத நாயக்கர் கிருஷ்ண தேவராயரின் அடைப்பக்காரராக இருந்தவர் என்று நீங்கள் ஒரு கட்டுரையில் சொல்லியிருந்தீர்கள்.அதேபோல மலையாள மொழி பதினேழாம் நூற்றாண்டில் உருவானது என்று நீங்கள் சொல்லியிருந்தீர்கள். இதெல்லாம் பிழை என்று இணையத்தில் படித்தேன். நீங்கள் இப்பிழைகளைச் சொன்னது ஆச்சரியமளிக்கிறது

ஆர்.ராகவன்

அன்புள்ள ராகவன்,

இணையத்தின் பெரிய சிக்கலே இதுதான். எந்த முட்டாளும் தன்னம்பிக்கையுடன் எதையும் கக்கி வைக்கமுடியும். தனக்கு அந்த தளத்தில் ஏதாவது தெரியுமா என்றே யோசிக்க மாட்டார்கள். நாலைந்து முட்டாள்கள் அதை உடனே ஏற்றுக்கொள்ளவும் செய்வார்கள். எவரும் சரிபார்க்க மாட்டார்கள்.

நாம் ஆதாரபூரவமாக அதை மறுத்தால் மறுப்பு எங்கோ இருக்கும். இந்த முட்டாள்கள் இவர்கள் சொன்னவை அதிகார பூர்வமாக மறுக்கப்பட்டதை தங்கள் பதிவின் கூடவே இணைக்கவும் மாட்டார்கள். தங்கள் மடத்தனமான புரிதலை மாற்றிக்கொள்ளவும் மாட்டார்கள். இவர்கள் சொன்ன அபத்தம் அப்படியே இணையத்தில் மட்காமல் இருந்துகொண்டிருக்கும். அதை வாசித்து நம்மிடம் கேட்டுக்கொண்டும் இருப்பார்கள்.

விஸ்வநாத நாயக்கர் கிருஷ்ணதேவராயரின் அடைப்பக்காரராக இருந்தவர் என்பது பல வரலாற்று நூல்களில் உள்ளதுதான். ஆனால் அது ஒரு ஏவலர் பணி அல்ல. அரசருக்கு அருகிருக்கும் பணி. விரிவாக விளக்கியிருக்கிறேன். விஸ்வநாத நாயக்கர் அடைப்பக்காரரா?

மலையாளம் என நாம் இன்று அழைக்கும் மொழி பதினேழாம்நூற்றாண்டில்தான் இவ்வுரு கொண்டது. ஆகவேதான் பதின்றாம் நூற்றாண்டின் இறுதியில் வாழ்ந்த துச்சத்து எழுத்தச்சனை ‘பாஷா பிதா’ [மொழியின் தந்தை] என்கிறார்கள்.

அதற்கு முந்தைய மலையாளம் என்பது மலையாண்மை என்னும் ஒருவகை தமிழ். சம்ஸ்கிருதம் மேலோங்கிய இன்னொரு செவ்வியல் மொழி. பதினாறு பதினேழாம் நூற்றாண்டுகள் வரை இந்த இரண்டு மொழிநடைகளிலுமே நூல்கள் எழுதப்பட்டு கிடைக்கின்றன

மலையாண்மை இப்படி இருக்கும். நிரணம் கவிஞர்கள் எனப்படுபவர்களில் ஒருவரான மாதவப்பணிக்கர் எழுதியது

உரைசேர்ந்ந அமராவதி சமமாய் என்

உற்ற செல்வமெழும் மலயிக்கீழ்

திருமாதின் வல்லபன் அருளாலே

தெளிவோடு மாதவனகம் இடர் களைவான்

இது தொண்ணூறு சதவீதம் தமிழேதான். 13 ஆம் நூற்றாண்டு வரை கேரளம் சோழர் ஆட்சியில் இருந்தது. அதன்பின் உதிரி அரசர்களின் ஆட்சி. இக்காலத்தில்தான் மலையாண்மை மருவி மலையாளமாக ஆகியது.அன்று மலையாண்மை சோழர்கால வட்டெழுத்தில் எழுதப்பட்டது. கிரந்தலிபி உடன் கலந்து மலையாள மொழியின் எழுத்துரு உருவானது.

மலையாள மொழியின் தலைமை வரலாற்றாசிரியரான [பாஷா சரித்திர பிதா] ஏ.ஆர்.ராஜராஜ வர்மாவின் வரையறை பொதுவாக ஏற்கப்பட்டுவிட்ட ஒன்று. அவர் இன்றைய மலையாளத்தின் பரிணாமத்தை இப்படிச் சொல்கிறார்.கிபி 825 முதல் 1325 வரை ‘கருந்தமிழ் காலகட்டம்’ என்கிறார். 1325 முதல் 1625 வரை ‘மலையாண்மை காலகட்டம். 1625 முதல் ’மலையாளக் காலகட்டம்’.

*

எனக்கு அமையும் இச்சிக்கலை தமிழில் எவரேனும் இதற்கு முன் இப்படி எதிர்கொண்டிருக்கிறார்களா என்று தெரியவில்லை. மடையர்களுடன் விவாதிக்கும்படி தொடர்ந்து இழுக்கப்படுகிறேன். மடத்தனமோ மட்குவதுமில்லை. எழுந்து எழுந்து வந்துகொண்டே இருக்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைதிரை, கந்தர்வன் – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபனைமோகன்- காட்சன்