அந்த முகில் இந்த முகில் (குறுநாவல்) : கடிதங்கள் – 1

பேரன்பிற்கும் வணக்கத்திற்கும் உரிய ஜெயமோகன்,

நலமாக இருப்பீர்கள் என நம்புகிறேன்.

அந்த முகில் இந்த முகில் குறுநாவல் முடியும் வரை காத்திருந்து எழுத பொறுமை இல்லாமல் போய்விட்டதனால் இந்தக் கடிதம்.

ஜெயமோகன் அவர்கள் மனித உள்ளங்களை படம்பிடிக்கும் விதம் பெரிதும் ஆச்சரியத்தை அளிக்கிறது.

உணர்வெழுச்சி தருணங்களில் மனிதர்கள் ஏன் இவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்பது பல நேரங்களில் புரிபடுவதேயில்லை.

யாரை மிக அதிகமாக விரும்புகிறோமோ அவர்களையே மிக அதிகமாக துன்புறுத்துகிறோம். எதைச் சொன்னால் அவர்கள் புண்படுவார்களோ, மிக நன்றாக தெரிந்தும் அதையே சொல்கிறோம். அன்பை வெளிப்படுத்தும் செயல்களை எத்தனை தீவிரமாக செய்கிறோமோ அதே அளவு தீவிரத்தோடு அவர்களை வதைக்கும் செயல்களையும் செய்கிறோம். இந்த மனித மனம் போடும் நாடகங்களை என்னவென்று சொல்வது.

“எச்சில் என்கிறீர்கள்?” அவள் முகம் கடும் குரோதம் கொண்டதுபோல ஒரு கணம் தோன்றியது.

“ஆமாம்” என்றேன், வஞ்சத்துடன் தீர்மானத்துடன் என் குரல் ஒலித்தது.

ஆனால் அதைச் சொன்னதுமே என் உள்ளம் உருக ஆரம்பித்தது. அது நான் உத்தேசித்தது அல்ல. அது என்னுள் வேறெங்கோ இருந்து வந்தது. அதை நான் ஏதோ ஒரு ஆங்காரத்தால் வெளியே எடுத்தேன். வேண்டுமென்றே நான் அந்த அழகிய தருணத்தை அழித்துக்கொண்டேன். இனி மீளவே முடியாதபடி ஒன்றை உடைத்துவிட்டேன்.

காதல் என்று மட்டுமல்ல எல்லா விதமான உறவுகளையும் இதே போலத்தான் கையாள்கிறோம். வாழ்நாள் முழுக்கவும் திருத்திக் கொள்ளவே முடியாத நச்சு சொற்களை கொட்டிவிட்டு பின் சாகும் வரை நொந்து கொள்கிறோம்.

மனித மனத்தை அக்கு வேறு ஆணிவேராக பிய்த்து போடவும் மறு அடுக்கு செய்யவும் வல்லவனே ஒரு மிகச்சிறந்த இலக்கியப் படைப்பாளியாக முடியும். எதை வேண்டுமானாலும் எழுதிவிடலாம் ஆனால் மனித மன ஆழங்களை எழுதுவதுதான் இருப்பதிலேயே மிக மிகக் கடினமானது.

உங்கள் எழுத்துக்களை வாசிக்க வாய்ப்பளித்த இயற்கைக்கும், உன்னதமான படைப்புகளை உவந்து அள்ளி வழங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கும் மனமார்ந்த நன்றிகள்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

***

வணக்கத்திற்கும் பேரன்பிற்கும் உரிய ஜெயமோகன்,

இந்த முகில் அந்த முகில் சொல்லாமல் பல ஆழ்மன அடுக்குகளை கிளறிச் செல்கிறது…. தொட்டனைத் தூறும் மணற்கேணி என அத்தியாயங்கள் வளரவளர ஜெயமோகன் ஆழங்களை நோக்கி பாய்கிறார்….

எளியவர்கள், அடித்தளத்தில் உள்ளவர்கள், அழுத்தப்பட்டவர்கள், வாழ்வில் துயரத்தை தவிர வேறெதையும் அனுபவிக்காதவர்களுக்குத்தான் மிக நன்றாக தெரிந்திருக்கிறது சொல்லப் படாமலேயே பிறர் துன்பத்தை புரிந்துகொள்வதற்கு. அவர்கள் தான் கருணை மிகக் கொண்டு கேட்காமலேயே பிறர் உணர்வுகளை உணர்ந்து அந்த சூழ்நிலைக்கு என்ன செய்ய வேண்டுமோ அதை இயல்பாகச் செய்து விட்டுச் செல்கிறார்கள்.

ஸ்ரீ பாலா அவன் கேட்காமலேயே அதை அறிந்து இருக்கிறாள் அதனாலேயே கருணை மிகக் கொண்டு தன்னை தரிசனப் படுத்துகிறாள். என் இந்த நாற்பத்தொன்பது ஆண்டுகால வாழ்வில் அன்னை என ஆகாத ஒரு பெண்ணையும் நான் கண்டதில்லை. அந்த ஆதிபராசக்திக்கு தலை வணங்கி நிற்கிறேன் கண்ணீர் மல்க.

உயர்நிலையில் உள்ளவர்கள், அறிவில் மேம்பட்டவர்கள் என்று நினைத்துக் கொள்கின்ற நாம்தான் இறங்கி மன்னிப்பு கேட்காவிட்டாலும், தன்னுடைய தவறை தவறு என்று ஒத்துக் கொள்ளக் கூட மனமின்றி ஆணவத்தால் வீங்கிப் பெருத்து வெம்பி வாழ்கிறோம்.

நூறு நூறு முறை நாம் செய்த தவறுகளை நினைவில் ஒட்டி கற்பனையில் பாதிக்கப்பட்டவரிடம் பலமுறை பகற் கனவுகளில் மன்னிப்பு கேட்போம், நேரில் அன்பின் அவரை பார்த்தாலோ அத்தனை அகத் தெளிவையும் புரிதல்களையும் மறந்து மீண்டுமான சுய நியாயப்படுத்தல்களால் சுருங்கிக் கொள்வோம். ஒரு சிறு புன்னகையால் கடக்க வேண்டிய ஒன்றை நம் ஆணவத்தால் குதிறிப் போட்டு புண்ணாக்கி நெடுங்காலம் சுயவதைப்பட்டு தெரிந்தே வேதனையில் சுகிக்க நன்றாக கற்று வைத்திருக்கிறோம். ஆனால் வெட்கத்தைவிட்டு கடவுளிடம் தினம் தினம் அவர் நன்றாக இருக்க வேண்டுமென்று வேண்டிக் கொள்ளவும் செய்வோம். வேடிக்கை தான் மனித வாழ்க்கை.

வெகு நுட்பமாக புனைந்து செல்கிறீர்கள். ஒவ்வொரு அத்தியாயமும் அடுத்த அத்தியாயத்திற்கான ஆவலை மேலும் மேலும் தூண்டுகிறது.

நெஞ்சம் நிறை நன்றிகளுடன்

ஆனந்த் சுவாமி

முந்தைய கட்டுரைமதுரையில் தமிழ்ப்புத்தாண்டு
அடுத்த கட்டுரைசுந்தரன் காதை