சாவும் கருணையும்

நான் பொதுவாக எல்லாவற்றையும் கொஞ்சம் திட்டமிட்டுச் செய்வதுண்டு, கொஞ்சம்தான். ரொம்பவும் திட்டமிட்டால் செயற்கையாக, இயந்திரத்தனமாக போய்விடும் என்றும் பயம். தன்னிச்சையாக எண்ணங்களை ஓடவிட, நிகழ்வுகளையும் அவ்வாறே விடவேண்டியிருக்கிறது.

இந்த முறை பெரிய சிக்கல் ஒன்று, இன்று, ஏப்ரல் 11 அன்று இரண்டு நிகழ்ச்சிகளுக்கு ஒரேசமயம் நாள் குறித்து அளித்துவிட்டேன். காலையில் நியூசிலாந்து புத்தக மையத்தின் உரை. அதன்பின் Egalitarians வழங்கும் முதலாம் ஆண்டு டாக்டர் அம்பேத்கர் நினைவு சிறப்புரை. நல்லவேளையாக ஒரே நேரத்தில் வரவில்லை. எட்டு மணிமுதல் தொடர்ச்சியாக 12 மணிவரை.

சமாளிப்போம் என்று நினைத்துக் கொண்டிருந்தபோது அணுக்கமான உறவினர் ஒருவருக்கு சென்னையில் ஒரு விபத்து. தலையில் அடிபட்டு சென்னை ராஜீவ்காந்தி நரம்பியல் மையத்தில் சேர்க்கப்பட்டார். 2 ஆம் தேதி சென்னை சென்றேன். ஆஸ்பத்திரியிலும் அருகிலிருந்த விடுதியிலுமாக இரவும் பகலும் அலைச்சல். சென்னை நண்பர் சண்முகம் இல்லையேல் எதுவுமே செய்திருக்க முடியாது. என் மகன் அஜிதன் உடனிருந்தான். மூன்றுநாட்கள் ஆஸ்பத்திரிக்கு வெளியே இரவில் கொசுக்கடியில் காத்திருக்கவும் நேரிட்டது.

ஏப்ரல் 6 ஆம்தேதி நோயாளி சிகிழ்ச்சை பலனின்றி இறந்தார். ஏழாம் தேதி அவர் உடலை காரில் ஊருக்குக் கொண்டுசென்று சடங்குகள் முடித்துவிட்டு ஏப்ரல் 9 ஆம் தேதி கிளம்பி நாகர்கோயில் வந்தேன். உரைக்கான மனநிலைக்கு இனிமேல்தான் என்னை மாற்றிக்கொள்ள வேண்டும். ஆனால் அதிகச் சிரமம் இருக்காதென்று நினைக்கிறேன். எந்த உரைக்காகவும் புத்தம்புதியதாக ஏதும் செய்யவேண்டியதில்லை. ஏற்கனவே சிந்தனைசெய்தவற்றை ஓர் உரையாக ஒழுங்குபடுத்தவேண்டும், அவ்வளவுதான்.

ஒரு வாரம் தேர்தல்கள், கொந்தளிப்புகளில் இருந்து அப்பால் சாவு அன்றாடம் நிகழ்ந்துகொண்டிருக்கும் இடத்தில் இருந்தேன். தலையில் அடிபட்டவர்கள் மட்டும்தான் அங்கே வந்தனர். அவர்களில் ஓருசிலரே பிழைத்தனர். மூளைநரம்பியல் துறை என்பது மிகச்சமீபகாலமாக வலுவாகி வரும் ஒன்று. எம்.ஆர்.ஐ. ஸ்கேன் வந்தபின்னர்தான் உண்மையில் அதில் சில தெளிவான புரிதல்கள் உருவாயின. ஆயினும் இன்றும்கூட மூளையில் கைவைக்க மருத்துவர்கள் எளிதில் துணிவதில்லை.

ஆனால் மூளை அடிபடுவது மிகமிக அதிகரித்திருக்கிறது. அங்கிருக்கும்போது பார்த்த பெரும்பாலான விபத்துக்கள் இருசக்கர வாகனங்களில் நிகழ்ந்தவை. பல விபத்துக்களில் பின்னால் இருந்த பெண்கள் அடிபட்டு உயிர்விட்டார்கள். அவர்கள் பக்கவாட்டில் அமர்ந்திருப்பதனால் கால்களை ஊன்றிக்கொள்ள முடிவதில்லை. அவர்கள் ஹெல்மெட் போடும் வழக்கமும் இல்லை. சென்னையில்தான் ஒருவேளை உலகிலேயே அதிகமான இருசக்கர வண்டிகள் இருக்குமென நினைக்கிறேன்.

அங்கே நின்றிருந்தபோது கோழிமுட்டை போன்ற இந்த மண்டையை வைத்துக்கொண்டா இந்த ஆட்டம் ஆடுகிறார்கள் என்ற திகைப்பு ஏற்பட்டது. இத்தனை நொய்மையான ஓர் உறுப்பு மனிதனின் உயிர், உள்ளம் அனைத்துக்குமே பொறுப்பு என்பதில் இயற்கையின் மாபெரும் பொறுப்பற்றத் தன்மை ஒன்று இருக்கிறது. வெளியே ஹெல்மெட் போடாமல் இருசக்கர வாகனங்களில் வண்டிகளின் நடுவே வளைந்து நெளிந்து விரைபவர்கள் திகைப்படையச் செய்கிறார்கள்.

எத்தனை துயரம். மார்ச்சுவரியின் முன் கதறி அழும் எத்தனை அன்னையர். ஆனால் நான் இங்கே நாய்களை கவனித்தேன். பெரும்பாலானவற்றுக்கு உணவுப்பஞ்சம் இல்லை. ஆஸ்பத்திரி உணவை பாதிப்பேர் உண்ணாமல் வீசிவிடுகிறார்கள். ஒரு தாய் நான்கு குட்டிகளுடன் துள்ளி அலைந்தது. நான்குமே கும்பளங்காய் உருளைபோல பளபளப்பாக இருந்தன. நாய்களில் இதேபோல நான்கு குட்டிகளும் பிழைப்பது அரிதினும் அரிது.

அவை மனிதர்களை கண்டு பழகியவை. மனிதர்களின் துயரத்தை அவை அடையாளம் கண்டுகொள்கின்றன. அழுபவர்களுக்கு அருகே எப்போதும் நாய் சென்று அமர்ந்துகொள்கிறது. முகர்ந்தும் நக்கியும் ஆறுதல் சொல்கிறது. அவர்களை விட்டு நீங்குவதே இல்லை. அவர்கள் பலர் கண்ணீருடன் நாய்களை வருடிக்கொண்டிருக்கிறார்கள். சிலர் அணைத்துக்கொள்கிறார்கள். அவை தெருநாய்கள் என்பதே அப்போது அவர்களுக்குத் தெரிவதில்லை.

இத்தனைக்கும் அடியில் இப்படி ஒரு கருணையை நமக்கு விட்டுவைத்திருக்கிறது இங்கெலாம் உள்ள ஒன்று.

முந்தைய கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-11
அடுத்த கட்டுரைரமேஷ் பிரேதன் உடல்நிலை