தன்மீட்சி வாசிப்பனுபவங்களில் தேர்வான நண்பர்கள்…

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

தன்மீட்சி புத்தகம் சமகாலத்தில் உருவாக்குகிற நேர்மறை அதிர்வுகளை எங்களை வந்தடையும்ஒவ்வொரு குரலிலிருந்தும், கடிதத்திலிருந்தும் நாங்கள் நேரிடையாக உணர்ந்துவருகிறோம். ஒன்றடுத்து ஒன்றென எங்காவதோர் மூலையில் தன்மீட்சி உரையாடல்கள் ஒருசில உதிரி மனங்களால் நிகழ்த்தப்படுவதையும் அறிகிறோம். ஆகவே, அத்தகைய வாசிப்பு மனிதர்களை தன்னறம் கண்டடைந்ததை பொதுவெளியில் அறிவிக்கும்பொருட்டு, அவர்களுக்கான கெளரவிப்பு ஒன்றையும் நிகழ்த்திடத் திட்டமிட்டோம். உங்கள் இருப்பில், உங்கள் கைகளால் அந்த கெளரவிப்பு அவர்களுக்கு கிட்டவேண்டும் என்றும் நாங்கள் விரும்பினோம்.

அதற்கான சரியான தருணமாக  ஏப்ரல் 14, மதுரை காந்தி அருங்காட்சியகத்தில் நீங்கள் வந்து கலந்துகொள்ளும் ‘கல்லெழும் விதை’ நிகழ்வு இயல்பாக அமைந்துவிட்டது. முகநூலிலும், உங்கள் இணையத்திலும் வெளியிட்டிருந்த ‘தன்மீட்சி வாசிப்பனுபவங்களை கெளரவித்தல்’ பதிவுக்குப் பிறகு நிறைய வாசக அனுபவ மற்றும் விமர்சனக் கடிதங்கள் எங்களை வந்தடைந்தன. அதிலிருந்து, பின்வரும் தோழமைகளின் வாசிப்பனுபவக் கட்டுரைகளைத் தேர்ந்தெடுத்துள்ளோம்.

ரா.பாலசுந்தர், உஷாதீபன், விக்னேஷ் ஹரிஹரன், ப. அரவிந்தன், முனைவர். தயாநிதி – ஓமன், சி.பரமகுரு- காரைக்கால், முத்தரசு, இருவாட்சி, பா. மோகனகிருஷ்ணன், தீபா, பெருட்செவியின் இலக்கிய ஒலிதம், சக்திவேல், பிரசன்னகிருஷ்ணன், முரளிதரன் வைத்திலிங்கம், இரம்யா, கோவர்த்தனன், கிருஷ்ணன் சுப்ரமணியன், மோகன் தனிஷ்க், செந்தில் ஜெகந்நாதன் ஆகியோர்.

இவர்கள் ஒவ்வொருவரின் தன்மீட்சி அனுபவமும் ஏதோவொருவகையில் தீராத தவிப்புணர்வையும், அதை வென்றுகடப்பதற்கான நேர்மறைப்பாதையை கொண்டிருப்பதையும், அகசோர்வுள்ள இன்னொரு மனிதருக்கு தாம்பெற்ற அதே நம்பிக்கையை தருவதாகவும் இருப்பதை தீர்க்கமாக அறியமுடிகிறது. இன்னும் தன்மீட்சியின் சாட்சிச்சொற்கள் இழையறுபடாமல் நீள்கிறது. ‘வாளைப் பிடிப்பதுபோல செயலைப் பற்றுக’ என்கிற நித்ய சைதன்ய யதியின் வார்த்தைகள் தாங்கியிருக்கும் சத்தியத்தை மேற்கண்டவர்களின் ஒவ்வொரு கடிதமும் சுமந்திருந்தன.

வாழ்வின் எல்லாகட்டத்திலும் நாங்கள் பற்றிக்கொள்ளும் மீட்புச்சொற்களை ஒவ்வொரு படைப்பின் உள்ளான்மாவிலும் வைத்திருக்கும் உங்கள் நல்லிருப்புக்கு எங்களின் நெஞ்சன்பின் நன்றிகளும் இறைவேண்டலும்!

இப்படிக்கு,

தன்னறம் நூல்வெளி

குக்கூ காட்டுப்பள்ளி

முந்தைய கட்டுரைவைஷ்ணவ ஜனதோ
அடுத்த கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-11