குமரித்துறைவி [குறுநாவல்] – 5

[ 16 ]

சேவகன் என்னை எழுப்பியபோது நான் எங்கிருக்கிறேன் என்பதையே உணரமுடியவில்லை. “யார்? என்ன?” என்றேன். என் அருகே ஒரு எண்ணைவிளக்குச் சுடர் தயங்கி ஆடியது. என் நிழல் எனக்குப்பின்னால் எழுந்து ஓலைச்சுவரில் வளைந்து நின்றது.

அவன் இரண்டுமுறை சொன்னபின்னர்தான் நான் இருப்பது ஆரல்வாய்மொழியில் மலையடிவாரத்துச் சிறுகொட்டகை ஒன்றில் என்று தெரிந்தது. எழுந்து அமர்ந்தேன். படுத்திருந்த கயிற்றுக்கட்டிலின் வரித்தடம் என் உடலெங்கும் இருந்தது.

“திவான் வந்திருக்கார். உங்களுக்காக காத்திருக்கார்” என்று அவன் சொன்னான்.

“திவானா, இங்கேயா?” என்று நான் எழுந்து நின்று முகத்தை துடைத்தேன். முகம் கழுவ நீர் கொண்டுவரும்படி ஆணையிட்டேன். ஏனத்தில் கொண்டுவரப்பட்ட நீரில் முகம் கழுவி தலைப்பாகையை எடுத்து அணிந்துகொண்டு மேலாடையை அள்ளிப்போட்டபடி வெளியே சென்றேன்.

இலவமரத்தடியில் திவான் நின்றிருந்தார். சற்று அப்பால் மரத்தில் ஒரு சட்டிவிளக்கு புன்னைக்காயெண்ணை மணத்துடன் எரிந்தது. காற்றுக்கு எதிர்ப்பாக சட்டிவிளக்கின் பாளை திருப்பி வைக்கப்பட்டிருந்தமையால் அதன் நிழல் ஒருபக்கத்தை முழுக்க இருட்டாக்கியிருந்தது. அங்கே தழல்வடிவாக ஒரு தெய்வம் தோன்றி நின்றிருப்பதாக எண்ணிக்கொண்டேன்.

நான் அருகே சென்று வணங்குவதற்குள் திவான் “மகாராஜா எங்கே?” என்றார்.

“தோவாளை அரண்மனையில்…” என்றேன், குழப்பமாக. அவர் கேட்பதென்ன என்று எனக்கு புரியவில்லை.

“அவரு தோவாளைக்குப் போகவே இல்லை. இங்கே நமஸ்காரங்கள் முடியறதுக்கே மூணாம்சாமம் முடிஞ்சிட்டுது…” என்றார் திவான். “அதெல்லாம் முடிஞ்சு நான் பாத்தா மகாராஜா இல்லை. எங்க போனார்னு யாருக்கும் தெரியல்லை. இதை நாலுபேர் கிட்டே கேக்க முடியுமா? என்ன ஆச்சோ ஏது ஆச்சோன்னு எனக்கு பதைக்குது. நீரு  இங்க வந்து படுத்துக்கிடக்கிறீர்”

“அதுவரைக்கும் இருந்தாரா?” என்று நான் வேண்டுமென்றே நிதானமாகக் கேட்டேன். என் நிதானம்தான் என்னை இங்கே காக்கும். நான் கொஞ்சம் பதறினால் திவான் என்மேல் ஏறி தாண்டவம் ஆடிவிடுவார். சிறிய மனிதர்களுக்கு இக்கட்டுகளில் அதிலிருந்து எப்படியாவது தப்பிவிடவேண்டும் என்று மட்டுமே தோன்றும். அதற்கு அவர்களுக்குத் தேவை பழிசுமத்த ஒருவர். அவர் அதற்காகவே என்னை தேடிவந்திருந்தார்.

“ஆமா, கடைசி ஆளும் வந்து அம்மைக்கு திரைபோடுற வரை இருந்தார். அப்டியே தோவாளை வரை போனாலும் உடனே காலம்பற அம்மையெறக்கத்துக்கு வந்தாகணும். அதனாலே ஆரல்வாய்மொழி கோட்டை எஜமானன் மாளிகையிலேயே தங்க ஏற்பாடு செய்திருக்காங்க…”

“யாரு ஏற்பாடு செய்தது?”

திவான் குன்றி, உடனே அதை சமன்செய்து, “அங்கே ராயசம்தான் ஏற்பாடு செஞ்சது. நான் மதுரை தளவாய் கூடவே போனேன். அங்கே அவங்களுக்கு வேண்டியதை நானே செஞ்சுகுடுக்க வேண்டியிருந்தது. நாளைப்பின்னை ஒரு பேச்சு வந்தா நல்லா இருக்காது. மதுரை சாம்ராஜ்யம் நம்ம எஜமானன் ஆக்குமே”

“எஜமானன் மாளிகையிலே இப்ப மகாராஜா இல்லை, இல்லியா?”

“இல்லை, அவர் அங்க போய் ஒருவாய் பாலன்னம் சாப்பிட்டிருக்கார். குமட்டுது போதும்னு சொல்லியிருக்கார். படுக்கிறீங்களான்னு படுக்கை ஒருக்கியிருக்காங்க. படுத்தவர் உடனே எந்திரிச்சிட்டார். நாண் இழுத்து அம்பு தொடுத்துவைச்ச வில்லு மாதிரி இருக்குடே மனசுன்னு சொல்லியிருக்காரு. வெளியே திண்ணையிலே வந்து உக்காந்திட்டிருந்தாராம். அதை பாத்திருக்காங்க… பிறகு அவரை பார்க்கமுடியல்லை.  எங்க போனாருன்னு ஆருக்கும் தெரியல்லை.”

“அதெப்படி ஆருக்கும் தெரியாம?” என்றபோதும் என் அகம் முழுக்க விழித்துக் கொள்ளவில்லை. நான் அவரை அப்போதும் மணப்பந்தலில் வைத்தே எண்ணிக்கொண்டிருந்தேன்.

“அப்டித்தான்… இப்ப மகாராஜாவை காணல்லை… நான் தேடாத இடமில்லை.”

“அவருடைய அணுக்கன் யாரு? அவன் என்ன சொல்றான்?” என்றபோது நான் சட்டென்று முழுமையாக விழிப்புகொண்டேன். “அங்கே உள்ள கொட்டாரம்  சம்பிரதி யாரு?”

“சம்பிரதி முண்டத்தூர் செல்லப்பன் பிள்ளை அவன்கிட்டே மகாரஜா வெளியே போறதாச் சொன்னாராம். ராயசம் கிருஷ்ணப்பையரும் கூடப்போயிருக்கார்.”

நான் நிம்மதி அடைந்து “அப்படின்னா சரி…” என்றேன். “சொல்லிட்டுப் போனார்னா கிட்டக்கே எங்கியாம் இருப்பார். பார்ப்போம்.”

திவான் மெய்யாகவே பதறி பலவகையான ஐயங்களை உருவாக்கி விட்டுவிட்டார். மகாராஜாவுக்கு ஏதாவது ஆகியிருக்குமோ என்று நான் பயந்துவிட்டேன். எட்டுவீட்டுப் பிள்ளைமாரின் முழுப்பட்டாளமும் வந்து சூழ்ந்திருக்கும் இடம்.  மகாராஜாவுக்கு ஏதாவது ஆனால் ஒரு நாழிகைக்குள் விழாவுக்கு முன்நின்று வாளேந்த இன்னொரு மகாராஜா வேண்டும். வேணாட்டு மகாராஜாக்கள் மீதான கொலைத்தாக்குதல்கள் பெரும்பாலும் இத்தகைய அனுஷ்டானங்களின்போதுதான் நடக்கும்.

“மகாராஜாவை இப்ப எப்டி கண்டுபிடிக்கிறது?” என்றார் திவான். அவர் நிம்மதி அடைந்துவிட்டது தெரிந்தது

“அதை நான் பாத்துக்கிடுறேன். நீங்க போய் வேலைகளை பாருங்க” என்றேன்

“இன்னைக்கு தேவி மதுரைப் புறப்பாடு.” என்றார் திவான். அவருடைய வழக்கமான குரல் மீண்டுவந்துவிட்டது. “ஏற்பாடுகள் எல்லாம் நடந்திட்டிருக்கு. தளவாய் வெங்கப்பா எங்கிட்டே நேரிலே எல்லாத்தையும் விசாரிச்சார். அவருக்கு சில மனக்குறைகள் இருக்கு. அதெல்லாம் எங்கிட்டே சொன்னார். அப்பாலே நான் அதைச் சொல்றேன். ஏன்னா இப்ப நாம மகாராஜாவை தேடிப்புடிக்கணும்.”

“காலையிலேதானே அம்மையெழுந்தருளல்? அதுக்குள்ளே பாத்திடலாம். நான் பாத்துக்கிடுறேன்.”

“அங்கே வெங்கப்பா ஆயிரம் கேள்வியா கேக்காரு. என்னாலே பதில் சொல்ல முடியல்லை. எல்லாத்தையும் நான் ஒருத்தனே பாத்துக்கிடுறதானா கொஞ்சம் கஷ்டமாக்கும்.”

திவானின் குரலில் வந்த மாறுதல் எனக்கு எரிச்சலூட்டியது. ஆனாலும் அதை வென்று இறுக்கமான தணிந்தகுரலில் “சரி, நான் பாத்துக்கிடுறேன்” என்றேன்.

அவர் திரும்பும்போது “சசிவோத்தமருக்கு ஒண்ணு சொல்லணும். மகாராஜாவை நான் கண்டுபிடிச்சுகிடுதேன். அதை அங்க இங்க சொல்லி பரப்பவேண்டாம். உங்க வேலை எதுவோ அதைச் செய்யுங்க.” என்றேன்.

அவர் தலையசைத்தார். அதன்பின்னர்தான் அவருக்கு சீற்றம் வந்தது.“நான் இங்க திவானாக்கும். எங்கிட்டே எண்ணிப்பேசணும்?”

”வேணுமானா தலையை எண்ணியும் பேசுற குடும்பம் எனக்கது. கேட்டுப்பாருங்க.” என்று அவர் கண்களை கூர்ந்து நோக்கிக்கொண்டு சொன்னேன்.

அவர் நடுங்கிவிட்டார். முகம் வலிப்பு போல இழுபட்டது. உதடுகள் கோணலாயின.

“மதுரைக்காரங்ககிட்டே நீங்க பேசிய ஒவ்வொரு வாக்கும் சிந்தாம சிதறாம எங்கிட்டே வந்திரும். என் காதில்லாத இடம் இங்கே இல்லை” என்றேன். மேலும் தணிந்த குரலில் “பிரம்மஹத்தியை நான் பயப்படமாட்டேன். எங்கிட்டே சொன்னதைச் செய்ற பாண்டிப் பிராமணனுங்க பலபேருண்டு…”

அவர் நடுங்கிக்கொண்டே நின்றார். அறியாமல் கைகள் நெஞ்சில் கூப்பிக்கொண்டன. வாய் கீழ்நோக்கி இழுபட்டு அதிர்ந்தது.

“இது மங்கலநாள்… மங்கலமாத்தான் முடியும். புரியுதா?”

“புரியுது” என்றபோது அழுவதுபோல இருந்தார்.

“போங்க” என்றேன்.

அவர் நடக்கும்போது கால்கள் தள்ளாடி, எதிலோ தடுக்கி விழப்போகிறவர் போலிருந்தார். கொஞ்சம் தள்ளி அவருடைய அணுக்கன் சம்பிரதி ஹொன்னப்பையன் நின்றிருந்தான். அவன் திகைப்புடன் அவர் அருகே வந்தான்.

நான் இருட்டை பார்த்தபடி ஒருகணம் நின்றேன். இவர் சொல்வதில் ஒரு பங்கு உண்மை, மெய்யாகவே மகாராஜா எங்கோ மறைந்திருக்கிறார். அவரை கண்டுபிடிக்கவேண்டும். இதற்குள் இவருடைய வாயிலிருந்து செய்தி பரவியிருக்கும். அது மக்கள் செவிகளை அடைவதற்குள் அவரை கண்டுபிடித்தாகவேண்டும்.

நான் அங்கே மலைப்பாறை விளிம்பில் நின்றபடி கீழே பார்த்தேன். கண்ணுக்கெட்டிய தொலைவு வரை அரளி பூத்த புதர் போல சிவந்த ஒளிகள் நிறைந்த கரிய வெளி. கோட்டையின் மேல் வரிசையாக பந்தங்கள் ஏற்றப்பட்டிருந்தமையால் அந்த ஒளி மட்டும் வரிசையாக தெரிந்தது. வெளிச்சங்கள் நிரைகொண்டு நகரும் பாதைகளையும் காணமுடிந்தது. மற்றபடி அள்ளி வீசப்பட்டதுபோன்ற ஆயிரக்கணக்கான சுடர்கள்.

என் உடலெங்கும் ஏதோ எரிச்சல் பரவியிருந்தது. திவானிடம் அப்படிப் பேசியதனால் வந்த எரிச்சலா? அல்லது அந்த எரிச்சலால்தான் அப்படிப் பேசினேனா?

மகாராஜா எங்கிருக்கிறார் என்று கண்டுபிடிக்கவேண்டும். சம்பிரதி செல்லப்பன் பிள்ளையிடம் சொல்லிவிட்டு, ராயசம் கிருஷ்ணப்பையருடன் சென்றிருக்கிறார் என்றால் அருகில்தான் எங்கோ இருக்கிறார். அவரை கண்டுபிடிப்பது அல்ல, அவர் எந்த உளநிலையில் இருக்கிறார் என்பதுதான் சிக்கல்.

நான் கீழிறங்கி ஒரு குதிரையை வாங்கிக்கொண்டு புதர்காடுகளின் நடுவே சென்ற ஒற்றையடிப்பாதை வழியாக ஆரல்வாய்மொழி கோட்டை முகப்பில் இருந்த கோட்டை எஜமானனின் மாளிகை நோக்கிச் சென்றேன்.

கோட்டைமேல் பந்தங்கள் வரிசையாக, வானில் தீக்கோடு போல அசைந்துகொண்டிருந்தன. மக்களின் முழக்கம் எழுந்து கோட்டையில் முட்டி அலையலையாக எழுந்துகொண்டிருந்தது. எங்கும் மக்கள். படுத்துக்கிடப்பவர்கள், அமர்ந்து பேசிக்கொண்டிருப்பவர்கள், அங்குமிங்கும் சிறு கூட்டங்களாக சேர்ந்துவிட்டவர்கள்.

மாளிகை முகப்பிலேயே கோட்டை எஜமானன் நின்றிருந்தார். என்னைக் கண்டதும் கவலையுடன் ஓடிவந்தார். “மகாராஜாவ காணல்லேன்னு சொல்றாங்க… நான் இங்கே இல்லை, கோட்டைக்காவலுக்காக மேகோட்டைக்கு போனேன்… இப்பதான் வந்தேன்.”

“பயம் வேண்டாம். நான் கண்டுபிடிச்சுடறேன்” என்றேன். “முதல்ல எனக்கு மகாராஜா பள்ளிகொண்ட அறையை காட்டுங்க.”

“பள்ளிகொண்டது இங்கேதான்” என்று எஜமானர் அவரே என்னை அழைத்துச் சென்றார்.

ஓலைவேய்ந்த தாழ்வான கூரைகொண்ட அறை. ஆனால் அகலமானது. பெரிய கட்டில். அறைமூலையில் கொசுவுக்காக குந்திரிக்கம் புகைந்துகொண்டிருந்தது. மேலே பனையோலை தூக்குவிசிறி காட்டிலிருந்து வந்த காற்றில் ஆடியது. வெளியே இருந்து அதை இழுப்பவன் கைகூப்பியபடி நின்றிருந்தான்.

“நீ என்னடா பாத்தே?” என்றேன்

“நான் தூக்குவிசிறி கயித்தை இளுத்திட்டிருந்தேன்… தம்புரான் போனதே எனக்கு தெரியாது உடையதே” என்று அவன் அழுகைக்குரலில் சொன்னான். கரிய முகத்தில் அச்சம் நிறைந்த கண்கள். அவனுக்கு மெய்யாகவே ஏதும் தெரிந்திருக்காது.

நான் கண்ணைமூடி அங்கே நின்றேன். அங்கே ஒரு வெறுமையை என்னால் உணரமுடிந்தது. மிகப்பெரிய ஒன்றை எடுத்துவிட்டபின் எஞ்சுவதுபோன்ற ஒன்று. வெறும் அறை. வெள்ளைச்சுண்ணம் பூசப்பட்ட சுவர்கள். இரும்புக் கம்பியிட்ட சாளரங்கள்.

சட்டென்று திரும்பி “இங்கே பக்கத்திலே கோயில் ஏதாவது இருக்கா?” என்றேன்.

“கோயில்னா பலது இருக்கு…”

“கொஞ்சம் உக்ரமான கோயில். துடியான கோயில். சுடலையோ இசக்கியோ இருக்கிற கோயில்?”

“இருக்கு, ஆனா இங்க எல்லாம் பாத்தாச்சு.”

“கொஞ்சம் தள்ளி? கொஞ்சம் பயங்கரமான கோயில்னா?”

“பக்கத்திலே பெருமாள்புரம் உச்சினி மாகாளி அம்மன் கோயில் இருக்கு… கொஞ்சம் போகணும்.”

“நான் அங்கே போய் பாக்கிறேன்… நான் மட்டும் போறேன்”

“மகாராஜா அங்க எப்டி போனார்?”

“அவருக்குமேலே வந்து கூடின மூதேவியை விட்டு தப்பி ஓடியிருக்கார்” என்றேன்.

எஜமானன் என்னை திகைப்புடன் பார்க்க நான் “என் மேலேயும் அதுதான் வந்து கூடுது… ஓடிப்போயி தீயிலே குதிச்சு குளிச்சு சுத்தமாகணும்னு எனக்கும் வெறி வருது” என்றேன்

எஜமானன் மேலும் திகைப்புடன் பார்த்தார். வாய் திறந்திருந்தது. நான் அவரை தவிர்த்துவிட்டு வெளியே சென்று குதிரைமேல் ஏறிக்கொண்டேன்.

“என்னை ஒருத்தன் குதிரையிலே வழிகாட்டி கூட்டிட்டுப் போகணும்” என்றேன்.

“டேய், பூதத்தான். கூட்டீட்டுப் போடா” என்றார் எஜமானன்.

பூதத்தான் என்ற வீரன் குதிரையில் விரைய நான் பின்னால் சென்றேன். ஊரெங்கும் நிறைந்திருந்த மக்கள் நடுவே குதிரைகள் ஊடுருவியும் பிளந்தும் முட்டிமோதியும் சென்றன. மகாராஜா குதிரையில்தான் சென்றிருக்கவேண்டும்.

ஊரிலிருக்கும் அத்தனை வீடுகளும் திறந்திருந்தன. எல்லா வீடுகளிலும் விளக்குகள் எரிய மக்கள் நடமாடுவதன் நிழல்கள் ஆடின. எல்லா வீடுகளும் பேசிக்கொண்டிருந்தன. பினபக்க தொழுவங்களில் மின்னும் கண்களுடன் மாடுகள். முற்றங்களில் சுருண்டு கிடந்த நாய்கள் குரைப்பதை கைவிட்டுவிட்டிருந்தன.

பெருமாள்புரம் உச்சிமாகாளி அம்மனின் கோயிலில் அப்போது வெளியே தீபம் ஏதும் இருக்கவில்லை. மூங்கில்கள் நாட்டி வேலியிடப்பட்ட ஓலைக்கூரை வேய்ந்த சிறிய கோயில். கோயிலைச் சுற்றி கிளைதழைந்த கள்ளிப்பாலைகளும், கொத்து இலைகளுடன் காட்டிலஞ்சிகளும் காடு போலச் செறிந்திருந்தன. அப்பகுதியிலும் மக்கள் நடமாட்டம் இல்லை. உச்சிமாகாளி அம்மனை மக்களுக்கு அத்தனை பயமிருக்கிறது.

இலஞ்சி மரத்தடியில் இரண்டு குதிரைகளைக் கண்டுவிட்டேன். பூதத்தானை அங்கே நிற்கச் சொல்லிவிட்டு என் குதிரையையும் அவனிடம் ஒப்படைத்துவிட்டு நடந்து அருகே சென்றேன்.

என் காலடியை கேட்டதும் இலஞ்சி மரத்தின் வேர்களின்கீழே ஒண்டிக்கொண்டு அமர்ந்திருந்த கிருஷ்ணப்பையர் எழுந்து “ஆரு? ஆருன்னு கேக்கேன்ல? நான் பிராமணனாக்கும்” என்றார்.

“சுவாமி, இது நாந்தான்…”

“சர்வாதிக்காரரா? அம்மாடி, தப்பிச்சேன். இன்னைக்கு இந்த பேய்க்கோயிலிலே இருந்து உயிரோடே திரும்பிப் போவேன்னு நினைக்கல்லை.”

“மகாராஜா எங்கே?”

“அங்கே உள்ளே அம்மன் சன்னிதியிலே இருக்கார்” என்றார். கிருஷ்ணப்பையர் “என்னைய இங்கே நிக்கச்சொல்லிட்டு உள்ளே போனார்.”

“சரி” என்று நான் உள்ளே சென்றேன்.

“நான் உள்ள வரல்லே. நான் நிஷ்டையுள்ள பிராமணன் இல்லே. அம்மன் கோவிச்சுகிட்டா புள்ளைகுட்டிகளுக்கு தீம்பு..”

“வேண்டாம்” என்றேன்.

கவிழ்க்கப்பட்ட நார்ப்பெட்டி போன்ற கூரைகொண்ட, மண்சுவர்களால் ஆன கோயில். அதன் சாணிமெழுகப்பட்ட ஒட்டுத்திண்ணையில் மகாராஜா அமர்ந்திருந்தார். அவர் கைமுட்டுகளை தொடைமேல் ஊன்றி தலையை கையில் ஏந்தி குனிந்து அமர்ந்திருப்பது தெரிந்தது. தலையில் தலைப்பாகை இல்லை. முடி சரிந்து விழுந்து முகத்தை மூடியிருந்தது.

அவருக்குப் பின்னால் மூங்கில் அழியிட்ட கருவறைக்குள் உச்சினி மாகாளியின் சுடுமண்ணாலான ஆளுயரச் சிலை. எட்டு கைகளிலும் ஆயுதங்கள், கபால மாலை, திறந்த வாயிலிருந்து தொங்கிய நீண்ட நாக்கு, வெறித்து உருண்ட துறுகண்கள். அவள் முன்னால் கல்லகலில் ஒரு விளக்குச் சொட்டு செவ்வொளி கசிய அசைவில்லாமல் நின்றது.

நான் அருகணைந்ததை மகாராஜா அறியவில்லை. நான் வணங்கி மெல்ல குரல்தீட்டும் ஓசையை எழுப்பினேன்.

“ம்ம்?” என அவர் விழித்தார் “யாரு சர்வாதிக்காரரா? என்ன?”

“அடியேன், ஊரெல்லாம் தேடினோம்.”

மகாராஜா ஒன்றும் சொல்லவில்லை.

“அடியேன், இங்க இப்டி இருக்கிறது சரியில்லை. இது ஆளில்லா இடம்…”

”தேவி இருக்கா.”

”அடியேன், அவ எங்கும் இருப்பா.”

“என்னாலே அங்கே இருக்க முடியல்லை. பயம், சூன்யபோதம்… ஒண்ணுமே பண்ண முடியல்லை. அப்டியே செத்திடுவேன் போல இருந்தது… அப்ப முன்னாடி இங்க வந்த ஞாபகம் வந்தது. கிளம்பிட்டேன். இங்க வந்ததும் பயம் போச்சு. சூன்யபோதம், அது இருக்கு. அது சீக்கிரத்திலே போகாது.”

நான் அவர் பேசுவதற்காக காத்திருந்தேன்.

“என்னதுன்னே தெரியல்லை மார்த்தாண்டா. எல்லாம் முடிஞ்சாச்சுன்னு தோணிட்டுது. உண்மையிலே எப்டி நான் வாளை எடுத்து என் சங்கை அறுத்துக்கிடாம இருந்தேன்னே தெரியல்லை. என் கையிலே சக்தி இல்லை. உடம்பே நடுங்கிட்டிருந்தது. அதனாலே மட்டும்தான் நான் இதோ இருந்திட்டிருக்கேன்…” அவர் கையை விரித்தார். “எல்லாம் போச்சு. எல்லாம் போச்சு. இனி எனக்கு ஒண்ணுமே இல்லை. இங்க எனக்கு ஒண்ணுமே இல்லை. நான் ஜீவிச்சிருக்கிறதுக்கு காரணம்னு ஒண்ணுமே இல்லை.”

நான் “அடியேன், இப்ப இங்க இருக்கிறது சரியில்லை. இங்க இருக்கிறது தெரிஞ்சா கூட்டம் கூடிரும். அரண்மனைக்கு போவோம். அங்க கொஞ்சம் ஏதாவது சாப்பிடுங்க. கொஞ்சம் படுத்திருங்க”.

“இல்லை, எனக்கு அங்க பயமா இருக்கு. அங்க இருக்கிற மூதேவியை என்னாலே தாள முடியல்லை.”

“அடியேன், அப்ப வேற எங்கயாவது போவோம்.”

“வேண்டாம். நான் இங்க இருக்கேன்”

என் மனதில் ஓர் எண்ணம் தோன்றியது. “அடியேன், ஏன் இங்க இருக்கணும்? கொஞ்சம் படுத்துக்கிடணும்னுதானே அரண்மனைக்கு வந்தீங்க. படுக்கலைன்னா மேலே போவோம். மீனாக்ஷியம்மை காலடியிலே உக்காருவோம்.”

“வேண்டாம்… என்னால் அங்கே இருக்கமுடியாது.”

“அடியேன், இப்ப அங்க நாம இருந்தாத்தான் உண்டு. இன்னும் கொஞ்ச நேரம்தான். பொழுது விடிஞ்சிரும். அம்மை எறங்கிருவா. பிறகு நாம பாக்கணுமானா மதுரை போகணும்… மகாராஜா மதுரை போறதுன்னா அது ராஜாங்க காரியம். ஆயிரம் கணக்குகள் இருக்கு. ஒருவேளை இனிமே நாம நம்ம கண்ணாலே அம்மையை பாக்கமுடியாமக்கூட ஆகலாம்…”

அவர் திடுக்கிட்டு என்னைப் பார்த்தார். கண்கள் நீர்படிந்து வெறித்திருந்தன. உதடுகள் இறுக, தலை ஆடியது.

“அடியேன், நாம ஏன் நேரத்தை வீணாக்கணும்? நேரம் இப்ப பொன்னுபோலே. ஒவ்வொரு நிமிசமும் வைரமணிபோலே. எண்ணி எண்ணிச் செலவிடணும். நாம அங்க போயி அம்மை காலடியிலே இருப்போம். இப்ப அங்க யாருமில்லை. அம்மை இருக்கிற இடத்திலே பயமில்லை. சூனியமும் இல்லை. மகாமங்கலை அவ.”

“ஆமா” என்றபடி மகாராஜா எழுந்துகொண்டார். “எதுக்கு இங்கே இருக்கேன்? கிளம்புவோம்.”

அவர் மேலாடையை எடுத்து சுற்றிக்கொண்டு நடக்க நான் “அடியேன். உச்சினி மாகாளிக்கிட்டே உத்தரவு வாங்கிக்கிடுங்க” என்றேன்.

மகாராஜா திரும்பி உச்சினி மாகாளியை வணங்கி “தம்புராட்டி, உன் காலடியிலே தலை வைச்சு பயமில்லாம இருந்தேன்” என்றார்.

அவர் நடக்க நான் பின்னால் சென்றேன். கிருஷ்ணப்பையர் குதிரைகளின் அருகே நின்றிருந்தார். மகாராஜா குதிரையில் ஏறிக்கொண்டு அதை உதைத்து பெருநடையில் சென்றார்.

“அரண்மனைக்குத்தானே?” என்றார் கிருஷ்ணப்பையர் என்னிடம்.

“நீங்க அங்க போய் இருங்க. மகாரஜா மீனாக்ஷியம்மை சன்னிதிக்கு போறார்.”

“அவருக்கு நல்ல காய்ச்சல் இருக்கு. தேகத்தை தொட்டா அனலா இருக்கு”

நான் அந்த வெம்மையை உணர்ந்திருந்தேன். அது நீர் குறைந்ததனால் வந்தது. சென்றதுமே ஏதாவது குடிக்கக் கொடுக்கவேண்டும்.

நானும் பூதத்தானும் மகாராஜாவின் பின்னால் சென்றோம். அவர் அந்த எளிய தோற்றத்தில் இருப்பதை எவரும் எண்ணியிருக்கவில்லை என்பதனால் எவரும் அவரை அடையாளம் காணவில்லை.

ஆள்கூட்டத்தின் நடுவே முட்டி ததும்பி, பல இடங்களில் ஒழுகும் நிரைகளை உடைத்து, அப்பால் சென்று மேலேறி மணப்பந்தலை அடைந்தோம். பந்தலுக்கு வெளியே அந்த வேளையிலும் மறுநாள் காலைப்பூசனையை காண்பதற்காக மக்கள் இருட்டில் குவியல் குவியலாக உடல் செறிந்து மலைச்சரிவை நிரப்பி அமர்ந்திருந்தனர்.

பந்தலில் திரை போட்டிருந்தார்கள். வெளியே சம்பிரதி கொச்சுகிருஷ்ண குறுப்பு நின்றிருந்தார். அவர் குதிரையில் வந்திறங்கிய மகாராஜாவை எதிர்பார்க்கவில்லை. அவர் என்ன ஏது என உணர்வதற்குள் மகாராஜா உள்ளே சென்றுவிட்டார்.

நான் பின்னால் சென்றேன். சம்பிரதி “என்ன, என்ன?” என்றார்.

“ஒண்ணுமில்லை. மகாராஜா இங்கே இருக்கிற செய்தி வேறே தெரியவேண்டாம்” என்றேன்.

மகாராஜா பந்தலுக்குள் சென்று திரையிடப்பட்டிருந்த தெய்வங்களுக்கு முன் நின்றார். நான் கூடவே சென்றேன். அங்கே சிவாச்சாரியார்கள் இருவர் அமர்ந்தபடியே தூங்கிக்கொண்டிருந்தனர்.

“சுவாமி, சுவாமி” என்றேன்.

ஒருவர் கண்விழித்து என்னைப் பார்த்தார். “யாரு?” உடனே மகாரஜாவை அடையாளம் கண்டு எழுந்துவிட்டார்.

“தம்புரான் தேவிதர்சனம் பண்ணணும். திரையை நீக்குங்க”

“அம்மை அணியில்லாக் கோலத்திலே இருக்கா.”

“இருக்கட்டும்.”

“அணியில்லாம இருக்கிறப்ப—”

“வந்திருக்கிறது அவளுக்க பெத்த அப்பன்… பெண்ணைக் தாரைவார்த்துக் குடுக்கிற கலி நிறைஞ்ச மனசோட வந்திருக்காரு”

மகாராஜாவைப் பார்த்தபின் அவர் எழுந்து திரையை விலக்கினார். உள்ளே மீனாம்பாளின் செம்புச்சிலை மெல்லிய சுடர் வெளிச்சத்தில் இதமான மிளிர்வுடன், அணிகளோ மலர்களோ இல்லாமல், இளமஞ்சள் பட்டு உடுத்தி அமர்ந்திருந்தது.

கைகூப்பியபடி நின்ற மகாராஜா விம்மி அழத்தொடங்கினார். நான் திரும்பி சம்பிரதியிடம் ஒரு பீடத்தை எடுத்துப் போடும்படிச் சொன்னேன். அதற்குள் மகராஜா அப்படியே தரையில் அமர்ந்தார். நான் அறியாமல் அவரைப் பிடித்தேன். அவர் உடல் வெந்நீர்க்கலம் போல சூடாக இருந்தது. வியர்வையே இல்லாத வெப்பம். காற்றில் பறக்கும் துணிபோல அது அதிர்ந்தது.

அவர் தேவி காலடியில் தரையில் அமர்ந்து கைகளை ஊன்றிக்கொண்டார். மேலே பார்த்துக்கொண்டு கண்ணீர் விட்டார். நான் மெல்ல விலகி சம்பிரதியிடம் ”வெல்லநீர் கொண்டு வாரும். சுக்கு மிளகு ஒண்ணும் வேண்டாம். நல்ல இளநீரிலே வெல்லம் போட்ட பானக்கம்” என்றேன்.

அவர் வெல்லநீரை ஒரு செம்பில் கொண்டுவந்தார். நான் சிவாச்சாரியாரிடம் அதை அம்மனின் காலடியில் வைத்துப் படைத்து எடுத்து மகாராஜாவுக்கு கொடுக்கும்படிச் சொன்னேன்.

அவர் அவ்வாறே அதை அம்மையின் காலடியில் படைத்து, மலர் தொட்டு வீழ்த்தி வணங்கி இருகைகளாலும் எடுத்து மகாராஜாவிடம் கொடுத்தார்.

“என்ன?” என்றார் மகாராஜா.

”அடியேன். தேவி தீர்த்தம்” என்றேன். “குடிக்க வேணும். மறுக்கக்கூடாது, அம்மை தாறதாக்கும்.”

“முடியாது, எனக்கு இறங்காது”

“பெத்த மக தாறது. இனி அவ கையாலே ஒருவாய் தண்ணி குடிக்க முடியாம போகலாம்”

அவர் அதை வாங்கிக்கொண்டார். நிமிர்ந்து பார்த்து “அம்மே!” என்று உடைந்த குரலில் கூவினார். இருகைகளாலும் செம்பை வாங்கி வேகமாகக் குடித்தார். ஒழிந்த செம்பை அருகே வைத்துவிட்டு மீண்டும் மேலே பார்த்தார். அவர் விழிகள் உருண்டுகொண்டே இருந்தன.

நான் அங்கேயே நின்றேன். சற்று நேரத்திலேயே அவர் தூங்கிவிடுவார் என நினைத்தேன். அதேபோல அவர் உடல் தளர்ந்தது. கையை தரையில் ஊன்றினார். பின்னர் வெறுந்தரையிலேயே படுத்தார். சம்பிரதி அவர் படுக்க பாய் ஏதாவது கிடைக்குமா என்று சுற்றிலும் பார்த்தார். நான் வேண்டாம் என்று கைகாட்டினேன்.

மகாராஜா நிலத்தில் உடல் பதித்துக் கிடந்தார். மெல்ல மூச்சொலி வலுத்தது. அவருடைய மெலிந்த நெஞ்சு மூச்சில் ஏறியிறங்கியது. முகம் அமைதி கொண்டிருந்தது. முலைகுடித்தபின் உறங்கும் மகவு என நினைத்துக்கொண்டேன்.

[ 17 ]

நான் மணப்பந்தலை விட்டு வெளியே வந்தபோது தளவாய் நாராயணக் குறுப்பு என்னை நோக்கி வந்தார். அவர் அப்பால் மகிழமரத்தடியில் காவலர்தலைவன் பிறுத்தாக் குட்டி நாயரிடம் பேசிக்கொண்டிருப்பதை நான் கவனிக்கவில்லை. அவர் “நில்கணும் சர்வாதிக்காரரே” என்றபோதுதான் கண்டேன். ஒன்றும் சொல்லாமல் தலைவணங்கினேன்.

அவர் அருகே வந்து “நான் சிலது பேசணும்” என்றார்

“பேசுங்க” என்றேன். அறிவு குறைந்தவர்கள் தீவிரம் கொள்ளும்போது முகம் அசட்டுத்தனமாக தோற்றமளிக்கிறது. அதைப்போல எரிச்சலூட்டுவது வேறில்லை.

“திவான்கிட்டே என்ன சொன்னீங்க?” என்றார்.

“என்ன சொன்னேன்னு அவர் சொன்னார்?” என்றேன்.

“அதாக்கும் நான் கேட்டது. அவர்கிட்டே சர்வாதிக்கார் சொன்னது என்ன?”

“நான் சொன்னது எதுவா இருந்தாலும் அதை நான் திரும்பச் சொல்லமுடியாது. திவானுக்கு இருக்கிற ஹர்ஜி என்னன்னு சொல்லட்டும்.”

ஹர்ஜி என்ற சொல் தளவாயைக் குழப்பியது. சுல்தான்கள் ஆட்சியில் பயன்படுத்தப்பட்டது அது. அலுவலகச் சொல். அவர் அதை கேட்டதுமே எல்லாம் அரசர் முன்னிலையில் பேசப்படவிருக்கிறது என்ற உணர்வை அடைந்தார். அது அவருடைய கோபத்தை சிதறடித்து சூழ்ச்சி மனநிலையை உருவாக்கியது

“திவான் புண்யபிராமணன், இந்த தேசத்துக்கு அமாத்யன். அவர்கிட்டே பேசத்தெரியலைன்னா சர்வாதிக்கார் பதவி எதுக்கு?” என்றார் தளவாய். “ஒவ்வொருவருக்கும் ஒரு நிலை இருக்கு. அந்த நிலைக்குண்டான பேச்சு வேணும்… அது தெரியாதவனுக்கு சர்வாதிக்கார் பதவி இருக்கப்பிடாது”

நான் புன்னகைத்து “சர்வாதிக்கார் கிட்டே கெட்ட பேச்சு வாங்குறவருக்கு திவான் பதவி எதுக்குன்னுல்ல கேட்டிருக்கணும்?” என்றேன்.

தளவாய் என் கேள்வியை ஒருகணம் கழித்தே புரிந்துகொண்டார். சட்டென்று கடும் கோபத்துடன் “நானாக்கும் இங்க தளவாய். இப்பவே, இந்த இடத்திலேயே நான் உன்னை பிடிச்சு துறுங்கிலே அடைக்க முடியும்” என்று கூச்சலிட்டார்.

“செய்யுங்க பாப்போம்” என்று நான் புன்னகையுடன் சொன்னேன்.

”இப்ப சொல்லுறேன். இதோ என்னுடைய ஆணை… டேய்” என்று திரும்பினார் தளவாய்.

பிறுத்தாக்குட்டி நாயர் “தளவாய் தம்புரானே, அதெல்லாம் வேணாட்டிலே நடக்காது. வேணாட்டுப் பட்டாளத்துக்க எட்டு பிரிவிலே நாலுக்கு இரணியசிங்கநல்லூர் தம்புரான்மாராக்கும் தலைமை. படையோடே அவங்க கிளம்பி வந்தா வேணாடுக்கு வேறே தளவாயை பாக்கவேண்டியிருக்கும்” என்றார்.

நான் புன்னகையுடன் “நான் மகாராஜாவுக்கு மட்டும் கடமைப்பட்டவன். மற்ற யாருடைய அதிகாரத்திலேயும் நான் கைகடத்த மாட்டேன். ஆனா அவங்கவங்களுக்குள்ள இடத்திலே இருந்துகிடணும். திவானா இருந்தாலும் தளவாயா இருந்தாலும்” என்றேன். “வேணாட்டு திவானும் தளவாயும் மதுரைக்கு அடைப்பக்கார வேலை செய்யக்கூடாது.”

“நானும் பதினெட்டு களரி முடிச்சவன்தாண்டே” என்றார் தளவாய்

“அப்ப கழுவிலே ஏத்தப்பிடாது. ஆனைக்காலிலே விட்டு இடறணும்” என்றேன்.

அவர் உடலில் ஓரு துடிப்பு பரவியது. பிறகு கைகால்கள் பலவகையாக உதற “என்ன? என்ன?”என்றார். உடைந்த குரலில் “இதை எப்டி முடிக்கிறதுன்னு எனக்குத் தெரியும்” என்று கூவியபடி மூச்சிரைக்க திரும்பிச் சென்று குதிரையில் ஏறி அதைச் சவுக்காலடித்து விரட்டிச் சென்றார்.

”கொஞ்ச நேரமா இதையே சொல்லிட்டிருக்காரு” என்று பிறுத்தாக்குட்டி நாயர் சொன்னார். “அந்த பரதேசப் பிராமணனை எதைக்கண்டு திவானா வைச்சார் மகாராஜான்னு தெரியல்லை. அவருக்கு மதுரை நாயக்கர்களைக் கண்டதும் மண்டையிலே அடிபட்ட மாதிரி ஆயிட்டுது. சர்வாதிக்காரர் தன்னை அவமானம் பண்ணிப்போட்டாருன்னு போயி மதுரை தளவாய் வெங்கப்ப நாயக்கர் கிட்டே சொல்லி கண்ணீர் விடுதாரு… என்ன படிப்பு படிச்சாரோ?”

“படிச்சது சாஸ்திரங்கள், தெலுங்கு, சம்ஸ்கிருதம், தமிழு, மலையாண்மை எல்லாம். படிக்காதது சகஜபுத்தி. அது ஏடு படிச்சா வராது. தானா வரணும்” என்றேன்.

பிறுத்தாக்குட்டி நாயர் “காலையிலே முதல் வெளிச்சத்திலே அவங்க கிளம்பறதுக்குண்டான ஏற்பாடுகளைச் செய்யணும். அவங்க யாரும் இந்த ராத்திரியிலும் கண்ணுறங்கல்லை. வெங்கப்ப நாயக்கர் பந்தலிலே இப்பவும் வெளிச்சம் தெரியுது” என்றார்.

நான் அந்த வெளிச்சத்தைப் பார்த்தேன். சிறுபொழுது தூங்கியதனாலேயே நான் நல்ல தெளிவை அடைந்திருந்தேன். மேற்கொண்டு தூங்கவேண்டியதில்லை என்று தோன்றியது. படுத்தாலும் தூங்க முடியாது. இத்தகைய உச்சகட்ட விசைகொண்ட நாட்களில் சிலநாழிகைப் பொழுது தூங்கினாலே உடலும் உள்ளமும் முழுமையாக மீண்டுவிடுகின்றன.

நான் மீண்டும் பந்தலுக்கே செல்லலாமா என்று எண்ணியபோது பிறுத்தாக்குட்டி நாயர் “வலிய சர்வாதிக்கார் இப்ப போயி தளவாய் வெங்கப்ப நாயக்கர் கிட்டே சரசமா நாலு வார்த்தை சொல்லுறது உசிதமா இருக்கும்னு அடியேனுக்கு தோணுது. இந்த பரதேசிப் பிராமணனும் படைக்குறுப்பும் அங்க என்னென்ன சொல்லி வச்சிருக்காங்கன்னு தெரியாதே” என்றார்

“மதுரை தளவாய் மனசு நிறைஞ்ச மனுஷன்… எல்லாம் அவருக்கு தெரியும்”

“ஆமா, ஆனா நம்ம திவான் சூட்சுமம் அறிஞ்சவர். நாலுபேருக்கு முன்னாலே நின்னு தன்னை அவமானம் பண்ணிப்போட்டாங்கன்னு கண்ணீரு விட்டாருன்னா அது அப்டி சும்மா விடமுடியுற காரியமில்லை. ஸ்ரீவிஜயநகர நாயக்கருங்களுக்கு பிராமண பக்தி உண்டு. சிருங்கேரி மடாதீசர் உண்டுபண்ணின ராஜ்யமல்லவா?”

அது உண்மை என்று எனக்கு தோன்றியது. திவான் நாலைந்து நியோகிப் பிராமணர்களும் மற்ற உயர்நிலை நாயக்கர்களும் இருக்கும் சபையில் போய் அழுதியிருந்தால் அது பிரச்சினைதான்.

“நமக்கு ஒரு நாள் கடந்து கிட்டணும்… சொல்லப்போனா ஒரு காலை வேளை போயிக்கிட்டணும். அது வரை பிரச்சினை இருக்கக்கூடாது” என்றார் பிறுத்தாக்குட்டி நாயர்

நான் தலையசைத்தேன். என் குதிரையில் ஏறிக்கொண்டு மணவாளன் குழுவினருக்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைகளை நோக்கிச் சென்றேன். தளவாய் வெங்கப்ப நாயக்கருக்கும் ராயசம் விஜயரங்கய்யாவுக்கும் அரண்மனைகளின் வடிவில் தனித்தனியான சிறு கொட்டகைகள் அமைக்கப்பட்டிருந்தன. தக்ஷிணாதி மடத்து சுவாமி நாராயண பட்டாச்சாரியர் தனியாக ஒரு சிறுகுடிலில் தங்கியிருந்தார். எஞ்சிய அனைவரும் பெரிய கொட்டகையில் தங்கியிருந்தனர். படைவீரர்கள் பலர் அந்த கொட்டகையைச் சூழ்ந்து வெட்டவெளியிலும் மரத்தடிகளிலும் அமர்ந்தும் படுத்தும் தூங்கிக்கொண்டிருந்தனர். ஆனால் பெரும்பாலானவர்கள் படுத்தும் அமர்ந்தும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

நான் தளவாய் வெங்கய்யாவின் கொட்டகை முன் குதிரையிலிருந்து இறங்கினேன். அங்கே நின்ற சம்பிரதி என்னை கண்டு தலைவணங்கினான். “தளவாய் கண்ணு உணர்ந்திருக்கிறாரா?” என்று நான் கேட்டேன்.

“பேசிட்டிருக்கார்… உள்ளே ராயசம் இருக்கார்.”

”நான் வந்த செய்தியைச் சொல்லு.”

நான் பேசிக்கொண்டிருக்கையிலேயே தளவாய் வெங்கப்ப நாயக்கர் எழுந்து வந்தார். “வாங்க, வாங்க… இன்னும் வேலை முடியலையா?” என்றார்.

“வேலை எப்ப முடியறது? நான் இப்ப சும்மா பாத்திட்டுப்போக வந்தேன்.”

”சந்தோஷம்…வாங்க” என்றார்.

அவர் என் கைகளைப் பற்றிக்கொண்டார். நான் அவருடைய பெரிய கைகளை இறுகப்பிடித்தேன். எப்போதுமே நம்மைத் தொட்டுப் பேசுபவர் அவர். நானறிந்த அரசகுடியினரில் அனைவரையும் தொடுபவர் அவரே. ஒருவேளை அது நாயக்கர்களின் வழக்கமாக இருக்கலாம். அவர்கள் அத்தனைபெரிய படையை உருவாக்கி தென்னகத்தையே பிடித்தமைக்கு அதுதான் காரணமாக இருக்கலாம்.

ராயசம் விஜயரங்கய்யா உள்ளே எழுந்து நின்று கைவிரித்து என்னை வரவேற்றார். “வாங்க… திருவிழான்னா இதுதான் திருவிழா. இத்தனை நாளுக்குள்ளே இப்டி ஒரு திருவிழாவை நடத்திக்காட்டுறது பத்து ராஜ்ஜியங்களை படைகொண்டு பிடிச்சது மாதிரி” என்றார்.

“குறைகள் ஒண்ணும் இல்லியே?” என்றேன்.

“குறையா? தேடித்தேடிப் பாத்தேன். வேணுமானா ரசத்திலே ஒருகை உப்பு கூடுதலா போட்டிருக்கலாம்னு சொல்லணும்…” என்று ராயசம் சிரித்தார். “அப்பழுக்கில்லை. ஒவ்வொண்ணும் அததுக்குண்டான இடத்திலே அமைஞ்சிட்டுது. பெருமாள் அருள் பரிபூர்ணமா இல்லேன்ன இதெல்லாம் சாத்தியமே இல்லை… உக்காருங்க.”

நான் அமர்ந்தேன். தளவாய் வெங்கப்ப நாயக்கர் “நீங்க மதுரைக்கு வரணும். அங்க நாம நம்ம அரண்மனையிலே உக்காந்து ஒருநாள் ராத்திரி கும்பினிக்காரன் கொண்டுவார நல்ல மதுவை குடிக்கணும்…” என்றார். பிறகு ராயசத்திடம் திரும்பி நையாண்டியாக “அது தேவபானம். வேதரிஷிகள் குடிச்ச மதுர சோமம். அதையெல்லாம் குடிக்கிற பாக்கியம் பிராமணர்களுக்கு இல்லை” என்றார்.

“நான் நியோகி பிராமணன். வாளெடுத்தவன், மதுக்கிண்ணத்தையும் எடுக்கலாம்” என்றார் ராயசம் விஜயரங்கய்யா.

“குடிச்சபிறகுதான் நான் பிராமணங்க கிட்டே நல்லதா நாலு வார்த்தை சொல்லணும்” என்று தளவாய் சிரித்தார்.

நானும் சிரித்தபின் முகம் மாற்றம் கொண்டு, “மகாராஜா அங்கே மீனாட்சி சவிதத்திலே இருக்கார். நல்ல காய்ச்சல் அடிக்குது. நினைச்சு நினைச்சு ஏங்கிட்டார்” என்றேன்.

“பின்னே? நாங்க அம்மையை கொண்டுபோக வந்திருக்கோம். எங்களுக்கே காய்ச்சலடிக்குது” என்றார் வெங்கப்ப நாயக்கர்.

“மனசிலே சட்டுன்னு ஒரு சூனியம் வந்து நிறைஞ்சிட்டுது அவருக்கு. அந்த மூதேவிப் பிரசன்னத்தை தாளவே முடியல்லை. தீயிலே குளிக்கப்போனார் , வேண்டாம் குளுந்த தண்ணியிலே குளியுங்கன்னு அம்மை முன்னாடி கொண்டு வந்து படுக்க வைச்சேன்”

“உசிதமான காரியம். அம்மை முன்னாடி இருக்கட்டும்…” என்றார் ராயசம்

“சொல்லப்போனா இது எல்லா வீட்டிலேயும் நடக்குறது. என் பொண்ணை கட்டிக்குடுக்கிற நாளிலே அந்த ராத்திரியிலே எனக்கும் காய்ச்சல்… ஒத்தை ஒரு பொண்ணு. அலமேலு மங்கான்னு பேரு. மகாலட்சுமி சொரூபம். என் இல்லம் நிறைஞ்ச செல்வம். எப்டி மனசு ஆறும்? அப்டியே விளுந்துட்டேன். அவளோட பழைய புடவை ஒண்ணை கொண்டுவந்து எனக்கு போத்தி விட்டாங்க. அதை கட்டிப்புடிச்சுக்கிட்டப்ப கொஞ்சநேரம் காய்ச்சல் குறைஞ்சு தூங்கினேன். அதனாலே மறுநாள் அவ ஊரிறங்கி போறதை பாத்துட்டு மயங்கி விழாம நின்னேன்” என்றார் தளவாய் வெங்கப்ப நாயக்கர்.

“ஆமா, இப்ப அம்மை சவிதம் அவரை காப்பாத்துது. நாளைக்கு அம்மையெறங்கின பிற்பாடு என்ன செய்றது? ஒண்ணும் தெரியல்லை.”

“எல்லாம் சரியாகும்” என்று ராயசம் விஜயரங்கய்யா சொன்னார். “ஒரு மகளை கட்டிக்குடுத்தாலே அப்பன் விழுந்து அழுறான். காய்ச்சல் வந்து கிடக்குறான். உலகளந்த அம்மையை மகளா மடியிலே இருத்தி கட்டிக்குடுத்தவருக்கு எப்டி இருக்கும்? மலையை தூக்கி அப்பாலே வைச்சு இடமொழிச்சது மாதிரி இருக்கும்…”

“நான் இந்த நாள் முச்சூடும் அழுதேன்” என்றார் வெங்கப்ப நாயக்கர். “சத்தியமாச் சொல்லுறேன் அம்மையை அப்பன் தாலியணிவிச்ச நேரத்திலே அப்டியே செத்து மறுகணம் புனர்ஜன்மம் எடுத்தேன்… இதுமாதிரி ஒண்ணு இனியும் என் வாழ்க்கையிலே நடக்கும்னு நினைக்கல்லை.”

உணர்ச்சி கொந்தளிப்புடன் எழுந்து கைதூக்கி ராயசம் கூவினார். “நடக்கும், இனி அங்கே ஆண்டுதோறும் நடக்கும்… ஆயிரம் ஆண்டு நடக்கும். நடந்திட்டே இருக்கும்”.

“ரங்கா! ரங்கா!”என்றார் வெங்கப்ப நாயக்கர்.

“நாளைக்கு என்ன பண்ணுறதுன்னு தெரியல்லை. மகாப்பிராமணனான சிறமடம் திருமேனி சொன்னதுக்கு ஒப்ப இந்த அம்மை கல்யாணம் ஏற்பாடாச்சு. எல்லாம் நிறைஞ்சு மங்களம் பெருகும்னு அவரு சொல்லியிருக்காரு… பாப்போம்” என்றேன்.

வெளியே ஓசை கேட்டது. தளவாய் “யாரு?” என்றார்.

சம்பிரதி உள்ளே வந்து “வேணாட்டு திவானும் தளவாயும் முகம்காணணும்னு வந்திருக்காங்க” என்றான்.

“இப்பதானே போனாங்க?” என்றார் ராயசம் விஜயரங்கய்யா.

“என்னமோ சொல்லணும்னு சொன்னாங்க.”

“வரச்சொல்” என்றார் தளவாய் வெங்கப்ப நாயக்கர். ராயசம் எரிச்சலுடன் முகத்தை திருப்பிக்கொண்டார். அங்கிருந்த ஒளி சற்று குறைவதுபோல தோன்றியது.

திவான் நாகமையாவும் தளவாய் நாராயணக் குறுப்பும் தோளை நன்றாக குறுக்கி கைகூப்பி தொழுதபடி உள்ளே வந்தனர். என் உடல் எரிந்ததுபோல் உணர்ந்தேன். பார்வையை திருப்பிக்கொண்டேன்.

தளவாய் அவர்களை அமரும்படிச் சொல்லவில்லை. “என்ன ராயுடு? என்ன?” என்றார்.

“இன்னைக்கு ஒரு அசம்பாவிதம் நடந்துபோச்சு. நான் ஏற்கனவே சொன்னேன். சுத்தபிராமணனான என்னை அவமானப்படுத்துற வார்த்தைகள் வந்துபோச்சு.”

“அதை உங்க ராஜாகிட்டே சொல்லுங்க.”

”அதை இங்கே சொல்ல வயணம் உண்டு… அதான் நானும் தளவாயும் வந்தோம். ஏன் அந்த பூசல் வந்ததுன்னு தளவாய் தெரிஞ்சுகிடணும். ராயசமும் தெரிஞ்சுகிடணும்…”

நான் எரிச்சலுடன் “இங்கபாருங்க இந்த எடம் நம்ம வேணாட்டு ராஜ்ஜியம் இல்லை. இது மதுரை ராஜ்ஜியத்திலே இருக்கிற கொட்டகைன்னு கணக்கு. நீங்க வேணாட்டு திவான்” என்றேன்.

“உங்க வேணாடுன்னா என்ன? மதுரை-சிராப்பள்ளி ராஜ்ஜியத்திலே ஒரு பாளையத்துக்கு வருமா? மதுரை ராயசம் எங்களுக்கு உடையநாயக்கருக்கு சமானம்.” என்றார் திவான்.

தளவாய் வெங்கப்ப நாயக்கர் “எதுக்கு வீண்பேச்சு?” என்றார்.

“ஒரு வீண்பேச்சு நடந்திருக்கு” என்று திவான் சொன்னார். “அங்கே நடந்த சில குறைபாடுகளை நாங்க சுட்டிக்காட்டினோம். அது எங்க கடமை, நான் திவானா அதைச் செய்யணும். அம்மை கல்யாணம்னா மகாமங்கலம். அதிலே ஒரு குறையும் இருக்கப்பிடாது. அமங்கலக்குறை இருந்தப்ப சொல்லி திருத்த பிரயத்தனம் பண்ணினோம். அதுக்குப் பதிலா இவர் நாங்க இங்க வந்து ஹர்ஜி குடுக்கிறோம்னு சொன்னார். அதை நான் என்னான்னு கேட்டபோது—”

சட்டென்று என்ன நடந்ததென்றே தெரியவில்லை, நான் எழுந்து கையை ஓங்கிவிட்டேன். “ஓய், நீசப்பிராமணா! நாக்கூசாமல் பொய்யா சொல்றே? என்ன தப்பு நடந்தது? என்ன குறை? இப்ப சொல்லு… இப்பவே சொல்லும்” என்று கூவினேன்.

அவர் திகைத்து பின்னகர்ந்து “பாக்கணும்… ராயசம் பாக்கணும். நியோகி பிராமணனுக்கு இந்த வேணாட்டிலே என்ன மரியாதைன்னு பாக்கணும்” என்றார்.

“நீர் பிராமணயோக்யதையோட இருக்கலை, அதை அப்பவே பாத்திட்டேன்” என்றார் ராயசம் விஜயரங்கய்யா சீற்றத்துடன். “எப்ப வாள்தொட்டு நீர் வேணாட்டுக்கு திவான்னு சொல்லியாச்சோ, அப்பவே நீர் வேணாட்டுக்குரியவர். விட்டுப்போறது வரை உம்ம மண்ணு வேணாடு. இந்த மண்ணுக்காக கூடப்பிறந்த ரத்தமானாலும் பெத்த பிள்ளையானாலும் எதிர்த்து நிக்கவேண்டியவரு நீரு.”

“ஆனா இந்த அவமரியாதையை தாங்கணுமா? நான் கேக்கிறேன். இதான் பிராமணன்கிட்டே பேசுற நியாயமா?”

“சரி நியாயமில்லை. நான் உம்ம கால்தொட்டு மாப்பு கேக்கிறேன். ஆனா அதுக்கு முன்னாடி இங்க என்ன தப்பு நடந்ததுன்னு சொல்லணும். என்ன பிழை நடந்ததுன்னு சொல்லணும். இப்ப சொல்லணும்.” என்று நான் கூச்சலிட்டேன்.

”பலதும் நடந்தது… சொல்றதுக்கு ஆயிரம் இருக்கு.”

“ஒண்ணைச் சொல்லும் ஓய்… ஓய் ஒண்ணைச் சொல்லும்” என்று நான் கூவினேன். ஏன் என் உடல் அப்படி நடுங்குகிறது, என் குரல் உடைந்து குழறுகிறது என்றே புரியவில்லை. “ஓண்ணைச் சொல்லும். ஒரு குறை சொல்லும்… உம்ம குலதெய்வம் மேலே, உம்ம குடிமேலே ஆணையிட்டு நீர் கண்ட ஒரு குறையச் சொல்லும். என் குலத்துமேலே ஆணை, என் மூப்பிலான்மாருக்க மேலே ஆணை, பள்ளிகொண்ட ஆதிகேசவப்பெருமாள் மேலே ஆணை, என் மண்ணுமேலே ஆணை, ஒரு தப்பு, ஒருகுறை… ஓய், எண்ணி ஒரே ஒரு குறை நீர் சொல்லிட்டேருன்னா நான் இப்பவே இந்த வாளை உருவி என் சங்கை அறுத்து செத்துவிழுறேன்.”

என் வெறியைக்கண்டு திவான் திகைத்துவிட்டார். அவரால் பேசவே முடியவில்லை. வாய் மட்டும் திறந்து திறந்து மூடியது.

“இப்ப சொல்லுறேன், ஒரு குறை இருக்காது. இது இரணியசிங்கநல்லூர் சர்வாதிக்காரனான தென்குளம் கட்டளைக்காரன் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் சொல்லுற சொல்லு. இனிமேலும் ஒரு குறை இருக்காது. ஒரு சின்னப்பிழைகூட இருக்காது. வேணுமானா இனிமே போயி தேடிக் கண்டுபிடிச்சுச் சொல்லும். ஓய், இப்ப போயி தேடிப்பாரும், நாளை நடக்குற சடங்குகளை எண்ணி எண்ணிப் பாரும். ஒரு சின்ன தப்பு இருந்தா நான் என் சங்கை பரகோடி கண்டன் சாஸ்தா முன்னாடி வெட்டிக்கிடுறேன். இந்த மண்ணிலே செத்து விழுறேன்.”

திவான் நாகமையா மாறிமாறி ஒவ்வொருவரையாகப் பார்த்தார். அவரால் எதையுமே சிந்திக்கமுடியவில்லை. ஆனால் தளவாய் நாராயணக் குறுப்பு கைகளை ஓங்கித்தட்டியபடி “டேய், இப்ப நீ சொன்னது வார்த்தை. இது நீ குலதெய்வம் மேலே தொட்டு வைச்ச சத்தியம்… நாளை அம்மை இறங்குறதுக்குள்ள ஒரு பிழையை காட்டுறேன். ஒரு மகாப்பிழை நடக்கும். அம்மை காட்டுவா. உன் அகங்காரத்துக்கு அம்மை ஒரு பதில் தருவா. அந்த மகாப்பிழையோட நான் வாறேன். உன் சங்கறுக்குற வாளை நான் எடுத்து நீட்டுறேன்.” என்றார்.

“வாரும்… அம்மை ஹிதம் அதுவானா அப்டி ஆகட்டும். இல்லேன்னா நீர் என்ன செய்வீர்?”

“நான் அப்பவே என் ஒருமீசையை வாளாலே வழிச்சுகிடுவேன். வாளை அப்டியே தரையிலே வைச்சுட்டு போயிடுவேன். தளவாயா அதுக்குமேலே ஒருநாழிகை இருக்க மாட்டேன். போதுமா?” என்றார் தளவாய் நாராயணக் குறுப்பு.

“நானும் அதைச் சொல்லுறேன்…. நான் திவான் பதவியை எடுத்து வைச்சுட்டு இந்த நாட்டு எல்லையை தாண்டி போயிடுவேன்… இது சபதம்.” என்றார் திவான் நாகமையா.

தளவாய் வெங்கப்ப நாயக்கர் “இதென்ன மடத்தனம்? இந்த மங்கலச்சடங்கு ஒருத்தர் நடத்துறதில்லை. ஆயிரம் பத்தாயிரம் லெட்சம் பேரு சேந்து நடத்துறது. அதுக்கெல்லாம் ஒருத்தர் எப்டி பொறுப்பேத்துக்கிட முடியும்? அத்தனைபேரு சேந்து செய்ற விழாவிலே ஆயிரம் தப்பு நடக்கத்தான் செய்யும்.”

“அதை அவருகிட்டே சொல்லுங்க. எல்லாம் நடத்துறது அவருன்னு நினைச்சு அகங்காரம் கொண்டதனாலேதானே அந்த வார்த்தையை அம்மை அவர் வாயிலே வரவழைச்சாரு? சொன்ன சொல்லை திருப்பி எடுக்கமுடியுமா? இப்ப சொல்லுறேன், இரணியசிங்கநல்லூர் சர்வாதிக்கார் பதவியை இப்பவே, இங்கேயே இட்டெறிஞ்சு திரும்புறதானா நான் என்னோட சொல்லை திருப்பி எடுக்கிறேன்” என்றார் தளவாய் நாராயணக் குறுப்பு

“குறுப்பே, நான் தென்குளம் கட்டளைக்காரன் உக்ரராஜ மார்த்தாண்டன் செண்பகராமன் பேரன். நாங்க இதுவரை சொல்லும் வாளும் தாழ்த்திய சரித்திரமில்லை. சோழசாம்ராஜ்யத்துக்க பட்டாளம் அலைகடல் மாதிரி வந்தப்பகூட தலை வணங்கல்லை…”

“அந்த மீசையை நானும் பாக்குறேன்” என்றார் தளவாய் நாராயணக் குறுப்பு

“சேச்சே, இங்கே இப்டி சொல்லு வந்துபோச்சே” என்றார் தளவாய் வெங்கட்டப்ப நாயக்கர்.

“என்ன இது உதயரே, இப்டியா சொல்லு விடுறது?” என்றார் ராயசம் விஜயரங்கய்யா. “சொல்லுல்லா, அது நின்னு கேக்குத தெய்வமாக்குமே?”

“நான் அம்மையை நம்பி சொல்லு விட்டிருக்கேன். நான் வாழணுமா சாகணுமான்னு அவ முடிவுசெய்யட்டும்” என்று சொல்லிவிட்டு நான் திரும்பி வெளியே சென்று குதிரையில் ஏறி அதை அதட்டி இருட்டுக்குள் பாய்ந்து சென்றேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி [குறுநாவல்] – 4
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி [குறுநாவல்] – 6