குமரித்துறைவி [குறுநாவல்] – 4

[ 13 ]

மணப்பந்தலுக்குள் நான் மீண்டும் நுழைந்தபோது திவான் வரவேற்புரை முடித்து அமர்ந்து விட்டிருந்தார். ஸ்ரீமீனாம்பாளை அமரவைக்க வேண்டிய பீடத்திற்கு பூசை நடந்துகொண்டிருந்தது. மாடம்பிகள் மெல்ல அவர்களுக்கிடையே இருந்த பூசல்களிலிருந்து விடுபட்டு நிகழ்ச்சிகளில் மூழ்கியிருந்தமையால் அவையில் அமைதி நிலவியது. பெண்கள் பகுதியிலிருந்து மட்டும் பேச்சொலி சொற்களற்ற மென்மையான முழக்கமாக கேட்டது. நான் என் இரு மனைவியரையும் அப்போதுதான் கண்டேன். அவர்கள் பீடத்தை நோக்கி கூப்பிய கைகளுடன் அமர்ந்திருந்தனர்.

நான் என் சிற்றப்பனை அணுகி அவர் கால்தொட்டு வணங்கினேன். அவர் தலையில் கைவைத்து வாழ்த்திவிட்டு, “மகாராஜா வாற நேரமாச்சுல்லாடே?” என்றார்.

வரப்போறார்என்று நான் சொன்னேன்.

இன்னைக்கு சர்வமங்களமான நாள். சாகிற காலத்துக்குள்ளே இப்டி ஒரு நாளிலே நானும் வந்து இருந்துபோட்டேன்இது போதும்டே.”

திவான் எழுந்து என்னை நோக்கி வந்துராஜா வாறதுக்குண்டான அறிவிப்பை போட்டிடலாமா?” என்றார்.

அவர் என்னை நோக்கி வந்தது சிற்றப்பனுக்கு நிறைவளித்தது. நான் அவரைப் பார்க்காமல் திவானிடம்கொம்புபோட சொல்லிடலாம்என்றேன்.

திவான் கைதூக்கியதும் கொம்புகள் முழக்கமிட்டன. மறுபக்கம் மன்னரின் கொட்டகை முகப்பில் நின்ற அணிப்படையிலிருந்து கொம்போசை எழுந்தது. மன்னர் கிளம்பிவிட்டதை அறிவித்து முரசொலி எழுந்தது. அவையிலிருந்த அனைவரும் எழுந்து நின்றனர். நான் மறுபக்க வாசலில் சென்று நின்றேன். பஞ்சவாத்திய மேளம் ஒலிக்க மாரார் குழு முதலில் வந்தது. வேணாட்டின் சங்குக்கொடியுடன் கொடிவீரன் தொடர்ந்து வந்தான். சரிகைமேலாடையை மார்பில் கட்டி, திறந்த தோள்களின்மேல் சரப்பொளிமாலையும் பதக்கமாலையும் அணிந்து, தோள்வளைகளும் கைவளைகளும் காப்புகளும் மின்ன, விசிறியடுக்கு வெள்ளை ஆடை அலைபாய, பாத்ரமங்கலம் தாசிகள் தாலப்பொலி ஏந்தி வந்தனர்.

பட்டு விதானத்தை இருவர் மூங்கில்கழிகளில் ஏந்தியிருக்க அதன் கீழே மகாராஜா நடந்துவந்தார். அவருக்குப்பின்னால் இருபக்கமும் மயில்கண் வடிவ ஆலவட்டங்களை இருவர் வீச அவர் பொன்வண்ணச் சிறகுகளுடன் பறந்து வருவதுபோலத் தோன்றியது. அவரைத் தொடர்ந்து கவச உடையணிந்த வீரர்கள் வந்தனர். திவான் முன்னால் சென்று மகாராஜாவை தலைவணங்கி முகமனுரைத்து வரவேற்றார். தளவாய் அவர்முன் வாளை உருவி கால்நோக்கி தாழ்த்தி உடல் வளைத்து வணங்கினார். அவர்கள் அவர் முன் நடந்து அழைத்து வலப்பக்க வாசல் வழியாக அவைக்குள் கூட்டி வந்தனர்.

மகாராஜா அவைக்குள் நுழைந்ததும் கோல்காரன் சிறியமேடைமேல் ஏறி நின்று உரத்தகுரலில்ஸ்ரீ ஆதிகேசவ பாததாசன், வேணாடு இருந்தருளும் மகிபதி, சேரகுல உத்துங்க சீர்ஷன், சத்ருபயங்கரன், சவ்யசாஜி, பிரியநந்தனன், ஆதித்ய வரகுண சர்வாங்கநாதப் பெருமாளுக்கு ஜயமங்களம்!” என்று கூவினான். “ஜயவிஜயீஃபவ!” என்று அவையிலிருந்தோர் கைதூக்கி வாழ்த்துக்களைக் கூவினர்.

வாழ்த்தொலிகள் நடுவே மகாராஜா கைகளைக் கூப்பியபடி வந்து அவை நடுவே நின்று மூன்றுபக்கமும் உடல்வளைத்து வணங்கினார். அவையிலிருந்து ஒவ்வொரு குடிக்கும் ஒரு குடிமூத்தவர் என பன்னிரு முதியவர்கள் வந்து மகாராஜாவை அழைத்துச் சென்று தாழ்வான ஆய் குலத்துச் சிம்மாசனத்தில் அமரச்செய்தனர். சங்கொலியும் ,முழவொலியும், கொம்பொலியும் ,மணியொயொலியும் முரசொலியும் எழுந்து அவையை நிறைத்தன.

அரசர் சிம்மாசனத்தில் அமர்ந்ததும் சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரி தலைமையில் ஏழு நம்பூதிரிகள் வந்து வேதம் ஓதியபடி பொன்னாலான கிண்ணங்களில் இருந்து கங்கைநீரை மாவிலையால் தொட்டு அவர்மேல் தெளித்து மஞ்சளரிசியிட்டு வாழ்த்தினர். மகாராஜா கைகளைக் கூப்பியபடி அமர்ந்திருந்தார்.

முறைப்படி கோல்காரன் சொல்லி அழைக்க, ராமனாமடத்துப் பிள்ளை, மார்த்தாண்ட மடத்துப் பிள்ளை, குளத்தூர் பிள்ளை, கழக்கூட்டத்துப் பிள்ளை, செம்பழஞ்சிப் பிள்ளை, பள்ளிச்சல் பிள்ளை, குடமண் பிள்ளை, வெங்ஙானூர் பிள்ளை என எட்டு கோயிலதிகாரிகளும் அவர் முன் வந்து வாள்தொட்டு தலைவணங்கினர்.

அதன்பின் மாடம்பிகள் எழுவர் பாறசாலை கண்டன் வலியத்தான் தலைமையில் வந்து வாளை உருவி அவர் காலடியில் தாழ்த்தி வணங்கினர். மற்ற மாடம்பிகள் அவரவர் இடங்களில் நின்றவாறே வாளை உருவி தாழ்த்தி வணங்கினர். “வேணாடுக்கு ஜயம்!” என்றார் கண்டன் வலியத்தான்.  “ஜயம்! ஜயம்! ஜயம்!” என்று சபையினர் வாழ்த்தொலி எழுப்பினர்.

சிவீந்திரம் வட்டப்பாறை மடம் அச்சு மூத்தது அவை முன் வந்து வணங்கிவேணாடு உடைய ஸ்ரீ ஆதிகேசவ மூர்த்திக்கு சாஷ்டாங்க பிரணாமம்என்றார். அவருடைய மெல்லிய குரல் கேட்குமளவுக்கு அவை அமைதி அடைந்தது. “எந்தெந்நால் இவ்விடம் இன்னைக்கு ஒரு மகாமங்கல கர்மம் நடக்கப்போகுது. மதுரை அரசி ஸ்ரீமீனலோசனி அம்மையை லோகேஸ்வரனாகிய திரிலோசனன் சுந்தரேசனுக்கு வதுவைமங்கலம் செய்துகொடுக்க தீர்மானமாகியிருக்கு. இந்த சித்திரை மாதம் பதினொன்றாம் நாள் துவாதசியில் காலை முதலொளிப் பொழுது குறிச்சிருக்கு. வரும் சித்ராபௌர்ணமி நாளில் அம்மையும் அப்பனும் மதுரைக்கு யாத்ரையாகவும் நாள் பார்த்திருக்கு. அதுக்கு வேணாடு முழுமையும் வந்து இருந்த இந்த சபை அனுக்ரகமளிக்க வேணும்என்றார்.

அவையிலிருந்தவர்கள் கை தூக்கிசுபம் சுபம் சுபம்என்று வாழ்த்தளித்தனர்.

எந்தெந்நால், ஸ்ரீமீனாக்ஷி இந்த கன்யாகுமரி மண்ணில் கடல்புறத்தில் மீன்குலத்தில் பிறந்தவள். இந்த மண்ணுக்கு ராஜனாகிய ஸ்ரீ ஆதிகேசவப் பெருமாளுக்கு சொந்த அனுஜத்தியானவள். தங்கையை கைப்பிடிச்சு கொடுக்க ராஜாதிராஜனும் புவனமகாராஜனுமாகிய ஸ்ரீஆதிகேசவப்பெருமாள் இங்கே வந்து சேர்ந்திருக்கிறார். மகாராஜா இப்போ அவ்விடம் போய் ஸ்ரீஆதிகேசவப் பெருமாளை இந்த கல்யாணசபைக்கு ஸ்வீகாரம் செய்து கூட்டிவருவார். வேணும் சுபமங்களம்என்றார் அச்சு மூத்தது.

அவையிலிருந்தவர்கள் கை தூக்கிசுபம் சுபம் சுபம்என்று வாழ்த்தளித்தனர்.

முரசுகள் மீண்டும் ஒலிக்கத் தொடங்கின. திவானும் தளவாயும் இருபக்கங்களிலாக நிற்க மகாராஜா எழுந்து கைகூப்பியபடி முகப்பு வாசலை நோக்கிச் சென்றார். பக்கவாட்டு வாசல் வழியாக வெளியே சென்று முகப்பு வாசலை அடைந்து மகாராஜாவுக்கு முன்னால் விரைந்தேன்.

கீழே ஆதிகேசவப் பெருமாளை சப்பரத்துடன் நிறுத்தி வைத்திருந்தார்கள். அவரை எதிரேற்று அழைத்துவந்த பரகோடி கண்டன் சாஸ்தாவின் சப்பரம் அருகே நின்றிருந்தது. ஏற்கனவே வலப்பக்க வாசல் வழியாக மகாராஜா நுழைந்ததும் பந்தலைச் சுற்றிக்கொண்டு முன்னால் வந்து நின்றிருந்த மாரார்களும் தாசிகளும் முன்னால் நடக்க மகாராஜா தொடர்ந்து சென்றார். அவர் வருவதைக் கண்ட ஆதிகேசவனுடன் வந்த வாத்தியக்குழு முழக்கமெழுப்பியது. இரு மங்கல ஓசைகளும் இணைந்தன.

மகாராஜா சென்று முதலில் பரகோடி கண்டன் சாஸ்தாவை வணங்கிவிட்டு ஆதிகேசவனை வணங்கி மணப்பந்தல் காண வரும்படி மும்முறை சைகை காட்டி அழைத்தார். அதன்பின் ஆதிகேசவனின் சப்பரம் முன்னால் செல்ல அவர் பின்னால் நடந்தார். சப்பரத்தை ஏற்றிவந்த நாயர்கள் அதை நடனம்போல முன்னும் பின்னுமாக ஊசலாட்டினர். ஆதிகேசவன் களிநடமிட்டபடி பந்தலில் நுழைவது போலிருந்தது. கூடவே பரகோடி கண்டன் சாஸ்தாவும் நடனமிட்டார்.

ஆதிகேசவன் உள்ளே நுழைந்ததும் அத்தனை வாத்தியங்களும் இணைந்து உச்ச ஓசையெழுப்பினர். கொம்புகளின் ஓசை யானைக்கூட்டத்தின் பிளிறல் போல ஓங்கி ஒலித்தது.

சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரி தலைமையில் ஏழு நம்பூதிரிகள் வேதம் ஓதியபடி வந்து ஆதிகேசவனை எதிர்கொண்டு அழைத்துச் சென்றனர். சப்பரத்திலிருந்து ஆதிகேசவனின் செம்பாலான உற்சவமூர்த்தி சிலையை எடுத்து அவருக்காக அமைக்கப்பட்டிருந்த கல்பீடத்தில் அமர்த்தினர். அருகே வலப்பக்கம் பரகோடி கண்டன் சாஸ்தா அமர்ந்தார்.

ஆதிகேசவனின் சப்பரத்துடன் திருவட்டாறிலிருந்து வந்த இளைய நம்பி ஆதிகேசவனுக்குரிய பூசைகளை தொடங்கினார். இடைக்கா மட்டும் ஒலித்துக்கொண்டிருக்க பூசைச்சடங்குகள் ஒவ்வொன்றாக நிகழ்ந்தன.

நான் எழுந்து வெளியே வந்தேன். சட்டென்று வெளியே விரிந்திருந்த வெளிச்சம் என் கண்களைக் கூசவைத்தது. குனிந்து தரையைப் பார்த்தேன். இமைகளை இறுக்கி கண்ணீர் வழிந்துகொண்டிருந்ததை மேலாடையால் துடைத்தேன். என்னை நோக்கி நூற்றுவர் தலைவன் மல்லன் சங்கரன் ஓடிவந்தான்.

நான் அவனிடம்மணவாளன் மனையிலே எல்லாம் ஒருக்கம்தானே?” என்றேன்.

நாலுமுறை பாத்தாச்சு உடையதேஎன்றான்.

இன்னொருமுறை பாருஎந்த தப்பும் நடக்கப்பிடாதுஎன்றேன். “இப்ப ஆதிகேசவனுக்கு பூசை முடிஞ்சதும் கொம்புவிளி வரும். உடனே மணவாளன் தன் ஆளுகளோடே கிளம்பி பந்தலுக்கு வரவேண்டியது

சொல்லிடறேன் உடையதேஎன்றான்.

அவங்க பெண்ணுக்கான நகை, புடவை, சீர் எல்லாம் எடுத்து வைச்சாச்சா?” என்றேன்.

அங்கே ஒரு பேச்சு வந்தது உடையதேஎன்றான் மல்லன் சங்கரன். “அதிலே ஒருத்தன் ராயசம் கிட்டே கேட்டான், இங்கே இதெல்லாம் மலையாளத்துக் கல்யாணமா இருக்கே. தொடங்கினதும் தெரியாம முடிஞ்சதும் தெரியாம இருக்கு. மணவாளன் ஊர்க்கோலம், நலுங்காட்டம்னு நூறு சம்பிரதாயங்கள் இருக்கேன்னுஅதை ராயசம் தளவாய்கிட்டே சொன்னப்ப அவரு சிரிச்சுக்கிட்டு அதையெல்லாம் அங்கே நாம நடத்துவோம், இது அவங்க ஊரு. அவங்க பொண்ணுன்னு சொன்னாரு. இருக்கட்டும், ஆனா மணவாளன் நம்மூரு, நம்மாளுன்னு ராயசம் சொன்னாரு. அப்டி பேச்சு ஓடிச்சு. கடைசியிலே தளவாய் இது என்னமோ பொண்ணு களவாங்கிக்கிட்டு வாறது மாதிரி இருக்குன்னு சொன்னாரு. சரி, மருதைக்காரன்தானே மணவாளன். மறவக்குடி பழக்கமும் கொஞ்சம் இருக்கட்டுமேன்னு தளவாய் சொன்னப்ப ராயசம் சிரிச்சுப்போட்டாரு.”

நான் புன்னகைத்துஒண்ணு சொல்லுதேன் கேட்டுக்க. இவனுக இப்ப இந்த கல்யாண வைபோகத்தைப் பார்த்துட்டானுக. இனிமே விடவே மாட்டானுக. இதே கல்யாணச்சடங்கை இவனுக மதுரையிலே இதைவிட நூறுமடங்கு பெரிசா ஆண்டோடாண்டு நடத்தத்தான் போறானுகஎன்றேன்.

ஆமா உடையதே, எனக்கும் அப்டித்தான் தோணிச்சுஎன்றான் மல்லன் சங்கரன். “கூட்டத்தைப் பாத்துட்டு தளவாய் சொன்னாரு. என்ன ஒரு பரவசம் பாத்தீங்களா சசிவோத்தமரே. இந்த அளவுக்கு ஒரு பரவசத்தை எங்கயும் பாத்ததில்லைன்னு. ராயசம் சொன்னாரு, இல்லாம இருக்குமா? கைலாசத்திலே நடக்குற சடங்கு இங்கே மண்ணிலே நடக்குது. அம்மையும் அப்பனும் கல்யாணம் பண்ணிக்கிடுததை பிள்ளைங்க பாக்குறது சாதாரண பாக்கியமான்னு. அதுவரை நான்கூட அப்டி யோசிக்கல்லை

நான் சிரித்துஇனிமே அவங்களோட விளையாட்டு இதுஎன்றேன். “நூறாண்டு காலமாச்சுல்லா? அத்தனை மங்கலமும் அணைஞ்சு இருண்டு கிடந்த தென்னாடு தீபமும் பூவுமா மலர்ந்துட்டு வருதுல்லா? இனி ஊரூரா திருவிழாதான். தலைமைத் திருவிழா மதுரையிலே நடந்தாகணும்இனிமே அது மீனாக்ஷி கல்யாணம்தான். எல்லாம் அம்மை அருள்என்றேன்.

சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்றபோது மீனாக்ஷியன்னையுடன் முத்தாலம்மனும் பிள்ளையாரும் வந்து சற்று அப்பால் பந்தலித்து நின்ற ஆலமரத்தின் அடியில் காத்து நிற்பது தெரிந்தது. நான் அருகே சென்றதும் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் என்னை நோக்கி வந்துஅங்கே ஆதிகேசவனுக்கு முறைபூசைகள் முடிஞ்சதும் மகாராஜா மட்டும்தானே வணக்கம் நடத்துறது? அத்தனைபேரும் வணக்கம் சொல்றதுன்னா அதுவே விடியவிடிய ஆயிரும்என்றார்.

இல்லை, ஒண்ணுரெண்டு தாந்த்ரீகச் சடங்குகள் மட்டும்தான். மகாராஜாவும் சிவீந்திரம் பெரிய நம்பூதிரியும் மட்டும்தான் வணக்கம் நடத்துற சம்பிரதாயம்இப்ப முடிஞ்சிரும்என்றேன்.

முத்தாலம்மை சிவப்புப் பட்டு கட்டி பெரிய மூக்குத்தியும் வட்டப்பொட்டும் அரளிமாலையுமாக மங்கலக்கோலத்திலும் உக்கிரமாக இருந்தாள். பிள்ளையார் சிலை சிறியது. குழந்தைப் பிள்ளையார். பொல்லாப் பிள்ளையார் என்று ஊரில் சொல்வார்கள். எதையுமே அறியாமல் தன் தீனியில் மூழ்கி குனிந்து அமர்ந்திருப்பவர் போலிருந்தார். “இங்க கிடந்து கண்ணீரு விடுதேன், நீ தின்னுட்டே இருஎன்றுதான் பக்தர்கள் சமயங்களில் அவரை வசைபாடுவார்கள்.

மணப்பந்தலில் இருந்து கொம்போசை எழுந்தது. நான் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியாரிடம்அழைப்பு வந்தாச்சு, போலாம்என்றேன்.

ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் கைகாட்ட மீனாக்ஷியம்மனின் முன்னால் நின்றிருந்த மாரார்கள் வாத்தியங்களை இசைத்தனர். குட்டியானைகள்போல கொம்புகள் முழங்கின. மலைக்குரங்குக் கூட்டம்போல் முழவுகள். மணியோசை, இலைத்தாள ஓசை, சங்கொலிகள். மணமகளின் முன்னால் முத்தாலம்மை செல்ல, பின்னால் பிள்ளையார் சென்றார். அவர் அப்போதும் எதையும் கவனிக்கவில்லை என்று நினைத்துக்கொண்டேன்.

மணப்பந்தலுக்கு வெளியே அம்மை தயங்கி நிற்க, முத்தாலம்மை நின்று அம்மையை அழைத்து ஊக்கப்படுத்தி உள்ளே அழைத்துச் சென்றாள். அம்மை உள்ளே நுழைந்ததும் வாத்தியங்களின் முழக்கம் எழுந்தது. உள்ளே இருந்தவர்கள் அனைவரும் பெருங்குரலில்அம்மே! மகாமாயே! தேவீ!” என்று கூவினர். தாசிப்பெண்கள் குரவையிட்டனர்.

சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரியும் ஏழு வைதிக நம்பூதிரிகளும் முன்னால் வந்து அம்மையை வரவேற்று உள்ளே அழைத்துச் சென்றனர். அம்மையை அவளுக்கான பீடத்தில் சிவாச்சாரியார் எடுத்து அமரச்செய்தார். அம்மைக்கு வலப்பக்கமாக முத்தாலம்மனும் சற்று பின்னால் பொல்லாப்பிள்ளையாரும் அமர்த்தப்பட்டார்கள்.

சிவீந்திரம் வட்டப்பாறை மடம் அச்சு மூத்தது எழுந்து அவையை வணங்கியதும் ஓசைகள் அணைந்தன. “சுபமங்களம்! எந்தெந்நால் இங்கே இன்றைக்கு மதுரை ஸ்ரீ மீனலோசனித் தாயாருக்கான கல்யாண மங்கல மகா உத்சவம் நடக்கப்போகிறதாலே உடைய தம்புரான் வேணாடுடைய மகாராஜா தலைமையிலே வேணும்பூஜைகளும் முறைபோலே நடக்க ஆவன ஒருக்கியிருப்பதனாலே ஒவ்வொருத்தரும் அவரவர் குலமுறைப்படியான பூஜைகளை கல்யாண மங்கலங்கள் முடிஞ்ச பின்னாலே செய்துகொள்ள வேணுமாய் கேட்டுக்கொள்ளப்படுகிறது. வேணும் சுபமங்களம்என்று அவர் சொல்லி கைகூப்பினார்.

திருவட்டாறு ஆதிகேசவப்பெருமாள் தங்கை மீனாம்பிகைக்கு ஐவகைப் பழங்களும், ஏழுவகை காய்களும், பன்னிருவகை மலர்களும்  அண்ணன் சீராகக் கொண்டுவந்திருந்தார். பொற்தாலங்களில் வைத்து அவற்றை அவளுக்கு அளித்தார். மூன்று தாலங்களில் மூன்று வண்ண வீராளிப் பட்டும், வைரம் பதித்த பொன்நகைகளும் அவரால் அலங்காரச்சீராக அளிக்கப்பட்டன. அதன்பின் சேரநிலத்து முறைப்படி அஷ்டமங்கலங்களும் தசபுஷ்பமும் அளித்து வாழ்த்தினார்.

மகாராஜாவும் சிவீந்திரம் வயக்கரை மடம் ஆரியன் நம்பூதிரிப்பாடும் ராமனாமடத்துப் பிள்ளை, மார்த்தாண்ட மடத்துப் பிள்ளை, குளத்தூர் பிள்ளை, கழக்கூட்டத்துப் பிள்ளை, செம்பழஞ்சிப் பிள்ளை, பள்ளிச்சல் பிள்ளை, குடமண் பிள்ளை, வெங்ஙானூர் பிள்ளை என எட்டு கோயிலதிகாரிகளும் பதினெட்டு மாடம்பிகளும், பதினெட்டு பிடாகைத்தலைவர்களும் அம்மைக்கு வணக்கம் செலுத்தியதும் சிவாச்சாரியார்கள் அம்மையின் முன் தாலத்தில் இருந்து மலரும் நீரும் எடுத்து கூட்டத்தின்மேல் வீசி பூஜை முடிந்ததை அறிவித்தனர்.

கொம்புகள் முழங்கின. அதைக்கேட்டு மணவாளனின் மனையின் முன்னால் நின்ற கொம்புகள் எதிர்முழக்கமிட்டன. வெளியே நின்றிருந்த அத்தனை மாரார்களும் செண்டைகள், திமிலைகள், முழவுகள், இடைக்காக்கள், கொம்புகள், இலைத்தாளங்கள் என முழக்க அப்பகுதியின் காற்றிலேயே தாளத்தை அலையலையென கண்ணால் பார்க்கமுடிந்தது. தொலைதூரத்து மலைகளின் கரும்பாறைப் பரப்புகள் தோல்படலங்கள் என விதிர்த்துக்கொண்டன.

நான் வெளியே சென்று சற்று விலகி அங்கே நிகழ்வன அனைத்தையும் பார்க்கும்படி நின்றேன். ஒவ்வொன்றையும் விழிகளால் தொட்டுத் தொட்டு எல்லாம் முறையாக நிகழ்கின்றனவா என்று பார்த்துக் கொண்டிருந்தேன். ஒவ்வொருவரும் அவரவர் கடமைகளில் தீவிரம்கொண்டு பிறரை மறந்து செயல்பட, அனைத்தும் ஒருங்கிணைந்து ஒற்றைச் செயல்பாடாக நடந்துகொண்டிருந்தது.

ஆதிகேசவப்பெருமாளின் சப்பரம் முதலில் மணப்பந்தலை விட்டு வெளியே வந்தது. தொடர்ந்து பரகோடி கண்டன் சாஸ்தாவின் சப்பரமும் வெளிவந்தது. ஆதிகேசவனின் கருடக்கொடியுடன் ஒருவன் முன்னால் சென்றான். அவனைத்தொடர்ந்து வாத்திய மேளங்களுடன் மாரார்கள். பின்னர் முன்நெற்றியில் முடிசுற்றிக் கொண்டை கட்டி, அவற்றின்மேல் பொற்சரடுகள் சுற்றிச் சரித்து, ஆரங்களும் மாலைகளும் மார்பிலணிந்த பட்டுமுலைக்கச்சைமேல் துவள, பட்டுத்துகிலை ஒட்டியாணத்தால் இறுக்கிய பாத்ரமங்கலம் தாசிகள் தாலப்பொலி ஏந்தியபடி சென்றனர். அவர்களுக்குப் பின்னால் நம்பூதிரிகளும் பரதேசப் பிராமணர்களுமாக இரண்டு நிரை வைதிகர்கள். அதன்பின் பொன்மின்னும் சப்பரத்தில் ஆதிகேசவன் எழுந்தருளினார்.

ஆதிகேசவனுக்குப் பின்னால் யானைக்கொடியுடன் பரகோடி கண்டன் சாஸ்தாவின் முன்னோட்டன் சென்றான். தொடர்ந்து சாஸ்தாவின் சிறிய சப்பரம் சென்றது. தாசிகளும் சிவாச்சாரியார்களும் இரு நிரைகளாகச் சென்றனர். பரகோடி கண்டன் சாஸ்தாவுக்கு பின்னால் மகாராஜாவின் தூதர்களாக திவான் ஜக்கால நாகமையாவும், உருவிய வாளுடன் தளவாய் நாராயணக் குறுப்பும் நடந்தனர். குடிமுறையின் பிரதிநிதிகளாக பதினெட்டு மாடம்பிகளும், எட்டு கோயிலதிகாரிகளும் உருவிய வாளை ஏந்தியபடி நடந்தனர். அவர்களுக்குப் பின்னால் பதினெட்டு குடிகளின் நூற்றெட்டு தலைவர்களும் கைகளில் மங்கலவரிசைகளுடன் சென்றனர்.

மணவாளன்மனையின் முன்னால் திருநெல்வேலியில் இருந்து வந்த மதுரைப்படை அணிவகுத்து நின்றிருந்தது. வேணாட்டுப் படைகளைப் போல அன்றி அவர்கள் மார்புகளில் தேய்த்து தெளிநீர் போல மின்னிய இரும்புக் கவசங்களும், பட்டாலான தலைப்பாகைகளும் அணிந்திருந்தனர். கைகளில் ஒளியாலான கூர் கொண்டவை போன்ற ஈட்டிகள். யானைகளே கூட பொன்னணி கொண்டு மிகப்பெரிய வண்டுகள் போல ஒளிர்ந்துகொண்டிருந்தன. முகப்பில் நின்ற பெரிய பிடியானை தங்கத்தால் ரேக்கிடப்பட்டது போலிருந்தது. பழுதுகுறை இல்லாத முழுமைகொண்ட வெண்புரவிகள் முகிலால் ஆனவைபோல தோன்றின. அவை வெள்ளிப்பட்டைகளும் வெண்கொக்கு இறகால் குஞ்சலங்களும் அணிந்து மின்னல்கோத்த உச்சிமேகங்கள் போலிருந்தன.

மதுரையின் கோல்காரன் கைகாட்டியதும் அங்கே வாத்தியங்கள் முழக்கமிட்டன. அவர்கள் அனைவரும் பாண்டிநாட்டிலிருந்து வந்தவர்கள். பன்னிரு தவில்கள் இடியோசை ஒத்திசைவு கொண்டு தாளமென்றானதுபோல் முழக்கமிட்டன. ஆறு நாதஸ்வரங்கள், அவற்றுடன் ஒத்து ஊதும் பன்னிரண்டு சுதிக்காரர்கள். கைமணி இசைப்பவர்கள் பன்னிருவர். அந்த இசை மயில்கள் அகவுவதுபோல, கன்று குரலெழுப்புவதுபோல, கன்னிப்பெண் கொஞ்சுவதுபோல  ஓங்கி எழுந்து தழைந்து குழைந்து ஒழுகியது. இசையை வெள்ளிச்சரடு போல, மின்னல்போல, அருவிபோல கண்ணால் பார்க்க முடியும் என்பதை அப்போதுதான் கண்டேன்.

அவர்களின் தாசிகள் கொண்டையை பின்னால் கட்டிச் சரியவிட்டிருந்தனர். அனைவருமே பச்சைப்பட்டுச் சேலைகளை சுற்றி உடுத்திருந்தனர். கொண்டைகளிலிருந்து முத்தாரங்கள் சரிந்து ஆடின. பொற்தாலங்களில் மலரும் கனிகளும் மற்ற மங்கலப்பொருட்களும் ஏந்தியிருந்தனர். அனைத்துமே தூயபொன் என சுடர்விலிருந்து தெரிந்தது. அவர்களுக்குப் பொன் என்பது அள்ள அள்ள குறையாமல் எங்கிருந்தோ கிடைப்பதுபோல. ஒவ்வொரு அசைவிலும் அவர்கள் மாபெரும் சாம்ராஜ்யத்தவர் என தெரிந்தது.

முகப்பில் சுந்தரேசனின் நந்திக்கொடி பொன்மூங்கிலில் ஏந்தப்பட்டு இளங்காற்றில் எழுந்து சிறகடித்து துவண்டபடி வந்தது. விஜயநகரத்தின் பன்றிக்கொடியும் பாண்டியநாட்டின் மீன்கொடியும் தொடர்ந்து வந்தன. அவர்களின் அணியூர்வலம் வெயிலில் ஒளிரும் ஆறுபோல, பொன்னும் வெள்ளியும் உருகி வழிந்து அணுகுவதுபோல நெருங்கி வந்தது. ஆதிகேசவனின் ஊர்வலம் அவர்களை முன்னர் வகுத்த இடத்திலேயே சந்தித்தது. வாத்தியங்கள் அடங்கி அமைதி உருவாகியது. சங்கொலி மும்முறை எழுந்தடங்கியது. ஒற்றை முழவு மட்டும் சீரான ஓசையெழுப்பிக்கொண்டிருந்தது.

ஆதிகேசவனின் நம்பி சப்பரத்தின்மேல் எழுந்து நின்று கைகளை வீசி சைகை செய்து சுந்தரேசனை வேணாட்டுக்கு வரவேற்றார். பின்னர் ஆதிகேசவனின் சப்பரத்தில் இருந்து வைரப்பதக்கத்துடன் கூடிய பொன்மாலை ஒன்றை சுந்தரேசனுக்கு அளித்தார். அதை சுந்தரேசனுக்குச் சூட்டிய சிவாச்சாரியார் வைரம் பதித்த கணையாழி ஒன்றை ஆதிகேசவனுக்கு எதிர்மரியாதையாக அளிக்க இளையநம்பி அதை ஆதிகேசவனுக்கு அணிவித்தார். ஆதிகேசவன் அளித்த பொற்பட்டு சுந்தரேசனுக்குப் போர்த்தப்பட்டது.

பரகோடி கண்டன் சாஸ்தா முன்னால் வந்து சுந்தரேசனுக்கு ஒரு மணிமாலையை அளித்தார். அவருக்கும் ஒரு கணையாழி அளிக்கப்பட்டது. சாஸ்தா அதை மகிழ்ச்சியுடன் எல்லா கைவிரல்களிலும் மாறி மாறி அணிந்தார். கூட்டத்தினர் சிரித்து கூச்சலிட்டு அதை கொண்டாடினர். சிவாச்சாரியார் கண்டன் சாஸ்தாவின் சார்பில்கொன்றைச் சுடர் அணையாத என் காட்டுக்கு வருகஎன்று அழைத்தார். சுந்தரேசர்ஆகுகஎன்று சொல்லி கையசைத்ததும் மூவருமாக மணப்பந்தல் நோக்கிச் சென்றனர்.

வெடித்தெழுந்ததுபோல் அத்தனை வாத்தியங்களும் முழக்கமிட்டன. “தென்னாடுடையோனே போற்றி. மூவிழிமுதல்வனே போற்றி! அழகனே போற்றி! அத்தா போற்றி! ஆடவல்லானே போற்றி!” என்று வாழ்த்தொலிகள் சூழ சுந்தரேசர் மீனாளை மணம்கொள்ள மணப்பந்தல் நோக்கிச் சென்றார்.

 [14 ]

நான் மணப்பந்தலைச் சுற்றிக்கொண்டு பின்பக்கம் சென்றேன். உள்ளே வாழ்த்தொலிகளும் மேளங்களும் முழக்கமிட்டுக் கொண்டிருந்தன. அந்த பந்தலே ஒரு முரசாக மாறிவிட்டதுபோல. பின்பக்கம் நூற்றுவன் காளன் பெருமல்லன் என்னை நோக்கி வந்தான். “எல்லாம் ஒழுங்கா நடந்திட்டிருக்காடே?” என்றேன்.

ஒருகுறையில்லை. இதுவரை சர்வமங்களம்என்று அவன் சொன்னான்.

ஆமா, இதுவரைஎன்று நான் சொன்னேன்.

அது என்ன பேச்சு உடையதே? இதுவரை நடத்தித் தந்த அம்மை இனி நம்மை கைவிடுவாளா?”

அதில்லடேஎன்றேன். “நான் மூணு யுத்தம் நடத்தியிருக்கேன். பத்திருபது உத்சவங்கள் நடத்தியிருக்கேன். நாலு கோட்டை கட்டியிருக்கேன். இப்டி மானுஷ யத்னங்கள் நடக்கிறப்ப நமக்கு ஒரு கர்வபங்கம் கண்டிப்பா உண்டு. பாத்துப்பாத்துச் செய்வோம். ஆனா கண்ணுக்கு முன்னாடி எதையோ காணாம விட்டிருப்போம். நான் நான்னு நினைச்சு நிமிருற நேரத்திலே சரியா அது வந்து பூதமா முன்னாலே நின்னுட்டிருக்கும். நம்மளைப் பாத்து இந்த பிரபஞ்சம் சிரிக்கிறதுதான் அது. நீ என்னடே மயிரு, சின்னப்பூச்சி, நான் ஏழுகடலும் ஒற்றைத் துளியா ஆகிற பெருங்கடலாக்கும்னு சொல்லுது அதுசரி பாப்போம்.”

ஒண்ணும் நடக்காதுஎன்று அவன் சொன்னான்.

நடக்கும். என்னமோ நடக்கும். கண்டிப்பா நடக்கும். நடக்காம இருக்கவே இருக்காது. அதைத்தான் பாத்திட்டிருக்கேன். நான் தெய்வத்தை தேடுறது அங்கேயாக்கும். ஒரு தப்பு, அதிலேயாக்கும் தெய்வம் முகம் காட்டுறதுஎன்றேன்.

கணேச சிவாச்சாரியார் வெளியே வந்தார். என்னை நோக்கி ஓடிவந்துஅங்கே சடங்குகள் இப்ப முடிஞ்சிரும். கன்யாகுமரி திருமஞ்சனநீர் வந்தாச்சா?” என்றார்.

வந்தாச்சு…” என்றேன். ஆனால் அதை மறந்துவிட்டிருந்தேன். திரும்பி மல்லனிடம்ஓடு, ஓடிப்போயி கன்யாகுமரி மஞ்சனநீர் எங்கேன்னு கேளுஎன்றேன்.

நானே அவன் பின்னால் ஓடினேன். அவன் முன்னால் ஓடி திரும்பி வந்துஉடையதே, அதெல்லாம் வந்து அங்கே தெக்குபந்தலிலெ இருக்கு. மீனவக்குடியிலே ஏழு பட்டக்காரங்களும் வந்து காத்திருக்காங்க…” என்றான்.

நீ இங்கே நில்லுஇந்த மஞ்சனநீர் ஏற்பாட்டை நீ பாத்துக்கோஎன்றேன்.

உத்தரவுஎன்றான்

நான் மீண்டும் உள்ளே நுழைந்தபோது மணப்பந்தலில் ஆதிகேசவனும் பரகோடி கண்டன் சாஸ்தாவும் அமர்ந்திருந்தனர். அப்பால் சுந்தரேஸ்வரர் நின்றிருக்க அவருக்கு முன்னால் சிவீந்திரம் ஆரியன் நம்பூதிரி நின்று பூஜைகள் செய்துகொண்டிருந்தார். சபையினர் எழுந்து நின்று வாழ்த்தொலி எழுப்பினர். மகாராஜா கைகூப்பி நின்றார்.

பூஜைகள் முடிந்ததும் சுந்தரேஸ்வரர் இருக்கை கொண்டார். மகாராஜாவின் இருபக்கமும் அவருடைய மைந்தர்களாக ஆதிகேசவனும் பரகோடி கண்டன் சாஸ்தாவும் நிலைகொள்ள அவர் அரியணையில் அமர்ந்திருந்தார்.

வாத்தியங்கள் அடங்கின. வாழ்த்தொலிகள் தணிந்து அமைதி உருவாகியது. சுந்தரேஸ்வரர் எழுந்து வந்து மகாராஜாவை வணங்கி,  நவமணிகளும் ,தங்கம் வெள்ளி செம்பு என முப்பொன்னும், மலரும் கனிகளும் படைத்து, வில்லும் வாளும் தாழ்த்தி அவர் மகளை மணம்கொள்ள விரும்புவதாக தெரிவித்தார்.

மகாராஜாஉன் பெயர் என்ன? உன் குலமென்ன? உன் பெற்றோர் யார்? உன் தகுதிகள் என்னென்ன?உன் இல்லம் எங்கே?” என்றார். அதை அவர் அருகே நின்ற பூசகர் அவர் பொருட்டு சைகை காட்டி கேட்டார்.

என் பெயர் அழகேசன். நான் குலமிலி. பெற்றோர் எனக்கில்லை. என் தலையில் நிலவும், காலடியில் மானும், கைகளில் உடுக்கும் தீயும் உள்ளது. நான் வாழுமிடம் சூரையங்காடுஎன்று சுந்தரேசர் பதில் சொன்னார்.

மகாராஜா மகளை அளிக்கமுடியாது என்று மறுத்தார். கைகளை வீசி மகடூஉ மறுத்துசெல்க செல்கஎன்று காட்டினார்.

செல்வதில்லை, பெண்ணுடனேயே செல்வேன், மணமகளைப் பெறவில்லை என்றால் மடலூர்வேன்என்று சுந்தரேஸ்வரர் சொன்னார். அவை சைகைகள் வழியாகச் சொல்லப்பட்டன. ஆகவே அனைவராலும் விழிகளால் கேட்கப்பட்டன.

உனக்கு என் பெண்ணை தரவேண்டுமென்றால் ஒரு சிறப்பையேனும் சொல்என்றார் மகாராஜா. பீடத்தில் தளிர்வாழைப் பூபோல செப்புச்சிலையாக அன்னை தலைகுனிந்து அமர்ந்திருந்தாள். அங்கு நிகழ்வன எதையுமே அறியாதவளாக. பொல்லாப்பிள்ளையாருக்கு அதிரசம் தீர்ந்துவிடவே அவர் கைநீட்டினார். ஒரு சிவாச்சாரியார் தட்டுடன் அதிரசங்களை படைத்தார்.

சுந்தரேஸ்வரர் தன்னுடைய சிறப்பைச் சொல்லும்படிச் சைகைகாட்ட அவருடன் இருந்த ஓதுவார்கள் கைக்கழியால் தாளக்கட்டையை தட்டியபடி மணமகனின் குலம், கொடிவழி, மலைச்சிறப்புகள், ஆகியவற்றை பாடினர்.

முளைத்தானை, எல்லார்க்கும் முன்னே தோன்றி

     முதிருஞ் சடைமுடிமேல் முகிழ்வெண் திங்கள்

வளைத்தானை, வல்லசுரர் புரங்கள் மூன்றும்

     வரைசிலையா வாசுகிமா நாணாக் கோத்துத்

துளைத்தானை, சுடுசரத்தால் துவள நீறாத்

     தூமுத்த வெண்முறுவல் உமையோடு ஆடித்

திளைத்தானை, தென்கூடல் திரு ஆலவாய்ச்

     சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே!

 

விண்ணுலகின் மேலார்கள் மேலான் தன்னை

     மேல் ஆடு புரம் மூன்றும் பொடி செய்தானை

பண் நிலவு பைம்பொழில் சூழ் பழனத்தானை

      பசும் பொன்னின் நிறத்தானை பால் நீற்றானை

உள்நிலவு சடைக்கற்றைக் கங்கையாளைக் கரந்து

     உமையோடு உடன் ஆகி இருந்தான் தன்னை

தெள்நிலவு தென்கூடல்திரு ஆலவாய்ச்

     சிவனடியே சிந்திக்கப் பெற்றேன் நானே.

மகாராஜா தன் மகள் மீனாம்பிகை தேவியின் சிறப்பைச் சொல்லும்படி பாணர்களுக்கு ஆணையிட்டார். அவர்கள் சிறுபறையை மீட்டியபடி பாடினர்.

ராஜமாதங்கி சியாமளே! மகாசாகர ஹரிதவர்ணே!

மரகதவல்லி தடாதகே! அபிஷேகவல்லி மகாமாயே!

அபிராமவல்லி, கற்பூரவல்லி, ஸ்ரீ மதுராபதி நிலையே!

தடாதகே மீனாக்ஷி சமுத்ரஜன்யே! தேவீ நமஸ்துப்யம்!

என்று ஒரு பாணன் மலையாண்மையில் பாடி முடித்ததுமே இன்னொருவர்

குமரித்துறை மலர்ந்த மலரே, கோமகளே, சுந்தரவல்லி அன்னையே!

பாண்டிநிலத் தலைவி மதுரை நிலையமர்ந்த மாதரார்க்கரசி தாயே,

மாணிக்க மணிமானே மும்முலை திருவழுதி மகளே,

ஆலவாயழகர் உளம்கவர் கன்னி அங்கயற்கண் அழகியே வாழ்க!”

என்று தொடர்ந்து பாடினார். சம்ஸ்கிருதத்திலும் மலையாண்மைத் தமிழிலுமாக மாறிமாறி அன்னையின் பெருமையைப் பாடினார்கள்.

மகாராஜாஎன் மகளுக்கு என்ன சீர் செய்வீர்கள்?” என்று கேட்டார்.

வெள்ளிப்பனிமலை ஒன்று மணிமுடியாக. வீழும் கங்கைப் பேராறு ஒன்று மேலாடையாக. கூனலிளம்பிறை ஒன்று  கூந்தல் மலராக. மானுண்டு மழுவுண்டு காவலாகஎன்றார் ஓதுவார்.

என் மகளுக்கு என்ன கொண்டு வந்தீர்கள்?”என்றார் மகாராஜா.

விண்ணில் இருக்கும் இருசுடரும், மண்நிறைய ஓடும் பன்னிரு பேராறுகளும், பனிமலையும் நடுமலையும் தென்மலையும் என கொடுமுடிகள் மூன்றும், பாதாளமும், பைந்நாகமும், அதில் ஊறிய நஞ்சும் கொண்டு வந்தோம், ஏற்றருளல் வேண்டும்என்று ஓதுவார் சொன்னார்.

மகாராஜா ஆதிகேசவனைப் பார்க்க அவர் ஏற்றுக்கொள்ளும்படி கைகாட்டினார். பரகோடி கண்டன் சாஸ்தாவும் ஆகுக என்று சைகை காட்டினார்.

மகாராஜா சீர்களைப் பெற்றுக்கொள்ள ஒப்புக்கொண்டார். சிவாச்சாரியார்கள் கைகாட்ட வாத்தியங்களும் குரவையொலியும் வாழ்த்தொலிகளும் மீண்டும் முழக்கமிட்டன.

சுந்தரேஸ்வரர் அளித்த சீர்களை மகாராஜா பெற்றுக்கொண்டார். மகாராஜா கைகாட்ட பரகோடி கண்டன் சாஸ்தா சென்று மணப்பந்தலில் பீடத்தில் அமர்ந்திருந்த மீனாக்ஷியன்னையிடம் மணவறைக்கு வரும்படிச் சொன்னார். அன்னை நாணத்தால் மறுக்க, முத்தாலம்மன் அவள் முகவாயை பிடித்து கொஞ்சியும் கெஞ்சியும் எழச்செய்தாள். முத்தாலம்மன் முன்நடத்த ,பிள்ளையார் பின்னால் செல்ல, அன்னை தலைகுனிந்து மிகமெல்ல நடந்து வந்து நின்றாள்.

சிவீந்திரம் ஆரியன் நம்பூதிரிப்பாடு முன்னின்று நடத்த, சிவாச்சாரியார்கள் அருகே நிற்க, சுந்தரேசன் பொற்தாலத்தில் அளித்த பச்சைப்பட்டுப் புடவையையும் காசுமாலையையும் மீனாக்ஷியம்மை பெற்றுக்கொண்டாள். அன்னை நிமிர்ந்து பார்க்கவே இல்லை. முத்தாலம்மை நிமிர்ந்து பார்க்கும்படிச் சொல்லி தோளை உந்த அவள் மேலும் குனிந்துகொண்டாள்.

பெண்களின் குரவையொலிகள் சூழ, மங்கல இசை செவிநிறைக்க,  அந்த சடங்கு மெய்யாகவே அங்கே ஓர் ஆணும்பெண்ணும் மணம்கொள்கிறார்கள் என எண்ணச் செய்தது. அனைவரும் அந்நிகழ்வுக்குள் சென்றுவிட்டிருந்தனர். அத்தனை முகங்களும் மலர்ந்திருந்தன. அங்கிருந்தோரில் சற்றே விலகி அனைத்தையும் நோக்கியவன் நான் ஒருவனே என்று தோன்றியது.

புடவையுடன் மீனாக்ஷியன்னை வெளியே வந்தாள். முத்தாலம்மை இட்டுச்செல்ல, பிள்ளையார் குடுகுடுவென்று பின்தொடர, வெளியே திருமஞ்சனத்திற்கு அமைக்கப்பட்டிருந்த பந்தலை நோக்கிச் சென்றாள். மணப்பந்தலில் இருந்து எவரும் வெளியே வரவில்லை. சிவாச்சாரியார்கள் சப்பரத்தில் அன்னையை கொண்டுசெல்ல, முன்னால் சங்கு ஊதியபடி ஒரு மாரார் நடந்தார். அவரைத் தொடர்ந்து இடைக்காவை முழக்கியபடி இன்னொருவர் சென்றார். ஒருவர் கைமணியை மீட்டியபடி தொடர்ந்தார்.

திருமஞ்சனப் பந்தல் முன் நின்றிருந்த மீனவக்குடியின் பட்டக்காரர்களில் மூத்தவர் மூவர் முன்னால் வந்து மீனலோசனியை வரவேற்றனர். அவர்கள் கொண்டுவந்திருந்த மலர்மாலைகள் அம்மைக்குச் சூட்டப்பட்டன. அவர்களுக்கு அம்மை அவள் பெற்ற புடைவையை காட்டினாள். அவர்களில் மூத்தவர் அதை வாங்கி அதன் சரிகையையும் வண்ணத்தையும் வியந்து மற்றவர்களிடம் காட்டினார். அவர்கள் அதை பாராட்ட, அன்னை பெருமையும் நாணமுமாக நின்றாள்.

அதன்பின் மீனாக்ஷியம்மை துணிகளால் மறைக்கப்பட்டிருந்த சிறிய கொட்டகைக்குள் சென்றாள். புதிய மண்குடங்களில் கொண்டுவரப்பட்டிருந்த திருமஞ்சனநீர் அந்தக் கொட்டகைக்குள் கொண்டுசெல்லப்பட்டது. திருமஞ்சன நீராட்டு நிகழ்கையில் ஆண்கள் எவரும் பார்க்க ஒப்புதல் இல்லை. அன்னையை நீராட்டி அணிசெய்யும் சிவாச்சாரியார்கள் மூவர் தங்கள் ஆடைக்குமேல் புடவையைச் சுற்றிக்கொண்டு தலையில் மலர்ச்சரம் சூடி பெண்களாக மாறினார்கள்.

முத்தாலம்மையும் அவர்களும் புடவைமறைப்புக்குள் செல்ல பிள்ளையார் உள்ளே செல்ல விரும்பி புடவைமறையை தூக்கி முண்டியடித்தார். அவரிடம் மீனவகுலப் பெரியவர்கள் சொல்லி புரியவைக்க முயன்றனர். அவர் அவர்களை மண்டையால் முட்டவந்தார். சிவாச்சாரியார் ஒரு கழியுடன் வெளியே வந்து அவரை அதட்ட, அவர் மிரண்டு வெளியே காவலிருக்க ஒப்புக்கொண்டார். அதற்கு அவருக்கு ஒரு மோதகம் அளிக்கப்பட்டது.

இடைக்காவும் கைமணியும் ஒலித்துக்கொண்டே இருக்க மஞ்சனநீராட்டு முடிந்ததும் சிவாச்சாரியார்கள் மணியோசையை எழுப்பினர். மீனவப் பட்டக்காரர்கள்தென்குமரித்துறைவி வாழ்க! மீன்கொடியம்மை வாழ்க! மீன்விழியம்மை வாழ்க! தென்கடல்கொண்டாள் வாழ்க! தென்னவள் வாழ்க! பண்டையோள் வாழ்க! மீனவன் செல்வி வாழ்க!” என்று குரலெழுப்பி வாழ்த்தினர்.

அவர்களுடன் வந்த மீனவக்குடிகள் சற்று அப்பால் நின்றிருந்தனர். அவர்கள் தங்கள் கைக்கோல்களுடனும் கொடியடையாளங்களுடனும் வந்து நிரைவகுத்தனர். சுந்தரேசர் அளித்த பச்சைப்பட்டு அணிந்து அன்னை வெளிப்பட்டாள். வாழ்த்தொலிகளைக் கூவியபடி மீனவர்க்குடிகள் அன்னையை பெற்றுக்கொண்டனர். அவர்கள் சப்பரத்தை தூக்க, அன்னை மணப்பந்தலை நோக்கிச் சென்றாள்

சிவாச்சாரியார் புடவையைக் கழற்றியபடி என்னிடம்அணியறைக்குப் போய் நகையெல்லாம் பூட்டிக்கிட்டு அம்மை பந்தலுக்கு வருவாஎன்றார். “அங்கே எல்லா நகையும் சித்தமா இருக்கு

நான் மணப்பந்தலை நோக்கிச் சென்றேன். இனி மிஞ்சுவதென்ன, மங்கலநாண் பூட்டுவது மட்டும்தான். அதற்கு என்னென்ன தேவை? முதலில் மங்கலநாண். பின்னர் மங்கலப்பொருட்கள். ஒவ்வொன்றையும் இன்னொருமுறை சீர்நோக்கவேண்டும்.

நான் மணப்பந்தலைச் சுற்றிக்கொண்டு வலப்பக்க வாசல் வழியாகச் சென்று நின்றேன். மகாராஜாவின் அருகே நின்றிருந்த கொட்டாரம் ராயசம் கிருஷ்ணப்பையரைப் பார்த்தேன். ஒருவரை கூர்ந்து பார்த்தாலே அவர் நம்மை பார்த்துவிடுவார். கிருஷ்ணப்பையர் என்னிடம் வந்து தலை தணிந்தார்.

மங்கல நாண்பூட்டுக்கு தேவையான பொருட்கள் என்னென்ன? மங்கல நாண் முதல் வெற்றிலை, பாக்கு, கண்ணன் தேங்காய் வரை நாப்பத்தேழு எண்ணம். எல்லாத்தையும் மாதேவன் பிள்ளை கையிலே இருக்கிற ஓலையிலே எழுதியிருக்கேன். அறுதியா ஒருக்கா எண்ணிடுங்கஒரு தப்பும் நடக்கக்கூடாதுஎன்றேன்.

எண்ணிடுதேன்என்றார்.

மகாராஜா என்னைப் பார்த்து அருகே வரும்படி கைகாட்டினார். நான் அருகே சென்று பணிந்தேன். “எல்லாம் ஒழுங்கா போகுதா சர்வாதிக்காரரே?” என்றார்.

அடியேன், ஒரு குறையும் இல்லை. புடவைகொடை முடிஞ்சாச்சு. இனி மங்கலநாண்பூட்டு முடிஞ்சா எல்லாம் நிறைஞ்ச மாதிரிஎன்றேன்.

எல்லாம் பாத்துக்கணும்மங்களமா முடியணும்.”

நான் தலைவணங்கினேன்.

என்னமோ படபடப்பா இருக்குஅம்மை மனசிலே என்ன நினைச்சிருக்கான்னே தெரியல்லை.”

அடியேன். நாம அம்மையை நம்பவேண்டியதுதான்வேறென்ன சொல்ல?”

அப்பால் ஹோமக்குண்டத்தில் எரி மூட்டப்பட்டு இருபக்கமும் நம்பூதிரிகள் அமர்ந்து மந்திரம் ஓதிக்கொண்டிருந்தனர். நெய்ப்புகை நடுவே சுந்தரேசர் நின்றிருந்தார். புகை விலக அவ்வப்போது பொன்னொளிர் முகம் தெரிந்து தெரிந்து மறைந்தது. விக்ரகங்களில் இருக்கும் சிரிப்பு அசையாச்சுடர் போல.

திவான் நாகமையா ஓடிவந்துவேணும் சுபம். பெண்ணுக்கு தந்தை மணைக்கு வந்து உக்காரவேண்டிய நேரம்என்றார்.

மகாராஜா எழுந்துகொண்டார். நான் வெளியே சென்றேன். வேள்வி மந்திரங்களும், தோளுக்குத் தோள் முட்ட நிறைந்திருந்த அவையின் மொத்தமான முழக்கமும் வெளியே கேட்டன. வெளியே வெயில் மரக்கூட்டங்களுக்கு அப்பால் வெள்ளைத்துணி கட்டியிருப்பதுபோல தெரிந்தது. பறவையொலிகள் குறையத் தொடங்கியிருந்தன. அவை மெல்லமெல்ல மரக்கிளைகளின் நிழல்களுக்குள் சென்று அமைந்து கொண்டிருந்தன.

ஹோமம் முடிந்து திருமண மந்திரங்களும் அதையொட்டிய துணைச் சடங்குகளும் முடிய இன்னும் பொழுதாகும். நான் மெல்ல நடந்து காட்டின் விளிம்பை அடைந்தேன். கீழே படைவீரர்களின் வேலிகளால் தடுக்கப்பட்டு மக்கள் திரளாக நின்றிருந்தார்கள். அவர்கள் மேலிருந்து பொழிந்த வெயிலைப் பொருட்படுத்தவில்லை. முகங்கள் மிகையான ஒளியில் நிழலடித்தவைபோல தெரிந்தன. ஆனால் தலைப்பாகைகளும் வெள்ளை ஆடைப்பரப்புகளும் கண்களை குத்துவதுபோல எதிரொளிசெய்தன.

மேலும் ஏறியபோது மக்கள் திரளை ஒட்டுமொத்தமாகக் கண்டேன். பெருந்திரள் ஒரு திரவ வடிவை அடைந்துவிட்டிருந்தது. அதில் மெல்லிய அலை நிகழ்ந்தது. அதன் விளிம்புகள் எல்லைகளில் முட்டித் ததும்பிக்கொண்டிருந்தன.

அத்தனைபேருக்கும் சத்யவட்டம் ஏற்பாடாகியிருந்தது. மொத்தம் நாற்பத்தெட்டு இடங்களிலாக நூற்றைம்பது கொட்டகைகளில் விருந்து. அவை அனைத்தையும் கோயிலில் இருந்து மிகவும் தள்ளி அமைக்கவேண்டுமென்று சொன்ன ஆரல்வாய்மொழி கோட்டை எஜமானனின் நுண்மதியை நினைத்துக்கொண்டேன். அந்த ஊட்டுபுரைகள் அருகில் இருந்திருந்தால் நிகழும் அமலிக்கும் கட்டுப்பாடின்மைக்கும் அளவே இருந்திருக்காது. வேணாட்டின் மொத்த படைகளும் இணைந்தால்கூட அவர்களை ஆட்சிசெய்திருக்க முடியாது.

மேலும் மேலேறிச்சென்று செங்குத்துப்பாறை ஒன்றின் மேல் நின்று சுற்றிலும் பார்த்தேன். வடகிழக்காக ஆரல்வாய்மொழிக் கோட்டை. அங்கிருந்து அலைகொண்ட கூட்டம் கோயிலைச் சூழ்ந்திருந்தது. தென்மேற்காக ஊட்டுபுரைகளின் நிரை. எல்லா சமையல் கொட்டகைகளில் இருந்தும் புகை மேலேறி முகில்துணுக்குகள் போல வானில் கரைந்துகொண்டிருந்தது. ஊட்டுபுரைகளில் இருந்து ஊட்டுபுரைகளுக்கு தொடுத்துக்கொண்டு சென்ற மண்பாதைகள் சென்று பெரிய வண்டிச்சாலையில் இணைந்தன. புதர்க்காட்டுக்குள் புதிதாக வெட்டப்பட்ட அந்தச் சாலைகள் கலங்கல் நீர் ஓடும் ஓடைகள் போல தெரிந்து தெரிந்து மறைந்தன.

ஆரல்வாய்மொழிக்குள் நுழையும் பாதையை இரண்டாகப் பிரித்திருந்தனர். நுழைவதற்கு கிருஷ்ணன்கோயில். கோட்டாறு, தோவாளை வழியாக வரும் மையப்பாதை. திரும்பிச் செல்வதற்கு பூதப்பாண்டி, நவல்காடு சென்று அங்கிருந்து வெவ்வேறு ஊர்களுக்கு பிரியும் பாதைகள். ஆகவே வரும்கூட்டமும் செல்லும் கூட்டமும் முட்டிக்கொள்ளவில்லை. ஆனால் தோவாளையில் இருந்து வந்துகொண்டிருந்த திரள் குறையவே இல்லை. வண்டிகளும் குதிரைகளும் வருவதற்காக பாதையின் பாதியை ஒதுக்கியிருந்தனர். எஞ்சிய பாதிச்சாலையில் தோளோடு தோள்முட்டி ஓடைபெருகி வருவதுபோல வந்துகொண்டே இருந்தனர்

நான் பெருமூச்சுவிட்டேன். வேணாட்டின் வரலாற்றில் இப்படியொரு விழா நடைபெற்றதில்லை. திருவட்டார் ஆறாட்டும் சிவீந்திரம் தேரோட்டமும் இதற்கு முன்னால் வெறும்  குடும்ப நிகழ்வுகள் போல. இத்தனை பெரிய நிகழ்வில் இருபது கைகால்களால் இருநூறு இடங்களில் திகழ்ந்து நான் ஆற்றிய பணி என்பது ஒரு சிறு பகுதிதான். காவல் ஏற்பாடுகளைச் செய்தவர்கள், சமையல் ஏற்பாடுகளைச் செய்தவர்கள் ஒவ்வொருவருக்கும் சொல்வதற்கு என்னைவிட பலமடங்கு கதைகள் இருக்கும். வேணாடு முழுக்க அப்படி ஒவ்வொருவரும் ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருக்கிறார்கள்.

இந்தப் பெருநிகழ்வில் எப்படி முழுமையை அடையமுடியும்? இது ஒற்றைநிகழ்வு. ஆனால் பல ஆயிரம் பல லட்சம் தனிநிகழ்வுகள். ஒவ்வொன்றும் ஒன்றுடனொன்று தொடர்புகொண்டால் கோடானுகோடி நிகழ்வுகள். இதை எவர் ஆளமுடியும்? அது தெரிந்திருக்கிறது அனைவருக்கும். மனிதனால் இயல்வதெல்லாம் வேண்டிக்கொள்வது ஒன்றுதான். ஆனால் அதையும் மீறி தன்செயல் முழுமை அடையவேண்டுமென நினைக்கிறான். பிழை நிகழும். அப்பிழைக்குப் பொறுப்பேற்கவும் வரலாம். ஆனால் பிழை தன்பிழையல்ல என்று எண்ணுமளவுக்கு அகம் கனிந்திருப்பதே விடுதலை.

ஆனால் இதையெல்லாம் எவரிடம் சொல்லிக் கொண்டிருக்கிறேன்? என்னிடம்தான். நான் நான் எனத்தருக்கும் என் அகத்திடம். இந்த மாபெரும் திரளில் ஒருவனாக ஆகமுடியாமல் அலைக்கழியும் என்னுடன்.

கீழே மணப்பந்தலில் ஹோமப்புகை குறைவதைக் கண்டேன். ஆடைகளைச் சீரமைத்துக்கொண்டு விரைந்து இறங்கி மணப்பந்தல் நோக்கிச் சென்றேன். அங்கே மங்கல இசைகள் எழுந்தன. குரவையோசை உடனெழுந்தது.

நான் மண்டபத்தின் வாசலில் நின்று உள்ளே பார்த்தேன். சிவாச்சாரியார்கள் மீனாட்சியையும் சுந்தரேஸ்வரரையும் சப்பரங்களில் சுமந்தபடி மணப்பந்தலில் அங்குமிங்கும் ஓடினார்கள். சுந்தரேசர் பெரிய மலர்மாலையுடன் மீனலோசனியை துரத்த, அவள் நாணத்துடன் தப்பி ஓட, ஊடாக பொல்லாப்பிள்ளையார் நுழைந்து சுந்தரேசனைத் தடுத்தார். முத்தாலம்மை பின்னால் நின்று தேவியை பிடித்து ஓடாமல் நிறுத்த முயன்றாள். ஆதிகேசவனும் பரகோடி கண்டன் சாஸ்தாவும் ஆடிக்கொண்டிருந்தனர்.

சுந்தரேசர் மாலையை வலுக்கட்டாயமாக அன்னைக்கு அணிவித்ததும் அத்தனை வாத்தியங்களும் உச்சத்தில் முழங்கின. “சிவசிவ சம்போ! ஹரஹர சம்போ!” என்ற ஓசை அவையில் இருந்து எழுந்தது. கீழே தொலைவில் திரண்டிருந்த மக்கள் திரளில் இருந்து அந்த ஓசை சொல்லற்ற பெருமுழக்கமாக எழுந்து வானிலிருந்து என மணப்பந்தல்மேல் பொழிந்தது.

முத்தாலம்மை மீனாக்ஷியை பிடித்து நிறுத்த, ஆதிகேசவன் அருகே வந்து சுந்தரேசருக்கு மாலை அணிவிக்கும்படி சொன்னார். அன்னை தயங்க, பரகோடி கண்டன் சாஸ்தா அருகிருந்து மீண்டும் அதைச் சொன்னார். தயங்கி பின்னடைந்து, மீண்டும் முன்னால் வந்து, மீண்டும் பின்னடைந்து அன்னை அலைமோதினாள். பின் நாணத்தை வென்று முன்னால் சென்று மாலையை சுந்தரேசனுக்கு அணிவித்தாள்.

சக்தீ! தேவீ! மகாமாயே!” என்ற கூக்குரல் சபையில் இருந்து எழுந்தது. மாலையை அணிவித்த பின் அம்மை அங்கேயே நாணி நின்றாள். சுந்தரேசர் தன் மாலையை கழற்றி அன்னைக்கு அணிவித்தார். அவர்கள் மும்முறை மாலை மாற்றிக்கொண்டதும் ஆதிகேசவப்பெருமாள் அன்னையை கைப்பற்றி அழைத்து மணமேடைக்குக் கொண்டு சென்றார்.

மணமேடை மஞ்சள்பட்டு விரிக்கப்பட்டு, அதன்மேல் சந்தனமணைகள் போடப்பட்டு அலங்கரிக்கப்பட்டிருந்தது. ஏழு பொற்பறைகளில் பொன்னிற நெல் குவிக்கப்பட்டு, அவற்றின்மேல் நடப்பட்ட பொன்மணிகளென பொலிந்த தென்னைப்பூங்குலைகள் மலர்விரிவதுபோல மடலவிழ்ந்திருந்தன. ஏழுதிரியிட்ட மூன்று குத்துவிளக்குகள் சுடர்கொண்டிருந்தன. மலர்த்தாலங்களும் கனித்தாலங்களும் நிறைநீர்ப் பொற்குடங்களும் பரப்பப்பட்டிருந்தன. அஷ்டமங்கலத் தாலங்கள் எட்டு வரிசையாக அமைக்கப்பட்டிருந்தன.

சிவாச்சாரியார்கள் இருவர் சென்று மகாராஜாவை அழைத்து வந்தனர். அவர் மணமேடையில் சந்தனமணை மேல் கைகளைக் கூப்பியபடி கண்ணீருடன் அமர்ந்தார். அன்னையின் செப்புச் சிலை சப்பரத்தில் இருந்து எடுக்கப்பட்டு அவருடைய வலத்தொடைமேல் வைக்கப்பட்டது. சிவாச்சாரியார் ஒருவர் மகாராஜாவுக்குப் பின்னால் அமர்ந்து அதைப் பிடித்துக் கொண்டார். மகாராஜாவுக்கு வலப்பக்கம் ஆதிகேசவப்பெருமாள் அமர்ந்தார். இடப்பக்கம் பரகோடி கண்டன் சாஸ்தா. மகாராஜாவுக்குப் பின்பக்கம் கன்யாகுமரியிலிருந்து வந்திருந்த மீனம்மையின் உறவினர்களான மீனவப் பட்டக்காரர்கள் நின்றிருந்தனர்.

மகாராஜாவுக்கு முன்னால் இடப்பட்ட சந்தன மணையில் சுந்தரேசர் அமர்ந்தார். அவருக்கு வலப்பக்கம் தளவாய் ரெட்டூரி வெங்கப்ப நாயக்கரும் இடப்பக்கம் தக்ஷிணாதி மடத்து சுவாமி நாராயண பட்டாச்சாரியரும் பின்பக்கம் ராயசம் ஸ்ரீ அக்குண்டி விஜயரங்கையாவும் அமர்ந்தனர். வெங்கப்ப நாயக்கர் கண்ணீர் வடித்தபடி கைகூப்பி அமர்ந்திருந்தார். அவர்களுக்குப் பின்பக்கம் சுந்தரேசருக்கு உறவினராக கொண்டையத் தேவரின் வழிமுறையினரான ஏழு முதிய மறவர்கள் தங்கள் வழக்கப்படி பச்சைப்பட்டு உடுத்து நின்றனர்.

அவர்களுக்கு எதிரே அமர்ந்த மகாப்பிராமணரான சிவீந்திரம் ஆரியன் நம்பூதிரிப்பாடும் அவருடன் வந்த நம்பூதிரிகளும் மணச்சடங்குகளை நடத்திவைத்தனர். சேரநாட்டு தொல்முறைப்படி நிகழும் திருமணம். ஒவ்வொரு சடங்காக நடந்தது. மணமகள் மணமகனின் கால்களில் மலரிட்டு வணங்கினாள். மணமகன் மணமகள் தலையில் மஞ்சளரிசி இட்டு வாழ்த்தினார். மணமகளுக்கு மணமகன் கணையாழி அணிவித்தார். மணமகள் மணமகனுக்கு மறு கணையாழி அணிவித்தாள். மணமகன் மணமகளின் தந்தையை வணங்கி மணமகளை அளிப்பதற்கு நன்றி தெரிவித்தான். மணமகளின் தந்தை தன் மகளின் உச்சி முகர்ந்து மலர் சூட்டி வாழ்த்தினார். அவள் நெற்றியில் குங்குமமும் கன்னங்களில் சந்தனமும் இட்டுவிட்டார். மங்கலநாண் இட்டபின் அவர் தன் மகளைத் தொடமுடியாது. ஆகவே அது அவர் கடைசியாக அவளைத் தொடுவது.

நான் கூட்டத்தைப் பார்த்தேன். அத்தனை முகங்களும் ஓருணர்வில் இருப்பதைக் கண்டேன். பெண்கள் பலர் கண்ணீர் வடித்துக் கொண்டிருந்தனர். முதியவர்களின் கூப்பிய கைகள் நடுநடுங்கின. என் நெஞ்சிலும் வயிற்றிலும் ஒரு பதற்றம்தான் நிறைந்திருந்தது. அது ஏன் என்று தெரியவில்லை. ஆனால் பெரிய நண்டு போல கைகளால் கொடுக்குகளால் அது என்னை கவ்விக்கொண்டிருந்தது. அல்லது சிலந்தி. என் நரம்புகளின் முடிச்சுமையத்தில் அமர்ந்திருந்தது அது. மணமேடையில் மணமகளின் ஆடையையும் மணமகனின் ஆடையையும் சேர்த்து முடிச்சிட்டனர். அதற்கு குரவையொலி எழுந்தது.

பொன்னாலான மங்கலநாண் மஞ்சளரிசித் தாலத்தில் பொன்னாலான தேங்காய்மேல் கட்டப்பட்டு அவையைச் சுற்றிவந்தது. பூர்ணாலங்காரம் அணிந்த மூன்று தாசிப்பெண்கள் அதை மூத்தவர்கள் ஒவ்வொரிடமாக கொண்டுசென்றனர். அவர்கள் அதை தொட்டு வாழ்த்தினர். மஞ்சளரிசியை கைகளில் எடுத்துக் கொண்டனர். நான் ஏனோ அங்கிருந்து செல்ல எண்ணினேன். என் வேலைகள் முடிந்துவிட்டன. அங்கிருந்து ஓடிவிடவேண்டும். ஆரல்வாய்மொழி மலைகளில் ஒன்றின் உச்சியில் ஏறி நின்றுகொள்ள வேண்டும். தன்னந்தனிமையில், மேகங்களுக்கு நடுவே. இன்னொரு மனிதக்குரல் என் செவிகளில் விழக்கூடாது. இன்னொரு மனிதனை நான் பார்க்கக்கூடாது.

மெய்யாகவே என் விழிகள் திரையிட்டுக்கொண்டன என்று தோன்றியது. நான் எவரையும் பார்க்கவில்லை. அங்கே இருந்த திரள் பிம்பங்களாக உருகிக்கரைந்து வெற்று வண்ணங்களாகிவிட்டது. அங்கே எழுந்த ஓசைகள் இணைந்து ஒரு பானைமுழக்கமென ஆகி என்னைச் சூழ்ந்தன. தன்னந்தனிமையில் நான் நின்றிருந்தேன். என் கால்கீழே ஆழத்தில் ஏதோ நிகழ்ந்துகொண்டிருந்தது. இல்லை, இது வெறும் துயில்களைப்பு. நான் படுத்து தூங்கி மூன்று நாட்களாகின்றன.

மேளம் உச்சமடைந்தது. நான் திரும்பிப் பார்த்தேன். பொற்தாலத்து தாலியை எடுத்து சுந்தரேசர் மீனாம்பாளின் கழுத்தில் அணிவித்தார். மஞ்சளரிசி அலையலையாக எழுந்து பொழிந்தது. குரவையொலியும், வாழ்த்தொலியும், வாத்தியங்களின் பெருமுழக்கமும் எழுந்து சூழ்ந்தன. எட்டு திசைகளில் இருந்தும் எதிரொலி எழுவதுபோல வாழ்த்தோசை வந்து மணப்பந்தலை அறைந்தது. பொன்மணித் தாலி அணிந்து நாணத்தால் முகம்கூம்பி விழிதழைத்து அமர்ந்திருந்தாள் மீனம்மை. ஒருகணம் என் உடல் உலுக்கிக் கொண்டது. பின்னர் கைகால்கள் முற்றிலும் தளர்ந்தன. நான் அப்படியே சுவரில் சாய்ந்து நிலத்திலமர்ந்து வாய்விட்டு அழத்தொடங்கினேன்.

[ 15 ]

நான் இரவு மிகவும் பிந்தியபிறகுதான் வந்து படுத்தேன். படுப்பதற்கான இடம் தேடி அலைந்தேன். எங்கே படுத்தாலும் எவரோ தேடி வந்துவிடுவார்கள் என்று தோன்றியது. அலைந்து மலைமேல் ஏறி அந்த இடத்தைக் கண்டடைந்தேன். அது காவலனுக்காக கட்டப்பட்ட ஓலைக்குடில். உள்ளே ஒருவன் படுக்கத்தக்க கயிற்றுக்கட்டில். அங்கே இரண்டு காவலர்கள் வில்லம்புகளுடன் காவலிருந்தனர்.

நூற்றுவன் காளன் பெருமல்லனிடம் நான் அங்கிருக்கும் செய்தியை அறிவித்து, தேவை என்றால் மட்டும் பிறருக்குத் தெரிவிக்கும்படிச் சொல்லிவிட்டு படுத்தேன். ஆனால் முழுவிசையுடன் ஓடிக்கொண்டிருந்த குதிரைகளை இழுத்து நிறுத்த முடியாமல் என் தேர் சென்றுகொண்டே இருந்தது. என் வேகம் தொடங்கி எட்டு நாட்களாகிவிட்டன. எட்டே நாளில் இத்தனைபெரிய விழாவை ஒருங்கிணைத்து நடத்தி முடிப்பதென்பது பத்துநாட்களுக்கு முன் என்னிடம் சொல்லியிருந்தால் நானே நம்பியிருக்கமுடியாதது. ஆனால் நடந்துவிட்டது. எல்லாம் மீனலோசனியின் அருள்.

ஒவ்வொன்றாக எண்ணிப் பார்த்துக்கொண்டே இருந்தேன். நடந்தவற்றில் குறையேதுமிருந்ததா, பிழை ஏதும் நடந்ததா? பாணிகிரகணம் முடிந்ததுமே சுந்தரேசனும் மீனாக்ஷியும் ஏழு அடி எடுத்து வைத்தனர். மூதாதையரை வணங்கினர். அப்பன் சுட்டிக்காட்ட அம்மை அருந்ததியை பார்த்தாள். கைத்தலம் பற்றிச் சுற்றி வந்து அவையை வணங்கியபின் அவர்கள்  பீடங்களில் அமர்ந்தனர். அவர்களுக்கு இருபக்கமும் ஆதிகேசவனும் பரகோடி கண்டன் சாஸ்தாவும் அமர்ந்தனர். தேவிக்குத் தோழியாக முத்தாலம்மன். காலடியில் குழந்தைப் பிள்ளையார். மகாராஜா அருகே தன் சிம்மாசனத்தில் அமர்ந்தார்.

கோயிலதிகாரிகளும் மாடம்பிகளும் வரிசையாக வந்து மீனாக்ஷி சமேத சுந்தரேசரை வணங்கினர். ஒவ்வொருவரும் அவர்களின் அகம்படியுடன் வந்து வணங்கி அம்மைக்கு மணப்பரிசை அளித்தனர். கழக்கூட்டத்துப் பிள்ளை ஒரு வைர அட்டிகையை அளித்தார். பரிசுகளில் அதுவே பெரியது. பள்ளூர் வீரமார்த்தாண்டன் தம்பி அளித்த வைரமோதிரமும், குளத்தூர்ப்பிள்ளை அளித்த பவளங்கள் பதித்த வளையலும், செந்நாவாயூர் உதயன் மார்த்தாண்டன் அளித்த நீலக்கல் தோடுகளும், செம்பழஞ்ஞிப்பிள்ளை அளித்த இரண்டு கல்வளையல்களும் மதிப்பு மிக்கவை. அனைவருமே பொன்னணிகளும் பொன்நாணயங்களும் அளித்தனர். அவை அன்னையின் முன் வைக்கப்பட்டு உடனே எடுத்து தனியாக ஓலையில் பொறிக்கப்பட்டு அட்டவணையிடப்படடன.

குடித்தலைவர்கள் அனைவரும் வணங்கி சென்றபின்னர் அவையினர் வணங்கினர். அதன்பின் வெளியே இருந்து மக்கள் உள்ளே அனுப்பப் பட்டனர். அவர்கள் அன்று பகலும் இரவும் மறுநாள் முழுப்பகலும் ஒருகணம் ஒழியாது வந்துகொண்டே இருந்தனர். முறைவைத்து சிவாச்சாரியார்கள் அங்கே இருந்து பூஜைகளை நடத்தி வைத்தனர். ஒவ்வொருவரும் திருமணப்பரிசாக ஏதேனும் ஒன்று கொண்டு வந்திருந்தனர். பெரும்பாலும் வெள்ளிப்பணம். வெள்ளிச்சிமிழ்கள், சிலர் தங்கக்காசுகள், தங்க நகைகள். அவை கூடை வைத்து அள்ளிக்கொண்டுசென்று சேர்க்குமளவுக்கு குவிந்துகொண்டே இருந்தன.

வழிபட்டவர்கள் பந்தலின் இடப்பக்க வாசல்கள் வழியாக வெளியேறி ஊட்டுபுரைகளுக்கான பாதைகளில் சென்றனர். உணவுண்டபின் அப்படியே வெளியேறும்பாதையில் அவர்கள் நுழையவேண்டும். அவ்வழியே தங்கள் ஊர்களுக்குச் செல்லவேண்டும். அவர்கள் மீண்டும் வந்துவிடாதபடி வேல்களும் ஈட்டிகளுமாக வீரர்கள் நெடுந்தொலைவுக்கு பாதைகளைப் பிரித்தனர். மீண்டும் ஆரல்வாய்மொழி வருவதாக இருந்தால் பூதப்பாண்டி சென்று அங்கிருந்து கோட்டாறு சென்று சாலையில் இணையவேண்டும். இருந்தாலும் அன்று மாலைவரை கூட்டம் சற்றும் குறையவில்லை. மீண்டும் ஒருமுறை அன்னையை பார்த்துவிடவேண்டும் என்பதற்காக அத்தனை தொலைவு நடந்து சுழன்று வரவும் சித்தமாக இருந்தனர் பலர்.

மகாராஜா முதல்நாள் இரவும் மறுநாள் பகலும் அரியணையிலேயே இருந்தார். உணவு ஏதும் உண்ணவில்லை, நீர்கழிக்கவும் பிறிதுக்கும் எழுந்துகொள்ளவுமில்லை. நாலைந்து நாழிகைக்கு ஒருமுறை வெல்லத்தில் உருட்டிய அபின் மட்டும் சிறிய நாகப்பழம் அளவுள்ள உருளைகளாக கொண்டு சென்று கொடுத்தோம். அவற்றை வாயில் இட்டுக்கொண்டார். அவ்வப்போது அரைக்கோப்பை நீர் அருந்தினார்.

ராயசம் கிருஷ்ணப்பையர் என்னிடம் “மகாராஜா அன்னமும் நீரும் எடுத்து ஒருநாள் தாண்டியாச்சு. இங்க திருக்கல்யாணத்துக்கு கிளம்பினப்ப சாப்பிட்ட பால்கஞ்சி… இப்டியே போனா விழுந்திடுவாரு… நீங்க கொஞ்சம் சொல்லுங்க” என்றார்.

“திவான் சொல்றதுல்லா முறை?” என்றேன்.

“திவான் நாலுதடவை சொல்லியாச்சு. சொன்னப்ப, இது என் கடமை, ராஜாவா நான் செய்யவேண்டியது இது மட்டும்தான்னு சொல்லிட்டார்.”

ஒருவகையில் அது உண்மை. அவர் ஓர் உயிருள்ள கோயில் விக்ரகம். அங்கே வந்து தெய்வங்களை வணங்கி அவர் அருகே வந்து காலருகே மண்டியிட்டு வணங்குபவர்களுக்கு அது ஒரு வாழ்நாள் அனுபவம். அதை மறுக்கும் உரிமை அவருக்கில்லை. அவர் வாயால் வாழ்த்து பெற்றுச் செல்பவர்கள் தெய்வம் பேசியதாகவே உணர்வார்கள். பெண்கள், வயோதிகர்கள் மட்டுமல்ல ஆண்களும் வணிகர்களும்கூட அவர்முன் பணியும்போது கண்ணீர் சிந்தினர்.

என் சிற்றப்பன் விம்மியழுதபடி வந்தார். என் மனைவிகளும் அழுதுகொண்டிருந்தனர். நான் அவர்களை பூதப்பாண்டி சாலைவரை கொண்டுசென்று வண்டிகளில் ஏற்றிவிட்டேன். சிற்றப்பன் “ராஜாவானா அதுவே விஷ்ணு அம்சம். ஆனா நாம முழுசா மனம் மடங்கிக் கும்பிடுறதுக்குண்டான யோக்யதையுள்ள ராஜா எத்தனை தலைமுறைக்கு ஒருமுறை அமையுறாருன்னு யோசிச்சுப் பாரு… டேய், வேணாடு யோகமுள்ளதாக்கும். இது எந்த புயலுக்கும் வேரழியாது நிக்குத அருகம்புல்லாக்கும்டே” என்றார்.

மறுநாள் உச்சிப்பொழுதில் நான் மகாராஜா அருகே பின்னால் சென்று நின்று “ஒருவாய் இளநீரோ பால்கஞ்சியோ கொண்டு வரலாமா? இங்கேயே கொஞ்சம் திரைபோட்டு பிடிச்சுட்டு சாப்பிடலாம்” என்றேன்.

“வேண்டாம், அதுவே போதும்” என்றார் மகாராஜா.

“களைப்பு…”

”களைப்பு இல்லை…” என்றார். என்னை நோக்கித் திரும்பவே இல்லை.

அதன்பின் நான் ஒன்றும் சொல்லவில்லை. அவரில் களைப்போ தொய்வோ தென்படவில்லை. எத்தனை ஆயிரம் முறை கைதூக்கி வாழ்த்தியிருப்பார். அவரது கை தளரவுமில்லை.

அன்று இரவும் கூட்டம் வந்துகொண்டிருந்தது. ஒரு நொடிகூட நிரை முறியவில்லை. என்னால் அதற்குமேல் அங்கே நிற்கமுடியவில்லை. கால்கள் தொய்ந்து விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. அதுவரை எனக்குப் பசியே தோன்றவில்லை. பெரும்பாலும் வெல்லமும் இளநீருமே சாப்பிட்டுக்கொண்டிருந்தேன். ஊட்டுபுரைகளுக்குச் சென்று உண்டாலென்ன என்று நினைத்தேன்.

தெய்வங்களுக்கு நாழிகைக்கு ஒருமுறை மலரலங்காரம் முற்றாக மாற்றப்பட்டது. விளக்குகள், முன்னால் பரப்பப்பட்ட மங்கலங்கள், படையல்கள் அனைத்தும் மாற்றப்பட்டன. ஆகவே அக்கணம் தோன்றியவர்கள் போல் துலங்கினர். மகாராஜாவும் அவ்வண்ணமே தோன்றினார். அவர் கண்கள் தெய்வங்களுக்குரிய வெறிப்பு கொண்டிருந்தன. அனைவரையும் பார்ப்பதாகவும், எவரையும் பார்க்காததாகவும், ஒவ்வொருவருக்கும் நோக்களிப்பவையாகவும்.

வணங்கிவிட்டு வெளியேறி அந்த இருளில் நிழலொழுக்கு போல சென்றுகொண்டிருந்த கூட்டத்தைப் பார்த்தேன். எங்கிருந்து வந்தார்கள் அத்தனைபேர்? ஓர் அரசர் தன் தேசத்தையே இரண்டுநாட்களில் கண்முன் பார்ப்பது எத்தனை அரிது. அதை எந்த அரசரும் விலக்க மாட்டார். அது அவருக்கு ஒரு விஸ்வரூப தரிசனம். அதிலும் வேணாட்டை உயிர் என, மூதாதை வடிவம் என விரும்பிய மன்னருக்கு அது பிறவிப்பெருநிறைவு. போதம்தான் காலமென்றும் கணக்கென்றும் ஆகி அங்கே அமரவிடாமல் ஆக்குகிறதென்றால் அதை அபின் உண்டு கரைத்தழிப்பதுதான் நல்லது. உண்மையில் தெய்வங்களும் அப்படித்தான். அவை போதமற்றவை, அபோதப்பெருநிலையில் நிலைகொள்பவை. துரியம் அபோதம். வானம் அபோதம்.

நான் நேராக ஊட்டுபுரைக்குச் சென்றேன். அங்கே சம்பிரதி கோவிந்தன் நாயர் இருந்தான். என்னைக் கண்டதும் ஓடிவந்தான். “சாப்பிடணும்டே” என்றேன்.

“அடியேன் ஏற்பாடாக்குகிறேன். இங்கே தனி அறை இருக்கு. உக்காருங்க. எல்லாம் கொண்டுவந்து பரிமாறச் சொல்லுறேன்… இரிஞ்சானூர் அப்பு மாரார் சமையல். மணமே தெய்வங்களுக்கு தெரிஞ்சிருக்கும். கந்தர்வகின்னராதிகள் இப்ப காற்றில் நிறைஞ்சிருப்பாங்க.”

ஆனால் அவனுடன் கொட்டகையை கடந்து சென்றபோது இரண்டு ஆள் உயரத்துக்குக் குவிந்திருந்த எச்சில் இலைகளைக் கண்டு நின்றுவிட்டேன். “இது என்னதுடே?” என்றேன்.

“எச்சில் இலைதான்… இப்ப எடுத்துக்கிட்டுப் போனா இருக்கிற கூட்டத்திலே அமங்கலமா ஆகும். காட்டிலே போடுறதும் நல்லது. மான் மிளாவுக்கு பன்றிக்கு சாப்பாடுமாகும்.”

நான் ஓர் உலுக்கலாக வயிற்றை உணர்ந்தேன். “சாப்பாடு வேண்டாம்டே.”

“உடையதே.”

“ஒரு கிண்டி பிரதமன் மட்டும் கொண்டு வா… நான் அங்கே மேலே ஏதாவது குடிலிலே இருப்பேன்” என்றேன். அப்பால் என்னை நோக்கி நூற்றுவன் காளன் பெருமல்லன் வருவதைக் கண்டான். அவன் வணங்கி நின்றான்.

“சொல்லு” என்றேன்.

“மணவாளன் வீட்டுக்காரங்க எல்லாரும் அவங்களுக்கான கொட்டகைகளிலே படுத்தாச்சு. பாதிப்பேரு உறங்கியாச்சு. மத்தவங்க தூக்கம்பிடிக்காம பேசிட்டிருக்காங்க.”

“தூக்கம் பிடிக்கிறது கஷ்டம்தான்” என்றேன். “கொசு இருக்காடே?”

”இந்தக்கூட்டத்திலே எங்க கொசு? ஆனா சத்தம் முழங்கிட்டிருக்கு. முரசும் கொம்பும் ஓயறதில்லை. இப்ப கூட்டத்தை சத்தம் வைச்சுத்தான் கட்டுப்படுத்தவேண்டியிருக்கு.”

“ஆமா”என்றேன். “மதுரை ராஜ்யத்து தளவாய் படுத்திட்டாரா?”

“இல்லை, அவரு வெளியே கட்டிலைப்போட்டு உக்காந்திட்டிருக்காரு. ஒப்பம் நாலஞ்சுபேரு இருக்காங்க.”

“அங்கே நம்ம திவான் இருக்காரா?”

அவன் தயங்கினான்.

“சொல்லு”

“ஆமா, திவான், தளவாய் ரெண்டாளும் அங்கதான் இருக்காங்க.”

“சரி, அப்ப வேண்டியதை அவங்க பாத்துக்கிடுவாங்கன்னு அர்த்தம். நான் போயி படுத்துக்கிடுறேன்… நீ ஏதாவதுன்னா என்னை எழுப்பு.”

நான் குடிலில் வந்து படுத்துக்கொண்டேன். சம்பிரதி கோவிந்தன் நாயர் ஒரு மூங்கில் குழாயில் சூடான பிரதமன் கொண்டுவந்து தந்தான். வெல்லமும் தேங்காய்ப்பாலுமாக முறுகிய இனிப்பு மணம். எனக்கு குமட்டியது.

“வேண்டாம்”என்றேன்.

“அப்டிச் சொல்லக்கூடாது. இது அம்மைக்க பிரசாதம். அம்மைக்க கல்யாணத்திலே ஒருவாய் அமுது நாமும் குடிக்கணும்லா?”

”கொண்டா” என்று வாங்கி குடித்தேன். முதல் வாய் உள்ளே போனதும் உடலுக்குள் இருந்து பல பேய்கள் எழுந்து கைநீட்டி கூத்தாடுவதுபோல பசி எழுந்தது. குடிக்கக் குடிக்க அண்டா நிறைய பாயசம் வேண்டுமென்று தோன்றியது. ஆனால் சீக்கிரத்திலேயே திகட்டிவிட்டது.

நான் படுத்துக்கொண்டேன். என் உடல் இருட்டில் மிதந்து மிதந்து சென்றது. எல்லா ஏற்பாடுகளும் முடிந்துவிட்டன. இன்றிரவுக்குள் குடிஜன வழிபாடு முடிந்துவிடும். நாளைக்காலை அம்மை மதுரைக்குக் கிளம்புகிறாள். நாளை காலை ஒளியெழுகையில் அவள் வேணாட்டு மண்ணை நீங்கிவிடுவாள். அவள் இங்கிருந்ததையே வேணாடு அறிந்திருக்கவில்லை. ஆனால் அவள் இங்கில்லாததை இனி ஒவ்வொரு நாளும் இந்த மண் உணரும்.

நான் அம்மையின் முகத்தைப் பார்த்துக் கொண்டிருந்தேன். மிகமிக அருகிலென. அது சின்னஞ்சிறு முகம். மாந்தளிர்வண்ண முகம். கூர்மையான மூக்கு. நீண்ட விழிகள். குமிழுதடுகள். அதில் ஒரு புன்னகை இருந்தது. அது நாணமல்ல, குறும்பு. அவள் எனக்காக எதையோ கருதி வைத்திருக்கிறாள்.

[மேலும்]

 

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி [குறுநாவல்] – 3
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி [குறுநாவல்] – 5