குமரித்துறைவி [குறுநாவல்] – 3

[ 9 ]

முற்புலரியிலேயே வானத்தில் எரியம்பு ஏவப்பட்டது. அந்த வெடியோசை கேட்டு காலைப்பறவைகள் மரங்களிலிருந்து சிறகடித்தெழுந்து வானில் கலைந்து பறந்து குரலெழுப்ப, பசுக்களும் ஆடுகளும் விழித்துக்கொண்டு கூவின. இருண்ட வானில் எரியம்பு சிவப்புத் தீற்றலாக எழுந்தமைந்தது. தொடர்ந்து தோவாளை, திருவெண்பரிசாரம், கிருஷ்ணன்கோயில், கணியாகுளம், புலியூர்க்குறிச்சி, மலைக்கு அப்பால் பணகுடி, வள்ளியூர், திருக்கணங்குடி என பல இடங்களிலிருந்தும் எரியம்புகள் வானில் எழுந்தமைந்தன. விழா தொடங்கிவிட்டது. ஆமாம், இதோ தொடங்கிவிட்டது.

அக்கணம் என் அகம் தீப்பற்றிக் கொண்டது. குமரித்துறையிலிருந்து எரியம்பு எழவில்லை. அதுவரை நான் அதைப்பற்றி நினைக்கவே இல்லை. விழாவின் தலைநிகழ்வு அது. கண்முன் நின்ற யானையைக் காணாமல் எறும்புகளை எண்ணிக்கொண்டு இருந்திருக்கிறேன். முட்டாள், அறிவே இல்லாத முட்டாள், சிந்தித்து சிந்தித்து சித்தம் மழுங்கிவிட்டவன்

என்னையே வசைபாடிக்கொண்டு கோட்டையிலிருந்து இறங்கி குதிரைமேல் ஏறி அரண்மனை நோக்கிப் பாய்ந்தேன். என் பின்னால் குதிரையில் ஓடிவந்த அச்சுதன் மாராயனிடம்முக்கடலுக்கு போனது யார்? அங்கே கன்னியம்மை கோயிலிலே பூசனைக் காரியங்கள் சரிபாத்தாச்சா? திருமஞ்சன தீர்த்தம் கெளம்பியாச்சா?” என்று விசாரித்தேன்.

அவன் திகைத்துகிளம்பியிருக்கணும்என்றான்.

எங்கிட்ட இதச் சொல்லவா நீ மீச வைச்சிருக்கே?” என்று அவன் மேல் சீறினேன். பல்லைக் கடித்தபடி டேய் திருமஞ்சனதீர்த்தம் கிளம்பியாச்சான்னு கேட்டுச் சொல்லு. இப்பவே எனக்கு செய்தி வந்தாகணும்…” என்றேன்.

அவன்  “அடியேன்என்று தயங்கினான்.

நான் மூச்சிரைக்கஇல்லை, நானே கிளம்புறேன்நானே கிளம்பிப் போய் பார்க்கிறேன்என்றேன்.

வேண்டாம் உடையதே. நானே போய் பாத்துட்டு சொல்லுறேன்செய்தியை வெடிபோட்டு அறிவிக்கச் சொல்லுறேன். மகாராஜா எழுந்தருளுற நேரம்உடையது இங்கே இருந்தாகணும்என்றான் அச்சுதன் மாராயன்.

சரி, போவேகமா போஎன்று கூவினேன்.

அவன் புரவியின் வால் சுழல, குளம்பொலி இருளில் எதிரொலிக்க, கிளம்பிச் சென்றான். என்னை இருள் சூழ்ந்திருந்தது. அந்த இருளுக்குள் இருந்தன சென்ற பதினைந்து நாட்களாக நான் ஒருங்கிணைத்த அனைத்தும். விடியலில் வெளிச்சத்தில் அவை ஒவ்வொன்றும் திரண்டு வந்து நின்றாக வேண்டும். இருட்டில் என்ன நடந்து கொண்டிருக்கின்றது என்று தெய்வங்களுக்கே தெரியும். அங்கே பேய்களும் பூதங்களும் நிறைந்திருக்கும். அவை வஞ்சம் மிக்க சிரிப்புடன் நகரும் ஒவ்வொன்றையும் அசையாமல் பிடித்திருக்கலாம். இணையும் ஒவ்வொன்றையும் இழுத்துப் பிரித்துக்கொண்டிருக்கலாம்.

நான் அரண்மனையை அணுகியபோது திருவெண்பரிசாரத்தில் இருந்து இரண்டு எரியம்புகள் ஒன்றன்பின் ஒன்றென எழுந்து மேலே கரியவானில் செந்நிறக் கீறல்களைப் போட்டன. அங்கிருந்து தளவாய் வெங்கப்ப நாயக்கரும் ராயசம் விஜயரங்கய்யாவும், தக்ஷிணாதி மடத்து சுவாமி நாராயண பட்டாச்சாரியரும் முறைப்படி கிளம்பி விட்டார்கள் என்று பொருள். அவர்கள் வந்துசேர இரண்டு நாழிகை ஆகும். அதற்குள் மகாராஜா ஒருக்கமாகி கிளம்பிச்சென்று கோட்டைமுகப்பின் வரவேற்புகளை ஏற்றுக்கொண்டு, பரகோடி கண்டன் சாஸ்தா கோயில்முன் சென்று அமரவேண்டும்.

நான் அரண்மனைக்குச் சென்றபோது தனியறையில் மகாராஜா அணிசெய்து கொண்டிருக்கிறார் என்று வெளியே வந்த கொட்டாரம் ராயசம் கிருஷ்ணப்பையர் சொன்னார். நான் வெளியே களமுற்றத்திற்கு சென்று மகாராஜாவுடன் அகம்படி சேரவேண்டிய அணிப்படைகள் ஒருங்கிவிட்டனவா என்று பார்த்தேன். சம்பிரதி முண்டத்தூர் செல்லப்பன் பிள்ளை அங்கே இருந்தார். அவரிடம்எல்லாம் ஒருங்கி நிக்கணும்ஒருங்கி முடிச்சதும் எங்கிட்டே ஒரு வார்த்தை சொல்லுஎன்றேன்.

மரத்தடியில் மீனாக்ஷி கோயிலில் இருந்து என் ஆட்கள் வந்து காத்து நின்றிருந்தனர். நூற்றுடையான் காரைக்காட்டு செம்பன் மாராயன் என்னிடம் அங்கே புலரிபூஜைகள் முடிந்துவிட்டன, மகாராஜா வந்து சேவித்துவிட்டார் என்றால் தேவிக்கு பிரஃபாத அலங்காரங்கள் களைந்து ஸ்ரீமங்கலைக்கான அணியலங்காரங்களை செய்யலாம், தேவையான எல்லாம் ஒருங்கிவிட்டிருக்கின்றன என்று சிவாச்சாரியார்கள் செய்தி அனுப்பியிருப்பதைச் சொன்னான்.

நல்ல கூட்டமாடே?” என்றேன்.

மொத்த வேணாடும் இப்ப இங்கதான் இருக்குது. மலையடிவாரம் முதல் மலையடிவாரம் வரை மனுஷத்தலைதான் தெரியுது…. கடலெழுந்து வந்து கரைமுட்டி கிடக்குதது மாதிரிஎன்றான் செம்பன் மாராயன்.

நல்லதுஎந்தக் கூட்டமானாலும் நம்ம கட்டுப்பாட்டிலே இருக்கணும்என்றேன்.

நாம கட்டுப்படுத்த முடியாது. அம்மை பேரைச் சொல்லலாம். அவ ஆளட்டும் அத்தனைபேரையும்என்றான் செம்பன் மாராயன்.

சங்கொலி எழுந்தது. நான் அரண்மனைக்குள் சென்றேன். கொட்டாரம் ராயசம் கிருஷ்ணப்பையர் உள்ளிருந்து ஓடிவந்துமகாராஜா ஒருங்கியாச்சு. கிளம்பிட்டிருக்கார்என்றார். “அணியூர்வலம் ஒருக்கமா? படைகள் நிரையா நின்னாச்சா?”

அவரை முற்றாக புறக்கணித்து நான் சென்று அறைவாசல் முன் வணங்கி நின்றேன். அவர்அய்யோ எல்லாம் எனக்க தலையிலேல்லா விடியும்என்றபடி வெளியே ஓடினார்.

மகாராஜா உள்ளிருந்து வெளியே வந்தார். முத்தாரங்கள் சுற்றப்பட்டு, செம்பருந்தின் இறகு சூட்டப்பட்ட பச்சைப்பட்டுத் தலைப்பாகை அணிந்திருந்தார். காதுகளில் மகரக்குழைகள். கழுத்தில் சரப்பொளி மாலையும் முத்தாரங்களும் பதக்கமாலையும். நீலமணிகள் பதிக்கப்பட்டு நடுவே சங்குமுத்திரை கொண்ட பதக்கம் வயிற்றின்மேல் அமர்ந்ததுபோல் இருந்தது. இடையில் செம்பட்டுக் கச்சைக்கட்டு. மஞ்சள்பட்டை நிலைக்கச்சமாக உடுத்தியிருந்தார். வலக்கையில் ராஜகங்கணமும் காப்பும். இடக்கையில் முத்துவளையல்கள் நான்கு.

நான் நன்கறிந்த மனிதர் தெய்வத்திருவுருவென மாறியிருந்தார். நான் கைகூப்பி பேச்சிழந்து நின்றேன்.

என்ன நடக்குது சர்வாதிக்காரரே?” என்றார் மகாராஜா. அவர் உடல் குளிரில் என மெல்ல நடுங்கிக்கொண்டிருந்தது. குரலிலேயே நடுக்கம் இருந்தது.

அடியேன், எல்லாம் முறைபோலேஎன்றேன்.

எனக்கு ஏனோ நெஞ்சு பதறிட்டே இருக்குடேஎன்றார். எல்லா தொலைவுகளையும் கடந்து மிக அருகே வந்துவிட்டிருந்தார். நான் அவரை தொட விரும்பினேன். தொடக்கூடாதென்ற எச்சரிக்கையும் எனக்குள் எழுந்தது.

அடியேன். அம்மை நமக்கு துணையுண்டுஎன்றேன்.

இப்ப என்ன சடங்கு?”

அடியேன். இப்ப தம்புரான் திருமனசு கொண்டு ஆரல்வாய்மொழி கோட்டைமுகப்புக்கு போகணும். அங்கே கோட்டை எஜமானன் படைகொண்டு வந்து நின்று தம்புரானை வரவேற்று உபச்சார மரியாதைகள் செய்து அழைத்துப் போவார். கோட்டைக் கணபதிக்கு ஒரு படையலும் அருகம்புல் பூஜையும் உண்டு. அது முடிஞ்சதும் நேரா மீனாக்ஷியம்மை கோயில்தான்….” என்றேன்.

ம்என்றார். அவர் உள்ளம் பதறிக்கொண்டிருப்பதை விரல்களின் நடுக்கத்தில் கண்டேன்.

மீனாக்ஷியம்மை பிரஃபாத அலங்காரக் கோலத்தை திருமனசு தரிசனம் பண்ணியாச்சுன்னா உடனே தேவிக்கு மங்கல அலங்காரம் பண்ணி மணவறைப் பந்தலிலே இருக்கிற புறச்சன்னிதி மண்டபத்திலே கொண்டு பொதுத்தர்சனத்துக்கு வைச்சிருவாங்க. திருமஞ்சன நீராட்டு முடிஞ்சா கல்யாண அலங்காரம்

கொட்டாரம் ராயசம் கிருஷ்ணப்பையர் குனிந்து எலிபோல ஓடி வந்துஅடியேன், எல்லாம் ஒருக்கமாக்கும். அடியேனே நேரில்போய் எல்லாத்தையும் சரி பாத்துட்டேன்தம்புரான் கல்பிச்சு படியெறங்க அருளவேணும்என்றார்.

மகாராஜா நடக்க அவருக்கு முன்னால் கொட்டாரம் ராயசம் கிருஷ்ணப்பையர் உடல்குலுங்க ஓடினார். நான் பெருமூச்சுடன் நின்றேன். பின்னர் தளர்ந்த நடையுடன் பின்னால் சென்றேன்.

மகாராஜா முற்றத்தை அடைந்ததும் வெளியே கொம்பொலியும் சங்கொலியும் முழவொலியும் இணைந்து முழங்கின. தலைக்கோல் ஏந்திய மூத்தநாயர் உரக்கஸ்ரீஆதிகேசவ பாததாசன், வேணாடு இருந்தருளும் மகிபதி, ஸ்ரீவாழும்கோடும் சிவீந்திரமும் இரணியலும் ஏந்தியாளும் மகுடாதிபதி, திருக்கணங்குடியும் வானமாமலையும் சேரன்மாதேவியும் ஆண்டருளும் ஜயகேரளன், சேரகுலோத்துங்கன், அஜயபராக்ரமன், ஸ்ரீ ஆதித்ய வரகுண சர்வாங்கநாதப் பெருமாளுக்கு நித்ய ஜய மங்களம்!” என்று கூவினார்.

மன்னர் வணங்கியபடி சென்று செம்பட்டுத்திரை இட்ட பல்லக்கில் ஏறிக்கொண்டார். வாழ்த்தொலிகள் எழுந்து அவரைச் சூழ்ந்தன

முற்றத்தில் பந்தங்களின் சிவப்பு வெளிச்சம் நிறைந்திருந்தது. வானமும் சிவப்படையத் தொடங்கியிருந்தது. ஈட்டி, வேல்நுனிகளில் ரத்தப்பூச்சு இருப்பதுபோல செவ்வொளி.

பல்லக்கு தூக்கிகளுக்கு காவலர்தலைவன்ஊபர் ஹோய்! என்று ஆணையிட்டதும் போகிகள் பல்லக்கை தூக்கினர். படைத்தலைவன்சல்னா ஹோய்என்று ஆணையிட்டதும்  பல்லக்கு திரை குலுங்க முன்னகர்ந்தது.

முன்னால் வேணாட்டின் சங்கு இலச்சினையிட்ட கொடியுடன் முகப்படாம் அணிந்த யானை சென்றது. அதற்கு முன்னால் செண்டையும் முழவும் கைமணியும் கொம்பும் சங்குமாக பஞ்சவாத்ய மங்கலக்காரர்கள் சென்றனர். மார்பின்மேல் மெழுகிட்டு தேய்த்து மெருகேற்றிய எருமைத் தோல்கவசம் அணிந்த நூறு படைவீரர்கள் கூர்மின்னும் வேல்களுடன் நான்கு அணிகளாக நடக்க ,அவர்களுக்குப் பின்னால் எட்டு குதிரைகள் இரண்டு நிரைகளாக சென்றன. மகாராஜாவின் பல்லக்கின் இருபக்கமும் கைகளில் ஈட்டிகளுடன் இரு படைவீரர்கள் குதிரையில் சென்றனர். பின்பக்கம் நூற்றுவர் வில்லம்புகள், ஈட்டிகள், வேல்கம்புகளுடன் நான்குநிரைகளாகச் சென்றனர்.

குதிரைகள் அனைத்தையும் வெண்ணிறமாகவே தேர்வு செய்திருக்கலாம் என்று பட்டது. வேல்முனைகளில் சில நீளம் கூடி எழுந்து நின்றது கண்களை உறுத்தியது. காவலர்களிலும் நால்வர் மிகப்பருமனானவர்கள். அவர்களை தவிர்த்திருக்கலாம். அந்த கவலைகளினூடாக பல்லக்கு ஆணைகள் எப்படி உருதுமொழிக்கு மாறின என எண்ணிக்கொண்டேன். எழுபதாண்டுக்கால மதுரை சுல்தான்களின் ஆட்சியில் பல்லக்குதூக்கிகளும் குதிரைக்காரர்களும் அங்கிருந்து வந்துகொண்டே இருந்தனர். அவர்கள் எந்த குலத்தவரானாலும் ஆணைகள் உருதுவிலேயே இருந்தன.

நான் ஊர்வலம் கண்களில் இருந்து மறைவது வரை பார்த்துக் கொண்டிருந்தேன். சோழர்காலத்து வண்டிப்பாதை அது. ஆரல்வாய்மொழி கோட்டைவரை பெரிய வளைவுகள் இல்லாமல் செல்லும். ஆனால் இருபக்கமும் குறுங்காடுகள். மிகவிரைவாகச் சென்று வளைந்து மேலேறி உச்சி எழுந்து பாறைகள் கூர்கொண்டு நின்ற மலைகளை அணுகி விடுபவை. அங்கே காட்டுக்குள் படைகள் உள்ளே நுழைவது கடினம். எங்கும் உருளைப்பாறைகள், ஓடைகள் நிலத்தை வெட்டி உருவாக்கிய வெடிப்புகள், இரும்புபோல முட்கள் செறிந்த வேலம்புதர்கள்.

ஆனால் உச்சிமலை என்பது ஒரு வாய்ப்பு. ஆரல்வாய்மொழிக் கணவாய் முகத்தை பார்க்கும் மலைமேல் வழக்கமான காவல்மாடம் இருந்தது. அங்கே ஆண்டுமுழுக்க முறைக்காவல் உண்டு. இந்த விழாவுக்காக எல்லா பாறைமுகடுகளிலும் காவலர்களை நிறுத்தியிருந்தேன். அங்கிருந்து பார்த்தால் காட்டுக்குள் நடமாட்டம் கூந்தலுக்குள் பேன் என தெரியும். அங்கே எதையாவது பார்த்தால் வெடிவெடித்து கூரிய புகையோ ஒளியோ எழுப்புவார்கள். புகையை ஆடையால் வெட்டி வெட்டி துண்டு வளையங்களாக காற்றில் மிதக்கச்செய்து அடையாளங்களாக ஆக்கி செய்தியறிவிப்பார்கள். ஒளியை பலவாறாக மின்னவைத்து சொற்களாக்குவார்கள்.

காவலர்தலைவன் மல்லன் பிள்ளை வந்து காத்து நின்றிருந்தான். அவனைக் கண்டதும் அருகே அழைத்துதிருவெண்பரிசாரத்திலே நாயக்கராஜாவுக்க அலங்காரப்படை ஒருங்கி நிக்குதாடே? மணவாளன் சீரும் அலங்காரப் பல்லக்கும் அவங்களுக்காக்கும்என்றேன்.

அவன் ஏற்கனவே என்னிடம் அவர்கள் ஒருக்கமாகி நிற்பதை பலமுறை சொல்லிவிட்டிருந்தான் என அப்போது நினைவுகூர்ந்தேன். அவன்எல்லாம் ஒருக்கம். மருதைப்படையின் நூற்றுநாயகம் சேவப்ப நாயக்கர் கிட்டேயே நேரிலே பேசிக்கிட்டு வந்திருக்கேன். அவங்க எல்லாமே நேரிட்டு ஒருக்கம் பண்ணிட்டு நேத்து ராத்திரியிலேயே காத்திருக்காங்கஎன்றான்.

பின்னே நீ எதுக்கு இங்கே நிக்குதே? நீ அவங்க ஒப்பம் நின்னு பாத்துக்கோ.”

அவங்க கிளம்பியாச்சுஅந்த அணியூர்வலத்திலே நான் இருக்கக்கூடாது. அவங்க மணவாளன் பக்ஷமாக்கும். அவங்க இங்க வந்துசேருறப்ப செய்யவேண்டியதுக்காக நான் வந்து நிக்குதேன்என்றான்.

அப்ப நீ கோயிலுக்குப் போ.”

கோயிலிலே ஆளிருக்கு. வேற உத்தரவுண்டான்னு கேக்க வந்தேன்.”

உத்தரவு இருந்தா சொல்லி அனுப்புறேன். நீ கோயில் முன்னாலே நில்லுஅவங்க வந்து சேருறப்ப நீ அங்கே நின்னுட்டிருக்கணும்.”

ஆணைஎன்று தலைவணங்கினான்.

நான் தலையசைத்துவிட்டு அரண்மனைக்குள் சென்றேன். எங்காவது சற்றுநேரம் அமர்ந்தாலென்ன? ஆனால் அமர்ந்தால் தூங்கிவிடுவேன். ஏவலன் என்னிடம் வந்து மெல்லகொஞ்சம் பால்கஞ்சி கொண்டுவரவா உடையதே?” என்றான்.

கொண்டு வாடேஎன்றேன்.

அதைக் குடித்துக்கொண்டிருந்தபோது மிகத்தொலைவில் இருட்டில் வெடியோசையை கேட்டேன். நீரில் யாரோ குதித்ததுபோல தோன்றியது அது. அந்த ஓசையை ஏற்று இன்னொரு வெடியோசை எழுந்தது. குதிரையில் என்னை நோக்கி வந்து நின்ற காவலர் தலைவன் கண்ணன்குட்டி நாயர்வலியசர்வாதிக்கார் சவிதம் பிரணாமம்கன்யாகுமாரியிலே இருந்து கடல்குடிகளிலே உள்ள ஏழுபட்டக்காரர்களும் புலரிக்கு முன்னாடியே மஞ்சனநீரோடே கிளம்பியாச்சுஅவங்க அஞ்சுகிராமம் தாண்டி வந்திட்டிருக்காங்கஎன்றான்.

நான் அப்போதுதான் கன்யாகுமரியை நினைவுகூர்ந்தேன். கோபத்துடன்அப்ப ஏண்டே இதுவரை அறிவிப்பு வரல்லை?” என்றேன்.

அவங்க அதைச் செய்ய விட்டுப்போட்டாங்க. பழக்கமில்லை, மறந்துட்டோம்னு சொல்லுறாங்க. கன்யாகுமரி கோட்டையிலே வெடிபோட்டிருக்காங்க. வழியிலே தொடர்ச்சி நின்னு போச்சு.”

நான் எரிச்சலை அடக்கிசெரி அவங்களை முறையா ஆரல்வாய்மொழிக்கு கொண்டுட்டு வாஎன்றேன். உரக்கவழியிலே நீ வாயைப்பிளந்து நின்னுட்டிருக்காதேஎன்றேன்.

அவன் தலைவணங்கி அகன்றதும் நான் குளித்து உடைமாற்றிவிட்டு குதிரையில் ஏறி ஆரல்வாய்மொழி நோக்கிச் சென்றேன். வழியிலேயே என்னை பின்னால் வந்து சந்தித்த மாராட்டு அச்சுதக் கைமள்வலிய சர்வாதிக்கார் எஜமானனுக்கு பிரணாமம். வடுகப்படை தளவாயும், அவருடைய ராயசமும், ராயர் சுவாமியும் வந்துக்கிட்டிருக்காங்க. அவங்க இப்ப கொஞ்சநேரத்திலே தோவாளையை அடைஞ்சிருவாங்கஎன்றான்.

அவங்களோட காவல்படையும் சீர்கொண்டுவந்த கூட்டமும் ஒருங்கியாச்சா?” என்றேன்.

அவங்க எல்லாரும் நேத்தே ஒருக்கம். ஒண்ணாச்சேந்து முறையா அணியூர்வவலமா வந்திட்டிருக்காங்க…” என்று அச்சுதக் கைமள் சொன்னான்.

நான் உளறத் தொடங்கிவிட்டதை நானே உணர்ந்தேன். “வெளிச்சம் இன்னும் வரல்லை. அதுக்கு முன்னாடி அவங்க வந்து சேர்ந்தாகணும்என்றேன்.

அவங்க வேகமாத்தான் வந்திட்டிருக்காங்கஎன்று அவன் சொன்னான்.

என்னால் மேலும் ஏதும் சொல்ல முடியவில்லை. வேகம் வேகம் என்ற வார்த்தையன்றி ஏதும் என் நெஞ்சில் அப்போது இருக்கவில்லை.

[ 10 ]

நான் ஆரல்வாய்மொழியை அடைந்தபோது மகாராஜா அவருக்கான எதிரேல்பு சம்பிரதாயங்கள் முடிந்து கோயிலுக்குச் சென்றுவிட்டிருந்தார். கோட்டை எஜமானன் கல்குளம் அச்சுதக் குறுப்பிடம் ஓரிரு சொற்கள் பேசியபிறகு சரிவான பாதையில் குதிரையில் அமர்ந்தவாறே ஏறி கோயிலுக்குச் சென்றேன். வழியில் என்னுடன் வந்து சேர்ந்துகொண்ட ஈத்தாமொழி அனந்தகிருஷ்ணன் நாடாரிடம்என்னடே, பந்தல் ஒருக்கங்கள் முடிஞ்சாச்சா?” என்றேன்.

மணவறை அலங்காரம் மட்டும் மிச்சம். அதுக்கு பூ வரணும். புதிய பூ இறுத்து இப்ப கொண்டு வந்திருவாங்க. வந்ததுமே முடிச்சுப்போடலாம். மத்த எல்லாம் முடிஞ்சாச்சுஎன்றார்.

ஒரு தப்பு நடந்திரப்பிடாது. ஆரல்வாய்மொழிக் காத்தில் பந்தல் ஆடிட்டுதான் இருக்கும் பாத்துக்கோஒரு மாலை உதிர்ந்து விழுந்தாக்கூட தப்பா மனசுக்குப் பட்டிடும்எல்லாம் உன் பொறுப்பு. உனக்க அப்பன் மூப்பிலான்மாரு மேலே இருந்து பாத்துக்கிட்டிருங்காங்க. அதை மறக்கவேண்டாம்என்றேன்.

அடியேன், என்னாலே முடிஞ்சதுக்குமேலே செய்யுதேன். பின்னே கண்டமங்கலத்தா துணைஎன்றார் அனந்தகிருஷ்ணன் நாடார்.

பந்தல்கெட்டு எப்டிடே? இங்க சித்திரமாசத்திலே காத்து உண்டுல்லா?”

இங்க ஆடிக்காத்துக்கு ஆனை பெலம். அப்ப எந்தப் பந்தலும் நிக்காது. செடிகளை பிடுங்கி வீசுத காத்து அது. சித்திரை ஒடுக்கத்திலே அக்னிநச்சத்திரம் கொஞ்சம் கனத்து வாறப்ப சில சுழலிக்காத்துகள் அடிக்குறதுண்டு. இப்ப ஒண்ணுமில்லை.” என்றார் அனந்தகிருஷ்ணன் நாடார்ஆனா இங்க எப்பமும் உள்ள காத்துகூட கடலுக்க அலைபோலத்தான்எப்பம் எந்தக் காத்து மலையெறங்கி வரும்னும் சொல்லிக்கிட முடியாது. அதனாலே சித்திரை ஒடுக்கத்துக்கும் ஆடிக்குமான கெட்டுகளை இப்பவும் கெட்டியிருக்கேன்

பாத்துக்க. எல்லாம் நாம நினைச்சு சரியா நடத்திக்கிடணும்என்றேன். ஒரு முறை நானே நேரில் பார்த்துவிடுவது நல்லது என்று தோன்ற குதிரையில் இருந்து இறங்கி பந்தலை நோக்கி நடந்தேன். கிட்டத்தட்ட ஓடினேன். அனந்தகிருஷ்ணன் நாடார் என்னுடன் தானும் ஓடிவந்தார்.

கோயிலில் இருந்து சற்று அப்பால் உருவாக்கப்பட்டிருந்த மணப்பந்தலுக்குச் சென்றபோது மூச்சிரைத்தேன். கோயிலருகே காட்டை அழிக்காமல் அந்தப் பந்தலை அமைக்க முடியாது என்பதனாலும், சமநிலம் தேவை என்பதனாலும் அந்த இடத்தை தேர்வுசெய்திருந்தேன்.

ஆரல்வாய்மொழியில் ஏழடுக்குப் பந்தல் போடும் வழக்கமே இல்லை. அதற்கு காற்றுநிலம் என்றே பெயருண்டு. ஆரல்காற்றும் ஆனை மத்தகமும் என்றே சொல் உண்டு. ‘நித்தம் மண்மாரி பொழியுமூர், பித்தன் பேய்ச்சியை மணந்த ஊர், கத்தும் கடலோசை கேட்குமூர்,  முத்திரை வாசல் அரண்வாய்மொழிஎன்று ஒரு பாட்டுகூட உண்டு. அங்கே ஏழடுக்குப் பந்தல் கட்டவேண்டுமென்று மகாராஜா ஆணையிட்டார். மறுத்துச் சொல்லாமல் நான் அதற்கு ஆள்தேடலானேன்.

ஆரல்வாய்மொழியா, காத்துல்லா அங்க எமராஜாஎன்றனர் பந்தல்கார நாடார்கள். ”பந்தலிலே ஒரு ஓலை விளுந்தாலும் அமங்கலம், தலைபோனா மயிரு போச்சு. குடும்பத்துக்க பேரு போனா மேலே இருக்குத மூப்பிலான்மாருக்கு மறுமொழி சொல்லணும்லா?” என்றார்கள். கடைசியில் ஈத்தாமொழி அனந்தகிருஷ்ணன் நாடார் பொறுப்பை ஏற்றுக்கொண்டார்.

நான் அவர் பொறுப்பேற்றுக் கொண்டதும் நிம்மதி அடைந்தேன். ஆனால் மறுகணமே என் நெஞ்சு திகைத்தது. “வேய் நாடாரே, பந்தலு உறைச்சு நிக்கணும்என்றேன்.  “மாருதர் பதினாறு பேரும் நின்னு வெளையாடுற பூமியாக்கும்

நிக்கும், வேளிமலைபோலே நிக்கும். தயங்காம போகணும் சர்வாதிக்காரரேஎன்றார் அனந்தகிருஷ்ணன் நாடார்.

காலு நல்ல உறப்பா நாட்டனும்ஆறடிக்குமேலே பதினெட்டடி ஆனாலும் சரி

பதினெட்டல்ல நூத்தெட்டடி நாட்டினாலும் காத்துக்கு அது மயிராக்கும்என்று அனந்தகிருஷ்ணன் நாடார் சொன்னார். “ஆனா எந்தக் காத்தடிச்சாலும் கத்தாழைச் சிலந்திவலை அங்கிணதான் இருக்கும். நாங்க கட்டுறது மூங்கிலாலே ஒரு சிலந்திவலைன்னு நினைச்சுக்கிடுங்க

அவர்கள் பந்தல்கட்டும்போது நான் பலமுறை வந்து பார்த்தேன். அவர்கள் மூங்கில்களை ஒன்றுடன் ஒன்று பின்னிப்பின்னிக் கட்டி மேலெடுத்துக் கொண்டு சென்றார்கள். உண்மையாகவே ஒரு மாபெரும் வலை. பந்தல் வலைபோல காற்றில் ஆடியது. நான்ஆடுதே நாடாரேஎன்றேன்.

சர்வாதிக்கார் பாக்கணும். இந்தா ஆயிரத்தெட்டு மூங்கில்கால் நாட்டியிருக்கு. எந்தக் காலாவது ஆடியிருக்கா? ஆடியிருந்தா மண்ணு விட்டு தெரியும், பாத்துக்கிடுங்க.”

பந்தலின் அடியில் ஊன்றப்பட்ட கால்கள் அசையவே இல்லை என்று கண்டேன்.

காற்றுக்கு சக்தி உண்டு. ஆனா அது ஒற்றைச் சக்தியாக்கும். அதை நாங்க மூங்கிலிலே வாங்கி பதினாயிரம், பத்து லெச்சம் சக்திகளா உடைச்சிருதோம். ஆனை முட்டினா பாறை உடையும். மணல்மேடுக்கு ஒண்ணுமாகாது. அதாக்கும் சூத்திரம்.” ஈத்தாமொழி அனந்தகிருஷ்ணன் நாடார் சொன்னார்.

மணப்பந்தல் முழுக்க மணக்குடிச் சந்தையில் வாங்கிய சிவப்பு வீராளிப்பட்டால் விதானம் அமைக்கப்பட்டிருந்தது. மேலிருந்து மலர்த்தொங்கல்களும் வட்டமலர் தோரணங்களும் இறங்கி ஆடின. தரையில் கடல்மணல் விரிக்கப்பட்டு அதன்மேல் பனையோலை பின்னிய அலங்காரப்பாய்கள் பரப்பப்பட்டிருந்தது.

பந்தலின் மேற்குமூலையில் கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருந்த மேடை மீனாக்ஷி சமேத சுந்தரேஸ்வரர் வந்து கோயில்கொண்டு மக்களுக்கு தரிசனம் தந்து பூஜைகளை ஏற்றுக்கொள்வதற்காக காத்திருந்தது. எட்டு முண்டன்பூதங்கள் கால்களாகி தாங்கி நின்ற மரத்தாலான மேடை. அதற்கு முன்னால் அதிகாலையில் அங்கே நடந்த ஹோமத்தின் செங்கல்கூட்டிய அக்னிகுண்டம் எஞ்சும் மெல்லிய புகையுடன் கருமை படிந்து தெரிந்தது. ஈசானமூலையில் சிறிய மரப்பீடத்தில் களிமண்ணால் செய்யபட்ட பந்தல் கணபதி அருகுமாலை அணிந்து அமர்ந்திருந்தார். அவருக்கு காலையிலேயே கொழுக்கட்டை படைக்கப்பட்டிருந்தது.

பந்தல் நடுவே மரத்தாலான மணவறையை அமைக்க பெருந்தச்சன் செறுப்பத்தூர் கோலப்பன் மூத்தாசாரி தலைமையில் எண்பதுபேர் வேலைசெய்தனர். கனிகொண்ட பலாமரத்தை வெட்டி அறுத்து செய்யப்பட்ட மணவறை அலங்காரத் தேர்போலிருந்தது. அதன்மேல் கோபுரக்கூரையில் முதலடுக்கில் பூதகணாதிகளும், மேலே சென்ற அடுக்குகளில் கந்தர்வர்களும் கின்னரர்களும் யட்சர்களும், உச்சியில் திசைத்தேவர்களும் செதுக்கப்பட்டனர். பச்சை அரக்கு மணத்துடன் பொன்னிற மரத்தில் எழுந்த மணவறை குளித்துவிட்டு வந்த கன்னியின் உடல்போல் மெருகு கொண்டிருந்தது.

மணவறையில் வைக்கவேண்டிய பித்தளைக் குத்துவிளக்குகளும் தூக்குவிளக்குகளும் மங்கலச்சடங்குகளுக்கான செம்புக் கலங்களும் ஓட்டு பாத்திரங்களும் நீரோடிப்புதூர் அனந்தன் மூசாரியின் குடும்பத்தினரால் புதிதாக வார்க்கப்பட்டன. அவை ஒருநாள் முன்னரே வந்திறங்கின. தெங்கம்பூ நிறத்துப் பித்தளை, மாந்தளிர் நிறத்து செம்பு. ஒவ்வொன்றும் தேவிக்காக வெறுமையில் இருந்து எழுவன போல உருவாகி வந்தவை. எங்கெங்கோ அவை அவளுக்காக காத்து நின்றிருந்தன. உலோகங்களில், கைகளில், மனங்களில், கனவுகளில்.

பாத்திரம் பண்டமெல்லாம் மணவறைக்கு வந்தாச்சா?” என்றேன்.

ஆதிகேசவப்பெருமாள் நாடார்அதெல்லாம் நேத்தே வந்து பந்தலிலே இருக்கப்பட்ட கலவறையிலே வைச்சாச்சு. பூ மட்டும்தான் வரணும்என்றார்.

இன்னும் என்ன? இன்னும் என்ன மிஞ்சியிருக்கிறது? பந்தல், மணவறை, பட்டுவிதானங்கள், கலங்கள், விளக்குகள், பூஜைப்பொருட்கள், பூக்கள். இன்னும் என்ன? இன்னும் என்ன?

நான் எங்கு செல்கிறேன் என்று உணராதவனாக கோயில் நோக்கிச் சென்றேன். கோயில்காவல் கொண்டையன்குடி மறவர்கள் அப்போதும் என்னை சோதனைசெய்து தலைப்பாகையை கழற்றும்படிச் சொல்லித்தான் உள்ளே அனுப்பினார்கள்.

கோயிலில் பரகோடி கண்டன் சாஸ்தாவுக்கு பூசை நடந்து கொண்டிருந்தது. மகாராஜா உள்ளே வழிபடுவதனால் மக்களை வெளியே தடுத்து நிறுத்தியிருந்தனர். அவர்களின் ஓசை காட்டில் காற்றின் ஓசை போல கேட்டுக்கொண்டிருந்தது. தூரத்து மலைமடிப்புகளில் எதிரொலித்து திரும்பி வந்தது.

நான் உள்ளே சென்று நின்றேன். மீனாக்ஷியம்மையையும் சுந்தரேஸ்வரரையும் மகாராஜா வந்து முறைப்படி வணங்கி விட்டிருந்தார். ஆகவே பட்டுத்திரையிட்டு மறைத்து, காலையலங்காரம் களைந்து மங்கல அலங்காரம் செய்துகொண்டிருந்தார்கள். சிறிய கோயில், ஆகவே உள்ளே நாலைந்துபேர் நிற்க மட்டுமே இடமிருந்தது.

பரகோடி கண்டன் சாஸ்தா அர்த்தயோக உபவிஷ்ட நிலையில் இடக்காலை தொங்கவிட்டு கஜபீடத்தில் அமர்ந்திருந்தார். வலக்கையில் செண்டாயுதம். இடக்கை முழங்கால் மேல் சகஜஸ்திதியில் இருந்தது. மலர் விசிறி போல விரிந்த சடையலங்காரம். பீடத்தின்கீழே யானையின் புடைப்புச்சிலை.

சாஸ்தாவுக்கு தீபாராதனை காட்டப்பட்டது. மகாராஜா எட்டுறுப்பும் நிலம்தொட விழுந்து வணங்கினார். தீபம் தொட்டு வணங்கி சந்தனப்பிரசாதம் பெற்று திரும்பி அருகே நின்றிருந்த கொட்டாரம் ராயசம் கிருஷ்ணப்பையரிடம் ஏதோ சொன்னார். அதன்பின்னரே என்னைப் பார்த்தார்.

நான் அருகே சென்று நின்றேன். மகாராஜாவின் கண்கள் சிவந்திருந்தன. அவர் மது அருந்தியிருப்பதாகவே தோன்றும். ஆனால் அவர் பலநாட்களாகவே நோன்பில் இருந்தார்.

மகாராஜாஅவங்க கிளம்பியாச்சா?” என்றார்.

அடியேன். வந்திருவாங்கமிஞ்சிப்போனா ஒரு நாழிகை நேரம்என்றேன்.

அவங்களை நான் வரவேல்கணுமோ?” என்றார் மகாராஜா  “திவான் அப்டி சொன்னாரே.”

அடியேன். வேண்டியதில்லை. அவங்க இங்கே வழிபாடுக்கு வாறாங்க…” என்றேன். “ஆனா இந்த திருக்கல்யணச் சடங்கிலே அவங்கதான் மணவாளன் வீட்டுக்காரங்க. அவங்க செய்யவேண்டியது பலது இருக்கு.”

அதுக்கு அவங்க கிட்டே பொருளும் வசதியும் இருக்கா? வேண்டியது நாம செய்திருவோம்என்று மகாராஜா கேட்டார்.

அடியேன், நாம சொன்னதுமே அவங்க திருநெல்வேலியிலே இருந்து எல்லாத்தையும் ஏற்பாடு செய்திட்டாங்க. அங்கேருந்து நூற்றுவர் படையே சகல வைபவங்களோடும் வந்து சேந்திருக்குஏழு யானையும் இருபத்தொரு குதிரையும் பன்னிரண்டு பல்லக்குகளும் வந்திருக்கு. மணவாளன் சீரிலே ஒண்ணும் குறையாதுன்னு ராயசம் எங்கிட்டே சொன்னார்.”

என்றார் மகாராஜா.

நானே அதை பலமுறை அவரிடம் சொல்லியிருந்தேன். அவர் உள்ளமும் என்னைப் போலவே குழம்பிக் கலங்கியிருந்தது.

அங்க அவங்களும் விழா எடுப்பாங்க இல்லியா?”

அடியேன். அம்மை அவங்க மண்ணிலே கால்வைக்கிற இடத்திலே மிகப்பெரிய விழா ஏற்பாடு செஞ்சிருக்காங்க.  சேர்மாதேவி எல்லையிலே ஏழுநிலை பந்தல் கட்டியிருக்கு. நாலாயிரம் பேருள்ள மறவப்படை அங்கே காவலுக்கு நின்னிட்டிருக்கு. லக்ஷம் ஜனங்க வருவாங்கன்னு கணக்கு. திருநெல்வேலி தளவாய் பகடாலு நிருபதி நாயக்கரும் தம்பி நரசிம்ம நாயக்கரும் நேரிலே வந்து அம்மையை எதிரேல்கிறாங்க. அப்டியே திருநெல்வேலி கொண்டுபோயி நெல்லையப்பன் கோயிலிலே மூணுநாள் வைச்சிருப்பாங்க. அங்கே சர்வஜன தர்சனமும் பூஜைகளும் உண்டு. நெல்லையப்பனும் காந்திமதியும் நகரத்து எல்லையிலேயே வந்து மணமக்களை எதிரேற்று கூட்டிட்டுப்போயி தங்கவைச்சு விருந்து குடுத்து அனுப்புறதா சடங்கு.”

மகாராஜா கைகூப்பிவெகுசிறப்புஎன்றார்.

அடியேன். அப்டியே வடக்கே கங்கைகொண்டான், சீவில்லிப்புத்தூர்னு எல்லா கோயிலிலேயும் புதுமணத் தம்பதிகளுக்கு விருந்துக் கொண்டாட்டம் உண்டு. மதுரைக்கு அம்மை போய்ச்சேர ஆவணியிலே நாள் குறிச்சிருக்காங்கஆவணி மூலநட்சத்திரத்திலேஅவங்க எல்லாமே பெரிய அளவிலே ஏற்பாடு செய்றாங்க. ஸ்ரீவிஜயநகரத்திலே இருந்து பெரியநாயக்கர் குடும்பத்துப் பெண்டுகளெல்லாம் வாறதாச் சொன்னாங்க. காஞ்சி தேவராஜப் பெருமாளோட சீர்வரிசைகளோட குமாரகம்பண நாயக்கர் மதுரைக்கு வாறார். அவர் தம்பி சின்ன அச்சுதப்ப நாயக்கர் சீரங்கப்பெருமாளோட சீர்வரிசையோட வாறார். மகாராணி கங்கம்மா தேவி இப்பவே மதுரைக்கு வந்தாச்சுகோயில் புனருத்தாரண வேலைகளை தளவாய் ரங்கப்ப நாயக்கரே நின்னு நேர்நோக்கி நடத்திட்டிருக்கார்

மகாராஜாஅவங்களுக்கென்ன, மகாசாம்ராஜ்யம்என்றார். “ஆனா, அம்மைக்கு அறுபத்தொன்பது ஆண்டுக்காலம் வேணாட்டு ராஜாக்களுடைய எளிய பூஜைகளை குடுக்க விதி அமைஞ்சுது.”

நான்அடியேன், அது நம்ம பாக்கியம்என்றேன்.

[ 11 ]

அரசர் இளைப்பாறுவதற்காக அமைக்கப்பட்டிருந்த கொட்டகைக்கு அவரை அழைத்துச்சென்று தங்கவைத்துவிட்டு நான் வெளியே வந்தபோது திவான் நாகமையாவும் அவருடைய துணைவன் சம்பிரதி கிருஷ்ணையாவும் என்னை நோக்கி ஓடிவந்தார்கள்.

அவங்கள்லாம் வந்தாச்சுஇப்ப ஆரல்வாய்மொழி கோட்டையை நெருங்கிடுவாங்க. எங்கே மகாராஜா?” என்றார் திவான்.

அவரு கொஞ்சம் படுத்திருக்கார். காலம்பற எந்திரிச்ச களைப்பு. இன்னும் சடங்குகள் பலதும் உண்டுல்ல?”

என்ன சொல்றீர்? தளவாய் வெங்கப்ப நாயக்கரும் ராயசம் விஜயரங்கய்யாவும், தக்ஷிணாதி மடத்து சுவாமி நாராயண பட்டாச்சாரியரும் வாராங்க. அவங்கதான் மணவாள பக்ஷம். நாம பொண்ணு பக்ஷம். நமக்கு கடமை இருக்கு.” என்றார் திவான். “மகாராஜா எழுந்தருளி அவங்களை நேரிலே வரவேல்கணும். அதாக்கும் முறை. நாளைப்பின்னை மருதையிலே இருந்து ஏதாவது கேள்விமுறை வந்தா நான் ஜவாப் இல்லை

அவங்க இப்ப வாறது மணவறைக்கு இல்லை. அவங்க வந்து சாஸ்தாவையும் தேவியையும் சேவிக்கணும். அதுக்குப் பின்னாலே தேவியும் சுந்தரேசரும் மணப்பந்தலிலே கோயில் கொள்ளணும். அதுக்குமேலேதான் திருக்கல்யாணம். அப்பதான் அவங்க மணவாளன் கோஷ்டி…”

அதெப்டி…”

இப்ப நீங்களே போயி மணவாளன் கோஷ்டியை வரவேற்று கூட்டிவந்து கோயில்தர்சனம் பண்ணி வையுங்க. தளவாய் கூட இருக்கட்டும்.”

நானா?”

திவான் ஜக்கால நாகமையாவும் தளவாய் இடக்குளம் நாராயணக் குறுப்பும் இருந்தா வேணாட்டு ராஜாவே இருந்த மாதிரிநீங்க போதும்.”

அதை நான் பாத்துக்கிடுறேன்என்றார் திவான். “அதெல்லாம் என்னதுன்னு எனக்கு தெரியும்

திவான் போனா மகாராஜா போனதாத்தான் சாஸ்திரம்..” என்றேன்

அவர் கொஞ்சம் முகம் மலர்ந்துஅது உள்ளதாக்கும். இருந்தாலும்…” என்றார்

தளவாயும் வாறாருல்லா?”என்றேன்

செரி, நாங்க பாத்துக்கிடுதோம்

அவர்கள் திரும்பி ஆரல்வாய்மொழி கோட்டைமுகப்பு நோக்கி ஓடினர். நான் அவர்களை பார்த்துக்கொண்டிருந்தேன். மெய்யாகவே அவர்கள் தங்கள் சொந்த விஷயம் பற்றி மட்டுமே நினைக்கிறார்களா? இல்லை. அவர்களுக்கு இத்தனை பெரிய விழாவை மனதால் அள்ள முடியவில்லை. இந்த பெருக்கில் ஏதோ ஒன்றை பற்றிக்கொண்டு அதை மட்டுமே செய்துகொண்டிருக்கிறார்கள். வேறேதும் கண்ணுக்குப் படவில்லை.

திருமஞ்சன நீர் கொண்டுவந்த மீனவர்கள் ஆரல்வாய்மொழியை எட்டிவிட்டார்கள் என்பது வானில் எழுந்து வெடித்த எரியம்பால் தெரிந்தது. நான் சற்று ஆறுதல் அடைந்தேன். என் நரம்புகள் ஒவ்வொன்றாக தளரத் தொடங்கின.

எங்காவது விலகி அமர்ந்து சற்று ஓய்வெடுக்காவிட்டால் நான் தளர்ந்து விழுந்துவிடுவேன் என்று தோன்றியது. ஆகவே மலைச்சரிவில் ஏறி மேலே சென்றேன். அங்கிருந்த பாறை ஒன்றின்மேல் ஏறி அமர்ந்தேன். நான் அமர்ந்து நீண்டநேரமாகிறது என்று என் கால்களின் தசைகள் உணர்த்தின. நான் பாறையிலேயே படுத்து முதுகை நிமிர்த்தினேன். முரசொலியும் கொம்பொலியும் கேட்டுக்கொண்டே இருந்தன.

சற்றுநேரம்தான் துயின்றிருப்பேன். விழித்துக்கொண்டபோது முதலில் எங்கிருக்கிறோம் என்று தெரியவில்லை. கொம்பின் பிளிறலை யானையோசை என கேட்டு கனவு கண்டிருந்தேன். உடல் நடுங்க எழுந்தபோது அனைத்தும் புரிந்தது. உடனே உள்ளம் முழுவிசையை அடைந்தது. அந்தச் சிறுபொழுதுத் துயிலே என்னை புத்துணர்வடையச் செய்திருந்தது.

பொழுது விடியத் தொடங்கியிருந்தது. என்னைச்சுற்றி கொசுக்கள் ஒளிர்ந்த சிறகுகளுடன் சுழன்றன. இலைப்பரப்புகளில் மெல்லிய ஒளி. நிழல்கள் விழத்தொடங்கியிருக்கவில்லை. ஒவ்வொன்றும் ஒளியாலேயே குளிர்ந்திருந்தன. நான் எழுந்து சென்று மரத்தடியில் நின்று கச்சையை இறுக்கியபடி கீழே பார்த்தேன்.

ஆரல்வாய்மொழி கோட்டை முகப்பில் இருந்து திவான் ஜக்கால நாகமையாவும் தளவாய் இடக்குளம் நாராயணக் குறுப்பும் இணைந்து தளவாய் வெங்கப்ப நாயக்கரையும் ராயசம் விஜயரங்கய்யாவையும், தக்ஷிணாதி மடத்து சுவாமி நாராயண பட்டாச்சாரியரையும் வரவேற்று மேலே அழைத்து வந்தனர். அவர்களுடன் வந்த நூற்றுவர்படையும் அணியூர்வலமும் பிரிந்து மணப்பந்தலுக்கு வடக்காக அமைக்கப்பட்டிருந்த மணவாள மாளிகை நோக்கிச் சென்றன.

தளவாய் வெங்கப்ப நாயக்கர் நாயக்க அரசகுடியினருக்குரிய முறையில் நீண்ட கூந்தலை சுருட்டி தலைமேல் வலப்பக்கச் சரிவாக கொண்டைகட்டி, அதன்மேல் பட்டுத்துணிசுற்றி நீள்கூம்புவடிவாக அமைத்து, அதைச்சுற்றி பட்டுத்தலைப்பாகை அணிந்திருந்தார். தலைப்பாகைமேல் மணியாரங்கள் சுற்றப்பட்டிருந்தன. நீண்ட வடிகாதுகளின் தங்க வளையங்கள் காசுமாலைபோல் அடுக்கப்பட்டு தோள் தொட்டு தொங்கின. கழுத்தில் சரப்பொளியும் முத்தாரங்களும் பதக்கமாலையும் அணிந்திருந்தார். இடையில் செம்பட்டுக் கச்சையில் அலங்காரமணிகள் பதிக்கப்பட்ட தங்க உறைகொண்ட குத்துவாள். நிலைக்கச்சமாக வெண்பட்டு கீழாடை. பித்தளைக்குறடுகள். கைகளின் கங்கணமும் வளையல்களும். விரல்களிலெல்லாம் வைரங்கள் மின்னும் மோதிரங்கள்.

ராயசம் விஜயரங்கையா வெண்பட்டாடை அணிந்து கழுத்தில் மகரகண்டிகை மட்டும் அணிந்திருந்தார்.நாராயணப் பட்டாச்சாரியார் அவர்களின் சம்பிரதாயப்படி நீள்சந்தனப் பொட்டணிந்திருந்தார். அவர்களுக்குமேல் பட்டுத்துணியாலான கூரைப்பட்டத்தை இரு வீரர்கள் தூக்கிப் பிடித்திருந்தனர். தளவாய் நாராயணக் குறுப்பு வழக்கம் போல வாளை உருவி கையில் பிடித்தபடி வழிக்காவலன் போல நடந்து வந்தார். திவான் நாகமையா குழைந்து குழைந்து தளவாய் வெங்கப்ப நாயக்கரிடம் பேசிக்கொண்டு வந்தார்.

நான் கைகளை தூக்கிச் சோம்பல் முறித்தபடி கீழிறங்கி மணப்பந்தல் நோக்கிச் சென்றேன். கண்ணன்குட்டி நாயர் என்னருகே வந்து வணங்கிஅடியேன், தேடிட்டிருந்தேன்என்றார்.

சொல்லுஎன்றேன்

கன்யாகுமரியிலே இருந்து திருமஞ்சன நீர் வந்தாச்சுஎன்றார்.

இப்ப நாயக்கர் படைத்தளவாய் அங்கே தேவியை கும்பிட்டுட்டு இருக்கார். அது முடிஞ்சதும் அவங்களை உள்ளே விடலாம். அவங்க வழிபட்டு திருமஞ்சனநீரை சமர்ப்பணம் பண்ணினதும் தேவியை மண்டபத்துக்கு எழுந்தருளப் பண்ணலாம்எதுவானாலும் சிவாச்சாரியார்கிட்டே கேட்டு அவங்க சொல்றது மாதிரி நடக்கட்டும்.” என்றேன்.

அவர் வணங்கி விடைபெற்றதும் நான் நிறைவாக உணர்ந்தேன். எல்லாம் முறைப்படி சென்றுகொண்டிருக்கிறது. ஒன்றும் தவறவில்லை. கணக்குகள் எல்லாமே சரியாகப் பொருந்திக்கொண்டிருக்கின்றன.

மகாராஜாவை சென்று பார்க்கவேண்டும் என்று நான் எண்ணியபோது திருவட்டார் ஆலயத்து சம்பிரதி வலியபிறுத்தா நாயர் குதிரையில் விரைந்து வருவதைக் கண்டேன். அருகிலிருந்த வீரனிடம் குதிரையை பெற்றுக்கொண்டு அதில் ஏறி கீழிறங்கி சாலையை நோக்கிச் சென்றேன்.

வலிய பிறுத்தா நாயர் குதிரையை விரைவழியச் செய்யாமலேயே அதிலிருந்து பாய்ந்திறங்கி என்னை நோக்கி ஓடிவந்து மூச்சிரைக்கசெய்தி அறிவிக்க சமயமில்லை. அதனாலே நானே முன்னாலே வந்தேன்என்றார்.

சொல்லுஎன்றேன். தீயசெய்தி அல்ல என்று அவர் முகமே சொல்லிவிட்டது.

இன்றைக்கு காலை சரஸ்வதி யாமத்தில் ஆதிகேசவனுக்கு புலரிபூஜை செய்ய திருக்கோயில் நம்பி கிளம்பிப் போகிறநேரத்திலே சிவீந்திரம் சிறமடம் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு அனுப்பிய தூதன் வந்து வாசலிலே நின்னுட்டிந்தான். அவன் சிறமடம் காரியஸ்தன் கோட்டாடி அச்சுதன் நாயர். அவன்கிட்டே திருமேனி குடுத்தனுப்பின ஓலை இருந்தது. ஓலையிலே அவனுக்கான உத்தரவு மட்டும்தான். நம்பிக்கான வார்த்தையை அவன் வாயாலே சொன்னான்என்றார் வலிய பிறுத்தா நாயர்.

அவர் தந்த அந்த ஓலையை நான் வாங்கிக்கொண்டேன். அதில் சிவீந்திரம் சிறமடம் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு எழுதிய கைக்குறிப்பு இருந்தது.

வலிய பிறுத்தா நாயர் சொன்னார்.“ஆதிகேசவப்பெருமாளை பூர்ணாலங்காரத்தோடே உடனே எழுந்தருளப் பண்ணி குதிரைபூட்டிய தேரிலே வைச்சு நேரா ஆரல்வாய்மொழி மீனாக்ஷியம்மை கோயிலுக்கு கொண்டு வந்திரணும்னு சிறமடம் திருமேனி சொல்லியிருந்தார். ஆதிகேசவன் இந்நாட்டுக்கு அதிபன். முக்கடல் பெற்ற அம்மைக்க சொந்த அண்ணன் அவரு. வேணாட்டு மகாராஜா ஸ்ரீமீனாக்ஷி தேவிக்கு தந்தையா உக்காரணும். மகாராஜாவுக்கு மகனா, அம்மைக்கு அண்ணனா ஆதிகேசவன் நின்று தேவியோட கையைப் பிடிச்சு சுந்தரேசனுக்கு குடுக்கணும்

சிறமடம் திருமேனி நேத்து ஒரு கனவு கண்டிருக்கிறார். அதிலே ஆதிகேசவன் தன் திருக்கையாலே தேவி கையைப் பிடிச்சு மகாதேவனுக்கு குடுக்கிறதைப் பார்த்திருக்கார்… ‘மகன் மூத்து தந்தை, தந்தை மூத்து மகன்னு சொல்லு உண்டுன்னு சிறமடம் திருமேனி சொன்னாராம். அந்தச் சொல்லு, போதும்னு நம்பி ஆணை போட்டார். உடனே தேரைப்பூட்டி கிளம்பிட்டோம். உற்சவமூர்த்தியை தேரிலேற்றி கொண்டு வாறோம். இப்ப தேரும் அகம்படியும் தோவாளை தாண்டியாச்சு. எங்கயும் பூசைக்கும் ஓய்வுக்கும் நிக்கல்லைகொச்சுநம்பி தேரிலே இருக்கார்வலிய பிறுத்தா நாயர் சொன்னார்.

நான் நெஞ்சுக்குள் எடைமிக்க எதையோ உணர்ந்தேன். மனச்சுமை அத்தனை இனிதாக இருக்குமென்று அதற்கு முன் உணர்ந்ததே இல்லை. “வரட்டும்நாமென்ன சொல்ல? தெய்வங்கள் ஆடுற விளையாட்டுஎன்றேன்.

அடியேன் இந்த செய்தியை மகாராஜாகிட்டே சொல்லணும் அல்லவா?”

அதை நான் சொல்லிக்கிடறேன். நீங்க போயி சிவாச்சாரியார் கிட்டே சொல்லணும்தேவிகல்யாணத்தை நடத்திவைக்கப்போகிறவர் அவர்தான்என்றேன்.

அவர் மேலே சென்றபின் சற்றுநேரம் செயலோய்ந்து அந்தச் சூழலைப் பார்த்தபடி நின்றிருந்தேன். எங்கும் திரள், எல்லாமே முகங்கள். எல்லா முகங்களும் ஒரே உணர்ச்சி கொண்டிருந்தன. திருவிழாக்களில் மட்டும்தான் இப்படி அனைத்து மானுட முகங்களும் ஒன்றாகின்றன. குறிப்பாக வண்ண ஆடைகளும் நகைகளும் அணிந்து காலை வெயில் பட்டுச் சுண்டிய முகத்துடன், துயில்நீத்து சற்றே வீங்கிய கண்களுடன் இருந்த பெண்கள் அனைவரும் பித்தெழுந்தவர்கள் போலிருந்தனர்.

விருந்துக்கான ஏற்பாடுகளை முழுக்கவே கோட்டை எஜமானன்தான் பார்த்துக்கொண்டார். அதற்கான பொருட்களை கொண்டுவந்து சேர்ப்பதை ஆளூர் முதலடி நாராயண பிள்ளையும் கடுக்கரை மூத்தபிள்ளை அழகியநம்பி குன்றுடையாரும் பொறுப்பேற்றுக் கொண்டிருந்தனர். ஊட்டுபுரைக்காவல் அழகியபாண்டிபுரம் மழவராயன் சண்முகசுந்தரம் பிள்ளை. வேலைகளை பிரித்தளித்ததுமே நான் விடுதலை பெற்றுவிட்டேன்.

ஆனால் ஊட்டுபுரைகள் ஒவ்வொன்றும் வெவ்வேறு இடங்களில், கோயிலில் இருந்து மிகத்தள்ளி அரைநாழிகை முதல் ஒருநாழிகை வரை தொலைவில் இருந்தன. மூங்கில் நாட்டி கூரையிடப்பட்ட கொட்டகைகள் அவை. ஒவ்வொரு கொட்டகையிலும் நான்கு வரிசைகளாக ஆயிரம் பேர் அமரமுடியும். மொத்தம் நாற்பத்தெட்டு இடங்களிலாக நூற்றைம்பது கொட்டகைகளில் விருந்து.

ரொம்ப தள்ளிப்போச்சோ? இங்கியே எடமிருக்கே?” என்றேன்.

இந்தவழியா உள்ளபோயி அம்மையை கும்பிட்டுட்டு அப்டியே இறங்கி போய் ஊட்டுபுரைகளிலே சாப்பிடவேண்டியதுதான். ஒரு ஊட்டுபுரை நிறைஞ்சா இன்னொரு ஊட்டுபுரைக்குப் போகணும். நிறைஞ்ச ஊட்டுபுரையிலே மஞ்சள்கொடி பறக்கும். இடமிருக்கிற ஊட்டுபுரையிலே சிவப்புக்கொடி பறக்கும்…” என்றார் ஆளூர் நாராயண பிள்ளை.

ஊட்டுபுரை கட்டுறது பெரிசில்லை. தண்ணி வேணும். ஒரு பந்திக்கு ஆயிரம்பேரு. பத்து பந்தின்னா பத்தாயிரம்னு கணக்கு. பத்தாயிரம்பேரு ரெண்டுநேரம் கை கழுவணுமானா எவ்ளவு தண்ணி வேணும். கிணறுதோண்டி இறைச்சு மாளாது. மலைமேலே ஒரு ஓடை இருக்கு. அதை அங்கேருந்து திசை திருப்பி கொண்டு வாறதுக்கு ஏற்பாடாகியிருக்குஎன்று அழகியநம்பி குன்றுடையார் சொன்னார்.

ஓடைவெட்டி கொண்டுவந்தா தண்ணி இந்த வேகாவெயிலிலே வீணாப்போயிரும். அதனாலே வழிமுழுக்க ஓடைக்குள்ளே கமுகுப்பாளை பதிச்சு வைச்சு ஒரு சொட்டு வீணாகாம கொண்டுட்டு வாறோம். இங்கே ஒரு ஊட்டுபுரைக்கு அஞ்சு சின்னக் குளம் வெட்டியிருக்கு. அதிலேயும் அடியிலே கமுகுப்பாளை பரப்பியிருக்கும். ஒரு குளம் நிறைஞ்ச தண்ணி அடுத்த குளத்துக்கு போகும்…”

அதன் பின் நான் அந்த பகுதிக்கே செல்லவில்லை. அது ஒரு தனி போர்க்களம் போலிருந்தது. அவற்றில் எவற்றையேனும் உள்ளத்தில் ஏற்றிக்கொண்டால் அதன்பின் நான் வேறெதையும் யோசிக்க முடியாது. ஒவ்வொரு ஊட்டுபுரைக்கும் தனித்தனியான சமையல்கூடங்கள். ஒவ்வொரு சமையல்கூடத்திற்கும் கீழே மையச்சாலையில் இருந்து வந்துசேரும் வண்டிச்சாலைகள் வெட்டப்பட்டன. மண்ணை இறுக்க நாளில்லை. ஆகவே மரப்பட்டை போட்டு அவை உறுதியாக்கப்பட்டன.

சமையலறைகளை ஒட்டி பொருட்களை வைக்கும் கலவறைகள், சமையற்காரர்கள் ஓய்வெடுக்கும் கொட்டகைகள், சமையலுக்கு தண்ணீர் அள்ளும் கிணறுகள், அவற்றுக்கு நீர் இறைக்கும் காளைகளும் அவற்றை ஓட்டுபவர்களும். ஒன்றிலிருந்து ஒன்றாக அந்த வேலை வளர்ந்துகொண்டே சென்றது.

மேலே முரசொலி எழுந்தது. நான் கோட்டை எஜமானனின் மாளிகை நோக்கிச் சென்றேன். அங்கே தூதர்கள் வந்து சொல்லிய செய்திகளைக் கேட்டு ஆணைகளை இட்டபடி அவர் உடலில் பத்து பேய்கள் கூடியவர் போல நின்றிருந்தார். நான் அவரை அணுகிய பின்னர்தான் என்னைப் பார்த்தார்.

திருவட்டாற்றிலிருந்து ஆதிகேசவப்பெருமாள் உத்சவத்திருமேனி தேரிலே வருது. அகம்படியும் இருக்கும்வந்திட்டிருக்கு. இப்ப தோவாளை தாண்டியாச்சுஎன்றேன்.

நான் சொன்னது அவருக்குப் புரியவில்லை. வாய் திறந்தபடி நின்றது.

முறையா வரவேற்று மேலே மணவறைப் பந்தலுக்கு அனுப்பணும்என்றேன்.

ஆதிகேசவ சாமியா?”

ஆமா, நம்பியோட.”

அதுக்கு என்ன சடங்கு? என்ன முறை?”

ஆதிகேசவன் இந்த மண்ணுக்கு ராஜா. ராஜாவுக்கு உசிதமான சடங்குகள் செய்யுங்கஎன்றேன்.

அவர் பிரமையுடன் தலையசைத்தார்.

நான் மேலே சென்றபோது மிக மிக நிதானமாக இருந்தேன். எப்படி அந்த நிதானம் எனக்கு வந்தது என்பதே எனக்குப் புரியவில்லை.

அரசர் கொட்டகையின் உள்ளறையில் துயிலெழுந்து ஆடைகளைச் சீரமைத்துக் கொண்டிருந்தார். சம்பிரதி முண்டத்தூர் செல்லப்பன் பிள்ளை அங்கே நின்றிருந்தார். நான்ராயசம் கிருஷ்ணப்பையர் எங்கே?” என்றேன்.

மகாராஜா பந்தலுக்கு எழுந்தருளணும்அங்கே மற்றவங்க பீடம்கொண்டாச்சான்னு பாத்துட்டு வரப் போயிருக்கார்.”

அதைப் பாத்துட்டுதானே ஆளனுப்புவாங்க?” என்றேன். ஒவ்வொருவரும் அவரவருக்குண்டான அசட்டுத்தனங்களைச் செய்யும் தருணம் இது என்று நினைத்துக்கொண்டேன்.

மகாராஜா என்னை பார்த்ததும்எல்லாம் ஒருக்கமா?” என்றார்.

அடியேன், மணமண்டபத்துக்கு தளவாய் வெங்கப்ப நாயக்கரும் கூட்டமும் போயாச்சு. நாட்டுநடப்புள்ள முறையெல்லாம் அங்கே நடந்திட்டிருக்கும். திருமனசு கல்பிச்சு சபைக்கு எழுந்தருளவேண்டிய நேரம் வாறப்போ நான் ஆளனுப்புறேன். என் ஆள் அச்சுதன் மாராயன் நேரிலே வந்து விளிப்பான். அப்ப திருமனசு எழுந்தருளிச் செய்தா போரும்

இப்ப நம்ம ராயசம் அங்கே போயிருக்காரே?”

நான் ஒன்றும் சொல்லவில்லை.

சரி, உன் ஆள் வரட்டும். இவர் கொஞ்சம் பதறிட்டிருக்கார்என்றார் மகாராஜா.

நான் திருவட்டார் ஆதிகேசவப்பெருமாள் வருவதைச் சொன்னேன். “சிறமடம் திருமேனியுடைய சொப்னத்தில் பெருமாள் எழுந்தருளி இதைச் சொல்லியிருக்கார்.”

இதென்னடே? நான் தேவிக்கு தந்தையா உக்காருறேன். ஆதிகேசவன் எனக்கும் என் குடிக்கும் ஆதிதாதன் அல்லவா? தந்தை எப்டிடே மகனாவான்?”

அப்போதுதான் நான் சிறமடம் திருமேனி சொன்ன வார்த்தையை நினைவுகூர்ந்தேன். “அடியேன், சிறமடம் திருமேனி ஒரு வார்த்தை சொல்லியிருக்கார். மகன் மூத்து தந்தை, தந்தை மூத்து மகன். நாம கூன் போடுறப்ப நிமுந்து நிக்கிற மகன் நமக்கு அப்பன். தம்புரானே, நம்ம மகனா வந்து நின்னிட்டிருக்கிறது மண்மறைஞ்ச தந்தையாக்கும்.”

மகாராஜா கைகூப்பிமெய்தான்என்றார்.

நான் தலைவணங்கி புறம் காட்டாமல் வெளியே சென்றேன். கல்யாணப்பந்தலில் இருந்து கொம்பொலியும் முரசொலியும் எழுந்தன. மணவாளன் வீட்டார் தங்குவதற்காக மணப்பந்தலுக்கு வடக்காக மலைச்சரிவில் மூங்கில்கொட்டகை போடப்பட்டிருந்தது. அதன் முகப்பு மூன்றாடுக்கு மாளிகைபோல அலங்கரிக்கப்பட்டிருந்தது. அதன் முகப்பில் நந்திக்கொடி பறந்தது.

தளவாய் வெங்கப்ப நாயக்கரையும் ராயசம் விஜயரங்கையாவையும் நாராயணப் பட்டாச்சாரியாரையும் திவான் நாகமையா அந்த கொட்டகைக்கு அழைத்துச் சென்றுகொண்டிருந்தார். அங்கே ஏற்கனவே அவர்களுடன் வந்த நூற்றுவர் படையும் பல்லக்குகளும் குதிரைகளும் யானைகளும் நின்றிருந்தன.

நான் கீழிறங்கிச் சென்றேன். வடக்கூர் நயினார் குலசேகர விநாயகரும் முத்தாலம்மையும் ஊரிலிருந்து எழுந்தருளி ஒர் ஓலைக்கொட்டகை ஆலயத்தில் கொலுக்கொண்டிருந்தனர். அங்கே உள்ளூர் பூசகரான மேகலிங்கப் பண்டாரம் பூசை செய்துகொண்டிருந்தார்.

பிள்ளையாரின் முன் நின்றிருந்த வடசேரி சுப்பையா ஆசாரியும் அவருடைய கூட்டமும் என்னை பார்த்து கைகூப்பினர். “என்ன ஆசாரியே?” என்றேன்.

தாலிபூசை நடக்குதுஎன்றார். உள்ளே பிள்ளையாரின் முன் தாலத்தில் பொற்தாலி வைக்கப்பட்டிருந்தது. மேகலிங்கப் பண்டாரம் அதற்கு மலரிட்டு வாழ்த்தினார்.

ஆயிரம் ஜென்ம புண்ணியம், பெத்த அம்மைக்குத் தாலி செய்யுத பாக்கியம் சித்திச்சிருக்கு. எங்க குலதெய்வம் வடசேரி ருத்ரகாளியம்மனுக்கும் விஸ்வகர்மனுக்கும் பூசைசெய்து தொடங்கின வேலை. அழகம்மனுக்கும் திருவாழிமார்பனுக்கும் பூசைசெய்து முடிச்சு இங்கே கொண்டாந்தோம். தேடிவந்த மெய்ப்பொருள்போலே விநாயகன் இங்கே இருக்கக் கண்டோம்.”

பூசை சீக்கிரம் முடியட்டும்அங்கே எல்லாம் ஒருங்கிக்கிட்டிருக்குஎன்று நான் சொன்னேன். அந்த தாலியை பார்த்தேன். பின்னர்ஆசாரி, தாலிக்குச் சாதியுண்டுல்லா? இந்தத் தாலி எந்த வகை?” என்றேன்.

அது எங்க கணக்கிலே சொல்லப்பட்டதாக்குமே. அம்மைக்கு முக்குவத்தாலிதான்என்றார் ஆசாரி. “அவளை தென்குமரித் துறையமர்ந்த தெய்வம்னுல்லா சொல்லுதாக. துறையள்னு பேரும் உண்டே?”

[ 12 ]

நான் என் ஏவலனிடம் இரணியசிங்கநல்லூரில் இருந்து எனக்கான விழா ஆடைகளையும் அணிகளையும் கொண்டுவரச் சொல்லியிருந்தேன். அவற்றை அவன் அரசருக்கான கொட்டகையில் ஒரு மூங்கில் பையில் வைத்திருந்தான். அவனுடன் காட்டுக்குள் சென்று அங்கிருந்த ஊற்றில் இன்னொரு முறை நீராடி புதிய ஆடைகளை அணிந்துகொண்டேன். தலைப்பாகையில் பொன்னாலான இலச்சினை சூடி, தங்கவேலைப்பாடு செய்த குத்துவாளை இடைக்கச்சையில் செருகி, மணிமாலைகளும் பதக்கமாலையும் அணிந்தேன். பித்தளைக் குறடுகள் அணிந்துகொண்டபோது என் உடலுக்குள் இருந்து என் தந்தை வெளிவந்ததுபோல் உணர்ந்தேன்.

அவ்வெண்ணம் என் நடையை மாற்றியது. என் தலையை தருக்கி நிமிரச் செய்தது. என் தந்தை தென்குளம் கட்டளைக்காரன் விஜயமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் மாம்பூ பொலிந்தது போல, மதகஜம் மலர்ச்செவி ஆட்டுவதுபோல போல பொன்பொலிய நடந்து அவை புகுந்ததைப் பற்றி ஆளூர் பாச்சன்குட்டி அண்ணாவி எழுதியஹிரணிய ஜயபுர விலாசம்என்ற பாடலில் வர்ணனை உண்டு. நான் அந்த பாடலை நூறுமுறையாவது கேட்டிருப்பேன். என் தந்தையைப்போல் ஆவதுதான் என் கனவு.

நாங்கள் மக்கள்த்தாய முறை கொண்டவர்கள். என் சிறியதந்தை தென்குளம் கட்டளைக்காரன் வீரகேரளன் கோதை செண்பகராமனும் எங்கள் குடும்பத்துப் பெண்களும் நேற்றே வந்து காட்டுக்குள் அவர்களுக்கு அளிக்கப்பட்ட குடிலில் தங்கியிருந்தனர். என் ஏவலன் பாச்சுமுத்தன் அவர்களை பார்த்துக்கொண்டான். அவன் அவர்களை மீனாக்ஷி அம்மையின் மணப்பந்தலுக்கு அழைத்துச் சென்றிருப்பான். அவர்களுக்கு அரசருக்கு அடுத்தபடியாக அரசமரியாதைகள் அளிக்கப்படும். என் சிறியதந்தைக்கு அரசருக்கு அருகே முன்னவையில் இருக்கை போடப்படும்.

என் நான்கு தம்பியரில் இளையவன் தென்குளம் கட்டளைக்காரன் ராஜகேசவன் சங்கரன் செண்பகராமன்  இரணியசிங்கநல்லூரை படைநிறுத்தி காவல் காத்தான் தென்குளம் கட்டளைக்காரன் கண்டன் மாதவன் செண்பகராமனும் தென்குளம் கட்டளைக்காரன் கடுத்தா செண்டன் செண்பகராமனும்  வடக்கே வேணாட்டு எல்லையில் திருப்பாப்பூர் அருகே படைநிறுத்தியிருந்தனர். திருப்பாம்பரம் எல்லையில் என் இளையவன் தென்குளம் கட்டளைக்காரன் வீரரவி ஆதித்தன் செண்பகராமன் படைநிறுத்தியிருந்தான்.

வேணாட்டின் மேல் எக்கணமும் படைகொண்டுவரச் சித்தமாக இருந்தன திருப்பாப்பூரும் திருப்பாம்பரமும். அவர்களுக்கு ஆதரவளிக்க ஜயத்துங்கநாடு எப்போதும் ஒருக்கமாக இருந்தது. கிழக்கு எல்லைகளில் அச்சமில்லை. நாயக்கர்கள் மதுரையை கைப்பற்றியதுமே களக்காடு, தென்காசி பாண்டியர்கள் முற்றிலும் அடங்கிவிட்டனர். இந்த நாடெங்கும் என் தந்தை பரவியிருந்தார். ஆலமரத்தின் வேர் ஊரெங்கும் நிறைந்திருப்பதுபோல.

நான் மணப்பந்தலுக்குள் நுழைந்தபோது அவை நிறைந்துவிட்டிருந்தது. வேணாட்டின் பதினெட்டு மாடம்பிக்கோட்டங்களில் இருந்தும் மாடம்பி நாயர்கள் தங்கள் படைத்துணைவர்களுடன் வந்திருந்தனர். அவர்களை வரவேற்று உரியமுறையில் இருப்பிடம் அளித்து அமைக்கும் பொறுப்பை சம்பிரதி நாராயண பிள்ளையும், சம்பிரதி கொச்சுகுஞ்சன் பிள்ளையும் ஏற்றுக்கொண்டு நடத்தினர்.

மாடம்பிகளை அவைகளில் அமரச்செய்வது பெரும்பாடு. அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கு அளிக்கப்படும் இடத்தைவிட மேலான இடம்பெற உரிமையுண்டு என்னும் எண்ணம் இருந்தது. அதை எதிர்கொள்ள சம்பிரதி நிலையிலுள்ள ஊழியர்களால்தான் இயலும். அவர்கள் கிழவர்களாகவும் இருகவேண்டும். அவர்கள்தான் மாடம்பிகள் எகிற எகிற நயந்து நயந்து பேசி, ஆனால் முன்னரே முடிவுசெய்த இடங்களிலேயே அவர்களை அமரச்செய்வார்கள். நான் அங்கிருந்தால் பூசல்தான் விளையும். ஒருபேச்சுக்கு மறுபேச்சாக வாளை உருவி விடுவேன்.

மாடம்பிகள் ஒவ்வொருவரும் தங்களுக்குரிய கொடியடையாளத்தை சிறுகழியில் பொறித்து மேலே தெரியும்படி அருகே நிறுத்தியிருந்தனர். தங்கள் குடிவழக்கப்படி பருந்தின் இறகும், பனையோலை குச்சமும், மலையணில் வாலும்  சூடிய பட்டுத்தலைப்பாகைகளை வைத்திருந்தனர். பட்டுமேலாடைகள், பொன்னணி நகைகள், நாகம் சுற்றியதுபோன்ற கங்கணங்கள், பொன்வேலைப்பாடுகள் கொண்ட உடைவாள்கள். ஒவ்வொரு மாடம்பியின் அருகிலும் அவர்களுக்கு உதவியாக அவர்களின் சம்பிரதிகள். பெரும்பாலானவர்கள் சமையற்கட்டுச் சாயல் கொண்ட பரதேசப் பிராமணர்கள். அவர்களுக்கு அமாத்யர்கள் என்று நினைப்பு.

பந்தலுக்குள் நான் நுழைந்ததும் மாடம்பிகள் திரும்பிப் பார்த்தனர். ஆனால் எவரும் எழுந்து முகமனுரைக்கவோ வணங்கவோ செய்யவில்லை. அது அவர்களின் வழக்கம். அவர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களே வேணாட்டு அரசர்கள் என எண்ணம். அவர்களில் பலர் சோழர் காலகட்டத்தில் கோட்டங்களின் வரிகொள்வோராக சிறுபடைகளுடன் நிறுத்தப்பட்டவர்கள். அவர்களுக்கு இருக்கும் மழவராயன், மன்றாடியன் போன்ற பட்டங்களெல்லாம் சோழர்கள் அளித்தவை. எங்கள் குடும்பத்தின் செண்பகராமன் பட்டம் மட்டுமே பழைய ஆய்வேளிர் காலம் முதல் வருவது.சோழர்கள் அதை எங்களுக்கு திருப்பி அளித்தனர்.

வேணாட்டின் எட்டு கோயிலதிகாரிகளும் வந்திருந்தனர். கன்யாகுமரி, சிவீந்திரம், பறக்கை, பாறசாலை, திருவட்டாறு, திற்பரப்பு, காந்தளூர்சாலை, அனந்தபுரி ஆகிய ஆலயங்களின் தலைவர்கள். அவர்களும் தங்களை அரசர்களாக கருதிக்கொண்டவர்கள். அவர்களுடைய நிலங்களுக்கு வரி இல்லை. ஆலய வருவாய்க்கு அரசர் கணக்கு கேட்க முடியாது. அவர்களும் சோழர்காலத்தவர்கள்.

எட்டுவீட்டில் பிள்ளைமார்கள் அவைகொண்டிருந்தனர். ராமனாமடத்துப் பிள்ளை, மார்தாண்ட மடத்துப் பிள்ளை, குளத்தூர் பிள்ளை, கழக்கூட்டத்துப் பிள்ளை, செம்பழஞ்சிப் பிள்ளை, பள்ளிச்சல் பிள்ளை, குடமண் பிள்ளை, வெங்ஙானூர் பிள்ளை என எட்டுபேருமே அவர்கள் மண்ணில் கேட்பாரற்று தனியரசுதான் நடத்தி வந்தனர். எட்டுபேருமே சோழர்காலத்தைய மக்கள்தாயத்தவர். வேணாட்டு மருமக்கத்தாயத்துக்கு எதிரானவர்கள். மக்கள்தாயத்தவனாகிய நான் அரசரின்சார்பில் நிற்பதில் பகை கொண்டவர்கள்.

வேணாட்டின் ஒவ்வொரு கோட்டமும் பதினெட்டு பிடாகைகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது. பிடாகைகளில் தலைவர்கள் அனைவரும் வந்து பந்தல் நிறைத்து அமர்ந்திருந்தனர்.  அவர்களில் வேளாளர்களும் நாயர்களும் தனித்தனியாக பிரிந்திருந்தனர். அவர்கள் மேலாடை, தலைப்பாகை அணியும் விதமே அவர்களை வேறுபடுத்தியது. கரைச்செட்டிகள், வாணியச்செட்டிகள், இல்லத்துநாடார்கள், கைப்பள்ளிகள் என அந்தந்த சாதியினர் அவர்களுக்குரிய தலைப்பாகைகளுடன் தெரிந்தனர்.

பந்தலின் வலப்பக்கம் முழுக்க பிராமணர்கள். சிவீந்திரத்தின் எட்டு நம்பூதிரி மடங்களில் இருந்தும் மூத்தநம்பூதிரிகள் வந்து முதன்மை இருக்கைகளில் அமர்ந்திருந்தனர். ஸ்மார்த்தர்களில் சோழப்பிராமணர், பாண்டிப்பிராமணர் அவரவர் குடுமிகளாலேயே அடையாளம் காணத்தக்கவர்கள். அங்கே வைதிகர்களுக்கும் பண்டிதர்களுக்குமே இடம் என்றாலும் அவர்களை மதிப்பிட ஆளில்லை. ஆகவே யக்ஞோபவீதம் அணிந்த எவரும் அங்கிருக்கலாம். நியோகி பிராமணர்கள் பலர் இடையில் குறுவாளுடன் அமர்ந்திருந்தனர்.

அரசர் அமர்வதற்குரிய அரியணை அப்போதுதான் பொருத்தப்பட்டுக் கொண்டிருந்தது. அது மிகப்பழையது. தொல்சேர குலத்து ஆய் மன்னர்கள் அமர்ந்த அரியணை. இரண்டடி உயரமானது, சாய்வு இல்லாதது. அணிகளோ செதுக்கோ அற்றது. ஆயினும் அதை இத்தருணத்திற்கு வேண்டுமென்று அரண்மனை கருவூலத்திலிருந்து எடுத்து கொண்டுவந்து போட்டிருந்தேன். அதன் கால்கள் சீராக நிற்கவில்லை. ஆகவே அடியில் மரச்சிம்பு வைத்து இறுக்கிக்கொண்டிருந்தனர்.

தளவாய் நாராயணக்குறுப்பு என்னை நோக்கி ஓடிவந்துமகாராஜா எழுந்தருளலாமா? பொழுதாகிவிட்டதேஎன்றார்.

நான் புன்னகைத்தேன். மாடம்பிகள் அதைக் கவனிப்பதைக் கண்டேன். தளவாய் அந்த அவசரத்தில் நான் அவருக்குக் கீழிருக்கும் சர்வாதிக்காரன் மட்டுமே என்பதை மறந்துவிட்டிருந்தார்.

மகாராஜா வாரதுக்கு முன்னாடி திவான் வந்திருக்கிற எல்லாரையும் வரவேற்று மங்கலம் சொல்லி நல்லுவாதி குடுக்கணும். அதுக்கு முன்னாலே பந்தலை மூடணும். மகாராஜா வந்தபிறகு யாரும் பந்தலுக்குள்ளே வரக்கூடாதுஎன்றேன்.

ஆமா, அது உள்ளதாக்கும்என்றார் தளவாய் நாராயணக் குறுப்பு

திவான்கிட்டே நான் சொல்றேன். நீங்க பந்தலைச் சுற்றி படைநிறுத்தி வழிமூடுங்கஎன்றேன். அந்த ஆணைவழியாக அவரை என் ஏவலனாக ஆக்கினேன்.

அவர் அதை உணராமல்இப்பமே செய்யுதேன்என்று சொல்லி வெளியே வாளுடன் ஓடினார்.

நான் என் மேல் பதிந்திருந்த மாடம்பிகளின் வியந்த பார்வையை உணர்ந்தபடி மகராஜா அமரவேண்டிய சிம்மாசனத்தைப் பார்த்தேன். பின்னர் ஒரு வீரனை அழைத்து திவான் உடனே வரவேண்டும் என்று சொல்லி அனுப்பினேன். அவர் அங்கே மணவாளன் இல்லத்தில் தளவாய் வெங்கப்ப நாயக்கருக்கு அதரசேவை செய்துகொண்டிருப்பார் என்று நான் அறிந்திருந்தேன். என் அழைப்பை அவர் ஆராயாமல் அதை அரசரின் அழைப்பாக ஏற்றுக்கொண்டு ஓடிவருவார். என்னைக் கண்டதும் ஓடி என்னருகே வந்து என்ன விஷயம் என்று கேட்பார். அது நான் அவரை அழைக்க அவர் ஓடிவந்ததாகவே அவையினருக்குக் காட்டும்.

திவான் நான் எண்ணியதுபோலவே ஓடிவந்து என்னிடம்என்ன? மகாராஜா எழுந்தருளலையா?” என்றார்.

எல்லாரும் வந்தாச்சு. இப்ப மகாரஜாவுக்கு சமானமான ஸ்தானமுள்ளவர் நீங்க. மகாப்ராமணரனான நீங்க இங்க வந்தவங்களை வரவேற்கணும். ஏன்னா, இங்கே பாதிப்பேர் பிராமணர்கள். உங்க வரவேற்பு முடிஞ்சதும் மகாராஜா சபையேறலாம்என்றேன்.

ஆமா, அது உசிதம்நான் ஆடைமாத்தணுமே.”

நேரமில்லை. முகூர்த்தம் அணையுது.”

அப்ப சரிதான்…” அவர் மேலாடையை நீவியபடி சென்று அவை முன் நின்றார். அவர் கைகாட்டியதும் முழவும் கொம்பும் ஓசையிட்டன. அவை அமைதியடைந்தது.

நான் பக்கவாட்டு வாசல் வழியாக வெளியே சென்றேன். திவான் பேசும் குரல் எனக்குப் பின்னால் கேட்டது. தளவாய் நாராயணக் குறுப்பு எல்லா வழிகளையும் படைகொண்டு மூடிவிட்டார்.

கீழிருந்து மல்லன் பிள்ளை மேலேறி வந்து என்னருகே குனிந்துதிருவட்டாறு அணியூர்வலம் வந்து அணைஞ்சாச்சு. ஆதிகேசவப்பெருமாளுக்கு கோட்டை யஜமானன் பூசை செய்துகிட்டிருக்கார்என்றான்.

இப்ப மகாராஜா உள்ளே வந்து அமர்வார். அவர் மீனாக்ஷியம்மனுக்கும் சுந்தரேசனுக்கும் பூஜைசெய்து அமர்ந்த பின்னாலே ஆதிகேசவன் மணப்பந்தலுக்கே வரட்டும்மகாராஜா வந்து எதிரேல்கட்டும்என்றேன். பின்னர் யோசித்துஇரு, சிவாச்சாரியார் கிட்டேயே கேப்போம்என்றேன்.

மேலே கோயிலின் முன்னால் சிறிய கூட்டம் நின்றிருந்தது. கோயில் நடைசாற்றப் போகிறார்கள் என்று தெரிந்தது. நான் கூட்டத்தை அணுகினேன். அனைவருமே சிவாச்சாரியார்கள் என்று தெரிந்தது. என்னைக் கண்டதும் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் அருகே வந்து ஏறிட்டுப் பார்த்தார்.

நான் திருவட்டார் ஆதிகேசவன் வருவதைச் சொன்னேன். “ராஜனுக்குள்ள முறை போதுமில்லையா? நேரா மணப்பந்தலுக்கே போகலாமில்லையா?”

அய்யா, இது பரகோடி கண்டன் சாஸ்தாவுக்க மண்ணு…. மீனாக்ஷியும் சுந்தரேசனும் இங்கே வந்த விருந்தாடிக மட்டும்தான். சாஸ்தா போயி ஆதிகேசவனை எதிரேற்று கொண்டுவந்து பந்தலிலே இருத்துததுதானே முறை?” என்றார் சிவாச்சாரியார்.

ஆமாம்என்றேன். அது சொல்லப்படும் வரை அப்படித் தோன்றவில்லை. சொன்னபின் வேறெப்படியும் யோசிக்கமுடியாது என்று தோன்றியது.

நல்லவேளை நடைசாத்தல்லை. தேவியை மணப்பந்தலுக்கு கொண்டுபோறதுக்கு முன்னாடி சாஸ்தாவை சப்பரத்திலே எடுத்துக் கொண்டுபோயி ஆதிகேசவனை கூட்டிட்டு வந்திடுறோம். ஆதிகேசவன் பந்தலிலே இருக்கிற நேரத்திலே தேவி அங்கே வாறதுதான் நல்லது.”

சுந்தரேசர்?” என்றேன்.

என்ன சொல்றீங்க? சுந்தரேசன் இப்ப மணவாளன் இல்லையா? சுந்தரேசரை மணவாளன் வீட்டார் வந்து இங்கேருந்து கூட்டிட்டு அவங்க தங்கியிருக்கிற எடத்துக்கு கொண்டுபோகணும். அங்கேருந்துதான் அவரு மணப்பந்தலுக்கு வரணும்எல்லாத்துக்கும் முறைன்னு ஒண்ணு இருக்கே.”

நான் பெருமூச்சுடன் புன்னகைத்தேன்.

ஸ்தாணுலிங்க சிவாச்சாரியாரும் நான்கு சிவாச்சாரியார்களும் கோயிலுக்குள் சென்றனர். நான் தொடர்ந்து உள்ளே சென்றேன். அங்கே கருவறையில் துளசிமாலை சார்த்தி சாஸ்தா அமர்ந்திருக்க காலடியில் உத்சவரான சிறிய செப்புத்திருமேனி தாலத்தில் வைக்கப்பட்டிருந்தது. துளசியிலைகள் நடுவே ஒரு பழுக்கடைக்காய் போல அது தெரிந்தது.

சட்டென்று கண்களைத் திருப்பிய நான் திகைத்துசுவாமிஎன்றேன். மீனாக்ஷியின் தோற்றம் நெஞ்சடைக்கவைப்பதாக இருந்தது. விசிறிமடிப்பாகச் செம்பட்டு உடுத்திருந்தாள். இடஞ்சரிந்த கொண்டையில் வைரங்கள் மின்மினிக்கூட்டமெனச் செறிந்திருந்தன. மார்பில் நிறைந்த பதக்கமாலைகள், அடுக்குமாலைகள், பொளிமாலைகள், மணித்தாலி. அனைத்தும் வைரம். வைரத்தோடுகள், வைரமூக்குத்தி. முத்தாரங்கள் மார்பிலும் முடியிலும் சுற்றப்பட்டிருந்தன. முத்துச்சரங்கள் தொடைச்செறியாக, ஒட்டியாணமாக. வைரச்சிலம்புகள், வைரமெட்டிகள்.  கண்களை மூடியபின்னரும் உள்ளே வைரங்கள் நீரலைமேல் அந்தியொளி போல அலைவுற்றன.

சுவாமி, இதெல்லாம்…” என்றேன்.

எங்க மூதாதையர் மருதையிலே இருந்து கொண்டுவந்த நகைகள்என்று ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் சொன்னார். “நகைகளை பல்லக்கோட மூங்கில் துளைக்குள்ளே அடைச்சு அரக்கு வைச்சு மூடி கொண்டுவந்திருக்காங்க. ஏழாப்பிரிச்சு ஏழு சிவாச்சாரியார் வீடுகளிலே புதைச்சு வைச்சிருந்தோம். தலைமுறையா பேணிவந்த ரகசியம் இது. எப்ப மீனாட்சி மருதைக்கு திரும்பப் போறாளோ அப்ப போட்டு கொண்டுபோகணும்னு மூதாதையர் உத்தரவு.”

அப்ப நீங்க வேணாட்டு ராஜாவையும் நம்பல்ல?” என்றேன்.

வேணாட்டு ராஜாக்கள் பாண்டிய ராஜாக்களை விட தேவிக்கு பிரியமானவங்க. ஆனா நாடு இருக்கிற இருப்பு நமக்குத் தெரிஞ்சதுதானே? சுல்தான்பட்டாளம் எப்ப வேணுமானாலும் உள்ள வாற நிலைமையிலேதான் வேணாடு இருந்தது. அதோடே வந்த வேணாட்டு அரசர்களை நாமறிஞ்சோம். வரப்போறவங்களை யாரறிஞ்சோம்? எங்களுக்கு பொறுப்பு மீனாக்ஷியம்மைமேலே மட்டும்தான்

நான்அதுக்காகக் கேக்கல்லைஎன்றேன். அவர்கள் சொல்வதும் சரிதான் என்று பட்டது

சுந்தரேசன் சிவப்புத் தலைப்பாகை அணிந்திருந்தார். அதன்மேலும் வைரங்கள். அவன் மார்பெங்கும் வைரங்கள். கால்கழல் வரை, விரலில் அணிந்த கழலாழிகள் வரை வைரங்கள்.

எல்லாம் சுத்தமான நீரோட்டம் கொண்ட வைரங்கள். பாண்டியராஜாக்களும் சோழ ராஜாக்களும் போட்டிபோட்டு நகைபோட்டு அழகுபாத்திருக்காங்க அம்மையைஎன்று ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் சொன்னார். ”இந்த முத்துக்களை மாதிரி சுத்தமான முத்துக்கள் லட்சத்திலே ஒண்ணுதான். ஆயிரம் ஆண்டுக்காலம் அள்ளின முத்திலே எண்ணி தெரிஞ்சு எடுத்த முத்துக்கள். ஆயிரம் குலச்செட்டிகள் இருந்து குறை களைஞ்சு எடுத்த வைரங்களாக்கும் இதெல்லாம்..”

நான் பார்த்துக்கொண்டு நின்றேன். ஒருகணம் என் மனம் பொங்கி எழுந்தது. மறுகணம் அது பிழையோ என்ற எண்ணம் ஏற்பட்டது.

சுவாமி, சட்டுன்னு இது என் செல்லக்குட்டி மகள்னு தோணிப்போட்டுதேதப்புதானா?”

தோணாம இருந்தாத்தான் தப்பு. எனக்கு அவ அடங்காப்பிடாரி மகள் மாதிரி. அப்பப்ப நல்ல நாலு வார்த்தை சொல்லி கண்டிச்சு வைப்பேன். அடம்புடிச்சா ஒரு ரெண்டு அடி போடுறதும் உண்டுஎன்றார் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார். இரு சிவாச்சாரியார்கள் சிரித்தனர்.

ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார்பார்ப்பவர்க்கெல்லாம் அம்மை. அம்மை வடிவா வந்த செல்ல மகள்என்றார்.

பரகோடி கண்டன் சாஸ்தாவை தாலத்துடன் எடுத்து சிறிய சப்பரத்தில் வைத்து இரண்டு சிவாச்சாரியார்கள் சுமந்துகொண்டு வெளியே சென்றனர். அவர்களுக்கு முன்னால் ஒரு மாரார் திமிலை வாசித்துக்கொண்டு செல்ல அவருக்கு முன்னால் ஒரு மாரார் சங்கொலி எழுப்பிக்கொண்டு சென்றார்.

அம்மை எழ நேரமாச்சேஎன்று ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் சொன்னார்.

நேரா பந்தலுக்குதானே?” என்றேன்

இல்லை. மணப்பெண்ணுக்கு கூந்தல் பேண தோழியும், புடவை மடிப்பை அடுக்க குட்டிப்பயலும் வேணுமில்லா? வடக்கூர் நயினார் குலசேகர விநாயகர் வந்து கீழே உக்காந்திட்டிருக்கார். முத்தாலம்மனும் கூடவந்து கோயில்கொண்டிருக்கா. அம்மை எழுந்ததும் நேரா கீழே போயி அவங்க ரெண்டுபேரையும் கூட்டிட்டுதான் பந்தலுக்கு வருவாஎன்றார் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார்.

ஆமா, எல்லாத்துக்கும் ஒரு முறை வேணுமேஎன்றேன்.

ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் வெற்றிலைக்காவி படிந்த பற்கள் தெரிய உரக்கச் சிரித்தார். “ஒண்ணு விடப்பிடாது. கல்யாணம்னா ஆயிரம்காலத்துப் பயிர். இது அனாதிகாலத்துப் பயிர்லா?”

சிவாச்சாரியார்கள் கருவறைக்குள் சென்று மீனாக்ஷியின் சிலையை தூக்கி கொண்டுவந்து மலரணிசெய்த சப்பரத்தில் வைத்தனர். அதே சமயம் இன்னொரு சிவாச்சாரியார் குழு சுந்தரேசரை தூக்கிக் கொண்டுசென்று இன்னொரு சப்பரத்தில் வைத்தது.

இரு பிரிவுகளாக வெளியே மாரார்கள் நின்றிருந்தனர். பஞ்சவாத்திய மேளத்துடன் சுந்தரேஸ்வரர் மணவாள மனை நோக்கிச் சென்றார். தேவி மலையிலிருந்து இறங்கிச்செல்லும் பாதையில் சென்றாள். சப்பரத்திற்கு முன்னால் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் நடக்க அவரை தொடர்ந்து சிவாச்சாரியார்கள் சென்றனர்.

ஒழிந்த ஆலயத்தில் நின்றிருந்தபோது ஏனோ என் உள்ளம் திடுக்கிட்டு படபடத்தது. நான் மணப்பந்தலின் இன்னொரு வாசலை நோக்கி ஓடிச்சென்றேன்.

[மேலும் ]

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி [குறுநாவல்] – 2
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி [குறுநாவல்] – 4