குமரித்துறைவி [குறுநாவல்] – 2

[ 5 ]

மகாராஜா வாயில் தாம்பூலத்துடன் என்னை கூர்ந்து நோக்கிக் கொண்டிருந்தார். நான் அச்சூழலை முழுமையாக கையகப்படுத்திவிட்டேன் என்று உணர்ந்தேன். எவரேனும் ஏதேனும் சொல்கிறார்களா என உளம்கூர்ந்தேன். அனைவருமே அகம் தளர்ந்து எனக்காகக் காத்திருந்தனர்.

நானே தொடங்கினேன். “அடியேன், நாம சொல்றதுக்கு உள்ளது ஒண்ணே ஒண்ணுதான். அது அம்மை இங்கே வந்த கதை. தம்புரானே, மாலிக் காஃபூர் படைகொண்டு வந்து சிராப்பள்ளியை ஜெயிச்சு சூறையாடிட்டு பாண்டிநாட்டுக்குள்ளே நுழைஞ்சப்ப அவர் வந்திட்டிருக்கிற தகவல் தெரிஞ்சதுமே சிவாச்சாரியருங்க மீனாட்சியம்மையை பீடத்திலே இருந்து பேத்து எடுத்து பட்டுத்திரையிட்ட பல்லக்கிலே வைச்சு எட்டு பேரா தூக்கிக்கிட்டு கிளம்பிட்டாங்க. சுந்தரேசலிங்கம் ரொம்பப்பெரிசு. அதனாலே லிங்கசூசகமா ஒரு வைகையிலே இருந்து ஒரு சின்ன கல்லை எடுத்து அதிலே சுந்தரேசரை ஆவாகனம் பண்ணி எடுத்துக்கிட்டாங்க. கூட பரிவாரமா சிவாச்சாரியாருங்க கொஞ்சபேரு…”

ஏற்கனவே சிராப்பள்ளியிலே சுல்தான் பட்டாளம் நுழைஞ்சப்போ சீரங்கநாதனை அந்த கோயில் பட்டர்கள் தூக்கிட்டு கேரளநாட்டுப் பக்கமா போனாங்கன்னு அவங்க சேதி அறிஞ்சிருந்தாங்க. ஸ்ரீவல்லப க்ஷேத்திரத்திலே சீரங்கநாதன் கோயில்கொண்டருளுற சேதியும் செவிவழியா வந்திருந்தது. மேக்கே இருக்கிற ஏழு மலையடுக்குமேலே ஏறிக்கடந்து சுல்தான்படைகள் கேரளம் வரை வாறதுக்கு வழியில்லேன்னு மண்ணுவழி தெரிஞ்ச செட்டிகள் சொன்னாங்க. அதனாலே என்ன செய்யலாம்னு யோசிச்சு இவங்களும் கேரள மண்ணுக்கு போகலாம்னு முடிவுகட்டினாங்க

அம்மையை பல்லக்கிலே எடுத்துக்கிட்டு சும்மா யாரோ செட்டியம்மையோ மற்றோ போறாப்பலே நடிச்சுக்கிட்டு அவங்க  வைகைக்கரை வழியா போனப்ப ஓரிடத்திலே நெத்தியிலே பெரிய குங்குமம் வைச்சு, பச்சைப்பட்டு உடுத்தி, கையிலே கிளியோட வந்த அம்மிக்கறுப்பான மலைக்குறத்தி ஒருத்தி அவங்களை பாத்திருக்கா. ‘மகாராணியம்மையை ஏன் இங்கே கொண்டுபோறீங்க, அம்மை தெக்க போகணும்னு சொல்லுறாளே?’ன்னு கேட்டிருக்கா. இவங்க ஆச்சரியப்பட்டு குறத்தி, உள்ள இருக்கிறது மகாராணின்னு உனக்கு எப்படித் தெரியும்?’னு கேட்டிருக்காங்க. “அம்மைக்க நெத்திக்குங்குமம் வாசம் எனக்கு அடிக்குது. அம்மை பேசுற மொழி என் கிளிக்குக் கேக்குதுன்னு குறத்தி சொன்னா.”

மூத்தசிவாச்சாரியார் முத்துச்சிவம் அவகிட்டே  ‘சரிடீ, மகாராணி எங்க போகணும்னு சொல்லுறான்னு உன் கிளி கிட்டே கேட்டுச்சொல்லுன்னு கேட்டிருக்கிறார். கிளி உடனே  ‘தெக்கே போங்க! தெக்கே போங்க!’ன்னு சொல்லியிருக்கு. குறத்தி அதன் பேச்சைக் கேட்டுட்டு அவங்க கிட்டேதிரும்பாம, தயங்காம ,திசை ஏதும் பாக்காம ,தெக்கே போய்ட்டே இருங்க. எங்க ஆடி மாசத்திலே கணிக்கொன்றை பூத்திருக்கோ அங்கே நில்லுங்க. அங்கே பக்கத்திலே வற்றா ஊற்றிருக்கும். மலையிளங் காற்றிருக்கும். கிளிக்குலம் கொஞ்சிக்கொண்டிருக்கும். அம்மை இருக்க விரும்புமிடம் அதுதான்னு சொல்லியிருக்கா.”

மகாராஜா நான் சொல்வதைக் கேட்டுக்கொண்டிருந்தார். அவருக்கு இந்தக் கதைகளெல்லாம் தெரியும். வடுகநாட்டு நியோகிப் பிராமணராகிய திவான் ஜக்கால நாகமையா திருவாழும்கோட்டுக்கு வந்து ஏழாண்டுகள்தான் ஆகிறது. அவருக்கு தெளிவாகத் தெரிந்திருக்காது என்று நினைத்தேன். அவருடைய முகபாவனை அவ்வாறே என்று காட்டியது.

அப்டித்தான் சிவாச்சாரியாருங்க முப்பத்தாறு பேரு அம்மையை ஏத்திக்கிட்ட பல்லக்கோட தெக்கே வந்துட்டே இருந்தாங்க. குடிக்க தண்ணியில்லாம வறங்காட்டிலே அவங்களிலே எட்டுபேரு செத்துட்டாங்க. ஏழுபேருக்கு வெப்புச்சீக்கு வந்து வழியிலே விழுந்துட்டாங்க. மிச்சம்பேர் காட்டுக்காய் பறிச்சு தின்னு, இலைதழையை மென்னு சாறு குடிச்சு, வெம்பசிக்கு அப்பப்ப பொடிமண்ணு அள்ளி ஊதிப்பாற்றி வாயிலிட்டு விழுங்கி உயிரைத் தாங்கிக்கிட்டு அம்மையை தூக்கிட்டு வந்தாங்க. ஆனால் பல்லக்கை ஒரு தடவைகூட கீழே வைக்கல்லை. எந்த ஊருக்குள்ளேயும் நுழையல்லை. எந்த அயலார்கிட்டேயும் பேசல்லை.”

கயத்தாறிலே வழிக்கொள்ளை மறவன் சேடக்கரை கொண்டையத் தேவனும் கூட்டமும் அவங்களை வழிமறிச்சிருக்காங்க. வெள்ளை வெயில் நின்னு எரியுற மொட்டைக்காடு. காக்காவும் பறக்காத மத்தியான்ன நேரம். நிழல்தேடி ஒதுங்க ஒருமரமும் இல்லை. அப்ப அவங்களை தூரத்துப் பாறை மேலே நின்னு பாத்த கொண்டையத் தேவனும் கூட்டமும் வேல்கம்புகளோட ஓடிவந்து மறிச்சு சூழ்ந்துகிட்டாங்க. அவங்களும் வெங்காட்டு ஓநாய் மாதிரி பலநாள் பசியிலே கருகிக் கரியா இருந்தாங்க. வாய் வெடிச்சு கண்ணு உலந்து எரிஞ்சுகிட்டிருந்தாங்க. பல்லக்கு தூக்கி வந்தவங்க கிட்டே பசிக்கு தின்ன கம்புசோளப் பொடிகூட இல்லை.”

கொண்டையத் தேவன் பல்லக்கு திரையை தூக்கி உள்ளே பாத்தான். அங்கே மூணுவயசுலே சின்னப்பொண்ணு ஒண்ணு உக்காந்திட்டிருந்தது. நல்ல கனிக்கறுப்பு நிறம். கையிலே ஒரு பச்சைக்கிளி. பச்சைப்பட்டுச் சிற்றாடை கட்டி கையிலேயும் காலிலேயும் பொன்னும் வைரமும் மின்னுற நகைபோட்டு பால்வெள்ளைப் பல்வரிசை மின்ன அவனைப் பாத்துச் சிரிச்சா. அவ கண்ணைப்போல ஒரு கண்ணை அவன் பாத்ததே இல்லை. காதுவரை நீண்ட கருங்கண். முகத்திலே பாதியா விரிஞ்ச கண். கெண்டை போல துள்ளுற, மயில்நீலம் மின்னுற கண். அவன் அழுதுகிட்டே அந்த காலிலே தன் தலையை வைச்சான். அவ அவன் குடுமியை தொட்டா. அவன் தலைக்குள்ளே எரிஞ்ச ஜென்மத்தீ அணைஞ்சுபோச்சு. அவன் சித்தத்திலே குளிர்நிலா உதிச்சு போச்சு. அவன் ஏழு தலைமுறை மூதாதையருக்கு அப்பவே மோச்சம் கிடைச்சுப்போச்சு

அதுக்குமேலே சிவாச்சாரியாருங்களுக்குக் காவலா கையிலே வேலோட கொண்டையத் தேவனும் கூட்டமும் வந்தாங்க. அவன் அவங்களுக்குக் காட்டுக்காய் பறிச்சு கொடுத்தான். ஊருக்குள்ளே போய் வேல்கம்பு காட்டி மிரட்டி அன்னமும் தண்ணியும் கொண்டுவந்து கொடுத்தான். அவங்க நெல்வேலி தாண்டி, நான்குநேரி தாண்டி, வள்ளியூர் தாண்டி வந்தாங்க. வெந்த மண்ணை கடந்து, வெங்காத்து வீசுற திருக்கணங்குடி கடந்து, ராமலிங்கம் இருந்த பணகுடி கடந்து, ஆரல்வாய்மொழி கணவாய் கடந்தப்போ சொர்க்கவாசல் திறந்தாப்ல இந்தப்பக்கம் இளமழைச்சாரல் அடிச்சிட்டிருந்தது. ஆடி மாசம் தொடங்கியாச்சு. தூரத்திலே மதகளிறு மத்தகம் மாதிரி செம்மஞ்சள் பூக்கள் நிறைஞ்சு கொன்றை நின்னுட்டிருந்தது.”

நானே என் கதையால் கொண்டுசெல்லப்பட்டேன். இளமையிலேயே என் அம்மாவிடமிருந்து கேட்ட கதை. அவர்களும் அக்கதையால் ஈர்க்கப்பட்டிருந்தார்கள்.

வாடாக்கொன்றைன்னு அந்த மரத்துக்கு பேரு. அங்கே ஆரல்வாய்மொழிக் காட்டிலே அந்த ஒரு மரத்திலே மட்டும் ஆண்டெல்லாம் பூவு இருக்கும்னு மலைக்கார சனங்களுக்கு தெரியும்.. அந்த மரத்தடியிலே வற்றா ஊற்று ஒண்ணு உண்டு. அங்கே புலியும் மானும் சேந்து தண்ணி குடிக்கும். அந்த ஊர் மலைக்குறவர்களுக்கு ஏழுமலைக்காரன் வல்லாள முதுபரவர்னு அப்ப பேரு. கொன்றைமரத்துக்க அடியிலே வல்லாளப் பரவ சமூகத்துக்குச் சொந்தமான பரகோடி கண்டன் சாஸ்தாவுக்க கோயில் இருந்தது. அது அங்கே ஆயிரம் வருசமா இருக்கிற கோயில். சின்னப்பாறை மேலே பரகோடி கண்டன் சாஸ்தா ஒரு சின்னக் கல்லா அருள்பாலிச்சிட்டிருந்தாரு. இன்னொரு பாறை பலிக்கல்லு. அந்தப் பலிக்கல்  பாறைமேலே அம்மையை இறக்கிவைச்சாங்க. அப்பனை பக்கத்திலே வைச்சாங்க.”

மகாராஜா பெருமூச்சுவிட்டுகேட்ட கதைதான்… ” என்றார். “ஆனா கேட்டுட்டே இருக்கலாம்

திவான்அங்கே அம்மைக்குக் கோயில் இருக்கிறது மட்டும்தான் எனக்கு தெரியும்என்றார்.

நான் திவானிடம்இந்தக்கதை எங்கேயும் பரவாம பாத்துக்கிட்டோம். ராஜகுடும்பம், தளவாய்க் குடும்பம், ஆரல்வாய்மொழி கொட்டாரம் ஸ்தானிகர், கோட்டை எஜமானர் தவிர ஒருத்தருக்கும் அங்கே கோயில் இருக்கிறது தெரிஞ்சதில்லை. அங்கே பூசை செய்யும் சிவாச்சாரியார்கூட பக்கத்திலே தோவாளையிலேதான் அக்ரஹாரத்திலே குடியிருப்பார். இப்ப பதினெட்டு குடும்பமா இப்ப பெருகியிருக்காங்க. அங்கயுள்ள சிவன்கோயிலிலே அவங்க குடிதான் பூஜாதிகர்மங்கள் செய்யுறது. பரகோடி கண்டன் சாஸ்தாவுக்கு பூசை செய்யுறதாத்தான் சொல்லிக்கிடுவாங்க. மீனாச்சி பேரு மறந்தும் நாவிலே வரக்கூடாதுன்னு கிளியேன்னுதான் சொல்லிக்கிடுவாங்கஎன்றேன். “கொண்டையத்தேவன் குடும்பம் பெருகி நாப்பத்தெட்டு குடியா மாறியாச்சு. ஆருவாமொழிக் காட்டுக்கு அவங்கதான் காவல். அவங்க குடும்பம் நிறைஞ்ச ஊருக்கு இப்ப மறவன்குடியிருப்புன்னு பேரு.”

ஆமா, ரகசியம் தேவைதான்என்றார் திவான்படையோட்டமும் கொள்ளையும் நிறைஞ்ச காலம்…”

அங்கே ஒரு கோயில் இருக்கிறது பலபேருக்கு தெரியும். ஆனா அங்கே கோயில் கொண்டிருக்கிறது பரகோடி கண்டன் சாஸ்தான்னுதான் ஜனங்களுக்கு தெரியும். வல்லாள பரவன் சமூகத்து பட்டக்காரங்க ஏழுபேரும் அந்த ரகசியத்தை வெளியே விடவே இல்லை. மறவனுங்க உப்புதொட்டு சத்தியம் செஞ்சா குலதெய்வமே வந்து கேட்டாலும் சொல்விட மாட்டாங்க. அங்கே மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் கோயில்கொண்டிருக்கிற தகவல் வேற யாருக்குமே தெரியாது. மகாராஜா அங்கே தர்சனம் பண்ணப் போகிறப்பக் கூட படைவீரர்களை காட்டுக்கு வெளியிலேயே தனியா நிப்பாட்டிக்கிட்டு பரவக்குடி பட்டக்காரங்க ஏழுபேர் கூடவர, கொண்டையத் தேவன் கூட்டத்து மறவங்க வில்லும் வாளுமா கூடவர, முள்ளும் கல்லும் மிதிச்சு நடந்துதான் போவாரு. வேணாட்டு நாயர் படையில் ஒருத்தன்கூட கோயிலை இப்பவரை பாத்ததில்லைஎன்றேன்.

மகாராஜா திவானிடம்அது பூர்விகரான மகாராஜா ரவிவர்மா குலசேகரப் பெருமாள் கல்பிச்சு வேணாட்டுக்க செங்கோல் கொண்டு சிம்ஹாசனம் அமர்ந்திருந்த காலம். அவர் மதுரை ஆண்டருளிய ராஜா மாறவர்ம குலசேகர பாண்டியரின் மகள் நூபுரவல்லி சுந்தரத்தாள் அம்மையை வேளிமங்கலம் செய்தவர். அவருக்கு அம்மையில் நாலு மகன்கள் உண்டானார்கள். நாலுபேருமே பாண்டிய ரத்தம். அதனாலே அவங்க மானசீகமா பாண்டிய பக்ஷம். மகன்கள் கைவசம் நாடு போனால் வேணாடு அன்னியம்நின்று போகும்னு மகாராஜா பயப்பட்டார். அதனாலே ஒருபுதிய ஏற்பாடு உண்டாக்கினார்

முன்பே சேரமும் பாண்டியமும்  அடக்கி ஆண்ட சோழராஜாக்கள் இல்லாமலானாங்க. வேணாடு கப்பம்கட்டிய மதுரை ராஜா மாறர்வம குலசேகர பாண்டியர் மண்மறைஞ்சார். அவர் பெற்ற மகன்கள் மதுரை  சுந்தரபாண்டியனும் அவர் தம்பி தென்காசி வீரபாண்டியனும் ஒருத்தருக்கொருத்தர் மாறி மாறிச் சண்டைபோட்டதாலே ரெண்டு பேருக்கும் கப்பம் கட்டிக்கொண்டிருந்தோம். அதுதான் அன்றைக்கிருந்த ஸ்திதிவிசேஷம்அவர் அதைச் சொல்லச் சொல்ல ஒரு தெளிவை அடைவதைக் கண்டேன். அவருக்கு மண்மறைந்த மகாராஜா ரவிவர்மா குலசேகரப்பெருமாள் கோயில்கொண்ட தெய்வம்போல.

மும்முடிராஜா ராஜராஜ சோழன் இங்கே படைகொண்டுவந்து கைப்பற்றி கோல்நாட்டினப்போ இங்கே இருந்த மருமக்கள்தாய சம்பிரதாயத்தை இல்லாம செய்தார். இங்கே கோயில்களிலே இருந்த தந்த்ரபூஜைகளையும் நிறுத்தலாக்கினார். ஆகம சம்பிரதாயம் கொண்டுவந்தார். அதுதான் முந்நூறாண்டுக்காலம் இங்கே நடப்பிலே இருந்தது. சோழராஜ்யம் இல்லாம ஆனதனாலே சோழ ராஜாவின் கல்பனைகளும் இல்லாமல் ஆயாச்சுன்னு பூர்விகரான மகாராஜா ரவிவர்மா குலசேகரப் பெருமாள் முடிவு செய்தார். கோயில்களில் ஆகமபூஜைகளை எல்லாம் நிறுத்தலாக்கி மீண்டும் தாந்த்ரீக பூஜாவிதிகள் கொண்டுவந்தார். அதோடு தனக்குப் பின்னால் தன் மருமகன் வீரமார்த்தாண்டன் ராஜாவாக முடிசூடவேணுமென்று தீர்மானம் செய்தார்.”

மகாராஜா தொடர்ந்தார். “அதுக்கு தன் மகன்கள் அனந்தவர்மனும் அச்சுதவர்மனும், பிரபாவர்மனும், கிருஷ்ணவர்மனும்  எதிர்ப்பு காட்டுவாங்கன்னு முன்னாலேயே தெரிஞ்சு அவங்களை களக்காட்டு பக்கத்திலே தனியா நிலம் பிரிச்சு குடுத்து குடியேற்றினார். அவங்க களக்காட்டு பாண்டியர்கூட சேந்துகிட்டாங்க. அது மகாராஜா அறிஞ்சு செய்த தந்திரமாக்கும். அவங்க பாண்டியங்க கூட சேந்துகிட்டப்பவே அவங்களுக்கு இங்க சேரநாட்டிலே இருந்த ஆதரவு இல்லாம ஆச்சு. அதிகாரம் மோகிச்சு அதுக்குமேலேயும் ஆதரவு குடுத்தவங்களை பிடிச்சு கொல்லத்துக்கு நாடுகடத்தினார். களக்காடு மேலே படைகொண்டு போயி பாண்டியர்களை தோக்கடிச்சு கப்பம் வாங்கினார். அதோடே அந்த எதிர்ப்புகள் இல்லாம ஆச்சு.”

மகாராஜா சொன்னார். “அப்டித்தான் நம்முடே பூர்விகனான வீரமார்த்தாண்ட வர்மா வேணாட்டு யுவராஜாவானார். அதுமுதல் வேணாட்டில் மருமக்கள்தாயம் உண்டாச்சுது. இப்பவரைக்கும் அந்த முறைதான் வந்திட்டிருக்கு. இப்பவும் அதுக்கு எதிர்ப்பு உண்டு. இங்கே உள்ள ஆளுகளிலே பல குடும்பங்களிலே மக்கத்தாயம்தான் இப்பவும்அவங்க அடங்க மாட்டாங்க.”

நான்அடியேன், நான் வேணாட்டுக்கு அம்மை வந்தப்போ மண்மறைஞ்ச ரவிவர்ம குலசேகர மகாராஜா கோல்கொண்டிருந்தார்என்று பேச்சை திருப்பிக் கொண்டுவந்தேன்.

அதேதான் சொல்லவந்தேன்என்றார் மகாராஜா. “மதுரை மீனாக்ஷியம்மை வேணாட்டுக்கு வந்தகாலத்திலே மகாராஜா ரவிவர்ம குலசேகரப்பெருமாள் வயோதிகம் அடைஞ்சு அரண்மனைவிட்டு வெளியே போகாமலானார். அவருக்கு மாறாத நீர்த்தோஷ ரோகம் இருந்தது. ராஜ்யபாரம் முழுக்க யுவராஜா வீரமார்த்தாண்ட வர்மாதான். அவருக்கு அப்ப பத்தொன்பது வயசுதான். அவரை கொல்லவும் ராஜ்யத்தைக் கைப்பற்றவும் பல திக்கிலேயும் சதி நடந்திட்டிருந்தது. மக்கத்தாய முறையுள்ள எட்டுவீட்டுப் பிள்ளைமார் அவரைக் கொல்ல எண்ணி எண்ணி ஆளும் படையும் சேத்துக்கிட்டிருந்தாங்க. அவருக்கு மூணுசுற்று காவல் எப்பவும் இருந்தது. அவர் சாப்பிடுற ஊணும் நீரும் தாம்பூலமும் மூணுமுறை சோதிச்சு குடுக்க முறை உண்டாச்சுது.”

அம்மாவன் யுவராஜாவாக பதவி ஏற்ற நாள் பங்குனி உத்தரம். அந்த நாளில் உச்சை மாறி சாயங்காலம் நல்ல மழை உண்டாகணும். அது பஞ்சாங்க சாஸ்திரம் அறுதியிட்டு சொல்லும் சத்யம். ஆனால் அந்த நாளிலே பகலந்தி வரை ஒரு துளி மழை பெய்யல்லை. அதுமுதல் ஈராண்டுகள் வேணாட்டிலே மழையில்லை. இடவப்பாதியும் கர்க்கிடக வர்ஷமும் பொய்யாச்சு. முதல் ஆண்டு முடிஞ்சதுமே ஊரிலே பேச்சு தொடங்கியாச்சு. மக்கத்தாயம் நிறுத்தி, ஆகம முறை முறிச்சதனாலே தெய்வ தோஷம் வந்துபோட்டுதுன்னு பல தண்டான்மாரும் பூசாரிமாரும் குறி சொன்னாங்க. அதை எட்டுவீட்டுப் பிள்ளைமார் சொல்லிப் பரப்பினாங்க

இரண்டாமாண்டிலே மழை நின்னு வற்றாக்குளங்கள் வற்றி பொடிபாறிக் கிடந்தப்போ ஆய்குலத்து ஆட்சிக்காலம் முதல் இருந்துவந்த முறைமைப்படி மாடம்பிகள் வாளுடன் வந்து கூடி சொல்லிமுடிச்சு யுவராஜாவை முடிநீக்கம் செய்யவேணும் எந்நு பல திக்குகளில் இருந்தும் விளி வர ஆரம்பிச்சாச்சு. மாடம்பிகள் கிட்டே இருந்து மகாராஜாவை காக்க ஸ்ரீவாழும்கோட்டில் ஆனையும் குதிரையுமா பட்டாளத்தை நிறுத்தி வச்சிருந்தார் தளவாய். மகாராஜா செய்யாத வழிபாடில்லை. யாகஹோமாதிகள் இல்லை. ஒண்ணும் நடக்கல்லை. வானம் வெளுத்து கிடந்தது

அப்பதான் ஆரல்வாய்மொழியில் அம்மை நுழைஞ்சு கோயில்கொண்டாள். அந்த நாளிலேயே கருந்துணி கட்டி மறைச்சதுபோல மழைகொண்டு வானம் இருண்டது. வர்ஷமாரி தொடங்கி திரைசீலை மாதிரி பதினெட்டு நாள் ஆடி உலைஞ்சு அகலாம நின்னுது. அதன்பிறகு இந்த அறுபத்தொன்பது ஆண்டுக்காலம் மழை ஒருநாள் பிந்தியதில்லை. வேணாட்டிலே ஒருகுளம், ஒருகிணறு, ஒரு ஓடை வற்றியதில்லை. புல்காயா பச்சை கொண்டு பொலிஞ்சிருக்கு இந்நிலம்மகாராஜா சொன்னார்.

மழைபெஞ்ச செய்திகேட்டு மண்ணுபோலே குழைஞ்சு, மலைபோலே குளுந்து, காற்றுபோலே கனிஞ்சு நம்ம அம்மாவன் வீரமார்த்தாண்ட வர்மா மகாராஜா அரண்மனையிலே இருந்திட்டிருக்கிற நேரத்திலேதான் அம்மை வந்து ஆருவாமொழியிலே அமர்ந்த செய்தி வந்தது. அப்டியே அந்த நேரத்து வஸ்திராதிகளோடே கிளம்பிட்டார். ஒப்பம் ஆருமில்லை. திவானும் தளவாயும் மட்டும்தான். பல்லக்கிலும் குதிரையிலுமா போனார். மழையிலே நனைஞ்சும் ஆறுகளிலே இறங்கி நீந்தியும் போனார்”.

ஆருவாமொழிக்குப் போய் அம்மையைக் கண்டு அடியிலே முடிவைச்சுமக்களைக் காத்துகொள்க அம்மையே!’ன்னு சொன்னார். தேடிவந்த அம்மைன்னுதான் எப்பவும் சொல்லுவார். அம்மைக்கு அங்கே கோயில் கட்டினார். அது பரகோடி கண்டன் சாஸ்தாவுக்க ஸ்தலம். அதனாலே பிரதான தெய்வம் சாஸ்தாதான். பக்கத்திலே அம்மையும் அப்பனும் இருந்தாங்கசாஸ்தா உலகநாயகிக்கும் உலகானவனுக்கும் காவலிருந்தார். யோகசாஸ்தா அம்மைக்கு அருமைத் தம்பியானார்.” என்றார் மகாராஜா. “எல்லா காரியங்களையும் அவர் சொல்லி என் அம்மாவன் தன் செவியால் கேட்டிருக்கார். எனக்கு சொல்லியுமிருக்கார்”.

பெரிய கோயில் கட்டவேணும்னு அம்மாவன் சொல்லுறதுண்டு. ஆனா கோயில் இருக்கிற செய்தி தெரிஞ்சு மதுரை சுல்தான்கள் படைகொண்டு வந்தா என்ன செய்ய? அதனாலே அம்மை கொன்றைவனத்தம்மனா பரகோடி காட்டுக்குள்ளே இருந்தாஇப்ப அவளுக்கு அழைப்பு வந்திருக்கு. அவ தேடிவந்த மண்ணு அவளை திருப்பியனுப்பணும்மகாராஜா சிரிப்பதுபோல உதட்டை வளைத்தார். ஆனால் அதில் அவர் உளக்கொதிப்பு தெரிந்தது. “அம்மைகாலடியிலே வைச்சு கும்பிட்ட சாளக்கிராமத்தை இங்கே அரண்மனையில் அம்மைக்க அடையாளமா வைச்சு கும்பிட்டுட்டிருக்கேன். ஒருநாள் அம்மையை கும்பிடாமல் நான் இருந்ததில்லைஅம்மையில்லேன்னா இந்த நாடு இல்லை.”

மகாராஜா நிறுத்தியதும் நான் வாய்பொத்தி குனிந்துஅடியேன், இங்கே அடியேன் சொல்லவந்ததும் அதுதான்என்றேன்.

என்ன?” என்றார் மகாராஜா.

அம்மையை நாம் கொண்டுவரல்லை. அம்மையே தேடிவந்தா. அம்மையை அனுப்ப நாம யார்? அம்மை எழுந்தருளச் சம்மதிச்சா கொண்டுபோகட்டும்னு சொல்லிடுவோம்என்றேன்.

திவான் முகம் மலர்ந்துஆமா, அது நியாயமாக்கும்என்றார். “அம்மையை நாம எப்டி அனுப்பமுடியும்? அம்மை முடிவெடுத்து அமர்ந்த இடம் அது.”

ஆமாம், அது ஒரு காரியமாக்கும்என்றார் மகாராஜா.

மதுரையிலே இருந்து தளவாய் வெங்கப்ப நாயக்கரும் ராயசம் விஜயரங்கய்யாவும்  தக்ஷிணாதி மடத்து சுவாமி நாராயண பட்டாச்சாரியரும் பெரியநாயக்கருடே  ஓலையோடே வராங்கன்னு ஒற்றாளன் செய்திஎன்று நான் சொன்னேன். “அவங்க வாற அன்னைக்கு இங்கே ஒரு தேவப்பிரஸ்னம் வைப்போம். கணியான் களம் வரைச்சு அம்மையுடே ஹிதம் என்னதுன்னு கேட்டுச் சொல்லட்டும்.”

திவான்ஆமா, அதுதான் செய்யவேண்டியது. அம்மை ஹிதம் தெரிஞ்சா கொண்டு போகட்டுமேஎன்றேன்.

ஆனா அம்மை போகிறதா சொல்லிட்டா?” என்று தளவாய் என்னை நோக்கிச் சொன்னார். “நாயக்க ராஜாக்கள் கொண்டுபோனாங்கன்னு ஆனாக்கூட ஒண்ணுமில்லை. நாம சின்ன ராஜ்யம், கப்பம் கட்டுற ராஜ்யம். அவங்க நம்மை படைஜெயிச்சு அம்மையை கொண்டுபோனாங்கன்னு சொல்லிடலாம். எப்பவாவது மதுரையை நாம ஜெயிச்சு அங்கே போயி அம்மையை திரும்பக்கொண்டு வருவோம்னு ஒரு சங்கல்பம் எடுத்துக்கிடலாம். ஆனா அம்மையே இங்கேருந்து போறேன்னு சொல்லிட்டா அது நமக்கு பெருமையா? அம்மையிறங்கிப்போன ராஜ்யத்துக்கு ஏது பெருமை? ராஜாவுக்கு அவப்பேரும் மிஞ்சும்.”

நான் பேசுவதற்குள் திவான்அதென்ன பேச்சு? களம் வரைச்சு கவிடி நிரத்துறவரு நம்ம நாட்டு கணியான்தானே?” என்றார்.

என்ன சொல்றீர் நாகமையரே? கணியனைக் கொண்டு வந்து பொய் சொல்லவைக்கவா?” என்றார் மகாராஜா. “இந்த அரண்மனைக்கே தேவசாபம் கொண்டுவந்து தரப்போறீரா?”

அடியேன், நான் சொல்றதும் அதுதான். அம்மை கிளம்பின பிறகு ஒரு ஆண்டு மழையும் பொய்யானா பிறகு ராஜ்யத்திலுள்ளோர் நாக்கு எங்கே போகும்னே தெரியாதுஇப்பவும் மக்கள்தாயக் கூட்டம் தக்கம் காத்திருக்குன்னு தம்புரானுக்கு அடியேன் உணர்த்தியாகணும்என்றார் தளவாய்.

திவான் என்னைப் பார்த்தார்.

நான் பணிந்து, “அடியேன், கணியானைக் கொண்டு தேவப்பிரஸ்னம் பார்க்கவேண்டாம். சிவீந்திரம் சிறமடம் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாட்டை கூப்பிட்டுப் பார்க்கச் சொல்லலாம்என்றேன்.

அதனால் என்ன லாபம்?” என்றார் மகாராஜா.

அடியேன், நாடும் மகாராஜாவும் இருக்கப்பட்ட நிலைமையை திருமேனியிடம் உணர்த்திச்சு வைப்போம். அவர் எண்ணி முடிவெடுக்கட்டும்…”

திவான்ராஜ்யலக்ஷ்மியான தேவியை அனுப்ப சாஸ்திரமுண்டான்னு கேப்போம்என்றார்.

உண்டுன்னு சொல்லிட்டா?” என்றார் தளவாய்.

அது சாஸ்திர கல்பனைன்னு சொல்லிடலாம்என்று நான் அவரிடம்  சொன்னேன். திரும்பி மகாராஜாவிடம்அடியேன். மகாப்பிராமணன் சொல்லு ஒண்ணு வாறது நல்லது தம்புரானேஎன்றேன்.

மகாராஜா மீண்டும் தாடியை நீவிக்கொண்டிருந்துவிட்டுஆமாம், அது நல்லதுஎன்றார். பெருமூச்சுடன் மெல்ல இளகினார். “ஆமா, ஆதரணீய பிராமணனுடே ஒரு சொல்லு வந்தா அது நமக்கு எல்லாவகையிலும் நல்லது.”

அடியேன்,இந்நாட்டு மணிமுடியும் செங்கோலும் சிறமடம் திருமேனிக்க கொடையாக்குமேஎன்று நான் சொன்னேன்

ஆமா, அது உண்மைதான்என்று மகாராஜா சொல்லி விடைகொடுக்கும் முகமாக கையை அசைக்க நானும் திவானும் தளவாயும் வணங்கி வெளியே வந்தோம்.

திவான் என்னிடம்பெரிய திருமேனி நல்லது சொல்லணும்என்றார்.

சொல்லுவாருன்னு நம்மாலே சொல்லமுடியாதுஎன்றார் தளவாய்.

அவர் தேவப்பிரஸ்னத்தில் பொய் சொல்ல மாட்டார். ஆனா நமக்கு அஹிதமான வார்த்தை வந்தா என்ன வழி இருக்குன்னு அவர் கிட்டேயே கேட்டுக்கலாம்என்றேன். “அவர் இங்கே லௌகீகத்திலெங்கும் இல்லை. நோன்பும் நிஷ்டையும் தவிர வேறொண்ணும் அறியாதவர். ராயரே, லௌகீகத்திலே இல்லாதவங்க சொல்லைத்தான் லௌகீகத்திற்கு கேக்க வேணும். ராஜ்யவிஷயத்திலே ஒடுக்க வாசகம் சொல்லணுமானா வைராக்கியமுள்ளவங்கதான் பூர்ண யோக்யர்.”

அவரு மக்கச்சிட்டையா மருமக்கச் சிட்டையா?” என்றார் தளவாய் நாராயணக் குறுப்பு.

நான் அதைக் கேளாதவன் போல திவானுக்கு மட்டும் தலைவணங்கி விடைபெற்றுக்கொண்டேன்.

[ 6 ]

மகாராஜா ஆணைப்படி நான்தான் சிவீந்திரம் சிறமடத்துக்குச் சென்றேன். இரணியசிங்கநல்லூரில் இருந்து ஆளூர் கணியாகுளம் வழியாக கோட்டாறு சென்று, அங்கிருந்து ஆற்றங்கரை மேட்டினூடாக சிவீந்திரம் சென்றடைந்தேன். கருமேக விதானத்துக்கு அடியில் இளவெயில் பகல் முழுக்க நீடித்தமையால் என்னால் எங்கும் நிற்காமல் செல்ல முடிந்தது. முன்னுதித்தநங்கை கோயில் அருகிலேயே நெஞ்சளவு உயரம் கொண்ட மண்கோட்டையின் வாசலில் காவல்மாடம் இருந்தது. அதன்மேல் வேணாட்டின் சங்குக்கொடியும் சிவீந்திரம் தாணுமாலையனின் நந்திக்கொடியும் பறந்தன.

காவல்மாடத்தில் காவலன் என ஒரு காலில்லாதவன் ஈட்டியுடன் அமர்ந்திருந்தான். கோட்டை கண்பார்க்கும் தொலைவிலேயே இடிந்து கிடக்க, மக்கள் அவ்வழியாகத்தான் நடமாடினர். கோட்டைவாசல் வண்டிகளை மறிக்க மட்டும்தான். கோயிலுக்குப் போகும் வண்டிகளுக்குத் தீர்வை ஏதுமில்லை. அப்படியென்றால் காவலர்களுக்கு கிடைப்பது பிச்சை போல ஏதோ கொஞ்சம்.

காவலன் என்னை அடையாளம் கண்டுகொள்ளாவிட்டாலும் என் ஜாதிக்குதிரையை அடையாளம் கண்டுகொண்டான். எழுந்து வணங்கிஅவ்விடம் ஆராக்கும்?” என்றான்.

சிறமடம் திருமேனியைப் பாக்கணும்இவ்வழியாடா?” என்றேன்.

அடியேன், ஆமாம்இதோ நேர்வழிஅங்கே அந்த பெரிய மாளிகை…”

நான் சிவீந்திரம் பெரிய தெருவுக்குள் நுழைந்தேன். தெருவின் எல்லையில் கொன்றைவனநாதர் ஆலயம். அப்பால் சற்று பள்ளத்தில் ஆதிதாணுமாலையனின் சிறிய கோயில். நேர்பின்னால் நாணல் சூழ்ந்த குளம், அதன்கரையில் இருக்கும் ஒற்றைக்கரும்பாறை மீது காசிவிஸ்வநாதரின் பழைய ஆலயம். யானைமேல் அம்பாரிபோல மிகச்சிறிய கோயில் அது.

அது பாண்டிய ராஜாக்கள் ஆண்டோடாண்டு வந்து வழிபடும் கோயில். அப்போதுகூட களக்காடு பாண்டியர்களின் ஆட்சியில் அந்தக் கோயில் இருந்தது. கொன்றைவனநாதரும் தாணுலிங்கமும்தான் திருவாழும்கோடு ராஜாக்களுக்கு பாத்தியப்பட்ட சன்னிதிகள். காசிவிஸ்வநாதருக்கு ஆதிசிவாச்சாரியார்களும் தாணுவுக்கும் கொன்றைவனநாதருக்கும் நம்பூதிரிகளும் பூஜை செய்தனர். காசிவிஸ்வநாதருக்கு இன்னமும் ஆகமமுறைப் பூசைதான். அதை மாற்றும் அதிகாரம் வேணாட்டு ராஜாக்களுக்கு இல்லை.

நான் நீராடவில்லை என்பதனால் கோயிலுக்கு வெளியே தெருவிலேயே நின்று கொன்றைவனநாதனை வணங்கிவிட்டு சிறமடம் சென்றேன். அந்தக்காலத்தில் பழையாறு சிவீந்திரம் வழியாக ஓடியபோது அங்கே ஒரு பெரிய ஏரி இருந்தது. அதன் கரையில் அமைந்ததனால் சிறமடம் என்று பெயர். சோழராஜாக்கள் பழையாறுக்கு கரைகட்டி மூன்று கிளைகளாகப் பிரித்து கொண்டுசென்றபோது ஏரி வற்றி வயல்களாகியது. பின்னர் வயல்கள் மண்ணிட்டு நிரப்பப்பட்டு வாணியர்களும் யாதவர்களும் வாழும் தெருக்களாயின.

சிறமடம் மிகப்பழைய கட்டிடம். கர்ப்பிணிப் பசுக்கள் போல வயிறு உப்பிய பெரிய மண்சுவர்களுக்குமேல் ஓலைக்குடை போல கூரை கவிழ்ந்திருந்ததுசுண்ணம்பு பூசப்பட்ட சுவர்களில் செங்காவிப் பட்டைகள் நின்றன. குழைமண்ணாலான சுற்றுச்சுவர் இடையளவு மட்டுமே உயரமானது. அதன்மேல் கமுகுப்பாளைகளை வரிசையாக சீராக அடுக்கி கூரையிட்டிருந்தனர். அது செம்மண்நிறமாக மழைச்சாரலில் மண்கரைய, சேற்றிலிருந்த பரல்கற்கள் பரப்பெங்கும் எழுந்து பரவ, பெரிய ஒரு ஊரும்உயிர் போல நின்றது. கொட்டியம்பலம் ஓலைக்கூரை இடப்பட்ட மரத்தாலான வாசலும், கருங்கல் பாளமிட்ட இரு திண்ணைகளும் கொண்டது. அங்கே காவலுக்கு இருந்த நாயர் குந்தத்தை மடியில் வைத்திருந்தான்.

என் குதிரையைக் கண்டதும் அவன் எழுந்து நின்றான். திகைத்து அங்குமிங்கும் பார்த்துவிட்டு எனக்கு முகமன் சொல்லாமல் உள்ளே ஓடினான். சற்றுநேரத்தில் சிறமடம் ஸ்தானிகர் மூவிடம் குஞ்சு நாயர் கும்பிட்டபடி வெளியே வந்தார். அவருக்கு என்னைத் தெரியும், நான் அவரை தலக்குளம் கோயிலில் சீகாரியமாக இருக்கும்போதே அறிந்திருந்தேன்.

இரணியசிங்கநல்லூர் வாழ்ந்தளும் வலிய சர்வாதிக்காரர் வீரமார்த்தாண்டன் உதயன் செண்பகராமன் சவிதம் சமர்ப்பணம்என்றார் குஞ்சுநாயர்.

அவரை வாழ்த்திவிட்டுதிருமேனி இருக்காரா? சேவிக்கணும். ராஜ கல்பனைஎன்று நான் சொன்னேன்.

திருமேனி இப்போ கொஞ்சநாளா மனையிலே இல்லை. பக்கத்து நந்தவனத்திலே ஒரு சின்ன குடிசை கட்டி அங்கேயே இருக்கார். ஆசார அனுஷ்டானங்களும் பூசையும் உண்டு. ஆனா லௌகீகமான ஒண்ணும் இல்லை. குடும்ப காரியங்கள் போய் சொல்றதில்லை. ராஜகாரியங்களும் க்ஷேத்ரகாரியங்களும் சொல்றதில்லை. லௌகீக விரக்தனா இருப்பதனாலே அங்கே லௌகீகர் போகக்கூடாதுன்னு கல்பனைஎன்றார்.

இது ஒரு அத்யாத்மிக காரியமாக்கும்என்றேன். “அதாவது தெய்வ காரியம்…”

நான் கூட்டிட்டுப் போறேன். வருகையை உணர்த்திக்கிறேன். விளிச்சால் போயி சந்திக்கலாம்.”

சரிஎன்றேன்.

மனையில் நுழைஞ்சு கொஞ்சம் சிரமம் தீர்த்துட்டு…”

மனையில் யார்?”

அஃபன் நம்பூதிரிமார் ஏழுபேரும் உண்டுஜயந்தன் திருமேனியாக்கும் இப்பம் குடும்ப மேலிடம்…”

வேண்டாம்…“ என்றேன்நான் வந்த காரியமென்ன என்று கேட்டால் ராஜியகாரியம்னு மட்டும் சொன்னாப் போதும்.”

நான் குதிரையை அங்கேயே ஒப்படைத்துவிட்டு அவருடன் நடந்தேன். அவர் என்னை மனையைச் சுற்றிக்கொண்டு தோட்டத்திற்குள் நுழைந்த பாதையில் அழைத்துச் சென்றார். சரிந்து பழையாற்றங்கரை வரை நீண்டிருந்தது பெரிய தோட்டம். ஆற்றங்கரைச் சரிவில் திருமேனியின் சிறிய குடில் இருந்தது. அதைச்சுற்றி மூங்கில் நட்டு வேலி போடப்பட்டிருந்தது. ஆற்றிலிருந்து மேலேறி குடிலுக்கு உள்ளே செல்வதற்கு மட்டுமே பாதை இருந்தது.

அந்த வேலிக்குள் போகப்பிடாதுன்னு உத்தரவுஎன்றார் ஸ்தானிகர்.

நான் பலா மரத்தடியில் நின்றேன். ஸ்தானிகர் வேலியருகே சென்று நின்று கைதட்டி குரல்கொடுத்தார். உள்ளிருந்தே திருமேனி ஏதோ கேட்பதும் அவர் பதில் சொல்வதும் தெரிந்தது.

ஸ்தானிகர் திரும்பி வந்து என்னிடம்அந்த மகிழமரத்தடியில் நிற்கவேணும்னு கல்பனை…” என்றார். “உங்களை எதிர்பார்த்திருந்தது மாதிரி எனக்கு தோணல் உண்டாச்சு

நான் ஆச்சரியமில்லாமல்ஓகோஎன்றேன். நடந்து சென்று மகிழ மரத்தடியில் நின்றேன். அதிலிருந்து பூக்கள் உதிர்ந்துகொண்டிருந்தன.

சற்று நேரத்தில் முதுமையால் உடல்வற்றி கூன்விழுந்து வளைந்த சிவீந்திரம் சிறமடம் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு கைகளை தளரத் தொங்கவிட்டு மெல்ல நடந்து வந்தார்.

சற்று அப்பால் நின்று, கண்கள்மேல் கையை வைத்து, புருவம் சுருக்கிஇரணியல்காரனாடா?” என்றார்.

அடியேன். ஆமாம் திருமேனி.”

உன் தந்தைக்கு எல்லா சடங்கும் முறைபோலே செய்யறியா?”

அடியேன், செய்றேன் திருமேனி

என்ன செய்றே?”

அடியேன், பலிகொடையும் திதியும்…”

அது எல்லாரும் செய்றது. அதுக்குமேலே செய்யணும். தந்தை செய்த எல்லா தர்மங்களையும் தொடர்ந்து செய்யணும். தந்தைக்கு நெருக்கமான எல்லாரையும் பரிபோஷிக்கணும்அவருடே ஆப்தர்களைப் ஒரு காலம் நிச்சயிச்சு முறைபோலே போய்ப்பார்க்கணும். மரியாதையும் வந்தனமும் பண்ணி, வேண்டியது செய்யணும்.”

அடியேன், அதுவும் செய்றதுண்டு.”

உன் தந்தை விஜயமார்த்தாண்டன் உதயனுக்கு சம்பந்தமுள்ள எல்லாரையும் பாக்கிறதுண்டா?”

நான் பேசாமல் நின்றேன்.

ஒருத்தி அகலச்சாதியாக்கும். ஷத்ரியர்களுக்கு அதும் முறைதான். அவ இப்ப எப்டி இருக்கா? உண்டு உடுத்து உறங்கி நிறைவா இருக்காளா?”

அடியேன், அதை நான் கவனிக்கல்லை.”

அதைக் கவனிஉன் தந்தை ஃபுவர்லோகத்திலே கண்ணீர் விடப்பிடாதுஎன்றார் சிவீந்திரம் சிறமடம் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு. “தந்தையை நிறுத்து கணக்கு போட்டுப் பாக்க பிள்ளைகளுக்கு உரிமை இல்லை. மனுஷ மனசுக்க பிரேமைகளை வெறுத்துப் பேச யாருக்கும் உத்தரவு இல்லை. குருவுக்கும் தந்தைக்கும் தெய்வத்துக்கும்கூட.”

அடியேன் அதைச் செய்றேன்.”

சரி, நீ வந்ததைச் சொல்லு.”

நான் சொல்லி முடித்ததும்இதிலே தேவப்பிரஸ்னம் வைச்சுப் பாக்க ஒண்ணுமே இல்லை. அவ மதுரை மீனாக்ஷியாக்கும். ஆரல்வாய்மொழி மீனாக்ஷி அல்ல. சில தெய்வங்கள் அப்படித்தான். அந்த ஊருலே விளைஞ்சு வந்த தெய்வங்கள் அதெல்லாம். அதாவது, மரத்திலே கனி காய்க்கிற மாதிரி. விசாலாக்ஷி காசியிலே, காமாக்ஷி காஞ்சியிலே, மீனாக்ஷி மதுரையிலேஅவ அங்கேதான் இருக்கணும். அங்கேருந்து இங்கே வந்து அம்பத்தொன்பது வர்ஷம் இருந்தது நம்ம மண்ணுக்க புண்யத்தாலே. அவ இங்கே இருந்தாலும் அங்கேயும் இருந்தா. அவள் அருள் மதுரையை விட்டு நீங்குறதே இல்லை. அவளை நாம வைச்சுகிட முடியாது. ஆற்றை அள்ளி வைச்சுக்கிட பாத்திரம் உண்டோடா?”

நான் பெருமூச்சுவிட்டு தலைகுனிந்தேன்.

போய்ச்சொல்லு ராஜா கிட்டே. அனுக்ரகம் வாங்கி வேண்டதெல்லாம் செய்து முறைபோலே தேவியை அனுப்பி வைக்கணும், அதுதான் முறைன்னு.”

அடியேன், கல்பிச்சு என்மேல் பொறுமை உண்டாகணும். நான் ஒண்ணு கேக்கணும்.”

சொல்லு.”

அடியேன், தேவி கிளம்பிப் போறது முறைதான்னு அடியேனும் ஏத்துக்கிடறேன். ஆனா இத்தனை ஆண்டுகள் இந்த மண்ணிலே இருந்தருளிய தேவி இல்லையோ?.அவளை அப்டி கையொழிச்சு அனுப்பிவைச்சா அது இங்கே ஒரு குறைதானே? தெய்வமிருந்த இடம்னாலும் குறைன்னா அமங்கலமில்லையா? மகாராஜாவுக்கும் ராஜ்ஜியத்துக்கும் அது அபக்கியாதி தானே?”

நீ வந்தது என் வார்த்தையை வாங்கிக்கிட்டு, நான் சொல்லித்தான் தேவியை அனுப்பினோம்னு சொல்லி ஊரிலே பரப்பத்தான், இல்லையாடா? உன் தந்தை விஜயமார்த்தாண்டன் உன்னைவிட சமர்த்தன்.”

அவர் புன்னகைத்தபோது மிக அணுக்கமானவராக ஆனார். நான் துணிவுபெற்றுஅடியேன், அப்டியும் இருக்கட்டுமே. அஞ்சும்போது அப்பன் பக்கத்திலே ஓடிப்போறதுதானே குழந்தைக்கு வழக்கம்?”

சரி சரி, நீ என்னை சுகிப்பிச்சது போரும்என்று அவர் சொன்னார். “தாயோ, மகளோ, மருமகளோ, தாசியோ ஸ்திரீ யாரா இருந்தாலும் மங்களவதி. அவள் கிளம்பிப்போனா அது ஒரு அமங்களமேதான்அவர் என்னை கூர்ந்து பார்த்துஆனா ஒரே ஒரு ஸ்திரீ கிளம்பிப்போறது மட்டும் மகாமங்களம். குடும்பத்துக்கு கியாதியும் க்ஷேமமும் கொண்டுவாறது அதுஎன்றார்.

நான் நெஞ்சுபடபடக்க அவரைப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவர் சொல்லப்போவதை உணர்ந்துவிட்டிருந்தேன்.

அவ அங்கே மதுரையிலே பெருங்கோட்டைக் கோயிலிலே சுந்தரனை மணம் கொண்டு மகாராணியா இருக்கலாம். அவளுக்க சொந்த ஊரு இதாக்கும், இந்த குமரித்துறை. அவளுக்கு துறையோள்னும் குமரியள்னும் பேரு இருக்கு. அவ பிறந்து விளையாடி வளர்ந்த மண்ணு இது. இந்த முக்கடல் முனம்பிலே பிறந்த முக்குவத்திதான் அவ. அதனாலே அவளுக்கு மீனம்மைன்னு பேரு. அவளை பெத்தெடுத்த இந்நாட்டுக்கு ராஜாவாக இருக்கப்பட்டவன் அவளுக்கு தந்தை ஸ்தானம் உள்ளவன்தென்குமரி ஆளும் ராஜாவுக்க புத்திரி அவ.”

நான் நெஞ்சு நிறைந்த விம்மலை மூச்சாக வெளிவிட்டேன்.

பிறந்த இல்லம் விட்டு மகள் மங்கல்யவதியாய் புருஷனோடு ஒப்பம் கிளம்பிப் போறது தந்தைக்கு ஹ்ருதயமதுரமான சந்தர்ப்பம். அந்த இல்லத்துக்கு அஷ்ட லக்ஷ்மிகளும் வந்து நிறையுற முகூர்த்தம் அதுஎன்றார் சிறமடம் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு. ”மகாராஜாகிட்டே சொல்லு, விதிப்படி அவன் பெண்ணைப்பெற்ற தந்தையா மணையிலே உக்காந்து தேவியை தன் வலத்தொடை மேலே உக்கார வைச்சு சுந்தரேசனுக்கு கைத்தலம்பற்றிக் குடுக்கட்டும்

நான் சிறு நடுக்கத்துடன் கைகூப்பினேன்.

சீர்வரிசைகளோடே, சர்வமங்களங்களோடே அவளை புருஷன்வீட்டுக்கு அனுப்பிவைக்கட்டும். எல்லா விமர்சைகளும் வேணும். ஊரடங்கி அழைக்கணும். பதினெட்டுபிடாகையும் கூடணும். ஏழுவகை பிரதமனோடே சத்யைவட்டம் உண்டாகணும். பிராமண தானம், சாதுஜன தானம், ரிஷிகாணிக்கை எல்லாம் வேணும்ஒருகுறையும் வராது. சர்வமங்களமே நிகழும்ஓம் தத் சத்.”

அடியேன், அவ்வண்ணமேஎன்றேன். என் கண்கள் நிறைந்து, குனிந்தபோது கண்ணீர் சொட்டியது.

பின்னே, பெண்ணைப்பெற்ற தந்தை இதில் பெரிசா தராதரம் ஒண்ணும் பாக்கவேண்டியதில்லை. இது பெண்ணே போயி தேடிக்கிட்ட புருஷன். சுடலைக்காரனா இருந்தாலும் மாப்பிள்ளை ஆளு சுந்தரன், பொண்ணுகளுக்கு வேறே என்ன வேணும்? நாமளும் அதுக மனசை மட்டும் பாத்தாலே போதும்என்றார் சிறமடம் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு. அவர் மெல்லச் சிரித்ததை நான் மிக அந்தரங்கமான ஓர் ஓசைபோல கேட்டேன். என் மெய் விதிர்ப்பு கொண்டது. இடத்தொடை நடுங்கிக்கொண்டே இருந்தது.

அவர் திரும்பிச் செல்வது வரை நான் பார்த்துக்கொண்டு நின்றேன். அதன் பின் கூப்பிய கையைப் பிரிக்காமலேயே திரும்பி நடந்தேன். வழியெல்லாம் மௌனமாக கண்ணீர் விட்டுக்கொண்டிருந்தேன். ஆனால் என் உள்ளம் நிறைந்து முகம் மலர்ந்திருந்தது.

[ 7 ]

மதுரையிலிருந்து தூதுக்குழு அணுகி வந்த செய்தியைக் கேட்டதுமே திவான் ஆளே மாறிவிட்டார். அவர் மதுரைத் தரப்பினராக ஆகிவிட்டார். ஸ்ரீவிஜயநகர நாயக்கர்களின் அரசாங்கம் என்பது முழுக்கவே நியோகி பிராமணர்களால் நடத்தப்படுவது. அதை அவர் தனது அரசு என நினைத்தார். அவர்களை நாயக்க ராஜாக்களுக்குச் சமானமாக வரவேற்கவேண்டுமென துடித்தார்.

அவரே என்னை தேடிவந்தார். நான் ஸ்ரீவாழும்கோடு அரண்மனையின் வலியசீகாரியம் அறையில் அப்போது இருந்தேன். திவான் வந்ததை அறிந்து எழுந்து நானே சென்று எதிர்கொண்டேன்.

நான் மரியாதைச்சொற்கள் சொல்வதற்கு முன்னரே, “நான் ஒரு காரியம் சொல்லணும்னு வந்தேன்நானே வந்து சொல்லணும்னு நினைச்சேன். ஏன்னா இது ராஜகாரியம்…” என்றார் திவான்.

நான் அவருடைய பரபரப்பை பார்த்துக்கொண்டிருந்தேன். அவர்நம்ம ராஜ்யத்துக்கு எல்லை சேர்மாதேவி. அவங்க அங்கே வந்ததுமே நம்ம ராஜாவுக்க கொடியும் குடையும் சஹிதம் ஒரு ராஜப்பிரதிநிதி அங்கே போயி அவங்களை வரவேற்கிறது உசிதம்என்று என்னிடம் சொன்னார்.

எரிச்சலுடன்வாறது நாயக்க ராஜா இல்லை. ராஜரத்தமும் இல்லை. தளவாய் வெங்கப்ப நாயக்கன் பெல்லாரி கோட்டைத்தலைவனா இருந்தவன். ராயசம் விஜயரங்கய்யா சீரங்கப்பட்டினம் கோயிலில் சம்பிரதியா இருந்தவர். அவங்களை வரவேற்க ராஜாவோ குடையோ போகக்கூடாது. தக்ஷிணாதி மடத்து சுவாமி நாராயண பட்டாச்சாரியர் வேணுமானா யதிவரியர். ஆனா அவரும் ராஜகாரியமா வாறதனாலே ராஜதூதராத்தான் பாக்கணும்என்றேன்.

தளவாய் வெங்கப்பன் கோபக்காரன்மகாராஜா குமார கம்பணனுக்கு ஆப்தன். எட்டு யுத்தங்களிலே தோளோடு தோள்நின்னு சண்டைபோட்டவன்னு பேச்சு. இல்லேன்னா இந்த பெரிய வேலையை அவன் கிட்டே ஒப்படைச்சிருக்க மாட்டாங்க. அவங்க கிட்டே பன்னிரண்டாயிரம் பேர் கொண்ட படை இருக்கு. திருநெல்வேலியிலே படையை நிப்பாட்டிட்டுதான் இங்க வாறாங்கஎன்றார் திவான்.

ஆனா நம்மை மிரட்ட வரல்லை. நம்மளை அவங்களுக்கு ஆப்தர்களா நினைச்சுத்தான் வர்ராங்க. அவங்களோட குலதெய்வத்தை காபந்து பண்ணி வச்சு திருப்பிக் குடுக்கப் போறோம்அந்த மரியாதை அவங்களுக்கு நம்ம மேலே இருக்கும்என்றேன்.

தளவாய் நாராயணக் குறுப்பு அவரே வாளோடே போகணும்னு சொல்றார். போறது நல்லதாக்கும்என்றார் திவான். “தளவாயே போய் எதிரேற்றா அவங்களுக்கு நம்ம மேலே ஒரு பிரீதி உண்டாகும். ஒரு சன்மனசோடே இங்கே பேசுறதுக்கு வருவாங்க

போகலாம், மகாராஜா கிட்டே ஒரு வார்த்தை உத்தரவு வாங்கிட்டுப் போகணும்என்றேன்.

திவான் முகத்தை கடுப்பாக்கிக் கொண்டுஉரியமுறையிலே எதிரேல்பு இல்லைன்னு நாளைப்பின்னை பேச்சுவந்தா நான் பொறுப்பில்லைஎன்றார்.

நான் பேசிக்கிடறேன்என்றேன்.

அவர் முகத்தை திருப்பிக்கொண்டு சென்றார். ஆனால் எந்த அனுமதியும் இல்லாமலேயே அவரும் தளவாயும் முந்தைய நாளே ஸ்ரீவாழும்கோட்டில் இருந்து கிளம்பி, சேரன்மாதேவி எல்லைக்குச் சென்று மதுரையின் தூதுக்குழுவை வரவேற்றார்கள். அதற்கு மூன்று யானைகளையும் பதினெட்டு வெள்ளைக்குதிரைகளையும் நூற்றெட்டு வேலேந்திய படைவீரர்களையும் கொண்டு சென்றிருந்தனர். தாலமேந்திய பாத்ரமங்கலம் தாசிகள் பதினெட்டுபேரும், மங்கலவாத்தியங்களுடன் பதினெட்டு மாரார்களும் உடன்சென்றனர்.

அங்கே என்ன நடந்தது என்று எனக்கு தெரியவில்லை. இருவரும் தங்களை மிகத்தாழ்த்திக் கொண்டிருக்கவேண்டும். தூதுக்குழு திருவாழும்கோட்டுக்கு வரும்போது மதுரை தளவாய் வெங்கப்ப நாயக்கர் ஸ்ரீவாழும்கோட்டின் திவானையும் வேணாட்டுத் தளவாய் நாராயணக் குறுப்பையும் வேலைக்காரர்களைப் போல நடத்தினார். அவர்கள் நேரடியாகக் கேட்ட எந்த கேள்விக்கும் பதில் சொல்லவில்லை. அவர்களின் முகத்தையே பார்க்கவில்லை.

நான் முதலில் அதைப் பார்த்து அவர்கள் பெரிய ராஜ்ஜியத்தின் மேட்டிமையைக் காட்டுகிறார்கள் என்று நினைத்துக்கொண்டேன். ஆனால் அவர்கள் பல்லக்குகளில் இருந்து இறங்கி அரண்மனை நோக்கி வரும்போது அரண்மனை வாசலில் நின்று வணங்கி முகமன் உரைத்த என்னை நோக்கி தளவாய் வெங்கப்ப நாயக்கர் புன்னகைத்தது அணுக்கமானதாகவே இருந்தது. நான் வணங்கியபோது ராயசம் விஜயரங்கய்யா என் தலைதொட்டு வாழ்த்தினார்.

அரண்மனைக்குள் வந்ததும் அவர்கள் மிக இயல்பாக இருந்தனர். திவான் நாகமையாதான் அங்குமிங்கும் ஓடி, கூச்சலிட்டு ஆணைகளை பிறப்பித்து, பதற்றத்தை உருவாக்கிக் கொண்டிருந்தார். தளவாய் நாராயணக் குறுப்பு எதற்காகவோ ஒரு காவல்வீரனை ஓங்கி அறைந்தார். நான் அவரிடம்அவன் திரும்ப வாளை உருவினால் நான் துணைக்கு வரமாட்டேன் குறுப்பேஎன்றேன். அவர் திகைத்து நின்றபின் திரும்பிச் சென்றார்.

தளவாய் வெங்கப்ப நாயக்கர் என்னிடம் நேரடியாகவே அவர்களுக்கு தேவையானவை என்னென்ன என்று ஆணையிட்டார். மிக எளிமையான வசதிகளையே அவர்கள் நாடினர். அவர்கள் மாமதுரை நகரத்தவர் என்பதனால் நான் உபச்சாரமாகஇது சின்ன ஊர். இந்த அரண்மனையும் கோழிக்கூடு மாதிரி சின்னது. பொறுத்தருளணும்என்றேன். “தரையும் சாணிமெழுகிய தரைதான். இங்கே அதாக்கும் வழக்கம்.”

தளவாய் வெங்கப்ப நாயக்கர் வெடித்துச் சிரித்து, “நீங்கள் பெல்லாரியில் பெரியநாயக்கரின் மாளிகையைப் பார்க்கவேண்டும். இது கோழிக்கூடுன்னா அது குருவிக்கூடுஎன்றார். “என் கொள்ளுத்தாத்தா ராயலசீமையிலே மாடுமேய்த்தவர் நாயரே. நாங்கள் அதற்காக பெருமைகொள்கிறோம். கோபுண்யம்தான் எங்களை நாடாள வைத்தது.”

அந்தச் சிரிப்புடன் எல்லாம் உடைந்தது. நாங்கள் இயல்பாகப் பேசிக்கொண்டோம். ஒருவரை ஒருவர் கேலிபேசிக் கொண்டோம். வெங்கப்ப நாயக்கருக்கு வேணாட்டின் பசுமை திகைப்பை அளித்திருந்தது. “இப்டித்தான் எல்லா மாசமும் இருக்குமா? இங்கே இப்படி வர்ஷலக்ஷ்மியை பிடித்துவைத்துக்கொண்டால் மற்ற ஜனங்கள் என்ன செய்வார்கள்?” என்றார்.

இது பத்மநாபதேசம். சீதேவியை அகலவிடுவானா அவன்? அவள் அவன் மார்பிலே ஆபரணம் அல்லவா?” என்றார் ராயசம் விஜயரங்கய்யா.

தளவாய் வெங்கப்ப நாயக்கர் வடுகர்களின் வழக்கப்படி பிறந்த இருபத்தெட்டாம் நாள் முடிகளைந்த பின்னர் தலைமுடி வெட்டிக்கொண்டதில்லை. அது கரிய புரிகளாக அவருடைய இடை வரை தொங்கியது. அதை சுருட்டி பெரிய கொண்டையாக வலம்சரிவாக வைத்து மேலே பட்டுத்துணி சுற்றிக்கொண்டார். காதுகளை வடித்து பொன்தக்கை அணிந்து தோள்வரைக்கும் தொங்கவிட்டிருந்தார். அவர் பேசும்போது காதுகள் இரு சிறு ஊஞ்சல்கள் போல ஆடின.

நான் வெங்கப்ப நாயக்கரின் காதைஆட்டுக்காதுஎன்றேன்.

அவர்நல்லவேளை , உங்க ஆட்களை மாதிரி ஆனைக்காது இல்லை. இருந்திருந்தால் நாயக்க ராஜ்ஜியத்து கருவூலமே காதுகளில் ஆடியிருக்கும்என்றார்.

நான் அவர் தொப்பையை கேலிசெய்தேன். அவர் நடந்தபோது அது ததும்பியது. “உங்க குலதெய்வம் பெருமாளானாலும் உங்க உடம்புக்கு இஷ்டதெய்வம் கணநாயகன்னு தோணுது.”

அவர் உரக்க நகைத்தபின் அதை தடவியபடிநூறு கல் நடந்து மாடுமேய்த்த என் தாத்தாவுக்கே தொப்பை இருந்தது. நானெல்லாம் இலைபோட்டு சாப்பிடுபவன்என்றார்.

தக்ஷிணாதி மடத்து சுவாமி நாராயண பட்டாச்சாரியர் மட்டும் ஏதும் பேசாதவராக இருந்தார். ஆனால் அவரும் விரோதமாக இல்லை. அவருடைய பூஜைகர்மங்களை முறையாகச் செய்ய ஆர்வம் கொண்டிருந்தார்.

அன்று மாலையே மகாராஜா அவர்களுக்கு முகம் காட்டினார். திவான் நாகமையா அவர்களை ராஜசபைக்கு இட்டுச்செல்லும்போது பட்டிநாய் போல கூச்சலிட்டபடி அங்குமிங்கும் ஓடி வழி ஒதுக்கினார். ”ஒத்துங்கஅப்பாலே போங்க.. டேய்என்று காவல்வீரர்களை தேவையில்லாமல் அதட்டினார். தளவாய் நாராயணக் குறுப்பு ஏதோ போருக்குச் செல்வதுபோல வாளை உருவி கையில் தூக்கி பிடித்திருந்தார். அவர்களை பார்க்கவே வெறுப்புடன் நான் தலை திருப்பிக்கொண்டேன்.

ராஜசவிதம் சென்றதும் எந்த அவைமரியாதையும் இல்லாமல் திவான் நாகமையா முன்னால் ஓடிச்சென்று உரத்தகுரலில்ஸ்ரீவிஜயநகரமும் சிராப்பள்ளியும் மதுரையும் ஆண்டருளும் துங்கபத்ராநாதன், மாதவ பாததாசன், ஸ்ரீரங்கநாத பாதசூடன்குமாரகம்பணப் பெரியநாயக்கருடைய தளவாய் ஸ்ரீ ரெட்டூரி வெங்கப்ப நாயக்கர் எழுந்தருளுறார். உடன் வந்திருக்கிறார் மதுரை ராயசம் ஸ்ரீ அக்குண்டி விஜயரங்கையா அவர்கள். தக்ஷிணாதி மடத்து சுவாமி ஸ்ரீலஸ்ரீ நாராயணப் பட்டாச்சாரியரும் வந்திருக்கிறது நம்ம புண்ணியம். ஸ்ரீவாழும்கோடு ராஜகொட்டாரம் பூர்ணமடைஞ்சுது. நாமெள்ளாம் தன்யரானோம்என்றார்.

தளவாய் வெங்கப்ப நாயக்கர் புருவம் சுளித்து அவரைப் பார்த்துவிட்டு, கைகூப்பியபடி உரக்கஸ்ரீவாழும்கோடு இருந்தருளும் வேணாட்டு மகிபதி, கேரளாதிபதி, சேரகுலோத்துங்கர், உத்துங்கசீர்ஷர், ஸ்ரீ ஆதிகேசவப் பாதப்ரியர், ஆதித்ய வரகுணன் சர்வாங்கநாதப் பெருமாளுக்கு சாஷ்டாங்க புண்ய வந்தனம். மதுரை சிராப்பள்ளி ஆண்டருளும் ஸ்ரீவிஜயநகர மகுடாதிபதி குமாரகம்பண நாயக்கரின் செங்கோல் மகாராஜாவின் முன் கனிந்து பணிகிறதுஎன்றார்.

அந்த வழக்கத்துக்கு மீறிய அவைமரியாதையைக் கேட்டு திவான் ஜக்கால நாகமையா வாய்திறந்து விழித்து நின்றார். தளவாய்க்கு ஒன்றும் புரியவில்லை. அவர் வாளை பிடித்தபடி நின்று மாறிமாறிப் பார்த்தார்.

வெங்கப்ப நாயக்கரிடம்ஸ்ரீ வர்த்திதம்என வாழ்த்திவிட்டு மகாராஜா எழுந்து மதுரை ராயசம் விஜயரங்கையாவையும் நாராயண பட்டாச்சாரியாரையும் கால்தொட்டு வணங்கினார். அவர்கள் அவர் தலைக்குமேல் இடக்கை தூக்கி வாழ்த்தினர்.

அவர்களுக்கு இருக்கை அளிக்கையில் தளவாய் வெங்கப்ப நாயக்கர் என்னிடம்இங்கே நாங்கள் சொல்லும் தூதை மகராஜா சவிதம் இங்குள்ள பாஷையில் திருப்பிச் சொல்லுங்கள். மற்றவர்கள் கொஞ்சம் விலகி நிற்கட்டும்என்றார்.

திவான் முகம் சுருங்கி பின்னகர, மகாராஜா புன்னகையுடன் அவரிடம்தளாவாய் அவரோடே தூதுவார்த்தையை நமக்குச் சொன்ன பின்னால் அதன் சாராம்சத்தைச் சொல்லுங்கள் அமாத்யரேஎன்றார்.

அடியேன்என்றபோது திவான் முகம் மலர்ந்தார்.

மதுரையிலிருந்து அவர்கள் மகாராஜா குமார கம்பணனின் ஆணையுடன் வரவில்லை. அரசி கங்கம்மா தேவியின் விக்ஞாபனத்துடன் வந்திருந்தனர். மதுரை அன்னை ஸ்ரீமீனாக்ஷியம்மையை அவள் இருந்தருள வேண்டிய மதுரைக்கே கொண்டுசெல்ல விரும்புவதாகவும், உரிய முறையில் அம்மையை மதுரைக்கு அனுப்பிவித்து தன் நன்றிக்கும் வணக்கத்திற்கும் பாத்திரமாகவேண்டும் என்றும் அரசி வேணாட்டு அரசரிடம் கைகூப்பி கோரியிருந்தார்.

ராயசம் அந்த ஓலையை வாசித்ததும் நான் அதன் சுருக்கத்தை மலையாண்மையில் ஒருமுறை சொல்லிவிட்டு, விக்ஞாபனம் என்ற சொல்லை மகாராஜா திருவுளம் கொள்ளவேண்டும் என்று எண்ணி அதை மட்டும் இருமுறை உச்சரித்தேன். தளவாய் வெங்கப்ப நாயக்கர் என்னை நோக்கி பாராட்டும் முகமாக புன்னகைத்தார்.

மகராஜா உளம் நெகிழ்ந்துவிட்டார். “தென்னாடு ஒந்நாக இருந்தருளும் ஸ்ரீதுர்க்கை வடிவான அம்மை கங்கம்மா ராணி எளியவனாகிய நம்மை வணங்கி நம்மிடம் கேட்பது இது. நாம் தலைகொண்டு செய்யவேண்டிய காரியம். தெய்வகாணிக்கையாக இதைச் செய்வோம்னு மகாராணி சவிதம் உணர்த்திக்க வேண்டும் என்று சொல்லும் சர்வாதிக்காரரேஎன்றார்.

நான் அதைச் சொன்னதும் தளவாய் வெங்கப்ப நாயக்கர்இந்த சொல் போதும்என்றார்

நம்முடே கல்பனை எந்து எந்நு உரைக்குகஎன்று மகாராஜா என்னிடம் ஆணையிட்டார். சிவீந்திரம் சிறமடம் பிரம்மதத்தன் நம்பூதிரிப்பாடு அளித்த அறிவுரையின்படி மகாராஜா தானே அம்மைக்கு தந்தை என அமர்ந்து, வலத்தொடையில் அவளை இருத்தி, சுந்தரேசப் பெருமானுக்கு ஸ்ரீமீனாக்ஷியம்மையை மணம்செய்து கொடுத்து, உரிய சீர்சிறப்புகளுடன் அனுப்பிவைக்க எண்ணமிட்டிருப்பதாக நான் அவர்களிடம் சொன்னேன்.

தளவாய் வெங்கப்ப நாயக்கர் முதலில் நான் சொல்லவருவதென்ன என்று புரிந்துகொள்ளவில்லை. ஒருகணத்தில் புரிந்துகொண்டதும் சட்டென்று எழுந்து நின்று முகம் மலர்ந்து, கண்ணீர் பளபளக்க, கைகூப்பினார். “இது தெய்வஹிதம்இது சாக்ஷாத் மதுரை மகாதேவி உத்தரவுஅடியேங்கள் வெறும் கருவிகள். ரங்கா! ரங்கா!” என்றார்

மகாராஜாவிடம்இதை எப்டி சொல்லப்போறேன்னு நினைச்சிட்டிருந்தேன். மீனாக்ஷியம்மை வெளியே போக நீங்க சம்மதிக்காட்டி என்ன செய்றதுன்னு வாற வழியெல்லாம் பேசிட்டிருந்தோம். தெய்வத்தை பிரியணும்னு பக்தன்கிட்டே சொல்ல நமக்கு வாக்கு இல்லை. தெய்வம் கிளம்பிப்போன நாட்டுலே அந்த பெருங்குறை இருக்கத்தான் செய்யும். அதுக்காச்சுட்டி நம்ம கடமையைச் செய்யாமலும் இருக்க முடியாது. ஆனா இப்ப எல்லாமே தெளிவாயிட்டுது. மங்கலையாகி வீடுவிட்டு போகிற மகள் நூறுமடங்கு மங்கலத்தை பிறந்தவீட்டுக்கு குடுத்திட்டுப் போறா….” என்றார்.

ராயசம் விஜயரங்கையாயாரா இருந்தாலும் அந்த யோஜனையை குடுத்தவர் மகான். தெய்வஹிதம் அறிஞ்சவர். அவர் பாதங்களிலே தலைவைக்க வேணும்என்றார்.

அவையிலிருந்த ஒவ்வொருவரும் நெஞ்சு நிறைந்திருந்தனர். அரச சபை என்பது பொதுவாக ஒவ்வாதன பேசப்பட்டு, கவலைகள் பகிர்ந்து கொள்ளப்பட்டு, கொடியவைக்கு ஆணை பிறப்பிக்கப்படும் இடம். அவைகளில் அரிதாகவே அத்தனை நிறைவூட்டுவன நிகழ்கின்றன. மாறிமாறி துதிகளையும் வந்தனங்களையும் சொல்லிக்கொண்டார்கள். என்ன சொல்வதென்று அறியாமல் சொன்னதையே திரும்பச் சொன்னார்கள். கைகூப்பிக் கொண்டார்கள். சொற்களால் தழுவிக்கொண்டே இருப்பது அது என்று எனக்குப் பட்டது. அந்த அவையில் இல்லா இருப்பென தேவி கங்கம்மா மகாராணியும் மாமங்கலை மீனாக்ஷியம்மையும் இருந்தனர்.

அன்றே எல்லாம் முடிவாகியது. நான் உடனே திருநந்திக்கரைக்கு ஆளனுப்பி மூத்தகணியன் குந்நத்து அச்சுதன் பெருமக்காரனை வரவழைத்தேன். அவர் கணித்துச் சொன்ன நாளில் தேவியின் ஸ்ரீமங்கலத்துக்கும் புறப்பாட்டுக்கும் நாள் குறித்தோம். சித்திரை மாதம் பதினொன்றாம் நாள், துவாதசியில், காலை முதலொளிப் பொழுதில் மணமங்கலம். சித்திரா பௌர்ணமி நாளில் அம்மையும் அப்பனும் மதுரைக்கு புறப்படுவார்கள்.

நாடெங்கும் நாற்பத்தெட்டு ஆலயமுற்றங்களில் முரசறைந்து மீனாக்ஷி கல்யாண நாள் அறிவிக்கப்பட்டது. ஒரே நாளில் வேணாடெங்கும் பேச்சு பரவியது. எதிர்ப்படும் ஒவ்வொருவர் முகத்திலும் அவர்கள் அதை எண்ணிக்கொண்டிருப்பதை, முந்தைய கணம் வரை அதைப்பற்றிப் பேசி நிறுத்திய சாயல் இருப்பதைக் கண்டேன்.

நாடெங்கிலுமிருந்து மக்கள் திரளாகக் கிளம்பிச்சென்று தேவியை வழிபடலானார்கள். அதுவரை அங்கே மீனாக்ஷியம்மை இருந்ததை ஒவ்வொருவரும் எப்படியோ கொஞ்சம் அறிந்திருந்தார்கள் என்பது அப்போது தெரிந்தது. அதைச் சொன்னபோது மகாராஜா புன்னகைத்துதீபத்தை ஒளித்துவைக்கலாகுமா சர்வாதிக்காரரே?” என்றார்.

[ 8 ]

ஆரல்வாய்மொழியில் மீனாக்ஷியம்மை கொலுவமர்ந்த பரகோடி கண்டன் சாஸ்தாவின் ஆலயத்தைச் சுற்றி படைகளை நிறுத்தி தரிசனத்தை முறைப்படுத்தினோம். அந்தப் பொறுப்பை ஆரல்வாய்மொழி கோட்டை எஜமானன் கல்குளம் அச்சுதக் குறுப்பு ஏற்றுக்கொண்டார். நாளெல்லாம் பகலும் இரவும் ஆலயம் திறந்திருந்தது. நீர்மலர் காட்டி வழிபட எப்போதும் அனுமதியிருந்தது. முறைவைத்து சிவாச்சாரியார்கள் அச்சடங்கைச் செய்தனர்.

விழா ஏற்பாடுகள் எப்போதென்று தெரியாமல் தானாகவே தொடங்கி, உடனே விரைவுகொண்டு, வெறிமிகுந்து முன்நடந்தன. விழாவுக்கான விளைபொருட்களை அனைவரும் கொடையாக அளிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டு அத்தனை ஆலயங்களுக்கு முன்னாலும் அவற்றைப் பெற்றுக் கொள்வதற்கு காரியக்காரர்கள் நிறுத்தப்பட்டனர். பறக்கை, சிவீந்திரம் என இரு ஊர்களில் இருந்து மட்டுமே இரண்டு நாட்களுக்குள் தேவையான நெல்லும் காய்களும் வந்து சேர்ந்துவிட்டன. ஆனால் மேலும் மேலுமென வந்து குவிந்துகொண்டிருந்தன. தேவைக்கு எஞ்சியதை மணக்குடிச் சந்தையில் விற்று மேலும் பொருட்கள் வாங்கப்பட்டன. அவை வண்டிகளில் ஆரல்வாய்மொழி அன்னை ஆலயத்துக்குக் கொண்டுசெல்லப்பட்டன.

நான் குதிரையிலேயே குடியிருந்தேன் என்று தோன்றியது. கோட்டாறு கம்போளத்திற்கும் மணக்குடி துறைமுகத்துக்கும் ஆரல்வாய்மொழிக்கும் இரணியலுக்கும் ஸ்ரீவாழும்கோடுக்குமாக தூக்கமில்லாப் பேயாக இரவும் பகலும் அலைந்து கொண்டிருந்தேன். குதிரைமேலேயே தொய்ந்து அமர்ந்து தூங்கினேன். கண்ணில்கண்ட குளங்களில் நீராடினேன். ஆங்காங்கே சத்திரங்களிலும் கோயில்களிலும் கிடைத்ததை உண்டேன்.

இத்தகைய நிகழ்வுகளில் செய்யுந்தோறும் செயல் பெருகுகிறது. திருத்துந்தோறும் பிழை பெருகுகிறது. ஒருகட்டத்தில் செய்யாச் செயல்களும் செய்த பிழைகளும் மட்டுமே தெரியவர, அடிவயிற்றில் அனலென அச்சமும் ஆங்காரமும் மட்டுமே எஞ்சுகிறது. செயலே ஒவ்வொரு கணமும் என்றிருக்க ஏதும் செய்யாமல் இருப்பதுபோல் உள்ளம் பிரமை கொள்கிறது. விசை மிகுந்து மிகுந்து ஒரு கட்டத்தில் உளம் நொய்ந்து கண்ணீர் விடுகிறோம். நம்பிக்கையிழந்து விழுகிறோம். அந்த இருண்ட ஆழத்தில் இருந்து எழுந்து மறுகணமே எழுந்து மேலும் வெறிகொள்கிறோம். மாளா ஊசல். ஓய்வில்லா அலைக்கொந்தளிப்பு. தாளமுடியாத உணர்வாடல். ஆனால் அது நாமிருக்கும் பேரின்பநிலை என அறிய அதைக் கடந்துவந்து திரும்பி நோக்கவேண்டியிருக்கிறது.

மீனாக்ஷி எழுந்தருள்கையை திருமணமாகவே நடத்துவதை தளவாய் வெங்கப்ப நாயக்கர் முறையாக மதுரைக்கு தூதன் கிருஷ்ணப்ப நாயக்கன் வழியாக அறிவித்தார். அங்கிருந்து மகாராணி கங்கம்மா தேவியின் ஸ்ரீமுகம் வந்தது. அதை நான் அரசசபையில் வாசித்தேன். கைகூப்பியபடி அரசர் கேட்டிருந்தார். மாடம்பிகளும் ஊர்ப்பெரியவர்களும் குடித்தலைவர்களும் நிறைந்த பிரஜாயோக சபை அமைதியாக செவிகூர்ந்திருந்தது.

“திரு திகழ்க. சிராப்பள்ளி மதுரை இருந்தருளும் கொடியுடையார், ஸ்ரீ விஜயநகர மகுடபதி ராஜராஜேஸ்வர குமார கம்பண பெரிய உடையார் அறிய, மகாராணி செய்வித்த ஸ்ரீமுகம். ஸ்ரீ மீனாம்பாள் எங்கள் நாட்டுக்கு ஸ்ரீபெருக வந்த மருமகள். அவள் உங்கள் மும்முகக் கடற்கரையில் பிறந்த முத்து. உங்கள் மடியிலமர்ந்த மகள். நீங்கள் அவளை எங்கள் தென்னாடு உடைய அழகனுக்கு மணம் செய்விப்பது தெய்வ இச்சையால் நிகழ்வது. அந்த ஆணையை நெஞ்சில் வாங்கிய மகாமனஸ்கருக்கு சாஷ்டாங்க பிரணாமம். அந்த ஆணையை நிறைவேற்றும் உங்களுக்கு பூர்ணப் பிரணாமம். இந்த திருக்கல்யாணம் அத்தனை சிறப்புகளுடனும் நடக்கும். மணவாளனின் தரப்பிலிருந்து ஒரு குறையும் இருக்காது. தென்னாட்டிலுள்ள அத்தனைபேரும் அவனுக்கு உறவினர்களும் ஏவலர்களும் அடிமைகளும்தான். நமச்சிவாய சொல்லிப் பணியும் சிவதாசி ஆரைவீட்டாள் கங்கம்மா”

நான் ஓலையை வாசித்தபோது மகாராஜா கைகளைக் கூப்பியபடி கண்ணீருடன் தலைகுனிந்து விம்மினார். அவையில் உணர்ச்சி ஓசைகள் எழுந்தன. நான் உதடுகளை இறுக்கியபடி நான் ஓலையை மீண்டும் குழலில் இட்டேன். அந்த அவையில் அப்போது தளவாய் வெங்கப்ப நாயக்கரும் ராயசம் விஜயரங்கய்யாவும் நாராயண பட்டாச்சாரியாரும் இருந்தனர். அவர்களும் கைகூப்பி கண்ணீர் மல்கினர்.

நான் “அடியேன், இது மிக விசேஷம். இதுபோன்ற ஓர் ஓலை நம் தேசத்துக்கு வருவதென்பது ஆதிகேசவன் அருளாலே மட்டும்தான்” என்றேன்.

உடைந்த குரலில் “ஆமாம், ஆதிகேசவா பரமதயாளூ!” என்றார் மகாராஜா.

“கேசவா! பெருமாளே!” என்று அவையினர் குரலெழுப்பினர்.

விழாவுக்கு எட்டு நாட்களுக்கு முன்னதாகவே மகாராஜா பரிவாரங்களுடன் ஸ்ரீவாழும்கோட்டில் இருந்து கிளம்பி கிருஷ்ணன்கோயில் வந்து ,அங்குள்ள ஸ்ரீமங்கலம் அரண்மனையில் தங்கி, அனந்தகிருஷ்ணனையும் நாகராஜனையும் வடிவம்மையையும் அழகேசனையும் வணங்கி முறைமைகள் செய்தார். அங்கிருந்து சிவீந்திரம் சென்று தாணுமாலையனை வணங்கிவிட்டு தோவாளைக்கு வந்து அங்கே பண்டு இரவிகேரள வர்மா மகாராஜா காலத்தில் கட்டப்பட்ட அஜயவிலாசம் என்னும் பழைய அரண்மனையில் தங்கினார்.

அருகே இருந்த பிரவர்த்தியார் மாளிகையில் திவான் நாகமையாவும் தளவாய் நாராயணக் குறுப்பும் நான்குநாட்கள் முன்னரே வந்து தங்கியிருந்தனர். நான் திவான் நாகமையாவிடமிருந்து மதுரைக்காரர்களை பிரிக்க எண்ணினேன். இல்லாவிட்டால் அவர் திவான் என்பதை மறந்து அங்கே சென்று தாஸ்யம் செய்ய தொடங்கிவிடுவார். ஆகவே அப்பால் திருவெண்பரிசாரம் அம்மவீட்டு அரண்மனையில் தளவாய் வெங்கப்ப நாயக்கரும் ராயசம் விஜயரங்கய்யாவும் தங்க இடம் ஒருக்கினேன்.

தக்ஷிணாதி மடத்து சுவாமி நாராயண பட்டாச்சாரியர் திருவெண்பரிசாரம் திருவாழிமார்பன் கோயிலை ஒட்டிய ஸ்ரீமடத்தின் ஓர் அறையிலேயே தங்கியிருந்தார். அவர்களுக்கு அதிகாலையில் பெருமாள்சேவை தவிர்க்கமுடியாதது. அதையே திவான் நாகமையாவுக்கு அங்கே அவர்களுக்கு இல்லம் அமைப்பதற்கான காரணமாகச் சொன்னேன், “சரிதான், மகாராஜாவுக்கும் அங்கேயே இடம் ஒருக்கியிருக்கலாம். இங்கே அரண்மனை கொஞ்சம் சின்னது” என்றார்.

சித்திரை மாதமாதலால் திருவெண்பரிசாரத்தை ஒட்டிய வயல்வெளிகள் அறுவடை முடிந்து உலர்ந்து மொட்டைக்களங்களாக கிடந்தன. இரண்டு நாட்களுக்கு முன்னரே திருநெல்வேலியில் இருந்து சேவப்ப நாயக்கன் தலைமையில் மணவாளன் சீரும், முத்துப்பல்லக்குமாக வந்த மதுரை நூற்றுவர் படையையும் அணிக்காரர்களையும் அங்கே கொட்டகை போட்டு தங்கவைத்திருந்தேன். அந்த ஏற்பாடுகளுக்கு கடுவா மல்லன் பிள்ளையை பொறுப்பளித்திருந்தேன். இருந்தாலும் ஒருமுறை நானே சென்று பார்த்தேன்.

பெரிய மீசையும், வளமான தொப்பையும் கொண்டிருந்த ரங்கலு சேவப்ப நாயக்கர் “ஒரு குறையும் இல்லை. அப்பன் கல்யாணம் பாக்கவந்த பிள்ளைங்க நாங்க. இங்க எல்லாம் நாங்க பாத்துக்கிடுதோம்… நீங்க உங்க வேலைகளைப் பாருங்க சர்வாதிக்காரரே” என்றார்.

“என்ன இருந்தாலும் மணவாளன் கோஷ்டி. ஒரு குறை வந்திரப்படாது” என்று நான் சொன்னேன்.

“என்ன குறை இருந்தாலும் நிறைக்குப் பெருநிறையா நிறைமங்கலையை கொண்டுபோறோம்ல? அதுக்குமேலே என்ன செல்வத்தை அப்டி அள்ளித் தந்திரப்போறீங்க?” என்றார் சேவப்ப நாயக்கர்.

அவர்கள் ஒவ்வொருவரும் நிறைந்து ததும்பிக்கொண்டிருப்பதை என்னால் உணரமுடிந்தது. இருந்தாலும் மீண்டும் மல்லன் பிள்ளையிடம் “பாத்துக்கடே, ஒரு குறை வந்திரப்பிடாது” என்றபின் திரும்பி தோவாளைக்குச் சென்றேன்.

நான் விழாவுக்கு முந்தையநாள் நள்ளிரவில்தான் தோவாளை அரண்மனைக்குச் சென்று சேர்ந்தேன். அங்கே பள்ளியறையில் மகாராஜா துயிலாமல் இருந்தார். நான் சென்றதை புரவிச்சத்தம் வழியாக அறிந்து எழுந்து அமர்ந்துகொண்டு என்னை உள்ளே அழைத்து வர ஆணையிட்டார். நான் சென்றபோது குடுமியை முடிந்துகொண்டிருந்தார். என்னைக்கண்டதுமே எழுந்து அருகே வந்து பதற்றம் நிறைந்த குரலில் என்னிடம் ஏற்பாடுகள் என்னென்ன நடக்கிறது என்று கேட்டுத் தெரிந்துகொண்டார். நான் எல்லாவற்றையும் சுருக்கமாக விளக்கினேன்.

நான் எத்தனை சொன்னாலும் அவருக்குப் போதவில்லை. “ஒண்ணும் குறை வரக்கூடாது சர்வாதிக்காரரே” என்று திரும்பத் திரும்பச் சொன்னார். “நம்ம பக்கத்திலே ஒரு குறையிருந்தாலும் பின்னே ஒருநாளும் மனசு சமாதானமாகாது”

ஆரல்வாய்மொழியில் சமையல், விருந்து, மக்கள்கூட்டத்தை தங்கவைப்பது எல்லாவற்றையும் ஆரல்வாய்மொழிக் கோட்டை எஜமானன் கல்குளம் அச்சுதக் குறுப்பிடம் மகாராஜாவே கூப்பிட்டு பொறுப்பை ஒப்படைத்தார். “இது உத்சவம் அல்ல, கல்யாண வைபவம். இதுக்கு வார ஒவ்வொருவரும் அம்மையுடைய சொந்தக்காரங்களாக்கும். கேட்டியா அச்சுதா?” என்றார்.

கோட்டை எஜமானன் கல்குளம் அச்சுதக் குறுப்பு “அடியேன், அது எனக்கு தெரியும்” என்றார் “அடியேன் தலைகொடுத்துச் செய்வேன். ஒருகுறை இருக்காது.”

“சத்யவட்டம் இதுபோலே முன்பு இல்லை எந்நவண்ணம் இருக்கணும்” என்றார் மகாராஜா.

“அடியேன், திருப்பாம்பரம், திருப்பாப்பூர், ஜயத்துங்க ராஜ்யம் மட்டுமல்ல கொடுங்கல்லூர் வரை ஆளனுப்பி எல்லா நல்ல சமையல்காரங்களையும் கூட்டிவரச்சொல்லியாச்சு… குளத்தூர் மேலேக்கரை அனந்தன் நாயரும் செங்கள்ளூர் நாராயணக் கைமளும், செழுங்கானூர் பாறைக்கரை நீலகண்டன் நாயரும் கேளீஸ்வரம் அச்சுதன் நாயரும் வாறதுக்கு ஒத்துக்கிட்டாச்சு… சித்தேஸ்வரம் ராமப்பொதுவாளும் கழக்கூட்டம் ஸ்ரீகண்ட பிள்ளையும் வாறது இன்னைக்கு தெரிஞ்சிரும்… ஒண்ணுக்கு மூணுன்னே சமையக்காரங்களை விளிச்சிருக்கு.”

“யாரு, மேல்நோட்டம்?” என்று மகாராஜா கேட்டார்.

”அடியேன், ஆளூர் முதலடி நாராயண பிள்ளையும் கடுக்கரை மூத்தபிள்ளை அழகியநம்பி குன்றுடையாரும் சமையல் மேல்நோட்டம். ஊட்டுபுரைக்காவல் அழகியபாண்டிபுரம் மழவராயன் சண்முகசுந்தரம் பிள்ளை. அவருக்கு கீழே வேணாட்டுப் பட்டாளத்திலே நாலாயிரம்பேரு உண்டு… ”

“ஒண்ணும் குறையக்கூடாது” என்று மகாராஜா சொன்னார்.

“அடியேன், ஆதிகேசவன் அருளாலே ஒண்ணும் குறையாது” என்றார் கல்குளம் அச்சுதக் குறுப்பு .

நான் பூஜைக்கான பொருட்களையும் திருமணச் சடங்குக்கான பொருட்களையும் மட்டும் ஏற்பாடு செய்தால் போதும். ஆனால் அதுவே நாளுக்குநாள் கூடிக்கூடி வந்த வேலையாக இருந்தது. கருங்கல் சந்தை, வடசேரிச் சந்தை, கோட்டாறு கம்போளம் என அலைந்தேன். ஒரு சந்தையில் கிடைப்பதை வாங்கியதுமே இன்னும் சிறந்தது வேறொரு சந்தையில் கிடைக்கும் என்று தோன்ற அங்கிருந்து உடனே கிளம்பினேன். குடிக்கக் குடிக்க தாகம் அடங்காத ’தீர்க்கதாகம்’ என்ற நோய் கொண்டவன் போலிருந்தேன்.

மணக்குடி துறைமுகம் சந்தைக்குச் சென்று எஞ்சிய தூபப் பொருட்களை வாங்கி வண்டியில் அனுப்பிவிட்டு வந்திருந்தேன். விடியும்வரை சற்று தூங்கலாமென எண்ணியிருந்தேன். ஆனால் “எதுக்கும் நீங்களே போய் ஒரு முறை எல்லா ஏற்பாடுகளையும் பாத்திடுங்க சர்வாதிக்காரரே” என்றார் மகாராஜா. அவர் அதைச் சொன்னதுமே எல்லாமே குளறுபடிகளாகிக் கிடக்கின்றன என்ற எண்ணம் எனக்கு ஏற்பட்டது. நான் உடனே கிளம்பி ஆலய வளாகம் சென்றேன்.

ஆலயத்தைச் சுற்றி வில்லும் வேலும் ஏந்திய படைகளாலான கோட்டை உருவாக்கப்பட்டிருந்தது. நாயர்படையும் மறவப்படையும் ஒன்றுக்குள் ஒன்றென அமைக்கப்பட்டிருந்தன. அந்தப் படைக்கோட்டைக்கு எட்டு வாசல்கள். இரண்டு வாசல் வேலைக்காரர்களும் பொருட்களும் வந்துசெல்ல. நான்கு வாசல்கள் பக்தர்களுக்கு. ஒருவாசல் பூசகர்களுக்கும் ஒரு வாசல் அரசருக்கும்.

அரசருக்குரிய மையவாசலில் அலங்கார வளைவின் வேலைகள் அப்போதும் முடிந்திருக்கவில்லை. ஏணிவைத்து ஏறி தென்னங் குருத்தோலைகளையும், இளம்பனை ஓலைகளையும் சளையோலைகளையும் கட்டிக்கொண்டிருந்தனர். உலத்திக்குலைகள் ராட்சசியின் சடைமுடிக் கற்றைகள் போல கீழே கிடந்தன. தோரணங்கள் பாதி கட்டப்படாமல் தரையில் சுருண்டு கிடக்க மலர்மாலைகளை எடுத்து அடுக்கிக்கொண்டிருந்தனர்.

“வேகம், வேகம்” என்று நான் சொன்னேன். அதட்ட முடியாமல் என் உடல் தளர்ந்திருந்தது.

கோயிலைச் சுற்றிய முதற்காவலுக்கு உரிமைமுறை கொண்டவர்கள் கொண்டையத் தேவன் வம்சத்து நூற்றெட்டு குடும்ப மறவர்கள். அவர்கள் மறவன்குடியிருப்பில் இருந்து கவசங்களும் வாள்களும் ஈட்டிகளுமாக வந்து நின்றிருந்தனர். அவர்களிலும் பாதிப்பேர் மீனாக்ஷியுடன் பாண்டி நாட்டுக்குத் திரும்பச் செல்லவிருந்தனர். அவர்கள் எவரும் இவ்வுலகுடன் தொடர்பு கொண்ட நிலையில் இல்லை. நூறுமொந்தை மது அருந்தியவர்கள்போல, ஆயிரம் கலம் பொன் கிடைத்தவர்கள் போல போதையும் ஆணவமுமாக திமிறிக்கொண்டிருந்தனர்.

“யாரா இருந்தாலும் தலைப்பாகையை கழட்டியாகணும். யாரா இருந்தாலும் ஆயுதங்களை தாழ்த்திப் பிடிக்கணும். இங்க மகாராஜாவும் சம்பிரதியும் ஒண்ணுமில்லை. அம்மையும் அவளுக்க மக்களும் மட்டும்தான்” என்று தலைமை மறவனாகிய ஆண்டித்தேவர் என்னிடம் சொன்னார். என்னை அவர் அடையாளம் காணவே இல்லை. அவர்கள் தேவியின் பூதகணங்கள் என நினைத்துக் கொண்டேன்.

வெளியலங்காரம் முடியவில்லை. பட்டுவிதானம் அப்போதுதான் இழுத்துக் கட்டப்பட்டுக்கொண்டிருந்தது. ஆனால் உள்ளே மடப்பள்ளியில் பொருட்கள் முழுமையாக வந்துசேர்ந்திருந்தன. பிரசாதச் சமையலுக்கான ஒருக்கங்கள் தொடங்கிவிட்டிருந்தன. பல்வேறு இடங்களிலிருந்து வந்த இருநூறு குட்டிப்பட்டர்கள் காகங்கள் போல ஒருவரை ஒருவர் கூவி அழைத்துக்கொண்டு தாவித்தாவி வேலை செய்து கொண்டிருந்தனர்.

பூஜைச்சாமான்கள் வந்துவிட்டன, ஒன்றும் குறைவில்லை என்று ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார் சொன்னார். “அது எப்பவுமே அம்மைக்க அருள். இந்நாள் வரை அம்மைக்கு வேண்டிய பூஜாதிகர்மங்களுக்கான திரவியங்கள் யதாவிதி வந்து சேராமலிருந்ததில்லை. சிவார்ப்பணம்!” என்றார் ஸ்தாணுலிங்க சிவாச்சாரியார். அந்த நம்பிக்கை எனக்கு மேலும் பதற்றத்தை அளித்தது. ஆனால் என்னால் ஏதும் சொல்லவும் முடியாது.

பதினெட்டு குடிகளாகப் பெருகிய சிவாச்சாரியார்களின் குடும்பங்களில் இருந்து எல்லா ஆண்களும் வந்திருந்தனர். அவர்களில் மூன்று குடும்பத்தவர் தவிர எஞ்சிய அனைவருமே தேவியுடன் மதுரைக்குச் செல்வதாக முடிவெடுத்திருந்தனர். அவர்களும் ஒருவகை பித்துநிலையில் இருந்தனர். கண்கள் வெறித்திருந்தன. முகங்களில் காய்ச்சலின் செம்மை இருந்தது. பேச்சில் தேவையற்ற ஓசையும் வெறியும் சிரிப்பும் எழுந்தமைந்தன. மீனாக்ஷியின் கந்தர்வ வலையம் என அவர்களை எண்ணிக்கொண்டேன்.

அதிகாலையில் பல இடங்களில் இருந்தும் புதிய அரும்புகளும் பூக்களும்தான் தொடர்ந்து வந்துகொண்டிருந்தன. காலைப்பூசனைக்குரிய தாமரையும் பிறமலர்களும் முற்புலரியில்தான் பறிக்கப்படும். நூறுநூற்றைம்பது  மாரார் குடி அச்சிகள் அமர்ந்து பூக்களை கட்டிக்கொண்டிருந்தனர். அவர்களின் கைகளை சிறிய தூக்கணாங்குருவிகள் என கற்பனை செய்தேன். அவை ஒருகணமும் ஓயாமல் பின்னிக்கொண்டிருந்தன. மலர்க்குவியல்கள் ஒருபக்கம், மாலையும் தாருமென உருவெடுத்து வண்ண உடல்கொண்ட நாகங்களென சுருண்டவை இன்னொரு பக்கம். அங்கிருந்த மணம் உடனடியாக உலகியலில் இருந்து நம்மை பிடுங்கி வேறெங்கோ வீசுவது. இங்குள்ள அனைத்துக்கும் அப்பாலுள்ளது பிறிதொன்று என உணர்த்துவது மலர்மணங்கள்தான்.

பாத்ரமங்கலம் தாசிகள் வந்து தங்குவதற்காக கொட்டகை கட்டப்பட்டிருந்தது. கிழவியான தலைக்கோலி சிவீந்திரம் தோட்டுக்காரத்தெரு உண்ணிநீலி செம்பகத்தாள் அங்கே இருந்தாள். அத்தனை பெண்களும் நீராடிச் சித்தமாக இருப்பதாகவும், பின்னிரவிலேயே அவர்கள் அணியொருக்கம் தொடங்கிவிடுவார்கள் என்றும் சொன்னாள். செண்டையும் இடைக்காவும் திமிலையும் இலைத்தாளமும் கொம்பும் குழலும் ஊதும் மாரார்கள் வந்து தங்கள் வாத்தியங்களின் அருகிலேயே தென்னையோலைக் கீற்றுக்களில் படுத்து அரைத்தூக்கத்தில் இருந்தனர். தலைமை மாரார் அச்சுதன் ஒடுக்கத்தானிடம் அவர்கள் சித்தமாக இருப்பதை விசாரித்து முடித்தபோது நான் நிறைவடைந்தேன்.

ஆனால் அது சற்றுநேரம்தான். மீண்டும் அரண்மனைக்குச் சென்று அரசரிடம் ஒவ்வொன்றும் முடிந்தநிலையில் உள்ளது என்று சொல்லிக்கொண்டிருந்தபோதே அச்சம் எழுந்து வயிற்றை அடைத்தது. எங்கோ ஏதோ தவறாக ஆகிக்கொண்டிருக்கிறது. நானறியாமல், மெல்லமெல்ல, மிக மிக அமைதியாக.

என்னால் ஒருகணம் கூட அமர்ந்திருக்க முடியவில்லை. ஆரல்வாய்மொழி கோட்டை எஜமானனை போய்ப்பார்த்து காவலர் ஏற்பாடுகளை மறுபடியும் சீர்நோக்கினேன். கோட்டை வழியாக நடந்து கீழே இருந்த அமைப்பை பார்த்தேன். அப்போதுதான் விடிவெள்ளி கண்ணுக்குப் பட்டது. அந்தரத்தில் ஒரு மின்னும் வைரம் போல நின்றிருந்தது. அந்த வசீகரத்தில் கட்டுண்டவனாக அப்படியே பார்த்துக்கொண்டிருந்தேன். ஒரே கணத்தில் சிக்கி உழன்ற அனைத்திலும் இருந்து விடுபட்டு எங்கோ இருந்துகொண்டிருந்தேன்.

[மேலும்]

முந்தைய கட்டுரைகுமரித்துறைவி [குறுநாவல்] – 1
அடுத்த கட்டுரைகுமரித்துறைவி [குறுநாவல்] – 3