இந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்கள்.

இந்து என உணர்தல்
இந்து என உணர்தல்- ஒரு கடிதமும் பதிலும்

அன்புள்ள ஜெயமோகன்,

வணக்கம்.

இந்து என உணர்தல் அற்புதமான கட்டுரை. உங்களின் தெளிவும் விளக்கமும் இந்து என்பதாலேயே குற்ற உணர்ச்சி கொள்ளவைக்கப்படும், என்னைப் போல் எத்தனையோ பேருக்கு நிம்மதியை தருபவை. மிகத் தீவிரமாக மதங்களை நிராகரிக்கும் என் மகனை (பத்தாம் வகுப்பு ) இந்தக் கட்டுரையை  வாசிக்கச் சொல்லியுள்ளேன்.

இந்த கட்டுரையின் சாராம்சத்தை நீங்கள் பல வருடங்களாக பேசியும் எழுதியும் வந்துள்ளீர்கள். ஆனால் இப்போது தேர்தல் சமயத்தில் தந்திரமாக எடுத்து எழுதுவதாகவும், hidden agenda வை கண்டுபிடுத்துவிட்டதாகவும் முக நூலில் எழுதி தள்ளப் படுகிறது.எத்தனை சொன்னாலும் மீண்டும் மீண்டும் தாங்கள் பேசியதையே திரும்ப பேசும் இந்த மூடர் கூட்டத்திடம் நீங்கள் சளைக்காமல் போராடுவது பிரமிக்க வைப்பது.

ஆனால் இது என்னைப் போன்ற வாசகர்களுக்கு மிகுந்த மனச்சோர்வை தருகிறது. உங்களின் வாசகன் என்பதாலேயே நட்பு விலக்கம் கொண்டவர்கள் உண்டு. தனிப்பட்ட வாழ்வில் எங்கும் எந்த ஏற்ற தாழ்வை கடைபிடிக்காதவன், இடது சாரி ஆதரவாளன் , எனினும், உங்களின் எழுத்தை புகழ்பவன் என்பதாலாயே எளிதாக பட்டம் கிடைத்துவிடுகிறது. முக நூலில் உங்களுக்கு ஆதரவாக ஒரு பதில் மொழி இட்டாலே திட்டி பத்து பதில் வந்துவிடும்.அதுவும் ஏக வசனத்தில். அது போன்ற பதிவுகளை கண்டுகொள்ளாமல் தாண்டிச் செல்லவும் முடிவதில்லை. என்ன செய்வது?

அன்புடன்

ஆ .கந்தசாமி

புனே

***

அன்புள்ள கந்தசாமி,

அக்கட்டுரை தெளிவாகவே இந்து என உணர்தல் என்பது ஓர் அகவுணர்வு, ஒருவகை மரபுசார்ந்த தன்னிலை, அதற்கு எந்த அமைப்புச்சார்பும் தேவையில்லை என்று பேசுவது. அமைப்புச்சார்புக்கு எதிரானது. அரசியலுக்கு எதிரானது.

பொதுவாக தேர்தல்காலங்களில் எல்லாரும் கொஞ்சம் உக்கிரமாக இருப்பார்கள். எந்தக் கருத்தும் தேர்தலரசியல் சார்ந்ததாகக் கொள்ளப்படும். எந்த மறுப்பும் தங்கள் வெற்றிக்கு எதிரான செயலாகக் கொள்ளப்படும். அது ஒருவகை ஃபோபியா.

சென்ற சிலநாட்களில் நானறிந்த அதிதீவிர திமுக ஆதரவாளர்களான இரு நண்பர்கள் முகநூலில் எதையோ எழுதப்போய் அவர்களின் திமுக நண்பர்களாலேயே திமுக மீதான  ‘வன்மத்தை’ கக்குபவர்களாக முத்திரை குத்தப்பட்டனர். நண்பர்கள் சி.சரவணக் கார்த்திகேயன், சரணவன் விவேகானந்தன் இருவருக்கும் மானசீகமாக என் புன்னகையை அனுப்பி வைத்தேன். பாவம். [ஆனால் அதிபயங்கரக் கொடூரம், யமுனா ராஜேந்திரனையே ஒரு திமுகக்காரர் சங்கி என்று சொல்லிவிட்டார் என்பது.]

அரசியலில் இருப்பவர்களுக்கு ஒற்றை அஜெண்டா மட்டுமே உள்ளது. நான்கைந்து சொற்றொடர்களாகச் சுருக்கத்தக்க ஒரு தரப்பு அது. அது திராவிடத் தரப்போ இடதுசாரித் தரப்போ இந்துத்துவத் தரப்போ. அந்தத் தரப்பை அப்படியே ஏற்றுக்கொள்ளாதவர்கள் எல்லாருமே அவர்களுக்கு எதிரிகள், மறைமுக ஒற்றர்கள். அவர்கள் எல்லாவகையிலும் எதிர்க்கப்பட வேண்டியவர்கள். அதில் சிந்தனைக்கெல்லாம் இடமே இல்லை.

ஆனால் இவர்கள் ஒரு வட்டம்தான். இவர்களுக்கு வெளியே சிந்திக்கக்கூடியவர்கள் உள்ளனர். புதியவற்றை தெரிந்துகொள்ள விழைபவர்கள் உள்ளனர். இலக்கியம் தத்துவம் எல்லாமே அவர்களை நோக்கியே பேசப்படுகின்றன. அவர்களைப் பொருட்படுத்தினால் போதுமானது.

மற்றவர்களின் ஏற்போ மறுப்போ நமக்கு எதற்கு? அவர்களின் ஏற்பு தேவையென்றால் அவர்களுடன் சேர்ந்து நீங்களும் அதே கோஷத்தை அப்படியே இடவேண்டும். அது உங்களால் இயலாது. அப்படியென்றால் அவர்களை எதற்கு கருத்தில்கொள்ள வேண்டும்?

ஜெ

***

வணக்கம்.

இந்து என உணர்தல் பதிவுகள் படித்தேன்.  உங்களிடம் கேட்கப்பட்ட கேள்வி எங்களை போன்ற  சாதாரண ஆட்களிடமும் சக நட்பு சூழல்களில் கேட்கப்படுகின்றது.

இரண்டு விதங்களில் கட்டமைக்கின்றார்கள்

1.மானுட நல்லறங்களில் வரும் ஈகை, சிந்திக்கும் திறன், அன்புடமை, முயற்சி, வீரம், இசை, ஓவியம், நடனம், படைப்பு திறம் போன்ற கலை போன்ற விசயங்களில் இந்து மதம் பங்களிக்க பெரிதாக எதுவும் இல்லை என முன் வைக்கின்றார்கள். பேச்சு சுவாராஸ்யத்தில் மாய்ந்து மாய்ந்து பதில் சொன்னால் இப்படி பெருமிதம் பேசாதே, இதெல்லாம் உலகமெல்லாம் எல்லா இடங்களிலும் உள்ளது, உன்னிடம் உள்ளது என சொல்வது வீண் பெருமை என சிறுமை படுத்துகின்றார்கள்.  இந்துவிடமும் உள்ளது என சொல்ல விழைந்ததை இந்துக்களிடமும் மட்டும் உள்ளது சொன்னதாக திரித்து விடுகின்றார்கள்.

2. மானுட தாமச குணங்களின் வெளிப்பாடான சாதி பூசல்கள் போன்ற குழு பூசல்கள், பொறாமை பேச்சுக்கள் போன்றவற்றினை இந்து அடையாளமாக மட்டும் முன் வைக்கின்றார்கள். மீண்டும் மாய்ந்து மாய்ந்து இது உலகெங்கும் பல இடங்களில் உள்ளதல்லவா என பல சர்வதேச எடுத்துக்காட்டுக்களை முன் வைத்தால், பிறரை குறை சொல்லும் தவறான குழுக்களாக சித்தரிக்கின்றார்கள். இந்துவிடமும் உள்ளது என சொல்ல முற்பட்டால், இந்துக்களிடம் மட்டும் உள்ளது என ஆக்கி விடுகின்றார்கள்

நல்லது, கெட்டது என இரண்டு பக்கமும் கதவடைத்து விடுகின்றார்கள். உங்கள் பதில் இதை எதிர்க் கொள்ள எங்களை போன்றோருக்கு உதவும். இந்து என்னும் அடையாளத்துக்கு எதிரான நியாயம் பேசி பேசி பெரும்  மதில் சுவராக உள்ளது. அதை எதிர் கொள்ளும் நியாய தர்க்கங்களை என்னை போன்றோர் புரிந்து கொள்ள உங்கள் பதிவு உதவுகின்றது.

–சஞ்சீவ் மன்னவன்

***

அன்புள்ள சஞ்சீவ்

சில கருத்தியல்கள் மிகமிகக் குறுகியவை. தங்கள் தரப்பை ’இதுவே உண்மை, பிறிதெல்லாம் பொய்’ என்பவை. ஆனால் அத்தகைய குறுகிய கருத்தியல்கள் அக்குறுகல் காரணமாகவே அவற்றை நம்புபவர்களுக்கு மாறாத, மெய்யான ஒன்றை நம்புகிறோம் என்னும் அபாரமான தன்னம்பிக்கையை, உயர்வுமனப்பான்மையை அளித்துவிடுகின்றன. அதை நாம் வாதிட்டு வெல்ல முடியாது. நம் தரப்பைச் சொல்லி விலகவே முடியும். அத்தகைய தன்னம்பிக்கையை அளிக்கும் தரப்புகளில் ஒன்று கம்யூனிசம்.

உலகமெங்கும் சர்வாதிகாரிகளை, மாபெரும் மானுடப் படுகொலைகளை, பேரழிவுகளை உருவாக்கிய அக்கருத்தியலை நம்பும் ஒருவன் அவன் மாறா உண்மையும் குன்றா அறமும் கொண்ட ஒன்றை ஏற்றுக்கொண்டவனாக எண்ணிக் கொண்டு இந்துவிடம் ’சாதிபேதமே உன் மதம், பிறிதொன்றும் அல்ல’ என்று சொல்லமுடிகிறது. அவனுடைய சித்தாந்தம் சமகாலத்தில் உருவாக்கிய பேரழிவுகளெல்லாம்  ‘சிறிய நடைமுறைப் பிழைகள்’ என்று சொல்ல முடிகிறது.

ஆனால் ஐந்தாயிரம் ஆண்டு தொன்மையும், போராடும் இனக்குழுக்களை தொகுத்து ஆற்றல்மிக்க அறிவுவளம் மிக்க சமூகங்களாக ஆக்கிய வரலாறும், மானுட ஆழ்படிமங்களின் பெருந்தொகையும், தத்துவ தரிசனங்களும், கலைவெற்றிகளும், இலக்கியச்செல்வங்களும், மெய்ஞான வழிகாட்டல்களும் கொண்ட ஒரு மதத்தைச் சார்ந்திருப்பவன் அதற்கு பதில்சொல்ல முடியாமல் குற்றவுணர்வு கொள்கிறான் என்றால் அதற்குக் காரணம், அவனுக்கு தன் மதம் பற்றி ஏதும் தெரியாது என்பதே. அவன் அந்த மதத்திலேயே உண்மையில் எதைப்பற்றி குற்றவுண்ர்வு கொள்ளவேண்டும் என்பதும் அவனுக்குத் தெரியாது

அவன் தெரிந்துகொள்ள வேண்டியது இந்து மரபின் தத்துவ, கலை, இலக்கிய, ஆன்மிக வெற்றிகளைப் பற்றி. ஆனால் தெரிந்திருப்பது எளிமையான நம்பிக்கைகள் , ஆசாரங்கள் அல்லது அரசியல். அவையிரண்டுமே ஒரு நவீனச் சூழலில், ஒரு விவாதக்களத்தில் முன்வைக்கத்தக்கவை அல்ல. நம்பிக்கையை முன்வைத்தால் அது ஏளனத்துக்கு உரியதாகும். ஆசாரம் கண்மூடித்தனமாக தெரியும். அரசியல் எதிர்மறை விசை மட்டுமே கொண்டது.

இன்று எழும் இந்துக் குரல்கள் இவ்விரு தன்மைகள் மட்டுமே கொண்டவை. ‘முன்னோர் முட்டாள்களில்லை’ வகை நம்பிக்கைப் பேச்சுக்கள். அல்லது ‘இந்துவை விமர்சிக்கிறாய், அவனை விமர்சிப்பாயா?’வகை அரசியல் கேள்விகள். இந்துக்களுக்கு இந்துமதம் என தெரிந்திருப்பவை எளிமையான அற்புதகதைகள், ஆசார அனுஷ்டாங்கள், பழமைவாத நோக்குகள். சமீபகாலமாக அரசியல் சார்ந்த கோபங்கள்.

ஓர் இந்து தனக்கு, தன் அறிவுக்கு, கலையுணர்வுக்கு, ஆன்மிக மீட்புக்கு இந்துமதம் என்ன தந்தது என தெளிவுடன்  திட்டவட்டமாகப் பேசும்போது மட்டுமே அதன்மீதான குற்றச்சாட்டுகளுக்கு உண்மையான பதில் அளிக்கப்படுகிறது. அப்பதில் அளிக்கப்படும்போது எப்படி மழுப்புகிறார்கள், எப்படி தாவுகிறார்கள் என்று பாருங்கள். இந்துமதம் என்பது சாதி மட்டுமே, ஆகவே அது அழிக்கப்பட வேண்டும் என்று பேசியவர்களே ‘ஆமாம், அது பெரிய செல்வம்தான், ஆனால் அதை அறியவெண்டுமென்றால் அதை ஏற்கவேண்டியதில்லை’ என்கிறார்கள் அல்லவா?

ஜெ

***

அன்புள்ள ஜெ,

இரு கேள்விகள். ஒன்று, இந்து என உணர்தலில் நீங்கள் செய்திருப்பது whataboutery என்று சொல்லலாமா? சாதிகளின் அடிப்படையில் இந்து மதத்தை விமர்சனம் செய்யக்கூடாது என்று நீங்கள் சொல்கிறீர்கள் என்று சொல்லலாமா? நான் விவாதித்தபோது சில நண்பர்கள் எழுப்பிய கேள்விகள் இவை

சரவணக்குமார்

***

அன்புள்ள சரவணக்குமார்

நடந்தது என்ன விவாதம்? ‘இந்து மதம் என்பது சாதிமுறை மட்டுமே, சாதி இந்து மதத்தில் மட்டுமே உள்ளது, ஆகவே இந்துமதம் மட்டுமே கொடுமையானது, அது அழியவேண்டும்’ என்று சொல்லப்பட்டதற்கான பதில் அது.

இந்து மதம் என்பது சாதிமுறை மட்டுமே என்பதற்குப் பதிலாக இந்துமதம் சாதி மட்டும் அல்ல, அதற்குமேல் தத்துவ- கலையிலக்கிய- ஆன்மிக சாதனைகள் கொண்டது, தொன்மையான பண்பாட்டின் வாழும் தொடர்ச்சி, ஆகவே ஒரு மானுடச்செல்வம் என பதில் சொன்னேன். விரிவாக.

சாதி இந்து மதத்தில் மட்டுமே உள்ளது என்ற வாதத்திற்குப் பதிலாக பிறப்பு அடிப்படையிலான சமூகப்பிரிவினை நிலப்பிரபுத்துவ காலகட்டத்தின் இயல்பாக உலகமெங்கும் இருந்தது என பதில் சொன்னேன்.

இந்துமதமே கொடுமையானது என்ற வாதத்திற்கு எதிராக அதைச் சொல்பவர்கள் ஆதரிக்கும் மதங்கள் இழைத்த மானுடக்கொடுமைகளுடன் ஒப்பிட்டுப் பார்க்கும்படிச் சொன்னேன். இந்துமதத்தில் ஒற்றைப்பார்வை உருவாக்கும் அழித்தொழிப்புகள் இல்லை என்றேன்.

இதில் எங்கே whataboutery வருகிறது? எங்காவது ஒரு வார்த்தையைக் கண்டால் அசட்டுத்தனமாக அதைப் பிடித்துக்கொள்ள வேண்டியது. எல்லாம் தெரிந்த பாவனையில் பேசவேண்டியது

ஒரு பிழையைச் சுட்டிக்காட்டும்போது மற்றவன் மட்டும் செய்யலாமா என்று கேட்பது whataboutery. நான் சொல்வது ஒரு முழுமையான வரலாற்றுச் சித்திரத்தை. அதில் இந்துமதமும் மற்றவையும் வகித்த பாத்திரங்களை.

சாதிமுறை சென்றகால நிலப்பிரபுத்துவத்தின் உருவாக்கம். அதை இந்து மதத்தின் அங்கமென கொள்ள முடியாது. ஆனால் இந்துமத ஆசாரங்கள் அதை ஏற்றுக்கொண்டன, ஆதரித்தன. இன்றும் கணிசமானவர்கள் ஆதரித்தும் நிற்கின்றனர். அதை கடந்தாகவேண்டும். அதை அக்கட்டுரையிலேயே தெளிவாகச் சொல்லியிருக்கிறேன். திரும்பத்திரும்பச் சொல்லிவருகிறேன்.

சாதிமுறை இந்து மதத்தின் அங்கமல்ல, அதை இந்துமதம் கடந்தாகவேண்டும் என்பவர்களே உண்மையில் சாதியை எதிர்க்கவும் கடக்கவும் முற்படுபவர்கள். ஏனென்றால் அவ்வாறு பெருவாரியான இந்துக்களை ஏற்கவைப்பது மட்டுமே சாதியைக் கடக்கவும், ஒழிக்கவும் ஒரே வழி. இந்துமதத்தை அழித்து சாதியை அழிப்போம் என்பவர்கள் அந்தரங்கமாக இந்துமதம் அழியாது என அறிந்தவர்கள்.

இவர்கள் யார்? பெரும்பாலும் தமிழகத்தின் சாதிவெறி மிக்க இடைநிலைச் சாதியைச் சேர்ந்தவர்கள். அந்த அரசியலைப் பேசுபவர்கள். தங்கள் வீடுகளில் சாதிமுறையையே வாழ்வாகக் கொண்டு பொதுத்தளத்தில் போலிமுற்போக்கு பேசுபவர்கள். அல்லது தங்கள் மதவெறியை முற்போக்காக மாற்றி நடிக்கும் மாற்று மதத்தவர்.  

மூத்தபறையர் வள்ளுவர்களால் ஏழாம்நூற்றாண்டு வரை பூசை செய்யப்பட்டவை இந்து ஆலயங்கள். இன்று அவ்வாறு அவர்கள் தலைமையில் ஒரு இணை இந்துமதம் உருவாகுமென்றால் நான் அதில்தான் இருப்பேன். அதுவே எனக்கு உகந்தது. என் குருமரபும் சென்ற நூற்றாண்டுவரை ஆலயப்பிரவேச உரிமை இல்லாமலிருந்ததுதான்.

ஒரு தெளிவான மறுமொழி சொல்லப்படும்போது எப்படியெல்லாம் பதறுகிறார்கள், உருள்கிறார்கள். இவர்கள் உண்மையில் எவருடைய குரல்கள்?

ஜெ

***

அன்புள்ள ஜெமோ

இந்துமதம் பற்றி அம்பேத்கர் சொன்னதை கேள்வி கேட்டவர் குறிப்பிடுகிறார். அதற்கு நீங்கள் பதில் சொல்லவில்லை. அம்பேத்கர் இஸ்லாம் கிறிஸ்தவம் பற்றி சொன்னதை மேற்கோள் காட்டுகிறீர்கள்

சாம் ஆசீர்

***

அன்புள்ள சாம்,

அம்பேத்கர் இஸ்லாம் கிறிஸ்தவத்தை முழுமையாக நிராகரித்துப் பேசியவற்றை ஏன் சுட்டிக்காட்டவேண்டியிருக்கிறது என்றால் இன்று இந்து மதம் பற்றி அம்பேத்கர் பேசியவற்றைச் சுட்டிக்காட்டி தாக்குபவர்களில் பெரும்பாலானவர்கள் இஸ்லாமியர், கிறிஸ்தவர்கள் என்பதனால். பதில் சொல்லவேண்டியவர்கள் அவர்கள்.

இந்து மதத்தின் மேல் அதன் சாதிய அடிப்படையை சுட்டிக்காட்டி அம்பேத்கர் முன்வைத்த எல்லா எதிர்ப்புகளுடனும் விமர்சனங்களுடனும் எனக்கு முழு உடன்பாடு உண்டு. அதையே நானும் எழுதியிருக்கிறேன். அம்பேத்கரின் வரலாற்று, பண்பாட்டு ஆய்வுமுறைகளை ஏற்பவன். அவருடைய பௌத்தம் எனக்கு அணுக்கமானதுதான். ஆகவேதான் இன்று தலைவர் திருமாவளவன் முன்வைக்கும் அத்தனை எதிர்ப்புகளையும் வெளிப்படையாக ஆதரிக்கிறேன். எந்நிலையிலும் அவருடைய எல்லா அரசியல் செயல்பாடுகளிலும் முழு ஆதரவு என்னுடையது. அவரை ஆதரித்து எழுதி தொடர்ச்சியாக வசைபாடப்படுகிறேன். இனிமேலும் அப்படித்தான்.

ஆனால் நான் ஆன்மிக தளத்தில் நாராயணகுருவின் பார்வையை எனக்கானதாக ஏற்றுக்கொண்டவன். முப்பதாண்டுகளாக நாராயணகுருவின் மெய்ஞான மரபில் உறுதியாக நீடிப்பவன். அதன் பொதுத்தள முகங்களில் ஒருவன். என் வழி அது என, அதில் நான் என் விடைகளையும் நிறைவையும் கண்டுகொண்டேன் என தெளிவாக முன்வைப்பவன். நான் சொல்வன அனைத்தும் நாராயணகுருவின் மரபால் சொல்லப்பட்டவைதான். என் மீதான எல்லா குற்றச்சாட்டுக்களும் நாராயண குரு மேல் முன்வைக்கப்பட்டவை. அவரால் தெளிவாக பதிலிறுக்கப்பட்டவை. 

ஜெ

***

இந்துமதமும் ஆசாரவாதமும்


முந்தைய கட்டுரைஅறமென்ப… இழை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைமதம், அரசியல், அடையாளங்கள்