திருவட்டார்- கடிதங்கள்

”முழங்கும் ஒருநாள்” படித்தேன். துரியோதனவதம் கதகளி முடிந்து மூன்று நாட்கள் கடந்தபின்னரும், அந்த கதகளி காட்சிகளும், இசைக்கருவிகளின் ஒலியும் காதில் ஒலித்துக்கொண்டிருக்கிறது.

”திருவாட்டாறில் துரியோதன வதம் கதகளி பார்க்க வாங்க” என முகநூலில் போட்டிருந்த பதிவைப்பார்த்து எழுத்தாளர் போகன் சங்கர் அழைத்திருந்தார். ”இரவு பத்தரை மணிக்கு மேல் கதகளி துவங்கி விடிய விடிய நடக்கும்” என்றேன்.

மாலையில் அவர் உங்களுடன் வருகை தருவதாகக்கூறியிருந்தார். நான் சிறுவயதில் திருவட்டாறு கோயில் திருவிழாவின் போது கிட்டத்தட்டஏழு நாட்கள் கோயில் வளாகத்தில் இருப்பேன்.. பல்வேறு கலைநிகழ்ச்சிகள் பார்ப்பது, இரவிலிருந்து விடிய விடிய கதகளி பார்த்து, மறுநாள் பள்ளிக்கூடத்தில் வகுப்பறையில் தூங்கி வழிந்து ஆசிரியரிடம் திட்டு வாங்கியதும் உண்டு.சிலநாட்கள் கோயிலுக்குப்போய்விட்டு தாமதமாக வீட்டுக்கு வந்ததற்காக அப்பாவிடம் திட்டு வாங்கியிருக்கிறேன்.

அப்பாவின் ஹோட்டல் திருவட்டாறு காங்கரையில் இருந்தது. காங்கரையில் “தாணுமாலை அய்யர்” கடை என்றால் பேமஸ். திருவட்டாறு அரசு போக்குவரத்துக்கழக கம்ப்யூட்டர் பிரிவில் உங்கள் அண்ணன் திரு. பாலசங்கர் வேலை பார்த்த காலத்தில்  எங்க ஹோட்டலில் பெரும்பாலான நாட்களில் எங்க ஹோட்டலில் சாப்பிட்டிருக்கிறார்.  அவரது திருமணம் திருவட்டாறு ஸ்ரீராம் திருமண மண்டபத்தில் நடந்தபோது நீங்கள் வந்திருந்தீர்கள்.. உங்களை முதல் முதலில் சந்தித்தது அப்போதுதான். 1990 என நினைக்கிறேன்.

கதகளிக்கான  ”வேஷப்பெரை” (Makeup Room) முன்பு  கிழக்கு நடையின் முன்புள்ள பழைய ஷெட்டில் இருந்தது. இப்போது கதகளி மண்டபத்தின் பின்புறம் மாற்றி விட்டார்கள்.  வேஷப்பெரையில் கதகளிக் கலைஞர்கள்   ஒப்பனை செய்வதே ஒரு கலை..வர்ணங்களை, ஈர்க்கில் குச்சியில் தொட்டு நேர்த்தியாக, துல்லியமாக அவர்கள் முகத்தில் ஒப்பனை செய்யும் பாங்கையே வெகு நேரம் வேடிக்கைப்பார்ப்போம்.

கதகளியின் இடைவேளையில் சில நாள் கோயில் படிக்கட்டில் தூங்கியிருக்கிறேன். வளர்ந்த சேட்டைக்கார குசும்பர்கள், வேஷப்பெரையில் இருந்து வர்ணக்கலவை எடுத்து வந்து படியில் படுத்துத் தூங்குபவர்களுக்கு மீசை வரைந்து போவார்கள். அப்படி ஒரு முறை படிக்கட்டில் படுத்திருந்த எனது முகத்திலும் மீசை வரைய, விடியற்காலையில் என்னை எழுப்பிய அண்ணன் சிவகுமார் எனது முகத்தைப்பார்த்து சிரித்த சிரிப்பு இப்போதும் நினைவிருக்கிறது. கதகளி பெரும்பாலும் மகாபாரதக்கதையைக்கொண்டிருந்ததாலும், அந்த வயதில் அவை குறித்து சற்று தெரிந்திருந்தாலும் புரிந்து கொள்ள முடிந்தது.

குமுதம், குமுதம் தீராநதி, குமுதம் சிநேகிதி இதழ்களுக்காக உங்களை பார்வதி புரத்தில் உங்கள் வீட்டில் பல முறை சந்தித்திருந்தாலும், என்னுடைய ஊரான திருவட்டாறில் உங்களை அன்று வரவேற்றதில் பெருமகிழ்ச்சி அடைந்தேன். எப்போதும் போல மாறாத அன்புடன நலம் விசாரித்தீர்கள். கதகளியை ரசிக்க வேண்டிய விதம் பற்றி சொல்லித்தந்தீர்கள்.

அன்றைய தினம் திரநோட்டம்  காட்சியே முதலில் நம்மைக்கட்டிப்போட்டது. அதன் பின்னர் செண்டை தாளம், கடம் இசை முடிந்ததும், சற்று ரிலாக்ஸாக இருக்க வீட்டுக்கு அழைத்தேன். இரவு நேரம் என்பதால் உங்களை சரிவர உபசரிக்கவும் முடியவில்லை.  உங்களின் தளத்தை நான் அடிக்கடி படிக்காவிட்டாலும்,  வெள்ளாங்கோடு அரசு தொடக்கப்பள்ளியில் தலைமை ஆசிரியையாகப் பணியாற்றும் எனது மனைவி. எல். மீனாம்பிகா தினமும் படித்து விடுவார். முன்பு பதினைந்து ஆண்டுகளாக மாதம் இருமுறை நாகர்கோவில் ஒழுகினசேரி மைய நூலகம் சென்று புத்தகங்கள் எடுத்து வருவோம். அதில் பெரும்பாலானவை உங்களின் புத்தகங்கள்தான்.  ஒரு வருட லாக்டவுனுக்குப் பின்னர் நூலகம் செல்வதும் நின்று விட்டது. இணையமே துணை.. உங்களின் “ரப்பர்”, “காடு” புதினங்களை அடிக்கை சிலாகித்துச்சொல்வார். அவர் எழுதிய முதல் சிறுகதையும் மாலை மதி இதழில் வெளியானது. அன்று உங்களிடம் சரியாகப்பேசி , விருந்து கொடுத்து உபசரிக்க முடியவில்லை என வருத்தப்பட்டார்.

பின்னர் நாம் கோயில் சென்று விடிய விடிய கதகளி பார்த்தோம்.. வழக்கமாக கதகளி பார்க்க இருபது பேர் இருந்தாலே அதிசயம்..ஆனால் அன்றைய தினம் கிட்டத்தட்ட ஐநூறுபேர்வரை கதகளியை இறுதிவரை பார்த்து ரசித்த காட்சியைப்பார்த்தபோது மிகவும் மகிழ்ச்சியாக இருந்தது.

ஞாயிறன்று சுவாமி பள்ளி வேட்டைக்கு தளியல் சிவன் கோயிலுக்குச்செல்லும் நிகழ்ச்சி நடந்தது. வழக்கமாக சுவாமி எழுந்தருளும்போது கொட்டு மேளம், நாதஸ்வரம் ஒலிக்கும். காட்டாளனுடன் சுவாமி வேட்டைக்குச்செல்வதால் அமைதியாக ஆதிகேசவப்பெருமாளும், ஸ்ரீகிருஷ்ணனும்  கோயிலில் இருந்து இறங்கி ஊர்வலமாக வேட்டைக்குச்சென்றனர். பின்னர் தளியல் வேட்டை சிவன் கோயிலில் வேட்டை முடிந்து திரும்பும்போது தளியல் கிராம மக்கள், திருவட்டாறு மக்கள் வீட்டின் முன்பு விளக்குகள் ஏற்றி வைத்து வரவேற்பு கொடுத்தனர். அப்போது மேள தாளம் நாதஸ்வரம் இசைக்கப்பட்டது. வீடுகளின் முன்பு மக்கள் வழங்கிய மலர்களால் புஷ்பாபிஷேகம் செய்யப்பட்டது

வேட்டையாடி முடிந்து கோயிலுக்குத்திரும்புகிறார் ஆதிகேசவப்பெருமாள்.  அப்போது கோயில் வாசல் அடைக்கப்பட்டது.  இது பற்றி ஏற்கனவே வழங்கப்படும் புராண சம்பவம் ஒன்று உண்டு.  வேட்டை முடிந்து கோயில் உள்ளே நுழைய முயன்றவரைத்தடுத்து நிறுத்தும் லட்சுமிதேவி அவரை கோயிலினுள் நுழையவிடாமல் ‘‘என்ன எங்கே போயிட்டு வருகிறீர்?’’ என சந்தேகத்துடன் கேட்க ஆதிகேசவப்பெருமாள்,‘வேட்டைக்குச்சென்று விட்டு வந்திருக்கிறேன்..!’’ என்று பதிலளிக்க அவரது பதில் தேவிக்கு திருப்தியாகவில்லை. இறுதியில் லட்சுமி தேவியின் கையைப்பிடித்து,‘‘தளியல் முத்தாரம்மை சத்தியமா நான் வேட்டைக்குப்போயிட்டு தான் வர்றேன்’’ என்று கூறியபின்னரே தேவி சமாதானமாகி பெருமாளை கோயிலினுள் நுழை விடுகிறார்.  இந்த புராண சம்பவம் நிகழ்த்திக்காட்டப்பட்டது.

சுவாமி வேட்டைக்கு கிழக்கு நடை வழியாக வெளியே சென்று விட்டு, வேட்டையாடி, மேற்கு வாசல் வழியாக உள்ளே செல்வார். நேற்று மாலை (29.ம் தேதி) ஆறாட்டுக்காக சுவாமி மேற்கு நடை வழியாக வெளியேறி, மூவாற்று முகம் ஆற்றில் ஆறாட்டுக்குச்சென்றுவிட்டு கிழக்கு வாசல் வழியாக கோயிலுக்கு வருகை தந்தார்.

இப்போது கோயில் புனரைமைப்பணிகள் நடந்து வருகிறது. விமானம் சீரமைக்கும் வேலைகள், கொடிமரத்துக்கு செப்புத்தகடு அமைக்கும் வேலைகள், மடப்பள்ளி சீரமைத்தல் நடந்து வருகிறது. கிருஷ்ணன் கோயிலில் மியூரல் பெயிண்டிங் வேலைகள் முடிவடைந்து, ஆதிகேசவப்பெருமாள் சன்னிதான கருவறையில் மியூரல் ஓவியம் வரையும் பணிகள் நடந்து வருகிறது. நான்கு மாதத்தில் கோயில் புனரைமைப்புப் பணிகள் முடிவடைந்து கும்பாபிஷேகம் நடைபெறும் எனத்தெரிகிறது.

திருவட்டாறு கோயிலை நிகழ்வை உலகறியச்செய்த உங்களுக்கு நன்றி.

அன்புடன்,

திருவட்டாறு சிந்துகுமார்,

நிருபர் – குமுதம் வார இதழ், கன்னியாகுமரி & கேரளா

 

ப்ரியமுள்ள ஜெயமோகன்,

“முழங்கும் ஒரு நாள்” என்ற குறிப்பு பழைய நினைவுகளுக்கு கொண்டு சென்றது.

சின்னஞ்சிறு  பருவத்தில் பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவில் திருவிழாவில் ஒன்பதாம் நாளில் மாலை நான்கு மணிக்கு கேளிகொட்டு நடக்கும்.கதகளிக்காரர்கள் வந்து விட்ட செய்தி அது.

சிறுவர்கள் சிறுமியர் என்ற வேறுபாடு இல்லாமல் ஏராளமானோர் உடனே ஓடி கோயிலுக்குள் சென்று விடுவார்கள். ஸ்ரீ கோவிலின் பின்புற தளத்தில்தான் கதகளிக்காரர்கள் வேடம் போடும் இடம். அதற்காக பெரும்பகுதி அவர்களுக்கு தேவைப்படும். மல்லாந்து படுத்து கிடந்து சில மணி நேரங்கள் கூட ஆகும் வேடம் போடுவது முடிவதற்கு.

ஆட்டம் துவங்கியதும்  கதாபாத்திரங்கள் அந்த இடத்தைவிட்டு நடந்து மேடைக்கு நடந்து செல்லும்போது ஒரு கூட்டமாக நாங்கள் பின்தொடருவோம். சில விகிருதிக்காரர்கள் வேடமணிந்த வரின் ஆடையை தொட்டுப் பார்ப்பது நீண்ட கிரீடம் தாங்கிய முடிகளை தொட்டுப் பார்ப்பதுமாக தொடரும் பயணம். தொல்லை தாங்க முடியாமல் வேடம் போட்டவர் மேடையில் நடத்தும் மிதியை நடத்த நாங்கள் வெட்டி விலகிவிடுவோம்.

கதகளி துவங்கிய பின்பு கோயிலில் முதியவர்கள் முன்னால் அமர்ந்து இருக்க சிறுவர்கள் பின்னால் விளையாடிக் கொண்டிருப்பார்கள் .அது கண் கொள்ளா காட்சியாக தான் அப்போது இருந்தது. காலையில் சூரிய ஒளி வரும்போதும் சிறுவர்கள் கோயில் மணலில் தூங்கி எழுந்திருக்க மாட்டார்கள். கதகளி முடிந்து போனதும் அவர்களுக்கு நினைவில்லை.

திற்பரப்பு மகாதேவர் கோயிலில் கதகளி நாட்டிய குழு கதகளி நடத்தி யதை தொடர்ந்து திருநந்திக்கரை திரு நந்தீஸ்வரர் கோவில் விழாவிலும் பின்பு திருவட்டார் ஆதிகேசவ கோயிலில் முழு நாட்களும் கதகளி நடத்திக்கொண்டு அடுத்து பொன்மனை திரும்பி லால்குடி மகாதேவர் கோவிலில் 9ஆம் நாள் திருவிழாவில் ஒருநாள் கதகளியும்  நடக்கும்

புதிய தலைமுறைக்கு கதகளி அந்நியமாகி விட்டது.கன்னியாகுமரி திருக்கோயில் நிர்வாகம் சிறு தொகை மட்டும் கதகளிக்காக அனுமதித்து வந்தார்கள். அந்த தொகையை வைத்து எதுவும் செய்ய முடியாத நிலையில், கதகளி பிரியர்களும் புதிய தலைமுறையில் இல்லாத காரணத்தால் பாரம்பரிய  கதகளி அந்த நிகழ்ச்சி நிரலில் முடிவுக்கு வருகிறது.

இந்த ஆண்டு பொன்மனை தீம்பிலான்குடி மகாதேவர் கோவிலில் 30– 3 –2021 ஒன்பதாம் திருவிழாவில் கதகளி இல்லை.இனி கதகளி காண கதகளி விரும்புவோர்களுக்கு செலவு அதிகமாகும்.

குறுகிய காலத்தில் கதகளி என்பது திருவனந்தபுரம் பத்மநாபசுவாமி கோயில் திருவிழாவில் தான் பார்க்க முடியும் என்று தோன்றுகிறது.

அன்புடன்

பொன்மனை வல்சகுமார்,

கன்னியாகுமாரி

முந்தைய கட்டுரைபடையல், நகை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைநொபரு கரஷிமா