இரு நோயாளிகள், ஏழாம் கடல் – கடிதங்கள்

அன்புள்ள ஜெ

நமது இணைய வக்கீல்களின் சட்டஞானம் பற்றி பிராக்டீஸிங் வக்கீல்கள் உட்பட சிலர் எழுதியிருந்தனர். இன்னொரு உதாரணம் என் நண்பர். அவரும் வக்கீல்தான். இணையத்தில் மற்ற வக்கீல்கள் எழுதுவதை படித்துவிட்டார். ஏழாம் கடல் கதையில் தப்பு இருக்கிறது என்றார். ஏன் என்று கேட்டேன்.

”வியாகப்பன் மேல் பிள்ளையின் மகனோ குடும்பமோ கேஸ் கொடுக்காமல் போலீஸ் எப்படி கேஸ் எடுக்க முடியும்?” என்றார். ஒரு ஹெஹெஹெ சிரிப்பு வேறு.

எங்களுடன் இன்னொரு பிராக்டீஸிங் வக்கீல் இருந்தார். அவருக்கு கதை தெரியாது. அவரிடம் கேட்டேன். அவர் உடனே அதிர்ச்சியுடன் அந்த இணையவக்கீலிடம் கேட்டார். “சந்தேக மரணம்னா போஸ்ட்மார்ட்டம் செய்யணுமா இல்லியா?”

“ஆமா” என்றார்.

“டாக்டருக்கு சந்தேகம் என்றால் அவரே போஸ்ட்மார்டம் செய்யலாமா? இல்லை போலீஸுக்கு தகவல் தெரிவிக்க வேண்டுமா?”

இணைய வக்கீலுக்கு சொல்லத் தெரியவில்லை. “போலீஸுக்கு தெரிவிக்கவேண்டும். கேஸ் பதிவுசெய்யவேண்டும். போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டின் அடிப்படையில் விசாரணைசெய்து கேஸை முடிக்கவேண்டும். அதுதான் நடைமுறை” என்றார் நிஜவக்கீல்.

”அந்த விசாரணைக்கு கதைசொல்லி போவதுதான் கதை” என்று நான் சொன்னேன்.

“அப்படியென்றால் இணையத்தில் இதை யாருமே ஏன் எழுதவில்லை? வக்கீல்கள்கூட எழுதவில்லையே?” என்று இணையவக்கீல் கேட்டார்.

இந்த லட்சணத்தில் இணையத்தில் ‘வாசிப்புப்போர்’ நடந்துகொண்டிருக்கிறது. அதையும் வாசிக்க கொஞ்சபேர்.

எம்.பாஸ்கர்

***

அன்பிற்கினியஜெ,

வணக்கம்.

மீண்டும் ஒருமுறை ஏழாம்கடல் வழியாக ஒரு நிகர்வாழ்வை அளித்திருக்கிறீர்கள், நன்றி.

பொருள் மயக்கம், திகைப்புறுநிலை, நேர்நிலை அர்த்தமின்மை என நான்ஏழாம்கடலை வகுத்துக்கொள்கிறேன். இது இரு நண்பர்களுக்கிடையேயான கொள்வதும்கொடுப்பதுவும், உயர்தளத்தில் மட்டுமே நிகழக்கூடிய ஒரு உறவு, அதை
உற்றுநோக்கும் சுற்றம், அதனுள் பொதிந்திருக்கும் ஏழாம்கடல். அறிந்துகொள்ளவேண்டிய வாழ்க்கை இன்னும் எவ்வளவோ இருக்கிறது இங்கே என்பதைஅழுத்தமாக என்னுள் பதியச்செய்த ஒரு கதை ஏழாம்கடல்.

முத்துவிளைவதற்குள் அனைத்துச்சிப்பிகளும் கடலிலிருந்து எடுக்கப்பட்டுவிடுகின்றன. பல்லாயிரத்தில் ஒன்று மட்டும் முத்தினைக் கருக்கொள்வதால்த்தின் மதிப்பு என்றுமே அதிகம்தான் இல்லையா? கோடிச்சிப்பியில் ஒன்றுவிஷம் கொண்டிருப்பது, லட்சம் சிப்பியில் ஒன்று முத்தினைக் கருக்கொள்வதைவிட அபூர்வமானதுதானே என எனக்குத்தோன்றுகிறது. ஆனாலும் இதைமனதில் ஏற்றிக்கொள்ள நம்மால் முடிவதில்லை. ஏன்??

நாற்பத்தொன்பது வருட நட்பில், பிள்ளைவாளும், வியாகப்பனும் மற்ற எவரையும்பொருட்டாக நினைத்து தங்கள் நட்பில் தோயவில்லை. அவர்கள் வாழ்வதே நட்பின்வழி இவ்வாழ்வை சுவைப்பதற்காகத்தானே! சனிக்கிழமைகளில் வியாகப்பன் வந்ததுமுதல், ஞாயிற்றுக்கிழமை அவர்செல்லும் வரை, இருவரும் தோய்ந்து வாழும்அந்நட்புநிறைந்த வாழ்வு, மற்ற அனைவருக்கும் பொறாமையை தேற்றுவிக்கும்படிஇருப்பது மேல்மட்டத்தில்தான். ஆழத்தில் அனைவருக்கும், நமக்கு அப்படியொரு நட்பு அல்லது உறவு இங்கில்லையே என்கிற ஏக்கம் மட்டுமே. அனைத்துஉறவுகளைக்காட்டிலும் நட்பு சிறப்பது, அதில் கொள்ளவும், கொடுக்கவும் ஏதும்இல்லாதபோது மட்டும்தானே!

எல்லா மனிதர்களின் கடலிலும், முத்து விளைய வாய்ப்புகள் இருக்கிறது. ஆனால்முத்து விளைவதற்கு முன்பேயே கொள்ளப்படுகிற சிப்பிகள்தான் அதிகம். அப்படிஒரு சிப்பியில் முத்து விளைகிறபோது அதை அருமணி என உணர்ந்துபொத்திப்பாதுகாப்பதுதானே நாமெல்லோரும் செய்வது! மாறாக அரிதாகக் கிடைக்கிற விஷம் மிக மலிவாகக் கிடைக்கும் கடலும், மனித மனம்தான். வியாகப்பன்,மற்றும் பிள்ளைவாளின் நட்ப்பைகண்டு கதைசொல்லியின் அன்னைக்கு விளைவதுமுதலின் விஷம்தான். அதே விஷத்தை போலீஸ் ஸ்டேஷனுக்கு செல்லும் முன்பு கதைசொல்லி தன் அன்னையிடமே கொட்டுவதும், இன்ஸ்பெக்டர் பென், என்னஇருந்தாலும் வேற சாதி, வேற மதம்…என்று உமிழ்வதுவும், விஷம்தானே அன்றிவேறென்ன?! இத்தனையும் விஷம்தானா எனவும் எண்ணிக்கொள்கிறேன். கரந்துவைத்திருப்பதை பிறர்அறியாமலிருக்க, காண்பிக்கப்படுகிற ஒருதன்நடிப்புதானே இந்த விஷம்.

இந்த விஷத்திற்குப் பின்னால், கதைசொல்லியின் அன்னை ஒளித்து
வைத்திருக்கும் முத்துஒன்றும் இருக்கத்தான் செய்கிறது. வியாகப்பனுக்குமிக விரிவாக சமைத்துப்போடும் அம்மா, அந்தநொடியில் கரந்திருப்பது, அவர்கள்நட்ப்பின் தூய்மைகண்டு தன்னுள் விளைந்த முத்தையல்லவா! அரிதான ஒன்று மறைந்திருப்பதுவும், மறைத்து வைக்கப்படுவதும் இங்கும், அங்கும்
சகஜம்தான்போல.

காரணகாரியங்களுக்கு அப்பாற்பட்டு விளைந்த நட்பு பிள்ளைவாளுக்கும், வியாகப்பனுக்குமானது. மற்ற நண்பர்கள் ஊர்ப்பெரிய மனிதராக, அரசுஅதிகாரியாக அவரைக்கண்டு மரியாதை செலுத்தும்போது, “கண்டு பிடிடே மயிரே…
நாப்பது வருசமாட்டு நக்குதேல்ல?” என்று கேட்டுச்சிரிக்கும் அந்த
களங்கமற்ற, நான்காம் வகுப்புச்சிறுவன்மேல் பிள்ளைக்கு அன்புவராமல்இருந்தால்தான் ஆச்சர்யம். இந்த அன்யோன்யத்தை இழந்துதான் அனைவரும்வாழ்க்கைப்படிகளில் மேலே, மேலே சென்றுகொண்டே இருக்கிறோம், ஆனால் இவர்கள் இருவரும் அதைத் தக்கவைத்துக்கொள்கின்றனர் – இறப்புவரை.

எண்ணிப்பார்க்கையில் உரக்கச்சிரித்து ஆரவாரத்துடன் தொடங்கி, உணவுண்டு,கிசுகிசுத்து, பின் கிளுகிளுத்துச் சிரித்து, அமைதியில் மறையும் இந்தநட்புதானே விலையேயற்ற மணிமுத்து. அவர்களிடையே என்னதான் மறைந்திருக்கமுடியும்?! பிள்ளைவாளுக்கு கிடைக்கும் வியாகப்பனின் கடல்முத்து, அவரைப்பொருத்தவரை, இந்த வாழ்வின் மிக, மிக உயர்ந்த ஒரு பரிசு,ஏழுகடலிலும் தேடினாலும் கிடைத்தற்கரிய நட்பின் பரு வடிவம். அதைஉள்ளாழத்தில் கரந்து வைத்து, தானே ஒரு முத்துச்சிப்பியாய்க்கருக்கொள்ளுதலே அவர் செய்யக்கூடிய ஆகச்சிறந்த செயல், அதைத்தான் அவரும் செய்கிறார். அன்புக்குரியவரை விளையாட்டில் ஏமாற்றுவதையும், அவரிடம்ஏமாறுவதையும்  விட சிறந்த இன்பங்கள் மிகச்சிலவே இப்புவியில் உள்ளனஅல்லவா?!

இருந்து, சிறந்து, மகிழ்ந்து, வாழ்ந்த ஒருவாழ்வு நோயில் நைந்து, இற்று
முடிவது  நிறைவளிப்பது ஆகாதல்லவா? பெருவாழ்வு வாழ்ந்து நிறைவில் முழுத்துஅமைந்திருக்கும் இவர்களுக்கு ஏழாம்கடல் கொடுக்கும் பரிசு, ஒருநீலரேகைச்சிப்பி. “நான் சடைஞ்சுபோட்டேன்… போறவளி தெரிஞ்சாச்சு..ஒப்பம்சேந்து போலாம்னு பிள்ளைவாள் சொல்லுவாரு.” என்கிற வார்த்தைகளின்நிறைவுதானே அந்தச்சிப்பி. அனைவரும் விரும்பியபடி ஒப்பம் சேர்ந்து போக ஒரு சிறப்புப் பரிசு அது. மற்றவர்களுக்குத்தான் இது தற்செயலா அல்லவா என்கிறகுழப்பங்களும், மனச்சாய்வுகளும். வியாகப்பன் மேல் அவர்கள் அனைவரும் அதைஏற்றிவைத்தாலும், பிள்ளைவாள், வியாகப்பனை கடலுக்கு அப்பால் காணும்போது,அவர்களுக்கிடையே எந்தஒரு தூரமும் இருக்காது, “எந்தடா மயிரே….உனக்கு சனிக்கிழமை முன்னமே வந்துபோட்டோ…?” என்றுதான் வெடிச்சிரிப்புடன் கேட்பார், வேறுமாதிரி கேட்பாரென்றால் இந்த அரிதினும் அரிதான மனுசப்பிறப்புக்கு அர்த்தமுண்டா என்ன?

ஏழாம்கடலில் என்ன உள்ளதென்பது, பரமபிதாவுக்கும், மனுஷகுமாரனுக்கும், மாதவுக்கும் கூட தெரியாது, பரிசுத்த ஆவியானவரைத்தவிர, பின் ஏழாம்கடல்அளித்ததென்ன என்பதை நாம் மட்டும் எப்படிப் பொருள்கொள்வது?? பொருளேற்றம் நம்மால் அளிக்கப்படுவதன்றி வேறல்ல. அது பொருளில்லா வெளி. மாபெரும் அர்த்தமின்மை என்றுதான் அதை சொல்லமுடியும். நான் அதை நேர்நிலையாகவே பார்க்கின்றேன்…ஆம், அர்த்தமின்மை…பொருளின்மை…அர்த்தத்திற்கும்,பொருளுக்கும் அப்பாற்பட்ட வெளி.

ஏழாம்கடல் கொடுத்தது முத்தா, அல்லது அரிதினும் அரிதான விஷமா எனபொருளேற்றம் செய்துதான் எனக்கு ஆகப்போவது என்ன?? அது பரிசுத்த ஆவிக்குமட்டுமே தெரிந்த ஒன்றல்லவா?? அவருக்கு முத்தும், விஷமும் ஒன்றை ஒன்று நிரப்புபவையன்றி வேறென்னவாக இருக்கமுடியும்?? பாருங்கள் மீண்டும் பொருளேற்றுகிறேன். அர்த்தமின்மைக்கு அப்பாற்பட்ட கடலை எண்ணி வியந்து, திகைத்து, வாய்பிளந்து நிற்பதொன்றே எனக்கு இயல்கிறது.

வாழ்த்துக்கள்.
அன்புடன்,
பிரபு செல்வநாயகம்.\

அன்புள்ள ஜெ

இரு நோயாளிகள் கதை பற்றி மீண்டும் மீண்டும் யோசித்துக்கொண்டிருந்தேன். அவமதிக்கப்பட்டவர்களாக உணர்வது நவீன எழுத்தாளர்களின் ஒரு மனநிலை. ஆனால் அது தவறானது அல்ல. அந்த மனநிலையால்தான் அவர்கள் துன்பப்படுபவர்களுடன் இணைந்து நின்று வாழ்க்கையைப் பார்த்தார்கள். Humiliated and Insulted  என்ற டாஸ்டாயெவ்ஸ்கியின் தலைப்பு எல்லா நவீனத்துவ எழுத்தாளர்களுக்கும் பொருந்துவதுதான். அது ஓர் உணர்வுநிலை மட்டுமல்ல ஒரு ஆன்மிகநிலையும்கூட. அழகுடனும் மேன்மையுடனும் தன்னை இணைத்துப்பார்த்த ரொமாண்டிக் கவிஞர்களின் நிலைக்கு இதுவும் சமானமானதுதான்

சாரங்கன்

***

அன்பு ஜெ,

தத்துவத்தை இரு வகையில் அணுகும் நபர்களை ‘இந்து ஞான மரபில் ஆறு தரிசனங்கள்’ என்ற புத்தகத்தில் சொல்லியிருப்பீர்கள். ஒன்று  எல்லாமே தற்செயல் எனும் கருத்தாக்கம். இரண்டாவது நம்மால் அறிய முடியாத மாபெரும் செயல் திட்டத்தின் சிறுபகுதி என்றறிவது. ஆனால் இது போன்ற எந்தத் தரப்புமின்றி எதுவுமே சிந்திக்காது ஒரு மின்சார விளக்கை அதன் எந்தவித அறிவியல் கோட்பாட்டையும் அறிந்து கொள்ளும் சிந்தையற்று அதை பயன்படுத்தும் மனிதர்களைப் பற்றியும் சொல்லியிருப்பீர்கள். அவர்களில் ஒருவராகவே எம். ஏ. கிருஷ்ணன் நாயரைப் பார்த்தேன். அவருக்கு தத்துவங்களின் திறப்பு இல்லாமலிருக்கலாம். ஆனால் அவரும் இந்த பிரபஞ்சத்தின் மாபெரும் செயல்திட்டத்தின் சிறுபகுதி என்று கண்டேன். அவருடைய வாழ்க்கை ஆமைக்காரியைப் போல ஓலைக்காரியைப் போல விசை கொண்டதாக செயலையே கர்மமாக்கி வாழ்பவர்.

ஆனால் அவர் சந்தித்த இரு நபர்களும் வாழ்வை கவிதைத் தருணத்தில் நுணுகி வாழ்பவர்கள். சங்ஙம்புழ கிருஷ்ணபிள்ளையோ ‘காடே ஒரு பெரிய பூவாக மாறிவிட்டது. நடுவே மலை ஒரு பெரும் மகரந்தக்கொத்து’ என்று பாடியவர். காதலில் ஒருவரும், எள்ளலிலும், விமர்சனத்தால் கையறுநிலையென இன்னொருவரும் தங்கள் வாழ்க்கைப் பயணத்தின் வழி தத்தமது தத்துவத்தை கண்டடைந்தவர்கள். அத்தனை பெரிய சிரிப்பிற்கு காரணமாக புதுமைப்பித்தனின் கடந்த வாழ்வின் துன்பங்கள் வந்தமைகிறது. பாரதி தன் மரணப்படுக்கையில் ‘காலா வாடா உன்னை எட்டி உதைக்கிறேன்’ என்று சொன்னதுபோல காலனைக்கண்டே அவர் எள்ளி நகையாடி தான் வாழ்ந்து முடித்த காலம் அனைத்தையும் பார்த்து நகையாடி காலமானார் என்று நினைத்தேன்.

இந்த இரு நோயாளிகளுக்கும் அமைந்த அந்த ஒற்றைத்  தத்துவார்த்த தருணம் போல கிருஷ்ணப்பிள்ளைக்கும் வாய்க்கலாம். இல்லாமலும் இருக்கலாம். ஒருவேளை வாய்க்க நேர்ந்தால் கதை சொல்லியைக் கூட தன் வாழ்நாளில் தற்செயலாகக் கடந்தவருக்காக பரிகாசம் செய்யப்பட வேண்டியிருக்கும். நீங்கள் அடிக்கடி சொல்லும் எறும்புப் புற்று பற்றிய வரிகளோடு கதையை நிறைவு செய்து கொண்டேன். ‘நம்மால் அறிய முடியாத மாபெரும் செயல் திட்டத்தின் சிறுபகுதிதான் நாம்’. நன்றி ஜெ.

அன்புடன்

இரம்யா

25 எச்சம் [சிறுகதை]
24 நிறைவிலி [சிறுகதை]
23 திரை [சிறுகதை]
22.சிற்றெறும்பு [ சிறுகதை]
21 அறமென்ப…  [சிறுகதை]
20 நகை [சிறுகதை]
19.எரிசிதை [சிறுகதை]
18 இருளில் [சிறுகதை]
17 இரு நோயாளிகள் [சிறுகதை]
16 மலைபூத்தபோது [சிறுகதை]
15 கேளி [சிறுகதை]
14 விசை [சிறுகதை]
13. இழை [சிறுகதை]
12. ஆமென்பது[ சிறுகதை]
11.விருந்து [சிறுகதை]
10.ஏழாம்கடல் [சிறுகதை]
9. தீற்றல் [சிறுகதை]
8. படையல் [சிறுகதை]
7.கூர் [சிறுகதை]
6. யட்சன் [சிறுகதை]
5. கந்தர்வன் [சிறுகதை]
4.குமிழிகள் [சிறுகதை]
3.வலம் இடம் [சிறுகதை]
2.கொதி[ சிறுகதை]
1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைபண்பாட்டின் உரிமையாளர்கள் யார்?
அடுத்த கட்டுரைவைஷ்ணவ ஜனதோ