கொரோனா- கடிதங்கள்

கொரோனா

அன்புள்ள சார்,

’25 கதைகள்’ பதிவில்  ‘கொரோனா வார்டில் தனிமையில் எழுதத்தொடங்கி…’ என்கிற வரியை பார்த்து நானும் துணுக்குற்றேன்.
‘இவருக்குமா… எப்போ?’ என்ற கேள்விதான் மனதில் எழுந்தது. இப்பொழுதும் தனிமையில் தான் இருக்காரா… என்ற கேள்வியுடன் இரண்டு மூன்று நாட்களில் உள்ள பதிவுகளை பார்த்தேன். உங்களின் பயணங்களின் குறிப்புகளை பார்த்து அப்பாடா என்று பட்டது. நண்பரின் கேள்வியில் தான் முழு விடை  கிடைத்தது. அதை பார்த்ததுமே ‘இவர் இப்படித்தான் இருக்கமுடியும். உடல் நோய்மையை பற்றி பீதி அடைய கூடியவர் அல்ல’ என்ற எண்ணம் தான் வந்தது. எனது காரோண தொற்றின் பொழுது நான் போட்ட கூப்பாடுகளும்… அழுகைகளும் நினைவுக்கு வந்து சிரித்துக்கொண்டேன்.

நோயயையோ, உயிர் வதையையோ நேராக நோக்கி நிக்க கூடிய தீரர்கள் தான் வாழ்க்கையில் சொல்ல தக்க எதையாவது சாதிக்க முடியும் என்று நினைப்பேன் நான். நான் பார்த்த ஆக பெரும் வெற்றியாயாளர்கள் எல்லோருமே இப்படித்தான். ‘இதெல்லாம் வைரம் பாய்ஞ்ச உடம்பு…’ என்கிற குருட்டுத்தனமான தைரியத்தை சொல்ல வில்லை.  நோய் வாய்ப்படுகையில் நமக்கு இருக்கவேண்டிய ‘ஸ்தித பிரஞ்ஞயை’ சொல்ல வந்தேன்.

எழுத்தாளர்கள், கலைஞர்கள் தாமுண்டு தம் கலையுண்டு என்றுதான் இருப்பார்கள், மிகவும் மேன்மையனாவர்களாய் வாழ்வார்கள்  என்கிற எண்ணமெல்லாம் உங்களை பார்த்து மாற்றிக்கொண்டேன். நீங்கள் வாழ்க்கையை ஆக முழுமையாய் வாழும் ஒருவர். சவால்களை தலை உடையும் அளவுக்கு எதிர்க்கொள்ளும் தீரர். அதுதான் வாழ்க்கையின் எல்லா கோணத்தையும் முழுமையாக பார்த்து… அதற்கும் மேலே சென்று பற்றின்றி எழுத வைக்கிறது. வ்யாஸனும், வால்மீகியும் இப்படித்தான் வாழ்ந்து இருப்பார்கள்.

ராஜு.

***

அன்புள்ள ராஜு

எனக்கு மூச்சுத்திணறல் உட்பட எச்சிக்கல்களும் இருக்கவில்லை. ஆகவே இயல்பாக இருந்தேன். ஆனால் ஒன்று சொல்லலாம். பயப்படவில்லை. சாவுபயம் பலருக்கும் உடனே வந்துவிடுகிறது. அதுவும் என் வயதில். எனக்கு அது வரவில்லை.

ஜெ

***

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

வணக்கம்

இன்று அதிகாலை ஒரு குடும்பவிழாவின் பொருட்டு பயணத்திலிருக்கையில் இந்துவும் இந்துத்துவரும் கடிதத்திற்கான உங்கள் பதிலைவாசித்தேன். உங்கள் மீதான என் பெரும் வியப்பு வசைகளின் நடுவில் உங்களுக்கிருக்கும் சமநிலை குறித்துத்தான். வசைகள் ,பழிச்சொற்கள் ,பொய்குற்றச்சாட்டுக்களை பொருட்படுத்தாமலிருக்க நானும் ஆனமட்டும் இப்போதெல்லாம் முயற்சிக்கிறேன்.ஆனாலும் வசைபாடியவர்கள் மீதுமான உங்கள் பெருந்தன்மையான அன்பைத்தான் ஆச்சர்யமாக பார்க்கிறேன்.

அந்தக்குழந்தைக்கு சிறுதொகையும் பிராசாதமும் அனுப்பியதையும் அந்த நபர்  “அந்த ஊரு வேணாம் சார், நீ நம்மூருக்கு வந்திரு சார்” என்றதையும் வாசிக்கையில் என்னையறியாமல் கண்ணீர்விட்டழுதுவிட்டேன்.

கார் ஓட்டிக்கொண்டிருந்த மகனிடம் “கேட்டியா சரண் “என்று இதை முழுவதுமாக சொல்லிமுடித்ததும் அவன் புன்னகையுடன் அதென்ன கேட்டியா சரண்?  அவர் போனில் பேசினதையா?  என்றான்.எனக்கு வாசித்தறிந்தது போலல்லாமல் அவர் போனில் பேசினதை கேட்டதுபோலவேதான் இருந்திருக்கிறது.

விழாவிற்கான மனநிலை மாறி மனம் வேறு ஒரு உச்சத்திலிருக்கிறது. காரணமில்லாமல் பொங்கிப்பொங்கி நிறைகிறது மனது.

நன்றி

அன்புடன்

லோகமாதேவி

***

அன்புள்ள லோகமாதேவி,

மனிதர்களை எங்கும் சந்தித்துக்கொண்டேதான் இருக்கிறோம். அவர்களின் அன்பு காழ்ப்பு சிறுமை பெருமைகளுடன். ஒன்றை வைத்து இன்னொன்றை எடைபோடாமலிருப்பது, ஒன்றைப் பெருக்கி இன்னொன்றைக் காணாமலிருப்பதுதான் பயிலவேண்டிய நிலை.

ஜெ

***

அன்பின் ஜெயமோகன் அவர்களுக்கு,

இன்றைய கடிதமும் அதற்கு தங்களின் பதிலும் சற்றே ஆறுதலாக இருந்தது. கொரோனா குறித்து தாங்கள் எழுதியதும் அதிர்ச்சி அடைந்தேன்.
நலமாக இருக்கிறீர்கள் என்றதும் மகிழ்ச்சி.
நன்றி
பலராம கிருஷ்ணன்
***
அன்புள்ள பலராம கிருஷ்ணன்
நோய் என்றால் அதிர்ச்சி என்று பொருளா? கொரோனாவுக்காக கிளம்பி செப்டெம்பரில் வெளியே சென்றவன் இத்தனை ஊர்சுற்றலுக்குப் பின் அது இல்லாமல் இருந்திருக்கமுடியுமா?
ஜெ
***
அன்புள்ள ஜெ
கிட்டத்தட்ட உங்கள் டைரியே இணையத்தில் வெளியாகிறது. கொரோனா பற்றி ஏதும் எழுதவில்லை என்பது ஆச்சரியமளிக்கிறது
ராமகிருஷ்ணன்
அன்புள்ள ராமகிருஷ்ணன்
நோயும் ஒரு நல்ல அனுபவமாகவே இருந்தது. நலம்பெற்று வந்துவிட்டேன். பொதுவாக நான் சோர்வான விஷயங்களை எழுதுவதில்லை. உண்மையில் சோர்வாக எதையாவது எழுதவேண்டுமென்றால் அதில் ஒரு வகையான சமூகப்பிரச்சினை இருக்கவேண்டும். என்னுடைய நோய் அல்லது சிக்கல்களில் அப்படி ஒன்றும் இல்லை.
ஜெ 
***
முந்தைய கட்டுரைபடையல், அறமென்ப- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇன்னொரு மெய்யியல் நாவல்- கடிதம்