கவிதை உரைகள்- கடிதம்

அன்புநிறை ஜெ,

லக்ஷ்மி மணிவண்ணன் அவர்களின் கவிதை நூல் வெளியீட்டு விழாவில் பேசிய உரையை மீண்டும் மீண்டும் கேட்டேன். மதார் கவிதை உரையில் ஒரு புதிய கவிதைத் தலைமுறையை அடையாளம் காட்டி, அதன் பேசுபொருள் எப்படி உருமாறி வந்திருக்கிறது என்று விளக்கினீர்கள். ஒரு இரும்புகுண்டை சுமந்தலைவது போன்ற அழுத்தத்தில் இருந்த தலைமுறையில் இருந்து இறகுபோன்ற மிதந்தலையும் எடையின்மையை கவிதை எப்படி வந்தடைந்திருக்கிறது என்று தொடங்கி கவிதையில் தத்துவப்படுத்துதல், வரையறை செய்தலில் இருந்து விட்டு விடுதலையாகி நிற்கும் சிட்டுக்குருவியைப் போல மாறும் தன்மையை சுட்டியிருந்தீர்கள். தான் சென்று படிய வேண்டிய இடத்தை பிரபஞ்ச விதிக்கு விட்டுவிடும் இறகு, காற்றின் அடையாளமாக, பிரதிநிதியாக மாறி விடுகிறது என்பது மிக அழகான சித்திரம்.

அந்த எடையின்மையைக் கொண்ட தலைமுறையின் கவிதைகளில் இரண்டு வகைகள்; அதில் முதல் வகைக் கவிதைகளில் லஷ்மி மணிவண்ணன் அவர்களின் ஆரம்ப காலக் கவிதைகளின் மீறல் எனும் அம்சத்தை சுட்டி, இரண்டாம் வகைக் கவிதைகளில் அந்த எடையின்மையின் வெறுமை தரும் துயர் கூட இல்லாத கவிதைகளில் மதார் கவிதைகளைச் சொல்லியிருப்பீர்கள்.

அங்கு பேசிய உரையின் அறுபடாத தொடர்ச்சி போல, அங்கு கிளையில் அமர்ந்து சிறகு விரித்து படபடத்த பறவை, சட்டென்று விண் ஏகியது போல இந்த ‘விஜி வரையும் கோலங்கள்’ கவிதை வெளியீட்டில் நிகழ்த்திய உரை இருந்தது. மொத்த உரையும் கவிதை வெளியில் ஆன்மீகம் எனும் ஒட்டுமொத்தத்தைக் காணும் வகையில் விண்ணில் பறக்கும் கருடநோக்கோடும், அதன் ஒவ்வொரு துளியையும் மிகச் சரியாக தொட்டுச் செல்லும் கூர்த்த பார்வையோடும் இருக்கிறது.

எடையின்மையின் முதல் வகைமையில் ஆரம்ப காலத்தில் அதன் வெறுமையை, ஒரு மீறலைப் பேசிய கவிஞனின் கவிதைகள் ஆன்மீகத்தால் தொடப்பட்டு கனிவு கொண்டு இப்போது மிளிர்வதைத் தொட்டுக் காட்டியது இவ்வுரை. ஆன்மீகம் நோக்கித் திரும்பும் கவிஞன் சந்திக்கும் தடைகள் என்ன, ஆன்மீகத்திலிருந்து கவிதை அடைவதென்ன என்பதான இந்த உரையின் பேசுபொருளுக்கு இதற்கு முன்னர் முன்னோடிகள் உண்டா என எனக்குத் தெரியவில்லை. துல்லியமாக அடையாளம் காட்டப்பட்ட நான்கு விதமான முரண்கள், அதைச் சொல்ல சரளமாக வந்து விழும் படிமங்கள்: ஓடெனும் சிறையோடு பிறந்துவிட்ட ஆமை –  முட்டையிலிருந்து வெளியேறியது முதல் விண்ணை அளக்கும் சிறகுகள் கொண்ட பறவை,தானே வகுத்துவிட்ட பாதையை மீறாத நதி – கட்டற்றுப் பரவும் சிற்றோடை என ஆன்மீகத்துக்கும் கவிதைக்குமான முரண்களைச் சொல்லும் படிமங்கள். மாம்பிஞ்சிலே துவர்த்ததை, காயிலே புளித்ததைக் இனிமையாகக் கனிய வைக்கும் பரிணாமமாகக் கவிதையில் ஆன்மீகம் வருகிறது என்று தன்னியல்பாக ஆன்மீகம் மலரும் தருணத்தைச் சொன்னது ஒரு  உச்சமாக இருந்தது. ஒரு கவிதை எங்கு தொடங்கி, எவ்விதம் ஒளியேற்று ஒளிர முடியும் என்பதன் அழகிய விளக்கங்களாக இந்த இரண்டு உரைகளை இணைத்து புரிந்து கொள்ளலாம்.

ஒரே ஒரு நல்ல கவிதையையேனும் என்னால் எழுத முடியுமா எனத்தெரியவில்லை. ஆனால் அது போல கவிதையில் உள்ளொளியாக மிளிரும் ஒரு ஆன்மீக கணத்தைத் தொட்டுணர முடியும் என நினைக்கிறேன்.

மிக்க அன்புடன்,

சுபா

முந்தைய கட்டுரைவிசை,படையல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-4