இராமலிங்க வள்ளலார்
உங்களை தூரத்தில் இருந்து மட்டுமே பார்த்திருக்கிறேன். சென்னையில் ஒரு திரைப்பட விழாவில், விருது விழாவில் மற்றும் புத்தக வெளியீட்டு விழாவில். உங்களிடம் பேசியதில்லை. ஒரு தயக்கம். என்ன பேசுவது. என்னை யார் என்று அறிமுகம் செய்து கொள்வது. உங்களின் வாசகன் என்னும் தகுதியைக்கூட நான் இன்னும் அடையவில்லை என நினைக்கிறேன்.
பலரையும் போல நானும் உங்கள் “அறம்” தொகுப்பின் வழியே உங்களை அடைந்தேன். அதன்பின் “வெண்கடல்”, “ரப்பர்”, “பனிமனிதன், “வெள்ளையானை”, “ஏழாம் உலகம்” போன்ற புனைவுகளையும், “முன்சுவடுகள்”, “இன்று பெற்றவை” போன்ற அபுனைவுகளையும் மற்றும் “இந்து ஞான மரபின் ஆறு தரிசனங்கள்” என்ற தத்துவ நூலையும் வாசிப்பதன் வழி உங்களுடன் ஒரு நெருக்கமான அக பயணத்தை மேற்கொண்டேன். இப்போது உங்கள் வலைதளத்தின் வாயிலாக தினமும் உங்களுடன் உரையாடிக் கொண்டிருக்கிறேன்.
பின் நவீனத்துவத்தின் மீதான என் காதலை வார்த்தெடுத்தவர் நீங்கள் தான். தர்க்கத்தையும் தாண்டிய உச்ச நிலைகளை உங்கள் படைப்பின் மூலம்தான் கண்டுணர்ந்தேன். ஆனாலும் உங்களின் உன்னத படைப்புகளாகக் கருதப்படும் விஷ்ணுபுரம் மற்றும் வெண்முரசு போன்றவற்றை நான் வாசித்தது இல்லை. இன்னும் நான் அவ்வளவு வளரவில்லை அல்லது இன்னும் நான் அங்கு வந்து சேரவில்லை என்றே எண்ணிக்கொள்கிறேன். அதனாலேயே உங்களின் தீவிர வாசகன் என கூறிக்கொள்ளும் நிலையை நான் அடையவில்லை என்றே நினைக்கிறேன்.
நிறைய முறை உங்களுக்கு எழுத எண்ணித் தோற்றிருக்கிறேன். என்ன எழுதுவது?. நான் எழுத நினைப்பவற்றையும், எனக்கு தேவைப்படுவன பற்றியும் முன்பே அறிந்ததைப்போல் எழுதித் தீர்த்துவிடும் ஆசானிடம் புதிதாக என்ன கேட்பது. நிறைய கட்டுரைகளை நீங்கள் எனக்காக எழுதியதாகவே எண்ணி உள்ளம் மகிழ்ந்திருக்கிறேன்.
இன்றும் வழக்கம் போல் தோற்றுப்போகாமல் உங்களுக்கு எழுதிவிடுகிறேன்.
எனது ஐயங்கள்
அ) இந்துக்களுக்கும் இந்துத்துவர்களுக்கும் உள்ள வேறுபாட்டைப் பற்றி நீங்கள் நிறைய எழுதிவிட்டீர்கள். சலித்திருக்கூடும். என்னுடைய கேள்வியும் இதை ஒட்டிதான். அந்த வேறுபாட்டை என்னால் நன்கு உணரமுடிகிறது. ஆனால் ஒரு இந்துவாக நான் ஏன் பெருமைப்பட வேண்டும்? உங்களின் சாதியாதல் கட்டுரையில் “ஒரு மனிதனை அவனுடைய சொந்த ஆளுமையை வைத்து மதிப்பிடும்போதுதான் அவனுக்குரிய உண்மையான மதிப்பு வெளிப்படுகிறது” என்ற உங்கள் சொற்கள் காட்டும் வெளிச்சத்தின்வழி பார்த்தால் இந்துவாக பிறந்ததைத்தவிர வேறு என்ன செய்துவிட்டேன் நான் பெருமை கொள்வதற்கு? சாதியைப் போல் மதமும் ஒரு குறுகலான மனப்பான்மைதானே?
ஆ) நான் அண்ணல் அம்பேத்கரின் கண்களால் இந்து மதத்தை அணுகியவன். எனக்கு இந்துக்கள் என்பவர்கள் சாதிகளால் பிணைக்கப்பட்ட குழுமம் என்ற புரிதலே மேலோங்கி இருக்கிறது. ஒரு சக இந்து வலியால் துடித்துக்கொண்டிருக்க, நான் மட்டும் எவ்வாறு ‘இந்து’ எனக் கூறி பெருமிதம் அடைய முடியும். நீங்கள் சொல்லும் ஆசாரங்கள் வேறு இந்து தரிசனம் வேறு என்ற வேறுபாட்டை என்னால் புரிந்துகொள்ள முடிகிறது. ஆனால் அந்த புரிதல் யாருடைய வலியையும் நீக்கப் போவதில்லை. அப்படியிருக்க, இப்போதைய இந்துக்கள் யாரும் இந்து மதம் போதிக்கும் தத்தவங்களை அறியாதவர்களா? அந்த அறியாமையில் என்ன பெருமை?
இந்த ஐயங்களை உங்களிடம் சமர்பிக்கிறேன். இவற்றில் ஏதேனும் பிழையிருப்பின் மன்னிக்கவும்.
இப்படிக்கு
கருப்பன்
[விக்னேஷ் முத்துக்கிருஷ்ணன்]
அன்புள்ள கருப்பன்,
உங்கள் புனைபெயருடன் உண்மைப்பெயரையும் பிரசுரிக்கிறேன். ஏனென்றால் இளமையில் நாம் இப்படிச் சில அடையாளங்களை சூட்டிக்கொண்டு அதனூடாகச் சிந்திக்கிறோம். பிறரையும் அப்படி நம்மை பார்க்கும்படி கட்டாயப்படுத்துகிறோம். இதனால் நம்மை பிறர் பார்க்கும் பார்வையையும் கட்டுப்படுத்திவிடுகிறோம். மெய்யான எதிர்வினைகள் வராமல் செய்துவிடுகிறோம்.
உங்களுடைய ஐயங்கள் மெய்யானவை. இந்த ஐயங்களை அல்லது இவற்றுக்குப் பின்னாலுள்ள அறவுணர்வை மழுங்கவைக்க நான் முயலப்போவதில்லை. அவை அவ்வாறே கூர்மையுடன் நீடிக்கட்டும் என்றே சொல்ல விரும்புகிறேன்
*
உங்கள் நம்பிக்கை எதுவானாலும் அதை அறிந்தவர்களிடமிருந்து , அதன் முன்னோடி ஆளுமைகளில் இருந்து, முதன்மை நூல்களில் இருந்து கற்றுக்கொள்ளுங்கள். நம் சூழலில் மாபெரும் ஆளுமைகள் நிறைந்துள்ளனர். மகத்தான ஞானிகள் வாழ்ந்து மறைந்துள்ளனர்
எதையும் முதலில் முறையாக, முழுமையாகக் கற்றுக்கொள்ளுங்கள். எதிர்நிலையாக ஒன்றை கற்றுக்கொள்வதென்பது அறியாமையை அள்ளிச்சேர்த்துக்கொள்வதே. இந்துமதமோ, மார்க்ஸியமோ, ஐரோப்பிய நாத்திகமோ எதுவானாலும் மெய்யான அக்கறையுடன், நேர்நிலையான பார்வையுடன், காழ்ப்பும் விலக்கமும் இல்லாமல் கற்றுக்கொள்ளுங்கள். அதுவே அறிவின் பாதை. காழ்ப்புகளுடன் விவாதித்து மெய்யறிவை எவரும் அடைந்துவிடமுடியாது.
மதத்தை ஏன் அறிந்துகொள்ளவேண்டும்? இரண்டு அடிப்படைத்தேவைகளுக்காக. ஒன்று, மானுடத்தின் மாபெரும் பண்பாட்டுத்தொடர்ச்சி மதங்களிலேயே சேமிக்கப்பட்டுள்ளது. கிரேக்க மதம் இல்லையேல் ஐரோப்பியச் சிந்தனை இல்லை. பழைய ஏற்பாடு பைபிளை அறியாமல் ஐரோப்பிய இலக்கியத்தையே அறியமுடியாது.
இரண்டாவதாக, ஆன்மிக விடுதலைக்காக. மானுடனின் ஆன்மிகத்தேடலும் கண்டடைதலும் திடீரென்று நிகழ்ந்தவை அல்ல. மானுடம் தொடங்கிய நாள்முதலே அவை இருந்து வருகின்றன. அவை காலம்கடந்த தொடர்ச்சி கொண்டவை. ஆழ்படிமங்களாக, குறியீடுகளாக, தத்துவங்களாக அவை நீடிக்கின்றன. அவற்றின் வடிவம் மதம். மதம் கடந்த ஆன்மிகமே கூட மதத்தில் உறையும் ஆன்மிகத்தை உணர்ந்து கடந்துசெல்வதன் வழியாக அடையப்பெறுவதே.
நூற்றுக்கணக்கான மெய்ஞானிகளும், பேரறிஞர்களும் மெய்நூல்களின் நீண்ட நிரையும் இருக்கையில் அரசியல்வாதிகளிடமிருந்து நீங்கள் பண்பாட்டையும், ஆன்மிகத்தையும் கற்பீர்கள் என்றால் எங்கே பிரச்சினை இருக்கிறது என்பதை மட்டும் சற்று உளம்திறந்து யோசித்துப்பாருங்கள். இது அரசியலால் புரிந்துகொள்ளக்கூடிய ஒன்று அல்ல. எந்த அரசியலாலும்.
*
முதலில் ஏன் இந்து என்ற அடையாளம் அல்லது மரபுத்தொடர்ச்சி தேவை என நான் நினைக்கிறேன்? இது என் தரப்பு, நான் ஏன் அப்படி நினைக்கிறேன் என்பதற்கான பதில். நீங்கள் இதை யோசித்துப்பார்க்கலாம் என்று மட்டுமே சொல்வேன்.
நான் மானுடஅறிதல் என்பது நிகழ்காலத்தின் எல்லைக்குள் நின்றிருப்பது அல்ல என்று உறுதியாக அறிகிறேன். நிகழ்காலத்தின் அரசியல், சமூகவியல், பண்பாட்டுச்சூழலில் இருந்து அறிதல்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. அவற்றை தவிர்க்கமுடியாது, அது இயல்பான செயல்பாடு. ஆனால் அறிதல் என்பது தொடர்ச்சியானது. மிகமிகத் தொன்மையான காலத்தில் இருந்து, பழங்குடிக் காலத்திற்கும் முன்பிருந்து, திரண்டு வந்துகொண்டிருப்பது. நம் வழியாக முன்செல்வது.
யோசித்துப்பாருங்கள், இப்படி புரிந்துகொண்டால் ஒழிய சிந்தனைக்கும் பண்பாட்டுச் செயல்பாடுகளுக்கும் எப்பொருளும் இல்லை. நமக்கு நேற்று பொருட்டல்ல என்றால் நாளை வருபவர்களுக்கு நமது இன்றைய சிந்தனைகளும் பண்பாடும் பொருட்டே அல்ல. அப்படியென்றால் நாம் சிந்திக்கவேண்டாம், கலைகளை உருவாக்கவும் வேண்டாம், இல்லையா?
மானுட அறிவு மிகத்தொன்மையான காலம் முதல் தொடர்ச்சியாக உருவாகி, ஒன்றுடன் ஒன்று மோதி முரண்பட்டு இணைந்து, தன்னைத்தானே திரட்டிக்கொண்டு நம்மை வந்தடைந்திருக்கிறது. நாம் சிந்திப்பதும் கனவுகாண்பதும் அதன் நீட்சியாகவே. சமகாலத்திலேயே உழல்பவர்கள் கூட அந்த நீட்சியிலேயே இருக்கிறார்கள்.
அன்றாட வணிகம், அன்றாட அரசியல் ஆகியவற்றிலேயே திளைப்பவர்களின் அகம்கூட தொன்மையிலிருந்து நீண்டு வரும் மரபின் மேலேதான் நிகழ்கிறது. அவர்கள் என்னென்ன தர்க்கம் பேசினாலும் அவர்களின் எளிய அறிவால் பதில் சொல்லிவிட முடியாத கேள்விகளுக்கு மரபின் பதில்களையே நாடுவார்கள். அன்றாடத்தில்கூட தன்னையறியாமலேயே மரபின் பதில்களை மறுசமையல் செய்து கையாள்வார்கள்.
அறிவியக்கத்தில் செயல்படுபவன் அந்த மரபு குறித்து அறிந்திருக்கவேண்டும், அதை ஆராயவேண்டும், தன்னுணர்வுடன் அதைக் கையாளவேண்டும் என்று மட்டுமே நான் சொல்கிறேன். என் பயணங்களை நீங்கள் பார்க்கலாம். தொல்பழங்காலச் சின்னங்கள் முதல் இன்றைய பண்பாட்டுநிலைகள் வரை சென்றுகொண்டே இருக்கிறேன். அது இந்த தேடலால்தான்.
மரபின் சிந்தனைகளின் பெரும்பகுதி மதத்திலேயே உள்ளது. மதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல. ஆசாரங்களின் தொகுதி மட்டும் அல்ல. சட்டதிட்டங்கள் அல்ல. அது ஒரு மாபெரும் அறிவுத்தொகை. எந்த மதமாக இருந்தாலும் சரி, அது குறைந்தது ஆயிரமாண்டுகளாக மானுடசிந்தனை செயல்பட்ட ஒரு பெருக்கின் பதிவாகவே நமக்கு கிடைக்கிறது. அதை எந்தச் சிந்திக்கும் மனிதனும் முற்றாக நிராகரிக்க முடியாது.
அதிலும், இந்துமதம், பௌத்தமதம், சமணமதம் போன்றவை மிகமிகத் தொன்மையானவை. இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக தொடர்ச்சியாக சிந்தனையில், பண்பாட்டுத்தளத்தில் செயல்பட்டு வருபவை. பல்லாயிரம் அறிஞர்கள் மற்றும் ஞானிகளின் சிந்தனைகள், இலக்கியங்கள், கலைப்படைப்புக்கள் அவற்றில் திரட்டப்பட்டுள்ளன. அவை மாபெரும் மானுடச்செல்வங்கள்.
அவற்றிலேயேகூட இந்துமதம் மேலும் தொன்மையானது. அதன் ஒருபகுதி வரலாற்றுக்கும் முந்தைய பழங்காலத்தில் உள்ளது. கற்காலத்துத் தொல்குடி வாழ்க்கையில் உள்ளது.மறுபகுதி இதோ நம் கண்ணெதிரில் உள்ளது. இன்று, இந்த உலகப்பரப்பில் வேறெந்த மதத்துக்கும் இந்த தனித்தன்மை இல்லை. மானுட சிந்தனை, மானுடக்கலை இத்தனை நூற்றாண்டுகளில் எப்படி உருவாகி வந்தது என்று கண்கூடாக காணும் வாய்ப்பை அளிக்கும் பிறிதொரு களமே உலகில் இல்லை. இது கொஞ்சம் நூல்களைப் புரட்டிப் படிக்கும் பழக்கமுள்ள, காழ்ப்பற்ற, எவரும் காணக்கூடிய உண்மை.
ஓர் உதாரணம் சொல்கிறேன். கற்காலத் தொல்குடிச் சின்னங்களில் இரண்டு மான்களை வேட்டையாடி கையிலேந்தி நின்றிருக்கும் ஒரு வேடனின் உருவம் காணப்படுகிறது. Master of Animals என அதை ஆய்வாளர் சொல்கிறார்கள். எல்லா தொல்குடிப் பண்பாடுகளிலும் அந்த வடிவம் ஏதோ ஒருவகையில் உள்ளது. மெசபடோமியா, எகிப்து பண்பாடுகளில் உள்ளது.
அதை ‘அதிருஷ்டம் கொண்டுவருபவன்’ என்று சொல்கிறார்கள். ஆனால் பசித்தபோது உணவுடன் வரும் தந்தை என்றும் கொள்ளலாம். கனவில் உணவுடன் வந்த தந்தை வடிவமாக இருக்கலாம். நாம் ஊகிக்கவே முடியாத ஒரு காலகட்டத்தின் வடிவம் அது.
அவ்வடிவங்கள் இந்தியாவின் கற்காலச் சின்னங்களில் உள்ளன. அதே வடிவம் கொஞ்சம் உருமாறி இந்தியாவின் மிகத்தொன்மையான சிவவடிவமான குடிமல்லம் சிவலிங்கத்தில் உள்ளது. மானை தலைகீழாகப் பிடித்து ஒரு கையில் வேட்டை ஆயுதத்துடன் இருக்கும் சிவன். பின்னர் அந்த மான் அருகே துள்ளி நின்றிருப்பதாக மாறியது. சிவனின் வடிவங்களில் அவர் வேடனாக வரும் பிட்சாடனர், கிராத மூர்த்தி போன்ற உருவங்கள் முக்கியமானவை.
யோசித்துப்பாருங்கள், கண்ணெதிரே ஐம்பதாயிரம் ஆண்டுக் காலம் நீண்டு வளர்ந்து வந்திருக்கும் ஒரு மகத்தான படிமம் நின்றிருக்கிறது. நினைப்புக்கெட்டா தொல்வடிவிலிருந்து நம் மூதாதையர் எண்ணி எண்ணி, கனவுகண்டு கனவுகண்டு, திரட்டி எடுத்த ஒன்று. நம் ஊரில் ஆலயத்தில் கரிய மழமழப்பான கல்லென அமர்ந்திருக்கிறது அது. எத்தனை அரியது அது. மானுடகுலத்தில் எத்தனைபேருக்கு அப்படி ஒன்று மரபில் இருந்து வந்து சேர்ந்திருக்கிறது?[பார்க்க கற்காலத்து மழை]
என்னை அது வெறும் தூசியென, காலக்குமிழியென உணரச் செய்கிறது. கூடவே மானுடமென இந்த முப்பதாயிரம் ஆண்டுகளும் அறுபடாது நீடித்த மரபுத்தொடர் நான் என்னும் பெருமிதத்தையும் அளிக்கிறது. இதை நான் ஏன் இழக்கவேண்டும்? இழந்து நான் அடைவதுதான் என்ன?
நான் அதனுடன் என்னை அடையாளப்படுத்திக் கொள்ளும்போது ஒரு மகத்தான மரபுடன் இணைகிறேன். என் அடையாளத்தை அவ்வாறு உருவாக்கிக் கொள்கிறேன். பெரும் கனவுகளைக் காண்கிறேன். அதை தவிர்த்துவிட்டு நான் எந்த அடையாளத்தைச் சூடிக்கொள்ளவேண்டும்? அரசியல்வாதிகள் சமைத்தளிக்கும் மந்தை அடையாளங்களையா? அல்லது தொழில்நுட்பம் உருவாக்கி அளிக்கும் நுகர்வோர் அடையாளத்தையா?
ஐரோப்பாவிலும் மத்திய ஆசியாவிலும் கிறிஸ்தவமும் இஸ்லாமும் அங்கிருந்த பாகன் மதங்களை அழித்தன. தடையமே இல்லாது செய்தன. இன்று பேரறிஞர்கள் மிகப்பெரிய உழைப்பு செலுத்தி துளித்துளியாக அவற்றை மீட்டுக் கொண்டிருக்கிறார்கள். அந்தப்பணி தொடங்கி இருநூறாண்டுகளாகின்றன. சாதாரணமாக இணையத்திற்குச் சென்று பார்த்தாலே அந்த அறிவுச்செயல்பாட்டின் பேருருவை காணமுடியும்.
அப்படி இருக்க கண்ணெதிரே ஏறத்தாழ முழுமையுடன் நின்றிருக்கும் அத்தகைய ஒரு தொல்மதம் எத்தனை பெரிய பண்பாட்டுச் சொத்து. எவ்வளவு பெரிய மானுடச்செல்வம். அதை அழியவேண்டும் என்பவர்கள் அறியாமூடர்கள் அன்றி வேறல்ல.
இந்து மதத்தின் அறிவுத்தொகுப்பு, பண்பாட்டுத் தொகுப்பு மனம் பிரமிக்கச் செய்யும் அளவுக்குப் பிரம்மாண்டமானது. மானுடசிந்தனையால் எந்நிலையிலும் தவிர்க்கவே முடியாதவர்கள் என இருநூறு தத்துவஞானிகளை அதில் சுட்டமுடியும். மானுடன் கொண்டாடவேண்டிய முந்நூறு பெரும்படைப்பாளிகளை அட்டவணையிட முடியும். ஞானிகளின் நிரையோ மிகப்பெரியது.
அதில் ஓர் உறுப்பினர் என்று சொல்வதில் எந்த இழிவும் இல்லை. அது பெருமிதத்திற்குரியது. அது இழிவு என நமக்கு கற்பிக்கப்பட்டுள்ளது – அப்படிக் கற்பிப்பவர்கள் உள்நோக்கம் கொண்டவர்கள். மானுடத்தின் செழிப்பான ஒருபகுதியை ஏற்கனவே அழித்தவர்கள். எஞ்சுவதை அழிக்க நினைப்பவர்கள்.
இந்த பெரும்பெருக்கின் தொடர்ச்சியாக என்னை நான் உணரும்போது சிந்தனையில், பண்பாட்டில் ஒரு பெருஞ்செல்வத்தை அடைந்தவனாகிறேன். அதை என்னால் இழக்கமுடியாது. ஆகவேதான் நான் இந்து. அதைச் சொல்வதற்காக சென்ற முப்பதாண்டுகளில் இங்குள்ள மூளைச்சலவை செய்யப்பட்ட அரசியல்கும்பலால் இழிவுசெய்யப்படுகிறேன், வசைபாடப்படுகிறேன், வேட்டையாடப்படுகிறேன், பல தளங்களில் வெளியேற்றப்படுகிறேன். ஆனால் அதைச் சொல்லாமலிருக்க மாட்டேன். அதன்பொருட்டு என்றேனும் உயிர்கொடுக்க நேருமென்றாலும் அது என் ஆசிரியர்களுக்கு நான் அளிக்கும் காணிக்கை என்றே கருதுவேன்.
*
அறிவு- கலைச்செல்வத்தின் நுட்பமான தொடர்ச்சியாகச் சொல்லத்தக்கது ஆழ்படிமங்கள்.[ Archetype] தொன்மங்கள், படிமங்கள், நம்பிக்கைகள், கதைகள் என அது பலமுகம் கொண்டிருக்கிறது. ஆழ்படிமங்கள் வழியாகவே மானுட உள்ளம் ஆழ்ந்து யோசிக்கமுடியும். தன் அடிப்படைகளைப் பற்றி உசாவமுடியும்.
இப்படிச் சொல்கிறேன், நீங்கள் உங்கள் அன்றாடச் சிக்கல்களைப் பற்றிப் பேச அன்றாட அடையாளங்களும் குறியீடுகளும் போதும். அடிப்படைகளைப் பற்றிப் பேச ஆழ்படிமங்கள் தேவை. நீங்கள் நீங்கள்மட்டுமாக நின்று சிந்திக்க அன்றாட விஷயங்கள்போதும், பல்லாயிரம் ஆண்டு தொன்மைகொண்ட மானுட உள்ளமாக நின்று யோசிக்க ஆழ்படிமங்கள் தேவை.
அந்த ஆழ்படிமங்கள் பழங்குடி வாழ்க்கையிலிருந்து தொடங்கி மெல்லமெல்ல வேரூன்றியிருப்பவை. அவற்றை உருவாக்க முடியாது, அவை காலத்தில் உருவாகி வரவேண்டும். அவற்றுக்கு எந்த தர்க்கமும் ஒழுங்கும் இல்லை. அவை நம் என்றுமுள்ள தேடல்கள், அச்சங்கள், கண்டடைதல்களிலிருந்து பிறப்பவை. அவை மதங்களில்தான் தொகுக்கப்பட்டுள்ளன.
இந்துமதம்போன்று மிகமிகத் தொன்மையான ஒரு மதத்தில், பழங்குடிப் பண்பாடு அப்படியே உள்ளே உறையும் ஒரு மதத்தில் அவை அழியாது பேணப்படுகின்றன. அவை எந்த புனைவிலக்கியவாதிக்கும், எந்த சிந்தனையாளனுக்கும் பெருஞ்செல்வம். அவன் உள்ளத்தை கட்டமைக்கின்றன, மேலும் சிந்திக்க வழியமைக்கின்றன
ஐரோப்பாவின் மாபெரும் மறுமலர்ச்சி என்பது அது தன் புதைக்கப்பட்ட பாகன் பண்பாட்டின் ஆழ்படிமங்களை மீட்டெடுத்ததில் இருந்து தொடங்குகிறது. அதன் சிந்தனை, கலை எல்லாம் அங்கிருந்தே பெருகிப் பேருருக்கொண்டன. அதன் தத்துவம் அங்கிருந்தே உருவாகியது. அந்த தத்துவமே அறிவியலை உருவாக்கியது. நம் கண்முன் நமது தொன்மை விரிந்து கிடக்கிறது. எவரோ சொன்னார் என்று நாம் புறந்திரும்பி நின்று கொண்டிருக்கிறோம்.
அந்த ஆழ்படிமங்களை நான் அடையவேண்டும் என்றால் நான் அதனுடன் அடையாளப்படுத்திக் கொள்ளவேண்டும். நன் அதன் நீட்சியாக என்னை உணரவேண்டும். ஆகவேதான் நான் இந்து.
நான் இப்போது பதினேழாம்நூற்றாண்டு பிரிட்டிஷ் கற்பனாவாதக் கவிஞர்களை வாசித்துக் கொண்டிருக்கிறேன். அவர்கள்தான் உலகமெங்கும் புதியகவிதையின் அடிப்படைகளை உருவாக்கிய முன்னோடிகள். அவர்கள் அனைவரிலும் இருக்கும் பாகன் பண்பாட்டு அடிப்படைகள் பிரமிக்கவைக்கின்றன. அவர்களை அந்தப் பண்பாட்டுக் கூறுகள் இல்லாமல் புரிந்துகொள்ளவே முடியாது.
அந்த பாகன் பண்பாடு பன்மைத்தன்மை, இயற்கையுடனான அணுகுமுறை, பிரபஞ்சப்பார்வை ஆகியவற்றில் இந்துமதத்திற்கு மிக அணுக்கமானது. இந்துமதம் அந்த அழிந்துபட்ட மாபெரும் பண்பாட்டுவெளியில் இன்று எஞ்சும் ஒரு பரப்பு. அதை நம்முடையது என்று சொல்ல நமக்கு என்ன தடை? எவர் அளிக்கும் தடை?
இந்த மாபெரும் தொடர்ச்சியை நான் ஏன் உதறவேண்டும்? உதறியபின் எனக்கு எஞ்சுவது என்ன? ஐரோப்பாவில் இருந்தும் மத்திய ஆசியாவில் இருந்தும் வந்துசேரும் எளிமையான தீர்க்கதரிசன மதங்கள். அவற்றின் ஒற்றைநூல் நம்பிக்கைகள். அவற்றை நோக்கி என்னை செலுத்தும்பொருட்டுத்தானே இந்த மூர்க்கமான இந்து எதிர்ப்பு இங்கே கட்டமைக்கப்படுகிறது?
அந்தத் தீர்க்கதரிசன மதங்கள் உலகமெங்கும் பேரழிவுகளை உருவாக்கியவை. தென்னமேரிக்காவை, ஆஸ்திரேலியாவை , ஆப்ரிக்காவை வேரோடு அழித்தவை. தங்களுக்குள்ளேயே தீராப்போர்களை உருவாக்கி தங்களையே அழித்துக் கொண்டவை, அழித்துக்கொண்டிருப்பவை. அடிமைமுறையை பலநூறாண்டுக்காலம் நிலைநிறுத்தியவை. இனவெறுப்பை பேணுபவை. அம்பேத்கரே அவற்றைப் பற்றி மிகமிக விரிவாக எழுதியிருக்கிறார்.
சரி, அதீத கூர்மையுடன் நான் தேடிச்சென்றால்கூட ஐரோப்பா உருவாக்கிய மறுமலர்ச்சிக்கால பொருள்முதல்வாதப் பண்பாட்டை அல்லது அறிவொளிநோக்குப் பண்பாட்டை ஏற்றுக்கொள்ள வேண்டும். அவை அங்குள்ள பாகன் மதத்தின் ஊற்றுக்களில் இருந்து அவர்களால் உருவாக்கப்பட்டவை. அவற்றை நான் ஏன் என் வேர்களில் இருந்து இங்கேயே தேடிக்கொள்ள கூடாது? அறிவொளிநோக்கு வேண்டுமென்றால் எனக்கு சங்கரர் போதுமே. பொருள்முதல்வாதம் வேண்டுமென்றால் கபிலரோ கணாதரோ போதுமே? நான் ஏன் இரவல் சிந்தனையாளனாக ஆகவேண்டும்? எவருடைய நலனுக்காக?
*
சரி, நீங்கள் கேட்ட கேள்விகள். முதலில், இந்துமதம் சாதிகளால் கட்டமைக்கப்பட்டதா?
ஆமாம், அது உருவாகி வந்த பரிணாமத்தில் அது பிறப்படிப்படையிலான சாதியடுக்குகளாகவே திரண்டு வந்தது. அது எவராலும் அப்படி கட்டமைக்கப்படவில்லை. பலநூறு இனக்குழுக்கள் பொதுவான நம்பிக்கைகள் ஆசாரங்களின் அடிப்படையில் ஒருங்கிணைக்கப்பட்டு இந்துசமூகம் உருவானபோது அவர்களின் எண்ணிக்கை, போர்வல்லமை, ஆதிக்கத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் மேல் கீழ் என்னும் அடுக்கு உருவானது. அது பின்னர் தத்துவார்த்தமாக விளக்கப்பட்டது.அதுவே சாதிமுறை.
அவ்வண்ணம் பிறப்பு அடிப்படையிலான அடுக்குமுறை இல்லாத ஒரு சமூகம்கூட உலகில் எங்கும் இல்லை. பிறப்படுக்குமுறையை முன்வைக்காத ஒரு மதம்கூட இந்த உலகில் இருந்ததில்லை. ஏனென்றால் நிலப்பிரபுத்துவத்தின் இயல்பு அது. உலகமெங்கும் அது ஒவ்வொரு இடத்திலும் ஒவ்வொரு வகையானது. இந்தியாவில் அது சாதிமுறை. அதில் ஒடுக்குமுறை இருந்தது. ஆனால் உலகமெங்கும் அதே ஒடுக்குமுறை இருந்தது என்பதே வரலாறு.
உலகம் முழுக்க நிலப்பிரபுத்துவம் அழிந்துவருகிறது. அன்றிருந்த சமூக அமைப்புக்களும் அழியும். அவற்றை நிலைநிறுத்தும் உளப்போக்குகள் மேலும் சில தலைமுறைகளில் அழியும். சாதியும் அவ்வண்ணமே நம் கண்முன் அழிந்து வருகிறது. இன்று அது மேல்கீழ் அதிகார அடுக்கு அல்ல. அரசியலுக்கான திரளடையாளம் மட்டுமே. அதுவும் மறையலாம். அதையும் அழித்தாகவேண்டும்.
நீங்கள் இந்த வரலாற்று உண்மையை ‘இந்துமதம் என்பது சாதிகள் மட்டுமான ஒன்று’ என்று திரித்துக்கொள்கிறீர்கள். நம் சூழலில் செய்யப்படும் பொதுவானதிரிபு இது. இளைஞர்கள் அதை அரசியலில் இருந்து கற்றுக்கொள்கிறார்கள். திட்டமிட்டே இந்த பரப்புரை செய்யப்படுகிறது.
இதேபோல கிறிஸ்தவமும் இஸ்லாமும் மாபெரும் மதப்போர்களும், இனவெறிகளும்தான் என ஒருவர் சொல்வார் என்றால் அதை நான் ஒருபோதும் ஏற்றுக்கொள்ள மாட்டேன். அவை அந்த மதங்களின் நீண்ட வரலாற்றில் இருந்தன. ஆனால் அந்த மதங்கள் மாபெரும் பண்பாட்டுத்தொகுப்புகள், ஆன்மிக வழிகாட்டுத்தொகைகள். கிறிஸ்து இவ்வுலகின் ஒளி என்றே நான் எண்ணுகிறேன்.
இந்துமதம் என்பது சாதிமுறை மட்டும் அல்ல. அதன் சமூகக் கட்டமைப்பில் ஒரு சிறு பகுதிதான் சாதி. அதன் மெய்யியல் சாதி சார்ந்தது அல்ல. அதன் அடிப்படை ஞானம் சாதிச்சார்பு கொண்டது அல்ல. சாதி ஒழிந்தாலும் இந்துமெய்ஞானம் எந்த ஊறுமின்றி நிலைகொள்ளும். உண்மையில் ,மேலும் வளரும்.
இந்து மதத்தின் மெய்யியல், தத்துவம், இலக்கியம், கலை ஆகியவை அனைத்துமே சாதிமுறைக்காக மட்டுமே நிலைகொள்பவை என இன்று இளைஞன் ஒருவன் எண்ணுவான் என்றால், அவன் எந்தத் தரப்பினன் ஆயினும், அறிவிலியே. சாதிமுறையின் பொருட்டு இந்துமரபு அளிக்கும் கலை, இலக்கியம், மெய்யியல் அனைத்தையும் ஒருவன் துறப்பான் என்றால் அவன் வரலாற்றைநோக்கி கண்மூடிக்கொண்டவன் மட்டுமே.
இந்துமதத்தின் வரலாற்றிலேயே சாதிகள் தொடர்ந்து முன்னும் பின்னும் படிநிலைகளில் நகர்ந்துகொண்டே இருந்திருக்கின்றன. சாதிமுறையில் பெரும் மாற்றங்கள் நிகழ்ந்த புரட்சிகள் உருவாகியிருக்கின்றன. நாடோடிச்சாதிகள் அரசமைத்து ஷத்ரிய சாதிகள் ஆகியிருக்கின்றன. புதிய பிராமணச் சாதிகள் உருவாகியிருக்கின்றன. நாம் இன்று காணும் பிராமண சாதியே காலப்போக்கில் பல பூசகச்சாதிகள் இணைந்து உருவானதுதான். சாதிமுறை இன்று தளரும்போதும் இந்துமதம் எவ்வகையிலும் தளர்வடையவில்லை. வளர்ச்சியே அடைகிறது.
ஒரு குறிப்பிட்ட கோணத்தில், ஓர் அரசியல் தளத்தில் செயல்படும் அறிஞர்கள் வரலாற்றை ஒருநோக்கில் விளக்கியிருக்கலாம். அவர்கள் காலகட்டத்தின் அரசியல் தேவைகள், வரலாற்றுப் பார்வைகள் அவர்களை இயக்கியிருக்கலாம். அதற்கான நியாயங்கள் அவர்களுக்கு இருந்திருக்கலாம். அந்நியாயங்களை நாம் புரிந்துகொள்ளலாம். ஆனால் நமக்குத்தேவை நாமே அறியும் வரலாற்று நோக்கு, பண்பாட்டு நோக்கு.
*
மதம் அளிப்பது மெய்யியலை. அந்த மெய்யியலை தத்துவம் என்றும், கலை என்றும், அறவியல் என்றும் விரித்துக்கொள்வது அந்தச் சமூகத்தின் பொறுப்பு. அச்சமூகத்தின் தோல்விகளுக்கு மதமே காரணம் என்று சொல்வதென்றால் அதை அத்தனை சிந்தனை, கலை, இலக்கியம் அனைத்துக்கும் போட்டுப்பார்க்கலாமே?
சரி, இந்துமதம் எளியோருக்காக ஒன்றும் செய்யவில்லை. வேறு எந்த மதம் செய்கிறது? அடிமைமுறையை பல நூறாண்டுகள் நிலைநிறுத்திய மதங்களா? அயல்நிலங்களை ஆக்ரமித்து அங்குவாழ்ந்த கோடானுகோடி மக்களை வேரோடு அழித்த மதங்களா? அச்செயல்களுக்கு பலநூறாண்டுகள் நியாயம் கற்பித்த மதங்களா? இனவாதத்தை இன்றும் பின்னின்று இயக்கும் மதங்களா?
வரலாற்றைப் புரட்டிப் பாருங்கள். உங்கள் பார்வையில் பார்த்தால்கூட பாவக்கணக்கு மிகக்குறைவான மதங்கள் மூன்று இந்திய மதங்கள் மட்டுமே.
சரி, மதங்களை விடுவோம். நவீனச் சிந்தனைகளை எடுத்துக் கொள்வோம். ஐரோப்பாவின் களத்தில் உருவானவை நவீன ஜனநாயகச் சிந்தனைகள். நவீன இலக்கிய- தத்துவச் சிந்தனைகள். நவீனக் கலைகள். ஆனால் காலனியாதிக்கம் அந்த ஐரோப்பாவின் கொடை. உலகை பஞ்சத்திலாழ்த்திச் சூறையாடியவை ஐரோப்பிய நாடுகள். அவை உலகப்போர்களை விட பலமடங்கு மக்களை பட்டினியில் சாகவிட்டவை. ஐரோப்பியச் சிந்தனைகள் அனைத்துமே காலனியத்தின் கறைபடிந்தவை என தூக்கி வீசிவிடலாமா?
சரி, அது நேற்று. இன்று? நீங்கள் சொல்லும் பின்நவீனச் சிந்தனைகள் எங்கே உருவாகின்றன? முதன்மையாக ஃபிரான்ஸில். ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்காவில். அங்குள்ள கல்விநிலையங்களில். பெரும் ஊதியத்தையும் நிதிக்கொடைகளையும் பெறும் பேராசிரியர்கள் அவற்றை உருவாக்குகிறார்கள். அந்த பல்கலைகளுக்கு நிதியளிப்பவர்கள் யார்? பெரும்வணிகர்கள், வணிக நிறுவனங்கள், அங்குள்ள அரசு.
அந்த வணிகர்கள் , நிறுவனங்கள் செய்யும் தொழில் என்ன? அங்குள்ள அரசுகளின் வருவாய் முதன்மையாக எது? ஆப்ரிக்க ஆசிய நாடுகளில் போலி ஆட்சியாளர்களை நிறுவி அவர்களின் வளங்களைச் சுரண்டுவது. ஆயுதங்களை உற்பத்திசெய்து ஆசிய ஆப்ரிக்க நாடுகளுக்கு விற்று அவர்களை சுரண்டுவது. அவர்கள் ஓயாது போர்புரியும்பொருட்டு உட்பூசல்களை, தேசியமோதல்களை உருவாக்குவது.
அந்தச் சிந்தனைகளை ஏற்க ,பயில இந்த உண்மைகள் உங்களுக்கு தடையாக அமையவில்லை இல்லையா? இந்தச் சிந்தனைகள் அவர்களுக்கு அளிக்கப்படும் நேரடி நிதிகள் எவ்வாறு உருவாகின்றன என்னும் பொறுப்பை ஏற்றுக்கொள்ள வேண்டியவை என்று தோன்றவில்லை இல்லையா?
உங்கள் அளவுகோல்களின்படி இங்கே சங்ககாலம் முதல் ஆதிக்கம் உள்ளது, அநீதி உள்ளது, சுரண்டல் உள்ளது. ஆகவே திருக்குறள் தேவையில்லை. சங்க இலக்கியம் பயனற்றது. அத்தனை தத்துவங்களும் வீண், இல்லையா?
அப்படிச் சொல்லமாட்டீர்கள். ஆனால் ஆனால் சாதிமுறையை, அல்லது சமகாலத்தில் உள்ள சுரண்டலை இந்து மெய்ஞானம் பொறுப்பேற்றுக் கொள்ளவேண்டும் என்பீர்கள். அதை ஒட்டுமொத்தமாக நிராகரிக்க அதை காரணமாக ஆக்குவீர்கள், இல்லையா? அந்த மனநிலையை உங்களில் உருவாக்கியவர் யார்? அதை யோசியுங்கள்.
உங்கள் பிழையை நான் செய்ய மாட்டேன். பிரான்ஸ் அரசு ஆயுத வியாபார அமைப்பு என்பதனால், சார்போன் பல்கலை ஆயுதவியாபாரிகளின் நன்கொடையால் இயங்குகிறது என்பதனால், எனக்கு சார்த்ர் முதல் ஃபூக்கோ வரையிலானவர்கள் பொருளற்றவர்களாக தோன்றமாட்டார்கள். ஐரோப்பா காலனியாதிக்கம் செலுத்தியது என்பதனால் ஐரோப்பியச் சிந்தனையாளர்கள் அன்னியமாக தோன்றமாட்டார்கள்.
கிறிஸ்தவ மத அமைப்பு அடிமைமுறையை பரப்பியது, உலகமெங்கும் தொல்குடிகளை முற்றழித்தது என்பதனால் நான் கிறிஸ்தவ மெய்ஞானத்தை பழிக்கமாட்டேன். அந்த மெய்ஞானம் எனக்கு தேவை. அது வேறொரு தளம். எனக்கு எந்நிலையிலும் கிறிஸ்து தேவை.
மதத்திலுள்ள மெய்யியல், தத்துவம், கலை ஆகியவை ஓர் இலட்சியதளத்தில் செயல்படுகின்றன. மதமென்னும் உலகியல் அமைப்பு வேறொரு தளத்தில் செயல்படுகிறது. உலகியலை இலட்சியவாதம் கட்டுப்படுத்தவும் வழிநடத்தவும் முயல்கிறது. ஆனால் உலகியல் ஒருபோதும் இலட்சியவாதத்தின் முழுக்கட்டுப்பாட்டில் இருப்பதில்லை. ஒரு பண்பாட்டின் உலகியல் நடத்தையை வைத்து அப்பண்பாட்டில் உள்ள இலட்சியவாதத்தை நிராகரித்தால் உலகின் எந்தச் சமூகமும் பொருட்டாக மிஞ்சாது.
நாம் மதத்தில் இருந்து அதன் இலட்சியவாதத்தைப் பெற்றுக்கொள்ளலாம். அதை சமகால இலட்சியவாதத்துடன் இணைத்து மேலெடுக்கலாம். மதம் உருவாக்கும் உலகியல் அமைப்புக்களை அந்த இலட்சியவாதத்தின் அடிப்படையில் காலந்தோறும் மறு அமைப்பு செய்யலாம். மதத்திற்குள் உருவாகும் அத்தனை சீர்திருத்தவாதிகளும் செய்தது அதையே. சங்கரர், ராமானுஜர் முதல் நாராயண குரு, வள்ளலார் வரை.
*
கடைசியாக ஒன்று. இதெல்லாம் சிந்தனை, கலை, இலக்கியம் போன்ற தளங்களைச் சார்ந்தவை. இவற்றுக்கு அப்பால் மானுடன் தேடும் மீட்பு ஒன்றுண்டு. முழுமையறிதல், நிறைவடைதல் என அதை சொல்கிறேன். வாழ்வினூடாகச் சென்றடையும் நிறைநிலை அது. அதை நான் வேதாந்தத்தில் கண்டடைகிறேன். நான் நேற்றுவரை அதை கொஞ்சம் ஐயத்துடன் கற்றறிந்ததாக மட்டுமே முன்வைப்பேன். இன்று அந்த தயக்கமேதுமில்லை. வேதாந்தம் மெய்மையின் வழி.
வேதாந்தம் எனக்கு மெய்ஞானத்தை ’வழங்கவில்லை’, நான் செல்லவேண்டிய பாதையை அளித்தது. உரிய ஆசிரியர்கள் வழியாக, நூல்கள் வழியாக, குறியீடுகள் வழியாக, ஊழ்கம் வழியாக…. ஆகவே நான் வேதாந்தி. வேதாந்தம் இந்துமதத்தின் ஒரு பிரிவு என்பதனால் நான் இந்து.
நீங்கள் இந்துமதத்தில் பிறந்தமையால் ’மட்டும்’ பெருமிதம் கொள்ள வேண்டியதில்லை. ஆனால் இந்துமதத்தை அறிய வாய்ப்பு உங்களுக்கு இருக்கிறது, பிறப்பாலேயே சில அடிப்படை உருவகங்கள் ஆழ்மனதில் உருவாகியிருக்க வாய்ப்பிருக்கிறது என்பதனால் மகிழ்ச்சி அடையலாம். கற்கலாம், கற்றபின் பெருமிதம் கொள்ளலாம்.
ஜெ
(மறுபிரசுரம், முதற்பிரசுரம்Mar 29, 2021 )
நான் இந்துவா?
கலாச்சார இந்து
இந்துமதமும் ஆசாரவாதமும்
இந்துவும் இந்துத்துவரும் – கடிதம்
காந்தி, இந்துத்துவம் – ஒரு கதை
இந்துமதமும் வலதுசாரி அரசியலும்
இந்துமத விவாதங்கள்
இந்துமதத்தைக் காப்பது…
இந்துத்துவ முத்திரை
எம்.எ·ப்..ஹ¤ஸெய்ன்,இந்து தாலிபானியம்
இந்துமதமும் தரப்படுத்தலும்
இந்துமதம்,நாத்திகம்,ஆத்திகம்
இந்து மெய்மை வாங்க
ஆலயம் எவருடையது? வாங்க