விமர்சனம், ரசனை – கடிதம்

விமர்சனங்களும், ரசனையும்

அன்புள்ள ஜெ

விமர்சனமும் ரசனையும் பதிவை வாசித்தேன். வாசித்து முடித்தவுடன் முதலில் தோன்றியது நீங்கள் கனிந்து சென்று கொண்டு இருக்கிறீர்கள் என்ற எண்ணம் தான். சில நாட்களுக்கு முன் ஜெயகாந்தனை போல ஒருநாள் எழுதுவதை நிறுத்தி விடுவேன் என்றால் நல்லது தான் என்ற உங்கள் வரி நினைவுக்கு வந்தது. உங்களுக்கு அது எவ்வண்ணம் நிகழும் என்று யோசிக்கையில் சில எண்ணங்கள் உருவாகி வந்தன. அவற்றை உங்களோடு பகிர்ந்து கொள்ள ஆசை. இவை பிழையாக கூட இருக்கலாம். தெரியவில்லை.

வில்லை அறிவது புல்லை அறிவது. புல்லை அறிவது புவியாளும் இறையை அறிவது. இது வண்ணக்கடலின் துரோணரின் சொற்களில் இருந்து நான் பெற்ற சிறு வரிகள். அர்ஜூனன் வில்லை யோகமென்று பயில்பவன். நீங்கள் அவ்வண்ணம் மொழியை பயில்பவர். மொழி என்னும் சொல்லே மகத்தானது தான். மொழிதல், என் சொல்லுக்கு மறுமொழி என்பதில் வெளிப்படுதல் என்ற பொருள் பயின்று வருகிறது. இருப்பும் வெளிப்பாடென்றால் அதுவும் ஒரு மொழி தான். காட்சிகளால், ஒலிகளால், ஒளிகளால், வண்ணங்களால், குறியீடுகளால் என நாமறியும் மொழி பற்பல வடிவம் கொண்டது. அதில் ஒன்றை கொண்டவன், ஒன்றிலிருந்து ஒன்றென உலகாளும் ஒன்றை சென்று தொடலாம். அதுவே உங்கள் யோகம்.

எல்லா கதைகளும் ரசிக்க தக்கவை தானே என்ற உங்கள் வரியை படிக்கையில் நேற்று அம்மாவிடம் புலம்பியதை நினைத்து கொண்டேன். தினமலர் வார இதழில் வந்த ஒரு கதையை காட்டி இதற்கெல்லாம் மூவாயிரமா என அலுத்து கொண்டேன். இருபத்தைந்து ஆண்டுகளுக்கு முன்பு நீங்கள் இருந்த அந்த நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறேன். அதன் மறுமுனையில் நீங்கள் ஞானம் நோக்கி பயணம் செய்கிறீர்கள்.

அந்த சிறுமியர் இருவரோடு இருக்கும் படம் அருமையானது. ஒவ்வொருமுறையும் குழந்தையரை காண்கையில் வருவது பரவசமே. அத்தனையையும் அள்ளி கொள்ள துடிக்கும் மனமல்லவா அவர்கள். இன்று கனிவில் முதிர்ந்து சென்று கொண்டிருக்கிறீர்கள். இது மகிழ வேண்டிய தருணம்,  கொண்டாட படவேண்டியது. எத்தனை இருந்தாலும் மனதின் இன்னொரு மூலையில் மெல்லிய துயரம் உள்ளது. துயரம் என்று சொல்வதும் தவறு தான். முழுமையான நிறைவு தரும் ஓரு மௌனம் என்பதே பொருத்தமானது,

அன்புடன்

சக்திவேல்

***

அன்புள்ள ஜெ

இப்போது ஒவ்வொன்றையும் வகுத்து உரைக்கும் பாணிக்குச் சென்றுவிட்டீர்கள். எதையும் வகுத்துச் சொன்னால் அது அறிவதிகாரமாக ஆகிவிடும், ஆகவே சொல்லவே முடியாது என்று சொல்வதே புத்திசாலித்தனம் என்பதுதான் பொதுவாக தமிழ்ச்சூழலில் உள்ள நம்பிக்கை. உங்கள் திட்டவட்டமான குரல் சிந்திக்கவைக்கிறது. ஓர் அறைகூவல் அது. உங்கள் வரையறைகளை மீறிச்சென்றால்கூட அது அவ்வரையறைகள் எழுப்பிய அறைகூவலால்தான்

நன்றி

மகாதேவன்

முந்தைய கட்டுரைகன்னிநிலம் பற்றி
அடுத்த கட்டுரைதாண்டிக்குடி கல்வட்டங்கள்- ராஜமாணிக்கம்