வணக்கம் ஜெ
நூலகத்தில் ஒரு பழைய நூல் கண்ணில் பட்டது. அது லின் யூடாங் (Lin Yutang) எழுதிய My country and my people என்ற நூலின் தமிழாக்கம்- சீன மக்களும் சீனமும். இது சீன சமூகத்தைப் பற்றிய ஒரு சமூக நூல். ஆட்சியாளர்களின் வரிசையைவிட இப்படிப்பட்ட நூல்களே ஒரு சமுதாயத்தைப் பற்றி அறிய உதவுகின்றன. இது முப்பதுகளில் எழுதப்பெற்று நாற்பதுகளில் தமிழ் மொழியாக்கம் செய்யப்பட்டது. ‘புதுமைப் பதிப்பகம் லிமிட்டெட், காரைக்குடி’ என்ற பதிப்பகம் இதை வெளியிட்டுள்ளது. இது இப்போது இருக்கும் புதுமைப் பதிப்பகமா என்பது தெரியவில்லை.
ஒரு சமூகத்தைப் பற்றி நாம் எவ்வாறு புரிந்துகொள்கிறோம் ? எதன் அடிப்படையில் அச்சமூகத்தின் பண்பாட்டுப் போக்கை மதிப்பிடுகிறோம் ? குறிப்பாக ஒரு பண்பாட்டுச் சூழலைச் சார்ந்த ஒருவர் முற்றிலும் வேறொரு பண்பாட்டுச் சூழலை அறிய முற்படும்போது அவருடைய பார்வை முறை, அளவுகோல் என்னவாக இருக்கும் ? ஒரு சமூகத்தை அதனளவில் அப்படியே அறிந்து அதை பிறர்க்கு சொல்லும் தகுதியுடையவர் யார் யார் ? இந்த விளக்கத்திலிருந்தே ஆசிரியர் நூலைத் துவங்குகிறார். இந்தியா, சீனா போன்ற கீழைச் சமூகங்களைக் கவனிக்கும் மேலைக் கண்களில் அருவருப்பையும், கழிவிரக்கத்தையுமே பெரும்பாலும் காண்கிறோம். முற்றிலும் மாறுபட்ட சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் ஒரு சமூகத்தை அறிய முயலும்போது முன்முடிவுகள், விருப்பு வெறுப்புகள், கொள்கைகள் ஆகியவற்றை கடந்து உணர்வுப்பூர்வமாக அறிய முயலவேண்டும் என்கிறார். மேலும் நவீன பொருளாதார சூழல், ஜனநாயகம் போன்ற விஷயங்களை மனதிற்கொண்டு ஒரு பெரும் பண்பாட்டுச் சூழலை அறிய முற்படுவது தவறான முடிவுகளுக்கு இட்டுச் செல்லும் என்கிறார்.
மேலை நாட்டினரிடம் சீனம் பற்றிய எண்ணங்கள் எவ்விதம் உருவாகின்றன ? சீனாவில் பல ஆண்டுகள் தங்கி மூன்று மைல் சுற்றளவுக்கு மேல் பயணம் செய்யாத மேலை நாட்டுக் குமாஸ்தா, மதப்பிரச்சாரகர்கள், கப்பல் பயணம் செய்துவந்த மாலுமிகள், அந்நிய அரசாங்கத்தின் காரியதரிசி, ஒரு வியாபாரி, இவர்கள் தான் சீனாவைப் பற்றி மேலைச் சமூகத்தினரிடம் புத்தகம் எழுதுகிறார்கள். வெறும் சமூகத்தின் புறத்தோற்றத்தையோ, நடையுடை பாவனையையோ வைத்து ஒரு சமூகத்தை மதிப்பிட முடியாது. மனிதப் பண்புகளை ஆராய வேண்டும். இந்நூலில் அவர் சீன சமூகத்தை விளக்க முற்படும் விதம் அவர்களின் நடத்தைகளும், மனஅமைப்பும் பற்றியது. இந்தப்போக்கு அங்கு எம்மாதிரியான மதங்களை, சமூக நிறுவனங்களை உருவாக்கியது என்பதே இதன் சிறப்பான விஷயம். இதில் அவர் விவரிக்கும் பல விஷயங்கள் இந்தியாவுக்கும் பொருந்தும். கிழக்கின் தன்மை அது.
அவ்வப்போது நிகழ்ந்த மங்கோலியப் படையெடுப்பு தவிர்த்து சீனத்தில் தொலை தேசங்களின் ஆக்கிரமிப்பு என்பது பெருமளவில் நிகழவில்லை. மங்கோலிய இனக்கலப்பு காரணமாக வட மற்றும் தென் சீனத்திற்கு சிற்சில உடல் சார்ந்த, கலாச்சாரம் சார்ந்த வேறுபாடுகளும் உள்ளன. குறிப்பிட்ட காலத்திற்கு ஒருமுறை வடக்கிலிருந்து நிகழ்ந்த படையெடுப்பு காரணமாக புதிய ரத்தக் கலப்பும், புதுவகைப் பண்பாடும் தோன்றியிருக்கின்றன.
சீனர்களின் நடத்தைகளை பற்றிச் சொல்லுமிடத்து, கனிவு, பொறுமை, அசிரத்தை, கிழக்குறும்பு, அமைதி விருப்பம், திருப்தி போன்ற விஷயங்களை அவர்களின் இயல்புகளாகச் சொல்கிறார். நாம் வாழும் இவ்வுலகுக்குப் புறம்பான எவ்விஷயத்திலும் சீனர்களுக்குப் பற்றில்லை. அதனால் மத சம்பந்தமான எவ்வித ஜால வித்தைகளிலும் அவர்கள் மாட்டிக்கொள்ளவில்லை. அதனால் அவர்கள் நாட்டம் முழுவதும் நடத்தை உயர்விலேயே பதிந்துவிட்டது. மிதமிஞ்சிய நிதானப்போக்கு அவர்களை கட்டற்ற மனப்போக்கிலிருந்தும், கற்பனை மன மயக்கங்களிலிருந்தும் தடுத்துவிடுகிறது. இளம் பருவத்து சீற்றங்களையும், உலகையே சீர்திருத்தப் புறப்படும் நவீன விழுமியங்களையம் எள்ளி நகையாடுபவர்கள் சீனர்கள். தனிநபர் சுதந்திரத்துக்கு போதுமான அமைப்பு பலம் இல்லாத போது எதிலும் அசிரத்தை உண்டாகிவிடுகிறது.
சீனர்களின் விநோத இயல்பு ‘கிழக்குறும்பு’. இந்தக் கிழவன் யார் ? இவன் வாழ்க்கையில் பட்டுப் பழகிப்போனவன்; லோகாயதவாதி, அலட்சியக்காரன், முற்போக்கில் நம்பிக்கையில்லாதவன். கிழக்குறும்பின் தன்மை என்பது ‘கனிவு’தான். இவன் கனிந்தவன். அதனால் இவனிடம் கொந்தளிப்பு இல்லை. மேலும், இத்தன்மை இலட்சியப் போக்கைத் தடுத்துவிடுகிறது; மனித முயற்சியின் வீண்தன்மையை நகைக்கிறது. மனித முயற்சியை, உண்டு, உறங்கி, களிக்கும் உடல் தேவைகளைப் பூர்த்தி செய்வதோடு நிறுத்திக் கொள்கிறது. வரலாற்றுக்கு பொருளாதார வியாக்கியானம் செய்வது சீனர்களின் தேசிய உணர்வாகவே இருந்துவருகிறது. இக்கிழக்குறும்பு முதிர்ந்த பண்பாட்டுக்கே உரியது. மேற்கின் இள தேசங்கள் இப்போக்கை மதிக்காது. கிறிஸ்தவர்கள் போதனை செய்வதுபோல சும்மா செத்துப்போவதற்காக சீனர்கள் வாழவில்லை. மேற்கைப் போல இன்பம் பயக்கும் கனவுலகை நாடியும் அவர்கள் வாழவில்லை. இவ்வுலகின் சாதாரண வாழ்வை ஒருமாதிரி ஒழுங்குசெய்துகொண்டு வாழவேண்டும் என்பதே சீனர்களின் விழைவு. மேற்கின் குணங்களாகிய பெருமிதம், பொதுவாழ்வில் பற்றுதல், போர்வீரன் போன்ற துணிச்சல், சீர்திருத்த விழைவு, போன்றவை சீனர்களிடம் கிடையாது. மேலும் எதிலும் எளிதில் திருப்தியடைந்து விடுபவர்களாகவே சீனர்கள் உள்ளனர்.
சமயம்– இப்போக்குகளின் உருவாக்கமே சீனாவின் முதன்மையான இரு சமயங்களான கான்ஃபூஸியமும் (Confucius), தாவோயிஸமும் (Tao) ஆகும். அவை இத்தன்மைகளை மேலும் மெருகேற்றிவிடுகின்றன. இவையிரண்டையும் மத நிறுவனம் என்றோ, மதநம்பிக்கை என்றோ கொள்ள முடியாது. சீனத்தன்மையின், அதன் இயல்பின் ஒரு திரண்ட கருத்தியல் வடிவமேயாகும்.
சீனர்களின் வாழ்க்கை இலட்சியம் என்பது எளிய குடும்ப வாழ்வை அனுபவிப்பதும், ஒன்றுபட்ட சமூகத் தொடர்பை ஏற்படுத்திக்கொள்வதுமே ஆகும். இதன் சரியான வெளிப்பாடே கான்ஃபூஸியம். வாழ்க்கை நியதிகளையும் ஒழுங்குமுறைகளையும் அது வகுத்துரைக்கிறது. இது ‘கான்ஃபூஸியப் பொது அறிவு’ எனப்படுகிறது. கான்ஃபூஸியஸ் உலகில் உள்ளதையே நம்பும் இயல்புடையவர். ஆனால் இத்தகைய கான்ஃபூஸிய யதார்த்தவாத, மனிதப்போக்கு சீனத்திற்கு போதுமானதாக இல்லை. அது மனிதனுடைய இயற்கை உணர்வுகளைத் திருப்திப்படுத்தவில்லை. எனவே தாவோவிற்கும், பௌத்தத்திற்குமான தேவை எழுந்தது.
தாவோ கொள்கையின் மூலநூல் ‘தாவோ தே ஜிங்’ (tao te ching). இதை எழுதியவர் லாவோ ட்ஸு (Lao Tzu). இதற்குப் பொருள் ‘கிழவர்’ (Old Master) என்பது. கிழக்குறும்பின் ‘சும்மா இருப்பதன்’ வெளிப்பாடாகவே இம்மரபு உள்ளது. எதிலும் குறும்புத்தன அலட்சியம், சகலத்திலும் அவநம்பிக்கை, மனித முயற்சிகளை நகைப்பது போன்றவைகள்தான் இதன் கூறுகள். கான்ஃபூஸியக் கொள்கை நியாயப்போக்கு, ஒழுங்குமுறை, கச்சிதம் ஆகியவற்றை உடையது. ஆனால் மனிதனின் அந்தரங்க ஆசைகளை அதனால் ஈடுசெய்ய முடியவில்லை. கான்ஃபூஸியம், வாழ்வில் எல்லாம் நடக்கும், நடத்திக்கொள்ள முடியும் என்ற நோக்குடையது. தாவோயிஸம், வாழ்வில் ஒன்றும் நடவாது என்ற நோக்குடையது. கான்ஃபூஸியவாதி காரியவாதி; தாவோவாதி ஒரு மாயாவாதி. கான்ஃபூஸியம் ஒரு வலியுறுத்தல்; தாவோ ஒரு மறுப்பு. இவ்விரு போக்குகளும் இரு துருவங்களாக இருந்து சீன சமூகத்தை சமநிலையில் வைத்திருப்பதாகக் கூறுகிறார். வாழ்க்கையில் ஒன்றும் சாதிக்க முடியாது என்ற கொள்கையைப் பொறுத்தவரை பௌத்தம் என்பது சற்று மெருகேறிய தாவோயிஸம்தான். பௌத்தம் சீனர்களின் வாழ்வில் இரண்டறக் கலந்துவிட்ட ஒன்று. அதில் தர்க்கரீதியான வழிவகை உள்ளது. மாயாவாதம் உள்ளது. அறிவைப்பற்றிய சித்திரம் உள்ளது. மேலும், சீனர்களின் கற்பனைத் திறனுக்கு பௌத்தம் ஒரு முக்கியக் காரணம் என்கிறார்.
அறிவியலும் தர்க்கமும் இல்லாமை (Lack of Science and Logic)– கிரேக்கர்களின் மனம் விஷயங்களை பிரித்து ஆராயும் (analytical) இயல்புடையது. அவர்கள் நவீன அறிவியலுக்கு அடித்தளமிட்டார்கள். அளவை நூலிலும் வான சாஸ்திரத்திலும் எகிப்தியர்கள் சிறந்து விளங்கினார். இந்துக்கள் தங்களுக்கே உரிய இலக்கணங்களை உருவாக்கினர். ஆனால் சீனர்களின் கணிதமும், வான சாஸ்திரமும் வெளியே இருந்து வந்தவை என்கிறார். சீனர்களின் மனதில் தர்க்கம் (Logic) இல்லை. சாமானிய ஒழுக்க நடத்தைகள் பற்றிச் சொல்வதில்தான் அவர்கள் மனம் அமைவு காண்கிறது. சீனத்தில் சாஸ்திர மொழி இல்லாத தன்மையே நிலவியது. பின்பு சிங் (Ch’ing) பரம்பரையில்தான் ஒன்றோடொன்று ஒப்பிட்டுப் பார்க்கும் முறை (comparative method) ஏற்பட்டது. இயற்கை அறிவும் நுண்ணுணர்வும் கொண்டு பளிச்சென்று வீசும் உண்மைகளையே சீனர்கள் விரும்பினர். மேலை நாடுகளைப் போன்று ”ஐஸ்க்ரீமை கூர்ந்து ஆய்வு செய்து, இறுதியில் அதிலுள்ள சர்க்கரையின் முக்கிய நோக்கம், அந்த ஐஸ்க்ரீமை இனிக்கும்படிச் செய்வது என்று அறிவிக்கும் அறிவியல் ஆய்வு (!) என்னும் கெட்டிக்காரத்தனத்தை சீனர்களிடம் காண முடியாது” என்கிறார்.
உண்மையை நிரூபித்துக் காட்ட முடியாது; அதை உணரத்தான் முடியும். உள்ளுணர்வின் மூலம் உண்மையை அறியலாம் என்பது சீனர்களின் நம்பிக்கை. எனவே அங்கு தர்க்கம் வளர்ச்சியடையவில்லை. அதைவிட சிறந்ததாக அவர்கள் பொது அறிவை (Common Sense) நம்புகிறார்கள். சுவாங்த்சே (chuang tse) என்பவர் சிலுவூன் (Ch’iwulun) என்ற தமது நூலில் ‘அறிவு’ என்பது ஒவ்வொருவரின் எண்ணத்தைப் பொறுத்ததே (subjectivity of knowledge) என்கிறார்:
”நம்மிருவருக்கும் இடையே சபதம் நடக்கிறது. நீ என்னை ஜெயித்துவிட்டதாக எண்ணிக்கொள்ளுகிறாய்; நீ அறிவில் உயர்ந்தவனென்று ஏற்றுக்கொள்ள நான் தயாரில்லை. அப்படியானால், வாஸ்தவத்தில் நீ எண்ணுவதுதான் சரி, நான் எண்ணுவது தவறா ? உன்னை ஜெயித்துவிட்டதாக நான் எண்ணிக்கொள்ளுகிறேன்; நீ அதை ஒப்புக்கொள்ளத் தயாராயில்லை. அப்படியானால், வாஸ்தவத்தில் நான் எண்ணுவதுதான் சரி, நீ எண்ணுவது தவறா ? அப்படியில்லை யென்றால், ஒருவேளை நாம் இருவரும் எண்ணியது சரியா ? அல்லது இருவர் எண்ணியதும் தவறா ? இந்த விஷயம் நம்மிருவருக்கும் தெரியாது. எனவே, நமது அறிவு இருளால் சூழப்பட்டிருக்கிறது. பிறகு நம் இருவரில் யார் உண்மையை நிலைநிறுத்தப் போகிறோம் ? நீ சொல்வதைச் சரி என்று ஏற்றுக்கொள்ளுகிற ஒரு மனிதன் அந்த உண்மையை நிலைநிறுத்தும்படி நாம் அனுமதிப்போமேயானால், நீ சொல்லுவதை ஏற்கெனவே அவன் ஒப்புக்கொள்ளுகிறான். எனவே, அவன் உண்மையை எப்படி, நிலைநிறுத்த முடியும் ? நான் சொல்லுவது சரி என்று ஏற்றுக்கொள்ளுகிற ஒரு மனிதனை அதை நிலைநிறுத்தும்படி நாம் அனுமதிப்போமேயானால், அவன் ஏற்கெனவே நான் சொல்வதை ஒப்புக்கொள்ளுகிறான். அவன் எப்படி உண்மையை நிலைநிறுத்த முடியும் ? நாம் இருவர் சொல்லுவதையும் ஏற்றுக்கொள்ளாத ஒருவனை உண்மையை நிலைநிறுத்தும்படி நாம் அனுமதிப்போமேயானால், ஏற்கெனவே அவன் நாம் இருவர் சொல்லுவதையும் ஒப்புக்கொள்ளவில்லை. அவன் எப்படி உண்மையை நிலைநிறுத்த முடியும் ? நாம் இருவர் சொல்வதும் சரி என்று ஒப்புக்கொள்ளுகிற ஒருவனை உண்மையை நிலைநிறுத்தும்படி விட்டுவிடுவோமேயானால் அவன் ஏற்கெனவே நாம் இருவர் சொல்லுவதையும் சரியென்று ஒப்புக்கொள்ளுகிறான். அவன் எப்படி உண்மையை நிலைநிறுத்த முடியும ? எனவே, நீயும் நானும் இதர ஜனங்களும் உண்மை இதுதான் என்று தெரிந்துகொள்ள முடியாது. அப்படியிருக்கும் போது, உண்மையைச் சொல்ல இன்னொரு ஆசாமி வருவார் என்று நாம் எப்படிக் காத்திருக்க முடியும் ?”
சமூக மனப்போக்கு இல்லாமை (absence of social mind), குடும்ப அமைப்பு, சமூக வகுப்புகள், கிராமமுறை– சீனர்கள் குடும்ப மனப்பான்மை உள்ளவர்கள்; சமூக மனப்பான்மை உள்ளவர்களல்லர். இங்கு குடும்ப அமைப்பே தேச அமைப்பாக மாறிப்போகிறது. தேசக்குடும்பம் (State family) என்ற சொல்லையே கையாளுகிறார்கள். சமூக விழாக்களும் அங்கு உண்டு. சீனர்களின் விளையாட்டுகள் கூட தனிநபர் விளையாட்டுகளாகத்தான் உள்ளன. கோஷ்டி சேர்ந்து விளையாடும் பழக்கம் அங்கு இல்லை. சமூக சீர்திருத்தமோ, பொதுவாழ்வுச் சீர்திருத்தமோ கோமாளித்தனமானதாகவே அங்கு கருதப்படுகிறது. சீன சமுதாயத்தின் ஆணிவேர் குடும்ப அமைப்புதான். அதிலிருந்து வளர்ந்து வந்த கிராம அமைப்புதான் சீனர்களின் சமூக அமைப்பாகும். மதம் செய்ய வேண்டிய வேலையைக் கிட்டத்தட்ட குடும்ப அமைப்பு செய்கிறது. இந்தக் குடும்ப அமைப்புக்கு அடிப்படையாக இருப்பது கான்ஃபூஸியத் தத்துவமே. அதே சமயம் குடும்ப முறையில் உள்ள சீர்கேடும் ஊழலும் அங்கும் உண்டு.
சீனத்தில் நிலையான வர்க்க வேற்றுமைகள் (established classes) இருந்ததில்லை. தேர்வில் தேறிவிட்டால் யாவரும் சமூக அந்தஸ்தை அடையலாம். தாங் (T’ang) அரச பரம்பரையினர் தேர்வு முறையை ஆட்சியில் ஏற்படுத்தினர். இங்கு கனவான்கள் வகுப்பு உள்ளது. ஆனாலும் அது நிரந்தரமானது அல்ல. இங்கு பலவித குடும்பங்களே உண்டு. அதிஷ்டம் விட்ட வழியில் இவர்கள் மேலும் கீழுமாய் உருண்டோடிக்கொண்டேயிருப்பார்கள். அங்கு நிரந்தரமான வர்க்கப் பிரச்சனைகள் இல்லை; சாதிகளில்லை; ஐரோப்பியப் பிரபுத்துவம் இல்லை. பல்வேறு வகுப்பினர்களான படிப்பாளிகள், விவசாயிகள், தொழிலாளர்கள், வர்த்தகர்கள் ஆகியோரிடையே கூட்டுறவு உள்ளது. வகுப்பு எதிர்ப்பு இல்லை. சமூக மனப்போக்கு இல்லாத நிலையில் சீனாவில் பொது காரியங்கள், அதற்கான முயற்சிகள் அனைத்தும் கிராம முறையிலேயே நடைபெறுகின்றன. இதன் காரணமாக ஒருவித கூட்டுறவு/ பொதுவுடைமை ஆட்சி ஏற்படுகிறது. சீனாவின் உண்மையான சர்க்கார் என்பது இந்த கிராம முறையின் சர்க்கார்தான்.
மேற்சொன்ன விஷயங்களிலிருந்து இன்றைய நவீன சீனா பல வகைகளில் மாறியிருக்கலாம். அதற்கு நவீன பொருளாதார, தொழில்நுட்ப போட்டிச் சூழல் காரணமாக இருக்கலாம். ஆனால் ஒரு பெரும் பண்பாடு என்ற முறையில் இந்தியத்தனமும் சீனத்தனமும் தவிர்க்கவியலா ஒரு சமநிலைச் சக்தியாகத் திகழும்.
விவேக் ராஜ்
https://archive.org/details/20210303_20210303_0559/mode/2up
https://archive.org/search.php?query=creator%3A%22Lin+YuTang%22