புதுமைப்பித்தன்
ஜெ
எனக்கு மெய்யியல் சார்ந்த நாவல்களை வாசிப்பது மிகவும் பிடிக்கும்.
விஷ்ணுபுரம், கொற்றவை, மடம் (குறுநாவல்), வெண்முரசு, கிருஷ்ண பருந்து, மோகமுள்ளில் தேவியை ஆராதிக்கும் பகுதிகள், நாகூர் ரூமியின் திராட்சைகளின் இதயம், நூருல் அமீனின் கனவுக்குள் கனவு போன்ற நாவல்களைப் போல் தமிழில் வெளிவந்துள்ள மெய்யியல்சார் நாவல்களைச் சுட்டிக் காட்ட இயலுமா?
அன்புடன்
இமான்
***
அன்புள்ள இமான்,
மெய்யியல் என்றால் எதைச் சொல்கிறீர்கள் என வகுத்துக் கொள்ளுங்கள். ஏனென்றால் சிந்தனையில் நம் அடிப்படைச் சொற்களுக்கு நமக்கான வரையறை இருப்பது இன்றியமையாதது.
இரு கோணங்களில் இச்சொல்லை வகுக்கலாம். ஒன்று, மதம் சார்ந்த என்னும் பொருளில். மதக்குறியீடுகள், மதவரலாறு, மதக்கொள்கைகளைப் பயன்படுத்துதன். அதாவது மரபான மெய்யியல்.
இன்னொன்று விரிந்தபொருளில். வாழ்க்கையின் சாராம்சம் சார்ந்த வினாக்களை எழுப்பிக்கொள்ளுதல். அன்றாடத்திலிருந்து அகன்று ஒட்டுமொத்த நோக்கில் வாழ்க்கையை அணுகுதல். அதாவது நவீன மெய்யியல்.
இரண்டுக்கும் இடையே வேறுபாடு குறைவுதான். ஏனென்றால் மெய்யியலைப் பேசினாலே பல்லாயிரமாண்டுகளாக இங்கே புழங்கிவந்துள்ள படிமங்களை, கொள்கைகளை கையாள வேண்டியிருக்கும். அது மதத்திற்குள் கொண்டுசெல்லும். மதமே அந்த படிமங்கள், கொள்கைகளின் பெருந்தொகை.
ஆனால் வரையறையை மதம் சாராமல் வைத்துக்கொண்டால் மேலும் பல படைப்புக்களையும் இணைத்துக்கொள்ள முடியும். ஆகவே நான் இரண்டாவது வரையறையை எடுத்துக்கொள்கிறேன்
மெய்யியல் சார்ந்த நாவல்கள் தமிழில் மிகக்குறைவு என்பதே உண்மை. ஏனென்றால் தமிழில் நவீன இலக்கியம் நவீனத்துவ இலக்கியமாகவே அறிமுகம் ஆகியது. நவீனத்துவம் என்பது ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தின் குறிப்பிட்ட உலகநோக்கு. அது மரபு எதிர்ப்புநோக்கு, தனிநபர்சார்ந்த பார்வை, புறவயமான தர்க்கம் சார்ந்த அணுகுமுறை, அன்றாட உலகியல் சார்பு ஆகிய தன்மைகள் கொண்டது. ஆகவே அது மெய்யியல் பார்வைகளுக்கு முற்றிலும் எதிரானது.
ஆனாலும் மெய்யியல் நோக்கு என்றும் இருந்து கொண்டிருக்கும். ஏனென்றால் அது அடிப்படைத் தேடல். அத்தகைய தேடல்கொண்ட ஆக்கங்கள் என என் நோக்கில் சிலவற்றைச் சொல்வேன்
1.பொய்த்தேவு- க.நா.சுப்ரமணியம்
2.அவதூதர்- க.நா.சுப்ரமணியம்
3.கிருஷ்ணப்பருந்து- ஆ.மாதவன்
4.மானசரோவர்- அசோகமித்திரன்
5.விழுதுகள்- ஜெயகாந்தன்
6.ஒரு மனிதன் ஒருவீடு ஒரு உலகம்- ஜெயகாந்தன்
7.புத்ர- லா.ச.ர
8.இடைவெளி- சம்பத்
9.லங்காபுரி ராஜா- பிரமிள்
10.திருவரங்கன் உலா- ஸ்ரீவேணுகோபாலன்
11.விஷ்ணுபுரம் -ஜெயமோகன்
12 கொற்றவை – ஜெயமோகன்
13.வெளியேற்றம்- யுவன் சந்திரசேகர்
14. குள்ளச்சித்தன் சரித்திரம்- யுவன் சந்திரசேகர்
15.சுபிட்ச முருகன் – சரவணன் சந்திரன்
ஜெ