வணக்கம்,
விஜி வரையும் கோலங்கள் லஷ்மி மணிவண்ணனின் புத்தக வெளியீட்டு விழாவில் தங்களை நேரிடையாக பார்த்தும், தங்கள் பேச்சை நேரிடையாக கேட்கும் வாய்ப்பு அமைந்ததையும் எண்ணி பெருமகிழ்ச்சி அடைந்தேன். நண்பன் டேவிட்டுடன் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டேன்.நண்பன் உங்களுடைய தீவிர வாசிப்பாளர்,உங்களுடைய கதைகளை யூ ட்யுபில் காணொளிகளாக வெளியிட்டுஇருக்கிறான்.
(இணைப்பு: https://youtube.com/channel/UCQBEghkD7mpPgyaODs_42zg)
கொரோனா கால துவக்கத்திலிருந்துதான் தங்களுடைய இணையதளத்தை தொடர்ச்சியாக வாசித்து வருகிறேன்.நம்மருகிலேயே இருந்த இவ்வளவு பெரிய ஆளுமையை தவறவிட்டு விட்டோமே என்ற எண்ணம்தான் மேலோங்கியது.அதற்கு காரணம் தங்களை பற்றிய என்னுடைய தவறான முன்முடிவுகள்தான்.ஏனெனில் தங்களை வாசிக்காமலேயே தங்களை பற்றிய விமர்சன செய்திகளை படித்ததினால்.தன்மீட்சி புத்தகத்தை படித்த பிறகு , ஐயோ தேவையில்லாமல் நாலைந்து தன்னம்பிக்கை புத்தகங்களை வாங்கி வைத்து இருக்கிறோமே என்று தோன்றியது.
தொடர்ந்து நிறைய கேள்விகள் கேட்க வேண்டும் என்று தோன்றுகிறது.
இது என்னுடைய முதல் கடிதம்.
நன்றி
வீரமணி
சுசீந்திரம்.
அன்புள்ள வீரமணி,
இந்த வகையான கடிதங்களை அடிக்கடி காண்கிறேன் ‘ உங்களைப் பற்றிய எதிர்மறைச் சித்திரங்களை உருவாக்கிக்கொண்டிருந்தேன். ஆகவே இதுவரை சந்திக்கவில்லை’ என பலர் எழுதுவதுண்டு. புதிய வாசகர் சந்திப்பில் பலர் இதைச் சொல்வார்கள்.
முதல் கேள்வி, திட்டமிட்டு ஒருங்கிணைந்து இதைச் செய்பவர்கள் யார்? அவர்களின் அரசியல்நோக்கம் என்ன? பண்பாட்டுத்தளத்தில் அவர்களின் பங்களிப்பு என்ன? அவர்களின் பொதுவான அறிவுத்தளத் தகுதிதான் என்ன?
உதாரணமாக, ஜெயமோகன் இந்துத்துவ ஃபாசிசத்தின் இலக்கிய முகம் என்னும் நூல் சமீபமாக வெளியாகியிருக்கிறது. தமிழில் என்னைப்பற்றி எழுதப்பட்ட முத்திரைகுத்தல்- அவதூறு – திரிபு- வசைகளில் ஒரு பகுதி அதில் தொகுக்கப்பட்டுள்ளது. அதாவது இடதுசாரித் தரப்பு.
அதைப் படித்துப்பாருங்கள் என நான் நண்பர்களுக்குச் சொல்கிறேன். அதில் எழுதியிருப்பவர்கள் யார்? அவர்களின் அறிவுத்தகுதிகள் பங்களிப்புக்கள் என்ன? அனேகமாக அனைவருமே வெறும் வம்பர்கள், அரசியல் சழக்கர்கள். எந்த ஆக்கபூர்வப் பங்களிப்பும் இல்லாமல் பல ஆண்டுகளாகச் சூழலை நிறைத்திருப்பவர்கள். பலர் எழுதத்தெரியாத எழுத்தாளர்கள்.
இக்குரல்களை நம்பி ஒருவன் என்னை படிக்காமலிருப்பான் என்றால் அவனுடைய அறிவுத்தகுதி என்ன? அவன் அங்கிருந்து மீண்ட பின்பாவது அங்கே உழன்றமை குறித்து வெட்கப்படவேண்டும் அல்லவா?
ஆரம்பகட்ட வாசகன் பொதுச்சூழலில் வைரஸ் போல நிறைந்திருக்கும் இந்த மொண்ணைக்கருத்துக்களால் பாதிக்கப்படுவதைப் புரிந்துகொள்கிறேன். ஆனால் யாராக இருந்தாலும் அறிவுத்தளத்தில் செயல்படுபவனுக்கு முதல்தேவை என்பது தன்னம்பிக்கை. தன்னிமிர்வு. ’என் வாசிப்பின் வழியை நான் பார்த்துக்கொள்கிறேன், நானே கண்டடைகிறேன், எவரும் என்னை மேய்த்துக் கொண்டு செல்லவேண்டியதில்லை, நான் எந்த மந்தையிலும் இல்லை’ என்று சொல்லும் துணிவு.
அது உருவாகட்டும். வாசியுங்கள்
ஜெ
அன்புள்ள ஜெ.மோ,
நலம் விழையட்டும்!
எனது பெயர் நவின் இயன்முறை மருத்துவர்.சொந்த ஊர் தோவாளை. தற்போது சென்னையில் வேலை செய்து வருகிறேன்.உங்களை முதன்முறையாக எழுத்தாளர் ரா.செந்தில் குமாரின் “இசுமியின் நறுமணம்”புத்தக வெளியீட்டு விழாவில் பார்த்து பேசினேன். அந்தச் சந்திப்பு ஒரு நல்லூழின் தொடக்கமென எண்ணுகிறேன்.
எனக்கு இலக்கியம் அறிமுமானதே உங்கள் அறம் சிறுகதை தொகுதியிலிருந்தே. அதன் விளைவாகவே வாசிப்புச் செயற்பாட்டின் மீது ஒரு விடாப்பிடியான விருப்பம் நேர்ந்தது.இப்போது நானொரு சிற்றிதழ் நடத்த விரும்புகிறேன்.இதுவும் எனது நீண்ட நாள் ஆசை. அவ்விதழுக்கு “மூங்கில்” என்ற பெயர் சூட்டியுள்ளேன். அதற்கு உங்களின் பங்களிப்பும் வாழ்த்தும் மிகவும் அவசியம் என்று எண்ணுகிறேன். தங்களிடமிருந்து ஒரு சிறுகதை வேண்டுமென கேட்டுக் கொள்கிறேன்.
நன்றி
இரா.நவின்
அன்புள்ள நவீன்,
தோவாளையில் பிறந்தவர் சென்னையில் இருந்து இதழ் நடத்த முயல்வது வாழ்த்துக்குரியது. சிற்றிதழ் என்றால் அச்சிதழா? இன்று ஓர் அச்சிதழுக்கான இடம் அருகிவருகிறது. உயிர்மை, காலச்சுவடு போன்ற இடைநிலை அச்சிதழ்களே பின்னடைவுகொண்டிருக்கின்றன. இணைய இதழ் என்றால் ஏற்கனவே ஏராளமான இணைய இதழ்கள் இருக்கின்றன. ஒரே வாசகத்திரளை அடைய அவை போட்டியிடுகின்றன.
சிறுகதை அனுப்புவதில் தடையில்லை. ஆனால் இன்றைய தேவை வேறுவகையான இலக்கியச் செயல்பாடுகள்தான் என நினைக்கிறேன். கவிதை- கதைகளுக்கான விவாதக் குழுமங்கள் போல
ஜெ