ஜெ,
பள்ளிப் பருவத்தில் இருந்தே நான் வாசிக்கிறேன். இலக்கிய வாசிப்பு சற்று தாமதமாக வந்தது. தொடர்கிறது. ஆனால் படைப்பை ரசிக்க முடிகிறது. இனம் புரியாத உணர்வு (உங்களுடைய கொற்றவை, ஊமைச் செந்நாய், வெள்ளை யானை, சங்கச் சித்திரங்கள் போன்றவை படித்த போது) ஏற்படுகிறது. அது மனதை ஏதோ தொந்தரவு செய்கிறது. ஆனால் அதைக் கடந்து வாசிப்பின் ஆழத்திற்குள் செல்ல முடியவில்லை. நுட்பமாக படைப்பை விமர்சிக்கும் தகுதி வர மறுக்கிறது. அதையும் மீறி விமர்சித்தால் அது மேலோட்டமானதாக இருப்பதை என்னாலேயே உணர முடிகிறது.
சமீபத்தில் அஞ்ஞாடி படித்தேன். அதை படித்து முடித்த உடன் நாவலை அசை போட்டு பார்த்தேன். நாவலில் மாரி – ஆண்டியின் வாழ்க்கையில் இருக்கும் புனைவுத் தன்மையின் மையம் தோள் சீலை போராட்டம், கட்ட பொம்மு -மருது சகோதரர்கள் வரலாறு, நாடார்கள் வேதத்துக்கு மாறுவது, கழுகு மலை கலவரம், சிவகாசி கலவரம் போன்றவற்றில் ஒட்டவில்லை என்று பட்டது. ஆனால் இக்கருத்தை முன்வைக்கும் துணிவு வெளிப்படவில்லை. வாசகன் எப்போது விமர்சகனாக முடியும்? ஆழ்ந்த நுணுக்கமான வாசிப்பு இல்லாத வரை அது சாத்தியமில்லையா?
ஒரு படைப்பை உடற்கூறாய்வு செய்யும் பணி வாசகனுடையது அல்ல என்றாலும், வாசகன் அடுத்த படிநிலைக்கு செல்ல வேண்டிய தேவை ஏற்படுவதால் இக்கேள்வியை எழுப்புகிறேன். படைப்பை விமர்சிக்கும் தகுதி ஏற்படுவதற்கு முன் அதை வெளிப்படுத்தும் நம்பிக்கை ஏற்பட வேண்டும் என நினைக்கிறேன்.
அன்புடன்,
பா.இரமேஷ்.
***
அன்புள்ள பா இரமேஷ்,
நீங்கள் வாசிப்பதும், விமர்சன நோக்கு கொண்டிருப்பதும் நிறைவூட்டுகிறது. ஒரு விதியாகவே சொல்ல முடியும், விமர்சன நோக்கு இல்லாமல் வாசிப்பு இல்லை. ரசனை என்பதே நுட்பமான விமர்சனம்தான். ஆகவே விமர்சிப்பது இயல்பானது. நாம் பேசுவது அந்த விமர்சனத்தை வெளிப்படுத்துவது பற்றித்தான்.
தொடக்க காலகட்டத்தில் ஒரு விமர்சனத்தை முன்வைக்கையில் நமக்கு ஒருவகையான தயக்கம் இருக்கிறது. அந்தத் தயக்கத்தை ஆரோக்கியமான ஒன்றாகவே கருதுகிறேன். ஏனென்றால் அந்த தயக்கம் இல்லாதவர்கள் மொண்ணையான விமர்சனங்களை மிகையான பாவனைகளுடன் முன்வைக்கிறார்கள். அவர்களை அவர்களே கோமாளிகளாக காட்டிக்கொள்கிறார்கள். அதைவிட அவர்களுக்கே தீங்கான ஒன்றுண்டு, தாங்கள் சொல்லும் விமர்சனங்களுக்கு தாங்களே ஆட்பட்டுவிடுகிறார்கள். அவர்கள் சொன்னதே அவர்களுக்கான சுற்றுமதிலாக ஆகி சிறையிட்டு விடுகிறது.
அதாவது, தாங்கள் சொன்னவற்றுக்கு முரணாக மீண்டும் சொல்லக்கூடாது என்பதனாலேயே சொன்னவற்றை வளர்த்து ஒரு தரப்பாக ஆகிவிடுகிறார்கள். அதன்பின் புதியன எவையும் உள்ளே நுழைவதில்லை. அது ஒரு பெரிய அகழி. பல இளையோர் அதற்குள் மாட்டிக்கொண்டிருக்க நேர்கிறதென்பதைக் காண்கிறேன். ஏனென்றால் இன்றைய ‘எதுவும் பிரசுரமாகும்’ சூழல் எண்ணியவை உடனே பதிவாகச் செய்கிறது. இது சென்ற இருபதாண்டுகளில் உருவாகியிருக்கும் ஒரு நச்சுச்சூழல்.
ஆகவே விமர்சன அணுகுமுறை நல்லது. அவற்றை வெளிப்படுத்துவதற்கான தயக்கம் அதைவிட நல்லது. இளையவாசகர்கள் விமர்சனங்களை வெளிப்படுத்துவதற்குரிய சில வழிமுறைகளை நான் தொகுத்துச் சொல்லலாம் என நினைக்கிறேன்.
அ. முதலில் சற்றுகாலம் உங்களை பாதித்தவற்றைப் பற்றி மட்டுமே எழுதுங்கள். அதாவது மதிப்புரைகளை அல்ல ரசனையுரைகளை. ஆங்கிலத்தில் appreciation என்று அதைச் சொல்வார்கள். மதிப்புரை [review] விமர்சனம் [criticism] ஆகியவை அடுத்த தளத்தில் நம் ரசனையும் கருத்துநிலையும் தெளிவாக உருவானபின்னர், நம் ஆளுமையும் அடையாளமும் திரண்ட பின்னர் செய்யவேண்டியவை.
ஆ.பாதிக்காதவை, பிடிக்காதவை பற்றி எழுதவேண்டாம். ஏனென்றால் முகமுக்கியமான பல படைப்புக்கள் இந்த ஆரம்ப காலகட்டத்தில் உங்களுடைய ரசனைத் தகுதியின்மை, வாசிப்புப் பயிற்சியின்மை காரணமாக உங்களை பாதிக்காமல் போகலாம். உங்களுக்கு பிடிக்காமலும் ஆகிவிடலாம்.
இ. ஒரு படைப்பு ஏன் பிடித்தது, எவ்வாறு பாதித்தது என்று உங்களையே ஆராய்ந்து எழுதுங்கள். இது காலப்போக்கில் உங்கள் ரசனை என்ன என்பதை உங்களுக்கே காட்டும். உங்கள் ரசனை வளர்ந்து வருவதையும் உங்களால் காணமுடியும். உங்கள் ரசனைக்குரிய அளவுகோல்கள் உருவாகி வரும். உங்கள் பார்வை துலங்கி வரும்.
ஈ.வாசகனாக எப்போதும் உங்களை எழுத்தாளனை விட ஒருபடி கீழாக வைத்துக்கொள்வது இன்றியமையாதது. இன்றைய நவீன விமர்சனம் வாசகனை இணைபடைப்பாளியாக, எழுத்தாளனுக்கு நிகரானவனாக முன்வைக்கிறது. ஆனால் அது சரியான வாசிப்பை அளிக்கும் வழி அல்ல. இது சமீபமாக உருவான ஒரு அசட்டுப்பார்வை. பெரும்பாலும் கல்வித்துறை ஆய்வாளர்களால் உருவாக்கப்பட்டது. அந்த உளநிலைகளை பயின்றவர்கள் பெரும்பாலும் அசட்டு வாசகர்களாகவே இருப்பார்கள். நவீன மொழியியல் – பின்நவீனத்துவ விமர்சக வாசகனைப்போல அசட்டு வாசகனை உலக இலக்கிய மரபு ஈராயிரம் ஆண்டுகளில் கண்டதே இல்லை. இதற்கு சில உதாரணங்கள் தமிழிலும் உள்ளன.
*
ஏன் வாசகன் வாசிப்பின்போது நூலாசிரியனைவிட ஒரு படி கீழாக இருக்கவேண்டும்?
ஏனென்றால் அவன் பெற்றுக்கொள்பவன். அங்கே அவன் இடம் அதுதான். அந்த தணிவு இல்லையேல் அவனால் பெற்றுக்கொள்ள முடியாது. பெற்றுக்கொள்ள மறுத்துவிட்டு விவாதிக்க முற்படுவதுபோல அசட்டுத்தனம் வேறில்லை.
அந்த தணிவு ஏன் தேவை என்றால், அறிவாணவம் என்னும் வகுக்கமுடியாத ஒரு பெருஞ்சிக்கல் வாசிப்பின் ஊடாக வந்துவிடுகிறது என்பதனால்தான். நாம் நம் இயல்பான அறிவால் அடைந்த தன்னுணர்வு, அதுவரை நாம் வாசித்தவை ஆகியவற்றால் நமக்கு அறிவாணவம் உருவாகிவிடுகிறது. அது வாசகன் என்னும் நிலையில் நமது ஏற்புத்தகுதியை இல்லாமலாக்கிவிடுகிறது. வாசகனாக நாம் அதை ரத்துசெய்துவிட்டே வாசிக்கவேண்டும்.
ஆகவே எழுத்தாளனுக்கு ஆலோசனை சொல்லுதல், எழுத்தாளனை வழிநடத்துதல், திருத்தியமைத்தல் ஆகிய அபத்தங்களை ஒருபோதும் செய்யலாகாது. அவனுடைய எழுத்து உங்களுக்கு என்ன அளித்தது என்று மட்டும் எழுதுங்கள். என்ன அளிக்கவில்லை என்பதை கூர்ந்து கவனித்துக்கொண்டிருங்கள்.
*
ஏன் பாதித்தவை பற்றி எழுதவேண்டும்? ஏன் நம் ரசனையை நாமே வைத்துக்கொள்ளக்கூடாது? ஏனென்றால்–
1. அது சூழலில் நூல்களைப் பற்றிய பொதுவான விவாதம் உருவாக வழிவகுக்கிறது.
2. உங்கள் வாசிப்பனுபவத்தை இன்னொருவர் தன் வாசிப்பினூடாக நிரப்ப வழியமைகிறது.
3. உங்கள் எண்ணங்களைச் சீராக வெளிப்படுத்துவதன் வழியாக உங்கள் மொழியை பழக்குகிறீர்கள். மொழியைப் பழக்குவது என்பது சிந்தனையை பழக்குவதுதான். சிந்தனையை பழக்க மொழியை பழக்குவது மட்டுமே வழி.
4. உங்கள் அகநிகழ்வுகளை எழுதுவதன் வழியாக புறவயமாக ஆக்கிக்கொள்கிறீர்கள். சில அக எழுச்சிகள் எழுதும்போது குறையும், சில கூடும். அவை ஏன் நிகழ்கின்றன என்று பார்ப்பது உங்களையே பார்ப்பதற்கு நிகர்.
5. எழுதுவது உங்கள் எண்ணங்களை என்பதனால் நீங்கள் எழுதியவற்றை நீங்கள் மறக்கவே மாட்டீர்கள். அவை உங்களுக்குள் என்றுமிருக்கும்.
*
இவ்வண்ணம் எழுதி- விவாதித்து முன்செல்லும் பயணத்தில் என்றோ ஒருநாள் மெல்ல மெல்ல உங்கள் ஆளுமை உருவாகி வந்திருக்கும். நீங்கள் ஒரு விமர்சகனாக நிலைகொள்ளும் அளவுக்கு விரிந்த பின்னணி வாசிப்பும், தொடர்ச்சியான விவாதப்பயிற்சியும், தனித்த பார்வையும் உடையவராக ஆகியிருப்பீர்கள். அன்று உங்கள் குரல்பற்றி உங்களுக்கே தன்னம்பிக்கை வரும். நீங்கள் பேசினால் பிறர் கவனிப்பார்கள். அன்று விமர்சனங்களை முன்வையுங்கள்.
ஜெ