அன்புள்ள ஆசிரியருக்கு,
நீங்கள் தொடர்ந்து எழுதி உங்கள் எழுத்தால் பல்லாயிரம் வாசகர்கள் மனதில் நிலை நிறுத்தப்பட்ட மண்ணில் இருந்து நீங்கள் அன்னியமானவனாக உணர்வது என்னைப் போன்ற உங்கள் தீவிர வாசகர்களுக்கு அதே சமயம் அந்த மண்ணின் மைந்தர்களாகவும் உணர்பவர்களுக்கு வருத்தமே அளிக்கிறது. நான் மலையாளத்தில் ஒரு ஐந்து சிறு கதையாவது எழுத ஆசைப்படுகிறேன் என்று சொன்னது கூட நாஞ்சில் மண்ணைப் பற்றி தமிழில் எழுதப்பட்டுவிட்டது ஆனால் மலையாளத்தில் பெரிதாக கண்டு கொள்ளப்படவில்லை என்ற எண்ணம் எனக்கு இருப்பதால் தான். அது மண் மீதான பற்றே. எந்த கலைஞன் ஒரு மண்ணை தொடர்ந்து முன் வைத்து நிலைநிறுத்துகிறானோ அவனே அதிலிருந்து விலக்கம் கொள்வது அம்மண்ணின் சாபம் என்றே நினைக்கிறேன்.
ஆனால் இதை உங்கள் வாசகர்கள் மட்டுமே உணர்வார்கள். மற்றவர்களுக்கு ஒவ்வொரு தினமும் ஒன்றே. இருந்தாலும் தமிழ்நாட்டில் கல்வியில் சிறந்த மாவட்டமாக மார்தட்டும் கன்னியாகுமரி மாவட்டத்தில் உங்களுக்கு வாசகர்கள் குறைவு என்பது நம்பவே முடியவில்லை. இவர்கள் வெறும் பாடபுத்கங்களை மட்டும் தான் வாசிக்கிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவுறுகிறது. என் நிலைமை வேறு. வீட்டில் தொலைக்காட்சி பெட்டி இருக்காமல் அப்பா பார்த்துக் கொண்டதால் நாளிதழ் வாசிப்பு ஓவியம் அலமாரியில் இருந்த புத்தகங்களுடன் நீங்கள் அப்பாவிற்கு பரிசளித்த புத்தகம் பிறகு சென்னை வாழ்க்கை ஓவியக் கல்லூரி என்று ஆரம்பித்து இன்று வெண்முரசு வரை வந்து நிற்கிறேன்.
என்னால் துல்யமாகச் சொல்ல முடியும் கன்னியாகுமரி மாவட்ட மக்களின் வாசிப்பு பற்றாக்குறைக்குக் காரணம் தொலைக்காட்சி பெட்டி தான். இன்று அதனுடன் மிதமிஞ்சிய இணையம் மற்றும் கைப்பேசி பயன்பாடு. நான் எனக்கு பத்து வயது குறைவான என் சித்தப்பா பையன்களை பார்க்கிறேன். அவர்கள் குடும்ப வீட்டில் கூட்டுக் குடும்பமாக வாழ்கிறார்கள். அங்கே அவர்கள் பிறப்பதற்கு முன்பே தொலைக்காட்சி ஓடத்துடங்கி விட்டது. நான் அங்கே விடுமுறைக்குச் செல்லும்போது அவர்கள் பள்ளி முடித்து வந்தவுடன் டிவி பெட்டி தான் கதி என்று கிடப்பார்கள். அவர்கள் வயதுக்கு பெரும்பாலும் வரைகலைத் தொடர்கள் பார்ப்பார்கள். டிஸ்கவரி கூட அதில் ஒருவன் விருப்பத்துடன் பார்ப்பான். டியூசன் நேரம் வந்தவுடன் அம்மாக்களால் கிளப்பப்பட்டு மீண்டும் வந்தவுடன் தொலைக்காட்சி தான் உறங்கப் போகும் வரை. வாசிப்பின்பத்திற்கும் கதை கேட்கும் இன்பத்திற்கெல்லாம் வாய்ப்பே இல்லை. பெற்றோர்களுக்கு பையன்கள் வகுப்பில் முதல் பத்து இடத்திற்குள் இருந்தால் அதுவே போதும். வேறெந்த கவலையும் இல்லை.
அன்றெல்லாம் வாசிப்பின் மகத்துவத்தையெல்லாம் புரிந்து கொண்டு என் தம்பிகளுக்குச் சொல்லவேண்டும் என்றெல்லாம் தோன்றியது கிடையாது. இன்று அதைச் சொல்லிப் புரிய வைப்பது மிகக் கடினம். ஆறு ஏழு வயதிற்குள்ளேயே அஸ்திவாரம் போடப்பட்டிருக்க வேண்டும். அதற்கான சூழலை பெற்றோர்களும் ஏற்படுத்திக் கொடுத்திருக்க வேண்டும். சென்னையில் என் மேல் மாடியில் இருக்கும் பத்து வயதிற்கும் குறைவான சிறுவனுக்கு தும்பி இதழை வாங்கிக் கொடுத்து வாசிப்பை பழக்கப்படுத்தலாம் என்று நினைத்தாலும் ஏற்கனவே ‘கார்டூண்கள்’ பழகிவிட்டதனால் இயல்பாக கதை புத்தகம் கூட அவனால் வாசிக்க முடியவில்லை.
ஆனால் தொலைக்காட்சி கேரளாவிலும் தான் பார்க்கிறார்கள். அங்கே இலக்கிய வாசகர்கள் நிறைய இருக்கிறார்களே? கம்யூனிஸ்ட் இயக்கங்களின் பாதிப்பு கேரளாவைப் போல கன்னியாகுமரி மாவட்டத்தில் குறிப்பாக கல்குளம் விளவங்கோடு தாலுக்காவிலும் இருந்ததால் வாசிப்பவர்கள் இருப்பார்கள் என்று நினைத்தேன். வாசிப்பவர்கள் இருந்தால் உங்களையும் வாசிக்காமல் இருந்திருக்க மாட்டார்கள். மதவெறி அங்கே உருவானதும் கம்யூனிசம் இல்லாமல் ஆகிவிட்டது என்று நினைக்கிறேன். அத்துடன் வாசிப்பும் நின்றுவிட்டிருக்க வேண்டும்.
உங்கள் எழுத்து மூலமாகவே என் மண்ணை(எனக்கு சென்னையும் கூட இப்போது என் மண் தான். இதுவரையான வாழ்க்கையின் மூன்றில் ஒன்றை இங்கே கழித்தாகிவிட்டது. நாஞ்சில்நாடு பெற்றத்தாய் என்றால் சென்னை வளர்ப்புத்தாய்) கனவு காணப் பழகிய எனக்கு இப்போது நீங்கள் மண்ணிலிருந்து விலகியவுடன் உங்களை வாசிக்கும் எனக்கும் அவ்விலக்கம் சிறிதளவேனும் ஏற்பட்டுவிடுமோ என்று ஐயமடைகிறேன். இவ்வருடம் நானும் ஊருக்குச் சென்றது குறைவு. நான் ஊரில் இருந்த நாட்களை விட உங்களுடன் ஈரோடு புதிய வாசகர் சந்திப்பிலும் ஈரட்டியிலும் இருந்த நாட்கள் தான் எனக்கு மனதிற்கு இனியன.
உங்கள் நிறைவிற்கு எந்த முடிவெடுத்தாலும் அதனுடன் நிற்பது தான் நாங்கள் செய்யவேண்டியது. இன்னும் தெளிவாகச் சொல்லப்போனால் அந்த மண்ணைக் கொண்டு நீங்கள் சமைத்த கனவுகளும் அதை விட நீங்களும் தான் எனக்கு முக்கியம்.
ஜெயராம்
அன்புள்ள ஜெயராம்
இதில் வருந்த ஏதுமில்லை. ஒருவர் தன்னுடைய இடமென பிறந்த ஊரையே கொள்ளவேண்டுமென ஏதுமில்லை. பெரும்பாலானவர்கள் இன்னொரு இடத்தை கண்டுகொண்டவர்கள்தான்
ஜெ
அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு ,
உங்களை “விஜி வரையும் கோலங்கள்” நிகழ்ச்சியின் முடிவில் சந்தித்து கையெழுத்து வாங்கியது மிகுந்த மகிழ்ச்சி அளித்தது. நான் தொடர்ந்து 6 ஆண்டுகளாக உங்கள் புத்தகங்கள் மற்றும் கட்டுரைகளை தொடர்ந்து வாசித்து வருகிறேன். உங்கள் பயணக்குறிப்புகள் பலவற்றை பின்பற்றி அந்த இடங்களுக்கு பயணித்துள்ளேன். குறிப்பாக ஒடிசா மற்றும் லடாக் பயணம் என் வாழ்க்கையின் மிக அற்புதமான அனுபவங்களாய் அமைந்தன.
உங்கள் பயணக்கட்டுரைகள் மேல் உள்ள ஈர்ப்பினால் நானும் என் பயண அனுபவங்களை “blog”இல் பதிவிட்டுவருகிறேன். சச்சின் விளையாடுவதை பார்த்து தெருவில் கிரிக்கெட் விளையாடுவது போல என்று சொல்லலாம் :) மேலும் உங்கள் உரைகளின் வாயிலாக பிற சிறந்த ஆளுமைகளையும் அறியும் வாய்ப்பு அமைந்தது. Carl Sagan பற்றி நீங்கள் நாகர்கோயிலில் ஒரு உரையில் சொல்லியதன் மூலமாக நான் அவரது “Contact” நாவலையும் “Cosmos” தொடரையும் அடைந்தேன். அவர் மூலமாக Neil De Grasse Tyson, Michio Kaku, V S Ramachandran போன்றவர்களின் புத்தகங்களை வாசிக்க நேர்ந்தது.
“போரும் வாழ்வும்” மற்றும் “புயலிலே ஒரு தோணி” ஆகிய நூல்களையும் உங்கள் உரைகளின் வாயிலாகவே நான் சென்றடைந்தேன். உங்களது “இன்றைய காந்தி” புத்தகமும் காந்தி பற்றிய பிற உரைகளும் எனக்கு காந்தி மீது பெரும் பக்தி மற்றும் மதிப்பை ஏற்படுத்தியது. நாம் நம்பும் விஷயத்திற்காக தொடர்ந்து பணியாற்றவும் மாற்று கருத்துக்களை வெறுப்பின்றி ஆராயவும் அவை கற்றுத்தந்தன.
உங்களது 10 அறைவுரைகளின் படி தினமும் குறைந்தது 1 மணி நேரம் படித்து வருகிறேன். உங்கள் புனைவுகளின் வாயிலாக மிக நுட்பமான அனுபவங்களை உணரச்செய்ததற்கும் பிற ஆளுமைகளை அறிமுகம் செய்வதன் மூலம் வாழ்க்கையின் பல்வேரு தளங்களை அறியச்செய்ததற்கும் மிகவும் நன்றிகள். நான் அவ்வப்போது பார்வதிபுரம் பகுதிக்கு சைக்கிளில் வரும்போது உங்களை பார்ப்பேன். பேசலாம் என்று நினைத்து பிறகு பயந்து விட்டுவிடுவேன்.
நாகர்கோயிலில் இனி நிகழ்ச்சிகளில் பங்கேற்க போவதில்லை என்ற உங்கள் அறிவிப்பு வருத்தத்தை அளிக்கிறது.
அன்புடன்
கார்த்திக்
அன்புள்ள கார்த்திக்,
நீங்கள் தொடர்ச்சியாக வாசிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. வாசிப்பும் விவாதமும் இணையாகவே நிகழும்போதுதான் அதன் உண்மையான பயன் அமைகிறது. இணையத்திலோ அல்லது நேரிலோ பிணக்கின்றி, அரசியலின்றி விவாதிப்பதற்கான நண்பர்களை கண்டடையுங்கள்.
சந்திப்போம்
ஜெ