இசை, நீடிக்கும் விவாதம்

ஆபிரகாம் பண்டிதர்

து.ஆ.தனபாண்டியன்

ஜெ..

 நம்ப மாட்டீர்கள். இதற்கான பதில் உங்களிடம் இரூந்து வரும் என்று இரவு 1.30 மணிக்கு எழுந்து இணையத்தில் வந்து படிக்கிறேன்.

 எனக்குச் செவ்வியல் இசை ஆர்வம் எனது முயற்சியினால் வந்ததே. சங்கராபரணம் என்னும் சினிமா உண்டாக்கிய ஆர்வம்.  உண்ணியையும், அருணா சாயிராமையும் டி.எம் கிருஷ்ணாவையும் கேட்டுக் கேட்டுத்தான் என் ஆர்வத்தை வளர்த்துக் கொண்டேன்.. உண்ணியின் ராம தரிசனம் என்னும் semi classical collection எனது top choice – முழுவதும் தெலுங்குப் பாடல்களே.அது உணர்வு பூர்வமானது. எனது வாதம் தாழ்வுணர்வு சார்ந்ததல்ல. தமிழில் பாடினால்தான் தமிழிசை என்றும் சொல்ல வரவில்லை. அங்கே தமிழின் பங்களிப்பும் அதன் முக்கியத்துவமும் மறைக்கப் படுகிறது என்பதே என் வாதம். அது தாழ்மையுணர்ச்சி என்று நீங்கள் கருதினால், அங்கனமே இருக்கட்டும். அதிலுள்ள சாதி அரசியல்களை நாம் நேரில் பேசுவோம். என்னால் முடிந்தது ஒரு சாதரண ரசிகனாக நல்ல பாடல்களைக் கேட்பது மட்டும் தான் –

 பரதம் என்னும் கலை செவ்வியல் கலையாக உருவெடுத்தது போல், நாட்டார் கலைகளில் இருந்து சில வடிவங்கள் செவ்வியல் கலைகளாக உருவெடுக்கும் சாத்தியங்கள் இருக்கலாமல்லவா?? கதகளியும் யக்ஷ கானமும் போல், நம் ஊர்க் கூத்தும் ஒரு நாள் வெளிச்சம் பெறலாமல்லவா? நான் ஐரோப்பாவில் சில வணிக சந்தைகளுக்குப் போயிருக்கிறேன் – அங்கே மிகச் சிறிய நாடுகள் பல தத்தம் குழுக்களோடு அங்கே உள்ள சில கிராமிய நடனங்கள் நடத்துவார்கள் – அதற்கு அரசுகளின் ஆதரவும் உண்டு. நாட்டார் கலைகளை நகருக்கு எடுத்து வந்து அதை மக்களுக்கு காண்பிக்கும் முயற்சியில் இன்னும் ஓரிரு தலைமுறைகள் அக்கலை உயிர் வாழும் சாத்தியங்கள் உண்டல்லவா?? குற்ற உணர்ச்சியோ என்னவோ இருந்தால் என்ன, பல லட்சம் மக்கள் அதைப் பார்க்கிறார்கள் அல்லவா??  நான் இரண்டு நாட்கள் வெங்கட் நாராயணா தெருவில் நடந்த நிகழ்ச்சிகளுக்குச் சென்றேன் – அவை ஒரு செவ்வியல் நிகழ்வுகள் அல்ல – ஆனால் அவற்றில் மக்களின் பங்கேற்ற விதம் மிக அதிசயமாக இருந்தது.அது மிக மேம்போக்கான பொழுது போக்கென்றே வைத்துக் கொண்டாலும், நெடுந்தொடர்களைப் பார்ப்பதை விடவும் அச்சுப் பிச்சு மேடை நாடகங்களைப் பார்ப்பதை விடவும் அது மேலல்லவா?? இப்படிக் கலைகள் தமிழகத்தில் உள்ளன என்ற ஒரு அறிமுகம் இன்றைய தலைமுறைக்குத் தேவையல்லவா??  சினிமாவைப் பார்த்து, செவ்வியல் சங்கீதத்துக்கு வந்த என் போன்ற சிலர் இருக்கலாமல்லவா?? பெரும்பாலான மக்கள் செவ்வியல் வடிவங்களை ரசிக்கும் சாத்தியங்கள் குறைவு. எனவே சாதாரண மக்கள் ரசிக்கும் கலைகளும் தேவையென்பது என் கருத்து. அம்முயற்சிகளை வரவேற்கலாம். தமது அரசியல் செல்வாக்கை நல்ல விஷயங்களில் செலவளிக்கும் கனிமொழி போன்றவர்களை வரவேற்று, அந்நிகழ்வுகளை மேம்படுத்த உற்சாகமும் ஆலோசனைகளும் உதவிகளும் வழங்குவது முன்னோக்கிய அணுகுமுறை என நினைக்கிறேன். நான் எழுத ஆலோசனை கேட்ட போது நீங்கள் எழுதிய பதில் நினைவுக்கு வருகிறது.

 

பதில் எழுதியதற்கு நன்றி

 

அன்புடன்

 

பாலா

 

அன்புள்ள பாலா,

நான் சொல்லவேண்டிய தரப்பை முழுமையாகவே சொல்லிவிட்டேன். நாட்டார்கலைகள் பேணபப்டவேண்டுமென்பதில் எனக்கு மாற்றுக்கருத்தே இல்லை. அவை உண்மையில் ரசிக்கப்படுகின்றனவா, இன்றைய பண்பாட்டின் பகுதிகளாக இருக்கின்றனவா என்பதே என் வினா.
நல்ல விஷயம்தான். சென்றகாலங்களில் நாட்டார் கலைஞர்களை சாதி ரீதியாகவும் அவமதித்து புறந்தள்ளி அவற்றை மெல்லமெல்ல அழியவிட்டமைக்கு இடைநிலைச் சாதிகள்தான் காரணம். இன்று இதற்காவது பிரரை பழிசாராமல் அவர்கள் கழுவாய் தேடிக்கொள்வார்களென்றால் அது ஒரு மாபெரும் பண்பாட்டு மாற்றமே
ஜெ

 

மரபிலக்கியம் ஒரு கடிதம்

 

முந்தைய கட்டுரைசங்க இலக்கியம்:கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்திய சிந்தனை மரபில் குறள் 4