பழைய திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் போலீஸ் துறையிலும் பின்னர் சிறைத்துறையிலும் வேலைபார்த்த என் தாத்தா என்.கே.தாணப்பன் பிள்ளை முறையாக ஓய்வுபெறவில்லை. அதை எனக்கு அவரேதான் சொன்னார். அவருக்கு ஓய்வூதியம் இல்லை. திருவிதாங்கூர் இல்லாமலாகி, தமிழகம் உருவாகும்போது அவருக்கு ஐம்பது வயதுதான். அப்படியென்றால் மேலும் பத்தாண்டுகள் சுதந்திர இந்தியாவின் அரசு ஊழியராக பணியாற்றியிருக்க முடியும்.
நானும் என் அப்பாவைப்போல 1956ல் மாநிலப்பிரிவினையின்போது பழைய திருவிதாங்கூர் ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டார்கள், தாத்தாவும் வேலையை இழந்தார் என்றே நம்பியிருந்தேன். அது எப்படிச் சாத்தியமென்று யோசித்ததே இல்லை. பொதுவாக நாம் பழைய தலைமுறை பற்றி அவ்வளவாக யோசிப்பதில்லை. ஆகவே அவர்கள் ஓயாமல் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். ஓயாமல் சொல்லப்படுவதனாலேயே நாம் செவிகொடுப்பதில்லை.
தாத்தா திருவனந்தபுரம் சிட்டி கார்ட்ஸ் நாயர் பிரிகேடில் ஹெட்கான்ஸ்டபிளாகவும், அதன்பின்னர் ஐந்தாண்டுகள் சப்இன்ஸ்பெக்டர் ராங்கில் சிறையில் ஸ்பெஷல் வார்டர் ஆகவும் பணியாற்றினார். வார்டராக பணியாற்றிய காலத்தில் அவர் ஒரு முக்கியமான குற்றத்திற்காக சஸ்பெண்ட் செய்யப்பட்டு பின்னர் பதவிநீக்கம் செய்யப்பட்டார். ஆனால் அவர் அதை வெளியே சொல்லவில்லை. 1948ல் நிகழ்ந்த மொத்தக்குளறுபடிகளில் ஒன்றாக தன் வேலையிழப்பையும் ஆக்கிக்கொண்டார். முறையாகப் பதவி ஓய்வு பெற்றதாகவே நாற்பதாண்டுக்காலம் சொல்லிக்கொண்டிருந்தார்.
அவர் உண்மையைச் சொல்ல நேர்ந்த சந்தர்ப்பம் ஒன்று அமைந்தது. அவருடைய நண்பரும், அவருடன் சேர்ந்து வேலையிழந்தவருமான ஆர்.கே.கருணாகரக் கைமளின் மகன் ஆர்.கே.அச்சுதன் அவரைப் பார்க்க எங்கள் ஊருக்குத் தேடிவந்திருந்தார். அவர் கேரளக் காவல்துறையில் டி.ஐ.ஜியாக இருந்தார். தாத்தா உயிருடனிருக்கும் செய்தியை எங்கள் பக்கத்துவீட்டில் குடியிருந்த கேரளச் சிறைத்துறை ஊழியர் அப்துல் வகாப் வழியாக அறிந்து பரிசுப்பொருட்கள் பழங்களுடன் வந்தார். அவர் சின்னக்குழந்தையாக இருக்கும்போது அப்பா அவர் வீட்டுக்கு அடிக்கடிச் செல்வதுண்டு. அவரை சைக்கிளில் அமரச்செய்து திருவனந்தபுரம் நகரைச் சுற்றிக் காட்டியிருக்கிறார். திருவனந்தபுரம் மிருகக்காட்சிச்சாலைக்கு அவரைக் கூட்டிச்சென்றதே தாத்தாதான் என்று சொன்னார்.
அவரைச் சந்தித்தது தாத்தாவையும் நெகிழச்செய்தது. கண்ணீர் வழிந்து கொண்டே இருந்தது. பொதுவாகவே தாத்தா வயதானபின் எதற்கெடுத்தாலும் கண்ணீர் விடுபவராக ஏற்கனவே மாறியிருந்தார். அவருடைய கைகளைப் பற்றிக்கொண்டு நெடுநேரம் நினைவுகளைப் பேசிக்கொண்டிருந்தார். தாத்தாவுக்கு நினைவுகள் தெளிவாக இருந்தன. பல் நன்றாக இருந்ததனால் துல்லியமாகப் பேசவும் முடிந்தது. அந்தப் பேச்சின் நடுவில்தான் ஆர்.கே.அச்சுதன் நான் மெல்லிய அதிர்ச்சியை அடைந்த செய்தியைச் சொன்னார். அவருடைய அப்பாவும் என் தாத்தாவும் ஒரே உத்தரவால் வேலையை இழந்திருக்கிறார்கள். வேலையிழப்பை தாங்கிக்கொள்ள முடியாத அவருடைய அப்பா பத்து மாதங்களுக்குள் நெஞ்சடைப்பில் உயிரிழந்தார்.
நான் ஒன்றையும் காட்டிக்கொள்ளவில்லை. அவர் போனபின் தாத்தாவிடம் கேட்டேன், அது உண்மையா என்று. தாத்தா அப்போது பேச்சு மிகக்குறைந்து பெரும்பாலான பொழுதுகளில் அமைதியாக இருக்கப் ஆரம்பித்துவிட்டிருந்தார். அது உயிரின் தீ அணைவது என்று அப்போது தெரிந்திருக்கவில்லை. ஆறுமாதம் கழித்து தாத்தா தூக்கத்திலேயே உயிர்விட்டார். அப்போது அவர் சமகால நினைவுகளை கோக்க முடியாதவராக இருந்தார். காலையுணவு சாப்பிட்டோமா என்று நினைவிருப்பதில்லை. பேரப்பிள்ளைகளின் பெயர்கள் நினைவில் எழவில்லை. எந்த ஊரில் இருக்கிறோம் என்பதே கூட சரியாக ஞாபகம் வரவில்லை. ஆனால் பழைய நினைவுகள் மேலும் கூர்மைபெற்றிருந்தன. காட்சித்துல்லியத்துடன் அவற்றைச் சொன்னார்.
அவரும் பாட்டியும் முதன்முதலாக திருவனந்தபுரம் ஆறாட்டு பார்த்த அந்த வருடம்தான் அங்கே ஆட்டுமணி அரண்மனை முகப்பில் அமைக்கப்பட்டது என்றார். அன்று பாட்டி அணிந்திருந்த சேலை இளஞ்சிவப்பு நிறம் என்பதுகூட ஞாபகமிருந்தது, அன்றெல்லாம் வண்ணச்சேலைகளை கேரளப்பெண்கள் அணிவது மிக அபூர்வம். பாட்டி அன்றுதான் முதன்முதலாக உணவு விடுதியில் சாப்பிட்டார். அது ஒரு நாயர் பெண்மணி கரமனை ஜங்ஷனில் நடத்திவந்த கஞ்சிக்கடை. சம்பா அரிசிக் கஞ்சிக்கு பலாக்காய் அவியலும் ஊறுகாயும் அளிக்கப்பட்டது.
ஆனால் நான் நினைத்ததுபோல தாத்தா தன் நினைவுகளில் மூழ்கி அமர்ந்திருக்கவில்லை என்பதை அவர் பேசப்பேச கண்டுபிடித்தேன். நினைவுகளை தூண்டினால்தான் அவை ஒன்றிலிருந்து ஒன்றாக கிளம்பி வந்தன. அவ்வாறு வரும் நினைவுகளுக்கும் எந்தத் தொடர்ச்சியும் இருக்கவில்லை. ஏதாவது மறைமுக தொடர்பு இருக்கும் நினைவுகளாக இருக்கலாம். சொல்லச் சொல்லத்தான் அவை உருவாயின. சொல்லாதபோது அவர் மனம் ஒழிந்து கிடந்தது. சொல்லோ சித்திரமோ இல்லாத வெற்றுவெளியாக. உள்ளத்தை இயக்கவும் ஆற்றல் தேவைப்படுகிறது. அவருடைய உயிராற்றல் திரிதாழ்ந்து மிகமிக மங்கலாக எரிந்துகொண்டிருந்தது.
நான் அவரிடம் அவர் ஏன் வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்று கேட்டேன். அவர் என் கேள்வியை என்னவென்றே தெரியாமல் நெடுநேரம் வெறித்துப் பார்த்தார். பலமுறை கேட்டபின்னரே அவருடைய ஆழத்திலிருந்து நினைவுகள் எழுந்துவந்து அந்தக் கேள்வியைச் சந்தித்தன. உண்மையில் நாற்பதாண்டுகளாகச் சொல்லிவந்ததை தாத்தா அவரே நம்பிவிட்டிருந்தார். அவர் அதைச் சொல்லிச் சொல்லி, உள்ளத்தில் நிகழ்த்தி நிகழ்த்தி, அவருக்கு உண்மையில் நடந்தவை கனவாக மாறி உள்ளே நகர்ந்துவிட்டிருந்தன. அவருடைய உள்ளத்தின் விசை அழிந்திருந்தமையால்தான் உண்மையை அவர் சொன்னார். இல்லாவிட்டால் அவருடைய கூர்மையான உள்ளம் புனைந்ததையே உண்மையென முன்வைத்திருக்கும்.
“எல்லாம் பேய்… பேய் என்று சொன்னால் ஒரு உக்கிரமான பேய்” என்றார்.
நான் முதலில் சலிப்புற்றேன். கதைவிடப்போகிறார் என்று தோன்றியது. ஆனால் நினைவுகளை தொகுத்து கவ்வி இழுத்துவரப் போவது எது என்று சொல்லமுடியாது. அது ஒரு படிமம். ஆனால் அது இன்றைய மொழி. அன்றெல்லாம் அவை புழங்கும் உண்மைகள். தெய்வங்களும் தேவர்களும் நீத்தாரும் பேய்களும் பிசாசுக்களும் மனிதர்களுடன் புழங்கிய காலகட்டம்.
[ 2 ]
தாத்தா சொன்னார். நான் திருவனந்தபுரம் மத்தியச் சிறைச்சாலையில் வேலைசெய்த காலம். என் கண்காணிப்பில் இருந்த சாமிநாத ஆசாரி என்ற இளைஞனை தூக்கிலிட்டார்கள். திருவிதாங்கூர் ஆவணங்களின்படி கடைசியாகத் தூக்கிலிடப்பட்டவன் அவன்தான். மனைவியை கற்பழித்த உள்ளூர் நிலப்பிரபுவை கொலைசெய்த குற்றம். அவனுடைய கடைசிநாட்களில் நான் அவனுடன் இருந்தேன். அவன் இனிமையான மகிழ்ச்சியான இளைஞன். கடைசி ஆசை என்று ஒரு ஆடு வாங்கிவரச்செய்து சிறையில் இருந்த அனைவருக்கும் விருந்து வைத்துவிட்டு தூக்கிலேறினான்.
அவன் போனபின் ஒரு மாதம் சிறையே சோர்ந்துபோயிருந்தது. அவன் நினைப்பை பேசிக்கொண்டே இருந்தனர். அவன் கடைசியாகப்போட்ட அந்த விருந்தில் அத்தனை பேருமே சாப்பிட்டிருந்தனர். ஆகவே அவன் தங்களுடனேயே இருப்பதாக அனைவரும் உணர்ந்தனர். ஆனால் சிறை என்பது ஒரு கொந்தளிப்பான இடம். அதுவும் 1946 என்பது நாள்தோறும் ஏதோ நடந்துகொண்டிருந்த காலகட்டம். சீக்கிரமே புதிய கைதிகள் வந்தனர். அவர்களில் பாதிப்பேர் அரசியல் கைதிகள். சிறைக்குள் அவர்கள் எதிர்ப்புக் கலவரம் செய்ய நாங்கள் அவர்களை அடித்து ஒடுக்கினோம்.
அதன்பின் காங்கிரஸ் தலைவர்கள் கேளப்பன், ஏ.கே.கோபாலன், கே.பி.கேசவமேனன் ஆகியோர் ஜெயிலுக்கு வந்தனர். ஜெயிலுக்குள் ஒரு வகையான அரசாங்கமே உருவானது போலிருந்தது. ஜெயிலுக்குள் பாரதமாதாகீ ஜே, இங்குலாப் சிந்தாபாத் எல்லாம் சாதாரணமாக ஒலிக்க ஆரம்பித்தது. ஜெயிலர்களுக்கே அரசியல் கைதிகள் மேல் மரியாதை வர ஆரம்பித்தது. ’ஒருவேளை சுயராஜ்யம் கிடைத்தால் இவர்கள் நம் எஜமானர்களாக வந்தாலும் வருவார்கள்’ என்று ஜெயிலர் குட்டப்பன் பிள்ளை சொன்னதும் நாங்களெல்லாம் சிரித்தோம். ஆனால் அது எல்லாருக்கும் உள்ளூர நடுக்கத்தை உருவாக்கியது.
ஆகவே நாங்கள் கைதிகளை அடிப்பதை நிறுத்திக்கொண்டோம். அவர்களை நாங்கள் அடிக்காமலானபோது அந்தச் சிறிய இடத்தில் அத்தனைபேரை அடைத்து வைக்கமுடியவில்லை. தண்ணீர் இல்லை. கழிப்பறை இல்லை. போர்வைகள் சட்டைகள்கூட இல்லை. ஆகவே அவர்கள் எப்போதும் சண்டை போட்டார்கள். நாங்கள் அவர்களை கெஞ்சிக் கெஞ்சி சமாதானம் செய்யவேண்டியிருந்தது. கொஞ்சம் கொஞ்சமாக நாங்கள் அந்த தலைவர்களுக்கான வேலைக்காரர்களாக மாறினோம். எல்லாம் நாள் நாள் என நடந்தன. ஒருமாதம் கழித்து தூக்கிலேற்றப்பட்ட சாமிநாத ஆசாரி முழுக்கவே நினைவிலிருந்து மறைந்துபோனான்.
எனக்கு எங்கள் ஜெயிலின் ஸ்டோர் அறைமேல் ஓர் ஈடுபாடு உண்டு. இருட்டான அறை. உடைந்த பழைய சாமான்கள் நிறைந்து கிடக்கும். அரசாங்கத்தில் ஒரு பொருளை தூக்கிப்போடுவதென்றால்கூட ஏராளமான சட்டச்சடங்குகள் உண்டு. அதற்குச் சோம்பல்பட்டுக் கொண்டு எல்லாவற்றையும் இருட்டு அறைகளில் குவித்துப் போடுவார்கள். அந்த அறையில் என்னென்னவோ பொருட்கள் இருந்தன. பழைய பல்லக்குகள், உடைவாட்கள், ஈட்டிகள், தலைக்கவசங்கள், குதிரைச்சேணங்கள். ‘சென்ற கால வரலாறே உடைசல்களாக உள்ளே இருக்கிறது’ என்று ஜெயிலர் கட்டமம் வர்கீஸ் தாமஸ் மாப்பிள்ளை சொல்வதுண்டு.
நான் நினைத்துக்கொண்டேன். சுயராஜ்யம் கிடைத்தால் பழைய திருவிதாங்கூரையே அப்படி தூக்கி ஏதாவது இருட்டறைகளில் வைக்கவேண்டியிருக்கும். ஆயிரமாண்டுக்கால வரலாறு. எத்தனை கொலைகள், எத்தனை அநீதிகள், எத்தனை தோல்விகள், எத்தனை பேரழிவுகள். அரியகணங்களும் உண்டு. வெற்றிகள், சாதனைகள், மங்கலங்கள், விழாக்கள். அவற்றை மட்டும் கோத்துக்கொண்டு மெல்ல மெல்ல இன்னொரு வரலாற்றை உருவாக்கிக் கொள்ள வேண்டியதுதான். அவற்றை கொண்டு சென்று முகப்பில் அலங்காரம் செய்து நிறுத்தவேண்டியதுதான்.
ஜெயிலில் பெரும்பாலானவர்கள் அந்த அறையை நெருங்க மாட்டார்கள். வர்கீஸ் மாப்பிள்ளையே என்னைத்தான் அழைப்பார். உள்ளே இருட்டும், ஒட்டடையும், புழுதியும், களிம்பும், துருவும், மட்கும் துணிகளும், எலிப்புழுக்கைகளும் கலந்த மூச்சடைக்கவைக்கும் நெடி. அங்கே இருக்கையில் நான் மண்ணுக்கு அடியில் ஆழத்தில் புதைந்து போய்விட்டிருப்பேன். காலமே தெரியாது. மூச்சுத்திணறல் தாங்க முடியாமலாகும்போதுதான் வெளியே வருவேன். எனக்கு அது அந்தக் கட்டிடத்தின் மலக்குடல் என்று தோன்றுவதுண்டு.
அந்த அறைக்கு உள்ளே சென்று மீளும்போது சமகாலகட்டத்தில் இருந்து எங்கோ ஒரு கனவுக்குள் சென்று திரும்பி வருவதுபோன்ற உணர்வு. தேவையில்லாமல் கூட அதை அடிக்கடி திறந்து உள்ளே இருக்கும் பொருட்களை எடுத்துக் கொண்டு வந்து அவை என்ன என்று பார்ப்பேன். கைநகங்களை பிடுங்கி எடுக்கும் குறடுகள், கொத்துக் கொத்தாக முடியை பிடுங்கி எடுக்கும் இடுக்கிகள், பற்களை இடுக்கி பிடுங்கி எடுக்கும் நெம்புகோல் போன்ற கருவிகள், பழுக்கக் காய்ச்சி உடலில் விதவிதமான முத்திரைகளைச் சூடுவைக்கும் இரும்பு அச்சுக்கள், பலவகையான சவுக்குகள், சவுக்காக பயன்பட்ட திரச்சிமீன் வால்கள் என ஏராளமான சித்திரவதைக் கருவிகள்.
ஒருகாலத்தில் சிறை என்பது வெறுமே அடைத்துவைக்கும் இடம் அல்ல, சித்திரவதைதான் முக்கியமாக நடந்திருக்கிறது. ஏனென்றால் அன்றெல்லாம் சாவு மிக எளிதானது. படைவீரனும் சாகத்தான் போகிறான். ஆகவே துளித்துளியாகச் சாகச்செய்தனர். உடலில் எழும் வலி எத்தனை ஆழமான நம்பிக்கையாலும் எத்தனை தீவிரமான பற்றினாலும் எவ்வளவு பெரிய துணிவாலும் எதிர்கொள்ளத்தக்கது அல்ல. அது ஓர் இயற்கை நிகழ்வு. அதை வெல்லவே முடியாது. எதிர்கொள்ள முயன்று மெல்ல மெல்ல பணிந்துவிட வேண்டும்.
சித்திரவதை நம்மை வெறும் உடலாக ஆக்குகிறது. வெறும் மிருகமாக ஆக்குகிறது. இல்லை நான் மனிதன், நான் சிந்தனையாளன், நான் புரட்சியாளன், நான் நிரபராதி என்று சொல்லிக்கொண்டே இருக்கலாம். ஓர் எல்லைவரை. அதன்முன் தன் உள்ளத்தை கைவிடுகிறது உடல். வெறும் சதையென எலும்பென நரம்பென ஆகிவிடுகிறது. மிருகம்போல் ஊளையிடுகிறது, புழுப்போல நெளிகிறது. பரிதாபகரமான உடல், அருவருப்பான ஒரு பொருள் அது. எத்தனை பார்த்திருக்கிறேன் இந்தச் சிறையில்.
எத்தனை வகையான சித்திரவதைகள். வதைக்கருவிகளில் கைகால்களை சேர்த்துப் பிணைக்கும் கிட்டிகள், தோலை உரிக்கும் மீன்செதில்கள், ஆளை சிலுவை வடிவில் இழுத்து அந்தரத்தில் நிறுத்தும் கொத்தாளங்கள், கைகால்களை முறுக்கி முறுக்கி எலும்புகளை ஒடிக்கும் முறிக்கைகள் போன்றவை மூர்க்கமானவை. இன்னும் நுட்பமான சித்திரவதைக் கருவிகள் உண்டு. அவை எப்படி பயன்படுத்தப்பட்டன என்று கண்டுபிடிப்பதே பெரிய கற்பனை தேவையாகும் பணி. நான் அதைக் கற்பனை செய்யும்போது ஒருவகையான உடல்கூசும் பரவசத்தை அடைந்தேன். பல்லால் மின்சாரக் கம்பியை கடிப்பதுபோல ஓர் அனுபவம்.
பெரிய புனல் போன்ற இரு இரும்புப் பாத்திரங்கள் ஒரு சித்திரவதை கருவி. அவற்றின் கூர்முனைகளை அசையாமல் கட்டிப்போடப்பட்ட கைதியின் இரு காதுகளிலும் பொருத்துவார்கள். அவற்றின் அகன்ற வாயின் அருகே வெண்கலத்தாலான தட்டுமணிகள் கட்டித்தொங்கவிடப்படும். அவற்றை மெல்ல தட்டிக்கொண்டே இருப்பார்கள். அவற்றின் ரீங்காரம் அவன் செவிகளில் பலமடங்கு கார்வையுடன் முழக்கமிடும். அப்படி பல நாட்கள். பெரும்பாலானவர்கள் செவி அடைந்து பைத்தியமும் ஆகிவிடுவார்கள்.
அதேபோலவே கண்களை அகற்றி விழிகளுக்கு முன் லென்ஸ்களை நிறுத்தி அப்பால் மிகப்பெரிய வெளிச்சத்தைப் பீய்ச்சுவார்கள். வெளிச்சம் பலமடங்காக கண்களுக்குள் செல்லும். குருடாகிவிடுவார்கள். மிகநீளமான மோர்ஸிங் போன்ற ஒரு கருவியை பற்களால் கடிக்கவைத்து அதை சுண்டிக்கொண்டே இருக்கும் ஒரு சித்திரவதை உண்டு. தலையின் எலும்புகள் வழியாகச் செல்லும் அந்த ஒலியதிர்வு மூளையை கலங்கடித்துவிடும்.
நான் சித்திரவதை செய்பவன் அல்ல. என்னால் எந்த வன்முறையையும் நேருக்குநேர் பார்க்கமுடியாது. நான் காவல்துறைக்கு பொருத்தமானவனே அல்ல. இருந்தாலும் ஏன் அவற்றை பார்த்தேன்? என்னுள் இருந்த தாழ்வுணர்ச்சியாலா? அல்லது மறைமுகமான வன்முறை வெறி எனக்குள் இருந்ததா? எனக்கு இன்றும்கூட தெரியவில்லை. ஆனால் அந்த கொந்தளிப்பான காலத்தை அப்படியெல்லாம்தான் கடந்துவந்தேன்.
[ 3 ]
ஒருநாள் அந்த ஸ்டோர் அறையைத் திறந்தபோது உள்ளே எவரோ நிற்பதை உணர்ந்தேன். பயந்து நடுநடுங்கி வெளியே பாய்ந்து விட்டேன். துள்ளி துள்ளி அதிர்ந்த என் உடல் மெல்ல அமைதியடைந்தபிறகு கையில் இருந்த விளக்கை உள்ளே நீட்டி அது என்ன என்று பார்த்தேன். அது மனிதன் அல்ல, ஒரு பொம்மை. துணிப்பொம்மை. ஆனால் உள்ளே சட்டகம் இருக்கவேண்டும். விரைப்பாக நின்றது. சுவரில் சாய்த்து வைக்கப்பட்டிருந்தது. ஒரு மனிதனை விட கொஞ்சம் பெரியது. ஆறடி உயரம் இருக்கலாம். முகமோ கண்களோ வாயோ கிடையாது. தலை ஓர் உருளை. கைகால்கள், உடல், அவ்வளவுதான்.
உள்ளே போய் அது என்ன என்று பார்த்தேன். அதை தூக்கமுயன்ற போது திடுக்கிட்டேன். அது நல்ல எடை இருந்தது. ஒரு பருத்த மனிதனின் எடை. கிட்டத்தட்ட எண்பது கிலோ. நான் தூக்கமுயன்றபோது அசைந்து சரிந்தது. அதை நன்றாகப் பார்த்துவிட்டு நான் தேடிச்சென்ற பழைய ஒரு தோல் சேணத்தை எடுத்துக்கொண்டு வெளியே வந்தேன். வெளியே அமர்ந்துகொண்டபோது என் உடல் பதறிக்கொண்டிருந்தது. என்னை நான் சொற்களை கோத்து அமைத்து என் உள்ளமென அவற்றை ஆக்கி தேற்றிக்கொள்ள வேண்டியிருந்தது.
மீண்டும் உள்ளே சென்று அதை நன்கு ஆராய்ந்தேன். அது நன்றாகப் பருத்த ஒரு மனிதனின் உடலளவே எடைகொண்டது. நன்கு வளர்ந்த ஒரு மனிதனின் உடல் அளவு கொண்டது. மனிதனைப்போல செங்குத்தாக நின்றிருந்தது. இரும்பாலான சட்டகம் மேல் துணியைச் சுற்றி அதை உருவாக்கியிருந்தனர். எடைக்காக உள்ளே கற்கள் வைக்கப்பட்டிருக்கலாம். வயிறு -நெஞ்சுக் கூடுக்குள் அக்கற்கள் இருந்தன. ஆகவே சற்றே அசைத்தாலும் அது மேல்பகுதி எடையுடன் சரிந்து மண்ணில் விழுந்தது.
கட்டமம் வர்கீஸ் மாப்பிளையிடம் அது என்ன என்று கேட்டறிந்தேன். அது ஒரு டம்மி. “டம்மி உடம்பு. மனிதனைத் தூக்கில் போடுவதற்கு முன்னால் இதை தூக்கிலே போடவேண்டும்” என்றார்.
“ஏன்?” என்று கேட்டேன்
“1892ல் ஒருவனை தூக்கில் போட்டபோது கயிறு அறுந்துவிட்டது. கீழே விழுந்து அவன் துடித்தான். அவனை தூக்கிலே போடவேண்டாம் என்று அனந்தபத்மநாப சாமி ஆணையிட்டுவிட்டார், ஆகவேதான் தூக்குக் கயிறு அறுந்துவிட்டது என்றார்கள் சோதிடர்கள். ஆகவே அவனை விட்டுவிட்டார்கள். ஆனால் கழுத்து இறுக்கப்பட்டதனால் அவன் நோயாளியாக ஆனான். ஒருமாதம் படுத்த படுக்கையாக இருந்தான். உள்ளமும் கலங்கிவிட்டது. சாபங்கள் போட்டு அழுதபடியும், வெறிகொண்டு சிரித்தபடியும் இருந்தான். நாற்பத்திரண்டாம் நாள் அவன் இறந்தான்” என்றார் வர்கீஸ் மாப்பிள்ளை.
“சோதிடர்கள் சொன்னபடி மகாராஜாவே ஆளனுப்பி அவனுக்குரிய ஈமச்சடங்குகளைச் செய்து நடுகல் நாட்டி பூசைக்கும் படையலுக்கும் ஏற்பாடுசெய்தார். ஆண்டுதோறும் அவனுக்கு குருதிக்கொடை அளிக்கப்படுகிறது. கரமனை ஆற்றின் கரையில் இன்று அவனுக்குக் கோயில் அமைந்துவிட்டது. தூக்குமாடன் சாமி என அவனை வழிபடுகிறார்கள்” என்று வர்கீஸ் மாப்பிள்ளை சொன்னார்.
அப்போது நாங்கள் கதலிவாழைப்பழம் போட்டு வாற்றி கொண்டுவரப்பட்ட நாட்டுச்சாராயம் குடித்துக்கொண்டிருந்தோம். வேலாயுதன் தண்டான் கொண்டு வந்து தருவான். அது ஒரு மாதாமாதம் நிகழும் சடங்கு. அதை அருந்தி கொஞ்சம் வியர்வையும் பூத்தால் வர்கீஸ் மாப்பிள்ளை இளகி இலகுவாகி தத்துவப்பேச்சு பேசுவார். சிறுஏப்பம் விட்டபடி அவர் சொன்னார்.
“இன்று அவனுக்கு பெரிய கொடைவிழாவே நடைபெறுகிறது. அவன் மகாராஜாவுக்குப் போட்ட சாபத்தால்தான் அவர் திடீரென்று இறந்தார் என்று கதைகள் உள்ளன. கீழ்க்குடிகள் வந்து அவனை வணங்கிக் கொண்டாடுகிறார்கள். அவர்கள் அவனுக்கு மஞ்சளரிசிப்பொடியுடன் பச்சை ஆட்டுரத்தம் கலந்து உருட்டி படையலிடுகிறார்கள். பானைத்தாளமும் உறுமித்தாளமும் முழங்க அவர்கள் அவன்முன் வெறிகொண்டு ஆடும்போது அவர்களில் ஒருவரின் மேல் அவன் சன்னதம் வந்து தோன்றுகிறான். அருள்வாக்கும் குறிச்சொல்லும் அளிக்கிறான்.”
“ஆகவே இனி அப்படி நடக்கக்கூடாது என்று திவான் ஆணையிட்டார். அதன்படி தூக்குபோடுவதற்கு என்று சில சடங்குகள் உருவாக்கப்பட்டன. ஒரே கயிற்றில் திரும்பத் திரும்ப தூக்கு போடக்கூடாது. ஒவ்வொரு தூக்குக்கும் தனியாக கயிறு செய்யப்படவேண்டும். தூக்கு போடப்பட்டவனுடன் சேர்த்து அதையும் எரித்துவிடவேண்டும். தூக்கு நிகழவதற்கு முன்பு இதேபோல மனித எடை கொண்ட ஒரு டம்மியை தூக்கில் தொங்கவிடவேண்டும். கயிற்றின் உறுதியைச் சோதனை செய்தபின் தூக்கிலிடவேண்டும்.”
“இதெல்லாம் நூறாண்டுகளாக சீராக கடைப்பிடிக்கப்படுகின்றன. வெள்ளையர்கள் எப்படி தூக்குத்தண்டனையை நிறைவேற்றுகிறார்கள் என்று பார்த்து அதே நடைமுறையை இங்கேயும் அப்படியே உருவாக்கினார்கள். டம்மி என்ற வார்த்தையே அவர்கள் உருவாக்கியதுதான்” என்று வர்கீஸ் மாப்பிளை சொன்னார். “டம்மி என்ற சொல்லுக்கு என்ன பொருள் என்று நான் கரமனை சுந்தரேசய்யரிடம் கேட்டேன். அவர் இங்கிலீஷ் அறிந்தவர். டம்பி என்ற வார்த்தையிலிருந்து வந்தது. டம்ப் என்றால் பேசாதவன் அல்லது பேசமுடியாதவன்”
நான் திரும்பி அந்த துணிப்பொம்மையைப் பார்த்தேன். பேசாதவனா பேசமுடியாதவனா? என் எண்ணத்தை என்னால் எப்போதுமே கட்டுப்படுத்த முடிவதில்லை. பேசமுடியாதவை என ஏதும் இல்லை. எல்லாமே பேசும். அதற்குரிய தருணம் வந்தாகவேண்டும், அவ்வளவுதான்.
அந்த எண்ணத்தை உணர்ந்தவர்போல வர்கீஸ் மாப்பிள்ளை சொன்னார் “இது ஒருவேளை பேசிவிடுமோ என்ற பயம் இருந்திருக்கிறது நம் அதிகாரிகளுக்கு. ஆகவேதான் கண்ணோ வாயோ மூக்கோ இல்லாமல் முகத்தை மொழுங்கையான உருண்டையாக உருவாக்கியிருக்கிறார்கள்” என்று வர்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். “பேச ஆரம்பித்தால் என்ன சொல்லும்? எத்தனை முறை எங்கெல்லாம் தூக்கிலிடப்பட்டது என்றா? திரும்பத்திரும்ப தூக்கிலிடப்படுவதன் துக்கத்தைச் சொல்லுமா?”
ஆனால் பேசுவதற்கு வாய் அவசியமா என்ன? உடலால் பேசமுடியாதா? நாக்கு நெளிந்து நெளிந்து தவித்துத் தவித்துதானே பேசுகிறது? என் மண்டைக்குள் ஓடும் சிந்தனையை என்னால் அடக்கவே முடிவதில்லை.
“இந்த டம்மி உண்மையில் ஐநூறாண்டுகளாக தூக்கில் தொங்கிக்கொண்டிருக்கிறது” என்று வர்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். நான் இங்கே சர்வீஸுக்கு வரும்போது அச்சுதன் நாயர் இங்கே இருந்தார். மிக வயதானவர். அவர் பதிமூன்று வயதிலேயே இங்கே காவலனாக வந்துவிட்டார். அன்றெல்லாம் வேலைக்கு வயது வரையறை இல்லை. இந்தச் சிறையை கட்டியதும் இங்கே வந்த முதல் காவலர் படைப்பிரிவில் அவரும் இருந்திருக்கிறார். தெரியுமே, அதற்கு முன்பு சிறை அங்கே, தேவாரக்கெட்டு அரண்மனைக்கு அருகே கோட்டைக்குள் இருந்திருக்கிறது. அச்சுதன் நாயர் ஒருவகை ஆயுள்கைதி. இந்த சிறையிலேயே வாழ்ந்து இங்கேயே மடிந்தார். காவலனாக என்பதுதான் வேறுபாடு.”
“இந்த டம்மியைச் செய்தவர் அச்சுதன் நாயர். நல்ல பருமனான மனிதனின் எடையும் அளவும்கொண்ட டம்மி வேண்டும் என்று சொல்லியிருக்கிறார்கள். ஒரு ஆசாரியைக்கொண்டு அதை மரத்தில் செய்யலாம் என்று யோசித்தனர். ஆனால் மரம் அவ்வளவு எடை கொண்டிருக்காது. அந்த அளவுள்ள எடை கொண்ட மரம் என்ன என்றெல்லாம் பேசிக்கொண்டிருந்தபோது அச்சுதன் நாயர் அவரே செய்து தருவதாகச் சொல்லியிருக்கிறார். சரி என்று சொல்லி ஆணை கொடுத்துவிட்டார்கள். ஒரே நாளில் அச்சுதன் நாயர் இந்த டம்மியைச் செய்தார். அவருக்கு அன்று அதற்குப் பரிசாக ஐந்து வெள்ளிச்சக்கரம் பரிசாக அளிக்கப்பட்டது. அன்று அது பெரிய பணம்.”
“அச்சுதன் நாயர் இதை எப்படிச் செய்தார் என்று அவரே சொன்னார்.” என்றார் வர்கீஸ் மாப்பிள்ளை. “அவருக்கு சட்டென்று ஓரு யோசனை தோன்றியிருக்கிறது. இங்கே தூக்குபூட்டு என்று ஒரு சித்திரவதைக் கருவி உண்டு. நீ அதை இப்போதுகூட பல சிறைகளிலே பார்க்கலாம். இப்போது அதை பயன்படுத்துவதில்லை. அது இரும்பாலான ஒரு கூண்டு. மனித உடலின் அதே வடிவில் இருக்கும். அதற்குள் தண்டனைக்குள்ளானவனை போட்டு பூட்டிவிடுவார்கள். மேலே உள்ள கொக்கியால் அவனை முச்சந்தியில் ஏதாவது மரத்தில் தொங்கவிடுவார்கள்”
“அந்தக் கூண்டு மனித உடலின் அளவே ஆனது. இறுக்கமாக அசையாமல் மனித உடலை நிறுத்திவிடும். தொங்கிக் கிடப்பதனால் கொஞ்சம் கொஞ்சமாக உடலின் நீர் முழுக்க கால்களிலும் கைகளிலும் தேங்கி வீக்கம் ஏற்படும். விளைவாக தசைகள் இரும்புக்கூண்டில் இறுகி உடலில் வலி தொடங்கும். அந்த வலி பெருகிப்பெருகி நாட்கணக்கில் நீடிக்கும். ஆனால் ரத்த இழப்பு இல்லை என்பதனால் மயக்கம் வராது. வலியை அறிந்தே தீரவேண்டும். அவன் பசியால் மயங்காமலிருக்க பதநீரை குடிக்கக் கொடுப்பார்கள். நிறைய நீர் உடலில் இருந்தால் உடல் உப்புவதும் அதிகரிக்கும். மெல்லமெல்ல உடல் உடைந்து நீர் வழியும். காகங்கள் வந்து கொத்தி கிழிக்கும். பதினைந்து நாட்கள் வரை வலியால் துடித்து துடித்து உயிர்பிரியும்.”
“இது நடப்பது முச்சந்திகளில்…” என்று வர்கீஸ் மாப்பிள்ளை கைகளை தூக்கி குரல் எழுப்பிச் சொன்னார். “யோசித்துப் பார், முச்சந்திகளில்! அதைக் கண்டு மற்றவர்கள் பயப்படவேண்டும். ராஜத்துரோகிகள் இப்படி தண்டிக்கப்பட்டார்கள். சாதிச்சுவர்களை தாண்டிய புலையர்களும் மலையர்களும் ஈழவர்களும் இப்படி தண்டிக்கப்பட்டார்கள்.”
நான் பிரமைபிடித்துக் கேட்டுக்கொண்டிருந்தேன். அந்த தூக்குபூட்டு கருவியை நான் பார்த்திருக்கிறேன். அந்த குடோன் அறைக்குள் கூட உடைந்துபோன ஒன்று இருந்தது.
“தூக்குபூட்டுக் கூண்டை எடுத்து உள்ளே நாலைந்து கல்குழவிகளை வைத்து அதன்மேல் துணியை இறுக்கமாகச் சுற்றி இந்த டம்மியை உருவாக்கினார். இது நூறுகிலோ எடை. ஆறரை அடி உயரம்” என்றார் வர்கீஸ் மாப்பிள்ளை.
“இதை இப்போதும் தூக்கில் போடுகிறார்களா?” என்று நான் கேட்டேன்.
“ஆமாம். நூறாண்டுகளாக ஒவ்வொரு தூக்குக்குக்கும் முன்னால் இதை தூக்கிலேற்றுவார்கள். கடைசியாக இப்போது சாமிநாதன் ஆசாரியை தூக்கிலேற்றும்போதுகூட இதை தூக்கிலிட்டோம்.”
நான் அதை அறிந்திருக்கவே இல்லை.
“அதற்காகத்தான் அதை வெளியே எடுத்தோம். அதை எப்படிச் செய்வது என்றெல்லாம் எழுதிவைக்கப்பட்டுள்ளது. உண்மையான தூக்கு போலவே இதற்கும் எல்லா அதிகாரிகளும் வரவேண்டும். எல்லாமே உண்மையான தூக்கு போலவே நடைபெறவேண்டும். தூக்குக்கான ஆணையை நான் படிப்பேன். சாட்சிக்கு இரண்டு அதிகாரிகள் இருப்பார்கள். ஆராச்சாரும் உதவியாளனும் இந்த டம்மியை தூக்குமேடைமேல் ஏற்றி நிறுத்துவார்கள். நாங்கள் ஆணையிட்டதும் இதை உதவியாளன் பிடித்துக்கொள்ள ஆராச்சார் கழுத்தில் சுருக்கை மாட்டுவார். நான் ஆணையிடுவதற்கு முன்பு மற்றவர்களிடம் அனுமதி கேட்கவேண்டும். ஆணை இடப்பட்டதும் லிவர் இழுக்கப்படும். கீழே கதவு திறந்து ஓசையுடன் விழும். பள்ளத்தில் டம்மி விழுந்து தொங்கி சுழன்றுகொண்டு ஆடும்.”
“உண்மையான மனிதனைப்போலவே அது ஆடும்” என்று வர்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். ”முப்பது நிமிடங்கள் அது கயிற்றில் அப்படியே தொங்கிக்கிடக்கவேண்டும் என்று ஆணை. அந்த முப்பது நிமிடங்களும் அங்கே நிற்பது ஒரு பெரிய அனுபவம். உண்மையான தூக்குக்கு எந்த வகையிலும் குறைந்தது அல்ல. நம் கைகால்கள் பதறிக்கொண்டிருக்கும். சிறுநீர் வந்து முட்டும். கண்களில் இருட்டு படியும். அரைமணிநேரம் கழித்து அதை எடுப்பதற்கு கைகாட்டவேண்டும். கையை தூக்கவே முடியாது. உடல் பிணம்போல செயலிழந்து, வியர்த்துக் குளிர்ந்திருக்கும்.”
“அதை இழுத்து சுருக்கை அவிழ்த்து படுக்கவைப்பார்கள். டாக்டர் சென்று அதை சோதனை செய்வதுபோல பாவனை செய்யவேண்டும். அது செத்துவிட்டது என்று அறிக்கை அளிக்கவேண்டும். அதை நான் பதிவுசெய்யவேண்டும். எல்லாமே நாடகம். ஆனால் முறையாக நடிப்போம்” என்று வர்கீஸ் மாப்பிள்ளை சொன்னார். “நாடகம் ஒருவகையில் அந்த நிஜ நிகழ்வை விடக் கொடியது. மறுநாள் உண்மையில் ஒரு மனிதனை தூக்கிலிடும்போது அந்த அனுபவம் கொஞ்சம் பதற்றம் குறைவானதாகவே இருக்கும். அதை எண்ணி நான் வியந்திருக்கிறேன். அது ஏன் என யோசித்திருக்கிறேன். ஒருமுறை அதை நாம் நடித்துவிட்டதனால் மறுபடி நிகழும்போது பதற்றம் குறைந்துவிட்டது என்று நினைத்துக்கொண்டேன்.”
“அந்த டம்மி மனிதனை விட பரிதாபத்திற்குரியது என்பதனால்கூட இருக்கலாம்” என்று நான் சொன்னேன் “அதை நூற்றாண்டுகளாக மீண்டும் மீண்டும் தூக்கிலிடுகிறார்கள்.”
வர்கீஸ் மாப்பிள்ளை திகைப்புடன் என்னைப் பார்த்தார். பிறகு “ஆமாம், எதற்கும் நீ அந்த டம்மியை தொடவேண்டாம்… அதை திரும்ப பழைய இடத்திலேயே வைத்துவிடு. இனி அடுத்த தூக்கு வருவது வரை நமக்கு அது தேவையில்லை.”
“ஆமாம்” என்றேன்.
“அதில் என்னென்ன கெட்ட ஆவிகள் இருக்கின்றன என்று யார் கண்டார்?” என்றார் வர்கீஸ் மாப்பிள்ளை. அவருக்கு நாக்கு நன்றாக குழறத் தொடங்கிவிட்டிருந்தது. “இப்போது அந்த டம்மியை இறக்கி படுக்கவைத்துவிட்டு டாக்டரிடம் போய் பரிசோதனை செய்ய சொன்னோம். அவர் போய் கையில் நாடிபார்ப்பதுபோல நடிக்கவேண்டும். கையை பிடித்ததுமே அவர் திடுக்கிட்டு எழுந்துவிட்டார். உடம்பு நடுங்கியது. நான் என்ன என்று கேட்டேன். ஒன்றுமில்லை என்று சொல்லி மீண்டும் நாடித்துடிப்பை பார்த்தார். அறிக்கையும் அளித்தார்.”
“நாங்கள் டாக்டரின் காரில்தான் வீட்டுக்குச் சென்றோம். அவருடைய வீடு வழுதைக்காட்டில் இருந்தது. காரில் டாக்டர் அமைதியாக இருந்தார். பதறிக்கொண்டிருந்தார். நான் என்ன ஆயிற்று என்று கேட்டேன். பதில் சொல்ல மறுத்துவிட்டார். ஆனால் பத்துநாட்களுக்குப் பின்பு சொன்னார். அந்த டம்மியை அவர் நாடி பிடித்துப் பார்த்தபோது அதில் கொஞ்சம் துடிப்பு எஞ்சியிருந்தது என்று…”
[ 4 ]
“சேச்சே” என்று நான் சொன்னேன். “அந்தக்காலத்து ஆட்களின் மூடநம்பிக்கைகள்… குற்றவுணர்ச்சியிலிருந்து வருபவை அவை.”
“இல்லை, நானும் அதில் ஏதோ குடியிருந்தது என்று நினைக்கிறேன்” என்று தாத்தா சொன்னார். “டாக்டர் சொன்னது உண்மை. அதில் எனக்குச் சந்தேகமே இல்லை. ஏனென்றால் நானே அதை உணர்ந்திருக்கிறேன்.”
நான் ஒன்றும் சொல்லவில்லை. தாத்தா அவரே பேசலானார். அவருடைய நினைவுகளும் உணர்வுகளும் கலந்து மழுங்கிய கிழக்குரலில் வெளிப்பட்டன.
நான் அந்த டம்மியை குடோன் அறைக்குள் இருந்து எடுத்து பலமுறை பார்த்திருக்கிறேன். அதை மறுபடியும் பார்க்கவே கூடாது என்று நினைப்பேன். ஆனால் அதை என்னால் தவிர்க்கவே முடிந்ததில்லை. அந்த அறைக்குள் அது இருக்கிறது என்னும் உணர்வு என்னுள் இருந்தது. இருண்ட கருவறைக்குள் இருக்கும் தெய்வம்போல.
அது என்னை பார்த்தது. அதற்குக் கண்கள் இல்லை. கண்களால் பார்க்கத்தான் வெளிச்சம் தேவை. அந்தப்பார்வைக்கு இருட்டு மேலும் பொருத்தமானது. அது வாயற்றது, பேசமுடியாதது அல்லது பேசாதது. ஆகவே அதன் பார்வை கூர்மை கொண்டிருந்தது.
அதை நான் முதலில் தொட்டபோது ஓர் அதிர்வை உணர்ந்தேன். ஆம், மெய்யாகவே உணர்ந்தேன். உயிருள்ள ஓர் உடலின் அதிர்வு அது. உயிரின் அதிர்வு. அந்த அதிர்வை உணர்ந்ததும் நான் கைகளை உதறிவிட்டு உளறியடித்தபடி அறையை விட்டு வெளியே ஓடிவிட்டேன். ஆனால் வெளியே வந்ததுமே நிதானமடைந்தேன். அதை என் கற்பனை என்று விளக்கிக்கொண்டேன். மீண்டும் உள்ளே சென்று அதன் கையைப் பிடித்துப்பார்த்தேன். அதே அதிர்வு இருந்தது.
இம்முறை நெஞ்சு உடைவதுபோல துடித்துக் கொண்டிருந்தாலும் என்னால் நிதானமாக அதை ஆராய முடிந்தது. சத்தியமாகச் சொல்கிறேன், எந்தக் கற்பனையும் இல்லை, அதில் உயிரின் துடிப்பு இருந்தது. அதுதானா அதுதானா என எத்தனையோ முறை சோதித்துப் பார்த்தேன். அது உயிரின் துடிப்பேதான்.
ஆச்சரியம்தான், நூறுமுறை -ஏன் ஆயிரம் முறைகூட இருக்கலாம்- தூக்கிலிடப்பட்ட உடலில் எஞ்சிய உயிர். அது என்ன? அத்தனைமுறை கொல்லப்பட்டாலும் சாகாதது. அதற்கு ஒரு வாய் இருந்திருக்கலாம். அலறியிருந்தால், ஆவேசமாக கூவியிருந்தால் அது அடங்கியிருக்கக் கூடும்.
நான் அதைப்பற்றி எவரிடமும் சொல்லவில்லை. ஆனால் ஓர் எண்ணம் எனக்கு எழுந்தது. ஒரு நல்ல மந்திரவாதியை வரவழைத்து அதிலிருக்கும் அந்த உயிரை அகற்றிவிடவேண்டும், அந்த உயிர் நிறைவுறுவதற்காக ஏதாவது செய்யவேண்டும். அந்த உயிரை விண்ணில் ஏற்றிவிடவேண்டும். அதற்காக மந்திரவாதிகளை தேடிக்கொண்டிருந்தேன். ஒருவரை கண்டுபிடித்தபிறகு வர்கீஸ் மாப்பிளையிடம் சொல்லலாம் என நினைத்தேன்.
அப்போதுதான் வர்கீஸ் மாப்பிளை ஓய்வுபெற்றார். அவருக்குப் பதிலாக ஆர்.கே.கருணாகரக் கைமள் வந்து சேர்ந்தார். அவரும் நானும் ஒரே வயது. ஏற்கனவே அவரை எனக்கு தெரியும். காவல்துறையில் அவர்கீழே நான் வேலை செய்திருக்கிறேன். அவர் வீட்டுக்கெல்லாம்கூடச் செல்வேன். அவர் குடும்பமே எனக்கு நெருக்கம்.
ஆர்.கே.கருணாகரக் கைமளுக்கு சிறைத்துறை வேலை பதவி உயர்வு. ஆனால் அவருக்கு அது ஒத்துவரவில்லை. ஆகவே என் பொறுப்பிலேயே எல்லாவற்றையும் ஒப்படைத்தார். அவர் அவ்வப்போது வருவதுடன் சரி. குறிப்பாக இரவு தங்குவதே இல்லை. இரவுகள் என் பொறுப்பிலேயே முழுக்க முழுக்க இருந்தன.
அது நல்லதுதான், நான் நினைத்ததைச் செய்துவிடலாம் என முடிவுசெய்தேன். ஆவிகளை மலையேற்றுபவனாகிய மலைக்காணி பொக்கனிடம் இருபது ரூபாய் முன்பணம் கொடுத்து நாளும் குறித்திருந்தேன். அதற்குள் ஒன்று நடந்தது.
அந்தப் பின்புலமெல்லாம் நானே பிறகு தேடிக் கண்டடைந்ததுதான். பண்டிட் கறம்பன் என்பவனை ரகசியமாக தூக்கிலிட முடிவுசெய்தார்கள். அவனை நீதிமன்றம் முறையாக தண்டிக்கவில்லை. அன்றைக்கெல்லாம் திருவிதாங்கூர் நீதிமன்றங்கள் மேல் பிரிட்டிஷ் ரெசிடெண்ட் துரையின் நேரடிக் கண்காணிப்பு வலுவாக இருந்தது. உண்மைதான், ரெசிடெண்ட் என்ற பதவி அப்போது இல்லை. ஆனால் லெஃப்டினெண்ட் கர்னல் அந்தஸ்தில் இருந்த ஒரு துரை திருவனந்தபுரத்தில் திருவிதாங்கூர் படைகளின் தளபதியாக இருந்தார். முதலில் திருவிதாங்கூர் நாயர் பட்டாலியன் தலைவராக இருந்தவர் எச்.எஸ்.ஸ்டீவர்ட். நான் அவரை பார்த்திருக்கிறேன்.
என்ன சொன்னேன், பிரிட்டிஷ் துரையின் கண்காணிப்பு இருந்ததனால் பிரிட்டிஷ் சட்டநடைமுறைகளைக் கடந்து நீதிமன்றங்கள் ஒன்றும் செய்ய முடியாது. சித்திரவதைகளும், அடுக்கடுக்கான தூக்குத்தண்டனைகளும் நின்றுவிட்டிருந்தன. ஆனால் அரிதாக சில தண்டனைகள் திவான் ஆணைப்படி ரகசியமாக நிறைவேற்றப்பட்டன. சுதந்திரம் கிடைத்தபிறகு, 1949ல் இந்திய தேசத்தில் இணைந்தபோது பல்லாயிரம் அரசாங்கக் கோப்புகள் அழிக்கப்பட்டன. அவற்றில் இருந்த இந்தச் செய்திகளெல்லாம் முழுமையாகவே மறைந்துவிட்டன. அதிலொன்று இந்தச் சம்பவம்.
பண்டிட் கறம்பன் என்று கேட்டபோது நான் ஒரு வயதானவரை கற்பனை செய்தேன். இவன் என் மகனைவிடவும் இளைஞன் என்று ஆவணங்களைப் பார்த்து தெரிந்துகொண்டேன். அவனுக்கு அப்போது 21 வயது ஆகியிருக்கவில்லை. ஆனால் பண்டிட் என்று அழைக்கப்பட்டான். தமிழ், மலையாளம் ஆகியவற்றில் தேர்ச்சி பெற்றபின் இந்தியும் கொஞ்சம் கற்றிருந்தான். அய்யன்காளி உருவாக்கிய புலையர் மகாஜனசபையில் முக்கியமான பங்கு வகித்தான். அதன் பின்னர் அவருடைய ஆலோசனைப்படி தனியாகப் பிரிந்து சென்று தன்னுடைய மலையர் இனத்து மக்களுக்காக பள்ளிக்கூடங்களை உருவாக்கினான். அங்கே குழந்தைகளுக்கு அவனே கல்வி கற்பித்தான்.
மூன்று இடங்களில் காலை, அந்தி பள்ளிக்கூடங்கள் நடந்தன. மூன்றிலும் அவன் ஒருவனே ஆசிரியன். அவன் அப்பா மலையர் இனத்தில் பூசாரி. ஆகவே கொஞ்சம் பணம் வைத்திருந்தார். அவன் தொழில் ஏதும் செய்யவேண்டியிருக்கவில்லை. அவனுடைய மக்களால் குஞ்ஞன் என்று அழைக்கப்பட்டான். குஞ்ஞன் என்றால் சிறுவன் என்று பெயர். சுந்தரன் என்றும் அவனுக்குப் பெயர் உண்டு. அழகானவன் என்று பொருள்.
என்ன நடந்தது என்று இப்போதும் தெரியாது. மலையர்களின் பள்ளிகளுக்கு தீவைத்த ஒரு கரைநாயரையும் அவன் தம்பியையும் உயிரோடு கொளுத்திவிட்டான் என்றார்கள். வீடு புகுந்து வெட்டிக்கொன்றான் என்றும் சொல்கிறார்கள். எந்தக் குற்றச்சாட்டும் வெளியே வரவில்லை.
திடீரென்று குஞ்ஞன் என்னும் பண்டிட் கறம்பன் காணாமலானான். அய்யன் காளி ஸ்ரீமூலம்சபையில் அந்த கேள்வியை திரும்பத் திரும்ப எழுப்பினார். தேடிக்கொண்டிருக்கிறோம் என்று பதில் சொல்லப்பட்டது. அந்தக் கேள்விக்கு விடை வராமலேயே அய்யன்காளி மறைந்தார். வரலாறும் மாறிவிட்டது. ஆனால் குஞ்ஞன் என்கிற பண்டிட் கறம்பன் 1947 ஜூலை பதிமூன்றாம் தேதி ரகசியமாக கரமனை அரைக்கோட்டைக்குள் இருந்த துணைராணுவ முகாமில் தூக்கிலிடப்பட்டான். நீதிமன்ற விசாரணை, தீர்ப்பு ஏதுமில்லை.
ஆனால் எல்லா தூக்குச் சடங்குகளும் முறைப்படி நிறைவேற்றப்பட்டன. கயிறு ஆராச்சாரால் தயாரிக்கப்பட்டது. அது டம்மி வைத்து சோதனை செய்யப்பட்டது. ராணுவ அதிகாரிகள் மட்டுமே இருக்க அந்த தண்டனை நிறைவேற்றப்பட்டது. சிறையதிகாரிகள், டாக்டர் எவருக்கும் எதுவும் சொல்லப்படவில்லை. அந்த டம்மி தேவை என்று வந்து கேட்டார்கள். ஆர்.கே.கருணாகரக் கைமள் கையெழுத்து வாங்கிக்கொண்டு அதை கைமாற்றிக் கொடுத்தார். மூன்றாம் நாள் திரும்பக் கொண்டுவந்து தந்துவிட்டார்கள். நான் அதை கையெழுத்திட்டு பெற்றுக்கொண்டேன். மீண்டும் அதை ஸ்டோர் அறையில் போட்டுவிட்டோம்.
அப்போது எதையும் மேற்கொண்டு யோசிக்கவில்லை. அரசாங்கத்தில் அபத்தங்கள் நடப்பது சாதாரணமானது. ஏனென்றே தெரியாமல் ஆணைகளை நிறைவேற்றவும், மேற்கொண்டு எதையும் அறியாமலிருக்கவும் பழகியிருந்தோம். பின்னர் நடந்த சிக்கல்களுக்கு பிறகுதான் இதையெல்லாம் நான் தெரிந்துகொண்டேன்.
[ 5 ]
அன்று இரவு நான் என் வீட்டில் இருக்கும்போது ஒரு பெண் என்னை தேடிவந்தாள். வீட்டின் கதவின் மேல் கல் வந்து விழும் ஓசையும் “உடையதே” என பெண்குரல் அழைக்கும் ஓசையும் கேட்டது. முதலில் அது என்ன ஒலி என தெரியவில்லை. யாரோ சிறுவன் அழைக்கிறான் என நினைத்து கதவைத்திறந்து வெளியே சென்றேன். அந்தப்பெண் நின்றிருந்தாள். முற்றத்தில், மரமல்லி மரத்தடியில்.
பதினாறு பதினேழு வயது இருக்கும். ஆனால் நல்ல உறுதியான, உயரமான உடல். கரிய நிறம் , மின்னும் பெரிய கண்கள். எதையோ சொல்லப்போகும் கணம் நின்றிருப்பதாகச் சில முகங்களில் எப்போதுமொரு பாவனை இருக்குமே அப்படிப்பட்ட முகம். வெளியே இருந்த விளக்கின் மெல்லிய சிவப்பு வெளிச்சத்தில் ஏதோ கோயில் கற்சிலை போலிருந்தாள்.
அவளை கண்டதும் நான் மெய்விதிர்த்து நின்றுவிட்டேன். எனக்கு வந்த முதல் சந்தேகமே அவள் ஏதோ மலைத்தெய்வம் என்றுதான். என்மேல் அவளை எவராவது ஏவி விட்டிருக்கலாம். ஆனால் என்னால் அசைய முடியவில்லை. ஒரு கணம் கழித்தே என் தர்க்கம் விழித்துக்கொண்டு அவள் யார் என்று ஆராய்ந்தது.
பெண்ணேதான். அவளை அங்கே அப்படி காணவே முடியாது. அவள் மலைமகள், அவர்கள் கீழே வருவதே இல்லை. மார்புகளின் மேல் வெள்ளாரங்கல் மாலை அணிந்திருந்தாள். என்னை கண்டதும் கும்பிட்டாள்.
“யார்?” என்று நான் கேட்டேன்
“நான் நீலி… மலையத்தி. பொன்முடி மலையிலிருந்து வருகிறேன். காணி குலம். மலையர்தலைவன் சிண்டனின் மகள்” என்று அவள் சொன்னாள். “நான் உங்களைப் பார்க்கத்தான் வந்தேன்.”
“என்னையா? எதற்கு?” என்றேன். நான் அப்போது அந்த சிறிய வீட்டில் தனியாக தங்கியிருந்தேன். என்னை ஒரு பெண் சந்திக்க வந்தால் அது அபவாதமாகும் என்று யோசித்தேன்.
“நான் பண்டிட் கறம்பனின் மனைவி” என்றாள்.
“மனைவியா?” என்றேன்.
“எங்களுக்கு திருமணம் ஆகவில்லை. அடுத்த பௌர்ணமியில்தான் திருமணம் நிச்சயிக்கப்பட்டிருந்தது” என்றாள்.
எனக்கு பாவமாக இருந்தது. ஆனால் அரசு ஊழியனாகிய நான் என்ன சொல்லவேண்டும் என்பது ஏற்கனவே வகுக்கப்பட்டிருந்தது. “பண்டிட் கறம்பன்…” என்று நான் சொல்ல ஆரம்பிப்பதற்குள் அவள் இடைமறித்தாள்.
“அவரைத் தூக்கிலிட்டார்கள். நான் அதை கண்டேன்.”
“தூக்கிலிட்டதையா?”
“இல்லை, அதற்கு அவரை கொண்டுசெல்வதை” என்றாள்.
“எப்படி?” என்றேன்.
“நானும் அவரும் மலையில் முடவன்மடு என்ற இடத்தில் பேசிக்கொண்டிருந்தோம். எவருக்கும் தெரியாது. அப்போது அவர்கள் எங்களை வளைத்துக்கொண்டார்கள். அவரை பிடித்து கைகளை பின்னால் கட்டி வண்டியில் தூக்கிப்போட்டு கொண்டு சென்றார்கள். மோட்டார் வண்டி. வேகமாகச் செல்வது. நான் அதை தொடர்ந்து ஓடி இந்த நகரத்திற்கு வந்தேன்”
“எப்படி அவ்வளவு தூரம்?” என்றேன்.
“அந்தச் சக்கரத்தின் தடம் எனக்கு தெரிந்தது… அதேபோன்ற சக்கரத்தடம் கொண்ட வேறு வண்டிகள் பாதையில் ஓடியிருக்கவில்லை.”
அவர்கள் தடம்பார்க்கும் கலையில் வல்லவர்கள் என அறிந்திருந்தேன். நான் தலையசைத்தேன்.
“அந்த வண்டி ஒரு கோட்டைக்குள் போயிற்று. நான் கோட்டைக்குள் போவது எப்படி என்று யோசித்தேன். சுற்றிச்சுற்றி வந்தேன். கோட்டைக்குப் பின்பக்கம் ஒரு மரம் இருந்தது. அதில் ஏறி கிளையில் அமர்ந்து உள்ளே என்ன நடக்கிறது என்று பார்த்தேன். முழுப்பகலும் இலைகளுக்குள் ஒளிந்திருந்தேன். அன்றிரவு குஞ்ஞனை அவர்கள் கூட்டிச்செல்வதை கண்டேன். அவர் வெண்ணிறமான முழுக்கால் ஆடையும் முழுக்கை சட்டையும் அணிந்திருந்தார். அப்படிப்பட்ட ஆடைகளை அவர் அணிவதே இல்லை. ஆனாலும் நான் அவரை அடையாளம் கண்டேன்.” என்று அவள் சொன்னாள்.
“இரண்டு காவலர்கள் அவரை தள்ளிக் கொண்டு சென்றார்கள். அவர்கள் அவரை எங்கே கொண்டு செல்கிறார்கள் என்று பார்க்க நான் மேலும் மரத்தின்மேல் ஏறினேன். நல்ல இருட்டு இருந்தது. ஆனால் சுவருக்கு அப்பால் இருந்த சிறிய முற்றத்தில் வெளிச்சமிருந்தது. அங்கே என்ன நடக்கிறது என்பது மங்கலாகத் தெரிந்தது. அவர்கள் அவரை தூக்கிலிட்டனர். அங்கே ஒரு மேடை இருந்தது. அதில் ஒரு தூணில் கொக்கியில் கயிற்று வளையம் இருந்தது. அதில் அவர் கழுத்தை மாட்டி காலடியிலிருந்த கதவை திறந்தனர். அவர் தொங்கி சுழன்று ஆடினார். இறந்துவிட்டார்.”
“ஆமாம், அப்படித்தான் நானும் கேள்விப்பட்டேன்” என்று நான் சொன்னேன். “அது ராஜசாசனம். நாம் ஒன்றும் செய்யமுடியாது.”
“ஆனால் அவர் சாகவில்லை” என்று அவள் சொன்னாள். “நான் அவர் சாகவில்லை என்று அறிந்தேன்.”
“எப்படி?”
“அவரை அவர்கள் இருவர் சேர்ந்து தூக்கிக்கொண்டு சென்று ஒரு வண்டியில் ஏற்றினார்கள். நான் மரத்தில் இருந்து இறங்கி அந்த வண்டியின் அருகே சென்றேன். அவருடைய உடல் கொஞ்சம் பெரிதாக ஆகியிருந்ததுபோல தோன்றியது. அந்த வண்டியில் அவரை ஏற்றியபோது அவர் திரும்பி என்னைப் பார்த்தார். வா என்று கைகளால் அழைத்தார். வண்டி கிளம்பிச் சென்றது.”
“அந்த வண்டியை நான் தொடந்து ஓடினேன். அது நீங்கள் வேலைபார்க்கும் கட்டிடத்திற்குள் சென்றது” என்று அவள் தொடர்ந்து சொன்னாள். “நான் உங்கள் கட்டிடத்தின் அருகே உள்ள மரத்தின்பின்னால் ஒளிந்து நின்று பார்த்தேன். அப்போது அங்கே நீங்கள் மட்டும்தான் இருக்கிறீர்கள். உங்களை நன்றாக கவனித்தேன். உங்கள் பின்னால் ஓடி இங்கே வந்தேன்.”
எனக்கு என்ன நடந்தது என்று புரிந்தது. நான் அவளிடம் சொன்னேன். “இதோபார், அது பண்டிட் கறம்பன் அல்ல. அது டம்மி. ஒரு எடைமிக்க பொம்மை. ஒருவரை தூக்கில் போடுவதற்கு முன்பு அதை தூக்கில்போட்டு அந்த கயிறு உறுதியானதா என்று சோதிப்பார்கள். அந்த பொம்மையைத்தான் எங்கள் சிறையிலிருந்து கொண்டுசென்றார்கள். அதைத்தான் திரும்பக் கொண்டுவந்திருக்கிறார்கள்.”
“இல்லை, என்னை அழைத்தது அதுதான்.”
“இதோபார், நான் உறுதியாகச் சொல்கிறேன். அது திரும்ப வந்தபோது நான் அங்கேதான் இருந்தேன், நான் கையெழுத்திட்டு வாங்கினேன். அது பொம்மைதான்…. பண்டிட் கறம்பனின் உடலை அவர்கள் ரகசியமாக எரித்திருப்பார்கள்.”
“இல்லை, என்னை அழைத்தது அதுதான்.”
“அந்தப் பொம்மையா?”
“இல்லை, அவர். நீங்கள் சொல்வது உண்மை என்றால் அவர் அந்த பொம்மையில் இருக்கிறார்.”
“யார்?”
“குஞ்ஞன்.”
இந்த மக்களின் நம்பிக்கைகளுடன் உரையாடமுடியாது. ஆனாலும் நான் சொன்னேன். “அதெப்படி, அந்த பொம்மையில்…?”
“மனிதர்கள் உடலில் இருக்கமுடியும் என்றால் பொம்மைகளிலும் இருக்கலாம். விலங்குகளிலும் மரங்களிலும் பாறைகளிலும்கூட மனிதர்கள் இருப்பதுண்டு.”
நான் தலையசைத்தேன்.
“அவரை நான் சந்திக்கவேண்டும். அவருடன் நான் இருக்கவேண்டும். அவர் என்னிடம் ஏதோ சொல்ல விரும்புகிறார்.”
“அதெப்படி? அது முடியாது.”
“முடியும்… நீங்கள் மறுத்தால் நான் உங்கள் வம்சத்தையே அழிப்பேன். எனக்கு காணிகுலத்து மந்திரவித்தை தெரியும். என்னால் உங்கள்மேல் சாபம்போட முடியும்… கையில் மந்திரித்த மயிர்ச்சரடுடன்தான் வந்திருக்கிறேன்.”
அவள் கையில் எருமையின் வால்மயிரை முறுக்கிச் செய்த ஒரு கரிய சரடு இருந்தது. அதில் மந்திரம் சொல்லி முடிச்சுகள் போட்டிருந்தாள். நான் நடுங்கிவிட்டேன். மலையர்களின் மந்திரங்களை பயப்படாதவர்கள் இல்லை. அவர்கள் ஒருபோதும் எவரையும் அழிக்கும் மந்திரங்களைப் போடமாட்டார்கள். ஏனென்றால் இன்னொருவரை அழித்தால் தாங்களும் அழியவேண்டியதுதான் என அவர்கள் நம்பினார்கள். ஆனால் தான் அழிந்தாலும் சரி என எண்ணி அவர்கள் மந்திரம் போட்டால் அது தலைமுறைகளையே சூறையாடிவிடும். குலமே மிச்சமில்லாமல் செய்துவிடும்.
“நான் என்ன செய்யவேண்டும்?” என்று நான் உடைந்த குரலில் கேட்டேன்.
“நான் இன்று அங்கே வருவேன். என்னை உள்ளே அனுப்பவேண்டும். அந்த பொம்மை இருக்கும் இடத்திற்கு. தனியாக நான் அதனுடன் இருக்கவேண்டும்.”
“ஏன்?”
“நான் அவருடன் இருக்கவேண்டும்.”
“அது வெறும்…” அதன் பின் நான் என்னை கட்டுப்படுத்திக்கொண்டு “சரி” என்றேன்.
[ 6 ]
மறுநாள் நான் சிறையில் வேலைக்குச் சென்றேன். அவள் வருவாள் என அறிந்திருந்தேன், ஆனால் பகல் எல்லாம் எங்கே தங்குவாள்? எதையாவது சாப்பிடுவாளா? அவளை பகலில் யாராவது பார்த்தால் திடுக்கிட்டு விடுவார்கள். அலறி ஊரைக்கூட்டிவிடுவார்கள். கோயிலுக்குள் இருந்து கற்சிலை தெருவில், பகலொளியில் வந்துவிட்டதோ என்று எவராலும் பதறாமலிருக்க முடியாது.
நான் வெளியே எட்டி எட்டிப் பார்த்துக்கொண்டிருந்தேன். அவளை காணவில்லை. இரவில் என் அறையில் அமர்ந்து சற்று தூங்கிவிட்டேன். அன்று ஆர்.கே.கருணாகரக் கைமள் இல்லை. வழக்கம்போல என்னிடம் அலுவலகப் பொறுப்பை ஒப்படைத்துவிட்டு அவர் வீட்டிலேயே தூங்கிவிட்டார். நள்ளிரவில் கதவின்மேல் கல்விழும் ஓசை. மெல்லிய அழைப்பொலி. நான் கதவைத் திறந்தேன். அவள்தான். கரிய நிழலாக நின்றிருந்தாள்.
நான் ஒன்றும் சொல்லவில்லை. அவள் மின்னும் வெண்ணிற விழிகளுடன், கன்னங்கரிய உடலின் பளபளப்புடன் படிகளில் ஏறி உள்ளே வந்து நின்றாள். எங்கே என்று சைகையால் கேட்டாள்.
நான் சாவியை எடுத்துக் கொண்டு சென்று ஸ்டோர் அறையை திறந்தேன். உள்ளே அந்த டம்மி பொம்மை சுவர் சாய்ந்து நின்றிருந்தது. அவளிடம் அதைச் சுட்டிக்காட்டினேன். அவள் அதைப் பார்த்துக்கொண்டு நின்றாள். அவள் உடலில் ஏதோ ஒருவகையான அதிர்வு உருவானது. “ம்ம்” என மெல்ல முனகினாள். “ம்ம் ம்ம் ம்ம்” என்றாள். சன்னதம் வருவதுபோல மெல்ல ஊசலாடினாள்.
அவளுக்கும் அந்த டம்மிக்கும் நடுவே ஏதோ ஓர் உரையாடல் நிகழ்வதுபோலிருந்தது. அவள் தலையை அசைத்தாள். கைகளை நீட்டி விரல்களை சுழித்து ஏதோ காட்டினாள். ஒருகணம் நான் டம்மியின் பார்வையை மிகமிக தெளிவாகவே உணர்ந்தேன். அஞ்சி பதறி விலகிச் சென்றுவிட்டேன்.
அவள் அறைக்குள் நுழைந்து கதவை மூடிக்கொண்டாள். நான் கைகால்கள் நடுங்க, உடல் வியர்த்து வழிய அங்கேயே நின்றேன். பிறகு நாற்காலியில் அமர்ந்துகொண்டேன். நேரம் போய்க்கொண்டிருந்தது. அவளை போய் அழைக்கவேண்டும் என்று நினைத்தேன். எந்த நேரத்திலும் யாராவது வரலாம். ஆனால் கதவை தட்ட துணிச்சல் வரவில்லை.
அவள் கதவை திறந்து வெளியே வந்த ஓசை கேட்டு நான் திடுக்கிட்டு எழுந்தேன். அவளுக்குப் பின்னால் ஸ்டோர் அறைக்குள் இருந்து புகை எழுந்தது. அவள் அந்த டம்மிக்குத் தீவைத்துவிட்டாள் என்று தெரிந்தது. நான் என்ன செய்வதென்று அறியாமல் குழறிக்கொண்டிருக்க பக்கத்து அறையிலிருந்து செண்ட்ரி ராகவன் கதவைத்திறந்து உள்ளே வந்தான். “தீ… தீ வருகிறது!” என்று கூவியவன் அவளைப் பார்த்துவிட்டான். அலறியபடி மயங்கி விழுந்தான்.
அவள் வேகமாக வெளியே இறங்கி இருட்டில் மறைந்தாள். நான் தண்ணீர் கொண்டுவந்து டம்மியில் பற்றிய தீயை அணைக்க முயன்றேன். ஆனால் ஸ்டோர் அறைக்குள் புகை நிறைந்திருந்தது. உள்ளே போக முடியவில்லை. குறிப்பாகப் பார்த்து நீரை வீச முடியவில்லை. வார்டர்களின் உதவியுடன் அணைத்தபோது பல மரச்சாமான்கள் எரிந்துவிட்டிருந்தன.
விசாரணையில் செண்ட்ரி ராகவன் விரிவாக எல்லாவற்றையும் சொல்லிவிட்டான். ஆகவே என்னால் மறுக்க முடியவில்லை. நானும் உண்மையைச் சொன்னேன். என்னையும் ஆர்.கே.கருணாகரக் கைமளையும் வேலைநீக்கம் செய்தார்கள். என்ன ஏது என்று கேட்காமல் நான் வேலைநீக்கத்தை ஏற்றுக்கொண்டு வீட்டுக்கு வந்துவிட்டேன். என் அப்பா எனக்கு கொஞ்சம் பணம் வைத்திருந்தார். ஆகவே பிரச்சினையில்லாமல் எஞ்சிய வாழ்க்கையை கழித்தேன். கருணாகரக் கைமளால் அதை தாங்கமுடியவில்லை.
[ 7 ]
நான் அந்தக் கதையில் இருந்த மர்மங்களை ஒவ்வொன்றாக தொட்டு புரிந்துகொள்ளமுடியாமல் விலகிக்கொண்டிருந்தேன்.
தாத்தா சொன்னார். “அவள் மலைக்குத் திரும்பிச் சென்றாள் என்று அறிந்துகொண்டேன். ஆனால் அதெல்லாம் பிறகு, நீண்டநாட்கள் கழித்து. அவள் மலையர்குடித் தலைவன் சிண்டனின் மகள். பண்டிட் கறம்பனின் மகன் என்று பிறகு புகழ்பெற்ற தோழர் சிருகண்டன் அவளுடைய மகன்தான் என்று சொன்னார்கள். சிருகண்டன் எம்.எல்.ஏ ஆகியிருக்கிறார். அவருடைய இடிமின்னல் முழங்கும் பேச்சுக்களை நான் நிறையக் கேட்டிருக்கிறேன். பல்லாயிரக்கணக்கான மக்களை தீபற்றி எரியச்செய்யும் பேச்சாளர் அவர்.”
தாத்தா வேலைநீக்கம் செய்யப்பட்டார் என்று நான் அப்பாவிடம் சொல்லவில்லை. அவர் தாத்தா ஒரு ராஜவிசுவாசியான படைவீரர் என்று நம்பிக்கொண்டிருந்தார். நான் அதை குலைக்கவில்லை. தாத்தா இறந்துவிட்டார், ஆகவே இப்போது இதைச் சொல்லலாம். ஏனென்றால் இது கதை, அவரும் கதைகளின் உலகில் கலந்துவிட்டார்.
***