ஓஷோ கடிதங்கள்

ஜெமோ,

இந்த மேடைப் பேச்சு இல்லையெனில் இத்தனை தீவிரமாக என்னால் ஓஷோவை தொகுத்துக் கொண்டிருக்க முடியாது என்று, இந்த வாய்ப்பை அளித்த கிருஷ்ணா ஸ்வீட்சுக்கு நன்றி கூறியிருந்தீர்கள். இன்னமும் உங்களுக்குள்ளிருக்கும் மாணவர்களுக்குரிய இந்த கற்கும் தீவிரமே உங்களுடைய உரைகளைத் தனித்துக் காட்டுகிறது. கடந்த ஆறாண்டுகளாக உங்களைத் தொடரும் என் போன்றவர்களுக்கு கூட புதியவைகளைத் தந்து கொண்டே இருக்கிறது.

ஓஷோ, ஜெ.கி. போன்ற  சிந்தனையாளர்களை இந்து மெய்ஞான மரபுகளில் ஒன்றான யோகாசாரமரபில் நீங்கள் பொறுத்திப் பார்த்தது (இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்கள் புத்தகம்) எனக்கு மிகப் பெரிய திறப்புக்களை அளித்த ஒன்று.

எனக்கு, ஓஷோ அவ்வளவு பரிட்சயம் இல்லை என்றாலும் கூட ஜெ.கி. யின் மேற்கோள்களான “Confident man is a dead human being”, “Living in the Presence” போன்றவைகளால் ஈர்க்கப்பட்டு அவரை அறிய முயன்றதுண்டு.

ஆனால், தங்களுடைய உரையில் நிகழ்காலத்தில் வாழ்வது என்பதற்கான அன்றைய அறைகூவலிற்கான அவசியத்தை நீங்கள் விளக்கிய விதம் ஒரு பொறுப்பான ஆசிரியர்க்குரியது. சமீபத்தில் இரா.குப்புசாமி அவர்கள் எழுதிய Goethe என்ற சிறு புத்தகத்தை (தமிழினி வெளியீடு) படிக்க நேர்ந்தது. அதில் தாமஸ் கார்லைல் என்ற அறிஞரை  சமகாலத்தில் வைத்து மார்க்ஸூம், எமர்சனும் எப்படி புரிந்து கொண்டார்கள் என்பது விளக்கப் பட்டிருந்தது. மார்க்ஸின் மூலதனம், தாமஸினுடைய Cash Nexusல் இருந்து உருவானது என்பதும் தெரிய வந்தது. இதன் ஒரு சிறு தெறிப்பைத்தான் நீங்கள் அன்றைய இன்றையும், இன்றைய இன்றையும் தொடர்புபடுத்தியதில் உணர்ந்தேன்.

அன்றைய ‘இன்று’ பெரும்பாலும் கடந்த கால உலகப் போர்களின் துயரங்களாலும், நவீனத்தின் சோர்வுகளாலும் நிரம்பி குறுகியிருந்தது. சுருங்கச் சொல்ல வேண்டுமென்றால் அன்றைய ‘இன்று’ கடந்த கால நினைவுகள் மட்டுமே. இந்த நினைவுகளை ஒதுக்கி வெல்வதற்காக உருவாக்கப்பட்ட ஆப்த வாக்கியம்தான் நிகழ்காலத்தில் வாழ்வதென்பது.

ஆனால் நீங்கள் சுட்டிக்காட்டியது போல் இன்றைய ‘இன்று’ தொழில்நுட்ப பாய்ச்சலால் விரிவடைந்து கடந்த காலத்திற்கு மட்டுமல்ல, நிகழ்காலத்திற்கும் இடமில்லாமல் செய்திருக்கிறது. தற்போதைய ‘இன்றில்’ மட்டுமே இருப்பது கிட்டத்தட்ட தன்னை மறந்த ஒரு போதை நிலைதான்.

முதன்முதலாக இவ்வுரையைக் கேட்பவர்களுக்கு, தங்களுடைய பின்தொடரும் நிழலின் குரல், விஷ்ணுபுரம் மற்றும் இந்து மெய்ஞான மரபில் ஆறு தரிசனங்கள் போன்ற படைப்புக்களைப் படித்தபோது எனக்குக் கிடைத்த பிரமிப்பும் அதைத் தொடர்ந்த தெளிவும் நிச்சயம் கிட்டியிருக்கும்.

அன்புடன்

முத்து

அன்புள்ள முத்து,

இந்த உரை ஓஷோவை அறுதியாக வகுத்துக்கொள்வதற்கு உரியது அல்ல. அதை தன்னளவில் ஒவ்வொருவரும் அவர்களே செய்யவேண்டும். இது அதற்கான ஒரு வழிகாட்டி, எந்தெந்த கோணங்களில் அதைச் செய்ய முடியும் என்பதற்கான ஒரு தொடக்கம்.

ஓஷோவை நாம் வெவ்வேறு கோணங்களில் பார்த்திருப்போம். ஓஷோ முற்றாக அனைத்தையும் மறுத்தவர் என்றும், இதுவரை இல்லாத சிலவற்றைச் சொன்னவர் என்றும் பலர் நம்புகிறார்கள். அவ்வாறல்ல, மரபின் தொடர்ச்சியாக அவர் இருக்கிறார், எங்கே பொருந்துகிறார் எங்கே விலகுகிறார் என அறிவது ஒரு தெளிவை அளிக்கும்

ஓஷோவின் ஒட்டுமொத்தம் என்ன ஏன்று சொல்வதை விட எந்தெந்த சரடுகள் வழியாக அவரை சென்றடையலாம் பரிசீலிக்கலாம் என்றே இந்த உரை சொல்கிறது

ஜெ

திரு ஜெமோ

ஓஷோ உரை கேட்டேன். நான் ஓஷோ மேல் அழுத்தமான நம்பிக்கை உடையவன். ஓஷோவை மறுக்க எந்த மனிதனாலும் முடியாது என்று நினைக்கிறேன். அவரைப்பற்றிப் பேசவே தகுதி வேண்டும். அவர் ஞானி. அவரைப்பற்றி நீங்கள் பேசியதே தவறு. அவர் உங்களுக்கு உரியவர் அல்ல.

நாகராஜன்

அன்புள்ள நாகராஜ்

தவறு இருப்பது நீங்கள் என் உரையை கேட்டதில்தான். ஓஷோ ஞானத்தின் முழுமை, அவரன்றி வேறு ஒருவர் தேவையில்லை, அவரை மறுக்கவே முடியாது என நினைப்பவர் இந்த உரையையே கேட்டிருக்கக் கூடாது. உங்களுடையது நம்பிக்கையின் பாதை- அதைப் பேணிக்கொள்க

இது அவரை அறிந்து, ஐயம்கொண்டு மேலே செல்ல விழைபவர்களுக்கான உரை

ஜெ

ஓஷோ- கடிதங்கள்

ஓஷோ- உரை- கடிதம்

ஓஷோ,கோவை, நான்குநாட்கள்

முந்தைய கட்டுரைஅறிவியல்,கற்பனை- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅருண்மொழியின் தொடக்கம்