இரு கேள்விகள்

அன்புள்ள ஜெ

கீழ்க்கண்ட வரி யார் எழுதியது? உங்கள் ஊகம் என்ன?

எழுத்தாளன் என்பது தொழில் அல்ல; அது ஓர் உணர்வு. அதை அடுத்தவன் சொல்ல வேண்டும் என்பதில்லை. அசல் எழுத்தாளன் அவனே அதை உணர்வான். ஒருவேளை  ஒன்றையுமே எழுதாமல் / வெளிவராமல் போயிருந்தாலும் நான் எழுத்தாளனே

சரவணன் அருணாச்சலம்

 

அன்புள்ள சரவணன்,

சு.வேணுகோபால் ஏறத்தாழ இதேபோல எழுதியிருக்கிறார். நீங்கள் கொஞ்சம் மாற்றியிருக்கலாம். எல்லா எழுத்தாளர்களுக்கும் உரிய தன்னுணர்வு. வேறெந்த அடையாளமும் ஒவ்வாமையை அளிக்கும். இந்த உணர்வு வந்தபிறகே உண்மையில் ஒருவன் முதல்கதையை எழுத ஆரம்பிக்கிறான்.

அரசு, மதம், கொள்கை, கோட்பாடு, கட்சி என அனைத்துக்கும் விசுவாசமின்மையை தெரியப்படுத்திய பின்னர் எழுதுபவனே எழுத்தாளன்.

ஜெ

 

அன்புள்ள ஜெ.,

வெண்முரசின் சில பகுதிகளைப் படிக்கும்போது இதையெல்லாம் கண்ணாடி முன்னால் நடித்துப் பார்க்காமல் எழுதியிருக்க முடியாது என்றுதான் தோன்றியது. குறிப்பாக ஒரு சொல்லை உச்சரிக்கும்போது பாத்திரங்களின் முகத்தில் பரவும் உணர்ச்சிகளை விவரிக்கும்போது, சில முகபாவங்களை எழுத்தில் உணர்த்தும்போது. அதேபோல் சில பாத்திரங்களை படித்தபோது, நாம் ஏற்கனவே பார்த்த அல்லது அந்தந்த பாத்திரங்களின் இயல்புகளோடு ஒத்துப்போகக்கூடிய நடிகர்களின் முகங்கள் இயல்பாக நினைவில் எழுந்துவருவதைத் தடுக்க முடியவில்லை. குறிப்பாக கர்ணனைப் பற்றிப் படிக்கும்போது நடிகர் திலகம். அதுபோலவே உத்தரன் – நடிகர் சாம்(அடுத்த படியாக வையாபுரி), துச்சலை – தண்ணீர் தண்ணீர் காலத்து சரிதா, பூரிசிரவஸ் காக்கிச்சட்டை கமல் (அல்லது நம்ம சென்னை வட்டம் ஜாஜா – உண்மையாகவே, அர்ஜுனனுக்கும் சரியாகத்தான் இருப்பார்) இப்படி. உங்களுக்கு இதுபோல முகங்கள், எழுதும்போது மனதில் தோன்றுவதுண்டா?

மகாபாரத, இராமாயண நெடுந்தொடர்கள் என்றென்றைக்குமாக இடம்பெறாத தொலைகாட்சி சேனலே இன்று இல்லை. எந்தச் சேனலைப் பார்த்தாலும் மழு மழு ‘ஜில்லட்’ முகத்தோடு ‘ஜிம்பாடி’ சிவனோ, ராமனோ, விஷ்ணுவோ (பலரும் முஸ்லீம் மதத்தைச் சேர்ந்தவர்கள் என்பது செய்தி) நம்மைப் பார்த்து பேசிக்கொண்டிருக்கிறார்கள்.  இன்றைய பொழுதுபோக்கு உலகின் பெருவெடிப்பில் Marvel போன்ற நிறுவனங்கள் வெண்முரசை web series ஆக செய்தாலும் ஆச்சரியமில்லை என்கிற நிலையில் அதன் முக்கிய கதாபாத்திரங்களுக்கு நீங்கள் எந்தெந்த நடிகர்களைப் பரிந்துரை செய்வீர்கள்?

அன்புடன்,
கிருஷ்ணன் சங்கரன்

அன்புள்ள கிருஷ்ணன் சங்கரன்,

உண்மையில் வெண்முரசுக்கு இப்போதே மூன்று கோடி வரை காட்சி ஊடகத் தயாரிப்புக்கான உரிமைத்தொகை பேசப்பட்டிருக்கிறது. நான் ஏற்றுக்கொள்ளவில்லை.

புராணங்கள் நிகழ்த்துகலைகள் வழியாகவே நிலைகொள்கின்றன. மாபெரும் நடிகர்கள் புராணநாயகர்களை நடித்திருக்கிறார்கள். எவரும் மாறாத முகங்களை புராணநாயகர்களுக்கு அளிப்பதில்லை. அந்த நடிகர்கள் மாறிக்கொண்டே இருப்பார்கள். புராணநாயகர்கள் மாறாமலிருப்பார்கள். ஆகவே சினிமாவாக ஆவது தவறில்லை.

ஆனால் எனக்கு உள்ளம் ஒப்பவில்லை. அதற்குக் காரணம் கிடையாது. ஆகவே அக்கற்பனைகளே இல்லை.

ஜெ

முந்தைய கட்டுரைகோவை வாசகர் சந்திப்பு, மார்ச் 2021
அடுத்த கட்டுரைஎச்சம், மலை பூத்தபோது – கடிதங்கள்