இரு கடிதங்கள், பதில்கள்

அன்புள்ள ஜெ,

This is official now. I am addicted to you. தாங்கள் எழுதிய அல்லது பரிந்துரைத்த ஏதாவது புத்தகம் என் அலமாரியில் படிக்கப்படாமல் இல்லாமல் போனால் பதட்டமடைகிறேன். கூரியரில் வந்துகொண்டிருந்தால் ஒரு மணிநேரத்துக்கு ஒரு முறை எங்கே வருகிறது என்று பார்க்கிறேன். கையிருப்பில் பணம் குறைந்து கொண்டே வந்ததால் இன்று புறப்பாடு நூலைத் திருட்டு pdfஆகத் தரவிறக்கம் செய்தேன் (முதல் பாகத்தைத் தங்கள் தளத்தில் படித்துவிட்டேன்). பின்னர் அதை ரத்து செய்துவிட்டு amazonஇல் order செய்திருக்கிறேன். இனி அது வந்து சேர ஒரு வாரம் ஆகும். இன்று தங்களது ஓஷோ உரையைக் கேட்ட போது உள்ளே கொதித்துக்கொண்டிருந்த ஏதோ குளிர்வது போல் உணர்ந்தேன். நிகழ்காலத்தில் உங்கள் இருப்பை உணர்வது இது எனக்கு முதல் முறை. Weirdஆக எடுத்துக்கொள்ளாதீர்கள். உங்கள் முகத்தோடு முகம் வைத்து உரசுவது போல் கற்பனை செய்துகொண்டேன்.

விஷ்ணுபுரத்துக்குப் பிறகு நான் ஆவல் தாங்காமல் காத்திருக்கும் புத்தகம் யதி : தத்துவத்தில் கனிதல். பல முறை தொலைபேசி வாயிலாகவும் மின்னஞ்சல் வாயிலாகவும் தொல்லை கொடுத்துவிட்டேன். நாளை வந்துவிடும் என்றிருக்கிறார்கள். புலி வாயில் சிக்கிய மான் போல் குருவிடம் சீடன் சிக்க வேண்டும் என்பார் ரமணமகரிஷி. எழுத்தாளரிடம் வாசகனும் அப்படித்தான் சிக்குகிறான் போல.

அன்புடன்
பன்னீர்செல்வம்

***

அன்புள்ள பன்னீர்செல்வம்,

நன்றி. தீவிரமான வாசிப்பு என்றல்ல, தீவிரமான எதுவும் உண்மையில் கற்றல் அனுபவங்கள். என் நண்பர் ஒருவர் சட்டென்று கதகளிப் பிரியரானார். என் வழியாகத்தான். காய்ச்சல்போல சில ஆண்டுகள் அவரை அது ஆட்டிவைத்தது. எந்த ஒரு புதிய கலைக்குள்ளும், அறிவுத்துறைக்குள்ளும் நுழைகையில் அந்த அதிதீவிர அர்ப்பணிப்பு நிகழவேண்டும். அது நம்மை மிகக்கூர்மையானவர்களாக ஆக்கும். நெடுந்தொலைவு கொண்டுசெல்லும்

கடைசியில் கணக்கிட்டுப் பார்த்தால், இந்த வாழ்க்கையில் இப்படிச் சில ’அடிக்‌ஷன்’கள் தவிர ஏதும் பெரிய பொருட்டாக இல்லை. இருபது முப்பதாண்டுகள் கழித்து திரும்பிப்பார்க்கையில் இப்படி ‘பித்தெடுத்து அலைந்த’ நாட்களே மெய்யான வாழ்க்கையாக இருந்திருக்கின்றன என்று தெரியவரும்.

எந்த பித்துக்கும் ஆட்படாத உள்ளம் கொண்டவர்கள் ,ஜாக்ரதையானவர்கள், இழப்பே இல்லாதவர்களாகவும் எங்குமே உரசிக்கொள்ளாதவர்களாகவும் மறுகரைக்குச் சென்றிருப்பார்கள். அவர்கள் அடைந்தவை என ஒரு சில கணங்கள்கூட இருக்காது. அவர்கள் வாழ்ந்திருக்க மாட்டார்கள், வெறுமே கடந்து சென்றிருப்பார்கள். அதற்காகவா வந்தோம்? 

ஜெ

***

வணக்கம் ,

என் முதல் புத்தக வாசிப்பு பொன்னியின் செல்வன்.அதன் பிறகு நான் வெண்முரசு மட்டுமே வாசிக்கிறேன் வாசித்து வாசித்து சொல்லமுடியாத மணக்கிளர்ச்சி அடைகிறேன்.

எங்கள் கிராமத்தில் ஓர் அறக்கட்டளை தொடங்க ஆசை. உங்க வழிகாட்டுதல் வேண்டும். உங்க வெண்முரசு வாசகர்கள் நாங்கள்.நான் Dubai ல UNITED HEALTHCARE LLC நிறுவனம் நடத்திட்டு இருக்கிறேன் 40% பங்கில். உங்க எல்லா வீடியோ வும் follow பண்ணிருக்கிறேன்.

நன்கொடை சரியானதா இருக்கவேண்டும். அது கோவிலுக்கும் கேளிக்கைக்கும் இருந்துவிடக்கூடாது என்று நீங்க ள்சொன்னதற்கு பிறகுதான் அதை மட்டுமே செயெதேன். நான் இப்போது ஒரு 5 லட்சம் சேர்த்து இருக்கிறேன்

என் பெயர் செல்வராஜ் +1மனைவி பெயர் செல்வி  mphil Bed மகன் செ.செ.varsan மகள் செ. செ. சைதன்யா. எனது மகள் பெயர் உங்கள் எழுத்தின் மேல் இருந்த பெரு விருப்பத்தால் வைத்தேன் .

உங்களுக்கு நேரம் இருந்தால் உங்களது வாசகர் உங்களை 15 நிமிடம் சந்திக்க அனுமதி கிடைக்குமானால் எங்களுக்கு உங்கள் அறிவுரை வழிகாட்டல் வேண்டும்.

எனது நீண்ட நாள் ஆசை, அடுத்த வருடம் விஷ்ணுபுரம் இலக்கிய விழாவுக்கு வரவேண்டும்

செல்வராஜ்

***

அன்புள்ள செல்வராஜ்

வெண்முரசு வாசிப்பதில் மகிழ்ச்சி. நாம் சந்திப்போம்.

சேவை குறித்த எண்ணங்கள் ஒருவரின் மன உயர்வைக் காட்டுகின்றன. அவைதான் வாழ்க்கையை நிறைவுற்றதாக்குகின்றன. ஆனால் மறுபக்கம் தெளிவான யதார்த்தநோக்கும் தேவை. இல்லையேல் சீக்கிரமே ஏமாற்றம் ஏற்படலாம். உடனே அறம், சேவை ஆகியவற்றின்மேல் ஒவ்வாமையும் உருவாகலாம். அது பெரிய ஆன்மிக இழப்பு.

சேவை என்றால் எந்த சேவை, அதன் தேவை உள்ளதா  , அதைச் சிறப்புறச் செய்ய இயலுமா என்று சிந்திக்கவேண்டும். அதில் உறுதிப்பாடு வேண்டும். அதன்பின்னரே முடிவெடுக்கவேண்டும்

எந்தச் சேவையும் உடனடியாக கண்கூடான பயனை வெளிப்படுத்தாது. எளிதில் அங்கீகரிக்கவும் பெறாது. நம் தரப்பில் சரியாகச் செய்யவேண்டும், நாம் நிறைவுறவேண்டும், அதுவே போதும் எனச் செயல்படுபவர்களே நீண்டநாட்கள் செயல்படுகிறார்கள். நீண்டநாட்கள் செயல்படுபவர்களே உண்மையான சாதனைகளைச் செய்கிறார்கள். கொடைகளை அளிக்கிறார்கள்

சேவை எதுவானாலும் அது நம்மால் செய்யப்படவேண்டும். நம் கண்காணிப்பில் நிகழவேண்டும். ஏனென்றால் சேவை என்பது எளிதல்ல. உலகியலில் ஈடுபடுபவர்களால் அதைச் செய்ய முடியாது. ஓர் ஆன்மிகமான எழுச்சியே தன்னலத்தை விட்டு மேலெழச்செய்து சேவைக்கு மனிதர்களைச் செலுத்துகிறது. ஆனால் அந்த ஆன்மிக எழுச்சி மிக தற்காலிகமானது. மிக எளிதில் தன்னலத்துக்கு வழிவிடக்கூடியது.

ஆகவே தொடர்ச்சியாக தன்னைத்தானே ஊக்கப்படுத்திக்கொண்டு செயல்படவேண்டியது. மனிதர்கள் எவராயினும் அதை சாதாரணமாக எதிர்பார்க்க முடியாது. ஆகவே சேவைக்குப் பிறரை எதிர்பார்ப்பவர் எளிதில் ஏமாற்றமடைவார். தன்னுடைய சேவை சார்ந்த மனநிலையை தொடர்ச்சியாக ஆன்மிகமாக, உணர்ச்சிகரமான, கருத்தியல் ரீதியாக திரட்டி மறுபடியும் குவித்துக்கொள்ளாதவர் காலப்போக்கில் ஆர்வமிழப்பார்.

இந்த தெளிவுடன், எந்த மிகையான கனவும் எதிர்பார்ப்பும் இல்லாமல், சின்ன அளவில் தொடங்குங்கள். வாழ்த்துக்கள்

ஜெ  

முந்தைய கட்டுரைசிற்றெறும்பு, நிறைவிலி – கடிதங்கள்
அடுத்த கட்டுரைஓஷோ உரை – கேள்விகள்