இருபத்தைந்து கதைகள்- கடிதம்

Seamless tropical pattern with tigers and bunch of hibiscus flowers and leaves

இருபத்தைந்து கதைகள். மொத்தமாக திரும்பி பார்க்கையில் மற்றுமொரு நிகர் வாழ்வனுபவ நாட்கள். தங்களை அக்கதைகளில் கண்டவை, வேறு ஒன்றை கண்டடைந்தவை, அலசி ஆராய்ந்தவை என ஒவ்வொரு கடிதமும் ஒரு கதைகள் கூடத்தான்.  அனல் பழுத்த இரும்பு, நீர் தொட்ட அனுபவம் என, மழை நீர் இருக்கும் மரம் காற்றில் எதிர்பாரா கணத்தில் சிதறித்த துளிகள் என, பின் மாலையின் இருட்டில் மரங்களில் கீழ் அசைந்தபடி இருக்கும் தீப ஒளி என எக்கதைகள் எனக்கு படிக்கும் போது   தரிசனத்தை தந்தன, ஒரு கணத்தில் ஒடுங்கி காலம் மறக்க வைத்தன என

திரும்பி பார்க்கிறேன்

23 – திரை

நாயக்கர் ஆட்சி உலகத்தில் வாழ்ந்து திரும்பினேன். ஒரு ஆணையின் வேலை முடிப்பை நிறைவேற்றி மறந்து வாழும் ஒரு வாள் போல அவனின் மொத்த வாழ்வும். உள்விழித்த விழியுடன் அனைத்தையும் முடித்து நாயகன் புதுசேரி சென்று ஒதுங்குவது முத்தாய்ப்பு. அலை ஒதுக்கிய ஓர் உயிர். மீனாட்சி எனும் அரசி பற்றி அல்ல, இத்தகைய அரசின் வேட்டை நாய் என இருக்கும் ஒருவனின் பார்வையில் கதை சென்றது அருமை. ஹைதராபாத் சந்தா சாஹிப் தனியே வந்து இருந்து, அரசனுக்கும் பெரிய தொகை வாங்கி கொடுத்த மாதிரி காண்பித்து தானும் ஒரு முப்பது பார்த்து விட்டு அங்கே சென்று அம்மைநாயக்கனூரில் போரில் துரத்தி விட்டு, திரும்ப வந்து வழித்து எடுத்து செல்கிறான். எத்தனை சுரண்டல்கள்? திரும்ப திரும்ப இன்று வரை.

அக்காலத்தின் முறைகள், உடைகள், பேச்சு, வழக்கங்கள், அரசியல் படிநிலைகள், பொருளாதாரம் என வேகமாக செல்லும் ஒரு நதியின் விரைவிலும் தவறாமல் வந்தபடி இருக்கும் கதையின் தகவல் ஓட்டம். ராஜாங்கத்தில் நடக்கும் அத்தனை அரசியலும் ஒரு கதையில் அடக்கி வைத்து இருப்பது அதிசயம்.

மீனாட்சி தாயார் சட்டென நீர் கோர்த்து சிறுமி என எழுகையில், மதுரையில் ஜனங்கள் பெருங்கூட்டம் வெளியேறி செல்லுகையில், ஒரு ராட்சச கல் உருளை என காலம் கொன்று விட்டபடி செல்வதை காண முடிந்தது. தாயுமானப்பிள்ளை மட்டும் விதிவிலக்கா? அவரும் வேறுஒரு திரை அணிந்து தான் அடங்கி இருக்கிறார். மெய்மை எனும் இறுதி திரை.

18 – இருளில்

உண்மையில் எப்படி இருந்திருக்க வேண்டும் எனும்படியான கனவுகளில் ஒன்று அந்த இரவு. திகைக்க வைத்த அவ்விரவின், அவனின் அனுபவம். ஜன்னலும் கதவும் அவள் சாத்தியிருக்காவிடில், ஒரு பெருங்கனவென கூட நினைக்க வைக்கும் அளவு அடர்த்தி நிறைந்த சொற்கள். தீவிரமான முழுமையான மற்றும் முதல் அனுபவம் என்பதாலேயே திகைத்து கழன்று விட வைத்து விட்டது. உன்னதம் என்று கூட சொல்லி கொள்ளலாம். அந்த இரவை, இரவின் அவளை மீண்டும் தேடியபடி அவன். ஒருவேளை மிக கீழ்மையாக, அருவருக்கும் படியாக அப்பெண் அனுபவம் இருந்திருந்தால்? மறந்து சென்று இருப்பானா அல்லது ஒரு உன்னதத்தை தேடி இதை போல ஓடி கொண்டு இருந்திருப்பானா?

அப்படி மின்னல் என இல்லாமல், கருப்பு என்றும் நேசிக்கவில்லை என்றும் சொல்லிக்கொண்டாலும் இன்னொரு பெண்ணை தொடாத மனைவியின் பதிவுகளோடு அப்துல், மிக எளிதாக அவனிடம் இணைவை காண்கிறார், உணர்ந்து கொள்கிறார். மற்றவனுக்கு அது பிளந்து ஆராய ஒரு அனுபவ தகவல்.

இப்படி இறுக்கி மூச்சு முட்ட வைக்க கடந்த அனுபவம் இருக்கையில், மல்லாந்து விரிந்த நெடுஞ்சாலையில் தான் உறங்க முடியும். வந்துபோனபடி இருக்கும் வாகனங்கள் பெரிய ஆசுவாசம்

8- படையல்

கண் தெரியா இருட்டு. அடைந்து கிடந்த கோவில். தெய்வங்கள் சிலைகளாகி கல்லாகி போன காலம். அடர் மலை. ரத்தம் உடல் வழுக்கி, சிவனடியார் உள் சென்று சிவன் தொட்டு சுடர் ஏற்றி கண்ட உணர்தல்…  கணங்கள். புது துணி உடுத்தி, புதுத்தொடர் தொடங்கும் ஒருவர். ஆனால், இருந்த இடத்தில் ரத்தம் கண்டும் அசையாமல், அல்லா என சொல்லியபடி இருக்கும் பாவா எனும் ஒருவர். எல்லாவற்றையும் தின்று விட்டு செல்லும் வீரர்கள், வெறும் வயிற்றில் பாட்டு பாடியபடி இருக்கும் பிள்ளை, நயினார் என ஒரு கூட்டம்.

மண்டபம் என்பதில் இருக்கும் காலம் தாண்டிய அனைவருக்குமாம் என இறை. நமது தேசத்தின் மொத்த சாராம்சம் அந்த இடத்தில் சொல்லியாகி விட்டது.

9-தீற்றல்

இதே இழையில் இந்த கண் கவிதை கதை. அலை அடங்கி காணாது ஆழத்தில் கிடக்கும் கரும்நெடும் பாறை என அவளில் அந்த தீற்றல்

மதுரை திருவிழாவில் உறைந்த போன காலத்தில் விழிநீர் வழிய இறை கண்ட தேவன் என அவன் நிற்பதும் அப்படி வாழ்வின் ஒரு கணம். என் இளமையின் வயதுகளில் கண்ட கண் கவிதைகள் மிளிர்ந்து வந்தது. முகத்தை மட்டுமே பார்த்து பிரமிக்க வைத்து இமை விழிப்பதற்குள் கடந்து விடும் காற்றின் தீற்றல்கள்.

“அது அந்த கணத்திலேயே அப்டியே காணாம போயிடுச்சு… அந்த கணம் நிஜம்.” தெய்வங்கள் இறங்கி வந்து கன்னம் தொட்டு தலை முடி சிலுப்பி சென்ற கணங்கள். தேவதச்சனின் கவிதைகளில் உறைந்து நிற்கும் சில satori எனும்படியான ஜென் கணங்கள். வாழ்வு அதற்கு முன், பின் என மாறி விடுகிறது

10- ஏழாம் கடல்

முத்தும் ஒன்றே விஷமும் ஒன்றே எனும் போது முத்து கண்டவுடன் எதற்கு குதித்தோடி சொல்ல வேண்டும்? விஷம் வந்தால் உண்டு இறக்க வேண்டியது தான். அவ்வளவே.  உயிருடன் இருப்பது வரை வாராவாரம் சந்திப்புகளும் குலவல்களும் தான் முதன்மை. இறுதி வரை கொடுக்க முடியாத முத்துவிற்கு ஏங்கி, விஷமாகி போன சிப்பி பற்றி அழுது செத்து விட்டு போன வியாகப்பன் ஒரு முத்து.

சொல்லி வைத்தாற்போல வந்து பேசி சிரித்து சாப்பிட்டு சென்ற ஒரு ஆத்மா. இவனின் அப்பா அங்கே போனதாக ஒரு வரி இல்லை. எதையும் எதிர்பாரா ஆண்களின் நட்புலகம். ஆசிர்வாத உறவு. இருந்தார்கள் இறந்தார்கள் – ஒரு அதிசயமாக. இதற்கு மேல் போட்டு என்ன கருமத்துக்கு ஆராய வேண்டி கிடக்கிறது. போட்டு அலச, நீர்த்து போகும் அர்த்தங்கள்

20 – நகை

தன்னின் வேலை, சம்பளம் தந்ததை ஷிவ் போன்ற முன் சென்றவனோடு ஒப்பிட்டு செத்து கிடக்கையில் காலில் விழ வைத்து சுத்தமாக சுய மதிப்பை கொன்று விட்டு, அவன் எதை அந்த தனித்து இருந்த கழிப்பறையில் அடைந்தான்?  உடலாக பொருளாக பார்க்கும் பார்வையை? அது தந்த விடுதலையை போல உணர்வில் ஹாய் சொல்லி காலில் விழ வைக்கும் பதவி கார்டு பார்த்த பின் தெரிகிறான் ஆடி காரில் அவளை போன்றோர் இருக்கும் தொலைவு பற்றி. புன்னகையை தன் நகையென அணிந்து செல்லும் சுடர் ஒளி நம்பிக்கை கொண்டவள்கள்.

1 – என்னும்பொழுது

கணக்கெடுத்தா நஷ்டப்படும் மனுஷ ஜீவிதத்தில … அமிர்தா டீவியில் சுளீர் என இவ்வார்த்தை மின்னியது

உங்களின் கோட்டை ஏரியா. ஆண்-ண் முள் விளையாட்டு. சுஜாதா நினைவு வந்தது – உடலின் வர்ணனைகள் படிக்கும் போது.

எதனால் அவர்களுக்குள் இந்த அனல் நீரோட்டம்? தெரியாது. ஆனால் நஞ்சென பரவி பின் உறவில் மறந்து தரை இறங்கி பின் மீண்டும் முளைக்கும் அந்த முள் மரம். தீவிர அலை ஆட்படுத்தலுக்கு பின் உள்ளிருந்து மேல் வருகிறது – யார் முதலில் என அவள் கேட்கிறாள். எதிர் பக்கம் கை நீட்டியபடி தான் எப்போதும் துவங்குகின்றன இந்த வகை விளையாட்டுகள். எண்ணுவதை மறைத்தபடி செல்வது தான் நிம்மதி போல

5/6 – ஒரு கணம் –

“சரி, நான் குதிக்கிறேன்” அவனின் நகர்தல இது. வள்ளியம்மை தீயில் பாயிகையில் அவளின் தருணம். கந்தர்வர்கள். சாமிநாத ஆசாரி எனும் பாட்டு பாடி, சிரிக்க வைத்து, படம் வரைந்து செல்லும் ஒரு கலைஞன் ஒரு மனிதன் பெயரிட்டு மரிக்கும் அந்த ஆட்டின் கண்கள் வழியே என்ன கண்டான்?

1700 கால வரலாறு, நாயக்கர் ஆட்சியின் தகவல்கள் கந்தர்வனின் சொட்டு, எரிசிதையிலும் திரையிலும் மிக விரிவாக படமாக காண வைக்கும் நுண் தகவல்கள், பேச்சு வழக்கம், ஊர் நிலவரம் என விரிவாக ஒரு காலகட்டத்தின் ஆவணம்

இடைவிடாத மனிதர்கள். கூர் கதியில் வரும் போலீசை அப்பா என்று கூப்பிடும் நக்கல் சிறுவர்கள், கேஸ் கிடைத்தவுடன் மிரட்டும் ஓநாய் வக்கீல்கள், முதல் அனுபவத்தில் ஆபத்தில் காப்பற்றிவிட்டு மாட்டி கொள்ளும் சராசரி, காசு எனும்போது ஏழை என்றவன் கொள்ளும் மாற்றங்கள் என பொங்கி நுரைக்கும் மனிதர்கள்.

ஆனால்,

அந்த 100 கதைகளில் வெளியே வந்த அத்தருணங்களில் இதில் நான் அடையவில்லை. வரம் – தூவக்காளி – மாயப்பொன் –பொலிவதும் கலைவதும் என பல தடவை சென்று தொட முடிந்த இடத்தை இவைகளில் எட்ட முடியவில்லை என்று சொல்லி கொள்கிறேன் எனக்குள்.

இந்த 4 வரிகளை எடுத்து விடவும். ஒன்றை மற்றொன்று கவ்வ முடியாது அல்லவா. மொழி எல்லையின் சாத்தியங்களை எல்லா வகைகளிலும் வளர்த்து செல்லும் கைகளுக்கு ஒரு பொன் மோதிரம்

அன்புகளுடன்,

லிங்கராஜ்

25 எச்சம் [சிறுகதை]
24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]
21 அறமென்ப…  [சிறுகதை]
20 நகை [சிறுகதை]
19.எரிசிதை [சிறுகதை]
18 இருளில் [சிறுகதை]
17 இரு நோயாளிகள் [சிறுகதை]
16 மலைபூத்தபோது [சிறுகதை]
15 கேளி [சிறுகதை]
14 விசை [சிறுகதை]
13. இழை [சிறுகதை]
12. ஆமென்பது[ சிறுகதை]
11.விருந்து [சிறுகதை]
10.ஏழாம்கடல் [சிறுகதை]
9. தீற்றல் [சிறுகதை]
8. படையல் [சிறுகதை]
7.கூர் [சிறுகதை]
6. யட்சன் [சிறுகதை]
5. கந்தர்வன் [சிறுகதை]
4.குமிழிகள் [சிறுகதை]
3.வலம் இடம் [சிறுகதை]
2.கொதி[ சிறுகதை]
1.எண்ணும்பொழுது [சிறுகதை]
முந்தைய கட்டுரைஅஞ்சலி:வே.ஆனைமுத்து
அடுத்த கட்டுரைசிவ நடனம் – ஆனந்த குமாரசாமி