கேளி, அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு..

மேலே எழுதிய தலைப்பு, blood money என்பதன் நானறிந்த மொழிபெயர்ப்பு.. blood money என்பது இன்சூரன்ஸ் கம்பனியிடம் இருந்து பிடுங்கும் பணத்திற்கான பெயர்.. வக்கீல்கள் வட்டாரத்தில் அந்த பணத்திற்கு அதான் பெயர்..

எனக்கு தெரிந்த ஒரு இளைஞன் வக்கீல். அவன் தந்தையை மருத்துவமனையில் அனுமதித்திறுந்தோம்.  அப்போது அங்கே ஒரு accident கேஸ் வந்தது. சிறிது நேரத்தில் சாதாரண உடையில் ஒரு இளைஞன் வந்தான். பார்க்க வெகு சாதாரணமான உடையில் இருந்தான். அவனை பார்த்ததும் அங்கு இருந்த  வக்கீல் நண்பர்கள் அவனை அடையாளம் கண்டு கொண்டு பேசி கொண்டிருந்தனர்..

ஒன்னும் தேராது, சாதாரண அடிதான் என்று கேலி பேசி கொண்டிருந்தனர். எனக்கு ஆச்சரியமாய் இருந்தது.. சிறிது நேரத்தில் ஒரு போலீஸ்காரர் வந்தார்.. விசாரித்தார்.. சென்றார்..

அவன், போன பின் அங்கு இருந்த வக்கீல் நண்பரிடம் கேட்டேன். அவனும்  இளைஞன்.. 30 வயதுக்குள்ளானவன்..  அவன் சொன்ன கதை உங்கள் அறமென்ப சிறுகதை..

உங்கள் பக்கத்தில் தான் இருப்பான்.. ஆனால் அவன் வக்கீலின் ஆள் என்று தெரியாது. சாதாரணமாக விசாரித்து அறிவுரை கூறி, உங்களை வக்கீலிடம் அழைத்து செல்வான்.. உங்கள் நிலையை பார்த்த வக்கீல் உடனே உங்களை தனியார் மருத்துவமனைக்கு அழைத்து செல்ல சொல்லுவார்.. செலவிற்கு ஒரு லட்சம் பணமும் கொடுப்பார்.. கருணை வழிய நீங்கள் அவரை பார்த்து நன்றி சொல்லிவிட்டு கிளம்புவீர்கள்.. அந்த மருத்துவமனையில் 20 நாட்கள் சிகிச்சை..

இன்சூரன்ஸ் பணம் வந்ததும் உங்களுக்கு அழைப்பு வரும்.. மேசையில் பணமும், வக்கீல் ,உங்களை வக்கீலிடம் அழைத்து வந்த அந்த சாதாரண நபரும்..  10 லட்சம் பணம்..

உங்களுக்கு நான் கொடுத்த 1 லட்சம், இதை நான் எடுத்து கொண்டேன். அடுத்து கோர்ட் செலவு, ஜட்ஜ்கு பணம், எதிர் கட்சி லாயற்கு என்று அந்த வகையில் 1 லட்சம். அடுத்து போலீஸ் ஸ்டேஷன் பத்தி உங்களுக்கு தெரியும், எல்லாருக்கும் காசு போகும், அதுக்கு ஒரு லட்சம். அப்புறம் ஹாஸ்பிடல் செலவு, பில்  amount இந்த வகையில் 50,000.. இது போக அலைந்தது வந்தது னு 50,000..

இப்போ என்னோட பீஸ் .. பொதுவா இன்சூரன்ஸ்ல பாதிக்கு பாதிதான்.. ஆனா நீங்க பாவம்.. அதனால் நீங்க எவ்ளோ கொடுகிறீங்களோ பாத்து செய்ங்க.. லட்சத்தை பார்த்த அந்த ஏழைகள் இவ்ளோ கஷ்ட பட்டிருக்காரே நமக்காகன்னு 3 லட்சம் கொடுப்பார்கள்.. பாதிக்கு பாதி.. இப்போ வக்கீலுக்கு, 7 லட்சம்..

அதில், போலீஸ், அந்த சாதாரணமான தூதுவன், டாக்டர், தனியார் மருத்துவ மனை, கோர்ட் ஊழியர் என்று எல்லோருக்கும் பங்குண்டு.. அது அந்த பணத்தை பொறுத்தது..

இதில் நம்ப முடியாதது எது என்றால், விபத்து கேஸ் வந்ததும்  எப்படி வக்கீலின் ஆள் வருகிறார்.. அவருக்கு செய்தி சொல்வது அங்கு இருக்கும் கடை நிலை ஊழியர்கள்..  வாட்ச்மேன், wardboy,  போன்றோர்கள்.. அவர்கள் எதோ ஒரு வக்கீலுக்கு விஸ்வாசமாய் இருப்பார்கள்.  சில பேர் ஒரே நேரத்தில் பலருக்கும் தகவல் கொடுத்து பணம் பெறுவார்கள்..  முந்துவோர்க்கு முன்னுரிமை..

இதை அந்த நண்பர் சொல்லி முடிக்கும் போது அவர்கள் உலகத்தில் எத்தனை அரசியல் என்று ஆச்சரியமாய் இருந்தது.. அவர் சொன்னதை ஒரு குறும்படமாக எடுக்கலாம் என்று நினைத்திருந்தேன்.. அதன் தலைப்பு blood money..  ’குருதிப்பணம்’

உங்கள் தளத்தில் அந்த சிறுகதை படித்ததும் எனக்கு அதிர்ச்சியாய், ஆச்சரியமாகவும் இருந்தது.. இதை இனி எப்படி படமாக்குவது என்று.. எடுத்தாலும் அது அறமென்ப சிறுகதையை மையமாய் வைத்ததாய் ஆகிவிடும்.. பார்க்கலாம்..

உங்கள் கதையில், ஒன்றுதான் உறுத்தியது..  அந்த அடிபட்டவர்கள் காப்பாற்றியவனை காட்டிகுடுப்பது.. அதை மனம் ஏற்கவில்லை.. உண்மையில் மனிதர்களுக்கு மனம் வருமா தெரியாது.. வராது என்றே நினைக்கிறேன்..

இது போன்ற செயலில் ஈடுபடுபவர்கள் மூத்தவர்கள் என்பது உண்மை.. எனக்கு உண்மைகளை சொன்ன அந்த வக்கீல் 30 வயதுதான்.. அந்த பணமெல்லாம் நமக்கு வேணாங்க.. அது பாவம்.. அப்படி சம்பாதித்தவர்களின் நிலைமை படு மோசமாக இருக்கிறது என்றார்.. ஒருவருக்கு பணம் இருந்தும், திருமணம் ஆகாமல் தனி மரம்..  இன்னொருவருக்கு தோல் வியாதி, என்று அடுக்கி கொண்டே போனார்..

அறத்திற்கு ஆதரவாக அவர்கள் பேசியத்திற்கு சந்தோஷ படுவதா.. அறத்திற்கு எதிராக இருப்பவர்களுக்கு கோபப்படுவதா தெரியவில்லை..

பாலமுருகன்

***

அன்புள்ள ஜெ

அறமென்ப ஓர் அப்பட்டமான யதார்த்தத்தின் கதை. விபத்து வழக்குகளில் இப்போது நடந்துகொண்டிருப்பது ஒரு பெரும் கொள்ளை. 50 சதவீதப்பணம் பாதிக்கப்பட்டவர் கைக்கு வந்தால் ஆச்சரியம். இந்த வகையான குற்றச்சாட்டுக்கள் பல எழுந்தபின் இப்போதெல்லாம் நீதிமன்றம் பணத்தை பாதிக்கப்பட்டவர் அக்கவுண்டுக்கு நேரடியாக அனுப்பிவிடுகிறது. ஆனால் அதற்கும் இவர்கள் வழி கண்டுபிடித்திருக்கிறார்கள். எற்கனவே நம்மிடம் காலிசெக் வாங்கி வைத்துக்கொண்டு நாம் பணம் கொடுத்தால்தான் தருவார்கள். இவர்களிடம் அவசரத்தில் சிக்கிக்கொள்வோம். பிறகு வந்தது லாபம் என ஒதுங்கவேண்டியதுதான். இவர்கள் மிகப்பெரிய மாஃபியா. வட்டித்தொழில், ரியலெஸ்டேட் தொழிலுடன் சம்பந்தப்பட்டவர்கள். ஆனால் பேசிப்பாருங்கள். அத்தனை சோட்டா வக்கீல்களும் சேர்ந்து அப்படியெல்லாம் இல்லை, வக்கீல்களெல்லாம் மானுடசேவை செய்யும் மாமனிதர்கள் என்று சொல்வார்கள். இதுதான் உண்மை

ஜெகதீசன் ஆர்.

***

கேளி [சிறுகதை]

அன்புள்ள ஜெ

நலம்தானே?

நீங்கள் எழுதிய கதைகளில் இயல்பான சின்னக்கதை என்பது கேளிதான். ஆனால் அது என்னமோ செய்துவிட்டது. ஏனென்றால் அது வாழ்க்கையனுபவம். நான் இழந்துவிட்ட ஒரு கிராமம் உண்டு. கோயிலில் பத்துநாள் கொடைவிழா நடக்கும். கொடைமுடிந்தபின் சுவர்களில் எல்லாம் மேளம் ஒலிக்கும் என்று தோன்றும். அந்த அனுபவத்தை அத்தனை நுட்பமாக எழுதியிருந்தீர்கள். இலக்கியமென்றால் என்ன என்று எனக்குத் தோன்றியது அப்போதுதான். பருவெட்டான விஷயங்களை சொல்வது அல்ல. இந்த மாதிரி நமக்கே உரியது என நாம் நினைத்திருப்பதை இன்னொருவரான எழுத்தாளர் எழுதி வாசிக்கநேர்வதுதான் உண்மையான இலக்கிய அனுபவம்

மாரிச்செல்வம்

***

அன்பு ஜெ,

அமைதி ஒருவகையான காலமின்மையை உணரச்செய்தது. ஓசைகள் வழியாக உலகம் காலத்தில் ஒழுகிச்செல்கிறது, ஓசையில்லை என்றால் அது எங்கோ தரைதட்டி நின்றுவிட்டது.

இந்த வரிகளை அசைபோட்டிருந்தேன். தன் முதல் தடத்தை இந்த பூமியில் பதிக்கும் குழந்தை ஓசையுடன் தான் பிறக்கிறது. ஓசையடங்கி கருக்குழந்தையாக இருக்கும் போது அது காலத்தை உணர்வதில்லை. ஓசையே காலத்தின் முதல் பிரகடனம் என்று கண்டடைந்தேன். அப்படியானால் இடம் அமைந்து சொல்லடங்கிய பாதையில் செல்வோர் உணர்வது காலமின்மை அல்லது காலநீட்டிப்பு என்று கண்டேன்.

ஆனால் காலத்தில் இயல்பாய் வாழ்பவனுக்கு அங்ஙனம் அமைய முடியாதே. அவன் ஓசைகளோடு, சொற்களோடு இருந்தாக வேண்டும். காலத்தில் ஒழுகிச் செல்ல வேண்டும். அப்படி ஒழுகிச் செல்லுந்தோறும் காலத்தை நீட்டிக்க விரும்புவோர் இசையின் நுண்அதிர்வுகளோடு பயணிக்க வேண்டும். கதையின் நாயகனும் கூட செண்டை ஓசையின் வழி, கதகளி எனும் கலையின் வழி அவனின் காலத்தில் ஒழுகி அதன் ஒவ்வொரு அதிர்விலும் காலத்தை நீட்டிக் கொண்டு முழுமையாக வாழ்பவனாகப் பார்த்தேன். அதற்கு ஏதுவாக அவனின் நுண்ணிய வாழ்வுச் சித்திரத்தை அளித்திருந்தீர்கள்.

ஆற்றைப் பற்றி அவன் சொல்லும் போது “ஒழுகும் ஆறு” என்று சொன்னது கவித்துவமாக இருந்தது. “ஒழுகும் ஆற்றை பார்த்துக் கொண்டிருப்பது இதமாக இருந்தது. ஊர் அசைவற்று நிற்க ஆறுமட்டும் ஒழுகிக்கொண்டிருக்கிறது.” இந்த வரிகளே இதமாக இருந்தது. இப்படி ஒரு தருணத்தில் உந்தப்பட்டு தான் புறநானூற்றின் கவிஞன் ‘நீர் வழிப்படூஉம் புணைபோல் ஆருயிர் முறை வழிப் படுஉம்’ என்ற தருணத்தை தரிசித்திருக்க முடியும்.

இறுதியில் அவன்  உடல் அதிர்வுக்குக் காரணமான அந்தப் பாடலை இணையத்தில் தேடி அடைந்தேன். அந்த அதிர்வின் துளிகளை சுகுமாரி அவர்கள் முக பாவத்தில் ஏந்தியிருந்தார். அவன் காலத்தை நிறுத்தி அல்லது நீட்டி ஒவ்வொருவரிலும் அதிர்வுகளை மீட்டியிருந்ததைக் கண்டேன். கவித்துமான தருணம். நன்றி ஜெ.

பிரேமையுடன்

இரம்யா.

***

25 எச்சம் [சிறுகதை]
24 நிறைவிலி [சிறுகதை]
23 திரை [சிறுகதை]
22.சிற்றெறும்பு [ சிறுகதை]
21 அறமென்ப…  [சிறுகதை]
20 நகை [சிறுகதை]
19.எரிசிதை [சிறுகதை]
18 இருளில் [சிறுகதை]
17 இரு நோயாளிகள் [சிறுகதை]
16 மலைபூத்தபோது [சிறுகதை]
15 கேளி [சிறுகதை]
14 விசை [சிறுகதை]
13. இழை [சிறுகதை]
12. ஆமென்பது[ சிறுகதை]
11.விருந்து [சிறுகதை]
10.ஏழாம்கடல் [சிறுகதை]
9. தீற்றல் [சிறுகதை]
8. படையல் [சிறுகதை]
7.கூர் [சிறுகதை]
6. யட்சன் [சிறுகதை]
5. கந்தர்வன் [சிறுகதை]
4.குமிழிகள் [சிறுகதை]
3.வலம் இடம் [சிறுகதை]
2.கொதி[ சிறுகதை]
1.எண்ணும்பொழுது [சிறுகதை]
முந்தைய கட்டுரைஇளம் எழுத்தாளன் மொழியாக்கம் செய்யலாமா?
அடுத்த கட்டுரைவழியெங்கும் கல்லறைகள்… ராய் மாக்ஸம்