புதியவாசகர் சந்திப்பு, இலக்கியக் குழுக்கள்…

அன்புள்ள ஜெயமோகன் ,

கோவை புதிய வாசகர் சந்திப்பு முடிந்து ஐந்து நாட்கள் ஆகிவிட்டது. இப்போது நினைத்தாலும் அந்த இரண்டு நாட்களில் நீங்கள் பேசிய ஒவ்வொரு சொல்லும் நினைவுக்கு வருகிறது. பெரும்பாலும் அவை என் சொற்களாகவே மாறிவிட்டதை உணர்கிறேன். அதுதான் சரியான முறை என்றும் கூறிவிட்டீர்கள். இந்த கடிதத்தை ஒரு சமநிலையோடு எழுத கடந்த இரண்டு நாட்களாக பிரயத்தனப்பட்டுக் கொண்டிருந்தேன். ஆனால் இப்போது படித்துப் பார்த்தால் நிறைய சமன்குலைவுகள்தான் தெரிகிறது. ஆனால் அவற்றை முழுவதுமாக நீக்கினால் இந்த கடிதம் அர்த்தமில்லாமல் போய்விடும். சுந்தர ராமசாமிக்கு நீங்கள் 25 பக்க கடிதங்கள் அனுப்பியதாக சந்திப்பில் சொன்னீர்கள், எனவே அந்த அசட்டு நம்பிக்கையையும் சேர்த்து இதில் இதற்க்குமேல் திருத்தங்கள் செய்யாமல் அனுப்புகிறேன்.

உங்களை நேரில் சந்தித்துவிடலாம் என்று நினைத்தபோதெல்லாம் எனக்குள் எழுந்த மனத்தடைகளில் மிக முக்கியமான ஒன்று உங்கள் charisma பற்றிய பயம். ஆழ்ந்த சிந்தனையும் அதை அதன் தீவிரத்தன்மை குறையாமல் கேட்பவர்களிடம் கடத்தும் ஆளுமையும் பொருந்தியவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள். அவர்கள் அந்த ஆளுமையால் கட்டமைக்கும் அவர்களின் charisma, அதன் அருகில் செல்பவர்களுக்கும் அதனால் அரவணைக்கப்படுபவர்களுக்கும் ஒரு விதமான பெரும் போதையை தரக்கூடியது. அந்த போதை அவர்களின் ஈகோவை திருப்த்திப்படுத்தும்  போதை. அவர்கள் சராசரிகள் இல்லை என்று அவர்களை அங்கீகரிக்கும் போதை.

அப்படியான ஆளுமைகளை நான் எப்போதும் அஞ்சுகிறேன். அவர்கள் நம் சுயமாக சிந்திக்கும் திறனை அழித்துவிடுகிறார்கள். அவர்களை சுற்றி உருவாகும் cult மனநிலை அவர்களை நெருங்கிச்செல்லும் எவரையும் ஆட்கொண்டுவிடுகிறது. பிறகு, அது அங்கு இருப்பவர்களின் சுயத்தை அழித்து, அதற்குப் பதிலாக அந்த கட்டமைக்கப்பட்ட cult மனநிலையை அவர்களுக்குள் நிறைத்துவிடுகிறது. அதன் பிறகு அங்கு நம்மால் பிழைகளை காண முடியாது, மாற்று சிந்தனைகளை ஏற்க முடியாது, சமநிலை என்ற சொல்லுக்கே இடம் கிடையாது. ஒரு விதமான fanaticismதான் அங்கு பெரும்பாலும் மிஞ்சும். இந்த மனநிலையை தொடர்ந்து அரசியலிலும், ஆன்மீகத்திலும் நாம் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறோம்.

இப்படியான charisma மீதான பயம்தான் எனக்கு உங்கள்மீதும் இருந்தது. உங்களையும், விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தையும் தூரத்தில் இருந்து பார்க்கும் எவருக்கும் ஒரு விதமான ஓஷோ தன்மை தெரிவது இயல்புதான். அப்படியான மனநிலையில்தான் நானும் இருந்தேன். அந்த மனநிலையை உடைப்பதற்கான இரண்டு முக்கிய காரணிகள் இந்த பெருநோய் காலத்தில்தான் கிடைத்தன. முதல் காரணி தன்னறம் நூல்வெளி வெளியிட்ட உங்களின் தன்மீட்சி. தன்மீட்சியின் 300 இலவச பிரதிகளை பெற்றுக்கொண்டவர்களில் நானும் ஒருவன். அதன் வழியேதான் என் முதல் திறப்பு ஏற்பட்டது. சுயசிந்தனை என்றும், எனக்கு மட்டுமேயான பிரத்தியேகமான அகச்சிக்கல்கள் என்றும் நான் கருதிக்கொண்டிருந்த பலவும் நம் காலத்தின் பொதுச் சிக்கல்கள்தான் என்பதும், அவற்றுக்கான பதில்களை அத்தனை தெளிவாக கண்டடைய முடியும் என்பதும் எனக்கான முதல் திறப்பாக அமைந்தது.

இந்த சிக்கல்களும் தேடல்களும் நம் காலத்தின் பொதுச் சிக்கல்கள்தான் என்ற புரிதல் கொஞ்சம் கொடுமையானது. அது நம் தன்னகங்காரத்தில் விழும் அடி. இத்தனை வருடங்களாக திரண்டு வந்து உருக்கொண்ட அகங்காரத்தில் விழும் விரிசல். ஆனால் அந்த விரிசல்தான் திறப்பு. ஒரு ஆசிரியர் அதைத்தான் செய்வார். அந்த புத்தகத்தின் வழியே கிடைத்த முதல் திறப்பு எனக்கு உங்களையும் உங்களிடம் தினமும் உரையாடிக்கொண்டே இருக்கும் உங்கள் வாசகர்களையும் சற்று நெருங்கிப் புரிந்துகொள்ள எனக்குள் இருந்த மனத்தடையை நீக்கியது.

இரண்டாவது திறப்பாக அமைந்தது சுக்கிரி இலக்கிய குழுமம். சுக்கிரிதான் எனக்கு உங்கள் வாசகர் வட்டத்தோடு ஏற்பட்ட முதல் சந்திப்பு. ஒரு ஓஷோ cult என்று நான் கற்பனை செய்து பயந்திருந்த ஒரு வாசகர் வட்டம் என் முன்தீர்மானங்களை புரட்டிப்போட்டது. பல வருடங்களாக உங்களை தொடர்ந்து வாசித்தும் எனக்கு நிகழாத வாசிப்பு அனுபவங்களை நிகழ்த்திக் காட்டியது. விஷ்ணுபுரம் வாசகர் வட்டத்தைப் போன்ற ஒரு வாசகர் வட்டம் எத்தனை அவசியமானது என்பதையும் அதன் வழியே ஒரு தனி வாசகன் அடையக்கூடியவைகளையும் எனக்கு நிகழ்த்திக் காட்டியது. இந்த இரண்டு திறப்புகளின் வழியேதான் நான் இந்த வாசகர் சந்திப்பிற்கு வரத்துணிந்தேன்.

கோவை வாசகர் சந்திப்பு நிகழ்வு இந்த திறப்புகளின் அடுத்த படிநிலையாகவே அமைந்தது. அங்கு நிகழ்ந்த ஒவ்வொரு உரையாடலும் ஏதோ ஒரு விதத்தில் என் முன்தீர்மானங்களை நிராகரித்தது. விவாத நெறிமுறைகளில் தொடங்கி கடைசி மதியத்தில் நிகழ்ந்த கவிதைக்கான மதிப்பீடுகள்வரை என் முன்தீர்மானங்களுக்கு எதிராகவே இருந்தது. இப்போது சிந்தித்துப்பார்த்தால் அந்த விவாத நெறிமுறைகளில் வெளிப்படும் கூரிய தர்க்கமும் அவற்றின் விதிமுறைகளும் மிரட்சியை தருகின்றன. ஒவ்வொரு முறை அவற்றை சுயநினைவின்றி மீறியபிறகும் ஒரு தன்னுணர்வு வருகிறது. இனி கொஞ்சம் அந்த தன்னுணர்வோடே விவாதங்களைத் தொடங்க வேண்டும் என்ற எனக்கு நானே கூறிக்கொள்கிறேன். இந்த முறைகளை என்னால் முழுவதுமாக செயலில் கொண்டுவரமுடிந்தால் அதன் விளைவு என்னவாக இருக்கும் என்ற ஆர்வமும் பிறந்திருக்கிறது. ஆனால் நீங்கள் கூறியதுபோலவே இது கடும் பயிற்சியால் மட்டுமே சாத்தியப்படுவது. ஒரு சந்திப்பில் அது முழுவதுமாக நிகழ்ந்துவிடாது என்று நான் அறிவேன். இது ஒரு பயணத்தின் தொடக்கம்தான்.

இந்த கடிதத்தை எழுத்துகையிலும்கூட இதில் இருக்கும் நெறிமீறல்களை கவனிக்கிறேன். நல்லதொரு தொடக்கம்தான். அதேபோல் கவிதைகளை பற்றிய உங்கள் மதிப்பீட்டை கேட்டபின் நான் மனுஷ்யபுத்திரனின் சிறந்த கவிதைகள் என்று நினைத்தவற்றிலெல்லாம் எடுப்பையும் துடுப்பையும் தேடிக்கொண்டிருக்கிறேன். அதுவே கொஞ்சம் துயரமானதுதான். சிறுகதைக்கான உங்கள் மதிப்பீடுகள், கட்டுரைக்கான மதிப்பீடுகள், எழுத்துக்கான பயிற்சி, தத்துவம், இலக்கிய மதிப்பீடுகள் என்று அந்த உரையாடலின் பெரும்பகுதியை நான் இன்னும் தொகுத்துக்கொண்டுதான் இருக்கிறேன். நீங்கள் சொன்னதுபோல் அதற்கு சிறந்த வழி நான் ஒரு உரை நிகழ்த்துவதாகவோ அல்லது ஒரு குருவுடன் விவாதத்தில் இருப்பதாகவோ கற்பனை செய்வதுதான் என்று உணர்கிறேன். பெரும்பாலும் நான் என் கல்லூரி  ஆசிரியர்களைக்கொண்டு இரண்டாவது வடிவத்தை உபயோகிப்பேன். இப்போது இந்த விவாதங்களை உங்களோடு நிகழ்த்துவதாக கற்பனை செய்துகொள்கிறேன். ஆனால் உங்கள் எதிர் விவாதங்களை ஊகிப்பது கொஞ்சம் கடினமாக உள்ளது. போகப்போக பழகிவிடும் என்றுதான் நினைக்கிறேன். அவ்வப்போது வரும் சந்தேகங்களை அடுத்தடுத்த கடிதங்களில் எழுதுகிறேன்.

இந்த சந்திப்பிற்கு முன் நான் உங்களுக்கு மொத்தமாக மூன்று கடிதங்கள் எழுதி இருக்கிறேன். உங்களை நான் வாசிக்கத் தொடங்கிய 5 வருடங்களில் மொத்தமாக மூன்று கடிதங்கள் எழுத காரணம் நான் முதலில் கூறியcult பயமும், ஆசிரியர் என்ற படிமத்தின் மீதான அவநம்பிக்கையும்தான். இந்த காலத்தின் எந்த ஒரு இளைஞனையும்போல ஒரு ஆசிரியருக்கான தேடல் என்னை எப்போதும் ஆக்கிரமித்தே இருக்கிறது.

என் சந்தேகங்களுக்கும் தேடல்களுக்கும் ஒரு சொல்லில் முழுமையான பதிலளிக்கக்கூடிய ஜென் ஞானிகளைத்தான் நான் முதலில் தேடினேன். ஆனாள் பள்ளியிலும் கல்லூரியிலும் ஜென் ஞானிகள் மட்டுமின்றி சாதாரண உலகியல் ஆசிரியர்களுக்கே பஞ்சம் நிலவுகிறது என்று உணர்ந்தபோது பெரும் ஏமாற்றம்தான் வந்தது. அதனால்தான் ஜே. கிருஷ்ணமூர்த்தி என்னை கவர்ந்தார். ஆசிரியரே இல்லாமல் என்னால் என் தேடல்களுக்கான விடைகளை அடைந்துவிட முடியும் என்பது பொய்யாக இருந்தாலும் கவர்ச்சிகரமானது. ஆனால் ஏதோ ஒரு புள்ளியில் ஜே.கே.வும் என்னை கைவிட்டார். என்னால் என் கடந்தகாலத்தில் இருந்தும் எதிர்காலத்தில் இருந்தும் என்னை முழுவதுமாக விடுவித்துக்கொள்ள இயலவில்லை.ஆனால் அந்த ஆசிரியருக்கான தேடல் மட்டும் என்னுள் இருந்துகொண்டேதான் இருந்தது. அப்படியான ஆசிரியர்களுக்கான தேடலின் ஒரு பரிமாணம்தான் என் இலக்கிய வாசிப்போ என்றுகூட இப்போது தோன்றுகிறது.

ஆனால் இலக்கியம் தரக்கூடிய நிகர்வாழ்க்கைகளை தாண்டியும் ஒரு ஆசிரியர் எப்போதும் தேவைப்படுகிறார். அந்த இலக்கியத்தை நாம் எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்பதையும் அதைக்கொண்டு நம்மை எப்படி கட்டமைக்கவேண்டும் என்றும் நமக்கு கற்றுத்தர வேண்டியிருக்கிறது. இங்கிருந்து  அடுத்து எங்கே செல்லவேண்டும் என்ற வழிகாட்டி தேவைப்படுகிறார். இலக்கிய உலகில் வழிதவறிவிட்டால் சுற்றிச்சுற்றி சுஜாதாவிலோ பாலகுமாரனிலோ நின்றுவிடுவதற்கான வாய்ப்புகள் உண்டு. ஆனால் அகத்தேடல்களில் வழி தவறிவிட்டால் எலும்புகூட மிஞ்சாத போலி ஆன்மீக/அரசியல்/existentialism பாதாளங்களில்தான் சென்று சேர்கிறார்கள். எனவே என்னால் எதையும் முழுவதுமாக நம்ப முடியவில்லை.

நான் முதலில் சொன்னதுபோல் எனக்கிருந்த முன்தீர்மானங்களைக்கொண்டே நான் உங்களையும், விஷ்ணுபுரம் இலக்கியவட்டத்தையும் அணுகினேன். ஆனால் இந்த வாசகர் சந்திப்பு எனக்கு ஒரு பெரும் விடுதலையை அளித்தது. இதுவரை நான் அணுகிய ஆசிரியர்கள் அனைவருமே என்னை அப்படியே ஏற்றுக்கொண்டார்கள், என்னை எந்த விதத்திலும் சீண்டாமல் எனக்குள் இருந்த சிந்தனைகளையே பெருக்கினார்கள். அல்லது கண்மூடித்தனமான விசுவாசத்தை எதிர்பார்த்தார்கள். அவர்களிடம் உரையாடல்களுக்கான எந்த வாசல்களும் இல்லை. ஆனால் இந்த வாசகர் சந்திப்பில் உங்கள் உரையாடல்கள் பெரும்பாலும் என்னை சீண்டின. அவை என் முன்தீர்மானங்களுக்கு எதிரானவை. ஆனால் அவை கண்மூடித்தனமான விசுவாசத்தால் ஏற்கப்பட வேண்டியவையல்ல. தர்க்கத்தாலும், நுண்ணுணர்வாலும் நிறுவப்பட்டவை. அதன் வாதங்களுக்கான சரியான எதிர்வாதங்களை இன்றுவரை யோசித்துக்கொண்டுதான் இருக்கிறேன். அவற்றை நான் முழுவதுமாக எதிர்க்க முடிந்தாலும் அந்த வாதங்களின் தரப்பை யாராலும் மறுக்க முடியாது. அந்த வாதங்களின் வழியேதான் நான் உங்களை காண்கிறேன்.

உங்கள் எழுத்துக்களின் வழியே கட்டமைக்கப்பட்ட உங்கள் ஆளுமையான நீங்களும், கோவையில் நான் சந்தித்த நீங்களும் ஒருவராகவே இருப்பதுதான் எனக்கு அந்த விடுதலையை அளித்தது. உங்களிடம் நான் உண்மையாகவே உரையாட முடியும் என்கிற உணர்வும், என் இலக்கிய/தத்துவ தேடல்களுக்கான விடையை எந்த விதமான போலித்தனங்களும் இல்லாமல் உங்களிடம் இருந்து பெறமுடியும் என்ற உணர்வும் தரும் விடுதலையை அலாதியானதாக உணர்ந்துகொண்டுதான் இந்த கடிதத்தை எழுதுகிறேன். இந்த ஒரு சந்திப்பில் நான் உங்களிடம் சரணடைந்துவிட்டேன் என்றோ என் கேள்விகளற்ற விசுவாசத்தை உங்களுக்கு அளித்துவிட்டேன் என்றோ நான் எந்த மிகையுணர்ச்சிகளையும் கடத்த முயலக்கூட விரும்பவில்லை. அது பயனளிக்காது என்றும் தெரியும். இந்த வரிகளை எழுதும்போதும் எனக்குள் இருக்கும் cynic கொஞ்சம் விழித்திருக்கத்தான் செய்கிறான். ஆனால் இனி நான் உங்களுக்கு கடிதங்கள் எழுத முடியும். உங்களிடம் சரியோ தவறோ தொடர்ந்து உரையாட முடியும். அதன் வழியே என் அகங்காரத்தை மேலும் உடைத்து என் ஆளுமையை கட்டி எழுப்ப முடியும். அதற்காக வாசிக்கவும் பயிற்சி எடுக்கவும் முடியும்.

இதற்க்கெல்லாம் மேலாக எனக்கு ஒரு ஆசிரியர் இருக்கிறார் என்ற இந்த கிளர்ச்சியூட்டும் போதையை அனுபவிக்க முடியும். சுந்தர ராமசாமியை நீங்கள் சந்தித்ததை பற்றியும் அவருடனான உங்கள் உரையாடல்களைப் பற்றியும் நீங்கள் பல முறை எழுதியும் கூறியும் இருக்கிறீர்கள். நான் நீங்களா என்று எனக்கு தெரியாது. நீங்களாக மாறமுடியும் என்ற அசட்டு நம்பிக்கை மட்டும் என் அகங்காரத்தில் இருக்கிறது. அது இல்லை என்றால் என் உரையாடல்களுக்கு அர்த்தமில்லை. அந்த அகங்காரமும் ஆசையும் இல்லாத என்னிடம் உரையாடுவது உங்கள் நேரத்தையும் வீணடிக்கும் வேலைதான். ஆனால் எனக்கு நீங்கள் சுந்தர ராமசாமிதான். எனக்கான குரு நித்ய சைதன்ய யதியின் தேவை வந்தால், அதுவும் நீங்களாகவே இருப்பீர்கள் என்று பிரயாசைப்படுகிறேன்.

இலக்கியத்தில் ஒவ்வொரு வாசகனுக்கும் ஒரு அடையாளம் தேவைப்படுகிறது. அவன் தன்னை இணைத்துக்கொள்ள ஒரு இடம் தேவைப்படுகிறது. அவன் வாசிப்பு பாதையை முடிவு செய்யவும், அவனுக்கான இலக்கிய மதிப்பீடுகளையும், அழகியல் மதிப்பீடுகளையும் தேர்வு செய்யவும் ஒரு குரு மரபு தேவைப்படுகிறது. பெரும்பாலான செவ்வியல் கலைகளைப்போல இலக்கியத்திலும் இந்த குரு மரபுதான் ஒரு வாசகனை என்னவாக மாற்ற வேண்டும் என்று தீர்மானிக்கிறது. நான் இத்தனைக் காலமாகவும் விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தின் வழியே வந்தபோதும் நான் அதன் பாகமாக என்னை உணர்ந்ததில்லை. எந்த நிமிடத்திலும் த.மு.எ.க.ச.விற்கு சென்று சேர்ந்துவிட முடியும் என்றே நான் நம்பினேன். ஆனால் இந்த சந்திப்பின் வழியே நான் இங்கு நிறுவப்பட்டுவிட்டேன்.என் தொடக்கம் இந்த வழியே அமைந்துவிட்டது. இந்த தொடக்கம் எங்கு செல்லும் என்றோ, விஷ்ணுபுரம் இலக்கிய வட்டத்தில் ஒருவன் என்று கூறிக்கொள்ளும் தகுதியை நான் பெறுவேனா என்றோ எனக்கு தெரியாது. ஆனால் என் தொடக்கம் இங்கு நிறுவப்பட்டுவிட்டது.

இங்கிருந்து தமிழின் முக்கிய படைப்புகளையும், உலக இலக்கியத்தின் முக்கிய படைப்புகளையும் நான் வாசித்து முடிக்க எனக்கு குறைந்தது 3 வருடங்கள் ஆகும். ஆனால் நான் வாசிக்கலாம். ஏனென்றால் இப்போது அவற்றை தொகுக்க என்னிடம் ஒரு மரபு உள்ளது. அந்த மரபை முழுவதுமாக கற்று அதைக்கொண்டு இலக்கியப்படைப்புகளை மதிப்பிடவும் தொகுக்கவும் எனக்கு ஒரு திறப்பு கிடைத்திருக்கிறது. இந்த தொடக்கம் சென்றடைய வேண்டிய தூரங்களை அடைய என்னை உந்தித் தள்ளும் என்று நிச்சயமாக நம்புகிறேன்.

அன்புடன்

விக்னேஷ் ஹரிஹரன்

அன்புள்ள விக்னேஷ்

இந்த கடிதத்தில் இரண்டு விஷயங்களை கவனப்படுத்த விரும்புகிறேன். ஒன்று, உங்களை ஆழமாக பாதிப்பவர்களை பாதிக்கவிடாமல் தடுத்து நீங்கள் பேணிக்கொள்வது எதை?

உங்கள் ஆணவத்தை. அதை உங்கள் தனித்தன்மை என எண்ணிக்கொள்கிறீர்கள். அந்த தனித்தன்மை என்ன? அது எப்படி வந்தது? அது உங்களிடம் பிறப்புச்சூழலில் இருந்து, பொதுக்கல்வியில் இருந்து உருவான எளிமையான ஒரு தன்னடையாளமும் அடிப்படைப் பண்பாட்டுப் பயிற்சியும் மட்டும்தானே? அதை உடையாமல் பேணிக்கொண்டு நீங்கள் செல்லவிருக்கும் தொலைவுதான் என்ன?

இந்த உலகிலுள்ள எந்த அறிவார்ந்த தரப்பும் உங்களை பாதிக்கவில்லை என்றால் நீங்கள் எதைக் கற்கமுடியும்? எப்படி உருமாற முடியும்? அத்தனை சிந்தனையாளர்களும் பிறரை- சூழலை பாதிக்கும்பொருட்டுத்தான் சிந்திக்கிறார்கள், செயல்படுகிறார்கள். அவர்கள் உங்களிடம் பேசமுடியாமல் நீங்கள் உங்களை மூடிக்கொண்டால் இழப்பு உங்களுக்கே. அவ்வாறு அத்தனை பேரும் அவரவர் உலகை மூடிக்கொண்டால் அதன்பின் இங்கே சிந்தனை, இலக்கியம் என்பதெல்லாம் எப்படி நிகழமுடியும்?

அனைவரும் உங்களைப் பாதிக்கவிடுங்கள். அப்படி உங்களுக்கு ஒரு தனித்தன்மை இருக்குமென்றால் அது அந்தப் பாதிப்புகளினூடாக முட்டி மோதி உருவாகி திரண்டு வரும் ஒன்றாகவே இருக்கும். அத்தனை சிந்தனையாளர்களும், கலைஞர்களும் அவர்களை வெல்லும் பாதிப்புகள் வழியாக செதுக்கப்பட்டவர்கள். அப்பாதிப்புகளை கடந்து தங்களை உருவாக்கிக்கொண்டவர்கள்.

*

ஆன்மிக தளத்திலும் அரசியலிலும் ’கல்ட்’கள் உள்ளன.நம் அரசியல்கட்சிகளேகூட வெறும் கல்ட்கள்தான். அவை ஆபத்தானவையே. ஆனால் இலக்கியத்தில் கல்ட்கள் இருக்கமுடியாது. ஏனென்றால் இங்கே அடிப்படையில் இருப்பது படைப்பியக்கம். அது ஒருவர் தன்னந்தனியாகச் செய்யவேண்டியது. அது அவரை அடிமையாக ஆக விடாது.

இலக்கியத்தில் சிறிய திரள்கள் அல்லது குழுக்கள் எப்போதும் உண்டு. அவை இல்லாத காலமே உலக இலக்கியத்தில் இருந்ததில்லை. இலக்கியத்தில் குழுக்களை எதிர்மறையாகப் பேசுபவர்களுக்கு இலக்கியமென்பது என்ன என்றே தெரியாது.

இலக்கியக் குழுக்கள் பிறர் சொல்வதுபோல ஒருவரை ஒருவர் தூக்கும்பொருட்டு உருவாகின்றவை அல்ல. அரசியல்குழுக்களே அவ்வாறு செயல்படுகின்றன. தமிழில் இலக்கியக்குழுக்களில் ஒன்றுகூட அவ்வாறு செயல்பட்டமைக்குச் சான்றுகள் இல்லை. உள்விவாதமும் ,விமர்சனமும், சேர்ந்து பயில்தலுமே அவற்றின் வழிமுறையாக உள்ளது.

இக்குழுக்கள் பொதுவான அழகியல் – தத்துவ நோக்குகளால் உருவாகின்றவை. ஒருவரோடொருவர் விவாதிக்கவும், வளரவும் அவை தேவையாகின்றன. முரண்பாடு கொள்ளுவதற்குக் கூட இணையானவர்கள் இலக்கியத்தில் தேவை. குழுக்களின் பங்கு அவ்வளவே. ஓர் எழுத்தாளரை அல்லது ஒரு நிறுவனத்தை அல்லது ஓரு சந்திப்பிடத்தை மையமாகக்கொண்டு அவை உருவாவது எங்குமுள்ள வழக்கம்.

இன்றுவரை உலக இலக்கியத்தில் இத்தகைய எந்தக்குழுவும் இலக்கியத்தில் எதிர்மறை விளைவை உருவாக்கியதில்லை. ஒரேபோன்ற இலக்கியவாதிகளை, இலக்கிய ஆக்கங்களை உருவாக்கியதில்லை. அக்குழுவைச் சேர்ந்த எவரையும் அவருடைய எல்லையை அடைய முடியாமல் தேங்கவிட்டதாக ஒரே ஒரு உதாரணம்கூட உலக இலக்கிய வரலாற்றில் இல்லை.

ஆனால் அக்குழுவின் உறுப்பினராக ஆனமையாலேயே தங்கள் எல்லைக்குமேல் செல்ல நேர்ந்தவர்கள் உண்டு. அவர்களின் இயல்பான விசையும் தீவிரமும் பலமடங்கு கூடுவதன் விளைவு அது. தமிழிலக்கியத்திலேயே அப்படி பல ஆக்கபூர்வமான குழுக்கள் இருந்தன. நீண்ட பட்டியலையே இடமுடியும்.

ஆனால் அவை புறவயமான ஓர் அரசியல், மத நோக்கத்துடன் உருவாக்கப்பட்டவை என்றால் அவை இலக்கியக்குழுக்கள் அல்ல. இலக்கியக் குழு என்பது சிலவகையான இலக்கிய விழுமியங்கள், சிலவகையான அழகியல்கொள்கைகள் மீதான நம்பிக்கையால் மட்டுமே உருவாவது.

இலக்கியக்குழுக்கள் மிகத்தீவிரமாகச் செயல்பட்ட காலத்திலேயே படைப்பிலக்கியம் தீவிரமாக இருந்துள்ளது. இன்று அத்தகைய ஆக்கபூர்வமான குழுக்கள் அரிதாகி விட்டன. ஆகவே ஆர்வத்துடன் எழுதும் பலருக்குக் கூட எழுத்தின் ஆரம்பகட்ட பிரச்சினைகள் பல ஆண்டுகளாக நீடிக்கின்றன. மிக எளிமையாக ஓரிரு அமர்வுகளில் நட்பார்ந்த உரையாடல்கள் வழியாக தெரிந்துகொள்ளத்தக்க எழுத்து நுட்பங்கள், வெளிப்பாட்டு நுட்பங்கள்கூட தெரியாதவர்களாகவே பலர் எழுதிக்கொண்டிருக்கிறார்கள்.

ஒரு மூத்த எழுத்தாளருடன் இயல்பாக உரையாட இவர்களின் ஆணவம் இடமளிப்பதில்லை. சமானமான ஒருவரிடம் உரையாடுவதுகூட இயல்வதில்லை. ஆரம்ப நிலையிலேயே அடிமையென வரும் வாசகர்களை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இவர்கள்தான் இலக்கியக்குழுக்களில் எதிலும் தாங்கள் இல்லை என்றும், தாங்கள் சுயம்பு என்றும் சொல்லிக்கொள்கிறார்கள். உண்மையில் புதிய பல எழுத்துக்களை வாசிக்கையில் அவற்றிலிருக்கும் முதிராமொழியும் பயிலாத வடிவமும் பெரும் ஒவ்வாமையை உருவாக்குகின்றன. இந்த நிலை சமகால இலக்கியத்துக்கு ஒரு பெரும் குறைபாடே.

இதை உருவாக்கியதில் இங்குள்ள அரசியலாளர்களுக்கும், இலக்கிய வம்பர்களுக்கும் பெரும் பங்குண்டு. அரசியலாளர்கள் அரசியல் குழுக்களை உருவாக்கி கொடிபிடிக்கும் அடிமைகளை உண்டுபண்ணுபவர்கள். ஆனால் ஒரு சில எழுத்தாளர்கள் ஒரு சிறு குழுவாக திரண்டால் குழுமனப்பான்மை, அடிமைநிலை என வசைபாடுவார்கள். என்ன வேடிக்கை என்றால் அங்கே கொடிபிடிக்கும் கும்பலும் அதையே ஏற்றுச்சொல்லும்.

இலக்கிய வம்பர்களுக்கு எந்த ஆக்கபூர்வ இலக்கியக் குழுக்களிலும் இடமிருக்காது. அவர்கள் அங்கே நுழைந்தாலும் உடனே வெளியேற்றப்படுவார்கள். ஆகவே அவர்கள் தங்கள் வம்புகளில் இலக்கியக்குழுவாகச் செயல்படுபவர்களை தொடர்ச்சியாக இழிவு செய்து கேலி செய்து அவர்களிடம் ஒரு தாழ்வுணர்ச்சியை, பிழையுணர்ச்சியை உருவாக்கி விடுகிறார்கள். முகநூல் சூழலில் வம்புகள் மட்டுமே அதிகம் கவனிக்கப்படுகின்றன. ஆகவே வம்பர்களின் செல்வாக்கு இப்போதுள்ளது போல இலக்கியத்தில் என்றும் இருந்தது இல்லை. இன்று, இந்த இருபதாண்டுகளில் உருவாகி வந்திருக்கும் இலக்கியப் பிரச்சினை இது.

இவர்களின் குரலைச் செவிகொள்ளும் இளம் எழுத்தாளன் தான் அடையவேண்டிய அரியவற்றை இழக்கிறான். தன் ஆளுமையின் வெளிப்பாட்டின் முழுமையை தவறவிடுகிறான். தன் பாதையை தானே கண்காணிக்கத் தெரிந்தவனே அறிவுச்செயல்பாட்டில் இருக்கிறான். அவனுக்கு புறக்குரல்கள் வழிகாட்டிகளாக மட்டுமே அமையமுடியும். திசைதிருப்ப முடியாது.

ஜெ
இலக்கியவாதிகளும் அமைப்புகளும்
விருதுகள், அமைப்புகள்
புத்தகக் கண்காட்சி, இலக்கியக்கூட்டங்களுக்குச் செல்வது
இலக்கியத்திற்காக ஒரு தொலைக்காட்சி
இலக்கியத்தை எடுத்துச்செல்லுதல்….
இலக்கியம்,அரசியல்:கடிதங்கள்
முந்தைய கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-2
அடுத்த கட்டுரைநீலகண்டப் பறவையைத் தேடி- நவீன்