படிமங்கள் – கடிதம்

படிமங்களின் உரையாடல்

வணக்கத்திற்கும் பேரன்பிற்குமுரிய ஜெயமோகன்,

படிமங்களின் உரையாடல் ஒரு நல்ல கட்டுரை. ஏகே 47 துப்பாக்கி ஏந்திய பிள்ளையார் உருவுக்கு விநாயகர் சதுர்த்தி பத்து நாள் வழிபாடு தெருமுனைகளில் செய்கின்ற நம் கும்பலுக்கு இன்றைக்குத் தேவையான ஒரு கட்டுரை.

சில ஆண்டுகளுக்கு முன்பாக பெரிய மோட்டார் பைக் ரைடிங் பொசிசனில் இங்கே ஒரு சந்தில் பிள்ளையார் வழிபாட்டிற்கு அமர்த்தப்பட்டார். பைக் ஹேண்டில் பர் மீது ஐயோ பாவம் என அவர் வாகனமான மூஞ்சூறு முன்னோக்கி அமர்ந்திருந்தது. அப்படிப்பட்ட ஒரு சிலையை வழிபாட்டிற்கு வைத்தால் மனம் பக்தியில் எப்படி குவியும். அது கண்ட கண்ட இடங்களில் அலைந்து திரியாமல் இருக்குமா?. அறிவுகெட்ட கும்பலுக்கு யார் சொல்லி புரியவைப்பது.

இப்படிப்பட்ட ஒரு வழிபாட்டை பார்க்கின்ற அதில் பங்கு பெறுகின்ற குழந்தைகள் வன்முறையாளர்களாக வளராமல் ஞானிகளாகவா வருவார்கள். அறியாமையில் செய்யப்படுகின்ற அபத்தங்கள்.

சனாதன தர்மம் என்பது பல்வேறுபட்ட வாழ்வியல் முறைகளை, அது சார்ந்த உளவியல் படிமங்களை உள்ளடக்கிய ஒரு பெரும் பொக்கிஷம். அது இந்த இந்தியப் பெருங் கண்டத்திலும் அதைச் சூழ்ந்தும் வாழ்கின்ற அத்தனை மனிதர்களுக்கும் பொதுவான வழி வழிச் சொத்து.

ஆழ்ந்த மறை ஞானத்தை அடிப்படையாகக் கொண்டு முக்கியமான தெய்வங்களின் உரு புராணங்களிலும் ஆகமங்களிலும் இங்கே வகுத்தளிக்கப்பட்டுள்ளது.  குறிப்பிட்ட மனநிலை உத்வேகம் பெறுவதற்காக அவைகள் அவ்வண்ணம் அமைக்கப்பட்டுள்ளன. உருவம், மந்திரம், உச்சாடனம், வழிபட வேண்டிய உசித காலகட்டம், உபயோகப் படுத்தப் பட வேண்டிய குறியீட்டு முறைகள், நைவேத்தியங்கள், இசை வாத்தியங்கள், உடுக்க வேண்டிய உடைகள், பத்திய முறைகள் என எத்தனையோ இங்கே ஆழ்மன அளவில் ஒரு சாதகனை மேம்படுத்தும் வண்ணம் பல தலைமுறைகளாக தொடர்ந்து கை மாறி வந்திருக்கிறது. அர்த்தம் புரியாமல் அவைகளை கண்டபடி மாற்றுவது தேவையற்ற விளைவுகளையே உருவாக்கும்.

நீங்கள் மிகச் சரியாக குறிப்பிட்டபடி கலையின் மூலம் அந்தப் படிமங்கள் மாற்றப்படலாம், சீர் அமைக்கப்படலாம், மேம்படுத்தப்படலாம், தலைகீழ் ஆக்கப்படலாம், ஏன் சிதைக்கக்கூடப்படலாம். இருவேறு படிமங்கள் இணைக்கப்பட்டு ஒன்றாக கூட ஆகலாம். அவைகள் அத்தனைக்கும் சனாதன தர்மத்தில் இடமிருக்கிறது. அது அப்படித்தான் இதுகாறும் வந்திருக்கிறது. ஆனால் அவை அத்தனையும் வழிபாட்டுக்கு வந்துவிடுவதில்லை. வெகுஜன ஏற்புக்குள் வழிபாட்டுக்குள் பிணைக்கப் படுவதோ வலிந்து திணிக்கப்படுவதோ இல்லை. சில நேரங்களில் ஒரு புதிய கலை வெளிப்பாடு முற்றிலுமாக ஏற்றுக்கொள்ளப்பட்டு பண்பாட்டில் படிமத்தில் ஒன்றாக மாற பல நூற்றாண்டுகள் கூட ஆகலாம். பல வடிவங்கள் முற்றாக கைவிடப்படலாம்.

ஒரு சில தெய்வ வடிவங்கள் ஆதி முதற்கொண்டே அப்படியே தொடர்ந்து வருபவை. அவைகள் அப்படித் தொடர்ந்து வருவதுதான் பலவிதங்களில்

நன்மை பயப்பது. சிவலிங்க வடிவம் இதற்கான ஒரு உதாரணம். ஒரு சில தெய்வ வடிவங்கள் தொடர்ந்து மாறிக் கொண்டே இருப்பதையும் கண்ணுறலாம். முருகன் வடிவம் தொடர்ந்து மாறிக்கொண்டே வந்திருக்கிறது. ஆறுபடை வீடுகளிலும் ஆறு விதமாக வடிவங்கள் மாறியிருப்பதை நன்கு கவனித்தால் புரிந்து கொள்ளலாம். ராமனின் பாதத்தில் அமர்ந்திருக்கின்ற ராமாஞ்சநேயர் வடிவத்திலிருந்த அனுமன் காலத்தில் மெல்ல மெல்ல தனித்து யோக ஆஞ்சநேயர் வடிவம் வரை வளர்ந்திருப்பதை காணலாம். இதேபோலத்தான் நடராஜர் வழிபாடு வளர்ந்து வந்த போது, அது சிவபெருமானின்மைய வழிபாட்டோடு இணைக்கப்பட்டு ஒவ்வொரு சிவ ஆலயத்திலும் தனியாக நடராஜர் ஆலயம் அமைக்கப்பட்டது. சிவ ஆலயங்களில் உள்ள தட்சிணாமூர்த்தி இணைப்பு வழிபாடும் கவனிக்கத்தக்கது. ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமான தட்சணாமூர்த்தி சிலையைக் காணலாம். படிமங்கள் இணைந்தும் கிளைத்தும் வளர்ந்து வந்துள்ள விவரங்களை ஆராய்ந்து பார்த்தால் பல ஆச்சரியமான தகவல்களை அளிக்கின்றன. ருத்ரன், காலபைரவன், கபாலன் காளாமுகன், வீர பத்ரன், அகோரன் போன்ற படிமங்கள் எவ்விதமாக ஆதிசிவம் படிமத்தோடு இணைந்தும் வேறுபட்டும் வளர்ந்துள்ளன என்பதை நாடு முழுவதும் விரவியுள்ள சிவ ஆலயங்களில் உள்ள இவற்றின் சிலைகளைக் கொண்டு அறியலாம்.

உருவமே இல்லை என்பவர்களுக்கும், புரியாத குறியீட்டு வடிவில் வழிபடுபவர்களுக்கும், இயற்கை வடிவில் நிலம் நீர் நெருப்பு காற்று ஆகாயம் என வழிபடுபவர்களுக்கும், அரூப வழிபாட்டாளர்களுக்கும் பல உருவில் வழிபடுபவர்களுக்கும், காலத்திற்கேற்ப உருவத்தை மாற்றிக் கொண்டிருப்பவர்களுக்கும் என எல்லோருக்கும் இடம் அளிப்பது தான் சனாதன தர்மத்தின் சிறப்பு. இதை இரும்பென இருக்குவதும் தவறு மெழுகு என உருக்குவதும் தவறு. நன்மை தீமைகளை அறிந்து எல்லோருக்கும் நலம் பயக்க தக்க வகையில் ஞானிகளால் புரிதலோடு செய்யப்பட வேண்டிய ஒன்று இது. அவரவர்கள் அவரவர்களுக்கு உகந்த வழியை தகுந்த குருவின் மூலம் தேர்ந்து ஒழுகுவதே பாதுகாப்பானது பரிந்துரைக்கத்தக்கது. அவ்வாறன்றி மாடர்ன் ஆர்ட் என்ற வகையிலே வரைந்த ஓவியங்களை மற்றும் கண்டமேனிக்கு உருவாக்கப்பட்ட சிலை உருவங்களைக் கொண்டு வழிபாடு செய்வது ஆழ் மனதோடு விளையாடுவது ஆபத்தில் கொண்டுபோய் விடுவது. விளைவுகள் விபரீதமாக இருக்கும். அறையில் அழகுக்காக மாட்டப்படுகின்ற படங்களை கூட கவனமாக தேர்ந்தெடுத்து மாட்ட வேண்டும். நம் மனம் இயங்கும் தளங்கள் மிக மிக சூட்சுமமானவை. நாம் அடிக்கடி காண்கின்ற எந்த ஒரு தோற்றமும் நம் ஆழுள்ளத்தை அதிதீவிரமாக பாதிக்கும். கவனமாக இல்லாவிட்டால் உறக்கமின்மை, துர் கனவுகள் தேவையற்ற சிந்தனைகள் என்று அலைகழிய நேரும்.

மிகவும் கரிசனத்தோடு எழுதப்பட்ட ஒரு கட்டுரை உங்களுடையது.

நெஞ்சம் நிறை நன்றிகள்.

மிக்க அன்புடன்

ஆனந்த் சுவாமி

முந்தைய கட்டுரைகாந்தியும் தருமனும்
அடுத்த கட்டுரைதோழமைத் திருட்டு