கொதி [சிறுகதை]
எங்கள் பகுதியில் வீட்டு விசேஷங்கள் சமயம் ஏற்பாடு செய்த உணவு மிகுந்து விட்டால் அருகிலுள்ள நரிக்குறவர் காலனியில் விநியோகம் செய்வார்கள். அவர்களும் எந்த நேரமாக இருந்தாலும் வாங்கி கொள்வார்கள். எத்துனை அளவாயினும் நொடியில் தீர்ந்துவிடும். எப்படி ஏனென்று “கொதி” ஃபாதர் ஞானய்யா எனக்கு இன்று விளக்கினார்.
“பாவப்பெட்ட சனங்க. பசிதான் அவங்களுக்கு எல்லாமே. அது வெறும் சோத்துப்பசி இல்லை. ஒண்ணுமே போய்விழாத அவ்ளவு பெரிய சூனியம் அவங்களுக்கு உள்ளே இருக்கு. அதை நிறைக்கிறதுக்கு உண்டான வெறியைத்தான் பசீன்னு நினைச்சுக்கிடுறானுக. கொண்டா கொண்டான்னு உடம்பும் மனசும் ஆத்மாவும் சத்தம்போடுது. அது அதலபாதாளம், ஆனா அள்ளிப்போடுதது அஞ்சுவிரல் கைப்பிடி…”
உயர்ந்த உலக இலக்கிய படைப்புகளக்கென ஒரு வரிசை இருப்பின் “கொதி” எளிதாக அதில் இடம் பெறும். பெரிய பெரிய உண்மைகளை இக்கதை எத்துனை அலட்சிய பாவத்துடன் அரிதாரம் பூசாமல் வேம்பாய் கசந்தாலும் உள்ளதை உள்ளபடியே சொல்கிறது.
” தன் அப்பத்தைப் பசித்தவனுக்குப் பங்கிட்டு, வஸ்திரமில்லாதவனுக்கு வஸ்திரம் தரிப்பித்து வாழணும்னு வேதம் சொல்லுது. எசக்கியேல் பதினெட்டு ஏழு. ஆனா பத்துபிள்ளை பெத்து ஒத்த கைப்பிடி சோறு வைச்சிருக்கிற அம்மைகிட்ட அதைச் சொல்லமுடியாது. இல்லாத கூட்டம் இது. அயலானுக்குக் குடுத்து தின்னா எல்லாரும் சேந்து சாவணும்னு இருக்கு வாழ்க்கை. அப்டித்தான் இருப்பாங்க. அம்மைகள் அப்டித்தான் இருந்தாகணும். அவங்க பிள்ளைகளை சாகாம காப்பாத்தணும்ல?”
வாழ்வின் அபத்தத்தையும் அர்த்தத்தையும் முழுமையாய் உணர்த்தும் வாசகங்கள்.
icf சந்துரு
கோவை – 19
***
அன்புள்ள ஜெ
தொடர்ச்சியாக ஒரு விஷயத்தை எழுதிக்கொண்டிருக்கிறீர்கள். சென்ற முப்பதாண்டுகளில் படிப்படியாக இந்தியாவில் பசி மறைந்துவிட்டது. கொடுமையான பசி இன்றில்லை. அதற்கு இலவச அரிசி கோதுமை ஒரு காரணம். அடிப்படை வேலைவாய்ப்புக்கள் இன்னொரு காரணம். பொதுவாக கிராமப்புறங்களில் பிச்சைக்காரர்கள் வருவதே இல்லாமலாகிவிட்டது. பெருந்து நிலையத்தில் இருப்பவர்கள், கோயிலில் இருப்பவர்கள் வேறொரு வாழ்க்கையில் இருக்கிறார்கள்.
ஆனால் தொடர்ச்சியாக பசியை ஆவணப்படுத்திக்கொண்டும் இருக்கிறீர்கள். பசியை ஞாபகம் வைத்து என்ன ஆகப்போகிறது என்றுதான் தோன்றும். ஆனால் பசி உருவாக்கும் சில வேல்யூஸ் முக்கியமானவை. அவற்றை என்றைக்கும் ஞாபகம் வைத்துத்தான் ஆகவேண்டும். கொதி கதையை அப்படித்தான் நான் வாசித்தேன்
சாம் ஆசீர்
அறமென்ப… [சிறுகதை]
வணக்கம் ஜெயமோகன். நலம்தானே. தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டுகிறேன்.
அறமென்ப சிறுகதை படித்தேன்.நல்லவை செய்பவர்கள் நாளுக்கு நாள் ஏன் குறைந்துகொண்டே வருகிறார்கள் என்பதற்குச் சரியான காரணத்தைச் சிறுகதை கூறுகிறது. அத்துடன் பணம் வருகின்றது எனில் எளியமக்கள் மனம் எப்படியும் மாறிவிடும் என்பதையும் கதை காட்டுகிறது. வழக்கறிஞர் மற்றும் காவலர்களின் மறுபக்கத்தையும் நாம் அறிய முடிகிறது. ஆனால் ஒரு கேள்வி ஜெ. இப்படியே எல்லாரும் தங்கள் பாதுகாப்பை மனத்தில் முன்நிறுத்தி மனிதாபிமானத்தைச் சாகடித்தால் வருங்காலம் என்ன ஆகுமோ என்னும் வேதனைதான் கதை படித்து முடித்தவுடன் தோன்றுகிறது. மனம் கனமாகிறது. ஒரு குறும்படமாகத் தயாரிக்கக் கூடிய சிறுகதை இது.
வளவ.துரையன்
கடலூர்
***
அன்புள்ள ஜெ
அறமென்ப கதையை வாசித்துக்கொண்டிருந்தேன். வறுமை வேல்யூஸை இல்லாமலாக்குமா? ஆக்கும். வறுமைக்கு முன் செழிப்பு காட்டப்பட்டால், கூடவே அந்தச் செழிப்பு அறமின்மையால் வந்தது என்று திரும்பத்திரும்பச் சொல்லப்பட்டால் வேல்யூஸ் இல்லாமலாகும். இன்றைக்கு தமிழகத்திலே நடப்பது அதுதான். இந்தியாவிலும் அதுதான். கண்ணெதிரிலே பெரிய கோடீஸ்வரர்கள். கோடீஸ்வர அரசியல்வாதிகள். ஆனால் அவர்கள் செய்யும் ஊழல்கள் ஒவ்வொரு நாளும் செய்தியில் வருகின்றன. அவர்கள் ஏய்த்து பெரியவர்களாகி வசதியாக வாழ்கிறார்கள் என்று சொல்லிக்கொடுக்கப்படுகிறது.
ஆகவே அடித்தளத்தில் மட்டுமல்ல நடுத்தரவர்க்கத்திலேயே கூட இன்று வேல்யூஸ் தேவையில்லை என்று ஆகிவிட்டது. ஓட்டுக்கு பணம் பெறுவது முதல் எல்லா இடங்களிலும் இது பரவியிருக்கிறது. அதுதான் அந்தக்கதையிலும் வெளிப்படுகிறது. கொஞ்சம் கண்ணைமூடிக்கொண்டால் கஷ்டம் தீர்ந்துவிடும் என்பது எல்லாருமே நினைப்பது
நான் கிராம ஆய்வுக்குச் செல்லும்போது அங்கே எந்தவிதமான மராமத்து பணிகளும் நடந்திருக்காது. ஆனால் ஊர்க்காரர்களுக்கு காண்டிராக்டர் கொஞ்சம் பணம் கொடுத்திருப்பான். வீட்டுக்கு ஒரு எவர்சில்வர் தவலை இந்தமாதிரி ஏதாவது கிடைத்திருக்கும். அதை வாங்கிக்கொண்டு அவர்களுக்கு குடிநீரை அளிக்கும் ஏரியை தூர்வாராமல் அப்படியே பில் எழுத விட்டுவிடுவார்கள். இது எங்கேயும் நடக்கிறது. நூறுநாள் வேலையிலும் இதுதான் நடக்கிறது
மிகமிக வேகமாக ஏழைகள் கரப்ட் ஆகிக்கொண்டிருக்கிறார்கள். இதுதான் இன்றைக்கு கவலைப்படவேண்டிய விஷயம்
மாணிக்கம் ராஜா
***