ஓஷோ- கடிதங்கள்

மதிப்பிற்குரிய ஜெ அவர்களுக்கு

தங்களது கோவை ஓஷோ உரைகள் அறிவிப்பு வந்ததும் அடைந்த மகிழ்ச்சிக்கு  அளவே இல்லை. அதுவும் கோவையில் என்பது  தனிப்பட்ட முறையில் மேலும் நெகிழ்ச்சி ஊட்டுகிறது. கோவையில் தான் எனது வேளாண் கல்லூரி முதலாம் ஆண்டில் ‘be oceanic’ மற்றும் ‘one earth one humanity’ என்ற சிறு பாக்கெட் அளவு புத்தகங்கள் மூலம் 1991 இல் ஓஷோ அறிமுகம் ஆனார். அன்று மொத்த வாழ்வே புதிதாக மாறியது போன்று இருந்தது அன்று முதல் இன்று வரை அவரை எண்ணி  வணங்காமல்  நாள் நிறைவதே இல்லை.

ஆன்மிகம் தத்துவம் உறவுகள் என்று எந்த வகையில் நண்பர்களிடம் பேச தொடங்கினாலும் எங்களது உரையாடல் ஓஷோ மேற்கோள்களை சார்ந்தே இருந்தது.அவர்தான் ஞானத்தின் எல்லை என்பதில் எங்களுக்கு எந்த சிறு மாற்றுக் கருத்தும் இருந்ததே இல்லை. கிட்டத்தட்ட அவர் புத்தகங்கள் அனைத்தும் பெரும்பாலான ஆடியோ  கேட்டு இருக்கிறோம் நானும் என் நண்பனும். பெயர் செந்தில் முருகன் . அமெரிக்காவில் இருக்கிறார். உங்கள் தீவிர வாசகர்.ஈரோடு வாசகர் சந்திப்பிற்கு வந்து இருந்தார்.

ஆனால் படித்த அனைத்தும் புத்தக அறிவாகவோ அல்லது அல்லது நிறைய அறிந்த ஆணவமாகவோ ஓங்கி  நின்றதை உணர முடிந்தது தன்னளவில் . அவர் காலகட்டத்தில் அவரோடு  இருந்தால் கண்டிப்பாக வழி காட்டி இருப்பார் என்ற போதிலும்.பிறகு நிறைய குருமார்களை தேடி சும்மா அலைந்தோம். திருவண்ணாமலை செல்வது போன்று .

எனக்கு ஜக்கியிடம் சென்ற பிறகு பெரும்பாலான ஆன்மீக குழப்பங்கள் தீர்ந்துவிட்டன. அவருடைய யோக வழிமுறைகள் பிற volunteering tools மிக சிறப்பாக உள் நிலை வளர்ச்சிக்கு உதவுகின்றன.  practical யோக வழிமுறைகள் செய்ய ஆரம்பித்தபின் மீண்டும் ஓஷோவை படித்தவுடன் அவர் சொன்ன அனைத்துமே மீண்டும் புத்துயிர் கொண்டு எழுந்தன. இருவர் சொல்வதும்   ஒன்றுக்கொன்று உதவியாக இருந்து மேலும் புரிய வைக்கின்றது.

ஆனால் பொது வெளியில் ஓஷோவை பற்றி அவருடைய ஆன்மீகம் பற்றி  ஆரோக்கியமான தர்க்கங்கள் விவாதங்கள் முன்னெடுப்புகள் இல்லாதது பெரிய வருத்தமே. பேசுவது எல்லாம் அவருடைய rebellious  thoughts ஐ தமது குறைந்த பட்ச சமூக மீறல்களுக்கு ஒரு supportive arguments ஆக எடுத்து கொள்ளும் பழக்கம் மட்டுமே . இன்றைய நவீன தலைமுறை சந்திக்கும் உறவு திருமணம் காமம் சார்ந்த சிக்கல்களுக்கு ஓஷோ மட்டுமே அதிக பட்ச தீர்வாக உள்ளார் என்பது எனது எண்ணம். ஆனால் அவரை பற்றி ஆழ்ந்த உரையாடல் இல்லாமல்  அவர் சரியாக புரிந்து கொள்ள பட மாட்டார் என்று  நினைக்கிறேன்.

தாங்கள் கோவையில் தொடங்கி வைக்கும் இந்த உரையாடல் ஓஷோவை சற்று புரிந்தவர்களுக்கும், தவறாக புரிந்தவர்களுக்கும், எதுவும் தெரியாதவர்களுக்கும் பெரிய திறப்பாக இருக்கும் .அவரை புரிந்து கொள்வது இந்திய ஆன்மிகத்தின் அனைத்து பக்கங்களையும்  மேலும் புரிய உதவும் என்று நம்புகிறேன்.

நன்றி

த .அனந்த முருகன்
சென்னை

 

அன்புநிறை ஜெ,

மூன்று நாள் ஓஷோ பற்றியான உரையை நேரில் கேட்பதற்கு வாய்ப்பு கிடைத்ததற்கு மகிழ்கிறேன். முதல் இரண்டுநாள் உரைகளுக்கும் பிறகு ஒரு நீண்ட நினைவுகூரல், பின்பு உரையில் கூறப்பட்ட கருத்துக்கள் மற்றும் தரவுகளை மேலும் என் நோக்கில் எவ்வாறு விரிவாக்கி கொள்ளலாம் என்பதை பற்றியும் சிந்தித்திருந்தேன். மூன்றுநாள் உரையையும் பெரும் உற்சாகத்துடன் கேட்டிருந்தேன். என் சிந்தனை முறையில் முக்கியமான சில மாற்றங்களை ஏற்படுத்தவல்ல அணுகுமுறையொன்றை நெருங்கியிருப்பதாக உணர்கிறேன்.

‘நான் இந்நாட்களில் முக்கிய தெளிவுகள் சிலவற்றை அடைந்துள்ளேன்’, என்றெண்ணி உவகை பூண்டிருந்த தருணத்தில் பலமுறை நீங்கள் ஏற்கனவே சொன்ன சொற்களை மீண்டும் நினைவு கூர்ந்தீர்கள் , அதாவது ‘மானுட சிந்தனை பெருக்கில் நாம் ஒரு குமிழி மட்டுமே’ என்பது. பல்வேறு தருணங்களில் இதை மற்றவர்களிடம் கூறியதுண்டு, படித்ததுண்டு. ஆம் இது உண்மை என மனமும் ஏற்றுக்கொண்டது. இவேற்பு என் அறிவால் ஏற்பட்டது என்ற கர்வம் இருக்கத்தான் செய்தது.

ஆனால் இன்று உரையின் முடிவில் இச்சொற்களை கேட்டபோது நடுக்கமொன்று உடலில் பரவி சென்றது. வீடு திரும்பும் வழி நெடுகிலும் குமிழி என்ற ஒற்றைச் சொல் மட்டும் பயணித்தது. கோவையில் குளிர் குறைய தொடங்கி மூன்று வாரம் ஆகிறது. ஆனால் இன்று என்னுடல் அதீத குளிரை உணர்ந்தது. ஞாயிற்று கிழமையாகையால் சாலை வாகன நெரிசலின்றி இருந்தது. ஆனால் மனம் கூட்டத்தை ஏங்கியது. சிவராத்திரிக்கு அலங்கரிக்கபட்ட விளக்குகள்மட்டும் எரிய கோவிலும் மைதானமும் வெறித்துக் கிடந்தது. பெரும் இழப்பை சந்தித்தது போன்ற உளச்சோர்வு

‘விரிந்து பரவுகிறேன்’ என்றெண்ணியிருந்த தருணத்தில் கூர்முனையொன்றால் தீண்டப்பட்டேன். குமிழி உடைந்தது. “ஏன் இவ்வளவு குரூரமாக இருக்கிறீர்கள்?”,என்றே கேட்கத் துணிவேன். ஆயினும் ஒருவித நிறைவு உடலிலும் மனதிலும் பரவியிருப்பதை உணர முடிகிறது. மீண்டும் பிரயாகைக்கு  செல்கிறேன். இளைய யாதவன் நகர்புகுந்ததை கொண்டாட அங்கே அஸ்தினபுரி விழாக்கோலம் பூண்டிருக்கிறது.

நன்றி

ஆனந்த் குரு

ஓஷோ தன்முனைப்பின் வழிகள்

ஓஷோ – கேள்விகள்

ஓஷோ- கடிதங்கள்

ஓஷோ- உரை- கடிதம்

ஓஷோ,கோவை, நான்குநாட்கள்

முந்தைய கட்டுரைமலைபூத்தபோது, அறமென்ப- கடிதங்கள்
அடுத்த கட்டுரைசெம்மீன் -விவேக்ராஜ்