ஓஷோ உரை – தன்முனைப்பின் நூறு முகங்கள்

அன்புள்ள ஜெ,

உங்கள் ஓஷோ உரையின் அடியில் உள்ள கமெண்டுகளைப் பார்க்கிறீர்களா? அவற்றைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்? வேடிக்கையாக கேட்கவில்லை. உண்மையான வேதனையுடன் கேட்கிறேன்.

ராஜேந்திரன் எம்

***

அன்புள்ள ராஜேந்திரன்,

அந்த வகையான கருத்துக்கள், வெளிப்பாடுகள் ஆன்மிகத்தளத்தில் குவிந்து கிடக்கின்றன. எப்போதும் நம் கண்ணுக்குப் படுபவர்களில் நூற்றுக்கு தொண்ணூறுபேர் இத்தகையவர்கள்தான்.

இது ஏன்? பாருங்கள் அரசியல், சமூகக்கோட்பாடுகள் ஆகிய தளங்கள் மிக தூலமானவை. திட்டவட்டமாக ஒருவரின் அறிவை அளக்க அங்கே வழிகள் உண்டு. அங்கேயே முக்கால்வாசிப்பேர் போலிகள். ஒன்றுமே தெரியாமல் ஓரிரு வரிகளை பிடித்துக்கொண்டு படம் காட்டிக்கொண்டிருப்பவர்கள்.

இலக்கியம் இன்னும் நுட்பமானது. அங்கே இன்னொரு நுட்பமானவர்தான் ஒருவரின் மெய்யான தகுதியை அளவிடமுடியும். அவர்கள் குறைவு. ஆகவே பொதுவாக பாவலாக்கள் செல்லுபடியாகும். ஒருவர் தன்னைப்பற்றி மிகையான எண்ணம் கொண்டிருந்தால் அது அப்படியே உடையாமல் வாழ்நாள் முழுக்க நீடிக்க முடியும். ஆகவே போலிகள் மேலும் அதிகம். அசடுகள் அதைவிட மிகுதி.

ஆன்மிகம் இன்னமும் நுட்பமானது. நாம் விரும்புவதுபோலவே நாம் பார்ப்பவை அனைத்தையும் மாற்றிவிடும் தன்மை ஆன்மிகத்துக்கு உண்டு. அது பெரிய மாயை. அதில் சிக்கியவர்களே பெரும்பாலானவர்கள். சொல்லப்போனால் ஆன்மிகத்தின் நுழைவாசலில் இந்த வலை உள்ளது. அதில் சிக்காதவர்களே உள்ளே நுழைய முடியும்.

ஓர் எளிய கருத்து அல்லது ஓர் உருவகம் நாம் எல்லாவற்றையும் அறிந்துகொண்டாயிற்று என்ற பிரமையை உருவாக்கும். நம்மைப்பற்றிய நம்பமுடியாத உயர்வெண்ணத்தை அடையநேரிடும். நம்மை நாமே விதவிதமாக முன்வைக்க ஆரம்பிப்போம். காலப்போக்கில் நடிக்க ஆரம்பிப்போம். மெதுவாக கோமாளிகளாக ஆவோம்.

அதைவிடத் துயரம் அந்நடிப்பை மற்றவர்கள் ஏற்கவில்லை என்றால், கேலிசெய்கிறார்கள் என்றால் மற்றவர்களை வசைபாடும் எதிர்மறையாளர்களாக மாற ஆரம்பிப்போம். அது நாம் அடையநேரும் இழிநிலை. ஓர் ஆன்மிகவாதியிடமிருந்து எதிர்நிலை வெளிப்படாது.

இது ஏன் நிகழ்கிறது? நேரடியாக, குரு இல்லாத நிலையில் நூல்களை வாசிப்பது, தன்னிச்சையாகச் சில பயிற்சிகளைச் செய்வது ஆகியவற்றினூடாக நாம் சில வழிகளில் செல்ல நேர்கிறது. இந்த பயணத்தில் ஒரு காலடி தவறாக வைத்தால் மிகமிக தொலைவுக்கு தவறாகச் சென்றுவிட்டிருப்போம்.

அதில் என்ன சிக்கல் என்றால் நாம் சொந்தமாக அத்தனை தொலைவு வந்துவிட்டதனாலேயே அதை நாம் உதறவோ திரும்பிச் செல்லவோ முடியாது. அதை நியாயப்படுத்த எல்லா சொற்களையும் கண்டடைந்திருப்போம்.

ஆன்மிகத்தில் எவனொருவன் சீண்டப்பட்டு சீற்றம் கொண்டு பேசுகிறானோ அவன் இந்நிலையில் கழுத்தளவுச் சகதியில் புதைந்தவன். பரிதாபத்திற்கு உரியவன்.

குரு தேவையாக ஆவது இங்குதான். குறியீட்டு வடிவான, பொது ஆளுமையான குருவைச் சொல்லவில்லை. நேரடியாக உங்களை அறிந்த, உங்களுடன் சில ஆண்டுகள் உடனிருந்து வழிகாட்டக்கூடிய குரு. அவர் வழிகாட்டவேண்டியதில்லை. ஏனென்றால் வழிகள் இல்லை. அவர் உங்கள் ஆணவத்தை, தன்முனைப்பை உடைத்து அவ்வப்போது உங்களை சிதறடித்தால் மட்டும் போதும்.

ஆனால் அத்தகைய ஒருவரை கண்டடைவது அரிதினும் அரிது. ஏனென்றால் இரண்டு வகையில் நாம் அவர்களை நம்மிடமிருந்து மறைத்துக்கொள்கிறோம். முதற்காரணம் நமது ஆணவம். நாம் நம் ஆணவத்தை வருடிவிடும் ஒருவரை ஆசிரியர் என ஏற்றுக்கொள்வோம். இது அபத்தமாக தெரியும். ஆனால் இதுவே எப்போதும் நிகழ்கிறது.

பெரும்பாலான போலிகள் தங்களிடம் வருபவர்களை ‘நீ அசாதாரணமானவன், நீ தேர்ந்தெடுக்கப்பட்டவன், நீ ஞானத்தை அடையும் நிலைக்கு பக்கத்தில் இருப்பவன்’ என்று சொல்வார்கள். ‘அப்படி எல்லாம் இல்லை’ என்று சொல்ல பெரும்பாலும் எவராலும் முடியாது.

நான் பல ஆண்டுகளாக பார்க்கிறேன். இந்த ’ஆன்மசாதகர்கள்’ பலர் ‘என்னை பாத்ததுமே குரு சொல்லிட்டார், டேய் நீதாண்டா என்னோட ஆளுன்னு’ என்பதுபோல ஏதாவது சொல்வார்கள். அர்த்தம் ‘ நான் எவ்ளோ பெரிய ஆளு’ என்பதுதான். ’சும்மா பாத்தார் சார், உடனே ஒளி ஒண்ணு தெரிஞ்சுது’ என கதைவிடுவார்கள். அர்த்தம் இவர் ஒளியைப்பார்க்கும் கண் கொண்டவர் என்பது.

இந்த ஆணவம், இதிலுள்ள எல்லையற்ற அசட்டுத்தனம், நம்மிடமிருந்து மெய்யான ஆசிரியர்களை மறைத்துவிடும். நம்மை ஏற்பவர்களை நாம் ஏற்போம். நம்மை தூக்குபவர்களை நாம் தூக்குவோம். நாம் விரும்பியபடி அவர்களை வரைந்து உருவாக்கிக் கொள்வோம்.

இரண்டாவது, உறைநிலை. பெரும்பாலான மனிதர்கள் கருத்தியல் உறைநிலையில் இருப்பவர்கள். அதைத்தான் நம்பிக்கை என்கிறோம். அவ்வாறுதான் இருக்கமுடியும். அப்படி இருந்தால்தான் வாழமுடியும். பெண்களின் கற்பில் நம்பிக்கை இல்லாதவன் பிள்ளைகளை வளர்ப்பானா என்ன?

ஆனால் ஆன்மிக ஆசிரியன் அந்த உறைநிலைகளை உடைப்பான். அது சீண்டுவது, நிலைகுலையச் செய்வது. அது நிகழக்கூடாது என்று எண்ணுபவன் அத்தகைய ஆசிரியர்களை நாடமாட்டான். அச்சீண்டலால் ஆணவம் புண்படுபவன் ஆசிரியரை அணுகினாலும் பிற்பாடு விலகிச் சென்றுவிடுவான்.

ஆக, வழிகாட்டிகள் இல்லாமல் இந்த பாதையற்ற பாதையில் அலையும் தற்குறிகளே மிகுதி. அவர்கள் வெவ்வேறு தோரணைகள் பாவனைகள் வழியாக தங்களையும் பிறரையும் ஏமாற்றிக்கொண்டிருக்கிறார்கள். அது ஒரு துயரமான விஷயம், ஆனால் இன்றல்ல பல்லாயிரமாண்டுகளாக இது இப்படித்தான் இருந்துகொண்டிருக்கிறது. ஒன்றுமே செய்யமுடியாது.

ஏன் என்றால் ஆன்மிகப் பயணத்திற்கு எதிராக நிலைகொள்ளும் சக்தி என்பது ஆணவம். அது ஆன்மிகத்தை விட பலமடங்கு விசை கொண்டது. பலநூறு முகங்கள் கொண்டு ஏமாற்றுவது.

ஜெ

ஓஷோ – கேள்விகள்

ஓஷோ- கடிதங்கள்

ஓஷோ- உரை- கடிதம்

ஓஷோ,கோவை, நான்குநாட்கள்

முந்தைய கட்டுரைவிருந்து, தீற்றல்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-6