ஓஷோ உரை – கேள்விகள்

அன்புள்ள ஜெ,

மூன்றுநாட்கள் ஓஷோ உரையைக் கேட்டேன். முன்பு நீங்கள் ஆற்றிய உரைகளிலிருந்து முற்றிலும் வேறுபட்ட உரை. இதிலிருந்த விளையாட்டும் நையாண்டியும் வேறெங்கும் இருந்ததில்லை. விளையாட்டிலிருந்து தீவிரமான விவாதங்களுக்குச் சென்றீர்கள். மீண்டும் திரும்பி வேடிக்கைக்கு வந்தீர்கள். அந்த ஊசலாட்டம் அற்புதமாக இருந்தது.

ஆனால் என் கேள்வி அதிலுள்ள அந்த பாலியல் நகைச்சுவை தேவையான? அதன் பங்கு என்ன? அதை தொடரப்போகிறீர்களா?

ரமேஷ்குமார்

***

அன்புள்ள ரமேஷ்,

ஆன்மிக – தத்துவ உரைகளில் அதிர்ச்சி -திகைப்பு- நிலைகுலைவு என்னும் அம்சத்திற்கு ஓர் இடமுண்டு. ஆன்மிக -தத்துவ விவாதங்களில் நாம் தொடர்ந்து ஒன்றை அடைந்து உடனே உறைந்துவிடுகிறோம். நாம் காணும் ஆன்மிகப்பேச்சுக்களில் பெரும்பாலானவை உறைந்து கல்லானவர்களால் முன்வைக்கப்படுபவை. தொடங்கும் முன்னரே உறைந்தவர்களே பல்லாயிரம்.

அந்த உறைவை உடைப்பது அவசியமானது. அந்த உடைவு நிகழவில்லை என்றால் மேலே கற்கமுடியாது. அந்த அவைக்கு அந்த உடைவு தேவையாகியது. ஆகவே அந்த உரை அப்படி அமைந்தது. அது என் வழியெல்லாம் அல்ல.

ஜெ

அன்புள்ள ஜெ,

உரையில் நீங்கள் உங்கள் நண்பர்கள் இருவர் ஓஷோ பற்றிப் பேசவந்ததைச் சொன்னீர்கள். ஆனால் சொல்லி முடிக்கவில்லை. அங்கிருந்து பேச்சு நகர்ந்துவிட்டது. உரையில் மெல்லிய குறிப்பு இருந்தது. அவர்கள் என்ன சொன்னார்கள்?

பார்த்தா

***

அன்புள்ள பார்த்தா,

என் நண்பர்கள் போகன் சங்கர், அனீஷ் கிருஷ்ணன் நாயர் இருவரும் வீட்டுக்கு வந்து பேசிக்கொண்டிருந்தனர். ஓஷோ உரைபற்றிய பேச்சுவந்ததும் இருவரும் தங்கள் கருத்தைச் சொன்னார்கள். போகன் ஓஷோ வழியாக நவீன ஆன்மிகத்தின் பல இடங்களில் அலைந்தவர். அனீஷ் ஆசாரவாதி, மாத்வ மரபைச் சேர்ந்தவர்.

இருவரும் சொன்ன இரு கோணங்களினான மறுப்புகள் இரண்டுவகையில் பொருள் கொண்டவை என்று சொல்லவந்தேன். ஓஷோ சொன்ன அந்த ‘இன்று’ இப்போது இல்லை என்று போகன் சொன்னார். ஓஷோவின் பார்வையில் மரபை எளிதில் மறுத்துவிடமுடியாது என்று அனீஷ் கிருஷ்ணன் சொன்னார்.

அக்கருத்துக்களை விவாதித்தேன் என நினைக்கிறேன்.

ஜெ

அன்புள்ள ஜெ,

உங்கள் ஓஷோ உரை மிக மிக விரிவானது. தொட்டுத்தொட்டு சென்று ஒட்டுமொத்த மெய்ஞான மரபிலும் ஓஷோவை பொருத்திப்பார்க்கிறீர்கள். என் எளிமையான கேள்வி என்னவென்றால் இதை நாம் எல்லா ஞானிகளிடமும் செய்யவேண்டுமா என்ன? இப்படிச் செய்யும் அறிவுப்பயிற்சி இருந்தால்தான் அவர்களை அணுகமுடியுமா?

மேலும் இத்தகைய அறிவுப்பயிற்சிகள், அறிவுநிலைகள் எளிமையான ஆன்மிகத்துக்கு எதிரானவை அல்லவா?

ஜெயராம் கிருஷ்ணன்

***

அன்புள்ள ஜெயராம்

எல்லா ஞானிகளையும் இப்படி வகுத்தாகவேண்டும் என்று இல்லை. பெரும்பாலானவர்கள் எங்கே நிலைகொள்கிறார்கள் என்பது மிகத்தெளிவு.

ஆனால் ஓஷோ போன்றவர்கள், அவர்களின் வழிச்செல்பவர்களால் முன்னும் பின்னும் எவருமில்லாத தனித்தன்மை கொண்டவர்கள் என முன்வைக்கப் படுகிறார்கள். அவர்களிடம் வேறெதையும் வாசிக்காதே என்றும் சொல்லப்படுகிறது. ஆகவே அவர்கள் அந்த மாயையிலேயே இருக்கிறார்கள். அவர்கள் மானுட வரலாற்றிலேயே முதல்முறையாக ஓஷோ சிலவற்றைச் சொன்னார் என்றெல்லாம் நம்பிக்கொண்டிருக்கிறார்கள். ஆகவே அவர் எங்கே வேர்கொண்டு எங்கே பரவுகிறார் என்று சொல்லவேண்டியிருந்தது.

ஓஷோ தந்த்ரா உட்பட பலவற்றை விளக்குகிறார். ஆனால் அவர் வழியாக மட்டுமே அவற்றை அறிந்துகொள்வது ஆபத்து. அவரிடம் நாம் அடைவது அவர் அளிக்கும் விளக்கம் மட்டுமே. அவை அவருக்கு முன்னரே வேரூன்றிச் செழித்த மரபுகள். அம்மரபுகள்  மெய்ஞானப் பரப்பில் எங்கே உள்ளன, என்னென்ன பொருள்கொண்டிருக்கின்றன என்னும் புரிதல் ஒருவருக்குத் தேவை. ஆகவே ஓர் அறிமுகக்குறிப்பை அளிக்கவேண்டியிருந்தது.

ஆன்மிகம் அறிவுநிலைக்கு எதிரானது என்பது ஓர் பிழையான புரிதல். நம் ஆன்மிகச்செல்வர்கள் பலரும் பேரறிவாளர்கள்தான். அரிதாக யோகநிலை வழியாக அறிவுநிலையை கடந்தவர்கள் இருக்கலாம். ஆனால் அறிவின்மை என்பது ஆன்மிகம் அல்ல. அறிவுகடந்த நிலையே ஆன்மிகம். அறிவினூடாகவே அது இயல்வதாகும்.

அறியாமை எவரையும் விடுவிக்காது, மேலெடுத்துச் செல்லாது. அது ஒருவகை அழுக்கு மட்டுமே. ’தன்மையப் பார்வை’, ’இறுகிய கருத்துநிலை’, ’கண்மூடித்தனமான பற்று’ ஆகிய மூன்றும் அதன் மூன்று தோற்றங்கள். மூன்றையுமே நீங்கள் ஓஷோ பற்றிய என் உரையின் அடியிலுள்ள பின்னூட்டங்களில் பார்க்கலாம்.

ஜெ

ஓஷோ- கடிதங்கள்

ஓஷோ- உரை- கடிதம்

ஓஷோ,கோவை, நான்குநாட்கள்

  • குறிச்சொற்கள்
  • ஓஷோ
முந்தைய கட்டுரைஇரு கடிதங்கள், பதில்கள்
அடுத்த கட்டுரைஅந்த முகில், இந்த முகில் [குறுநாவல்]-2