குமிழிகளை முன்வைத்து…- கடிதம்

குமிழிகள் [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

குமிழிகள் கதை, மரபுகளுட‌ன் மாற்றங்களினால் வரும் உராய்வுகளை ஒரு ஆண் – பெண் உறவுச் சிடுக்கு மூலம் உருவகப்படுத்துகிறது. இரு பக்கமும் சற்று வளைந்து கொடுத்துப் போனால் உறவு முறிவின்றித் தொடரும்.

இக்காலத்து liberated பெண்ணான லிலியுடன் வாழும் சாம் சற்று மரபான, ஆனால் receptive-வான மனம் கொண்ட ஒரு ஆண் மகன். தன் சாதனைகளின் எல்லைகளை அவள் கடந்து விட்டதை உணர்ந்திருக்கிறான். துள்ளும் கன்றுக்குட்டியாக அவள் பாய்ந்தோடி முன்னேறுவதை ரசிக்கிறான்.

சாமிடம் வாழ்ந்து விட்ட ஒரு நிறைவு இருக்கிறது. ஆணின் சராசரிக் கடமைகளான வீடு பேறு, மனைவி, செல்வம் ஈட்டுதல் போன்றவையெல்லாம் அடைந்தாயிற்று. இதற்கு மேலும் திரைக்கடலோடித் திரவியம் தேட‌ வேண்டியிருக்கவில்லை. ஆனால் லிலி இன்னும் எதையோ நிரூபிக்க பெரும் உளவேகத்துடன் முனைந்து நிற்கிறாள். உலகமெங்கும் பறந்து, நூற்றுக்கணக்கான சக‌ ஊழியர்களையும் வாடிக்கையாளர்களையும் பணித் திட்டங்களையும் வழிநடத்துபவள்.

வயதானாலும் பணியிடத்தில் தொடர்ந்து முன்னேற, பெண்மை ததும்பும் பொலிவான‌ உடல் லிலிக்கு ஒரு கருவி. வயதாவ‌தால் தளர்ந்து வரும் உடல் பகுதிகளை அறுவை சிகிழ்ச்சை செய்தாவது மெருகேற்றிக் கொள்ளச் சித்தமாயிருக்கிறாள். அவள் பார்வையில், அழகூட்டிக் கொள்வதன் அத்தியாவசியம் புரியாத மரபான மனங்கள், அதனை வெறும் ஆணை மயக்கும் உத்தியாக, அல்லது வயதாவதை ஏற்க மறுக்கும் மனப் பிறழ்வாக, சிறுமைப்படுத்த முயலும்; பணியிடத்தில் முன்னேறுவதற்காக‌ லிலி எதையோ இழந்துவிட்டுச் செல்வதாக ஜோடிக்கும். எனவே தன் போன்ற பெண்களை முன்னேற விடாமல் நிறுத்தும் ஒரு தளையாக அதனை லிலி நிராகரிக்கிறாள்.

“நீதான் முடிவெடுத்து விட்டாயே, நான் சொல்ல என்ன இருக்கிறது” என்கிற விதமாக பரபரபற்றிருக்கும் சாமின் தன்மை அவளை எரிச்சலுறச் செய்கிறது. விவாதம் செய்யாமல் நழுவும் அவனை இழுத்து உட்கார்த்தி வைத்து, “இது தேவையா” என்ற பாணியில் அவன் உள்ளத்தில் ஓடும் எண்ணங்களை வெளியே உருவிப் போட்டு எதிர்வாதம் செய்து தகர்க்கிறாள். “உன்னுடன் மல்லுக்கு நிற்கப் போவதில்லை, தெரிந்து செய்தால் சரி” என்று அவளுக்குப் பாதை விட்டு விலகி நிற்கும் அவனை அவள் விட்டு முன்செல்லவில்லை; “உன் சம்மதத்தைப் பெறுவதுதான் முதல் வெற்றி” என்று தன்னுடன் இழுத்துச் செல்கிறாள்.

அவளது இயற்கை மீறிய உருமாற்றங்கள் சாமுக்கு உள்ளூர இழப்புதான். ஒவ்வொரு மாற்றத்துக்குப் பின்னும் புதிதாகப் பழகிக் கொள்ள வேண்டியிருக்கிறது. மாறாதிருக்கும் சுவர்ச் சித்திரங்களும் புத்தகப் படங்களும் மதுக் கோப்பையின் வடிவமும் கிளைத்துவிடும் இனிய நினைவுகளில் அமிழ்ந்து திருப்திப் பட்டுக்கொள்ள வேண்டியதுதான்.

‘கந்தர்வன்’ சிறுகதையில் வரும் முருக‌ப்பன், ஆற்றலுள்ள‌ பெண்ணுடன் எப்படி வாழ்வது என்று தெரியாமல் மிரட்டல், வெற்றுக் கூச்சல், புலம்புதல், குழைதல் என்று எல்லா பாணங்களையும் பிரயோகித்துப் பார்க்கிறான். ஊரையும் அரசாங்கத்தையும் திறமையாக ஏய்த்துக் கோடிப் பொன் சேர்த்து வைத்த தனது ஆண்மை வள்ளியம்மையின் மதிப்பைப் பெறவில்லையே என்ற ஏக்கம் உள்ளே புழுங்கிக் கொண்டிருக்கிறது. வலிவு காட்டினாலும் ‘உன்னால் இவ்வளவு தானே முடியும்’ என்ற ஏளனப் பார்வை முன் அவன் மொத்தமாகத் தோற்றுப் போகிறான். ஊரின்  alpha male-லாக வலம் வரும் அணைஞ்ச பெருமாளுடன் அவள் தீப்பாய்ந்தது அவனைப் பொறுத்தவரை அவனுடைய ஆண்மைக்கு அவளால் செய்யப்பட்ட உச்ச கட்ட அவமதிப்பு. நிமிடப் பொழுதில் நிலைமையை அனுமானித்து வள்ளியம்மை செய்த செய்கை, அவன் அடையாளத்தையே மாற்றி எழுதிவிட்டது. உண்மையைச் சொன்னால் ஊரே சிரிக்கும், உயிரே போகும் என்ற நிதர்சனம் பயங்கரமாக உருவெடுத்து நிற்கிறது. வேறிடம் பெயர்ந்து போய் புதிய தன்னடையாளத்தை நிறுவி மேலும் செல்வம் சேர்த்து கட்டற்ற இன்பம் துய்த்து வாழ்ந்து ஓய்ந்து விழும்போது வள்ளியம்மையிடம் தோற்றுப்போன மனவலி புற்றுநோய் போல் கிளைத்துப் பரவி ஆட்கொள்கிறது. மகாபாரதத்தில் கிருஷ்ணனை வெறுப்புடன் நினைத்துக் கொண்டே இருந்த துரியோதனனுக்கு விஸ்வரூப தரிசனமாவது கிடைத்தது; இவனுக்கு எஞ்சியது பால்வினை நோய்களும், போதைப் பழக்கமும், வசவுச் சித்தன் என்ற வரலாற்று அடையாளமும்தான்.

அ.பின்வரும் பகுதி, ‘Roosh V’ என்ற புனைபெயர் கொண்ட Daryush Valizadeh என்ற infamous இணைய ஆளுமையின் இணையப்பதிவுகளையும், அவர் நடத்திய விவாத தளங்களில் (online forum) பங்கேற்றவர்கள் நாலைந்து வருடங்களில் எழுதியவற்றை வைத்தும், சில ஆராய்ச்சிக் கட்டுரைகளை அடிப்படையாகக் கொண்டும் எழுதப்பட்டது. ஜனவரி 2021‍‍இல் அமெரிக்க கேப்பிடல் ஹில் முன் அரங்கேறிய வலதுசாரிக் கிளர்ச்சியால், வலதுசாரிக் கருத்தோட்ட‌ இணையதளங்கள் சட்ட அமைப்புகளின் கவனத்துக்கு வரவும் அவரது இணையதளத்தின் பல பகுதிகள் பொதுப் பார்வையிலிருந்து ‘பூட்டி வைக்கப்பட்டு’ விட்டன. ஏற்கனவே சில வருடமுன்பு ஆர்தொடாக்ஸ் கிறிஸ்தவத்துக்கு மாறியதால் ‘பெண்களைக் கவர்வது எப்படி’ வகைப்பட்ட தனது முந்தைய பல ஆக்கங்களையும் இணையப் புத்தகங்களையும் பாவ வழிச் செல்லத் தூண்டுவன என்று சொல்லி அழித்துவிட்டார்.

ஆ. Liberalism என்பதைத் தாராளவாதம் என்று குறிப்பிட்டிருக்கிறேன்.Liberalization என்ற‌ தாராளமயமாக்கலுடன் குழப்பப்படுமா என்று தெரியவில்லை.

இ. இதை வெளியிடுவதால் ‘பெண்ணிய எதிர்ப்புவாதி ஆணாதிக்கத்தை மீட்க‌ விரும்புகிறார்’ போன்ற‌ தேவையில்லாத வசவுக‌ள் / பிம்பங்கள் வருமென்ற தயக்கமிருந்தால் நீக்கிவிடவும். வெளியிடுவதானால் இந்தக் குறிப்பை நீக்கிவிடவும்.

*

முருகப்பன் போன்ற பழமைவாத ஆண்களின் உலகம், டேட்டிங் மூலம் துணை தேடும் கலாச்சாரம் நிலவும் மேற்கத்திய நாடுகளில் பல்வேறு விதங்களிலும் இன்று மோசமாகி விட்டது. இன்று தொலைக்காட்சிப் பெட்டி முன் சாய்வு நாற்காலியில் அமர்ந்தபடி ஓய்வூதியத்தில் வாழ்ந்து கொண்டிருக்கும் தன் தாத்தா, தனக்காகும் வயதில் வெறும் பத்தாம் வகுப்புப் படிப்புடன் ஒரு சாதரண தொழிற்சாலை வேலையிலிருந்தபடி இல்லத்தரசி, குழந்தைகள், சொந்த வீடு, தொழிற்சங்கம் என்று ஆதிக்க நாயகனாக ராஜாங்கம் நடத்திவந்தது போல் தனக்கு ஏன் அமையவில்லை என்ற கேள்வி உறுத்திக் கொண்டே இருக்கிறது. வீட்டு விலையேற்றத்தின் பயனையும் அவுட்ஸோர்ஸிங் போன்றவற்றின் பொருளாதாரப் பயன்களையும் தாத்தாவின் தலைமுறை அனுபவித்துவருகிறது. ஆனால் அந்த வாழ்க்கைத் தரவுயர்வு, பேரன்களின் தலைமுறைக்கு வீடு பேறு, செல்வமீட்டும் வாய்ப்புக்கள் போன்றவற்றை எட்டாக் கனியாக்கிவிட்டது. ஒரு சராசரி ஆண் தன் சொந்தக்காலில் நிற்கத் தொடங்க  உதவும் தொடக்கநிலைப் பணிகள் வேலைவாய்ப்பில் சமத்துவம், உலகமயமாக்கம், தானியங்கி உற்பத்தி இயந்திரங்கள், அதீத தொழில்நுட்ப முன்னேற்றங்கள், பெருமுதலீட்டுடன் வரும் தொழிற்போட்டி போன்றவற்றால் அருகி விட்டன.

படித்து முடித்து, நல்ல சம்பளத்துடன் கூடிய‌ வேலை தேடி, தோதான இனம், நிறம், உடலழகு போன்ற லட்சணங்களும், குடும்பம் அமைக்கும் விருப்பமும் இருக்கும் பெண்ணைக் கண்டுபிடித்து அவளை ஈர்த்து உடன் வாழ சம்மதிக்க வைத்து ஒரு வீட்டை வாங்கிக் குடியேறிக் குழந்தைகள் பெற்றுக் கொள்வதைப் பற்றி யோசிக்கத் தொடங்கும் போது இருவருக்கும் முப்பத்தைந்து நாற்பது வயதாகி ஆசுவாசம் வந்துவிடுகிறது. வயதானபின் குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்துக்கு உத்தரவாதம் தரும் சமூகப் பாதுகாப்பு வலை (social security / universal health care) இல்லாத அமெரிக்கா போன்ற தேசங்களில் குழந்தைகளை வளர்த்துப் படிக்க வைத்து ஆளாக்குவதற்கான மொத்த செலவு பற்றிய பயமும், முப்பத்தைந்து வயதுக்கு மேல் கருத்தரிப்பதில் பெண்களுக்கு உள்ள கஷ்டங்களும் அத்தனை வயதுக்கு மேல் குழந்தைகள் பெற்று குடும்பத்தை விரிவாக்கும் ஆர்வத்தை இருவருக்குமே மேலும் குறைத்து விடுகிறது.

அண்மையில் ஐம்பது வயதொத்த பிரிட்டானிய ஆண்கள் தற்கொலை செய்துகொள்வது அதிகரித்துள்ளது கவனத்துக்கு வந்தபோது, தனிமையும், ஆண்மகனுக்கான‌ சாதாரண இலக்குகளைக் கூட அடையாமல் வயது கடந்து விட்டதான விரக்தியும் முக்கிய காரணங்களாகப் பேசப்பட்டன.

வேலைவாய்ப்பில் சமத்துவம், பெண்ணியம், முற்போக்குவாதம், பணியில் முன்னேறும் முனைப்பு போன்றவை வாழ்க்கை நோக்கில் கொணர்ந்த மாற்றம், பெண்களுக்கு ஆண் துணையின் தேவையை இரண்டாம் பட்ச‌மாக்கி விட்டது. ஸ்வீடன், நெதர்லாந்து போன்ற நாடுகளிலுள்ள சமூகப் பாதுகாப்பு அமைப்புக்கள் தரும் ஆதரவால் பெண்கள் உறவற்றோ உறவுடைத்துப் பிரிந்து வாழவோ தைரியமாக முடிவெடுக்க முடிகிறது. Tinder போன்ற டேட்டிங் செயலிகள், வெறும் விரல்வீச்சு (swipe left to reject) மூலம்  நூற்றுக்கணக்கான ‘துணை தேடும் ஆண்’களை வீட்டிலிருந்தபடியே வடிகட்டும் சக்தியைக் கொடுக்கிறது. பெண்களுக்குப் பாதுகாப்பு சேர்க்கும் நல்ல விஷயம் தான்; ஆனால் கூகிளில் தோன்றும் முதல் நாலைந்து தலங்களுக்கே சராசரி சுற்றுலாப் பயணிகளின் கும்பல் சென்று குவியச் செய்யும் funnel effect-டால், பரவலாகப் பெண்கள் விரும்பும் ஆணழகு லட்சணங்களுடைய‌ அதே பத்து இருபது ஆணழகர்களின் தொடர்புக்கே மொத்தப் பெண்களும் மொய்க்கிறார்கள். அத்தகைய தர நிலுவையில் சராசரிக்கு அருகேயோ கீழேயோ இருக்கும் ஆண்கள் நீண்டகாலம் தேடியும் ஜோடி கிடைக்காது ஒதுங்கிப் போகிறார்கள்.

பலர் சமூக‌ சகவாசத்தையே தவிர்த்து இணையக் கேளிக்கைகளில் முழுநேரமும் ஈடுபடுகிறனர். வட அமெரிக்காவில் இவர்கள் தங்களை incel (involuntarily celibate) என்று அழைத்துக் கொள்கிறார்கள். Beta males, soyboys என்ற இழிச் சுட்டுகளும், MGTOW (men going their own way) என்ற வகையும் உண்டு.  ஜப்பானிலும் தென் கொரியாவிலும் இத்தகைய மனநிலைக்கு ஹிகிகோமோரி (hikikomori) என்று பெயர்.

வேறு சிலர் பெண் தொடர்பு இல்லாத கடும் சமயச் சடங்குகளையோ உடற்பயிற்சிகளையோ மேற்கொண்டு மாற்று வழியில் மன‌நிறைவைத் தேடுகிறார்கள். இன்னும் சிலர் பெண் ஆணுக்கு அடங்கியவளே என்று வலியுறுத்தும் தீவிர‌ மத உட்பிரிவுகளைத் தேடிச் சென்றடைகிறார்கள்; பெண்ணுரிமை, பெண்ணியம், சுதந்திரமாகச் சிந்திக்கும் பெண், பால்மாற்றம் போன்றவற்றின் மேல் கடும் வெறுப்பை வளர்த்துக் கொள்கிறார்கள்.

மிகக் குறைந்த காலத்திலேயே இது அனைத்து தாராளவாதக் கொள்கைகளுக்கு எதிரான மனநிலையாக மாறும். ஊரிலிருக்கும் பெண்கள் தங்களது டேட்டிங் அழைப்பை மதித்துத் திரும்பிக் கூட‌ப் பார்ப்பதில்லை என்று ஏற்கனவே குமைந்து கொண்டிருந்த‌ ஐரோப்பிய இளைஞர்கள், ஐரோப்பிய ஒன்றியத்தின் நிர்ப்பந்தங்களால் ஆயிரக்கணக்கான அகதிகள் தங்கள் ஊர்ப் புறங்களில் புதிதாகக் குடியேற்றம் செய்யப்படுவதைக் கண்டு ஊர்ப் பெண்களை ஈர்ப்பதற்கான போட்டி இன்னும் கடுமையாகிவிட்டதே என்று மேலும் வெறுப்படைந்தார்கள். 2016‍ வாக்கில் அமெரிக்காவிலும் சில ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிலும் தாராளவாதக் கட்சிகள் தேர்தல் தோல்வியடைந்த‌தற்கு இந்த மனநிலை ஒரு காரணம். அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடப் போவதாகத் தெரிவித்த போது  அரசியலனுபவமற்ற பண்படாத கோமாளிச் செல்வந்தராக உலகத்தால் நகைப்புடன் பார்க்கப்பட்ட‌ டொனால்டு ட்ரம்ப், எவருமே எதிர்பாராமல் வென்றதற்கு முக்கிய காரணம், அவருக்கு தேர்தல் ஆலோசகராக இருந்த ஸ்டீவ் பேனன் (Steve Bannon) இந்த மரபுவாத/பழமைவாத ஓட்டு வங்கியை அடையாளம் கண்டு சரியாகப் பயன்படுத்திக் கொண்டதுதான்.

2001 வரை அமெரிக்க அதிபராக இருந்த பில் கிளிண்டனுக்கு இணையான ஆற்றலுடையவராக முன்னின்றார் அவர் மனைவி ஹிலாரி கிளிண்டன்; 2016 அமெரிக்க அதிபர் தேர்தலிலும் போட்டியிட்டார். போட்டியாளர்களுக்கான விவாத மேடையில் நேரடியாகவே அவரைக் கீழ்த்தரமாகப் பேசி, பல பொய்ச் செய்திகளைப் பரப்பி தேர்தலில் அவரை வென்ற ட்ரம்ப் பல விதத்திலும் ‘மீண்டெழும் ஆணாதிக்கத்தின்’ சின்னமாக இந்தக் குழுவால் பார்க்கப்பட்டார். ட்ரம்ப்பின் வெற்றியைத் தங்கள் வெற்றியாகப் பாவித்துக் கொண்டார்கள். சபாநாயகர் நான்ஸி பெலோஸி, பெண் பத்திரிகையாளர்கள் என்று ஆற்றல் மிக்க‌ பெண்கள் மீண்டும் மீண்டும் அவரால் அவமதிக்கப்பட்டபோது இணைய ஊடகங்களில் கெக்கலித்து ட்ரம்ப்பைக் கொண்டாடினார்கள். பொதுவெளியில் தோன்றும்போது அவரது மனைவி மெலனியா எப்போதுமே அவருக்கு ஓரடி பிந்தியே நடந்து வருவதும், அதிகம் கவனம் ஈர்க்காமல் வெள்ளை மாளிகையில் வாழ்ந்ததும் ட்ரம்ப்பின் ஆண்மைத்தனத்துக்கு உட்பட்டு நிற்பதாக அவர்களால் பார்க்கப் பட்டது.

2020 தேர்தலின் போது இந்த  ஓட்டு வங்கி அப்படியே மொத்தமாக மீண்டும் அவரது குடியரசுக் கட்சிக்கே வாக்களித்தது. (எனினும் அவரது எதிர்சாரியிலிருந்த ஜனநாயகக் கட்சி, தேர்தல்களில் வேண்டுமென்றே பங்கேற்காத, அல்லது பங்கேற்க விடப்படாத, ஒரு பெரும் ஜனத் திரளை தபால் மூலம் பெருவாரியாக‌ வாக்களிக்க ஊக்குவித்து, வாக்காளர் பங்கேற்பு சதவிகிதத்தை இரட்டிப்பாக்கியது. பிரச்சாரத்தின் போது இந்த இரட்டிப்பைக் கணக்கில் கொள்ளாத குடியரசுக் கட்சி வாக்குச் சாவடிகளில் இடப்பட்ட பெருவாரியான வாக்குகளை அள்ளியது; தபால் வாக்குகள் கடைசியாக எண்ணிச் சேர்க்கப்பட்டபோது ஜனநாயகக் கட்சி வென்றிருந்தது. பெருவாரியான தபால் வாக்குகள் அவர்களுக்கே இடப்படிருந்தன.)

இன்று இத்தகைய ஆண்களின் மனநிலை புரிந்து அவர்கள் வழிகாட்டிகளாகவோ ‘மெய்நிகர் சகா’க்களாகவோ மனம் திறந்து உரையாடக்கூடிய‌ பல வழிகள், பாலியல் பாகுபாட்டைத் தூண்டுவதாகவும் பெண்ணியவாதிகளைத் தூற்றுவதாகவும் தீவிர வலதுசாரித்துவமாகவும் காரணம் காட்டி அடைக்கப்பட்டுக் கொண்டே இருக்கிறன. புனைபெயர்களிலோ அநாமதேயராகவோ இணையங்களில் உலவி வந்த‌  Mens Rights Activist (MRAs) ஆளுமைகள் doxxing போன்ற உத்திகள் மூலம் அம்பலப்படுத்தப்பட்டனர்.

“தனக்கென ஒரு வீடு கூடக் கிடையாது; வேலை கிடையாது; அம்மா வீட்டில் வாடகையில்லாமல் வாழ்ந்து கொண்டு ஆண்மைத்தனம் பற்றி வழிகாட்டிக் கட்டுரைகள் எழுதுபவன்” என்ற விதமாக ‘அடையாளப் படுகொலை’ செய்யும் செய்திக் கட்டுரைகள் எழுதப்பட்டன‌. ஓயாத கவன ஈர்ப்பின் மூலமும், புகார் மனுக்கள் மூலமும் அவர்கள் இணையம் மூலம் வருவாய் ஈட்டும் வழிகள் அடைக்கப்படுகிறன. குறுஞ்செய்திகளும் காணொளிகளும் நீக்கப்படுகிறன; அல்லது அக்காணொளிகளில் விளம்பரம் த‌ரும் நிறுவனங்களுக்கு அவற்றை நிறுத்துமாறு மனுச் செய்யப்படுகிறது. மின் புத்தகங்கள் விற்பனை நிறுத்தம் செய்யப்படுகிறன; பொதுநிகழ்ச்சிகள் முதலியன‌ தடை செய்யப்படுகிறன. பன்னாட்டுப் புகழ் கொண்ட சில MRA ஆளுமைகள் வெறும் முப்பது பேர் கொண்ட கூடுகைகளுக்கு வர விஸா மறுப்பு / பயணத் தடை கொண்டு வரப்பட்டது. அவர்களது இணைய குழுமத்துக்கு மட்டுமான தனிக் கூடுகைகள் நடக்கும் இடங்களைக் கண்டுபிடித்து அவற்றுக்கு வருபவர்களை படம் பிடித்து அம்பலப்படுத்தி “பாலியல் பாகுபாட்டு ஆதரவாளர்” என்ற முத்திரை உண்டாக்கி, தொழில்முறை இழப்புகள் உண்டாக்கப்படுகிறன.

12 Rules போன்ற புத்தகங்களை எழுதிய‌ டொராண்டோ பல்கலைக்கழகப் பேராசிரியர் ஜோர்டான் பீட்டர்ஸ‌ன், எவரையும் புண்படுத்தாத  politically correct பேச்சு / எழுத்து வழக்கு கனடாவில் விவாதமின்றி சட்டதிட்டங்களால் நிர்பந்திக்கப்படுவதை சுட்டிக்காட்டிப் பேசத் தொடங்கியவுடன் transphobia கொண்ட‌ பழமைவாதியாக அடையாளமிடப்பட்டார். வெளிவரவிருந்த‌  புத்தகங்களை நிறுத்துமாறு அவரது பதிப்பகத்தாருக்கு அழுத்தம் வந்தது. ஹார்வார்டு பல்கலைக் கழகத்தில் அவரைப்  பாடம் நடத்த அழைத்திருப்பதற்கு எதிர்ப்புகள் எழுந்தன. அவரது வகுப்பறைகளிலும், விவாதக் கூடுகைகளிலும் புகுந்து கோஷங்களெழுப்பித் தடங்கல் உண்டாக்கப் பட்டது.

தாராளவாதப் பேச்சுரிமையைப் பறிக்க‌ எந்த ஒடுக்குமுறைகள் உபயோகிக்கப் பட்டனவோ, அதே ஒடுக்குமுறைகளை இன்று பதவியிலிருக்கும் தாராளவாதிகள் பழமைவாதத்தின் மேல் பிரயோகிப்பது வேதனையானது. சமூக எதிர்பார்ப்புகளிலும் சக வயதுப் பெண்களின் மனதில் வந்த மாற்றங்களாலும் கட்டுமானம் குலைந்து இலக்கின்றித் திரியும் இளவயதினரை சமுதாயம் கண்டுகொண்டு அவர்கள் திசைதேர்ந்து செல்ல முடிந்தவரை உதவவேண்டும். இன்னொரு தலைமுறை இவ்வாறு திசையற்றுப் போகாமலிருக்க தாராளவாதம் லிலியைப் போல் இவர்களையும் மெல்ல மாற்றி உடனழைத்துப் போக வேண்டும்.

– சுப்பிரமணியன் 

25 எச்சம் [சிறுகதை]

24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]

21 அறமென்ப…  [சிறுகதை]

20 நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

 

முந்தைய கட்டுரைநீலகண்டப் பறவையைத் தேடி- நவீன்
அடுத்த கட்டுரைஅன்னம்- ஒரு கடிதம்