அறமென்ப… இழை- கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

அறமென்ப கதை அறமென்பது ரிலேட்டிவ் ஆனது அல்ல என்பதைச் சொல்லும் கதை. மிகத்தெளிவாகவே கதையில் இது உள்ளது. ஆனாலும் கதைவாசித்த ‘சிந்தனையாளர்’ பலர் முட்டிமோதுவதைக் காணமுடிகிறது. இலக்கியம் வாசிக்கும் பழக்கமுள்ள, ஆனால் தங்களையும் இலக்கியவாதிகளாகக் கற்பனைசெய்துகொள்ளாத வாசகர்களுக்கு சிக்கலே இல்லை.

அறம் என்பது நம்மிடம் மற்றவர்கள் எப்படி இருக்கிறார்கள், நன்றியுடன் இருக்கிறார்களா, நாம் செய்வதற்கு எதிர்வினை இருக்கிறதா, அது வரலாற்றில் பதிவாகிறதா, மற்றவர்கள் அறமுடன் இருக்கிறார்களா என்பதையெல்லாம் வைத்து முடிவாவது அல்ல. உன் இயல்புப்படி நீ அறத்துடன் இருப்பது, அவ்வளவுதான். அதுதான் இக்கதை சொல்வது

ராஜா அருணாச்சலம்

***

ஜெ,

இக்கதையில் வரும் அனைத்து கதாபாத்திரங்களும் தத்தம் செயல்களை நியாயப்படுத்திக்கொண்டே இருக்கிறார்கள். ஆயினும் அவரவர் இயல்புபடியே வினையாற்றுகின்றனர்.

தனக்கு அநீதி இழைத்த ஒவொருவரின் நீதி உணர்வையும் கேள்விக்குள்ளாக்கும் செல்வா ஒருகணத்தில் வாழ்வின் நிதர்சனத்தை மின் வெட்டுப்போல் உணரும் போது மிகப்பெரும் அகவிடுதலையை அடைகிறான்.

இவ்வளவு நேர்ந்த பின்னரும் தன்னிடம் உதவி கோரும் கிழவிக்கு மனம் இரங்குகிறான். மனிதர்கள் எப்படி இருப்பினும் நான் என் இயல்பு படியே வாழ்வேன் என்று உறுதி பூணுகிறான். மானுடம் வென்றதம்மா!

நெல்சன்

***

இழை [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

இழை கதையை வாசிக்கையில் விதவிதமான உணர்ச்சிகளை அடைந்தேன். நமக்கு ஒரு ஐம்பது வயது ஆகிவிட்டால் ஒரு விஷயம் தெரியும். ஆண் பெண் உறவு என்பது ஒரு இழைதான். அது ஒரு மெல்லிய மயிரிழை. ஒரு காலத்தில் அது அருவிபோல இருந்தது. ஆலம் விழுதுபோல அதில் தொங்கி ஏற முடிந்தது. ஆனால் மெல்லிய இழை. கூர்மையான ஆயுதமாக ஆகி கழுத்தையும் அறுப்பது.

ஆனால் அந்த மெல்லிய இழையே கொலைக்கு ஆயுதமாகும்போது பெருகி பெரிய வடமாகவும் ஆகும்.இந்த கதையே கதைக்குள் வரும் மூன்று வெவ்வேறு உருவகங்களை இணைப்பதற்காக சொல்லப்படுவது. மயிரிழை எப்படியெல்லாம் உருமாறுகிறது என்று காட்டுவது. அது ஒரே துப்பறியும் கதையால் இணைக்கப்பட்டுள்ளது

ஆர். மகாதேவன்

***

அன்புள்ள ஜெ,

இழை. பூடகமான கதை. இதை தொடர்ந்து வரும் கதைகளுக்கும் அந்த தன்மையுள்ளது.

டெய்சி தான் ஜானை கொன்றாள் என்றும், தன் முடியை கொண்டு தான் ஜானை கொன்றாள் என்றும் கதை முன்பே வாசகருக்கு உணர்த்தி விட்டு முன் செல்கிறது.

ஜான் செய்யும் கொடுமைகளை பொறுக்க முடியாமல், அவனை பிரிந்து சென்று புது வாழ்க்கை ஒன்றை துவங்குவதற்கான ஆசை இருந்தாலும் அவனை கொலை செய்ய எந்த கணத்தில் முடிவெடுத்தாள். இவ்வளவு திறமையும் பலமும் வாய்ந்த ஜானை கொல்லும் ஆயுதம் எது என்று டெய்சி எப்படி  கண்டுகொண்டாள் என்பது தான் கதை என்று நினைக்கிறேன்.  எலியாம்மா சொல்லும் மறுபக்கத்தால் தான் அவள் ஜான் இறந்தபின் அழுகிறாள். அந்த ஜானின் இன்னொரு இயல்பால் தான் இதுவரை அவனை கொலை செய்யாமல் பொறுத்து உடனிருந்தாள். அப்படி இருந்தும் அவள் கொலைசெய்யும் முடிவை, தன்னால் அதை செய்யமுடியம் என்ற நம்பிக்கையை எப்பொழுது அடைகிறாள்.

ஜான் அந்த நாடகத்தை சொல்லி அவளின் கூந்தலை வைத்து கழுத்தை நெறித்து உயிர் பயம் காட்டி, புகையை முடிமேல் ஊதும் பொழுதுதான் டெய்சி அந்த கொலை செய்யும் முடிவை எடுக்கிறாள். தன் முடியின் சாத்தியத்தையும் கண்டுகொள்கிறாள்.

அந்த நாடகத்தை போல் ஜான் எதற்காக தன்னை இவ்வளவு நெருக்கமாக வைத்திருக்கிறானோ அதை கொண்டே தன்னை கொள்வான் என்பதை  உணர்ந்துகொள்கிறாள். ஏனென்றால் இவ்வளவு திறமை இருக்கும் ஜானுக்கு தன்னைவிட வலுவானது அந்த கூந்தல் என்று தெரியும்.  ஒன்று தனக்கு நெருக்கமாக இருக்கவேண்டும் இல்லை என்றால் அது அழியவேண்டும் என்று நினைக்கிறான். தன்னை வைத்தே தன்னை அழிக்கும் அந்த நாடக முடிவுக்கு காலம்காலமான முடிவக்கு எதிரான முடிவு ஒன்றை டெய்சி கொடுக்கிறள். அதுவும் அந்த முடியை வைத்தே. A Girl’s Anti-climax to History.

கதையில்  தொன்மையான வித்தைகளுக்கும் சர்க்கஸ்குமான வேறுபாடு சித்தரிக்கப்படுகிறது. அதை வைத்து இரண்டிலும் உள்ள மனித தன்மை பற்றி யோசிக்கலாம். அதில் தலைமுறை தலைமுறையான கல்வி பண்பாடாக இருக்கிறது சர்க்கஸ் அப்படி இல்லை என்றும். வித்தையில் கழைகூத்தாட்டம் போன்றவை கூடுதல் வியப்பை தந்தாளும் ஏன் சர்க்கஸ் மீது மக்களுக்கு நாட்டம்  என்பதை கேள்விகளாக எழுப்பி கொண்டு சிந்திக்க கதையில் வாய்புள்ளது. அதேபோல ஆணின் வலுவுக்கு எதிராக அதைவிட இன்னும் வலுவான ஒன்றாக இயற்கை பெண்ணுக்கு முடியை கொடுத்தா அழகிலும் சரி வலுவிலும் சரி என்றும் கதையை வாசிக்கமுடியும். மற்றும் மயிர் இழையில் உயிர் பிழைத்தேன் என்று சொல்வார்கள், அந்த இழையின் வலிமையை சொல்லும் கதை இது.

சர்க்கஸ் மிருகங்கள் வாழும் இடம். உனக்கு மனிதன் வாழும் வீடு  கிடைத்து விட்ட பின், அந்த முடிக்கான அந்த ஆயுதத்துக்கான அவசியம் இனி இல்லை என்றுதான் காண்ஸ்டபிள்  சொல்லி செல்கிறார்.

நன்றி

பிரதீப் கென்னடி

***
25 எச்சம் [சிறுகதை]
24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]
21 அறமென்ப…  [சிறுகதை]
20 நகை [சிறுகதை]
19.எரிசிதை [சிறுகதை]
18 இருளில் [சிறுகதை]
17 இரு நோயாளிகள் [சிறுகதை]
16 மலைபூத்தபோது [சிறுகதை]
15 கேளி [சிறுகதை]
14 விசை [சிறுகதை]
13. இழை [சிறுகதை]
12. ஆமென்பது[ சிறுகதை]
11.விருந்து [சிறுகதை]
10.ஏழாம்கடல் [சிறுகதை]
9. தீற்றல் [சிறுகதை]
8. படையல் [சிறுகதை]
7.கூர் [சிறுகதை]
6. யட்சன் [சிறுகதை]
5. கந்தர்வன் [சிறுகதை]
4.குமிழிகள் [சிறுகதை]
3.வலம் இடம் [சிறுகதை]
2.கொதி[ சிறுகதை]
1.எண்ணும்பொழுது [சிறுகதை

முந்தைய கட்டுரை‘வெண்முகில் நகரம்’ வாசிப்பு முனைவர் ப. சரவணன்
அடுத்த கட்டுரைஇந்து என்னும் உணர்வு- கடிதங்கள் பதில்கள்.