திரை, அறமென்ப – கடிதங்கள்

அறமென்ப…  [சிறுகதை]

அன்புள்ள ஜெ,

ஆழமான நெருக்கடிகளிலிருந்து நாம் எப்படி ஒரு கணத்தில் சட்டென்று வெளியேறிவிடுகிறோம் என்பதை நான் பலமுறை யோசித்தது உண்டு. அந்த நெருக்கடிகளில் நாம் எதையாவது புதியதாக கற்றுக்கொண்டோம் என்றால் , நம்மிடம் ஏதாவது ஆழமான மாற்றம் உருவானது என்றால் சட்டென்று ரிலீவ் ஆகிவிடுகிறோம். சாவு கூட அப்படித்தான்.

ஏன் என்று சிந்தித்தால் ஒன்று தெரிகிறது. நெருக்கடிகள் என்பவை நாம் புரியாமல் தத்தளிக்கும் நிலைதான். இப்படி ஏன் நிகழ்கிறது, இப்படி நிகழ்ந்தால் இனிமேல் என்ன செய்வோம் என்றெல்லாம் நம் மனம் பேதலிக்கிறது. அது நாம் அறியாமையில் நிற்கும் ஒரு தருணம். அங்கே அறிவுதான் விடுதலை.

அந்தவிடுதலையை அறமென்ப கதையில் செல்வா அடைகிறான். அவனுடையது ‘நான் அறமென நினைத்தது இது இல்லையா? நான் நினைத்த அறம் உலகில் இல்லையா?”என்பதுதான். அதற்குரிய ஒரு பதிலை அவன் கண்டுகொண்டான். ஆகவே ரிலீவ் ஆகிவிடுகிறான்.

அந்தப்பதில் கதையில் பூடகமாகவே உள்ளது. அந்தப்பூடகமான பதிலைச் சென்றடைபவர்களுக்கு மட்டுமே இந்தக்கதை கதையாக பொருள்படுமென நினைக்கிறேன்

எம்.ராஜேந்திரன்

***

வணக்கம் ஜெ

பணக்கார புத்தி, மிடில் க்ளாஸ் புத்தி என்பது போல ஏழை புத்தி என்றும் உண்டு. ஆனால் இவையாவும் தனக்கான நியாயங்களைக் கொண்டிருக்கும். இது பொதுவான மனநிலை இல்லை என்றாலும் ஒரு குறிப்பிட்ட விதமாக வெளிப்படுகிறது. நம்மைச் சுற்றி உள்ள சூழலில் இதை எதிர்கொண்டிருந்தாலும் கதையில் வாசிக்கும்போது ஒருவித கசப்பு உருவாகிறது.

அதைவிட முக்கியமானது, செல்வா அவர்களிடம் பேசிவிட்டு திரும்பிய கணம், அவனுள் ஏற்பட்ட மகிழ்ச்சி. அவன் அவர்களிடம் ‘நான்தான் அவர் உயிரைக் காப்பாற்றினேன், என்மீது இப்படி பழிபோடலாமா ?’ என்று பதற்றமும் பயமும் கலந்து பேசிக்கொண்டிருந்தான். அதை வாசிக்கும்போது நமக்கும் அந்த பதற்றம் தொற்றிக்கொள்கிறது. ஆனால் சட்டென்று ஒரு கணம், எதோ அவன் மனதில் குறுக்கிட, அமைதியாகிறான், நிறைவை உணர்கிறான்.

‘சட்டுன்னு நீ உன்னை நல்லவனா நினைச்சுகிட்ட… ஒரு செயிண்ட் மாதிரி’, என்று பீட்டர் செல்வாவிடம் சொல்லும்போது, எனக்குள் நான் கள்ளமாகச் சிரித்துக் கொண்டேன். ஆம், உண்மையில் ஒரு செயிண்ட்டின் நிறைவுதான். அவன் அவர்களுக்கு நன்மையையே செய்தான். ஆனால் அவர்கள் அவனைக் குற்றவாளியாக்கி, பழிசுமத்தி, அவன் உதவியை இழிவு செய்து விட்டனர். அந்தத் தருணத்தில் எல்லோருக்கும் ஒருவித கசப்பு, பயம், பதற்றம் வரும். கசப்பு என்னவெனில், மனிதர்களின் அறமின்மையை, சுயநலத்தை, இழிவை நினைத்து வருவது. பயமும், பதற்றமும் தன்னுடைய உலகியல் வாழ்வில், ‘அமைப்பு’ வாழ்வில் இதனால் ஏற்படப்போகும் பின்னடைவு, அவப்பெயர் போன்றவை குறித்து. அதாவது வீண் பொருட்செலவு, சிறைவாசம், சமூக அந்தஸ்து இழத்தல், தன்னைச் சார்ந்தவர்களுக்கு ஏற்படப்போகும் மன உளைச்சல், இன்னும் பல. நிச்சயமாக அந்தத் தருணத்தில் நம் மனம் அமைவு கொள்ளாது. ஆனால் அதைத் தாண்டி ஒன்றுண்டு. நிறைவளிக்கும் ஒன்றுண்டு. அதுதான் செயிண்ட்டின் நிறைவு.

பிறர்க்கு நாம் உதவி செய்யும்போது, அந்தச்சூழல் நமக்கு அவர்கள் மீது ஒருவித ‘உரிமை’யைக் கொடுத்துவிடுகிறது. நாம் அவர்கள் மீது எவ்வித அதிகாரமும் செலுத்தப்போவதில்லை என்றாலும், எவ்வித உரிமையையும் எடுத்துக்கொள்ளப் போவதில்லை என்றாலும், எவ்வித பிரதிபலனையும் அடையப்போவதில்லை என்றாலும், அருவமாக அப்படியொரு ‘உரிமை’ உருவாகிவிடுகிறது. கிட்டத்தட்ட reserve ல் வைத்துக் கொள்வது போல. நாம் அதைக் கடைசிவரை பயன்படுத்தாமல் இருந்தாலும், அது அங்கேயேதான் இருக்கும். புண்ணியத்தைச் சேர்ப்பது என்று நாம் சொல்வது கிட்டத்தட்ட இதையேதான்.

செய்த உதவியை ஒருவர் மறக்கும்போது, நன்றியை மறக்கும்போது, எதிர்ப்பு மனநிலைக்குச் செல்லும் போது அந்த அருவமான உரிமை (அ) அதிகாரம் (அ) புண்ணியம் இன்னும் பெரிதாகிறது. இது ‘உதவியை மறத்தல்’ என்பதில் மட்டுமல்ல, ‘தம்மைக் குறித்து தவறான புரிதலில் பேசுவது’ என்பதிலும் உள்ளது. அப்போது, ‘பேசு மகனே பேசு… நீ பேசப்பேச என் கர்மா அக்கவுண்ட்டில் எனக்கு க்ரெடிட் கூடிகிட்டுதான் போகும்’ என்று அந்தரங்கமான- அதே சமயம் நாம் விழிப்புணர்வுடன் உணரமுடியாத- ஒரு உணர்வு ஏற்படுகிறது. பலர் உழல்வதே இந்த இனிய போதையில்தான்.

பல மனிதர்கள் கூப்பிட்டுக் கூப்பிட்டு உதவி செய்வார்கள். அறிவுரைகளும், ஆலோசனைகளும் வழங்குவார்கள். அவர்கள் என் இதைச் செய்கிறார்கள் ? அவர்களுக்குக் கிடைப்பது என்ன ? பெரிதாக ஒன்றுமில்லை. எந்தப் பொருள் நன்மையும் இல்லை. ஆனால் அதைவிட பெரிய ‘நிறைவு’ கிடைக்கிறது. அவர்கள் மீது ‘அருவமான அதிகாரம்’ கிடைக்கிறது. அதை போதை என்றுதான் சொல்லவேண்டும். பாவ புண்ணியத்தில் நம்பிக்கை இல்லாதவர்கள் கூட, அந்தக் கணக்குகளைப் போடாதவர்கள் கூட, இந்த நிறைவு விழைவினின்று தப்புவதில்லை.

பீட்டர் சொல்கிறான் ‘காந்திகளாலேதான் நாடே நாசமா போகுது’ என்று. ஆம், காந்தி எவ்வளவு பெரிய மோசமான சுயநலக்காரர் ! ‘அகிம்சை’ என்பதன் மூலமாக அந்த போதையை எவ்வளவு தூரம் அனுபவித்திருக்கிறார் ! நாம்தான் அவரைப் புரிந்துகொள்ளவில்லை. செல்வா இனி யாரையும் காப்பாற்ற மாட்டானா ? இல்லை. அவன் அந்த செயிண்ட்டை கண்டுகொண்டுவிட்டான். எனவே மீண்டும் மீண்டும் காப்பாற்றுவான்,  மீண்டும் மீண்டும் உதவி செய்வான்.

விவேக் ராஜ்

திரை [சிறுகதை]

அன்புள்ள ஜெ

திரை கதை ஒரு முழுநாவலுக்குரிய செறிவுடனிருந்தது. நாயக்கர் அரசின் கடைசிக்காலகட்டம். நாயக்கர்கள் நடுவே அதிகாரப்போட்டி. வழக்கம்போல அதற்கு அன்னியரின் உதவி நாடப்படுகிறது. லஞ்சம்கொடுத்து சமாளிக்கப்படுகிறது. எந்த அமைப்பும் சரியும்போதிருக்கும் சீரழிவுகள் நடைபெறுகின்றன.

அதனை ஒட்டி மக்கள் அலைமோதுகிறார்கள். கூட்டம்கூட்டமாக அவர்கள் பிரெஞ்சு, ஆங்கிலம் டச்சு, போர்ச்சுக்கல் ஆட்சிகள் நடக்குமிடங்களுக்கு குடிபெயர்கிறார்கள். எனக்கு இந்த் இடம் மிக முக்கியமானதாகப்பட்டது. அத்தனைபேருமே வெள்ளைக்கார ஆட்சி நடக்குமிடங்களுக்குச் செல்லுவதற்காகவே முயல்கிறார்கள்.

அத்தனைபேரும் கொள்ளையடிக்கிறார்கள். கைக்குச்சிக்குவதை எடுத்துக்கொண்டு ஓடிவிட முயல்கிறார்கள். எல்லாருமே எல்லாரையும் கொள்ளையடிக்கிறார்கள். அரசாங்க அதிகாரிகளும் சாமானியர்களும் திருடுகிறார்கள். திருடர்களை திருடுகிறார்கள்

சேதுபதி மறவர் வீரம் என்ற ஒரு மாயத்தை நம்பியிருக்கிறார். அடுத்த இருபதாண்டுகளில் அவருடைய அரசே அடிவாங்கி அழியவிருக்கிறது. அது அவருக்குத்தெரியவில்லை.

இச்சூழலில் ஒரு ஞானி. அவர்மேல் அரசி கொண்ட பிரேமை. ஒரு உன்னதமான விஷயம். ஆனால் அது இத்தனை கொந்தளிப்புக்கு நடுவே நடைபெறுகிறது

திரை என்பது என்ன? அன்றாடம்தான் திரை. இப்போது நடப்பதை மட்டுமே நம்மால் பார்க்கமுடியும் என்பதுதான் உண்மையான திரை

செல்வக்குமார்

***

அன்புள்ள ஆசானுக்கு,

வணக்கம், நலமா?

திரை வாசித்தேன். ஒரு மாபெரும் வாசிப்பனுபவம் அந்த கதையா வாசிப்பது. கடந்த காலத்திற்கே சென்று வந்த ஒரு உணர்வு. தாயுமானவர் மீதான ராணி யின் காதலை காவல் கோட்டம் நாவலில் வாசித்தேன். ஆனால் அது வெறும் அதிகாரம் கொண்டு கைப்பற்றும் ஒன்றாக காண்பிக்கப்பட்டது.

அனால் இந்த சிறுகதையில், அந்த பெண்ணின் தவிப்பு அவள் பக்கம் உள்ள நியாயம் விரிவாகவே பேசப்பட்டுள்ளது. ஒரு கணம் வெண்முரசில் வரும் அம்பிகை, அம்பாலிகை  நினைவு எழுந்தது. கவலை படாத அம்மா என்று சொல்ல தோன்றியது.

தாயுமானவர் தூதுவரிடம் பேசும் பொழுது அவர் முகம் சிவந்தது ஒரு கணம் பீஷ்மரை நினைவூட்டியது.

மிக அற்புதம். உங்களுக்கு ஆயிரம்  வணக்கங்கள்.

அன்புடன்
பா. ராஜகுரு 

25 எச்சம் [சிறுகதை]

24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]

21 அறமென்ப…  [சிறுகதை]

20 நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை

முந்தைய கட்டுரைகொதி- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஇந்திய ஆங்கில வாசிப்பு