கொரோனா

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு

நலமாக இருப்பீர்கள் என்று நம்புகிறேன்.. இன்றைய பதிவில் ” கொரோனா வார்டில் தனிமையில் எழுதத்தொடங்கி..” என்று பார்த்து துணுக்குற்றேன். Virus வந்ததினால் தனிமை தேவையாய் இருந்ததா இல்லை வேறு காரணங்களா என தெரியவில்லை.. அறிந்தவர்களுக்கும் virus வந்திருக்கிறது என்றறியும் போது சிறு அதிர்ச்சி வருகிறது.. என்னதான் virus பெரிய விஷயம் இல்லை என்று மனம் எண்ணியிருந்தாலும்.. சிகிழ்ச்சை முழுதும் முடிந்து நார்மல் ஆகி விட்டீர்கள் என நம்புகிறேன்..

சகல ஆரோக்கியமும், நலங்களும் எப்போதும் அமைய கடவுளை வேண்டுகிறேன்..

அன்புடன்

வெண்ணி

***

அன்புள்ள வெண்ணி,

2021 ஜனவரியில் எனக்கு கொரோனா வந்தது. மாதேஸ்வரன் மலை உட்பட பல இடங்கள் சென்றேன். ரயில் பயணம் செய்தேன். எங்கிருந்து என தெரியவில்லை. ஆனால் நண்பர்கள் எவருக்கும் பாதிப்பில்லை. கொஞ்சம் உடல் வெப்பம் கூடியதுமே வீட்டில் தனிமைப்படுத்திக்கொண்டு சோதனை செய்தேன். கொரோனா தாக்குதல் என்றதுமே நேரடியாக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனையில் சேர்ந்தேன். பதினொரு நாள் அங்கிருந்தேன். எனக்கு அரசு மருத்துவமனைகள் மேல் நம்பிக்கை உண்டு.

அரசுத்தரப்பில் இருந்து அழைத்து கண்காணித்தனர். 25 நாட்கள் வரை அந்தக் கண்காணிப்பு இருந்தது. என் வீட்டுக்கு வந்து மற்றவர்களுக்கும் சோதனை நடத்தினர். எவருக்கும் தொற்று இல்லை.

அரசு மருத்துவமனையில் மிகச்சிறந்த கவனிப்பு. அவர்கள் எவருக்கும் நான் எழுத்தாளன் என்று, சினிமாக்காரன் என்றோகூட, தெரியாது. அனைவருக்குமான கவனிப்புதான். அங்கிருந்த செவிலியர், தூய்மைப்பணியாளர்களின் இயல்பான உழைப்பும் நேர்த்தியும் இந்தியா மீது பெரும் நம்பிக்கை கொள்ளச் செய்பவை.

குறிப்பாக, மிகச்சிறந்த உணவு. அந்த சாம்பாரை இன்னமும் நினைவில் வைத்திருக்கிறேன். எங்கோ வீட்டில் செய்யச்சொல்லி கொண்டு வந்திருப்பார்கள். பால், முட்டை, சுண்டல் எல்லாமே அளிக்கப்பட்டன. எனக்கு சுவை மணம் இல்லாமலாகவில்லை. ஆகவே உற்சாகமாகச் சாப்பிட்டேன்.

அங்கிருந்தபோது கதைகளை எழுதினேன். அங்கிருந்து எழுத்தை நீட்டித்துக்கொண்டேன்.நண்பர்கள் லக்ஷ்மி மணிவண்ணன், ஜி.எஸ்.எஸ்.தயாளன், போகன் சங்கர், அனிஷ்கிருஷ்ணன் நாயர் ஆகியோர் வந்து பார்த்தனர்- உள்ளே அனுமதி இல்லை. பணம் ஏதும் செலவாகவில்லை. உணவு உட்பட எல்லாமே இலவசம்.

அதிகமாக எவருக்கும் சொல்லவில்லை. தேவையற்ற பீதி வேண்டாமே என்றுதான். மேலும் இச்சூழலில் எதிர்மறையாக ஏதும் எழுதக்கூடாது என்பதையும் ஒரு நெறியாக வைத்திருந்தேன். பின்னர் எழுதலாமென நினைத்தேன்.

நாஞ்சில்நாடனுக்கும் அப்போது கொரோனா தாக்குதல் வந்தது. அவரிடம் பேசினேன். “எழுதி விடாதீங்க. செத்துத்தொலையட்டும்னு கையெழுத்து இயக்கம் ஆரம்பிச்சிருவானுக” என்றார். அந்த வாய்ப்பை அளிக்கவேண்டாம் என நினைத்தேன். இப்போது மீண்டு வந்துவிட்டேன். இது புரட்சிக்குப் பின்னடைவுதானே?

உடல்நலச்சிக்கல்கள் என ஏதும் இல்லை. இப்போது பல பயணங்கள், பேருரைகள், மலையேறறங்கள், திரைப்படப்பணிகள். நன்றாகவே இருக்கிறேன்.

ஜெ

முந்தைய கட்டுரைஇருளில், எரிசிதை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிழைப்பொறுக்கிகள்- எதிர்வினைகள்