பிழைப்பொறுக்கிகள்- எதிர்வினைகள்

பிழைப்பொறுக்கிகள் – கடிதம்

அன்புள்ள ஜெ

இதை நான் சொன்னால் சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனாலும் சொல்லவேண்டுமென்பதற்காக எழுதுகிறேன். முகநூல் என்பது வம்புகளால் மட்டுமே நிறைந்த ஓர் உலகம். அங்கே சென்று, ஓர் ஆர்வத்தில் கொஞ்சம் உழன்று, சலித்துப்போய் இங்கே வருபவர்கள்தான் உங்கள் வாசகர்கள். முகநூலில் நாள்தோறும் ஏதாவது வம்பு எழுதிக்கொண்டிருப்பவர்களின் மனநிலை என்ன என்பது உங்களை விட உங்கள் வாசகர்களுக்கு தெரியும். 99 சதவீதம் பேரின் பிரச்சினை சாதிப்பற்றும் மதப்பற்றும்தான். மிஞ்சிய கொஞ்சம்பேருக்கு அரசியல் காழ்ப்பு. ஆனால் ஒட்டுமொத்தமாகவே எதிர்மறையானவர்கள்.

காலையில் இவர்களை வாசிப்பது மிகுந்த சோர்வளிப்பது. நாம் அன்றாடவாழ்க்கையின் ஆயிரம் சவால்களில் இருந்து கொஞ்ச நேரத்தை எடுத்துக்கொண்டு இங்கே வருகிறோம். நாம் தேடுவது கொஞ்சம் இலக்கியம், கொஞ்சம் தத்துவம். நம் வாழ்க்கையை மேம்படுத்திக்கொள்ள, நம் தேடலை விரிவாக்கிக்கொள்ள. இந்தவகையான எதிர்மறை எண்ணங்களாலும் சில்லறைப்புத்தியாலும் எழுதுபவனுக்கும் அவனைப்போன்ற நாலைந்துபேருக்கும் ஈகோ செயற்கையாக பூஸ்ட் ஆகிறது. மற்றபடி பயன் இல்லை. அவர்களை எல்லாம் இழுத்து இங்கே கொண்டுவரவேண்டியதில்லை. நாங்கள் விட்டுவிட்டு வந்த அந்தச் சில்லறைச் சண்டைகளை மிண்டும் எங்கள் தலைமேல் சுமத்தவேண்டியதுமில்லை

எஸ்.ராகவன்

 

இனிய ஜெயம்

அறமென்ப கதை மீதான அடிதடியை உங்கள் தளம் வழியே அறிந்தேன். மெல்லிய புன்னகையுடன் கடந்து போக வேண்டிய விஷயங்கள் இவை. கதிர் முருகன் போன்ற நண்பர்களை குறிவைத்துதான் இத்தகு அப்பாவிகள் ‘உழைத்துக்’ கொண்டிருக்கிறார்கள். முன்பெல்லாம் “இருவருக்கும் பொதுவான நண்பர்கள் ஜெயமோகன் கிட்ட இதை எடுத்து சொல்லுங்க” என்ற வேண்டுகோள் அவர்களின் அசட்டு பதிவின் இறுதியில் விண்ணப்பமாகவே  இணைக்கப்பட்டு இருக்கும்.

இத்தகு அசட்டுத்தனங்களில் உழலத் துவங்கினால் இறுதியில் நாமும் அத்தகு அசடனாக சென்று முடிவதே இதன் இறுதி நிலையாக இருக்கும் என்பதை உணர்ந்து, சென்ற வருட கொரானா முடக்க காலத்திலேயே, இத்தகு வாட்ஸாப் சுட்டி செய்திகளை முற்றிலும் தவிர்த்து விட்டேன்.

இத்தகு பிழை காணல்களில் காண்பவர்களில் இரண்டு வகை உண்டு. முதல் வகை திமுகஇடதுசாரி இந்துத்துவ அரசியல் கொள்கையாளர்கள். இத்தனை வருடம் எழுதி ஜெயமோகன் புனைவுகள் வழியே அவர் கொண்டிருக்கும் இடம்தான் பொது மனதில்  அவரது கருத்தியல் அதிகாரத்தின் வேர் என்பதை அறிந்து, ஜெயமோகனின்  புனைவுகளை கட்டுடைப்பதான் வழியே அந்த கருத்தியல் அதிகாரத்தை அசைத்து பார்க்கவேனும் முடியுமா என்று நிகழும் ப்ரயத்ணம். உதாரணம் ராஜன் குறை கட்டுரைகள்.

துறை சார்ந்த வல்லுநர் என நம்பிக் கொண்டு தர்க்கப் பிழை வழியே புனைவுகளை அதன் இடத்தை விழத்தட்ட வைக்கும் முயற்சிக்கள். உதாரணம் முருக வேள் பதிவு. இந்த இரண்டும் செய்ய கூட சற்றே திராணி வேண்டும் அது கூட இல்லாததால்,ஹே ஹே ஹே மீம்சுகள் வழியே  இந்த புனைவு எழுதியவர் இதை வாசிப்பவர் என ஒரு ஒட்டு மொத்த செயல்பாட்டையே  பழிப்பு காட்டி மேற்கண்ட அதே  செயல்பாட்டை செய்ய முயலும்  ஷிட்ஆந்த ரீதியிலான இந்துத்துவர்கள்.

இரண்டாவது வகை “நுட்டு” ப்பமான வாசகர்கள். நுட்டு பமாக வாசித்து வாசித்து ரசனை சிகரத்தின் முனையில் ஒற்றை காலில் நிற்பவர்கள். அந்த இன்னொரு காலை எங்கே ஊன்றுவது என்று தேடித்தான் ஜெயமோகன் போன்ற ஒருவரை நாடி வருகிறார்கள். அந்தோ பரிதாபம் ஜெயமோகன் அவர்களை வன்மையாக ஏமாற்றி விடுகிறார். இரவில் மர நிழலில் காரை நிறுத்தினான் என்று வந்தால் அதற்கு மேல் இவர்களால் அந்தக் கதையில் இருக்கும் ஒற்றை காலை கொண்டு நிற்க முடியாது. அடுத்த வரியிலேயே லைட்டை போட்டு கைகளில் பார்த்தான் என்று வருவது ஏன் என்று அவர்களால் விளங்கிக்கொள்ள இயலாது. எளிய தர்க்கம் இரண்டாவது தகவல் சரி எனில், முதல் தகவல் பிழை. கற்பனைக்கான லீட் ஒன்று வெறும் தகவலாக மட்டுமே உள்ளே சென்று சேரும் நிலை இது. இணையாகவே இவர்கள் இலக்கிய வெளிப்பாட்டின் உயர் வடிவமான  கவிதைகள் குறித்த கருத்துக்கள் எதுமற்றவர்களாக (அதில் எடுத்து அடுக்கி சரி பார்க்க  தகவல்கள் என ஏதும் இல்லாததால்) இருப்பதை பார்க்கலாம். இத்தகு நிலை கொண்டோரின் பாராட்டு பெரும்பாலும் “ப்ரில்லியண்ட்” என்று இருப்பதையும் பார்க்கலாம். இலக்கியம் என்பதே வெறும் தகவல்களை குறிப்பிட்ட வரிசையில் அடுக்கி காட்டும் மூளை விளையாட்டு எனும் உள்ளார்ந்த புரிதலின் விளைவு இது. மாறாக கற்பனைக் களி மேடையை நிகழ்த்துக் களமாக கொண்ட இலக்கியம் எனும் கலை குறி வைக்கும் இலக்கு ப்ரில்லியண்ட் அல்ல எக்ஸலன்ட். அந்த எக்ஸலன்சியை சென்று எய்த எந்த அளவு வரை தகவல் உண்மை தேவையோ அந்த அளவு தேவை. விஷ்ணுபுரம் போல. இவ்வளவு   போதும் எனில் இந்த  அளவு  போதும்.அனல் காற்று போல.  இதை இந்த நுட்டு ப்பமான வாசகர்களுக்கு ஜெயமோகனாலும் சொல்லிப் புரிய வைத்து விட முடியாது.

ஆக இந்த இரண்டு தரப்பும் என்றும் இப்படித்தான் இருக்கும் என்பதே நிலை. ஒரு கதை வெளியான உடன் அது உருவாக்கும் கற்பனை உலகில் வாழ்வதை விடுத்து, அடுத்த அரை மணிக்கூறில் இந்த இரண்டு தரப்பும் என்ன சொல்லுது பாப்பம் என்று இதன் பின்னால் போனால் இத்தகு அசடர்களாக மாறி நிற்பதே இதன் இறுதி விளைவாக இருக்கும். :)

கடலூர் சீனு

அன்புள்ள ஜெ

ஒரே விஷயத்தைச் சொல்வதற்காக இதை எழுதுகிறேன். திரு முருகவேல் அவர்களின் குறிப்புக்கு வந்த எதிர்வினையை வாசித்தேன். வக்கீல்களில் ஒருவகையான போலி வக்கீல்கள் உண்டு. மனிதாபிமானம் முற்போக்கு என்று முகநூலிலும் அரசியல்களத்திலும் பாவலா காட்டுவார்கள். கட்சிச்சார்பு பேசுவார்கள். இவர்களை எந்த விஷயத்துக்கும் நம்பக்கூடாது. ஏனென்றால் சட்டமோ அன்றாட நடைமுறையோ தெரிந்திருக்காது. கேஸ் நடத்தவும் தெரியாது. ஆகவேதான் இப்படி  ‘படம்’ காட்டிக்கொண்டிருக்கிறார்கள்.

கேஸ் என்று வந்தால் தொழிலில் வெற்றிகரமாக இருக்கும் வழக்கறிஞர்களை நாடிச்செல்வதே சரியானது. என் அனுபவம் இது. இத்தகைய ஒருவரை நம்பி என் வழக்கில் சீரழிந்தேன். சொல்லப்போனால் ஒரு சின்ன வழக்கு. அதை மனித உரிமை தீர்ப்பாயம் வரை கொண்டுசென்று சிக்கலாக்கி கடைசியில் சொந்தக்காரர்களின் உதவியுடன் நிஜமான வக்கீலுடன் சென்று குறைந்த இழப்புடன் தப்பித்தேன். பணம் போனது மிச்சம்.

ஓர் எச்சரிக்கைக்காக எழுதுகிறேன்

ஆர். ராஜகோபாலன்

அன்புள்ள ஜெ,

நீங்கள் கதை எழுதுங்கள். கதை எழுதும்போது உற்சாகமாக கற்பனையில் திளைக்கிறீர்கள். எழுதாதபோது இப்படி வெட்டிக்கும்பல்கள் உங்களை எரிச்சலூட்டுகிறார்கள்.

செல்வக்குமார்

 

அன்புள்ள ஜெ

நம் ‘இணைய வக்கீல்கள்’ எந்த தரத்தில் இருக்கிறார்கள் என்பதை நீங்கள் 2019 ல் அடிபட்ட வழக்கு விஷயமாக நடந்த விவாதத்திலேயே கண்டேன். ஏகப்பட்ட ‘சட்டநுணுக்க’ பேச்சுக்கள். ஏராளமான ‘தார்மீக’ப்பேச்சுக்கள். ஆனால் எவருக்குமே அடிப்படைகள் தெரியவில்லை. ஒரு சாதாரண கிரிமினல் வழக்கு எப்படி எழுதப்படும் என்றுகூட தெரியவில்லை. இவர்களெல்லாம் கோர்ட் பக்கம் தலைவைத்துப் படுக்கிறார்களா என்பதே அதிசயம். திரு முருகவேலன் வாகன இழப்பீட்டுக்கு தேவையானவை என்று சொல்லும் பல ஆவணங்கள் தேவையே இல்லை. எல்லாவற்றையும் போலீஸிடமிருந்தே நகல் பெற்றுவிடலாம். போலீஸே கொடுப்பார்கள்.

வழக்கின்போது நீங்கள் சர்க்கார் ஆஸ்பத்திரியில் போய் படுத்துக்கொண்டீர்கள், ஏழைகளின் இடத்தை ஆக்ரமித்தீர்கள் என்றெல்லாம் இந்த வக்கீல்கள் எழுதினார்கள். ஒரு அடிதடி வழக்கில் நாம் போலீஸில் புகார் செய்தால் அவர்கள் நமூனா எழுதி நேராக சர்க்கார் ஆஸ்பத்திரிக்குத்தான் அனுப்புவார்கள். காயங்கள், உடல்நிலை ஆகியவற்றை டாக்டர்தான் சொல்லவேண்டும். அதன் அடிப்படையில்தான் வழக்கு எழுதுவார்கள். டாக்டர்கள் பெரும்பாலும் ஒருநாள் தங்கவைத்து பிபி நார்மலானபிறகுதான் அனுப்பிவைப்பார்கள். டாக்டர்கள் எழுதிய காயங்கள்தான் வழக்கின் அடிப்படையே. இந்த எளிமையான அடிப்படை தெரியாதவர்களெல்லாம் எந்த ஊர் வக்கீல்கள் என்றே தெரியவில்லை.

என் கோரிக்கை இதுதான். அரசியல் அரட்டைக்கு இவர்களை வாசியுங்கள். உண்மையிலேயே ஏதாவது சட்ட ஆலோசனை வேண்டுமென்றால் நல்ல பிராக்டீஸிங் வக்கீல்களை நாடுங்கள்.

 

ராம் மகாதேவன்

முந்தைய கட்டுரைகொரோனா
அடுத்த கட்டுரைபடிமங்களின் உரையாடல்