பிழைப்பொறுக்கிகள் – கடிதம்

பிழைசுட்டுபவர்கள்

அறமென்ப…  [சிறுகதை]

திரு. முருகவேளின் முகநூல் பதிவை கதிர் முருகன் அனுப்பி இருந்தார். 20 ஆண்டுகளாக சுமார் 50 க்கு மேல் இதுபோன்ற விபத்து வழக்குகளை ( குற்றவியல், இழப்பீடு) நடத்தியவன் என்பதால் இக்கருத்தை வெளியிடுகிறேன். கதிருக்கு அனுப்பிய பதில் இது.

திரு. முருகவேள் ஒடுக்கப்பட்ட சமூகத்தை சேர்ந்த இளம் வழக்கறிஞர்களையும், ஏழை தொழிலாளிகளையும் ஜெயமோகன் இழிவு செய்வதாக “அறமென்ப” சிறுகதையை வாசித்து எழுதியுள்ளார்.

இந்த அறமென்ப  கதையில் அவருக்கு என்ன பிரச்சினை?

விபத்து வழக்குகளில் பெரும்பாலும் பாதிக்கப் பட்டவர்களுக்கு வக்கீல் கட்டணம் தர பணம் இருக்காது. அலைந்து காயச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ், போலீஸ் ஸ்டேஷன் ஆவணங்கள் ஆகியவற்றை வாங்கத் தெரியாது. இது தவிர நீதிமன்றக் கட்டணம் வேறு. பழைய பெரும் வக்கீல்கள் இதை எல்லாம் செய்ய மாட்டார்கள். ஆவணங்களை நாமே வாங்கிக் கொண்டு வந்து கொடுத்து பணமும் கொடுத்தால் வழக்கு நடத்துவார்கள்.

இதனால் எண்ணற்ற விபத்து வழக்குகளில் நஷ்ட ஈடு கிடைக்கமலேயே அந்தக் குடும்பங்கள் நடுத்தெருவில் நின்றன.

இளம் வக்கீல்கள் இந்தப் பொறுப்பைப் தாங்கள் ஏற்றுக் கொண்டனர். வழக்குப் போடுவதற்கான அனைத்து விவரங்களையும், ஆவணங்களையும் தாங்களே திரட்டினர். செலவுகளையும் தாங்களே செய்தனர். தங்கள் கட்டணத்தை வழக்கு முடிவில் தாங்கள் பெற்றுத் தரும் நட்ட ஈட்டுத் தொகையில் இருந்து எடுத்துக் கொண்டனர்”

பதில்: இக்கதைக்கு தொடர்பானது அல்ல, ஆனாலும் இது முற்றிலும் தவறு.  முதலில் இழப்பீடு வழக்கில் நீதிமன்ற கட்டணம் மிக மிக குறைவு, அதிலும் விலக்கு மனு செய்து ரூ. 300 க்குள் கட்டணம் செலுத்த அனுமதி பெற்று விடுவோம். ’நிலை பெற்ற மேல்சாதி வழக்கறிஞர்’ உட்பட அனைத்து வக்கீல்களுக்கும் இழப்பீடு வழக்கு என்பது பெரும் வருவாய் தரக் கூடியது, ஆகவே இவ்வகை வழக்கிற்கு தமது அதிகபட்ச உதவியை அனைத்து வகை வழக்கறிஞரும் எப்போதும் செய்து வந்தனர். ஒரு மோட்டார் வாகன விபத்து வழக்கு தாக்கல் செய்யவே படாமல் இருந்தது என்பது அரிதினும் அரிது, ஆயிரத்தில் ஒன்று, வக்கீல்கள் விட மாட்டார்கள்.

ஆவணங்களை சேகரித்தல் என்பதும் பெரிய விஷயம் அல்ல, தொடர்புடைய குற்ற வழக்கில் போலீசார் நீதிமன்றத்தில் ஆவணங்களை தாக்கல் செய்வார்கள், நகல் பெறலாம், அதை இழப்பீட்டு வழக்கில் தாக்கல் செய்யலாம். இது இயலாத பெரும் பணி அல்ல, நிலை பெற்ற மேல் சாதி வழக்கறிஞர் உட்பட எல்லா வழக்கறிஞர்களும் என்றும் தாமாக செய்வதுதான். ஆகவே பெரும் வழக்கறிஞர்கள் கட்சிக்காரர்களை அலைகழித்தனர் என கூற இயலாது.

ஆனால் திரு. முருகவேள் கவனிக்க தவறியது என்பது இது போன்ற வழக்கில் முக்கிய அம்சமாக உள்ளது காயம்பட்டவருக்கு அல்லது இறந்து போனவருக்கு வழக்கு போடும் முன்பே முன்பணம் தருவது. ஒரு லட்சம் வரை முன் பணம் தரும் வழக்கறிஞர்கள் உள்ளனர். ஆகவே இதை தர வசதி படைத்த அதாவது ஆண்டுக்கு சுமார் 20 லட்சம் முதலீடு செய்யும் அளவுக்கு பணம் படைத்த தன்மானத்தை இழக்க தயாரான கேஸ் பிடிக்கும் வக்கீல்கள்தான் இத்துறையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். இதில் நிலை பெற்ற அனைத்து சாதி வழக்கறிஞர்களும் அடக்கம். வழக்கு முடிந்தபின் அந்த வழக்கறிஞர் மிகை வட்டியுடன் முன்பணத்தை திரும்ப பெறுவார். ஏழை இளம் வக்கீல்களால் இங்கு போட்டியிட இயலாது. இவ்வாறு முன் பணம் கொடுத்து கேஸ் பிடிப்பது தொழில் ஒழுங்குக்கு எதிரானதும் கூட.

சரி ஜெயமோகன் கதையில் என்ன பிரச்சினை?

“ஒருவர் மீது விபத்து ஏற்படுத்தியதாக வழக்கு போட்டால் அவர் நஷ்ட ஈடு தர வேண்டியதில்லை. அவர் வாகனத்தை இன்சூர் செய்திருந்தால்  இன்சூரன்ஸ் கொடுக்கும். எனவே கார்காரரிடம் பதினைந்து லட்சம் கேட்பதற்கு வாய்ப்பே இல்லை.  இன்சுரன்ஸ் போடும் போதே ஃபுல் இன்சூரன்ஸ், தேர்ட் பார்ட்டி இன்சூரன்ஸ் என்று சொல்லித்தான் போடுகிறார்கள். எனவே தனது வண்டியில் அடிபட்டவருக்கு இன்சூரன்ஸ் கமபெனி நஷ்ட ஈடு கொடுக்கும் என்பது கார்க்காரருக்குத் தெரியாமல் இருக்காது.

உங்கள் மீது வழக்கு போட்டுக் கொள்கிறோம். இன்சூரன்ஸ் கம்பெனியிடம்  பணம் கிளைம் செய்து கொள்கிறோம் என்று வேண்டுமானால் சொல்லி இருப்பார்கள். அதற்குக் கூட வாய்ப்பு மிக மிகக் குறைவுதான்”

பதில் : இது இக்கதையில் வக்கீல் நண்பர் மூலம் பேசப்பட்டுவிட்டது. முருகவேள் அந்த பகுதியை படிக்கவில்லை. இக்கதையில் அவர் வக்கீல் நண்பரை சந்திக்கும் முன்பு காவல் நிலையத்தில் உள்ள வக்கீல்களால் தவறாக அச்சுறுத்தபடுவதாக தான் உள்ளது.

உயிரைக் காப்பாற்றியவர் மீது வழக்கு போடுவது அதீத கற்பனை.

பதில் : ஆம், இன்று இந்த சூழல் இல்லை. ஆனால் முன்பு அரிதாக இருந்தது, நான் அவ்வாறு ஒரு வழக்கை நடத்தி உள்ளேன்.

இக்கதையில் வரும் ஏழையான காயம்பட்டவரின் பேராசை என்பது குரூரமானது, எவ்வித பொய்யையும் நீதி மன்றத்தில் சொல்ல தயாரான இது போன்றவர்களை நான் நேரில் பார்த்துள்ளேன். வேண்டுமானால் வசதி படைத்தவர்கள் இன்னும் பேராசைகாரர்கள் எனக் கூறலாம், இவர்களையும் நான் நேரில் பார்த்துள்ளேன்.

இந்த கதையில் வருவது போன்ற அசுர வக்கீல்கள் இன்றும் உண்டு, அவர்கள் கட்சிக்காரரை மருத்துவமனையில் சென்று நேரில் பார்ப்பது தாஜா செய்வது, முன்பணம் கொடுப்பது, காவல் நிலையம் சென்று வழக்கை வளைப்பது போன்றவை சாதாரணம். இந்த வக்கீல்கள் எவரும் வசதி அற்றவரோ அப்பாவியோ நேர்மையாளர்களோ அல்ல.

……

நான் கருதும் பிழைகள் :

WhatsApp பார்ப்பதாக இக்கதையில் உள்ளது. ஆகவே கதை காலத்தை 2015 இக்கு பின் என கூறலாம்.

இக்காலத்தில் தனியார் மருத்துவமனைகள் முந்திக்கொண்டு விபத்து நோயாளிகளை வலைவீசி பிடிக்கின்றன. காவல்துறை இது போன்று பொய் வழக்கு போடுவோம் என அச்சுறுத்துவது இல்லை. 2 லட்சத்தில் இவ்வழக்கை வழக்கில்லாமல் முடித்துவிடலாம் என வக்கீல் நண்பர் கூறுவது அதீதம், அதிகபட்சம் சுமார் 25000 செலவாகலாம்.

ஜெயமோகன் எனது சிறுகதைகளை எதிர்மறையாக விமர்சித்தார், ஆகவே நானும் பதிலடி கொடுக்கிறேன் என எழுதப்பட்டது திரு. முருகவேளின் முகநூல் பதிவு.

கிருஷ்ணன்,

ஈரோடு.

 

அன்புள்ள கிருஷ்ணன்,

நீங்கள் சொல்வது சட்டம் மற்றும் நடைமுறை. அத்துறையில் இருக்கிறீர்கள். முருகவேளுக்கு சட்டமும் தெரியாது நீதிமன்றமும் தெரியாது நடைமுறையும் தெரியாது. இலக்கியம் அறிமுகமே இல்லை. கேஸ் நடைமுறையெல்லாம் இப்படித்தான் இருக்கும்போல என நம்பி கற்பனை செய்து எழுதியிருக்கிறார்.

ஆனால் தெரிந்தது ஒன்று உண்டு, அது உங்களுக்குத் தெரியாது. அரசியல். அதிலும் முகநூல் வம்பரசியல். இங்கே ‘ஏழைப்பங்காளன்’ ‘முற்போக்கு’ ‘கலகன்’ ‘புரட்சியாளன்’ என பல வேடங்கள் உண்டு. இந்த கூட்டத்தை இலக்காக்கி ஓர் அரசியலை எழுதுகிறார், அவ்வளவுதான். அவர்களுக்கு உண்மை முக்கியமில்லை. தாங்கள் அணியும் வேடத்துக்குரிய கூச்சல்களே முக்கியம்.

நீங்கள் சட்டம், தர்க்கம் ஆகியவற்றை முன்வைக்கிறீர்கள். அது அவருக்கு ஒரு பொருட்டே அல்ல. நீங்கள் ‘உயர்குடி’ வக்கீல் அவர் ‘ஏழைப்பங்காளி’ என ஒரு வேடம்போட்டு ஒரு ஆட்டம் ஆடி அப்படியே கடந்து செல்வார். இதைப் பொருட்படுத்தியிருக்கவேண்டியதில்லை.

*

கதையில் நீங்கள் பிழை எனச் சுட்டியிருப்பது பற்றி. இந்த நிகழ்வே 2014ல் மெய்யாக நிகழ்ந்து ஒருவரால் எனக்குச் சொல்லப்பட்டது. அன்று எண்பதாயிரத்தில் முடிந்தது.

வழக்குப் பதிவானால் இன்ஷ்யூரன்ஸ் பிரீமியம் தொகை  எவ்வளவு ஏறும் என்பதை ஒரு பத்தாண்டு கணக்கில் போட்டு பார்த்தால் இது பெரிதல்ல. சொல்லப்போனால் சின்ன ரிப்பேர்களையே இப்போது எவரும் இன்ஷ்யூரன்ஸில் கிளெயிம் செய்வதில்லை. தன் வண்டிமேல் இன்னொரு வண்டி முட்டியிருந்தால் மட்டுமே கிளெயிம் செய்கிறார்கள்.

*

இந்த ’இழிவுபடுத்தல்’ குற்றச்சாட்டு இன்று எல்லா கதைகள் மேலும் வைக்கப்படுகிறது. இந்தக் கூட்டம் உருவாக்கும் கெடுபிடிகளுக்கு உள்ளே நின்று எழுதாத அத்தனைபேர் மேலும் இந்த தாக்குதல் கூட்டாகத் தொடுக்கப்படுகிறது. சென்ற சில மாதங்களில் மட்டும் என்னுடைய பத்து கதைகளைப்பற்றி இழிவுபடுத்துகிறார் என முகநூலர்கள் எழுதியிருக்கிறார்கள். அவர்களே எனக்கு நகலெடுத்து அனுப்பியிருக்கிறார்கள்.

எல்லா காலத்திலும் இலக்கியம் இவர்களுக்கு மேலே, இவர்களை பொருட்டெனக் கருதாமல், கடந்து செல்கிறது.

ஜெ

முந்தைய கட்டுரைவிருதுகள், அடையாளங்கள்
அடுத்த கட்டுரைசிறுகதையின் திருப்பம்