இருளில், எரிசிதை – கடிதங்கள்

அன்புள்ள ஜெ,

எரிசிதை ஒரு நாவல். மனசில் அப்படித்தான் பதிகிறது. அன்றைய முழு வாழ்க்கைச் சித்திரமும் அதிலுள்ளது. அதை எப்படி புரிந்துகொள்வது? எரிசிதை என்பது உண்மையில் என்ன? சின்ன முத்தம்மாள் அமர்ந்திருக்கும் அந்த பிரசவகாலகட்டம்தானே? அவளை எரித்து அழிக்கும் சிதைத்தீ என்பது அவள் வயிற்றிலுள்ள குழந்தை.

அல்லது சின்ன முத்தம்மாளின் வஞ்சம் என்றும் சொல்லலாம். அதுதான் அவளை எரிக்கிறது. மங்கம்மாளை பழிவாங்கவேண்டும் என நினைக்கிறாள். அவள் மகன் பிறந்து 17 ஆண்டுகளில் மங்கம்மாளை சிறையிலடைத்து பட்டினிபோட்டு கொல்லப்போகிறான். அது வரலாறு. அதைத்தான் இப்போதே சின்ன முத்தம்மாள் வஞ்சினமாக உரைக்கிறாள்

ஸ்ரீனிவாஸ்

***

சு.வெங்கடேசனின் ‘காவல் கோட்டத்தில்’, முத்தம்மா உடன்கட்டை ஏறப்போவதைப் பற்றிய குறிப்பு இல்லை. அதில், முத்தம்மா உடன்கட்டை ஏறுவதை மங்கம்மா ராணி தடுத்துவிடுறாள் (உடன் ஏறினால்தானே உடன்கட்டை).  கர்ப்பிணியான முத்தம்மாவிற்கு பணிவிடைசெய்து அவள் காலடியிலேயே காத்திருக்கிறாள். முத்தம்மா தன் காதல் கணவனின் எண்ணங்களால் அலைக்கழிக்கப்பட்டு நடைபிணமாக வாழ்கிறாள். இறுதியில், பன்னீர் குடித்து ஜன்னிகண்டு இறக்கிறாள்.

கா.கோ. கிட்டத்தட்ட 1000 பக்க நாவல், அதில் முத்தம்மா கதை ஒரு பக்கத்தில் அடங்கிவிடுகிறது. ஜெ அதைப் புனைவின் சாத்தியக் கூறுகளால்  வளர்த்தெடுக்கிறார். மங்கம்மா, நாடாள வாரிசு வேண்டி, கர்ப்பிணியான முத்தம்மாவின் உடன்கட்டை ஏறுதலை ஒத்தி வைத்திருக்கிறாள். பிள்ளை பெற்றதும் முத்தம்மா உடன்கட்டை ஏறவேண்டும். கணவனை இழந்து, பிறக்கப்போகும் குழந்தையையும், கூடவே மரணத்தையும் எதிர்நோக்கி, கிட்டத்தட்ட சிறைபடுத்தப்பட்டு, எல்லா வழிகளும் அடைபட்ட நிலையில், விரக்தியில் காத்திருகிறாள்.

முத்தம்மா தனிமைச்சிறையில் சரியாக அன்ன ஆகாரம் கொள்ளாமல்  மெலிந்து கிடக்கிறாள். அவளுக்குத் தோழி நாகலட்சுமி மட்டுமே வெளியுலகத்துடனான தொடர்பு. நாகலட்சுமி மங்கம்மாவின் உளவாளியும்கூட. மங்கம்மா, முத்தம்மாவின் ஒவ்வொரு அசைவையும், தோழியின் மூலம் அறிந்துகொள்கிறாள். அவள் இந்தக் கதையில் ஒரு பாத்திரமாக  தோன்றாவிடினும் இதன் ஒவ்வொரு நிகழ்விலும் கூட இருந்து பார்த்துக்கொண்டே இருக்கிறாள். இந்நிலையில், ஒரு தாசியின் முலமாக முத்தாம்மாவிற்கு அந்தத் தீர்வு அவள் முன்னால் வைக்கப்படுகிறது.

அதை அவளிடம் கொண்டுவரும் நாகலட்சுமி, “ஒருவழியும் இல்லாம நீங்க தீப்பாயக்கூடாது. ஒரு வழி இருக்கணும். முடிவை நீங்களே எடுக்கணும்…” என்கிறாள். அதாவது, தானே தன் முடிவைத் தீர்மானிக்கும் உரிமை அவளுக்கு வழங்கப்படுகிறது. முத்தம்மாவிற்குத் தெரியும், இது மங்கம்மாவின் ஏற்பாடு என்று. எனினும் இது பாளையக்காரர்களின் சதியாக இருக்குமோ என்று கேட்டுவைக்கிறாள். அவள் அப்போதே முடிவெடுத்துவிட்டாள். தனது விதியை அந்தக் கிழ ராணி தீர்மானிக்கக்கூடாது. ஆச்சர்யமாக, அம்முடிவு, முத்தம்மாவின் மன ஊசலாட்டத்தை நிறுத்தி, அவள் முகத்தில் மங்கம்மா விரும்பிய அந்த மந்தகாசத்தையும் தோற்றுவிக்கிறது.

மிகச் சிறந்த கதைகள் எளிமையாகவே இருக்கின்றன. அவற்றின் பாத்திரங்களிலும் ஒரு எளிமை திகழ்கிறது. அப்பாத்திரங்களில் ஆசிரியரின் வெளிப்பாடு மிகையின்றி இயல்பாக அமைகிறது. அது வாசிப்பவரின் மனதிற்கு எழுத்தை  இணக்கமாக்கி, வாசிப்பை ஒரு உற்சாகச்செயலாக ஆக்குகிறது. மேலும், இதில் பெரிய மெனக்கீடு இன்றி ஒரு படைப்புக் கட்டமைப்பு (க்ரியேடிவ் ப்ளாட்) உருவாகி வருகிறது. கதையின் உச்சம் (ஒரு திறப்பாகவோ, தரிசனமாகவோ அல்லது நாடகீயத் தருணமாகவோ இருக்கலாம்) எந்தவித முன்னறிவிப்புமின்றி  நிகழவேண்டும். ஒரு கதையின் எளிமை அதன் உச்சத்தைத் உயர்த்திப் பிடிப்பதாக இருந்தால் அது சுவையான வாசிப்பனுபவத்தைத் தருகிறது. எரிசிதை அந்த வகைமையில் அமைந்ததாக உணர்கிறேன்.

பார்த்தா குரு

 

அன்புள்ள ஜெ

இருளில் கதையை வாசிக்கையில் அந்த உச்சகட்ட அனுபவம் போல ஒன்று இல்லை என்றாலும் பெரும்பாலானவர்களுக்கு அந்த வகையான ஒரு மிஸ்டிக் அனுபவம் நடந்திருக்கும் என்று தோன்றுகிறது. அதாவது வாழ்க்கை முழுக்க மறுபடி தேடினாலும் மீண்டும் நடக்க முடியாத ஒரு நிகழ்ச்சி. அதை தேடுவதிலிருந்து நாம் மீளவே முடியாது. அது நம்மை முழுக்கவே மாற்றிவிடும்

1982 பக்கமாக நடந்த சம்பவம். நானும் ஒரு நண்பரும் காரில் செல்கிறோம். இடம் கர்நாடகத்தில் பெல்காம். மிக ஒதுக்குபுறமான சாலை. இருபக்கமும் வயல்கள். நல்ல இருட்டில் செல்கிறோம். நள்ளிரவு கடந்திருக்கும். திடீரென்று ஓர் இளம்பெண் அலறிக்கொண்டே சாலையை கடந்து குறுக்காக ஓடினாள். டிரைவர் வண்டியை நிறுத்தவில்லை. நிறுத்து நிறுத்து என்று கத்தினோம். அவன் நிறுத்தாமல் நெடுந்தூரம் வந்துவிட்டான். அதன்பின் அவனை சத்தம்போட்டோம். அவன் திரும்பிப்போகவும் மறுத்துவிட்டான். அப்படியே வந்துவிட்டோம். போலீஸில் சொல்லவில்லை. எங்களுக்கு தெரியாத ஊர்

அதன் பின் அந்த ஊர் செய்தித்தாள்களில் தேடினேன். ஆனால் பொதுவான எடிஷன்களில் செய்தி ஒன்றும் இல்லை. அவள் என்ன ஆனாள்? உயிருடன் இருக்கிறாளா? இன்றைக்குவரை அந்தக் காட்சி மறையவில்லை. அவள் கொல்லப்பட்டிருந்தாலோ கற்பழிக்கப்பட்டிருந்தாலோ நாங்கள் பழிபாவத்தில் பங்காளிகள். இல்லை அது புருசன் பெஞ்சாதி சண்டை அந்தமாதிரி ஏதோ என்றால் ஒன்றுமில்லை. அந்தப்புதிரை இன்றுவரை கடக்கமுடியவில்லை. காலம்போகப்போக அது பெரிதாகி இன்று கனவில் எல்லாம் வர ஆரம்பித்துவிட்டது. என் வாழ்க்கையின் பார்வையையே சிதைத்துவிட்டது.

ஆர். ஆர்

***

அன்புள்ள ஜெ

இருளில். வலம் இடம் போன்ற கதை உலகம். பொவதுவாக நினைப்பது போல் வாழ்க்கையின் மறுபக்கம் அல்லது உண்மை வேறு எங்கோ இல்லை அது நம் அருகாமையில் உள்ளது. மரபுகள் உருவாக்கிய பாதைகள் வழியாக தன்னை அதற்காக தயாரித்து கொண்டு  உண்மை காணப்படும் அதே சமையம்  மறுபுறம் சிலரை உண்மை வந்து கண்டுவிடுகிறது.

அப்துல் அவர்கள் சொல்வது போல் நாம் வாழ்க்கையை நமக்கே ஆன சிறுசிறு தீப்பெட்டிகளாக ஆக்கிகொள்கிறோம். நமக்கு சமீபத்தில் உள்ள அந்த ஓங்குதாங்கான உண்மையை எதிர்கொள்ளும்போது நம் தீப்பெட்டி அதை தாங்குவதில்லை. அந்த மறுபக்கத்தை பிரம்மாண்டத்தை ஒரு கேப்சூல் வடிவ அனுபவமாக எதிர்கொள்ளும் போது மனம் பித்தாகிவிடுகிறது. அதை புரிந்துகொள்ள கருவிகள் இல்லை என்பதனால் பிரமை பிடித்துவிடுகிறது. சென்று சேரும் இடத்திற்கான  சாலைகள் குண்டும் குழியும் இல்லாமல் சாலையே முழுமையாக வந்து நிலைகுலைய செய்துவிடுகிறது.

அடர் இருளில் வாகனத்தில் தூங்கியபடி நீண்டுஉயர்ந்த மலைதொடரை  ஏறி,  பகலில் இறங்கும்போது மலையை பார்க்கும் அனுபவத்தை இதன் எளிய வடிவம் என்று சொல்லலாம்.

அப்துல் அவர்கள் ஓங்கு தாங்கான அந்த சாலையில் இருபத்தைந்து முறைக்கு மேல் தூங்கி சரியான சமையத்தில் எழுந்து உயிர் பிழைத்திருக்கிறார். அத்தனை முறை அந்த பிரம்மாண்டத்தின் முழுமையில் மயங்கி அழிந்து போகாமல் அந்த ஜின் அவரை மீட்டு இருக்கிறது, அது மீட்காமலும் போக அந்த ஜின்னுக்கு ஆணை உண்டு என்பது அவருக்கு தெரியும். அப்படி விளக்குகள் பொருத்தப்பட்ட இருபுறம் பெருவெளி நீண்ட அந்த  பிரமாண்டமான நெடுஞ்சாலையில் வாகனம் ஓட்டி செல்வது எப்படி இருக்கும். பிரமாண்டத்தின் மிது நாம் வண்டி ஓட்டுகிறோமா அல்லது அது நம்மை ஓட்டுகிறதா என்று அதிர்வான எண்ணங்களுக்கு இட்டு செல்லும். அப்துல் வழிவழியாக அந்த முழுமையை பார்க்க பழகியபடி இருக்கிறார். அதன் மகிமையையும் மயக்கத்தையும் ஓரளவு அறிந்தவர் அவர். அவருக்கு ஆசான்களும் உண்டு. ஆனால் தருண் அந்த முழுமையை  ஒரு மின்னல் வெட்டில் காண்கிறான். அதை  முற்றிலும் எதிர்பாராது மிக அருகே கண்டுவிட்டான். அப்துல் நீலம் என்றால் தருண் கரு நீலம் என்கிறான். தருணை  ஜீன் காப்பாற்ற வேண்டும். ஆனால் அவனிடம் எந்த ஸ்டீயரிங்கும் இல்லை. அதை தெய்வத்திடமே விட்டுவிட்டார் அப்துல்.

நன்றி

பிரதீப் கென்னடி

25 எச்சம் [சிறுகதை]

24 நிறைவிலி [சிறுகதை]

23 திரை [சிறுகதை]

22.சிற்றெறும்பு [ சிறுகதை]

21 அறமென்ப…  [சிறுகதை]

20 நகை [சிறுகதை]

19.எரிசிதை [சிறுகதை]

18 இருளில் [சிறுகதை]

17 இரு நோயாளிகள் [சிறுகதை]

16 மலைபூத்தபோது [சிறுகதை]

15 கேளி [சிறுகதை]

14 விசை [சிறுகதை]

13. இழை [சிறுகதை]

12. ஆமென்பது[ சிறுகதை]

11.விருந்து [சிறுகதை]

10.ஏழாம்கடல் [சிறுகதை]

9. தீற்றல் [சிறுகதை]

8. படையல் [சிறுகதை]

7.கூர் [சிறுகதை]

6. யட்சன் [சிறுகதை]

5. கந்தர்வன் [சிறுகதை]

4.குமிழிகள் [சிறுகதை]

3.வலம் இடம் [சிறுகதை]

2.கொதி[ சிறுகதை]

1.எண்ணும்பொழுது [சிறுகதை]

முந்தைய கட்டுரைசிறுகதையின் திருப்பம்
அடுத்த கட்டுரைநிறைவிலி, அறமென்ப- கடிதங்கள்