ஓஷோ -ஒரு கடிதம்

அன்புள்ள ஜெயமோகன் அவர்களுக்கு,

ஓஷோவின் சிந்தனைகளை மற்றவரிடம் பேச முயலும் பொழுதெல்லாம், முதலில் நாம் அவரை சரியாக விளங்கிக் கொண்டோமா என்ற எண்ணமே மேலோங்கி நிற்கும். ஓஷோவை சிலாகிக்க காலங்கள் போதாது  என்று நான் நினைத்திருந்ததுண்டு. ஆறு மணிநேரங்களில் அவரை குறித்து ஏறக்குறைய சரியான அறிமுகத்தை  அளிக்க முடியும் என்பது ஆச்சர்யம் அளித்தது. எனது உளமார்ந்த நன்றிகள். ஓஷோவிடம் இருந்து துவங்கிய எனது ஆன்மீக பயணத்தின் சுருக்கத்தை பகிர்ந்து கொள்ள விரும்பினேன். இது உங்களுக்கு சிறிய வெளிச்சக்கீற்றை  கொடுக்கக் கூடுமானால் மகிழ்வேன்.

ஓஷோவின் புத்தகளுக்காக அலைந்து திரிந்த காலங்களில், ஒரு நண்பரின் மூலம் ஓஷோ ஆற்றிய உரைகளின் மொத்த தொகுப்பும் CHTML வடிவில் கிடைத்தது. ஓஷோவிடம் புத்தகங்களில் மூழ்கித்திளைத்த பதினைந்து ஆண்டுகளும் எனக்குள் நிகழ்த்தியிருந்த அற்புதங்களை அப்பொழுது நான் அறிந்திருக்கவில்லை. அந்த நாட்களில், அறிவின் தலைக்கனமும், வாழ்க்கையை குறித்த அலட்சியப் போக்கும் மட்டுமே எஞ்சி இருந்தது. சராசரி மனிதக்கும், ஓஷோவின் சிந்தனைகளில் வாழ்பவனுக்கு இதைத்தவிர வேறு எந்த வித்தியாசமும் இருப்பதாக என் வாழ்க்கை எனக்கு உறுதியளிக்கவில்லை. காலப்போக்கில் ஓஷோவின் எழுத்துக்களுக்கு அடிமையாகி விட்டிருந்ததை உணர்ந்த தருணம் மிகவும் அதிர்ச்சியாக இருந்தது. இந்த அதிர்ச்சி ஓஷோவின் சிந்தனைகளுக்கு நேரெதிரான மார்க்கத்தை நோக்கி என்னை தள்ளியதாக பின்னர் உணர்ந்தேன்.

ஏறக்குறைய இதே காலகட்டத்தில், என்னைவிட பத்து வயது சிரியவரான ஒரு இளைஞருடன் அறிமுகம் கிடைத்தது. அவருடன் நான் கொண்ட மிகச்சிறிய அறிமுக உரையாடல்களில், அவரது யதார்த்தமான சிந்தனை செறிவு என்னை ஈர்த்தது. அதை தொடர்ந்த சந்திப்புகளில் நட்பு மேலும் உறுதியானது. நமது அன்றாட வாழ்க்கையில், ஆன்மீகம் மற்றும் தத்துவங்களை தாண்டிய போலித்தனமான யதார்த்தம் குறித்து, மிகுந்த வெளிப்படைத் தன்மையுடன் தர்க்கரீதியாக விவாதிப்பது எங்கள் வழக்கம்.

ஓஷோவின் சிந்தனை தாக்கம், எனக்கு தர்க்கவாதத்தில் எவர் வாயையும் அடைக்கும் திறனை அல்லது அதை போன்ற தோற்றத்தை தந்திருந்தது. இருப்பினும் இந்த இளைஞரின்  எளிமையான தர்க்கங்கள் உண்மைக்கு மிகவும் அருகில் இருப்பதாக எனக்கு தோன்றியது. எனக்கு நேரெதிராக, அவர் மிகவும் ஒழுக்கசீலராக இருந்தது மேலும் வியப்பளித்தது. எங்களது தர்க்கங்களில் யார் ஜெயிப்பது என்ற போட்டி மனப்பான்மை இருந்ததாக எனக்கு நினைவில்லை. உண்மையை அறியும் வேட்கை மட்டுமே இருந்தது. மூன்று வருட தினசரி சந்திப்புகளுக்கு பிறகும் கூட, அவர் எந்த தத்துவார்த்தத்தை  சார்ந்திருக்கிறார் என்று இனம் காண முடியவில்லை.

ஒரு நாள் கேட்டு விட்டேன். நீங்கள் ஒரு நாளும் உங்களுடைய விவாதங்களில் யாருடைய கருத்துக்களையும் மேற்கோள் காட்டியதில்லை. உங்களுடைய சிந்தனைகள் எதை ஆதாரமாக கொண்டிருக்கின்றன? அவர் நான் கிறிஸ்த்துவை பின்பற்றுகிறேன் என்றார். நீங்கள் தேவாலயத்திற்கு சென்றதை நான் பார்த்ததில்லை என்றேன். அவர், எந்த தேவாலயத்தில் கிறிஸ்து இருக்கிறார் என்று சொல்லுங்கள் நானும் வருகிறேன் என்றார். இந்த பதில் எனக்கு ஏனோ ஓஷோவை ஞாபகப்படுத்தியது. நீங்கள் பேசியவை அனைத்தும் கிறிஸ்து பேசி இருக்கிறாரா என்று கேட்டேன். இன்று அவர் இருந்திருந்தால் இப்படி தான் பேசி இருப்பார் என்று பதில் சொன்னார். அது எப்படி உங்களுக்கு நிச்சயமாக தெரியும் என்றேன். அவர் சிரித்துக்கொண்டே வாருங்கள் என்று அருகில் இருந்த ஒரு கிறிஸ்தவ புத்தக நிலையத்திற்கு அழைத்து சென்றார். ஒரு பைபிளை வாங்கி பரிசளித்தார்.

அதற்கு பின்பு வந்த நாட்களில் நாங்கள் பெரும்பாலும் இயேசுவின் வாழ்க்கை நிகழ்வுகளையும், அவரது எதிர் வினைகளையும், அவரது உவமை கதைகளையும், அவைகள் இன்றைய வாழ்க்கைக்கு எவ்வாறு பொருந்துகின்றன என்று இரவும் பகலும் பேசிக்கொண்டோம். நான் ஞானஸ்நானம் பெற்றுக் கொண்டேன். நாளடைவில் பைபிளின் முதன்மை கருத்தியலான மனம் திரும்புதல், என் சித்தத்தின் படியல்ல போன்ற சுய மறுப்பு சிந்தனைகளுடன் என் மனம் ஒத்துபோனாலும், நம்பிக்கை சார்ந்த விஷயங்களான இயேசுவின் உயிர்த்தெழுதல் போன்றவைகளை நம்புகிறேன் என்று சொல்வது எனக்குள் முரண்களை ஏற்படுத்தியது. என்னை பொறுத்தவரை உயிர்த்தெழுதல் என்பது கிறிஸ்துவுக்குள் மீண்டும் பிறப்பதின் குறியீடு என்று கொண்டாலும், இயேசுவின் மறுவருகை போன்றவைகளுக்கு என்னால் எந்த விளக்கமும் அளிக்க முடியவில்லை.

ஒரு நாள் நண்பரிடம், பைபிளில் இயேசு சொன்ன உவமை கதைகளை தவிர மற்ற சம்பவங்களில், பின்பு வந்த மனிதர்கள் சில நிகழ்வுகளை மிகைப்படுத்தியும், பல இடங்களில் தங்கள் சுய சிந்தனைகளையும் புகுத்தியிருக்கக் வாய்ப்பிருக்கிறது என்று வாதம் செய்தேன். அவர், பைபிளில் உள்ள அனைத்து வசனங்களும் பரிசுத்த ஆவியினால் எழுதப்பட்ட சத்தியங்கள் என்றார். இதை போன்ற சிந்தனைகள் தான் கிறிஸ்த்தவ மார்கத்தில் பல பிரிவுகளை ஏற்படுத்தி இருக்கக்கூடும் என்று பேசிக்கொண்டோம். எங்கள் இருவர் நிலைப்பாடுகளிலும் முரண் இருப்பதை இருவரும் உணர்ந்தே இருந்தோம். ஆயினும் இயேசுவை நான் மறுதலிக்கவில்லை என்பது அவருக்கு ஆறுதலாக இருந்தது என்று நினைக்கிறேன். எங்கள் நட்பு எப்பொழுதும் போல இன்றும் தொடர்கிறது.

எனக்குள் எப்பொழுதும் ஒரு அடிப்படையான முரண் இருந்து கொண்டே இருந்தது. நான் எவ்வளவு முயன்றாலும் பெருமைக்காக அற்பமான பொய்களை சொல்வதில் இருந்து என்னால் விடுபட முடிந்ததில்லை. செய்த பின்பு அதற்காக வருத்தப்படுவதும், பின்னர் எந்த உணர்வும் இன்றி அதையே மீண்டும் செய்வதும், எனக்கு நினைவு தெரிந்த நாளில் இருந்து தொடர்கதையாகவே இருந்தது. இந்த பழக்கதோஷத்தில் இருந்து  என்று நான் விடுபடுகிறேனோ அன்று தான் உண்மையை சந்தித்ததாக ஏற்றுக்கொள்வேன் என்று எனக்கு நானே சொல்லிக் கொள்வதுண்டு.

வெறுமையின் பிடியில் சிக்கி, மீண்டும் ஓஷோவிடம் செல்வோமா என்ற கேள்வியுடன் ஒரு வருடம் வாழ்தேன். ஆனாலும் ஏனோ செல்லவில்லை. பின்னொரு நாள் ஜெ, கிருஷ்ணமூர்த்தியின் ஒரு சிறிய காணொளியை வலைதளத்தில் காண நேர்ந்தது. எந்தவித நம்பிக்கைகளும்  வழிமுறைகளும் அற்ற, உண்மையை நேர்மையுடன் சந்திக்க முயலும் அவரது அணுகுமுறை என்னை முழுமையாக ஈர்த்தது. ஒரு காணொளியில் அவர், ‘உங்களைத் தவிர வேறு யாரும் உங்களுக்கு உதவ முடியாது. நீங்கள் விவேகமானவராக இருந்தால், நான் உட்பட யாரையும் நீங்கள் சார்ந்து இருக்க மாட்டீர்கள்’ என்றார்.

இதே வார்த்தைகளை ஓஷோவும், இயேசுவும், புத்தரும் மற்றும் எனக்கு தெரிந்த வரையில் எல்லா மதம் சார்ந்த மற்றும் மதம் சாராத  துறவிகளும் ரிஷிகளும் நேரடியாகவோ இலைமறை காயாகவோ சொல்லி இருந்தது எனக்கு ஆச்சர்யத்தை ஏற்படுத்தியது.  Be a light unto yourself என்கிற ஒற்றை நூலிழை எல்லா மதங்களையும் மனிதர்களையும் இணைப்பதை எண்ணி எண்ணி மகிழ்தேன்.

எனக்கு புரிந்தவரையில் ஓஷோ, ஜெ.கே,  இயேசு, புத்தர் போன்ற ஆளுமைகள் எல்லாக் காலத்தவருக்கும்  நுட்பமான வகையில் உதவி செய்கிறார்கள். இவர்களது எண்ணற்ற உரைகள், பலவிதமான கண்ணோட்டங்கள், வித்தியாசமான பார்வைகள், இரண்டு விதமான மறைமுக வேலைகளை செய்வதாக கருதுகிறேன். முதலாம் படிநிலையில், நமக்கே தெரியாமல் நம்மை கட்டுப்படுத்தும் எல்லாவிதமான அறிவு மற்றும் நம்பிக்கை சார்ந்த வெளிப்புற அடிமைத்தளைகளை அகற்றுகிறார்கள். இரண்டாம் படிநிலையில், மிகச்சரியான தருணத்தில் குரு-சிஷ்ய அடிமைத்தனத்தில் இருந்தும் விடுதலை அளிக்கிறார்கள். கடைசியாக, நாம் செய்யவேண்டியது ஒன்றே ஒன்று தான், கிடைக்கப்பெற்ற வெளிச்சத்தின் உதவியுடன், முற்றிலும் பலமிழந்து ஒளிந்து கொள்ள முற்படும் நமது சுயத்தை ஒரே ஒரு தீர்க்கமான பார்வை பார்த்தாலே போதும்.

நம்மில் பெருபாலானோர் முதல் படிநிலையிலேயே தேக்கம் அடைந்து விடுகிறார்கள். மிகச் சொற்பமானோர், இரண்டாம் படிநிலையை அடைகிறார்கள், இருப்பினும் குரு விடுதலை அளிக்க முயல்வதை துரத்துவதாக எண்ணிக் கொண்டு, வேறு குருவை நாடி சென்று அதே சுழற்சியில் மீண்டும் சிக்கிக் கொள்கிறார்கள். ஒரு சிலர், கடைசி நிலையை அடையக் கூடும், இது மிகவும் நுட்பமானது ஏனெனில் இங்கிருந்து மீண்டும் முதல் படிநிலைக்கு செல்ல முடியாது. ஒன்று சுயம் ஆண்டு கொள்ளும் அல்லது வெளிச்சம் மட்டுமே இருக்கும்.

அன்புடன்,

சிவகுமார் ஜெயராமன்

அன்புள்ள சிவக்குமார்,

ஓஷோ பற்றிய என்னுடைய உரை என்பது ஒரு தொடக்கம், ஒரு வாசல்திறப்புதான். அது ஒரு பொது உரை. பொதுவான ஓர் அறிமுக விளக்கம். ஆனால் ஓஷோ பற்றியோ, அல்லது ஓஷோவினூடாக ஆன்மிகப்பயணம் செய்ய நேரிட்டவர்கள் அவ்வனுபவம் பற்றியோ பேசவேண்டுமென்றால் அது ஒரு தனிப்பட்ட உரையாடலாகவே இருக்கமுடியும். பொதுவெளி உரையாடல் ஆன்மிகத்திற்கு உரியது அல்ல. பொதுவெளியில் முன்வைப்பது ஒரு வழி அடையாளம் மட்டுமே.

அகவய அனுபவங்களைப் பேசும்போது அதற்கு விவாதம் எவ்வகையிலும் உதவாது. இது கவிதைக்கும் பொருந்தும். எது நுண்மையானதோ அதை விவாதிக்க முடியாது. விவாதிக்க விவாதிக்க விவாதப்பொருள் ஆணவப்பொருளாக உருமாறும். ஆகவே அனுபவப்பரிமாற்றம் மட்டுமே சாத்தியம்.

ஜெ

 

முந்தைய கட்டுரைஅறமென்ப, இரு நோயாளிகள்- கடிதங்கள்
அடுத்த கட்டுரைஅநீதிகளின் மேல் கலாச்சார கேரளம்