ஓஷோ- கடிதங்கள்

அன்பிற்கினிய ஜெ அவர்களுக்கு, வணக்கம்.

மீண்டும் ஒருமுறை என்னை மிகக்கடுமையாக உழைக்க வைத்ததற்கு நன்றி. உங்கள் படைப்புகள் மட்டுமல்ல, உங்கள் பேச்சும்கூட மாபெரும் உழைப்பை கேட்கிறது ஜெ. வெறுமனே உங்களுடன் உரையாடுவது சாத்தியமல்ல என்று உங்கள் ஓஷோ – மரபும் மீறலும் உரைக்குப் பின் மீண்டும் ஒருமுறை உணர்ந்து கொண்டேன். என்ன ஒரு உரை! இதுவரை நான் கேட்ட உரைகளிலிருந்து இந்த உரை எப்படி மாறுபடுகிறது என்று ஒரு வரியில் சொல்லப்போனால், இந்த உரை உழைப்பைக் கேட்கிறது, மற்றவை (மணல் படிந்த) கைகளைத்தட்டிவிட்டு எழுந்து வெளிவர மட்டுமே செய்தன.

முதலில் நன்றிக்குரியவர்களாக நான் நினைப்பது, அங்கு குழுமியிருந்த மக்களைத்தான். செல்பேசி மிகக்குறைந்த அளவு (மிக மிக மிகச் சில மட்டுமே) தொல்லையளித்த ஒரு திரள் என்றால் அது என் அனுபவத்தில் இதுதான். கிட்டத்தட்ட இரண்டேகால் மணிநேரம் தொடர்ந்து மூன்றுநாள் என்றால், அது நிச்சயம் அதிசயம்தான். கட்டுக்கோப்பான, அல்லவை மறந்து உரை கேட்க மட்டுமே வந்த சிறப்பான மனிதர்கள் என்னோடு அந்த அரங்கத்தில் இருந்தவர்கள். (முதலிடம் உங்கள் வரலாறு, பண்பாடு மற்றும் நாம் எனும் கற்பனை உரைக்கு வந்தவர்களுக்குத்தான்.)

இரண்டாவது நன்றி உரையின் இடையில் பாடிய நண்பர் ஜான் சுந்தருக்கு. தத்துவ உரையின் மனநிலை கலையாத, குறைந்த வசதிகளுடன் வழங்கப்பட்ட இனிய இசை. மூன்றாவதும் மற்றும் தலையாயதுமான நன்றி, பிசிறில்லாத மேடை ஒலி மற்றும் ஒளி அமைப்பிற்கும், அதில் இருந்த நிழற்படங்களின் தேர்விற்க்கும். ஓஷோ எங்களைப்பார்க்க, நீங்கள் ஓஷோவையும், எங்களையும் பார்க்கும் கோணத்தில் அமைந்திருந்ததாக நான் உணர்ந்தேன் – மூன்று இடங்கள் மூன்று பார்வைகள். உரைகேட்கும் மனநிலையை பெருக்கி அளித்தது மேடை அமைப்பு. ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் அதிபருக்கும், இந்த உரையை ஏற்பாடு செய்ததில் பங்குள்ள அனைவருக்கும் மனமார்ந்த சிறப்பு நன்றிகள்.

“மறுக்கத்தான் போகிறேன், மறுப்பதற்குமுன் எப்படி மறுப்பது என்று சொல்லத்தான், இத்தனை தூரம் வருகிறேன்” – என்று நீங்கள் மூன்று மணிநேரத்திற்குப் பிறகு சொன்னதுதான் Classic ஜெ. இதுவரை நான் பழகியிருந்த அத்தனை உரையாடல்களிலும், விவாதங்களிலும் இருந்த குறைபாடு என்ன என்பதை புரிந்துகொண்ட ஒரு தருணம் அது. பரபக்கத்தை பேசாமல், விளக்காமல், தொகுக்காமல் சுபக்கத்தைப்பேசி பயனில்லை என்பது. சுபக்கத்தைப்பேசிய பின்பு அங்கேயே முடிந்துவிடாமல் அதன் நீட்சியாக சிந்தனை முன்செல்ல வழிவகுக்கும் நான் கேட்ட முதல் உரைவடிவம் இதுதான். அதற்காகவே உங்களை இறுக கட்டி அணைத்துக்கொள்ள விரும்புகிறேன்.

ஓஷோ விரும்பிகள், மறுப்பாளர்கள், ஓஷோ என்றாலே அலறி ஓலமிடுபவர்கள், அவர் யாரென்றே தெரியாதவர்கள், அவரை என்ன செய்வதென்று தெரியாமல் புலிவால் பிடித்தவர்கள், அவரை உடைத்துப்போட்டுவிட்டு உடைந்துபோனவர்கள் என அனைவருக்குமான உரையாக கட்டமைக்கப்பட்டிருந்தது உங்கள் உரை. மேற்சொல்லப்பட்ட அனைவருக்கும் புகழ், ஓஷோயிஸ்டுகள், கொடை, காலகட்டம், புராண மயமாக்கம், மரபில் இடம் (ஓஷோ ஒத்துவருபவை, சீறிச்சினப்பவை), தொகுப்பு, தியானமுறை-அவற்றிற்கான மூலம் என மிகச் சிக்கலான ஓஷோவின் உலகத்தை படிநிலைகளாக, காலகட்டங்களாக நீங்கள் பிரித்த விதம் மிகவும் உதவிகரமாக இருக்கும்.

நான் கல்லூரிக்குள் நுழைந்த புதிதில் ஒரு சிறிய புத்தகக்கடையின் புத்தக அடுக்கிலிருந்து எனக்கு ஓஷோ அறிமுகமானார். ஊழ் என்றுதான் சொல்லவேண்டும். நானே பிடித்த புலிவால் அது. அன்பு..அன்பு..அன்போ அன்பு…அந்த புத்தகம் முழுதும் இருந்தது அதுதான்(அன்பின் இருப்பிடம் என்று நினைக்கிறேன்). பிடித்தது பித்து…ஓஷோதாசன். அப்படியே அன்பு காதலாகி பின்பு காமத்தில் தவறில்லை என்று பயணித்து, இறுதியில் “எதுவுமே தவறில்லை ஏனென்றால் எல்லோருமே வெறும் நடிகர்கள்..அதிலும் இந்த வாத்தியார்கள், சாமியார்கள், ஃபாதர்கள், அரசியல்வாதிகள் இருக்கிறார்களே….கொல்லனும் அவனுகள.…”என்பதுபோல…இப்படியாக அர்த்தமற்ற, சாரமற்ற ஒரு உலகில் போய் முடிந்தது.

என்னதான் மிச்சம் என்று பார்த்தால், எதுவுமே இல்லை. அன்றன்றைக்கு வாழ்வது, இலக்கில்லாமல் இருப்பது, ஞானத்திற்க்கான பாதையில் முன்னே செல்வதான கற்பனை! ஐந்து வருடங்கள் கழித்து முற்றிலுமாக ஓஷோவைவிட்டு வெளியேவந்தேன். எளிமையான காரணங்கள்தான், போதிதர்மர் கிழக்கிலிருந்து சீனாவிற்க்கு வந்ததாக ஓர் உரையில் அவர் குறிப்பிட்டது, தண்ணீரும் எண்ணெய்யும் இருக்கும் குப்பிக்குள் குண்டூசியைப் போட்டால் மிதக்கும் என அவர் கூறி அந்த குண்டூசியை பார்வையால் நகர்த்தும் அளவு தியான ஆற்றல் பெற்றால், பொருளாக்குதலில் வெற்றிபெற முடியும் என கூறியதை நம்ம்ம்பி முயன்று பின் தோற்றது, எய்ட்சுக்கு கைகளை கிருமினாசினி கொண்டு சுத்தம் செய்தால் பெரும்பாலும் போதுமானது என கொரோனாவே அடங்காத வெற்று முறைகளை பரிந்துரைத்தது போன்ற சில(மேலும் பல உண்டு).

ஆனாலும் தவறு என் பக்கம்தான் இருக்கும் என்றெண்ணி உலகப்படத்தை திருப்பித் திருப்பி வைத்து, இறுதியில் உலகம் உருண்டை எனவே போதிதர்மர் பாகிஸ்தான், ஆப்ரிக்கா, ஐரோப்பா, அமெரிக்கா,ரஷ்யா வழியாக கிழக்கிலிருந்து சீனா வந்தார் என கண்டறிந்தது, வேறு ஏதாவது எண்ணெய்யில் குண்டூசி மிதக்கும் போல என அந்த எண்ணெயை கண்டறிய முயற்சித்தது, எய்ட்ஸ் வந்தால் பாத்துக்கலாம் என புறம்காட்டியது என வாழக்கற்றுக்கொண்டேன். “ஓஷோ எப்படிங்க தவறா சொல்ல முடியும், ஏதாவது உள் அர்த்தம் இருக்குங்க….”என்று மனதை தேற்றிக்கொண்டது மட்டுமல்லாமல், எந்தப்புத்தகத்தில் இவையெல்லாம் இருந்தனவோ அவற்றை மறைத்தும் வத்தேன்.

ஓஷோ யார்தெரியுமா? ஞானி…பார்வையிட வந்தவர்…நீங்கள் நிறையப்படிக்கவேண்டும் என்றெல்லாம் உங்களுக்கு வந்த அந்த கடிதத்தைப்போலவே பேசிக்கொண்டிருந்த எனக்கு ஓஷோ இன்னும் நிறையப் படித்திருக்க வேண்டுமோ என்ற அபத்தமான சந்தேகங்கள் எல்லாம் ஏற்பட்ட காலம். அவர் புத்தகங்களின் முன்னும் பின்னும் அவரக்குறித்த கவித்துவமான வாசகங்களையும், அவர்குறித்த The Ultimate Guru, புத்தர் மைத்ரேய அவதாரமாகி வந்தவர் என்ற பரப்புரைகளையும் கேட்டு நம்பி மட்டையடி அடித்துக்கொண்டிருந்த எனக்கு வாழைமட்டையால் விளாசியதுபோல உணர்வெழுச்சிமேலிட்ட காலம்.

இறுதியாக பிடித்த புலிவாலை விட ஒருவழி கண்டுபிடித்தேன்…ஓஷோ பற்றிய குற்றச்சாட்டுகளை தேடித்தேடி வாசிக்க ஆரம்பித்தேன். மிகவும் கவர்ந்த குற்றச்சாட்டுகள் என்றால், வழக்கமான சைஸிலிருந்து பெரிதாக இருக்கக்கூடிய அவரது தலைதான் அவரது இந்தமாதிரியான குறுக்குச் சிந்தனைகளுக்குக்கு காரணம் என அவரது வழுக்கை தலையின் பிரம்மாண்டத்தை காட்டிய புகைப்படத்துடன் கூடிய கட்டுரை…ஆசுவாசத்தைவிட “என்னது ஓஷோவுக்கு தலையில முடி இல்லயா?! அடப்பாவிங்களா இன்னும் என்னென்னத்தடா மறச்சிவெச்சிருக்கிறீங்க…?” என வீறிடவைத்தது. பலப்பல செய்திகள் ஓஷோதாசனான என்னை கதறவும் பதறவும் வைத்தது. இறுதியாக Stripping The Guru’s என்ற ஒரு புத்தகம் படிக்கும்போது சிரிப்புத்தான் வந்தது. அதற்குப்பின்பு இன்றுவரை ஓஷோவைத் தொட்டதில்லை. சுபம்.

எழுதியவர்கள் யார்? உண்மைத்தன்மை எவ்வளவு? விபரங்கள் சரியா என எதையுமே சரி பார்க்கத்தெரியாத, ஒரு முதிர்சியற்ற இளம் வயது. ஆனால் பிரச்சினை வர ஆரம்பித்தது அதற்குப் பின்னர்தான். ஓஷோவை நான் முழுமையாக உடைத்துப்போட்டிருந்தேன். அதற்குப்பின்பு ஓஷோ என்னை உடைத்துப்போட்டிருப்பதை கண்டுகொண்டேன்.

ஓஷோ படிக்கும்வரை கிறிஸ்தவத்தைத்தவிர எந்த மதமும் அறியாத அல்லது அறிந்துகொள்ளத் தேவையற்ற உன்னத சமயத்தைச் சேர்ந்த எனக்கு, இந்து முஸ்லிம் தாண்டி மேலும் பல மதங்கள் இருப்பதையும், அவற்றின் உன்னதங்களையும், கவித்துவத்தையும் அவர் என்னுள் புகுத்தியிருந்தார். உலக இலக்கியம் என நான் இன்று அறிந்துகொண்டிருக்கிற பல படைப்பாளிகளை, (அன்று பெயர்களை மட்டும்… பெயர் மட்டும் தெரிந்திருப்பதே போதுமே இங்கே மட்டை சுழற்றுவதற்கு) அவர்தான் தொட்டுக்காட்டியிருந்தார்.. அனைத்திற்கும் மேலாக ‘கரடிக்குப்போட்ட’ கயிற்றிலிருந்தும் விடுதலை அளித்திருந்தார்.

இந்து மதத்தில் உள்ள பிரிவுகளையும், தந்திர யோக முறைகளையும் அவர்வழியாகத்தான் நான் அறிந்துகொண்டிருந்தேன். இவையெதுவும் இல்லாத மதத்திலிருந்து வந்த எனக்கு, இவற்றின் இருப்பையும், சிறப்பையும் மறுக்க இயலாதபடியான வாதங்களையும் விட்டுச்சென்றிருந்தார். ஓஷோவை புகழ்பவர்களிடம்..”அடப்போங்க அது ஒரு கிறுக்கு” எனவும் இகழ்பவர்களிடம்.. “நீதாய்யா கிறுக்கு” என புரட்டவும் அவர்வழி பயிற்சியளிக்கப்பட்டிருந்தேன். இந்த இருமைத் தன்மை – அவரை சரியான இடத்தில் பொருத்தமுடியாத தவிப்பு, அவரை அவர்மேல் ஏற்றிவைக்கப்பட்ட பிம்பங்களிலிருந்து பிரித்துப்பார்க்க சரியான வழிமுறைகள், கருவிகள் என ஏதுமற்றநிலை, அவரை முழுக்க மறுக்கவும் இயலாத தர்க்கத்தின் போதாமை என அவரை உடைத்துப்போட்டதால் உடைந்து போன ஆட்களில் நானும் ஒருவன். கொடையளித்தவரையே கொல்ல நேர்ந்த ஒருவன்!

உங்கள் உரை எனக்கு எந்த அளவுக்கு மகிழ்ச்சியை கொடுத்திருக்கும் என்று நான் இனி சொல்லவேண்டியதில்லை அல்லவா! பதறிக்கொண்டே இருந்தேன். நீங்கள் “மறுக்கத்தான் போகிறேன், மறுப்பதற்குமுன் எப்படி மறுப்பது என்று சொல்லத்தான், இத்தனை தூரம் வருகிறேன்” – என்று சொல்லும்வரை. காலத்தன்மையை விடுத்து காலாதீதத்தன்மையை முன்னிறுத்துதல் ஓஷோவுக்கும் எனக்குமான இணைவை மீண்டும் புதுப்பிக்கிறது ஜெ. உரைகள் மற்றும் நூல்களுக்கிடையேயான வேறுபாடு அதை நீங்கள் ஊசலாட்டம், கூறியது கூறல், தயாரிப்பின்மை வழி விளக்கியது ஒரு புதிய சாத்தியத்தை எனக்கு கொடுக்கிறது.

அதற்கும் மேல் தத்துவம், ஞானம், இலக்கியம் ஆகியவற்றிற்கிடையேயான ஒற்றுமை மற்றும் அவற்றிலிருந்து ஒழுக்கம் இருக்கும் தொலைவு குறித்த புரிதலை இப்போதுதான் நான் தொடுகிறேன். உங்கள் உரை தொட்டுச்சென்ற பல துறைகள் இதுவரை நான் தொடத் தயங்கிநின்ற துறைகள்தான். போதுமான அடிப்படை அறிவு இல்லை என்பதாலும் அவற்றைப்புரிந்து கொள்ள கொஞ்சம் சிரமப்பட்டதாலும் தள்ளியே நின்றுகொண்டிருந்தேன். தத்துவக் கல்வியின் தேவை உங்கள் உரையின் வடிவத்தைப்பார்க்கும்போதே அவசியம் என எண்ணவைக்கிறது. யோகம் குறித்த எனது புரிதலில் மாபெரும் மாற்றத்தை ஏற்படுத்தியிருக்கிறீர்கள். புராண இயந்திரம் தந்தையரைக்கூட விட்டுவைப்பதில்லை என்பது எனக்கு மாபெரும் அதிர்ச்சியைத்தான் அளித்தது, அது உண்மை என்பதை ஏற்றுக்கொள்ளவும் செய்கிறேன்.  என்னளவில் மாற்று ஆன்மீகத்திற்கான தேடல் என்பதன் வரலாற்றுப் பிண்ணனியையும், அதன்வழி இந்திய ஆன்மீக வழிகளுக்கிடையேயான ஒத்திசைவையும், முரண்களையும் சட்டகமாக முன்வைத்திருக்கும் அற்புதத்தை உங்கள் உரை நிகழ்த்தியிருக்கிறது.

சிந்தனை என்னும் மாபெரும் Lego விளையாட்டின் வாசலை ஒரு புதிய கோணத்தில் திறந்து வைத்தமைக்கு நன்றி.

அன்புடன்,

பிரபு செல்வநாயகம்.

 

அன்புள்ள ஜெ

ஓஷோ உரை கேட்டேன். எனக்கு அந்த உரை ஒரு பெரிய தொடக்கம். என் முதல் எண்ணம் இந்த அளவுக்கு வரலாற்றில் பொருத்தியும், தத்துவரீதியாக கூறுபோட்டும் பார்க்கவேண்டுமா என்பதுதான். ஆனால் அந்த சந்தேகம் தீர்ந்தது அந்த உரை யுடூயுபில் ஏற்றப்பட்டபோது கீழே இருந்த பின்னூட்டங்களால்தான். பெரிய புரிதலை அளிக்கக்கூடியவை அந்த பின்னூட்டங்கள்.

ஒன்று, பெரும்பாலானவர்கள் ஓஷோ பெரிய ஞானி, அவரைப்பேச உனக்கென்ன தகுதி என்று எழுதியிருந்தனர். ஓஷோ சொன்னதற்கும் அந்த மனநிலைக்கும் நேர் எதிர்த்திசைகள் இல்லையா? அவரை இவர்கள் இன்னொரு மதநிறுவனராக ஆக்கி மூர்க்கமாக வழிபடுகிறார்கள்.

இரண்டு, அப்படி எழுதியிருப்பவர்களில் பலர் தாங்கள் அந்த மெய்ஞானத்தை அறிந்துவிட்ட இன்னொருவகை ஓஷோக்கள் என்று நம்பி எழுதியிருக்கிறார்கள். அந்த அபத்தமான ஆணவம் பெரும் திகைப்பை ஏற்படுத்தியது.

மூன்று, அங்கே எழுதியவர்களில் பெரும்பாலானவர்களுக்கு கோர்வையாக எழுத தெரியவில்லை. சிந்திக்கும்பயிற்சி இருப்பவனுக்கு மொழி முதிர்ச்சி அடைந்திருக்கும். அங்கிருக்கும் கீழ்த்தர வசைகளைக் கண்டால் இவர்களையா ஓஷோ உருவாக்கினார் என்ற திகைப்பு ஏற்படுகிறது.

இவர்களில் ஒருவராக ஆகாமலிருக்கத்தான் இத்தனை சிந்தனையும் தேவையாகிறது. இந்தியாவின், உலகின் ஆன்மிக மரபில் ஓஷோ எங்கே இருக்கிறார் என்று புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது. எதை அவர் எடுத்தார், எதை கடந்தார், எங்கே நிற்கிறார் என்று தெரிந்துகொள்ளவேண்டியிருக்கிறது.

என்.கிருஷ்ணன்

முந்தைய கட்டுரைஅறமென்ப, திரை – கடிதங்கள்
அடுத்த கட்டுரைபிழைசுட்டுபவர்கள்